என் மலர்tooltip icon

    ஈரோடு

    பாராளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் அதிமுக தனித்து நின்றாலும் பா.ஜனதாவுடன் கூட்டணி அமைத்து போட்டியிட்டாலும் ஒரு தொகுதியிலும் ஜெயிக்காது என்றும் டெபாசிட் பறி போய்விடும் என்றும் இளங்கோவன் கூறினார். #Elangovan #ADMK
    ஈரோடு:

    ஈரோடு முனிசிபல் காலனியில் மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி முழு உருவச்சிலையை கடந்த சில தினங்களுக்கு முன் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.

    இந்த நிலையில் இன்று மாநில காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் மறைந்த கருணாநிதி சிலைக்கு மாலை அணிவித்தார்.

    அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    கலைஞர் சிலைக்கு மாலை அணிவித்ததை பெருமையாக கருதுகிறேன். பாராளுமன்ற தேர்தலில் தி.மு.க.- காங்கிரஸ் கூட்டணி புதுச்சேரியையும் சேர்த்து 40 தொகுதிகளிலும் அமோக வெற்றி பெறும்.

    அ.தி.மு.க. தனித்து நின்றாலும் பா.ஜனதாவுடன் கூட்டணி அமைத்து போட்டியிட்டாலும் ஒரு தொகுதியிலும் ஜெயிக்காது. டெபாசிட் பறி போய்விடும்.



    மோடி ஈரோடு மாவட்டத்தில் கவுந்தப்பாடியில் கூட்டம் நடத்தினாலும் சரி மொடக்குறிச்சியில் கூட்டம் நடத்தினாலும் சரி கொங்கு மண்டலத்தில் வெற்றி பெறவே முடியாது. அ.தி.மு.க.வும் வெற்றி பெற முடியாது.

    மம்தா போராட்டத்தை காங்கிரஸ் கட்சி ஆதரிக்கிறது. மோடி தனது ஆளுமை அதிகாரம் மூலம் சி.பி.ஐ-யை ஏவி அடக்குமுறை கையாள்கிறார்.

    மாநில காங்கிரஸ் தலைவராக நியமிக்கப்பட்டுள்ள அழகிரி நீண்ட நாட்களாக கட்சிக்கு பாடுபட்டு வருகிறார். மூத்த தலைவர். அவர் பணி சிறக்க வாழ்த்துகிறேன். காங்கிரஸ் கட்சி புது எழுச்சியை பெற்றுள்ளது.

    இவ்வாறு இளங்கோவன் கூறினார். #Congress #Elangovan #ADMK #BJP
    தொடர் திருட்டு, வழிப்பறியில் ஈடுபட்ட 2 கொள்ளையர்கள் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டார்கள்.
    பெருந்துறை:

    பெருந்துறை மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் கடந்த 2018-ஆம் ஆண்டு நடந்த வீடு புகுந்து கொள்ளை, வழிப்பறி போன்ற குற்றச்செயல்களில் ஈடுபட்டதாக 2 வாலிபர்களை பெருந்துறை போலீசார் கைது செய்து கோவை மத்திய சிறையில் அடைத்தார்கள்.

    அப்போது போலீசார் நடத்திய விசாரணையில், அதில் ஒருவர் சத்தியமங்கலம் அருகே உள்ள எரங்காட்டூரை சேர்ந்த பாரத்குமார் (வயது 30), மற்றொருவர் திருப்பூர் மாவட்டம், குன்னத்தூர் அருகே உள்ள தாளப்பதியை சேர்ந்த இம்ரான் (30) என்பது தெரியவந்தது.

    மேலும் விசாரணையில், இவர்கள் இருவரும் ஈரோடு, வெள்ளோடு, சென்னிமலை உள்ளிட்ட பல ஊர்களில் வீடுபுகுந்து நகை, பணம் திருடியதும், அதனால் அவர்கள் மீது பல போலீஸ் நிலையங்களில் பல்வேறு வழக்குகள் இருப்பதும் தெரியவந்தது.

