என் மலர்tooltip icon

    ஈரோடு

    • கடந்த 3 நாட்களுக்கு முன்பு ஒற்றை யானை ஒன்று கரும்பு பாரம் ஏற்றி வந்த லாரியை குறுக்கிட்டு கரும்பை பிடித்து இழுத்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
    • கர்நாடக மாநிலம் நரசிபுரம் எனும் ஊரிலிருந்து அரிசி லோடு ஏற்றிக்கொண்டு ஈரோடு செல்வதற்காக வந்த லாரியை காரப்பள்ளம் எனும் இடத்தில் ஒற்றை யானை வழிமறித்து கரும்பு இருக்கின்றதா என தேடிப் பார்த்தது.

    சத்தியமங்கலம்:

    சத்தியமங்கலம்-மைசூர் தேசிய நெடுஞ்சாலையில் அடர்ந்த வனப்பகுதியில் உள்ள மலைப்பாதையில் நாளொன்றுக்கு 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாகனங்கள் சென்று வருகின்றன.

    இதில் தற்போது தாளவாடியில் இருந்து சத்தியமங்கலத்தில் இருக்கும் கரும்பு ஆலைக்கு கரும்புகள் ஏற்றி லாரிகள் தினமும் அடர்ந்த வனப்பகுதியை கடந்து வருகின்றது.

    இதில் கடந்த 3 நாட்களுக்கு முன்பு ஒற்றை யானை ஒன்று கரும்பு பாரம் ஏற்றி வந்த லாரியை குறுக்கிட்டு கரும்பை பிடித்து இழுத்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    அதேபோல் நேற்று இரவு 8 மணியளவில் கர்நாடக மாநிலம் நரசிபுரம் எனும் ஊரிலிருந்து அரிசி லோடு ஏற்றிக்கொண்டு ஈரோடு செல்வதற்காக வந்த லாரியை காரப்பள்ளம் எனும் இடத்தில் ஒற்றை யானை வழிமறித்து கரும்பு இருக்கின்றதா என தேடிப் பார்த்தது. பின்னர் அருகே இருக்கும் வாகனங்களை விரட்ட ஆரம்பித்தது.

    ஒரு கட்டத்தில் யானை ரோட்டின் நடுவே நீண்ட நேரம் நின்று விட்டது. பிறகு மெல்ல, மெல்ல யானை நகர்ந்து காட்டிற்குள் சென்றதால் வாகனங்கள் நகர ஆரம்பித்தன.

    இதனால் சத்தியமங்கலம்-மைசூர் தேசிய நெடுஞ்சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. கரும்பு பாரம் ஏற்றி வரும் லாரிகளை அடர்ந்த வனப்ப–குதிக்குள் எங்கேயும் நிறுத்த வேண்டாம் என வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்து உள்ளனர்.

    • எலி பிடிக்க செல்வதாக கூறி விட்டு கழிவுநீர் கால்வாய் பகுதிக்கு சென்ற ஆறுமுகம் குடிபோதையில் இருந்ததால் கழிவுநீர் கால்வாயில் தவறி விழுந்து இறந்தார்.
    • சென்னிமலை போலீசார் ஆறுமுகத்தின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக பெருந்துறை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    சென்னிமலை:

    சென்னிமலை டவுன் அம்மாபாளையம் அன்பு நகரை சேர்ந்தவர் ஆறுமுகம் (33). இவர் மீன்பிடித்தல், எலி பிடித்தல் போன்ற வேலைகள் செய்து வந்தார்.

    இவரது மனைவி செல்வி. ஆறுமுகத்திற்கு குடிப்பழக்கம் இருப்பதாக கூறப்படுகிறது.

    சம்பவத்தன்று இரவு ஆறுமுகம் தனது மனைவி செல்வியிடம் எலி பிடிக்க செல்வதாக கூறி விட்டு சென்னிமலையில் உள்ள காட்டூர் வழியாக செல்லும் கழிவுநீர் கால்வாய் பகுதிக்கு சென்றுள்ளார்.

