என் மலர்tooltip icon

    ஈரோடு

    ஈரோட்டில் இன்று மாலை நடைபெற உள்ள பிரமாண்ட விழாவில் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு கருணாநிதியின் சிலையை திறந்து வைத்து சிறப்புரையாற்றுகிறார். #DMK #Karunanidhi #MKStalin
    ஈரோடு:

    தி.மு.க. முன்னாள் தலைவர் மறைந்த கருணாநிதியின் முழு உருவ வெண்கல சிலை ஈரோடு முனிசிபல் காலனி திரு.வி.க. வீதியில் அமைக்கப்பட்டுள்ளது.

    கருணாநிதியின் சிலை திறப்பு விழா இன்று மாலை 4 மணிக்கு நடக்கிறது.

    விழாவில் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு கருணாநிதியின் சிலையை திறந்து வைத்து சிறப்புரையாற்றுகிறார்.

    முன்னதாக ஈரோடு வரும் மு.க.ஸ்டாலினுக்கு ஈரோடு தெற்கு மாவட்ட தி.மு.க. செயலாளரும், முன்னாள் அமைச்சருமான முத்துசாமி தலைமையில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்படுகிறது.

    மு.க.ஸ்டாலின் ஈரோடு வருகையையொட்டி ஈரோடு மாவட்டம் மற்றும் அண்டை மாவட்டங்களான திருப்பூர், கோவை, சேலம், நாமக்கல், கரூர் மாவட்டங்களில் இருந்தும் ஆயிரக்கணக்கான தொண்டர்கள் குவிந்த வண்ணம் உள்ளனர்.

    சிலை திறப்பு விழாவில் கட்சி முக்கிய பிரமுகர்கள், கூட்டணி கட்சி பிரமுகர்களும் கலந்து கொள்கிறார்கள். #DMK #Karunanidhi #MKStalin
    கோபியில் லஞ்சம் வாங்கி தலைமறைவாக உள்ள போக்குவரத்து இன்ஸ்பெக்டர் வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடி சோதனை நடத்தி வருகிறார்கள்.
    கோபி:

    ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தில் போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டராக பணியாற்றி வந்தவர் பதி.

    இவர் சத்தியமங்கலம் வனப்பகுதியில் அதிக லோடுடன் வரும் லாரிகளை மடக்கி அதன் உரிமையாளர்களிடம் லஞ்சம் கேட்டுள்ளார்.

    இது பற்றிய புகாரின் லஞ்ச ஒழிப்பு போலீசார் கடந்த 10 தினங்களுக்கு மாறு வேடத்தில் லாரியில் சென்றனர். அந்த லாரியையும் போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் பதி மடக்கி லஞ்சம் கேட்டு உள்ளார்.

    மாறு வேடத்தில் இருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் அவரை கையும்-களவுமாக பிடித்தனர். பிறகு அவரை அழைத்து சென்றபோது பின்னால் போலீஸ் வாகனத்தில் சென்ற பதி திடீர் தலைமறைவானார்.

    அவரை லஞ்ச ஒழிப்பு போலீசார் தொடர்ந்து தேடி கொண்டு இருக்கிறார்கள். அவர் பதுங்கி இருக்கும் இடம் குறித்து தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    இந்த நிலையில் கோபியில் உள்ள போக்குவரத்து இன்ஸ்பெக்டர் பதி வீட்டில் இன்று காலை முதல் லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடி சோதனை நடத்தி வருகிறார்கள்.

    ஈரோட்டிலிருந்து சென்ற லஞ்ச ஒழிப்பு போலீசார் இந்த சோதனையில் ஈடுபட்டு வருகிறார்கள். #tamilnews
    ஈரோட்டில் கருணாநிதி சிலையை திமுக தலைவர் முக ஸ்டாலின் நாளை மாலை திறந்து வைக்கிறார். சிலை திறப்புக்காக 3-ம் வகுப்பு மாணவி சிறுமி சோபிகா தனது உண்டியல் பணத்தை கொடுத்துள்ளார். #Karunanidhi #DMK
    ஈரோடு:

    ஈரோடு முனிசிபல் காலனியில் சென்னை கலைஞர் அறிவாலயத்தில் உள்ளது போல் முழு உருவ கருணாநிதி சிலை வைக்கப்பட்டு உள்ளது.