    இந்தநிலையில் தொடர்ந்து குற்றச்செயல்களில் ஈடுபடுவதால் பாரத்குமார், இம்ரான் இருவரையும் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைக்கவேண்டும் என்று பெருந்துறை போலீசார், மாவட்ட கலெக்டர் கதிரவனுக்கு பரிந்துரை செய்தனர்.

    அதன்பேரில் கலெக்டர் கதிரவன், அவர்கள் இருவரையும் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைக்க உத்தரவு பிறப்பித்தார். இந்த உத்தரவு கோவை மத்திய சிறை அதிகாரிகளுக்கு அனுப்பப்பட்டது.
    பெருந்துறை அருகே வேலை பிடிக்காததால் தனியார் மில் அதிகாரி தற்கொலை செய்து கொண்டார்.
    பெருந்துறை:

    வேலூர் மாவட்டம் அரக்கோணம் அருகே உள்ள மோதூரை சேர்ந்தவர் வெங்கடேஷ். அவருடைய மகன் குமார் (வயது 22). இவர் பி.டெக். என்ஜினீயரிங் முடித்துவிட்டு ஈரோடு மாவட்டம் பெருந்துறை சிப்காட்டில் உள்ள ஒரு தனியார் மில்லில் மனிதவள மேம்பாட்டு அதிகாரியாக பணிக்கு சேர்ந்தார். கடந்த 1½ ஆண்டாக பணியாற்றி வந்தார்.

    பெருந்துறை அருகே உள்ள காசிபில்லாம்பாளையத்தில் வாடகைக்கு அறை எடுத்து நண்பர்கள் 3 பேருடன் தங்கியிருந்தார். இந்த நிலையில் குமாருக்கு வேலை பிடிக்கவில்லை என்று கூறப்படுகிறது. மேலும் ஓட்டலில் சாப்பிட அவருக்கு பிடிக்கவில்லை என்று தெரிகிறது. இதுகுறித்து தனது தாயை செல்போனில் தொடர்பு கொண்டு கூறி வருத்தப்பட்டுள்ளார்.

    அதற்கு அவர், ‘வேறு வேலை கிடைக்கும் வரை இந்த வேலையை செய். அதுவரை பொறுமையாக இரு‘ என்று கூறி ஆறுதல்படுத்தியுள்ளார். ஆனால் குமார் மனவேதனையில் இருந்து வந்துள்ளார். இதனால் தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்தார்.

    இந்த நிலையில் நேற்று முன்தினம் மாலை வேலை முடிந்து குமார் அறைக்கு வந்தார். பின்னர் அவர் விஷம் குடித்துவிட்டு வாயில் நுரை தள்ளிய நிலையில் கிடந்தார். இதைப்பார்த்த நண்பர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக பெருந்துறை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

    பின்னர் மேல்சிகிச்சைக்காக ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்தார்கள். ஆனால் சிகிச்சை பலனின்றி அவர் நேற்று முன்தினம் இரவு இறந்தார்.

    இதுகுறித்து பெருந்துறை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் விஸ்வநாதன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
    ஈரோடு அரசு ஆஸ்பத்திரியில் ரூ.1½ கோடி செலவில் பச்சிளம் குழந்தைகள் முன்நோய் தடுப்பு சேவை மைய கட்டிடம் கட்டும் பணியை எம்.எல்.ஏ.க்கள். தொடங்கி வைத்தனர்.
    ஈரோடு:

    ஈரோடு அரசு ஆஸ்பத்திரியில் அவசர சிகிச்சை பிரிவு, பிரசவ பிரிவு, நுண் கதிர் பிரிவு, பச்சிளங்குழந்தைகள் பிரிவு, இயன்முறை சிகிச்சை பிரிவு, எலும்புமுறிவு சிகிச்சை பிரிவு, அறுவை சிகிச்சை பிரிவு, காது -மூக்கு தொண்டை பிரிவு உள்ளிட்ட பல்வேறு பிரிவுகள் செயல்பட்டு வருகின்றன.