    அப்போது ஆறுமுகம் குடிபோதையில் இருந்ததால் கழிவுநீர் கால்வாயில் தவறி விழுந்து இறந்தார்.

    இது குறித்து ஆறுமுகத்தின் மனைவி செல்வி கொடுத்த புகாரின் பேரில் சென்னிமலை போலீசார் ஆறுமுகத்தின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக பெருந்துறை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    மேலும் இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • பவானி லட்சுமி நகர் மணக்காட்டூர் பகுதியில் உள்ள ஒரு கிணற்றில் ஆண் ஒருவர் பிணமாக மிதப்பதாக பவானி தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் கிடைத்தது.
    • போலீசார் விசாரணையில் இறந்தவர் பவானி லட்சுமி நகர் சென்னாநாயக்கனூரை சேர்ந்த மணிவண்ணன் என்பது முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.

    சித்தோடு:

    பவானி லட்சுமி நகர் மணக்காட்டூர் பகுதியில் உள்ள ஒரு கிணற்றில் ஆண் ஒருவர் பிணமாக மிதப்பதாக பவானி தீயணைப்பு நிலையத்திற்கு பழனிவேல் ராஜன் என்பவர் இன்று அதிகாலை 3.30 மணியளவில் தகவல் தெரிவித்துள்ளார்.

    இதனை தொடர்ந்து பவானி தீயணைப்பு நிலைய அலுவலர் மற்றும் வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து இறந்து கிடந்த ஆணின் உடலத்தை கயிறு கட்டி கிணற்றிலிருந்து மீட்டனர். பின்னர் சித்தோடு போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

    தகவலின் பேரில் போலீசார் சம்பவயிடம் வந்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் இறந்தவர் பவானி லட்சுமி நகர் சென்னாநாயக்கனூரை சேர்ந்த மணிவண்ணன் (35) என்பது முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.

    இறந்த மணிவண்ணன் உடலை மீட்ட சித்தோடு போலீசார் பவானி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

    மேலும் அவர் தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது வேறு ஏதும் காரணமா? என போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    • ஓட்டலில் வேலை செய்பவர்கள் அவர்கள் 8 தோசை சாப்பிட்டதாக கூறினர்.
    • புஞ்சை புளியம்பட்டி இன்ஸ்பெக்டர் அன்பரசு வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினார்.

    பு.புளியம்பட்டி:

    ஈரோடு மாவட்டம் நம்பியூர் பிளியாம்பாவர் பாரதி (வயது 26). இவரது தம்பி சுதாகரன் (24) மற்றும் அதே பகுதியை சேர்ந்த சுரேஷ் (22). இவர்கள் 3 பேரும் புஞ்சை புளியம்பட்டிக்கு வந்தனர். அவர்கள் பஸ் நிலையம் பகுதியில் உள்ள ஒரு ஓட்டலில் சாப்பிட்டனர். அப்போது ஓட்டலில் வேலை செய்பவர்கள் அவர்கள் 8 தோசை சாப்பிட்டதாக கூறினர். அதற்கு அவர்கள் நாங்கள் 6 தோசை தான் சாப்பிட்டோம் என்று கூறினர். இதில் அவர்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. தொடர்ந்து அவர்களுக்கு இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

    அப்போது ஓட்டல் உரிமையாளர் ராமசாமி, புரோட்டா மாஸ்டர் குமார் (40) மற்றும் ஓட்டலில் வேலை செய்யும் 2 பேர் ஆகியோர் சேர்ந்து பாரதி, சுதாகரன், சுரேஷ் மீது தாக்குதல் நடத்தியதாக கூறப்படுகிறது. மேலும் புரோட்டா மாஸ்டர் குமார் அருகே இருந்த மரக்கட்டையை எடுத்து அவர்களை தாக்கி உள்ளார்.