    இந்த சிலையை தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் நாளை (30-ந் தேதி) மாலை திறந்து வைக்கிறார். இந்த சிலை திறப்பு நிகழ்ச்சிக்காக கொடுமுடி அருகே உள்ள சாண்டாம்பாளையம் மேலூரை சேர்ந்த 3-ம் வகுப்பு மாணவி சிறுமி சோபிகா தனது உண்டியல் பணத்தை கொடுத்துள்ளார்.

    இந்த மாணவி தனது தந்தையிடம் வாங்கும் பணத்தை உண்டியலில் சிறுக... சிறுக சேர்த்து வைத்திருந்தார். இந்த உண்டியல் பணத்தை தான் சிறுமி சோபிகா வழங்க முடிவு செய்தார்.

    உண்டியலை திறந்து பார்த்தபோது அதில் ரூ.1104 இருந்தது. அந்த பணத்துடன் பெற்றோருடன் ஈரோடு வந்த சிறுமி சோபிகா முன்னாள் அமைச்சரும், ஈரோடு தெற்கு மாவட்ட தி.மு.க. செயலாளருமான முத்துசாமியை சந்தித்து வழங்கினார்.

    அந்த சிறுமி கூறும்போது, ‘‘எனக்கு கலைஞர் தாத்தா ரொம்ப பிடிக்கும். கலைஞர் தாத்தா சிலை திறப்புக்காக இந்த பணத்தை கொடுத்துள்ளேன்’’ என்று கூறினார்.  #Karunanidhi #DMK
    அம்மாப்பேட்டை அருகே உறவினர் வீட்டிற்கு சென்ற இளம்பெண் மாயமான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    அம்மாபேட்டை:

    அம்மாபேட்டை அருகே திருக்கோவில்பத்து கிராமத்தை சேர்ந்தவர் சந்திரன், இவரது மகள் சந்தியா. இவர் 10-ம் வகுப்பு வரை படித்து விட்டு தஞ்சாவூரில் உள்ள ஒரு நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து வந்தார்.

    சம்பவத்தன்று சந்தியா தஞ்சாவூர் அருகே புன்னைநல்லூர் மாரியம்மன் கோவிலில் உள்ள தனது உறவினர் வீட்டிற்கு சென்று வருவதாக அவரது பெற்றோரிடம் கூறி சென்றார். பின்னர் அவர் மாயமாக விட்டார்.

    இது குறித்து சந்திரன் கொடுத்த புகாரின் பேரில் அம்மாபோட்டை போலீசர் வழக்குப்பதிவு செய்து மாயமான இளம்பெண்ணை தேடி வருகின்றனர்.

    சித்தோடு கோணம் வாய்க்கால் பகுதியில் டாஸ்மாக் கடை வேண்டாம் என கைக்குழந்தைகளுடன் பெண்கள் கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.
    ஈரோடு:

    ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில் இன்று மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடந்தது .கூட்டத்திற்கு கலெக்டர் கதிரவன் தலைமை தாங்கி பொதுமக்களிடம் இருந்து மனுக்களை வாங்கிக் கொண்டிருந்தார்.

    பவானி தாலுகா மயிலம்பாடி கிராமத்தைச் சேர்ந்த ஏராளமான பெண்கள் தங்களது குழந்தைகளுடன் கலெக்டரிடம் மனு கொடுத்தனர்.

    சித்தோடு கோணம் வாய்க்கால் பிரிவு பகுதியில் இயங்கி வந்த அரசு டாஸ்மாக் கடை தற்போது பவானி மயிலம்பாடி பஞ்சாயத்துக்கு உட்பட்ட போத்த நாயக்கன் புத்தூரில் நெடுஞ்சாலை ஓரம் உள்ள பகுதியில் அமைய உள்ளது.

    போத்த நாயகன் புத்தூர் சுற்றி சுமார் ஆயிரம் குடும்பங்கள் வசித்து வருகிறோம் மேலும் இப்பகுதியில் கல்வாநாயக்கனூரில் தொடக்கப்பள்ளியும் மகளிர் கூட்டுறவு பால் உற்பத்தியாளர் சங்கம் இயங்கி வருகிறது.

