என் மலர்tooltip icon

    ஈரோடு

    ஈரோட்டில் இன்று அதிகாலை லாரி மோதி மொபட் தீ பிடித்ததால் சுமை தூக்கும் தொழிலாளி கருகினார். இந்த விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    ஈரோடு:

    ஈரோடு ரங்கம் பாளையத்தை சேர்ந்தவர் சேகர் (வயது45). இவர் ஈரோடு பெரிய மார்க்கெட்டில் சுமை தூக்கும் தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார். இன்று (வியாழக்கிழமை) அதிகாலை 5 மணியளவில் சேகர் வேலையை முடித்து விட்டு தனது மொபட்டில் திரும்பி சென்று கொண்டிருந்தார்.

    ஈரோடு பெரியமாரியம்மன் கோவில் அருகே சென்று கொண்டிருந்த போது பின்னால் பார்சல் லாரி ஒன்று வந்து கொண்ருந்தது. காங்கேயம் நோக்கி சென்று கொண்டிருந்த அந்த லாரியை நத்தக்காடையூரை சேர்ந்த சண்முகசுந்தரம் என்பவர் ஓட்டிக் கொண்டு வந்தார்.

    இந்த நிலையில் முன்னால் மொபட்டில் சென்று கொண்டிருந்த சேகர் திடீரென பிரேக் போட்டதாக கூறப்படுகிறது.

    அதே சமயம் பின்னால் வந்த பார்சல் லாரி எதிர்பாராத விதமாக மொபட் மீது மோதியது. இந்த வேகத்தில் மொபட்டும் லாரியும் ரோட்டின் மத்தியில் உள்ள தடுப்பு சுவரில் மோதியது.

    அப்போது மொபட்டின் பெட்ரோல் டேங்க் உடைத்து மொபட் தீ பிடித்தது. இதில் சேகரின் இடுப்பு பகுதி மற்றும் கால்களில் தீ பிடித்தது. இதனால் அவர் வலி தாங்க குடியாமல் அலறினார். இதை கண்ட அக்கம் பக்கத்தினர் அங்கு ஓடி வந்தனர். சேகரின் உடலில் பிடித்த தீயை அனைத்து ஈரோடு அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இந்த விபத்து குறித்து ஈரோடு டவுன் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். 

    தாளவாடி அருகே கல்லூரி பேராசிரியர் கழுத்தை இறுக்கி கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    தாளவாடி:

    ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் வனப்பகுதி கர்நாடக மாநில எல்லையான தாளவாடி அருகே உள்ள சொக்கன்புரத்தை சேர்ந்தவர் சதாசிவம் (வயது 28). இவரது தந்தை சிவண்ணா, தாயார் ரத்தினம்மாள் இருவரும் கூலி தொழிலாளர்கள். எனினும் தங்கள் மகனை நன்கு படிக்க வைத்தனர். கல்லூரி வகுப்பை முடித்த சதாசிவம் தாளவாடி அருகே உள்ள கர்நாடக மாநிலம் சாம்ராஜ் நகரில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் பேராசிரியராக பணிபுரிந்து வந்தார்.

    இந்த நிலையில் கடந்த 4 நாட்களாக இவர் கல்லூரிக்கு போகாமல் வீட்டில் இருந்து வந்தார்.

    இந்த நிலையில் நேற்று முன்தினம் வீட்டில் இருந்து வெளியே சென்ற பேராசிரியர் சதாசிவம் அதன் பிறகு வீட்டுக்கு திரும்பி வரவில்லை. அவரது பெற்றோர் மற்றும் உறவினர்கள் பல இடங்களில் தேடியும் காணவில்லை.

    இந்த நிலையில் நேற்று மாலை 6.30 மணியளவில் அவரது ஊரான சொக்கன் புரத்திலிருந்து சுமார் 1 கிலோமீட்டர் தூரத்தில் மர்மமான முறையில் சதாசிவம் இறந்து கிடந்தார்.

    அவரது கழுத்தில் கயிறுமாட்டி இறுக்கி இருந்தது. தலையின் பின்புறம் ரத்தம் வடிந்த நிலையில் இருந்தது. இதனால் யாரோ பேராசிரியர் சரவணனை கயிற்றால் இறுக்கி கொலை செய்து தப்பி சென்று இருப்பது தெரிய வருகிறது. கல்லூரி பேராசிரியர் கழுத்தை இறுக்கி கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    தகவல் அறிந்த தாளவாடி போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று சதாசிவத்தின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சத்தியமங்கலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இன்று அவரது உடல் பிரேத பரிசோதனை செய்யப்படுகிறது.