    இதில் பாரதி மற்றும் சுதாகருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. அவர்கள் அன்னூர் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர். மேல் சிகிச்சைக்காக கோவை மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

    இதுகுறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை நடத்தினர்.

    அப்போது பாரதி மற்றும் சுதாகரன் மீது தாக்குதல் நடத்திய புரோட்டா மாஸ்டர் புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியை சேர்ந்த குமார், ஓட்டல் உரிமையாளர் ராமசாமி மற்றும் ஓட்டல் தொழிலாளர்கள் 2 பேர் என தெரிய வந்தது.

    இதுகுறித்து புஞ்சை புளியம்பட்டி இன்ஸ்பெக்டர் அன்பரசு வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினார். இதையடுத்து புரோட்டா மாஸ்டர் குமார் என்பவரை போலீசார் கைது செய்தனர். தொடர்ந்து அவர் சிறையில் அடைக்கப்பட்டார்.

    ஓட்டல் உரிமையாளர் ராமசாமி மற்றும் 2 பேர் தலைமறைவாகி விட்டனர். அவர்களை போலீசார் தேடி வருகிறார்கள்.

    • கைத்தறி நெசவாளர்களுக்கு அறிவிக்கப்பட்ட பசுமை வீடு திட்டத்தினை உடனடியாக அமல்படுத்த வேண்டும் என மாவட்ட கைத்தறி சம்மேளனம் சார்பாக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்னர்.
    • தமிழக கைத்தறி நெச–வாளர் நலனில் மாபெரும் அக்கரை கொண்டு நெசவாளர்க–ளுக்காக தொடர்ந்து பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டு நெசவாளர் வாழ்வாதாரத்தை பாதுகாத்துவரும் தமிழக முதல்-அமைச்சருக்கு நெசவாளர் குடும்பங்களின் சார்பாக நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறோம்.

    சென்னிமலை: –

    கைத்தறி நெசவாளர்களுக்கு அறிவிக்கப்பட்ட பசுமை வீடு திட்டத்தினை உடனடியாக அமல்படுத்த வேண்டும் என மாவட்ட கைத்தறி சம்மேளனம் சார்பாக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்னர்.

    இது குறித்து ஈரோடு மாவட்ட கைத்தறி நெசவாளர் சம்மேளனத்தின் தலைவரும், மாவட்ட தி.மு.க. நெசவாளர் அணி அமைப்பாளருமான கே.எஸ்.பி. ராஜேந்திரன், தமிழக முதல்-அமைச்சர், அதிகாரிகளுக்கு கோரிக்கை மனு அனுப்பியுள்ளார்.

    அதில் கூறியிருப்பதாவது:-

    தமிழக கைத்தறி நெசவாளர் நலனில் மாபெரும் அக்கரை கொண்டு நெசவாளர்களுக்காக தொடர்ந்து பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டு நெசவாளர் வாழ்வாதாரத்தை பாதுகாத்துவரும் தமிழக முதல்-அமைச்சருக்கு நெசவாளர் குடும்பங்களின் சார்பாக நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறோம்.

    கடந்த ஆண்டு நிதிநிலை அறிக்கை கூட்ட தொடரில் அறிவிக்கப்பட்ட பல்வேறு நெசவாளர் நலத்திட்டங்கள் இன்றளவும் நடைமுறைப்படுத்த படவில்லை.

    நெசவாளர் மருத்துவ காப்பீட்டுத் திட்டம், நெசவாளர் பசுமை வீட்டு திட்டம் ஆகியவற்றை உடனடியாக நிறைவேற்ற வேண்டும். கடுமையாக நூல்விலை உயர்வின் காரனமாக நெசவாளர்களுக்கு முழுமையாக வேலை வாய்ப்பைகூட வழங்க முடியாமல் கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கங்கள் சிரம நிலையில் உள்ளன.