    இதனால் ஈரோடு மாவட்டத்தை சேர்ந்தவர்கள் மட்டுமல்லாமல் அருகில் உள்ள திருப்பூர், நாமக்கல் ஆகிய மாவட்டங்களை சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட நோயாளிகள் தினமும் இங்கு வந்து சிகிச்சை பெற்று செல்கிறார்கள். மேலும், 800-க்கும் மேற்பட்டவர்கள் உள் நோயாளிகளாக அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றும் வருகின்றனர்.

    இந்த நிலையில் ஈரோடு அரசு ஆஸ்பத்திரியில் பச்சிளம் குழந்தைகள் முன்நோய் தடுப்பு சேவை மைய கட்டிடம் கட்ட ரூ.1 கோடியே 40 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து கட்டிடம் கட்டுவதற்கான பணிகள் தொடக்க விழா நேற்று நடந்தது.

    விழாவில் எம்.எல்.ஏ.க்கள் கே.வி.ராமலிங்கம், கே.எஸ்.தென்னரசு ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டு சேவை மைய கட்டிடம் கட்டும் பணியை தொடங்கி வைத்தனர். இதில் அ.திமு.க. பகுதி செயலாளர்கள் மனோகரன், கேசவமூர்த்தி, ஜெகதீஷ், கோவிந்தராஜ், மாவட்ட சுகாதார பணிகள் இணை இயக்குனர் ரமாமணி, கண்காணிப்பாளர் பிரபாவதி தேவி, உறைவிட மருத்துவ அதிகாரி ரங்கநாயகி மற்றும் செவிலியர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டார்கள்.
    அந்தியூரில் டியூசனுக்கு சென்ற 10-ம் வகுப்பு மாணவன் மாயமானது குறித்து அவரது தந்தை போலீசில் புகார் செய்தார். போலீசார் மாணவனை தேடி வருகிறார்கள்.

    அந்தியூர்:

    அந்தியூர், தவுட்டுபாளையம் பகுதியை சேர்ந்தவர் குருசாமி மகன் இளங்கோ (வயது 16). இளங்கோ அந்தியூர் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வருகிறார்.

    கடந்த 29-ந் தேதி மாலையில் இளங்கோ டியூசனுக்கு செல்வதாக கூறி விட்டு நெரிஞ்சி பேட்டைக்கு சென்று விட்டு பின்னர் வீட்டுக்கு வந்தார்.

    இது பற்றி கேள்வி பட்டதும் இளங்கோ தாய் தீட்டியுள்ளார். பின்னர் மறுநாள் 30ந் தேதி டியூசனுக்கு சென்ற போது இளங்கோ தாய் மீண்டும் தீட்டியுள்ளார்.

    இதனால் டியூசனுக்கு செல்வதாக கூறி சென்ற இளங்கோ பின்னர் வீடு திரும்பவில்லை. பல்வேறு இடங்களில் இளங்கோவை தேடி பார்த்தும் கிடைக்க வில்லை.

    இது குறித்து இளங்கோ தந்தை அந்தியூர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் வழக்குபதவு செய்து மாயமான இளங்கோவை தேடி வருகிறார்கள்.

    பெருந்துறை அருகே காதல் விவகாரத்தில் மில் தொழிலாளி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    பெருந்துறை:

    பெருந்துறை சிப்காட்டில் உள்ள ஒரு தனியார் துணி தயாரிக்கும் மில்லில் வேலை பார்த்து வந்தவர் குமார் (வயது 22). இவர் அந்த மில்லில் மொத்த வியாபாரம் செய்ய வரும் வியாபாரிகளை வரவேற்கும் ஊழியராக பணி புரிந்து வந்தார்.