    பேராசிரியர் சதாசிவத்தை கொலை செய்தது யார்? என்ன காரணம்? என்று உடனடியாக தெரியவில்லை. தாளவாடி போலீசார் தொடர்ந்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    கவுந்தப்பாடி அருகே வீட்டு அடமான பத்திரத்தை மீட்க முயாடிததால் மனவேதனை அடைந்த தொழிலாளி விணம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
    ஈரோடு:

    கவுந்தப்பாடி அருகே உள்ள செந்தாம் பாளையத்தை சேர்ந்தவர் சரவணன் (37). மனைவி பெயர் சாந்தி (34) இவர்களுக்கு அஞ்சலி, பிரவீன் ஆகிய மகள் மற்றும் மகன் உள்ளனர்.

    சரவணன் சொந்த ஊர் செந்தாம்பாளையம் என்றாலும் தற்போது ஈரோடு வீரப்பன் சத்திரத்தில் வசித்து வாடகை வீட்டில் வசித்து வந்தார்.

    ஈரோடு மார்கெட்டில் பூண்டு மண்டியில் கூலித்தொழிலாளியாக பணி செய்கிறார். மனைவி சாந்தி தனியார் எக்ஸ்போர்ட் கம்பெனியில் தையல் வேலைக்கு செல்கிறார்.

    சரவணன் ஒரு வருடத்திற்கு முன்பு பக்கவாத நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை செய்து கொண்டார். மருத்துவ செலவுக்கு ஒரு லட்சம் ரூபாய் செலவானது. பணத்திற்காக செந்தாம்பாளையத்தில் உள்ள சொந்தவீட்டை அடமானம் வைத்து ஒரு லட்சம் ரூபாய் கடன் வாங்கியிருந்தார்.

    கடந்த சில நாட்களாக வீட்டை மீட்க முடியவில்லையே என மன வருத்தப்பட்டு வந்த சரவணன் மனைவியிடம் பணத்தை புரட்டி வீட்டு பத்திரத்தை மீட்டு வருவதாக ஈரோட்டில் இருந்து புறப்பட்டு செந்தாம்பாளையம் வந்தார்.

    சரவணனால் 80 ஆயிரம் ரூபாய் மட்டுமே புரட்ட முடிந்தது. மீதி தொகை புரட்ட முடியாமல் வேதனை அடைந்த சரவணன் தனது மனைவி சாந்திக்கு போன் செய்து தன்னால் பணம் புரட்ட முடியவில்லை. செந்தாம்பாளையத்திற்கு கிளம்பி வருமாறு கூறினார்.

    பிறகு வி‌ஷத்தை குடித்து விட்டு வாயில் நுரைதள்ளி மயங்கி விழுந்தார். உடனே அக்கம்பக்கத்தினர் சரவணனை மீட்டு கவுந்தப்பாடி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். சிகிச்சை பலனின்றி சரவணன் இறந்தார்.

    ஈரோட்டில் இருந்து கணவன் போன் செய்தார் என்று மகன் மகளுடன் புறப்பட்டு வந்த சாந்தி செந்தாம்பாளையம் சென்று பார்த்துவிட்டு கவுந்தப்பாடி அரசு மருத்துவமனையில் கணவர் சேர்க்கபட்டிருப்பதாக தகவல் அறிந்து மருத்துவமனைக்கு சென்று பார்த்தார்.

    அங்கு கணவர் இறந்த செய்தி கேட்டு அதிர்ச்சி அடைந்தார். இச்சம்பவம் குறித்து மனைவி கொடுத்த புகாரின் பேரில் கவுந்தப்பாடி போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகிறார்கள்.
    அந்தியூர் அருகே கள்ளக்காதல் தகராறில் கணவரை கொலை செய்த மனைவி, கள்ளக்காதலனுடன் கைது செய்யப்பட்டார்.