    இதனால் இந்த பகுதியில் எப்போதும் பெண்கள் நடமாட்டம் அதிகமாக இருக்கும்.

    எனவே மேற்படி இடத்தில் டாஸ்மாக்கடை வந்தால் இந்த பகுதி நடந்து செல்லும் பெண்களுக்கு பாதுகாப்பு பிரச்சினை ஏற்படும் மேலும் கல்லூரி பள்ளி செல்லும் மாணவ மாணவிகள் அச்சத்துடனேயே பள்ளிக்கு செல்லும் சூழ்நிலை உருவாகும். எனவே இந்த பகுதிக்கு வர இருக்கும் டாஸ்மாக் கடையை வேறு ஒரு பகுதிக்கு மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவர் அவர்கள் அந்த மனுவில் கூறியுள்ளனர். #tamilnews
    சத்தியமங்கலத்தில் இன்று 2 மணி நேரம் தொடர்ந்து மழை பெய்தது.

    சத்தியமங்கலம்:

    ஈரோடு மாவட்டத்தில் கடந்த ஒரு மாதத்துக்கு மேலாக கடும் பனிப் பொழிவும், குளிரும், வாட்டி எடுத்து வருகிறது.

    இந்த நிலையில் இன்று காலை சத்தியமங்கலம், பண்ணாரி, அத்தாணி மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் அதிகாலை 4 மணிக்கு திடீர் மழை பெய்தது.

    இந்த மழை தொடர்ந்து 6 மணி வரை 2 மணி நேரம் கொட்டியது. இந்த மழையால் ரோட்டில் மழை தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது.

    இந்த திடீர் மழையால் சத்தியமங்கலம் பகுதி மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். பனி காலம் முடிந்து வெயில் அடிக்க ஆரம்பிக்கும் தருணத்தில் மழை பெய்தது. மக்களை குதூகலப்படுத்தி உள்ளது.

    புளியம்பட்டி அருகே விபத்தில் பெண் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    பு.புளியம்பட்டி:

    கர்நாடக மாநிலம் மைசூரில் இருந்து கோவைக்கு அரசு பஸ் ஒன்று வந்து கொண்டிருந்தது.

    இந்த பஸ் புஞ்சை புளியம்பட்டி அருகே விண்ணப்பள்ளி இரட்டை பாலம் அருகே நேற்று நள்ளிரவு வந்த போது எதிரே ஒரு லாரி வந்தது.

    அப்போது எதிர்பாராத விதமாக பஸ்சின் பக்கவாட்டில் லாரி மோதியது.

    இதில் பஸ்சின் பின் புற பக்கவாட்டு சீட்டின் ஓரம் அமர்ந்திருந்த லிங்கம்மாள் (வயது65) மற்றும் அவருடன் வந்த நாகராஜ்(45) ரங்கசாமி (40) ஆகிய 3 பேரும் படுகாயம் அடைந்தனர். உடனடியாக ஆம்புலன்சு வரவழைக்கப்பட்டு 3 பேரையும் சத்தியமங்கலம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.

    ஆனால் செல்லும் வழியிலேயே லிங்கம்மாள் பரிதாபமாக இறந்தார். படுகாயம் அடைந்த மற்ற 2 பேருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இவர்கள் 3 பேரும் கோவையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு கண் பரிசோதனைக்காக வந்திருந்தனர். பஸ்சில் வந்த போது விபத்தில் சிக்கி உள்ளனர்.

    இந்த விபத்து குறித்து புஞ்சைபுளியம்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். லாரி டிரைவர் லாரியை சத்தியமங்கலத்தில் நிறுத்தி விட்டு தப்பி சென்று விட்டார்.

    கோபி அருகே கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடியபோது வாய்க்காலில் தவறி விழுந்து 2 வாலிபர்கள் உயிரிழந்தனர்.
    கோபி:

    ஈரோடு மாவட்டம் கோபி அருகே உள்ள தடப்பள்ளி- அரக்கன்கோட்டை வாய்க்கால்களில் பவானிசாகர் அணையில் இருந்து 2-ம் போகத்துக்கு தண்ணீர் திறந்து விடப்பட்டு உள்ளது.