    குமாரின் சொந்த ஊர் வேலூர் மாவட்டம் அரக்கோணம் அருகே உள்ள மோதூர் ஆகும். பெருந்துறை அருகே காசிபில்லாம் பாளையத்தில் ஒரு ரூமில் வாடகைக்கு தங்கி வேலைக்கு போய் வந்தார்.

    இந்த நிலையில் நேற்று மாலை 6 மணி அளவில் தான் தங்கி உள்ள அறையில் குமார் திடீரென வி‌ஷம் குடித்து விட்டார். பிறகு தனது நண்பர் சிவசங்கரன் என்பவருக்கு போன் செய்து ‘‘நான் வி‌ஷம் குடித்து விட்டேன் மில் ரோட்டில் நின்று கொண்டிருக்கிறேன்... உடனே வா’’ என்று கூறினார்.

    இதை கேட்டு திருக்கிட்ட சிவசங்கரன் விரைந்து வந்தார். அங்கு வாந்தி எடுத்து கொண்டிருந்த குமாரை மீட்டு பெருந்துறை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

    பிறகு மேல் சிகிச்சைக்காக ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் செல்லும் வழியிலேயே குமார் பரிதாபமாக இறந்தார்.

    இது பற்றி பெருந்துறை போலீஸ் இன்ஸ்பெக்டர் சுகவனம் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    வி‌ஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட குமார் காதல் விவகாரத்தில் தற்கொலை செய்திருப்பதாக கூறப்படுகிறது. அது தான் காரணமா? அல்லது வேறு என்ன காரணம்? என்று போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    ஈரோட்டில் பணம் கேட்டு நெருக்கடி கொடுத்ததால் லாட்ஜில் வாலிபர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து அவரது நண்பர்கள் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    ஈரோடு:

    சேலம் மாவட்டம், எடப்பாடி தாலுகா, மையேரிப்பட்டி, நாதன் காடு பகுதியை சேர்ந்தவர் ராமர் மகன் சண்முகம் (வயது32). சண்முகம் பூலாம்பட்டியில் ஆட்டோ மொபைல்ஸ் கடை வைத்து நடந்து வந்தார்.

    இந்நிலையில் சண்முகம் கடந்த 28-ந் தேதி வெளியே சென்று வருவதாக வீட்டில் உள்ளவர்களிடம் சொல்லி விட்டு சென்றார். ஆனால் அதற்கு பின் அவர் வீடு திரும்பவில்லை. திடீரென அவர் மாயமானார்.

    நேற்று மதியம் சண்முகத்தின் தந்தை ராமருக்கு ஈரோட்டில் உள்ள ஒரு தனியார் லாட்ஜில் இருந்து தொலை பேசி வந்தது. அதன் பேரில் ஈரோட்டில் உள்ள தனியார் லாட்ஜிக்கு ராமர் வந்தார்.

    அப்போது லாட்ஜ் முன்னால் அவரது மகன் மோட்டார்சைக்கிள் இருந்தது. பின்னர் சண்முகம் தங்கி இருந்த அறைக்கு சென்று கதவை தட்டினர். ஆனால் பதில் வரவில்லை. மேலும் அந்த அறையில் இருந்த துர்நாற்றம் வீசியது.

    இது குறித்து வீரப்பன்சத்திரம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அவர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து அறையின் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தனர்.

    அங்கு சண்முகம் வி‌ஷம் குடித்து வாயில் நுரை தள்ளியபடி இறந்து கிடந்தார். பின்னர் அவர் உடல் பிரேத பரிசோதனைக்காக ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

    போலீசார் அறையை சோதனை செய்தனர். அப்போது சண்முகம் எழுதி வைத்திருந்த ஒரு கடிதம் சிக்கியது.