    அந்தியூர்:

    அந்தியூர் அருகே புன்னத்தை சேர்ந்த கைலாசம் (வயது40). என்ற லேத் பட்டறை அதிபர் கடந்த 2 நாட்களுக்கு முன் கழுத்தை அறுத்து கொலை செய்யப்பட்டார்.

    மனைவி ஹேமலதாவுடன் சென்ற அவரை மர்ம ஆசாமி வழிமறித்து கொலை செய்தான்.

    கள்ளக்காதலில் இந்த சம்பவம் நடந்ததை தனிப்படை போலீசார் கண்டு பிடித்தனர்.

    மனைவி ஹேமலதாவின் உறவினரான வாலிபர் ஆனந்துக்கும் (23) ஹேமலதாவுக்கும் கள்ளக்காதல் ஏற்பட்டது. இருவரும் தனிமையில் உல்லாசம் அனுபவித்தனர்.

    இதை கணவர் கண்டித்தார். இதில் ஏற்பட்ட தகராறில் ஆனந்த் சம்பவத்தன்று கைலாசத்தை வழிமறித்து கொலை செய்தார்.

    போலீசார் தீவிர விசாரணை நடத்தி மனைவி ஹேமலதா, கள்ளக்காதலன் ஆனந்த் ஆகிய 2 பேரையும் போலீசார் கைது செய்தனர். 

    அந்தியூர் அருகே மனைவி கண்முன் கணவரை கழுத்தை அறுத்து படுகொலை செய்த மர்ம ஆசாமியை போலீசார் தேடி வருகிறார்கள்.

    அந்தியூர்:

    ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே உள்ள புன்னம் கிராமத்தை சேர்ந்தவர் கைலாசம் (வயது 40). இவர் அப்பகுதியில் லேத் ஒர்க்ஷாப் பட்டறை வைத்து நடத்தி வந்தார்.

    இவரது மனைவி பெயர் ஹேமலதா (21). நேற்று மாலை வேலை முடிந்து கைலாசம் தனது மனைவி ஹேமலதாவுடன் வீட்டுக்கு மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார்.

    அந்தியூர் அருகே காட்டூர் பக்கம் சென்றபோது பின்னால் மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம ஆசாமி வேமாக வந்து கைலாசத்தை வழி மறித்தார். திடீரென இருவருக்கும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.

    இதில் ஆத்திரம் அடைந்த வழிமறித்த ஆசாமி திடீரென தான் கொண்டு வந்த கத்தியால் கைலாசத்தின் கழுத்தை அவரது மனைவி கண்முன்னால் அறுத்தார். இதில் அவரது கழுத்தில் இருந்து ரத்தம் பீறிட்டது. இதைகண்டு மனைவி ஹேமலதா சத்தம்போடவே அவன் தப்பி ஓடிவிட்டான்.

    ரத்த வெள்ளத்தில் துடித்த கைலாசத்தை அக்கம் பக்கத்தினர் மீட்டு அந்தியூர் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டுசென்றனர்.

    அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் அவர் வழியிலேயே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இந்த படுகொலை குறித்து அந்தியூர் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    கைலாசத்தை கொலை செய்த ஆசாமி தலைமறைவாக உள்ளான். அவன் யார்? எதற்காக இந்த கொலையை செய்தான்? முன்பகை அல்லது தொழில் போட்டி காரணமாக இந்த கொலை நடந்ததா? என பல்வேறு கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    மேலும் கொலையை பற்றி துப்பு துலக்கவும், கொலையாளியை பிடிக்கவும் பவானி போலீஸ் இன்ஸ்பெக்டர் இளங்கோ தலைமையில் தனிபோலீஸ் படை அமைக்கப்பட்டு உள்ளது. அவர்களும் விசாரணையில் இறங்கி உள்ளனர்.

    மனைவி கண் எதிரே கணவன் கொலை செய்யப்பட்டாலும் மனைவி ஹேமலதாவுக்கு எவ்வித காயமும் ஏற்படவில்லை. அவர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பி உள்ளார்.

    மேலும் கொலைகாரன் பற்றியும் இந்த கொலைக்கு காரணம் எதுவும் உண்டா? என்று மனைவியிடமும் போலீசார் விசாரணையை முடுக்கி விட்டனர்.

    இன்று காலை நடந்த தொடர் விசாரணை மூலம் கைலாசம் கள்ளக்காதல் காரணமாக கொலை செய்யப்பட்டிருப்பதாக போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது.

