என் மலர்
ஈரோடு
ஈரோடு:
ஈரோடு, லட்சுமி தியேட்டர் பவானி மெயின் ரோடு பகுதியை சேர்ந்தவர் மணிகண்டன்(வயது23).
நேற்று மணிகண்டன் ஈரோடு பஸ் நிலையத்தில் இருந்து பன்னீர்செல்வம் பார்க் செல்லும் டவுன் பஸ்சில் ஏறினார்.
மணிகண்டனுக்கு பின்னால் 40 வயது மதிக்கத்தக்க நபர் நின்று கொண்டிருந்தார். பஸ் நாச்சியப்பா வீதியில் வந்து கொண்டிருந்த போது மணிகண்டன் அருகில் நின்று கொண்டிருந்த மர்ம நபர் மணிகண்டன் பர்சை பறித்து கொண்டு பஸ்சில் இருந்து ஓடினார். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த மணிகண்டன் திருடன்..திருடன்..என கத்தினார். அவரது சத்ததை கேட்டு அந்த பகுதியை மக்கள் சிலர் அந்த மர்ம நபரை விரட்டி சென்று பிடித்தனர்.
இது குறித்து டவுன் போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பொது மக்களிடம் இருந்து அந்த நபரை மீட்டு விசாரணைக்காக டவுன் போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்றனர்.
விசாரணையில் அந்த நபர் சத்தியமங்கலம், ரங்கசமுத்திரத்தை சேர்ந்த குமார்(45) என தெரிய வந்தது. இதையடுத்து டவுன் போலீசார் வழக்கு பதிவு குமாரை கைது செய்தனர்.மேலும் அவனிடம் இருந்து பணமும் பறிமுதல் செய்யப்பட்டது.
ஈரோடு மாவட்டம் கவுந்தப்பாடி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் மாணவிகளுக்கு இலவச சைக்கிள் வழங்கும் விழா நடந்தது. மாவட்ட கலெக்டர் கதிரவன் தலைமை தாங்கினார்.
விழாவில் அமைச்சர்கள் கே.ஏ.செங்கோட்டையன், கே.சி.கருப்பணன் ஆகியோர் கலந்து கொண்டு இலவச சைக்கிள்களை வழங்கினர்.
அப்போது அமைச்சர் செங்கோட்டையன் பேசியதாவது:-
அடுத்த ஆண்டு முதல் ஒன்று முதல் பிளஸ்-2 வரை படிக்கும் மாணவ- மாணவிகளுக்கு புதிய வண்ண யூனிபார்ம் பள்ளி திறந்தவுடன் மாணவர்களுக்கு வழங்கப்படும். மேலும் பாடப்புத்தகம் முதல் 14 பொருட்களையும் அரசு வழங்கும்.
10 ஆண்டுகளாக பிளஸ்-2 மாணவர்கள் படித்து வந்த பாடத்திட்டத்தில் அடுத்த ஆண்டு முதல் புதிய பாட திட்டமாக அறிமுகப்படுத்தப்படுகிறது. அரசு பள்ளியில் படித்த 1,000 மாணவ- மாணவிகளை மருத்துவ மேல்படிப்புக்கு தேர்வாக வைப்பதே எங்களது இலக்கு.
அரசு பள்ளியில் சேர்க்கையை அதிகப்படுத்த எல்.கே.ஜி., யூ.கே.ஜி. வகுப்புகள் அடுத்த ஆண்டு முதல் தொடங்கப்படும். 9,10,11,12-ம் வகுப்புகள் கம்ப்யூட்டர் மயமாக்கப்பட்டு இண்டர்நெட் வசதி செய்து தரப்படும். பிப்ரவரியில் மாணவர்களுக்கு மடி கணினி வழங்கப்படும்.
அடுத்த ஆண்டு 80 ஆயிரம் ஆசிரியர்களுக்கும் மடிக்கணினி வழங்கப்படும். உலக அளவில் தமிழக மாணவர்களின் கல்வி தரம் உயர அன்றைய வகுப்பில் நடத்தப்படும் பாடங்கள் செல்போன் மூலமாக ‘‘யூ டியூப்பில்’’ பார்க்கலாம். அன்றைய தினம் பள்ளிக்கு வராத மாணவர்கள் ஓய்வு நேரங்களில் பாடங்களை படிக்கலாம்.
இவ்வாறு அவர் கூறினார். #TNMinister #Sengottaiyan
ஈரோடு மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் ஈரோடு மாவட்ட வளர்ச்சி திட்டப் பணிகள் குறித்த ஆய்வு கூட்டம் நடந்தது.