    பிரதம கைத்தறி கூட்டுறவு சங்கங்களில் தேக்கமடைந்துள்ள ஜவுளிகளை கோஆப்டெக்ஸ் நிறுவனத்தின் மூலம் கொள்முதல் செய்யவும், நூல் விலை உயர்வினை கட்டுப்படுத்த மத்திய அரசினை வலியுறு–த்தவும் தமிழக கைத்தறி நெசவாளர் குடும்பங்களின் சார்பாக கேட்டுக் கொள்கிறோம்.

    இவ்வாறு அந்த மனுவில் கூறியுள்ளனர்.

    • கொடுமுடி போலீஸ் இன்ஸ்பெக்டர் முருகன் அரசு பஸ் ஊழியர்களிடம் தகராறில் ஈடுபட்ட தனியார் பஸ் கண்டக்டரை விசாரணை நடத்தி கண்டித்து அனுப்பி வைத்தார்.
    • இந்த சம்பவத்தால் சுமார் 20 நிமிடங்கள் பஸ் நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

    கொடுமுடி:

    வேலூரில் இருந்து ஈரோடு செல்லும் தனியார் பஸ் கொடுமுடி பஸ் நிலையத்துக்கு காலை 9.30 மணிக்கு வந்து 9.40-க்கு செல்ல வேண்டும்.

    இந்நிலையில் இன்று 9.25 மணிக்கு கொடுமுடி பஸ் நிலையம் வந்த தனியார் பஸ்சின் கண்டக்டர் பஸ் நிலையத்தில் ஈரோட்டுக்கு பயணிகளை ஏற்றி கொண்டு இருந்தார்.

    அப்போது அங்கு இருந்த அரசு பஸ் நேரக்காப்பாளர் 9.30-க்கு அரசு பேருந்து உள்ளது. பயணிகளை ஏற்ற வேண்டாம் என்று கூறியதற்கு அப்படித்தான் ஏற்றுவேன் என்று தகராறில் ஈடுபட்டார்.

    அப்போது அங்கு வந்த கொடுமுடி போலீஸ் இன்ஸ்பெக்டர் முருகன் அரசு பஸ் ஊழியர்களிடம் தகராறில் ஈடுபட்ட தனியார் பஸ் கண்டக்டரை விசாரணை நடத்தி கண்டித்து அனுப்பி வைத்தார்.

    மேலும் தனியார் பஸ் கண்டக்டர் சென்னையில் உள்ள கல்லூரியில் எம்.பி.ஏ பட்ட படித்து வருபவர் என்றும், கல்லூரி விடுமுறை என்பதால் இன்று ஒரு நாள் கண்டக்டராக பணிக்கு வந்தவர் என்றும் தெரிய வந்தது. இந்த சம்பவத்தால் சுமார் 20 நிமிடங்கள் பஸ் நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

    • ஈரோடு மாவட்டம் கடம்பூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சிவகுமார் மற்றும் போலீசார் கடம்பூர் மற்றும் மாக்கம்பாளையம் பகுதியில் ரோந்து சென்று ஆய்வு செய்தனர்.
    • போலீசார் வழக்கு பதிவு செய்து அவர்களிடம் இருந்து ரூ.11 ஆயிரத்து 280 மதிப்புள்ள 28 கிலோ போதை மற்றும் புகையிலை பொருட்களை பறிமுதல் செய்தனர்.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டம் கடம்பூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சிவகுமார் மற்றும் போலீசார் கடம்பூர் மற்றும் மாக்கம்பாளையம் பகுதியில் ரோந்து சென்று ஆய்வு செய்தனர்.

    போலீசார் தொடர்ந்து கடம்பூர் மாக்கம்பாளையம் ரோடு அஞ்சனை பிரிவு பகுதியில் சோதனை செய்து கொண்டு இருந்தனர். அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் 2 பேர் வந்தனர்.

    அவர்களை போலீசார் நிறுத்தி அவர்கள் கொண்டு வந்த பைகளை சோதனை செய்தனர். அப்போது அதில் புகையிலை மற்றும் போதை பொருட்கள் இருந்ததும் அதை அவர்கள் விற்பனைக்கு கொண்டு சென்றதும் தெரிய வந்தது.