    இதனால் வாய்க்காலில் தண்ணீர் நிரம்பி சென்று கொண்டிருக்கிறது.

    தண்ணீர் அதிகமாக சென்று கொண்டிருப்பதால் ஈரோடு மாவட்டம் மட்டுமில்லாமல் கோவை, சேலம், நாமக்கல் போன்ற பக்கத்து மாவட்டங்களை சேர்ந்த சுற்றுலா பயணிகள் கோபி பகுதிகளுக்கு சுற்றுலா வந்து கொடிவேரி அணை மற்றும் வாய்க்கால்களில் குளித்துக்கொண்டு சென்ற வண்ணம் உள்ளனர்.

    இந்த நிலையில் கோவை மாவட்டம் அன்னூர் தென்னம்பாளையம் பகுதியை சேர்ந்த பகவதி ராஜா (வயது 21) மற்றும் முத்துக்குமரேசன், ஜவகர் (21), ஹரிபிரசாத் (21), சங்கீதா (21), பவித்ரா, கோபி காசிபாளையம் பகுதியை சேர்ந்த மைதிலி (2) ஆகிய 7 பேர் கொண்ட நண்பர்கள் சுற்றுலா செல்ல ஒன்று சேர்ந்தனர்.

    மேலும் வாலிபர் ஜவகருக்கு அன்று பிறந்த நாளையொட்டி பிறந்த நாளை இயற்கையோடு கொண்டாடி மகிழ கோபி அருகே உள்ள காசிபாளையம் பகுதியில் ஓடும் தடப்பள்ளி வாய்க்காலுக்கு வந்தனர்.

    வாய்க்கால் கரையோரம் ‘கேக்’ வெட்டி பிறந்த நாளை கொண்டாடி கொண்டிருந்தனர்.

    அப்போது பகவதி ராஜா, முத்துக்குமரேசன் ஆகியோர் எதிர்பாராத விதமாக வாய்க்காலுக்குள் தவறிவிழுந்து விட்டனர். கரையில் இருந்த மற்ற நண்பர்கள் வாய்க்காலில் குதித்து காப்பாற்ற முயன்றனர். ஆனால் எவ்வளவோ போராடியும் காப்பாற்ற முடியவில்லை. பகவதிராஜா, முத்துக்குமரேசன் ஆகியோர் வாய்க்கால் தண்ணீர் இழுத்து சென்றது. இதில் அவர்கள் பரிதாபமாக இறந்தனர்.

    அவர்களை காப்பாற்ற முயன்றபோது வாலிபர் ஹரிபிரசாத்தும் சிக்கினார். மற்ற நண்பர்கள் அவரை காப்பாற்றி விட்டனர்.

    இதுபற்றி தகவல் கிடைத்தும் கோபி தீயணைப்பு நிலைய வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து வாய்க்காலில் மூழ்கி பலியான பகவதிராஜா, முத்துக்குமரேசன் ஆகிய 2 பேரின் உடல்களையும் மீட்டனர்.

    அவர்களின் உடல் கோபி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

    இன்று மதியம் அவர்கள் உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு உறவினர்களிடம் ஒப்படைக்கப்படுகிறது.
    போராட்டம் நடத்தும் ஆசிரியர்களுக்கு எதிராக ஈரோட்டில் இன்று பெற்றோர்கள் திரண்டு வந்து மறியல் போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது. #JactoGeo #ParentsProtest
    ஈரோடு:

    ஜாக்டோ-ஜியோ அமைப்பில் அங்கம் வகிக்கும் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் தொடர்ந்து வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். போராட்டத்தில் ஈடுபட்டு வரும் ஆசிரியர்கள், மாணவர்களின் நலன் கருதி பணிக்கு திரும்பவேண்டும் என்று சென்னை ஐகோர்ட்டு அறிவுறுத்தியது. தமிழக அரசும் தொடர்ச்சியாக வேண்டுகோள் விடுத்தது. எனினும் ஆசிரியர்கள் போராட்டத்தை கைவிடாமல், தொடர்ந்து ஈடுபட்டு வருகிறார்கள்.