    அந்த கடிதத்தில் எனது நண்பர்களான கார்த்திக், வசந்த் ஆகியோரிடம் ரூ.7 லட்சம் கடன் வாங்கி இருந்தேன். அதை திருப்பி செலுத்த போதிய அவகாசம் எனது நண்பர்கள் தரவில்லை.

    மேலும் பணம் கேட்டு நெருக்கடி கொடுத்ததால் தான் மன உளைச்சல் அடைந்து வி‌ஷம் குடித்து தற்கொலை செய்து கொள்வதாகவும், என் சாவுக்கு காரணம் எனது நண்பர்கள் தான் என்றும் சண்முகம் அந்த கடிதத்தில் எழுதி இருந்தார்.

    இது குறித்து வீரப்பன்சத்திரம் போலீசார் கார்த்தி, வசந்த ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். #tamilnews
    கற்றல் குறைபாடு உள்ள குழந்தைகளின் திறமைகளை வளர்க்க ‘ரோபோ’ மூலம் பாடம் சொல்லிக்கொடுக்கும் முறை விரைவில் பள்ளிகளில் தொடங்கப்படும் என்று அமைச்சர் செங்கோட்டையன் கூறினார். #MinisterSengottaiyan
    கோபி:

    ஈரோடு மாவட்டம் கோபி அருகே உள்ள நாதிபாளையத்தில் ரூ.13.20 கோடி செலவில் நெல் சேமிப்பு கிடங்குடன் கூடிய வணிக வளாகம் கட்டுவதற்கான பூமி பூஜை இன்று காலை நடந்தது.

    தமிழக பள்ளி கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் கலந்துகொண்டு பூமி பூஜை நடத்தி பணியை தொடங்கி வைத்தார்.

    அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-



    முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் தலைமையில் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

    நாதிபாளையத்தில் ரூ.44 கோடி செலவில் 528 குடியிருப்பு வீடுகள், நம்பியூரில் ரூ.48 கோடி ரூபாய் செலவில் 528 வீடுகள், எலத்தூரில் ரூ.39 கோடி மதிப்பில் 456 அடுக்குமாடி குடியிருப்பு வீடுகள் கட்டப்பட்டு வருகிறது.

    கோபி பவளமலை கோவில் அருகே 6 ஏக்கர் நிலத்தில் ரூ.6 கோடி செலவில் விளையாட்டு அரங்கம் கட்டப்படுகிறது.

    வட மாநிலங்களில் தீவிரவாதம் இருக்கலாம். தீவிரவாதம் தலை தூக்கலாம். ஆனால் தமிழகத்தில் தீவிரவாதம் இல்லை. நாளை ஈரோடு மாவட்டத்தில் உள்ள 8 தொகுதிகளில் பொதுமக்களுக்கு கோழி குஞ்சுகள் வழங்கப்பட்டுள்ளது.

    1-ம் வகுப்பு முதல் 8-ம் வகுப்பு வரை வரும் கல்வி ஆண்டில் மாணவர்களுக்கு புதிய வண்ண சீருடை வழங்கப்படுகிறது. மார்ச் மாதம் 3 ஆயிரம் ஸ்மார்ட் வகுப்புகள் இண்டர்நெட் வசதியுடன் தொடங்கப்படும்.

    கற்றல் குறைபாடு உள்ள குழந்தைகளின் திறமைகளை வளர்க்க ரோபோ மூலம் பாடம் சொல்லிக்கொடுக்கும் முறை விரைவில் பள்ளிகளில் தொடங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    பேட்டியின் போது அமைச்சரிடம், பள்ளி கல்வித்துறையில் ஊழல், அரசு பள்ளி ஆசிரியர்கள் கைது- சஸ்பெண்டு நடவடிக்கைகள் பற்றி நிருபர்கள் கேட்டபோது, ‘‘இதுபற்றி பதில் சொல்லாமல் இருப்பது மேல்... நல்லது’’ என்று கூறி முடித்து கொண்டார். #MinisterSengottaiyan