இதில் அமைச்சர்கள் கே.ஏ.செங்கோட்டையன், கே.சி.கருப்பணன் மற்றும் எம்.எல்.ஏ.க்கள் கே.எஸ்.தென்னரசு, அந்தியூர் ராஜா கிருஷ்ணன், பவானிசாகர் ஈஸ்வரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
மாவட்ட கலெக்டர் கதிரவன், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சக்தி கணேசன் மற்றும் மாவட்ட உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
மேலும் கூட்டத்தில் அரசு முதன்மை செயலாளர் பாலச்சந்திரனும் கலந்து கொண்டார்.

தமிழகத்தில் 14 வகையான பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இது அனைவராலும் பாராட்டப்படுகிறது. மற்ற வகை பிளாஸ்டிக் பொருட்களும் படிப்படியாக தடை செய்யப்படும்.
தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களுக்கு மாற்று பொருட்களை தயாரிக்கும் தொழிலை ஊக்குவிக்க அரசு தயாராக உள்ளது.
கொடநாடு எஸ்டேட் கொலை, கொள்ளை சம்பவத்தில் முதல்வர் மீது எதிர்கட்சியினர் அபாண்ட பழி சுமத்துகிறார்கள். பொது மக்களுக்கு பொங்கல் பரிசு கொடுத்து வருகிறோம். இது எதிர்கட்சியினருக்கு வயிற்றெரிச்சலையும், பொறாமையையும் ஏற்படுத்தி உள்ளது.
இவ்வாறு அமைச்சர் கருப்பணன் கூறினார். #Pongalcashgift #KCKaruppannan #Edappadipalaniswami
கல்வி மற்றும் விளையாட்டு துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் கோபியில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.
இந்து அறநிலையத்துறை சார்பில் உள்ள அனைத்து கோவில்களிலும் உள்ள தேர்கள் மாற்றி புதிய தேர்கள் அமைக்கப்படும்.
பொங்கல் பரிசு ரூ.1,000 சர்க்கரை கார்டு உள்ளவர்களுக்கும் வழங்க கோர்ட்டு உத்தரவிட்டு உள்ளது. இது அனைவருக்கும் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
புதிதாக தொடங்கப்பட உள்ள எல்.கே.ஜி, யூ.கே.ஜி வகுப்புகளுக்கு புதிய பாடத்திட்டம் உருவாக்கப்பட்டு உள்ளது. குழந்தைகளுக்கு சொல்லி தர ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்கப்படும்.

தமிழக அரசு சார்பில் கல்விதுறைக்கு என தனியாக ஒரு சேனல் உருவாக்கப்பட்டு உள்ளது. ஆசிரியர்களை மாணவர்கள் குருவாக நேசிக்கவும், பெற்றோர்களை நேசிக்கவும் இந்த சேனல் பயன்படும்.
இவ்வாறு அமைச்சர் செங்கோட்டையன் கூறினார்.
பேட்டியின்போது அருகில் அமைச்சர் கே.சி.கருப்பணன், நம்பியூர் ஒன்றிய செயலாளர் தம்பி சுப்பிரமணியம் ஆகியோர் உடனிருந்தனர். #MinisterSengottaiyan #Plus2
கோபி:
கோபி மொடச்சூர் ரோட்டை சேர்ந்தவர் தர்மதுரை. சோன்பப்டி தயாரிக்கும் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். மனைவி பெயர் கமலேஸ்வரி. இவர்களுக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர்.
மகள் பெயர் சன்மதினா (வயது7).மகன் பெயர் கிருஷ்ணன்(8). இந்த நிலையில் சன்மதினா. கோபி அருகே உள்ள குழவி கரட்டில் உள்ள தனது பாட்டி வீட்டுக்கு சென்றாள்.
நேற்று இரவு சிறுமி சன்மதினா பாட்டி வீட்டு முன் விளையாடி கொண்டிருந்தாள். அப்போது எதிர்பாராத விதமாக கால் இடறி கீழே விழுந்தாள். இதில் படுகாயத்துடன் துடித்த சிறுமியை மீட்டு கோபி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
ஆனால் செல்லும் வழியிலேயே சன்மதினா பரிதாபமாக இறந்தாள். சிறுமியின் உடல் கோபி அரசு ஆஸ்பத்திரியில் பிரேத பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ளது.
அவளது உடலை பார்த்து பெற்றோர் உறவினர்கள் கதறி அழுத காட்சி மிகவும் உருக்கமாக இருந்தது.