    கைலாசம் மனைவி ஹேமலதாவுக்கும் அவரது உறவினர் ஒருவருக்கும் கள்ளக்காதல் இருப்பதாக தெரிய வந்துள்ளது. அவர்தான இந்த கொலையில் ஈடுபட்டிருப்பதாகவும் தெரிய வந்துள்ளது.

    ஈரோடு ஜல்லிக்கட்டில் மதுரையை சேர்ந்த கார்த்திக் என்ற பி.காம். 3-ம் ஆண்டு கல்லூரி மாணவர் கார்த்திக் கலந்து கொண்ட அவர் மட்டும் தனியாக 11 காளைகளை அடக்கி ஒட்டு மொத்த சாம்பியன் பட்டத்தை தட்டி சென்றார்.
    ஈரோடு:

    ஈரோட்டில் இன்று நடந்த ஜல்லிக்கட்டு போட்டியில் 150 மாடுகள் வாடிவாசல் வழியாக விடப்பட்டன.

    இதை அடக்க 200 இளைஞர்களள் மல்லு கட்டினர். மாடுகளை அடக்கியவர்களுக்கு தங்க காசுகள் மற்றும் பல்வேறு பரிசுகள் வழங்கப்பட்டன.

    ஈரோடு ஜல்லிக்கட்டில் மதுரையை சோ்ந்த பி.காம். 3-ம் ஆண்டு கல்லூரி மாணவா் கார்த்திக் என்பவர் கலந்து கொண்டார். அவர் மட்டும் தனியாக 11 காளைகளை அடக்கி ஒட்டு மொத்த சாம்பியன் பட்டத்தை தட்டி சென்றார்.

    இவருக்கு 11 தங்க காசுகளும் மற்றும் மொபைல் உள்பட பல்வேறு பரிகளும் வழங்கப்பட்டன. சிறந்த மாடுபிடி வீரருக்கான விருதும் இவருக்கு வழங்கப்பட்டது.

    மாணவர் கார்த்திக் தமிழ்நாட்டில் எங்கெல்லாம் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடக்கிறதோ... அங்கெல்லாம் சென்று ஆர்வத்துடன் கலந்து கொண்டு வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. #Jallikattu
    பெருந்துறை அருகே மோட்டார் சைக்கிள்கள் மோதிக் கொண்ட விபத்தி வேன் டிரைவர் பரிதாபமாக உயிரிழந்தார். விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    பெருந்துறை:

    பெருந்துறையை அடுத்துள்ள சுள்ளிப்பாளையம், வெற்றி நகர் பகுதியை சேர்ந்தவர் நாகராஜ்(63). இவர் பெருந்துறையில் உள்ள ஒரு கேஸ் கம்பெனியில் வேன் டிரைவராக வேலை பார்த்து வருகிறார்.

    கடந்த சில நாட்களுக்கு முன்னர் சீனாபுரத்தில் இருந்து சுள்ளிப்பாளையம் நோக்கி தனது சைக்கிளில் வந்து கொண்டிருந்தார். அப்போது, இவருக்கு எதிரே வந்த பைக் ஒன்று எதிர்பாராத விதமாக இவர் மீது மோதியது.

    இதில் தூக்கி வீசப்பட்ட நாகராஜ் தலை மற்றும் உடலில் பலத்த அடிபட்ட நிலையில் அக்கம் பக்கத்தினரால் மீட்கப்பட்டு பெருந்துறை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சை பிரிவில் இருந்த அவர் நேற்று முன்தினம் இரவு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்து போனார். இந்த சம்பவம் தொடர்பாக பெருந்துறை எஸ்ஐ ராம்பிரபு வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்.
    ஈரோட்டில் முதன் முறையாக இன்று நடந்த ஜல்லிக்கட்டு ஒரு மினி அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போல் இருந்தது. #Jallikattu
    ஈரோடு:

    தென் மாவட்டங்களில் மட்டுமே களை கட்டி வந்த ஜல்லிக்கட்டு போட்டி இப்போது வட மாவட்டங்களிலும் நடத்தப்பட்டு வருகிறது.