    சத்தியமங்கலம் அருகே மோட்டார் சைக்கிள் மீது வேன் மோதிய விபத்தில் தந்தை, மகன் பரிதாபமாக உயிரிழந்தனர்.
    சத்தியமங்கலம்:

    சத்தியமங்கலம் அருகே உள்ள சிக்கரசம்பாளையம் பார்வதி நகரை சேர்ந்தவர் பாஸ்கர் (வயது 43). லாரி டிரைவர் மனைவி பெயர் மல்லிகா (24). மைதிலி (8) என்ற ஒரு மகளும் பிரதீப்குமார் (6) என்ற ஒரு மகனும் உள்ளனர்.

    நேற்று இரவு 9.15 மணியளவில் பாஸ்கர் தனது மகனுடன் சத்தியமங்கலம் சென்று விட்டு சிக்கரசம்பாளையம் சென்று கொண்டிருந்தார்.

    சத்தியமங்கலம் அருகே கள்ளுக்கடை பிரிவில் வந்தபோது தாளவாடியிலிருந்து திருப்பூர் நோக்கி காய்கறிகள் ஏற்றி கொண்டு ஒரு மினி வேன் வந்து கொண்டிருந்தது.

    அப்போது எதிர்பாராத விதமாக மோட்டார் சைக்கிள் மீது வேன் மோதியது.

    இதில் இருவருக்கும் தலையில் பலத்த அடிபட்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தனர். இந்த விபத்தால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    விபத்து பற்றி தகவல் கிடைத்ததும் சம்பவ இடத்துக்கு சத்தியமங்கலம் போலீசார் வந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர்.

    விபத்தில் பலியான தந்தை-மகன் உடல்களை மீட்டு சத்தியமங்கலம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

    மேலும் இந்த விபத்து குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    பெருந்துறை அருகே இன்று காலை கிணற்றில் தவறி விழுந்து கோவில் பூசாரி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
    பெருந்துறை:

    பெருந்துறை அருகே உள்ள திருவாச்சி தோட்டாணி சத்திரத்தை சேர்ந்தவர் சீனிவாசன்(வயது74). கோவில் பூசாரி.

    தோட்டாணி சத்திரத்தில் உள்ள பெருமாள் கோவிலில் பூசாரியாக பணிபுரிந்தார். இன்று காலை அந்த கோவிலில் கோ பூஜை நடந்தது. இதில் சீனிவாசன் கலந்து கொண்டு பூஜை செய்தார். பிறகு கோவில் கிணற்றில் மீண்டும் ஒரு தடவை குளிப்பதற்காக கயிறு மூலம் தண்ணீர் இரைத்துக் கொண்டிருந்தார்.

    கயிற்றை மேலே தூக்க எட்டிப்பார்த்த போது கிணற்றுக்குள் தவறி விழுந்து விட்டார். 60 அடி ஆழம் உள்ள அந்த கிணற்றில் 40 அடிக்கு தண்ணீர் இருந்தது.

    கிணற்றுக்குள் விழுந்த சீனிவாசன் சத்தம் போட்டார். உடனே அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் ஓடி வந்தனர். பெருந்துறை தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் கொடுத்தனர். நிலைய அலுவலர் வேலுசாமி தலைமையில் தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்தனர்.

    பொது மக்கள் கிணற்றில் இறங்கி சீனிவாசனை காப்பாற்ற முயன்றும் முடியவில்லை. தண்ணீரில் மூழ்கி பரிதாபமாக இறந்து விட்டார்.

    தீயணைப்பு வீரர்கள் கயிறு கட்டி கிணற்றுக்குள் இறங்கி சீனிவாசன் உடலை மீட்டனர். அவரது உடலை பார்த்து உறவினர்கள் கதறி அழுத காட்சி உருக்கமாக இருந்தது.