இது குறித்து கோபி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஈரோடு மாவட்டம் பவானி அடுத்த எலவமலை ஊராட்சி மூலப்பாளையத்தில் தி.மு.க. சார்பில் கிராம சபை கூட்டம் நடந்தது. முன்னாள் அமைச்சரும் ஈரோடு தெற்கு மாவட்ட தி.மு.க. செயலாளருமான முத்துசாமி தலைமை தாங்கி பேசினார்.
கூட்டத்தில் தி.மு.க. பொருளாளர் துரைமுருகன் மற்றும் முன்னாள் மத்திய மந்திரி தயாநிதிமாறனும் கலந்து கொண்டனர். கூட்டத்தில் துரைமுருகன் பேசியதாவது.-
உங்களையெல்லாம் நேரில் சென்று பார்த்து குறைகளை கேட்டறிய தளபதி ஸ்டாலின் அனுப்பி வைத்துள்ளார். எம்.எல்.ஏ.வாக இருப்பவர்கள் மக்களை சந்தித்து குறைகளை கண்டறிந்து தீர்க்க வேண்டும். ஆனால் வரவில்லை. எங்களுக்கு ஓட்டு போட்டாலும் போடா விட்டாலும் உங்களுக்காக உழைக்கின்ற கட்சி தி.மு.க.தான்.
நீங்கள் கொடுத்த மனுக்களை ஜெராக்ஸ் எடுத்து தலைமை கழகத்துக்கு ஒன்று அனுப்பி வைப்போம். மற்றொன்றை அதிகாரிகளிடம் சென்று கொடுப்போம்.
10 பேருக்கு கொடுத்து 6 பேருக்கு கிடைத்தால் கூட போதும் என்று நீங்கள் (மக்கள்) பாரத்தை எங்கள் மீது இறக்கி வைத்து விட்டீர்கள். உங்கள் பாரத்தை நாங்கள் சுமப்போம். குறைகளை தீர்ப்போம்.
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் போக்குவரத்து போலீசில் இன்ஸ்பெக்டராக பணிபுரிபவர் பதி (வயது 47). இவர் சத்தியில் இருந்து பண்ணாரி, திம்பம் வழியாக கர்நாடக மாநிலம் செல்லும் லாரிகளை வாகன சோதனை செய்வது போல் தடுத்து நிறுத்தி டிரைவர்களை மிரட்டி லஞ்சம் வாங்குவதாக ஏராளமான புகார்கள் ஈரோடு லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாருக்கு வந்தது.
அதைத்தொடர்ந்து போலீஸ் இன்ஸ்பெக்டர் பதியை கையும், களவுமாக பிடிக்க லஞ்ச ஒழிப்பு போலீசார் திட்டமிட்டார்கள்.

அதன்பின்னர் டிரைவர் போல் மாறுவேடத்தில் இருந்தவர் தான் கொண்டுவந்த ரசாயனம் தடவிய ரூபாய் நோட்டுகளை பதியிடம் கொடுத்தார். அதை அவர் பெற்றுக்கொண்ட போது மாறுவேடத்தில் இருந்த 2 பேரும், ‘நாங்கள் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார். உங்களை விசாரிக்க வேண்டும். சத்தியமங்கலம் போலீஸ் நிலையத்துக்கு வாருங்கள்’ என்று கூறி சுற்றி வளைத்தார்கள்.
அதைக்கேட்டு அதிர்ச்சி அடைந்த இன்ஸ்பெக்டர் பதி, ‘சரி நான் என்னுடைய காரிலேயே போலீஸ் நிலையத்துக்கு வருகிறேன்’ என்று கூறினார். அதை நம்பிய லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் தாங்கள் வந்த லாரியிலும், அவர்களின் பின்னால் பதி தன்னுடைய காரிலும் சத்தியமங்கலத்துக்கு சென்றுகொண்டு இருந்தனர்.
சிக்கரசம்பாளையம் தாண்டி கெஞ்சனூர் செல்லும் சாலை வந்தபோது, பதி திடீரென காரை கெஞ்சனூர் நோக்கி திருப்பினார். அதன்பின்னர் கார் மின்னல் வேகத்தில் கெஞ்சனூர் நோக்கி சென்றுவிட்டது. இதைப்பார்த்த லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாரும் லாரியில் காரை பின்தொடர்ந்து துரத்தி சென்றார்கள். ஆனால் காரை தடுத்து நிறுத்த முடியவில்லை. வேகமாக சென்றபோது பதியின் கார் மோதியதில் மோட்டார்சைக்கிளில் சென்ற புஞ்சைபுளியம்பட்டியை சேர்ந்த வேலுச்சாமி படுகாயம் அடைந்தார். அந்த பகுதி பொதுமக்கள் ஆம்புலன்சை வரவழைத்து வேலுச்சாமியை சத்தி அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றார்கள். இன்ஸ்பெக்டர் பதி லஞ்ச ஒழிப்புதுறை போலீசாரிடம் சிக்காமல் தப்பி சென்று விட்டார்.