    அதன்படி ஈரோட்டில் முதன் முறையாக ஜல்லிக்கட்டு போட்டி நடத்த முடிவு செய்யப்பட்டு ஏற்பாடுகள் நடந்து வந்தது. ஈரோடு பெருந்துறை ரோட்டில் உள்ள ஏ.இ.டி. பள்ளி மைதானத்தில் இந்த ஜல்லிக்கட்டு இன்று காலை 8.30 மணிக்கு தொடங்கியது.

    போட்டி தொடங்குவதற்கு முன்பே ஜல்லிக்கட்டை நேரில் காண ஈரோடு மற்றும் சுற்று வட்டார பகுதி மக்கள் திரண்டனர். அவர்கள் பார்வையாளர்கள் வரிசையில் உட்கார வைக்கப்பட்டனர். பலர் நின்று கொண்டும் பார்த்தனர்.

    போட்டியை காலை சரியாக 8.30 மணிக்கு அமைச்சர்கள் கே.ஏ.செங்கோட்டையன், கே.சி.கருப்பணன், உடுமலை ராதாகிருஷ்ணன் ஆகியோர் கொடியசைத்து தொடங்கி வைத்தனர்.

    முன்னதாக கலெக்டர் கதிரவன் தலைமையில் மாடு பிடி வீரர்கள் உறுதி மொழி எடுத்து கொண்டனர்.

    தொடர்ந்து வாடிவாசல் வழியாக ஒவ்வொரு காளைகளும் அவிழ்த்து விடப்பட்டன. ஒவ்வொரு காளையும் சீறி பாய்ந்து ஓடியது. காளைகளை அடக்க முதலில் 100 இளைஞர்கள் அனுமதிக்கப்பட்டனர்.

    பாய்ந்து வரும் காளைகளை அடக்க இளைஞர்கள் தயாராக காத்திருந்தனர்.

    ஒவ்வொரு காளையும் துள்ளி குதித்து பாய்ந்து ஓடிய போது காளையர்களும் மாடுகள் மீது பாய்ந்து அடக்கினர். பல காளைகள் இளைஞர்களுக்கு டிமிக்கி கொடுத்து ஓடியது. மேலும் பல காளைகளின் திமிலை காளையர்கள் பிடித்து அடக்கினர்.

    அவர்களுக்கு 3 அமைச்சர்கள் தங்க காசுகள் பரிசாக வழங்கினர். பிடிபடாத காளைகளின் உரிமையாளர்களுக்கும் தங்க காசுகள் வழங்கப்பட்டன.

    போட்டியின் போது ஒலி பெருக்கி மூலம் வர்ணனை செய்யப்பட்டது. ‘‘இதை யாரும் அடக்க முடியாத முரட்டு காளைகள் அடக்கி பாருங்கள்’’, ‘‘இப்போது பாய்ந்து வருவது காங்கயம் காளை இதை அடக்க யாரும் உண்டா?’’ என இளைஞர்களை உசுப்பேத்தி கொண்டே இருந்தனர்.

    போட்டியில் கலந்து கொண்ட இளைஞர்களும் ‘‘என்ன காளையாக இருந்தாலும் அதை அடக்க நாங்கள் தயார்’’ என்று துணிச்சலுடன் காளைகளை அடக்கினர்.

    காளைகளை அடக்கி வெற்றி வீரர்களாக அறிவிக்கப்பட்டவர்களுக்கு ரொக்க பரிசு, தங்க காசுகள் மற்றும் செல்போன், வாட்ச் உள்பட பல்வேறு பரிசுகள் வழங்கப்பட்டன. ஜல்லிக்கட்டின் போது 2 காளைகள் திடீரென ஒன்றோடு ஒன்று மோதிக் கொண்டன. இதனால் பரபரப்பு ஏற்ப்பட்டது. உடனே அதன் உரிமையாளர்கள் வந்து தங்கள் மாட்டை சமாதானப்படுத்தி அழைத்து சென்றனர்.

    கூட்டம் அதிகமாக திரண்டதால் ஜல்லிக்கட்டு நடக்கும் மைதானத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டிருந்தது. மேலும் காயம் அடையும் மாடு பிடி வீரர்களுக்கு உடனுக்குடன் சிகிச்சை அளிக்க மருத்துவ குழுவினர் தயாராக இருந்தனர். காயம் அடைந்தவர்களுக்கு இவர்கள் உடனடியாக முதலுதவி சிகிச்சையும் அளித்தனர்.