    இந்த நிலையில் மாணவர்கள் பாதிக்கப்படக்கூடாது என்பதற்காக தற்காலிக ஆசிரியர்களை நியமிக்கும் பணியில் பள்ளி கல்வித்துறை மும்முரம் காட்டியுள்ளது. போராட்டத்தில் ஈடுபட்டு வரும் ஆசிரியர்களுக்கு கடைசி வாய்ப்பாக, பணிக்கு திரும்பவேண்டும் என்று பள்ளி கல்வித்துறை வேண்டுகோள் விடுத்துள்ளது. இன்று பணிக்கு திரும்பும் ஆசிரியர்கள் மீது எந்தவித மேல் நடவடிக்கையும் எடுக்கப்படாது என்று பள்ளி கல்வி மற்றும் தொடக்க கல்வி இயக்குனர்கள் தெரிவித்துள்ளனர்.
     
    இந்நிலையில் ஈரோடு மாவட்டம் பெருமாள்மலையில் ஆசிரியர்கள் பள்ளிக்கு வராததை கண்டித்து மாணவர்கள், பெற்றோர்கள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

    ஆசிரியர்கள் போராட்டத்தால் மாணவர்களின் எதிர்காலம் பாதிக்கப்படுவதாக பெற்றோர்கள் புகார் தெரிவித்தனர்.

    போராடும் ஆசிரியர்களும், தற்காலிக ஆசிரியர்களும் எங்களுக்கு வேண்டாம் என்றும், வேலையில்லாமல் உள்ள பட்டதாரிகளை நிரந்தர ஆசிரியர்களாக நியமிக்க வேண்டும் என்றும் மாணவர்களின் பெற்றோர் கோரிக்கை விடுத்தனர். #JactoGeo #ParentsProtest
    அரசு கண்டக்டரை தாக்கிய செக்கிங் இன்ஸ்பெக்டரை கண்டித்து அரசு டிரைவர்கள் மற்றும் கண்டக்டர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
    ஈரோடு:

    அரசு போக்குவரத்து கழகத்தின் ஈரோடு மண்டல கரூர் கிளையில் அரசு பஸ் கண்டக்டராக மோகன் குமார் பணியாற்றி வருகிறார். இவரை இன்று காலை ஈரோடு அரசு போக்குவரத்து கழகத்தின் செக்கிங் இன்ஸ்பெக்டர் பிரபு கலையரசன் தாக்கியதாக கூறப்படுகிறது.

    இதனை கண்டித்து ஈரோடு சென்னிமலை ரோட்டில் உள்ள அரசு போக்குவரத்து கழக டெப்போ முன்பு இன்று அதிகாலை 5.30 மணி அளவில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்திற்கு சிஐடியு நிர்வாகி சரவணன் தலைமை வகித்தார்.

    தொழிற்சங்கத்தை சேர்ந்த ரவி, சுப்பிரமணி ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்த ஆர்ப்பாட்டத்தின் காரணமாக இன்று காலை 45 நிமிடங்கள் டெப்போவில் இருந்து அரசு பஸ்கள் ஏதுவும் எடுக்கப்படவில்லை.

    இதுகுறித்து தகவல் அறிந்த ஈரோடு தாலுகா போலீசார் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி சமாதானம் செய்தனர். இதனையடுத்து ஆர்ப்பாட்டத்தை கைவிட்டு பணிக்கு சென்றனர். #tamilnews
    ஈரோடு மாவட்டத்தில் ஜாக்டோ-ஜியோவினரின் போராட்டத்தை கட்டுப்படுத்த முக்கிய நிர்வாகிகள் நேற்று இரவு கைது செய்யப்பட்டனர். #JactoGeo
    ஈரோடு:

    பழைய பென்சன் திட்டத்தையே செயல்படுத்த வேண்டும். எல்.கே.ஜி, யு.கே.ஜி வகுப்புகளுக்கு இடைநிலை ஆசிரியர்களை நியமிக்க கூடாது என்பன உள்பட 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு முழுவதும் ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.

    நேற்று 4-வது நாளாக மாவட்ட கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டு மறியல் நடத்த சென்ற ஆயிரக்கணக்கான பேர் கைது செய்யப்பட்டனர். இதேபோல ஈரோடு மாவட்டத்திலும் சுமார் 3 ஆயிரம் அரசு ஊழியர்- ஆசிரியர்கள் கைது செய்யப்பட்டு பிறகு விடுவிக்கப்பட்டனர்.