இதைத்தொடர்ந்து லஞ்சம் வாங்கிய குற்றத்துக்காக ஈரோடு லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாரும், விபத்தை ஏற்படுத்தி வேலுச்சாமி படுகாயம் அடைந்ததற்காக சத்தியமங்கலம் போலீசாரும் பதி மீது வழக்குப்பதிவு செய்தனர். காரில் தப்பி ஓடிய போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் பதியை வலைவீசி தேடி வருகிறார்கள். #TrafficInspector
பெருந்துறை:
பெருந்துறையை அடுத்துள்ள வாவிக்கடை பகுதியில் பைபாஸ் ரோட்டில் பெட்ரோல் பங்க் ஒன்று உள்ளது. இந்த பங்கின் அருகே ரோட்டோரத்தில் சுற்றுப்புறப்பகுதியில் இருந்து கொண்டு வந்து கொட்டப்பட்ட குப்பைகள் தேங்கி கிடந்தன.
இந்த குப்பைகளுக்கு நேற்று காலை யாரோ சிலர் தீ வைத்துள்ளனர். இந்த குப்பையில் பிடித்த தீ வேகமாக காற்றின் காரணமாக கொளுந்துவிட்டு எரிந்தது. இதனைக் கண்ட அந்தப்பகுதியினர் அச்சத்துடன் பெருந்துறை தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர்.
சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த பெருந்துறை தீயணைப்பு நிலைய அலுவலர் வேலுச்சாமி தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் கொழுந்து விட்ட தீயை கட்டுப்படுத்தி அணைத்தனர். அருகில் பெட்ரோல் பங்க் இருந்ததால் தீயணைப்பு வீரர்களும் மிகவும் பாதுகாப்புடன் தீயை அணைத்தனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
ஈரோடு:
ஈரோடு முத்தம் பாளையம் அடுத்த நல்லிபாளையம் பாரதி நகரைச் சேர்ந்தவர் பிரபு. கார் டிரைவர். இவரது மனைவி இந்துமதி (வயது 26). இவர்களுக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர்.
கணவன்- மனைவிக்கு இடையே அடிக்கடி குடும்ப தகராறு இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் இன்று அதிகாலை 1.30 மணி அளவில் பிரபு பணியை முடித்துக் கொண்டு வீட்டுக்கு வந்தார்.
வீட்டு கதவை தட்டினார். ஆனால் கதவு திறக்கவில்லை.மேலும் வீட்டில் இருந்து ஏதோ ஒரு சத்தம் கேட்டது.
இதனால் பதட்டமடைந்த பிரபு வீட்டின் மேற்கூரையை பிரித்து உள்ளே பார்த்ததார். அப்போது இந்துமதி தூக்கில் தொங்கிக்கொண்டு உயிருக்கு போராடிக் கொண்டிருந்தார். பிரபு அலறினார்.
அவரது சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்று உயிருக்கு போராடிக்கொண்டிருந்த இந்துமதியை மீட்டு ஈரோட்டில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.
பின்னர் மேல் சிகிச்சைக்காக ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். இந்துமதியை பரிசோதித்த டாக்டர்கள் அவர் வரும் வழியிலேயே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
இது குறித்து தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்துமதி என்ன காரணத்திற்காக தற்கொலை செய்து கொண்டார்? என்பது குறித்தும் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஈரோட்டை அடுத்த லக்காபுரத்தில் நடைபெற்ற திமுக கிராம சபை கூட்டத்தில் திமுக பொருளாளர் துரைமுருகன் கலந்து கொண்டார். அப்போது அவர் அளித்த பேட்டியில் கூறியதாவது:-
ஆளுங்கட்சி எம்.எல்.ஏ.க்கள் மக்கள் பிரச்சனையை தீர்க்க முயற்சிப்பதில்லை. எதிர்கட்சியும் இதே தவறை செய்ய கூடாது என்பதற்காகத்தான் மக்களை திமுக நேரில் சந்தித்து வருகிறது.
தற்போது மக்கள் தெரிவித்துள்ள குறைகள் குறித்து அதிகாரிகளிடம் பேசி நிவர்த்தி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும். மக்களை சந்திப்பது தான் மகத்தான சக்தி. மக்கள் சிந்தித்து செயல்பட வேண்டும்.