    ஆக மொத்தத்தில் ஈரோட்டில் முதன் முறையாக நடந்த ஜல்லிக்கட்டு ஒரு மினி அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போல் இருந்தது. #Jallikattu
    அந்தியூர் அருகே வேலைக்கு சென்ற இளம்பெண் மாயமானது குறித்து அவரது தாய் போலீசில் புகார் செய்தார். போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    அந்தியூர்:

    அந்தியூர் அருகே உள்ள காட்டுப்பாளையம் செட்டி தோட்டம் பகுதியை சேர்ந்தவர் கவிதா (வயது 25). இவர் அந்தியூர் பர்கூர் ரோட்டில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் நர்சாக பணியாற்றி வருகிறார். இவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை.

    இந்த நிலையில் கடந்த 8-ந் தேதி கவிதா வேலைக்கு செல்வதாக வீட்டில் கூறி விட்டு சென்றார். இரவு வெகு நேரமாகியும் அவர் வீட்டுக்கு வரவில்லை. எங்கு சென்றார் என தெரியவில்லை.

    அவரை பற்றி அக்கம் பக்கம் உள்ளவர்கள் மற்றும் உறவினர்கள் வீடுகளில் விசாரித்தும் எந்த தகவலும் கிடைக்கவில்லை.

    இது குறித்து அவரது தாயார் மாரியம்மாள் அந்தியூர் போலீசில் புகார் செய்தார். அந்த புகாரில் கடந்த 8-ந் தேதி வேலைக்கு செல்வதாக கூறிவிட்டு சென்ற என் மகள் கவிதா மீண்டும் வீட்டுக்கு வலவில்லை. அவரை கண்டு பிடித்து தர வேண்டும் என கூறி உள்ளார்.

    சப்-இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    கொடுமுடி அருகே நண்பர்களுடன் காவிரி ஆற்றில் குளித்தபோது தண்ணீரில் மூழ்கி வாலிபர் பரிதாபமாக இறந்தார்.
    கொடுமுடி:

    திருப்பூர் மாவட்டம் மேட்டுப்பாளையம் வெள்ளக்கோவில் பகுதியை சேர்ந்தவர் முத்துச்சாமி. இவருடைய மகன் விவேக் (வயது 28). இவர் அந்தப்பகுதியில் உள்ள ஒரு தனியார் கம்பெனியில் தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார். பொங்கல் விடுமுறை விடப்பட்டு உள்ளதால் நேற்று முன்தினம் விவேக் மற்றும் அவருடைய நண்பர்கள் 2 பேர் என 3 பேரும் 2 மோட்டார் சைக்கிள்களில் ஈரோடு மாவட்டம் கொடுமுடிக்கு வந்தனர்.

    பின்னர் அவர்கள் 3 பேரும் கொடுமுடி மணல்மேடு பகுதியில் உள்ள காவிரி ஆற்றில் குளித்தனர். அப்போது விவேக் ஆழமான பகுதிக்கு சென்றதால் தண்ணீரில் மூழ்க தொடங்கினார்.

    இதைப்பார்த்த நண்பர்கள், விவேக்கை காப்பாற்ற முயன்றனர். ஆனால் அவர்களால் முடியவில்லை. இதனால் விவேக் ஆற்று தண்ணீரில் மூழ்கினார். இதுபற்றி கொடுமுடி தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் கொடுக்கப்பட்டது. தகவல் கிடைத்ததும் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று ஆற்றில் மூழ்கிய விவேக்கின் உடலை மீட்டனர்.

    இதுகுறித்து தகவல் அறிந்ததும் கொடுமுடி போலீஸ் இன்ஸ்பெக்டர் மணிகண்டன் மற்றும் போலீசார் அங்கு சென்று, விவேக்கின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கொடுமுடி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    காவிரி ஆற்றில் மூழ்கி இறந்த விவேக்கின் உடலை பார்த்து அவருடைய பெற்றோர் மற்றும் உறவினர்கள் கதறி அழுதது பார்க்க பரிதாபமாக இருந்தது.
    கோபி அருகே பள்ளி மாணவி கடத்தப்பட்டது குறித்து பெற்றோர் போலீசில் புகார் செய்தனர். போலீசார் மாணவியை தேடி வருகிறார்கள்.