    பிறகு அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக பெருந்துறை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

    இது குறித்து பெருந்துறை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    தி.மு.க. ஆட்சிக்கு வந்ததும், முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா மரணத்துக்கு காரணமானவர்கள் ஜெயிலுக்கு அனுப்பப்படுவார்கள் என்று தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். #DMK #MKStalin #JayalalithaDeath
    ஈரோடு :

    தி.மு.க. முன்னாள் தலைவரும், முன்னாள் முதல்-அமைச்சருமான கருணாநிதி சிலை ஈரோடு முனிசிபல் காலனி திரு.வி.க. வீதியில் அமைக்கப்பட்டு உள்ளது. இதன் திறப்பு விழா நேற்று மாலை நடந்தது. விழாவுக்கு ஈரோடு தெற்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் சு.முத்துசாமி தலைமை தாங்கினார். முன்னாள் மத்திய மந்திரிகள் சுப்புலட்சுமி ஜெகதீசன், ஆ.ராசா ஆகியோர் முன்னிலை வகித்தனர். விழாவில் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதி வெண்கல உருவச்சிலையை திறந்து வைத்தார். இந்த நிகழ்ச்சியில் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:-

    தமிழக முதல்-அமைச்சராக இருந்த ஜெயலலிதா ஆஸ்பத்திரியில் இருந்தபோது என்ன தகவல் சொன்னார்கள். ரூ.1 கோடிக்கு இட்லி சாப்பிட்டார் என்றார்கள். ஜூஸ் குடித்தார் என்றார்கள். ஆனால் என்ன நடந்தது?. அந்த அம்மையாரால் அடையாளம் காட்டப்பட்டு, இன்றும் அவரால் பதவியை பெற்று இருக்கும் எடப்பாடியும், பதவி போனதும் ஆவியுடன் பேசுகிறேன், உண்மையை கொண்டு வர விசாரணை கமி‌ஷன் அமைக்க வேண்டும் என்று கூறி துணை முதல்-அமைச்சர் பதவி கிடைத்ததும் அமைதியாக இருக்கும் ஓ.பன்னீர்செல்வமும் இப்போது ஏன் பேசவில்லை. மறைந்த ஜெயலலிதாவுக்கு ஒரு இரங்கல் கூட்டமோ, புகழ் அஞ்சலி கூட்டமோ நடத்தி இருப்பார்களா?. ஜெயலலிதா மரணத்தில் மர்மம் இருக்கிறது என்று கூறுகிறார்கள். அதையும் அவர்கள்தான் கூறினார்கள்.



    தமிழக அமைச்சரவையில் சட்டத்துறை அமைச்சராக இருக்கும் சி.வி.சண்முகம் இதுபற்றி சி.பி.ஐ. விசாரிக்க வேண்டும் என்கிறார். ஜெயலலிதாவுக்கும், கருணாநிதிக்கும் கருத்து வேறுபாடுகள் இருக்கலாம். தி.மு.க.வுக்கும் அ.தி.மு.க.வுக்கும் கொள்கை வேறுபாடுகள் இருக்கலாம். ஆனால் இறந்தது முதல்-அமைச்சர். அவரது மரணம் மர்மமாக இருக்கிறது. தி.மு.க. ஆட்சிக்கு வந்ததும் முதல் வேலையாக ஜெயலலிதா மரணம் குறித்து விசாரிக்க ஆணையம் அமைக்கப்படும். ஆணையம் அமைத்து உண்மையை வெளிக்கொண்டு வருவது மட்டுமல்ல, ஜெயலலிதாவின் மரணத்துக்கு காரணமானவர்கள் ஜெயிலுக்கு அனுப்பப்படுவார்கள். இது உறுதி. சத்தியம்.

    முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி மீது 5 கொலை வழக்குகள் உள்ளன. கோடநாடு காவலாளி கொலை. அந்த கொலையை மறைக்க 4 கொலைகள் என 5 கொலைகள் நடந்து உள்ளன. இதுவரை ஊழல் வழக்குகள் முதல்-அமைச்சர்கள் மீது கூறப்பட்டு உள்ளன. அதற்கு ஜெயலலிதாவே முன்உதாரணம். பல மாநில முதல்-அமைச்சர்கள், அமைச்சர்களும் ஜெயிலுக்கு சென்று இருக்கிறார்கள். ஆனால் கொலை புகார் ஒரு முதல்-அமைச்சர் மீது கூறப்படுகிறது. அவர் தமிழக முதல்-அமைச்சர். அவருக்கு அதுபற்றி அவமானம் இருக்கிறதோ இல்லையோ, தமிழ்நாட்டுக்கு மிக அவமானமாகும்.

    எனவே இந்த தமிழக அரசுக்கும், இதற்கு முட்டுக்கொடுக்கும் பாசிச பா.ஜனதா அரசுக்கும் முடிவுகட்டி பாடம் கற்பிக்க வேண்டும் என்று உறுதி ஏற்போம்.

    இவ்வாறு மு.க.ஸ்டாலின் பேசினார். #DMK #MKStalin #JayalalithaDeath
    ஆப்பக்கூடல் அருகே நடத்தையில் சந்தேகப்பட்டு மனைவியை மண் வெட்டியால் வெட்டி படுகொலை செய்த கணவர் கைது செய்யப்பட்டார்.

    ஆப்பக்கூடல்:

    ஈரோடு மாவட்டம் ஆப்பக்கூடல் அருகே உள்ள பெரிய கள்ளியூர் காமநாயக்கன் பாளையத்தை சேர்ந்தவர் தர்மன் (வயது 47). விவசாயி டிப்பர் லாரி வைத்தும் ஓட்டி வருகிறார்.

    இவரது மனைவி விஜயசாந்தி (24). கடந்த 1 ஆண்டுக்கு முன்புதான் திருமணம் நடந்தது. ஒரு கைக்குழந்தை உள்ளது.

    இந்த நிலையில் மனைவியின் நடத்தையில் தர்மன் சந்தேகப்பட்டார். மனைவி விஜயசாந்தி அடிக்கடி தனது செல்போனில் பேசிக் கொண்டே இருப்பாராம். இதனால் சந்தேகத்தை உறுதிபடுத்திய கணவர் மனைவியை கண்டித்து உள்ளார்.

    இது தொடர்பாக அவர்களிடையே தகராறு இருந்து வந்தது. அடிக்கடி வாக்குவாதத்தில் ஈடுபட்டு வந்தனர்.

    நேற்று இரவு வெளியே சென்று விட்டு இன்று அதிகாலை தர்மன் வீட்டுக்கு வந்துள்ளார். அப்போது அவரது மனைவி விஜயசாந்தி செல்போனில் பேசி கொண்டிருந்தாராம்.

    இதனால் கடும் கோபம் அடைந்த தர்மன் மனைவியை திட்டினார். இது தொடர்பாக இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டு முற்றியது.

    ஆத்திரத்தின் உச்சிக்கே சென்ற தர்மன் வீட்டில் உள்ள தோட்டத்தில் களை எடுக்கும் சிறிய மண்வெட்டியால் தலை மற்றும் கழுத்தில் ஓங்கி வெட்டினார்.

    இதில் ரத்தம் பீறிட்ட நிலையில் துடிதுடித்து சம்பவ இடத்திலேயே விஜயசாந்தி பரிதாபமாக இறந்தார். இந்த படுகொலை சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இது குறித்து ஆப்பக்கூடல் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    மேலும் போலீசார் கொலையாளி தர்மனை கைது செய்தனர். அவரிடம் தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.

    விஜயசாந்தி எதற்காக கொலை செய்யப்பட்டார். கள்ளக்காதல் காரணமாக இந்த கொலை நடந்ததா? என்று போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். 

    ×