    இந்த நிலையில் ஜாக்டோ-ஜியோவினரின் போராட்டத்தை கட்டுப்படுத்த முக்கிய நிர்வாகிகள் நேற்று இரவு கைது செய்யப்பட்டு உள்ளனர்.

    இதேபோல் ஈரோடு மாவட்டத்தில் அரசு ஊழியர் சங்க மாவட்ட தலைவர் பாஸ்கர் பாபு, மாவட்ட செயலாளர் சுகுமார் நெடுஞ்சாலை துறை சங்க மாவட்ட செயலாளர் ரங்கசாமி, மாவட்ட துணை செயலாளர் சிவகுமார், அந்தியூர் ஒன்றிய செயலாளர் நிக்கோலஸ் சகாயராஜ் மற்றும் தங்கராஜ், அண்ணாதுரை, மோகன், அண்ணாமலை உள்பட 30 பேர் கைது செய்யப்பட்டனர்.

    இன்று குடியரசு தின விழாவையொட்டி அரசு பள்ளி ஆசிரியர்கள் அனைவரும் பள்ளிக்கு சென்று பங்கேற்க வேண்டும் என ஜாக்டோ-ஜியோ சங்கத்தினர் ஏற்கெனவே முடிவு செய்திருந்தனர்.

    மேலும் குடியரசு தின விழாவை புறக்கணித்தால், ஆசிரியர்கள் மீது ‘17-யு’ பிரிவின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என பள்ளி கல்விதுறை எச்சரிக்கை விடுத்திருந்தது.

    இந்த நிலையில் கடந்த 4 நாட்களாக வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்ட அனைத்து அரசு பள்ளி ஆசிரியர்களும் இன்று பள்ளிகளுக்கு சென்றனர். பள்ளிகளில் நடந்த குடியரசு தின விழாவிலும் கலந்து கொண்டனர்.

    பல பள்ளிகளில் 4 நாட்களுக்குப் பிறகு தங்கள் ஆசிரியர்-ஆசிரியர்களை பார்த்த மகிழ்ச்சியில் அவர்களை மாணவ- மாணவிகள் கைத்தட்டி வரவேற்றனர்.  #JactoGeo
    ஈரோடு அருகே உள்ள லக்காபுரத்தில் அடுத்தடுத்து 3 கடைகள் மற்றும் ஒரு வீட்டில் நடந்த திருட்டு சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    மொடக்குறிச்சி:

    லக்காபுரம் மொடக்குறிச்சி மெயின் ரோட்டில் ஒரு செல்போன் கடையும் அடுத்தடுத்து 2 மளிகை கடைகளும் உள்ளது. நேற்று நள்ளிரவில் மர்ம ஆசாமிகள் கோபிநாத் என்பவருக்கு சொந்தமான செல்போன் கடை பூட்டை உடைத்து உள்ளே புகுந்தனர். அங்கிருந்த 15 செல்போன்கள் மற்றும் 24 சிம் கார்டுகள் (மதிப்பு ரூ.50 ஆயிரம்) ஆகியவற்றை அள்ளி கொண்டனர்.

    அடுத்து குமார் (52) என்பவருக்கு சொந்தமான மளிகை கடையை உடைத்து புகுந்த கொள்ளையர்கள் அங்கு இருந்த 6 ஆயிரம் பணத்தை கொள்ளையடித்தனர்.

    மேலும் அடுத்துள்ள பட்டாபிராமன் என்பவரின் மளிகை கடை பூட்டையும் உடைத்து உள்ளே புகுந்த கொள்ளையர்கள் 1350 ரூபாயை எடுத்து கொண்டனர்.

    அதோடு விடாத கொள்ளையர்கள் அருகே இருந்த ஒரு வீட்டின் கதவு பூட்டை உடைத்து ரூ.8 ஆயிரம் பணமும் ½ பவுன் நகையையும் கொள்ளையடித்து சென்று விட்டனர்.

    இப்படி ஒரே சமயத்தில் அடுத்தடுத்து 3 கடைகள் மற்றும் ஒரு வீட்டில் கொள்ளை நடந்த சம்பவம் அந்த பகுதி பொதுமக்களையும், வியாபாரிகளையும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.

    ×