    கோபி:

    கோபி அடுத்த புதுவள்ளியாம்பாளையத்தை சேர்ந்தவர் பேபி. இவரது மகள் தாரண வள்ளி. இவர் கோபியில் உள்ள ஒரு பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வந்தார்.

    நேற்று முன்தினம் வீட்டில் இருந்து வெளியே சென்ற மாணவி வீட்டுக்கு திரும்பி வர வில்லை. அவரை பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை.

    இது குறித்து அவரின் பெற்றோர் கோபி போலீசில் புகார் செய்தார்.

    புகாரில் மாணவியை கணக்கம் பாளையத்தை சேர்ந்த சரவணன் என்பவர் ஆசை வார்த்தை கூறி கடத்தி சென்று விட்டார். அவரிடம் இருந்து மீட்டு தர வேண்டும் என்று கூறி உள்ளனர்.

    புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து தேடி வருகிறார்கள்.

    ஈரோட்டில் முதன்முறையாக ஜல்லிக்கட்டு பெருந்துறை ரோட்டில் உள்ள ஏ.ஈ.டி. பள்ளி மைதானத்தில் வரும் 19-ந்தேதி (சனிக்கிழமை) காலை 8 மணிக்கு நடக்கிறது. #Jallikattu
    ஈரோடு:

    பொங்கல் பண்டிகையையொட்டி மதுரை மற்றும் தேனி மாவட்டத்தில் ஜல்லிக்கட்டு போட்டிகள் விறுவிறுப்பாக நடக்கும்.

    தென் தமிழகத்தில் நடந்து வரும் இந்த ஜல்லிக்கட்டு இப்போது வட தமிழகத்திலும் நடந்து வருகிறது.

    கடந்த ஆண்டு கோவையில் பாலக்காடு மெயின் ரோட்டோரம் முதன் முதலாக ஜல்லிக்கட்டு நடந்தது. இந்த ஆண்டு ஈரோட்டிலும் ஜல்லிக்கட்டு போட்டி நடத்த முடிவு செய்யப்பட்டு அதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகிறது.

    ஈரோட்டில் முதன்முறையாக ஈரோடு பெருந்துறை ரோட்டில் உள்ள ஏ.ஈ.டி. பள்ளி மைதானத்தில் வரும் 19-ந் தேதி (சனிக்கிழமை) காலை 8 மணிக்கு நடக்கிறது.

    இதற்காக ஜல்லிக்கட்டு நடைபெறும் இடம் தயார் செய்யப்பட்டு வாடிவாசலும் அமைக்கப்பட்டு உள்ளது.

    மாடுகள் பாய்ந்துவரும் இடமும் தயாராகி இரு புறமும் பொதுமக்கள் ஜல்லிக்கட்டை பார்த்து மகிழவும் இடம் தயாராக அமைக்கப்பட்டு தடுப்பு கம்புகளும் அமைக்கப்பட்டு உள்ளது.

    ஈரோட்டில் முதன் முதலாக ஜல்லிக்கட்டு நடக்க இருப்பதையொட்டி மாடுபிடி வீரர்கள் தயாராகி வருகிறார்கள். இதுவரை 200-க்கும் மேற்பட்டவர்கள் போட்டியில் பங்கேற்க பெயர் கொடுத்து உள்ளனர். இவர்கள் தற்போது அதற்கான பயிற்சியிலும் மும்முரமாக ஈடுபட்டு வருகிறார்கள்.

    மேலும் ஜல்லிக்கட்டு முதன்முறையாக ஈரோட்டில் நடக்க இருப்பதையொட்டி அதை நேரில் காண பொதுமக்களும் ஆர்வமாக உள்ளனர்.

    ஜல்லிக்கட்டை அமைச்சர்கள் கே.ஏ. செங்கோட்டையன், கே.சி. கருப்பணன் ஆகியோர் தொடங்கி வைத்து பார்வையிடுகிறார்கள்.

    மேலும் மாவட்ட கலெக்டர் கதிரவன், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சக்தி கணேசன், எம்.எல்.ஏ.க்கள் மற்றும் மாவட்ட துறை அதிகாரிகளும் கலந்துகொண்டு ஜல்லிக்கட்டு நிகழ்ச்சியை காண்கிறார்கள். #Jallikattu

    ×