சிலை திருட்டு மிகவும் ஆபத்தானது. பக்திமான்களுக்கு வருத்தம் ஏற்படுத்தக்கூடியது. கலைநயம் படைத்த சிலைகள் திருடப்படுவது அவமான செயல். நீதிமன்றம் தெரிவித்த பிறகும் பொன்மாணிக்கவேலின் நேர்மையை அரசு சோதிப்பது வேடிக்கையானது.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா உயிரிழப்பு குறித்து சி.பி.ஐ விசாரித்திருந்தால் சர்ச்சைகள் ஏற்பட்டிருக்காது. அதிகாரிகள் இல்லாமல் ஆட்சி நடத்த முடியாது. ஆட்சியாளர்களுக்கும் அதிகாரிகளுக்கும் இடையே எவ்வித பாகுபாடும் ஏற்படக்கூடாது.
இவ்வாறு அவர் கூறினார். #DMK #DuraiMurugan
ஈரோடு காந்தி ஜி ரோட்டில் உள்ள பி.எஸ்.என்.எல். அலுவலகம் மற்றும் தலைமை தபால் நிலையம் இன்றி வெறிச்சோடி கிடந்தது. ஊழியர்கள் பணிக்கு வராமல் இன்று 2-வது நாளாக புறக்கணித்தனர். அதே சமயம் அதிகாரிகள் வந்திருந்தனர். இதே போல் ஈரோடு பிரப் ரோட்டில் உள்ள பி.எஸ்.என்.எல். பொது மேலாளர் அலுவலகத்துக்கும் ஊழியர்கள் யாரும் பணிக்கு வரவில்லை.
இதே போல் கனரா வங்கி, ஸ்டேட் வங்கி, இந்தியன் வங்கி, இந்தியன் ஓவர்சீஸ் வங்கி உள்பட தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளும் இன்று செயல்படவில்லை.
ஊழியர்கள் வருகை இல்லாததால் பாங்கிகள் வெறிச்சோடி கிடந்தன.
இன்று 2-வது நாளாக பாங்கிகள் செயல்படாததால் நேற்று இன்றும் ரூ.600 கோடிக்கு பண பரிவர்த்தனை முடங்கியது. இதனால் வாடிக்கையாளர்கள் மிகவும் அவதிப்பட்டனர்.
ஈரோடு மாவட்டத்தில் பாங்கி ஊழியர்கள் 650 பேரும் பி.எஸ்.என்.எல். ஊழியர்கள் 520 பேரும் தபால் அலுவலக ஊழியர்கள் 600 பேரும் இந்த வேலை நிறுத்த போராட்டத்தில் குதித்து உள்ளனர். #tamilnews
ஈரோடு மாவட்டத்தில் பொங்கலையொட்டி ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி வழங்க வேண்டும் என்று விவசாய அமைப்பு மற்றும் பொதுமக்கள் விருப்பம் தெரிவித்தனர்.
இது தொடர்பாக விவசாய அமைப்பு சார்பில் கலெக்டர் கதிரவனிடம் மனு அளிக்கப்பட்டது. அதன்படி சுப்ரீம் கோர்ட்டின் விதிமுறைகள பின்பற்றி ஈரோடு பெருந்துறை ரோட்டில் உள்ள ஏ.ஈ.டி. பள்ளி மைதானத்தில் ஜல்லிக்கட்டு நடத்த கலெக்டர் அனுமதி அளித்தார்.
இந்த ஜல்லிக்கட்டு வருகிற 19-ந் தேதி நடக்கிறது. மேலும் சுப்ரீம் கோர்ட்டு விதிமுறைகளின்படி ஜல்லிக்கட்டுக்கான ஏற்பாடுகளை தீவிரமாக கண்காணித்து நடவடிக்கை எடுக்கும்படி ஈரோடு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சக்தி கணேசனுக்கு கலெக்டர் உத்தரவிட்டார்.
ஈரோட்டில் முதல்முறையாக ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது விவசாய அமைப்பினரையும், பொதுமக்களையும் மகிழ்ச்சியடைய செய்துள்ளது.
இந்த நிலையில் ஏ.ஈ.டி. பள்ளி மைதானத்தில் ஜல்லிக்கட்டு நடத்துவதற்கான ஏற்பாடுகளை போட்டி ஒருங்கிணைப்பாளர்கள் தீவிரமாக செய்து வருகிறார்கள்.
காளைகள் புறப்பட்டு வரும் வாடி வாசல், காளைகள் சீறிப்பாயும் இடம் ஆகியவை அமைக்கப்பட்டு வருகிறது. ஜல்லிக்கட்டை சுற்றி நின்று மக்கள் பார்க்கும் வகையில் தடுப்பு கட்டைகள் அமைக்கும் பணி நடந்து வருகிறது. #tamilnews