    இதையடுத்து போலீசார் அவர்களிடம் விசாரணை நடத்தினர். இதில் அவர்கள் டி.என்.பாளையம் அடுத்த வாணிப்புதூர் பகுதியை சேர்ந்த குருகோகுல் (24), தங்கவேல் (64) என தெரிய வந்தது.

    இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து அவர்களிடம் இருந்து ரூ.11 ஆயிரத்து 280 மதிப்புள்ள 28 கிலோ போதை மற்றும் புகையிலை பொருட்களை பறிமுதல் செய்தனர். தொடர்ந்து அவர்கள் 2 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • தாளவாடி அடுத்த திம்பம், தலமலை வனப்பகுதியில் பெய்த பலத்த மழையின் காரணமாக திம்பம் மலைப்பாதையில் மழை நீர் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் வாகன ஓட்டிகள் வாகனத்தை இயக்க முடியாமல் கடும் அவதிப்பட்டனர்.
    • பலத்த மழையால் மலைப்பாதையில் உள்ள அருவிகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் வனப்பகுதி முழுவதும் பசுமையாக காட்சி அளித்து வருகிறது.

    தாளவாடி:

    ஈரோடு மாவட்டம் தாளவாடி அடுத்த திம்பம், தலமலை வனப்பகுதியில் கடந்த சில நாட்களாக பகல் நேரங்களில் கடும் வெயில் வாட்டி வதைத்து வருகிறது. அதே நேரம் மாலை மற்றும் இரவு நேரங்களில் பரவலாக பலத்த மழை பெய்து வருகிறது.

    இந்தநிலையில் திம்பம், தலமலை மற்றும் சுற்று வட்டார வனப் பகுதிகளில் நேற்று காலை முதல் வெயில் வாட்டி வதைத்தது. திடீரென மதியம் 3 மணி அளவில் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. தொடர்ந்து சாரல் மழை பெய்தது.

    பின்னர் நேரம் செல்ல செல்ல பலத்த மழை கொட்டியது. மேலும் திம்பம், காளி திம்பம், தலமலை, பெஜலட்டி, மாவநத்தம் ஆகிய பகுதியில் தொடர்ந்து இரவு 7 மணி வரை சுமார் 3 மணி நேரம் பலத்த மழை கொட்டி தீர்த்தது.

    பலத்த மழையின் காரணமாக திம்பம் மலைப்பாதையில் மழை நீர் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் வாகன ஓட்டிகள் வாகனத்தை இயக்க முடியாமல் கடும் அவதிப்பட்டனர்.

    இதனால் திம்பம் வனப்பகுதிகளில் புதிய அருவிகள் தோன்றியது. அருவிகளில் இருந்து தண்ணீர் கொட்டி காட்டாற்று வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. வனப்பகுதிகளில் இருந்து தண்ணீர் வெளியேறி குய்யனூர் தடுப்பணைக்கு சென்றது. இதனால் தடுப்பணை நிரம்பி வழிந்து சென்றது. தொடர்ந்து அருகே உள்ள ஓடை, குளம், குட்டைகளுக்கும் தண்ணீர் சென்று நிரம்பி வருகிறது.

    அதேப்போல பலத்த மழையால் மலைப்பாதையில் உள்ள அருவிகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் வனப்பகுதி முழுவதும் பசுமையாக காட்சி அளித்து வருகிறது.

    • ஈரோடு மாநகரில் காளைமாடு சிலை அருகில் உள்ள ரெயில்வே நுழைவு பாலத்தை சீரமைக்கும் பணி நடைபெறுவதால் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
    • அனைத்து கனரக வாகனங்கள் மற்றும் லாரிகள் மாற்று பாதை வழியாக செல்ல கட்டாயம் அனுமதி இல்லை.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம் சார்பில் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:

    ஈரோடு மாநகரில் காளைமாடு சிலை அருகில் உள்ள ரெயில்வே நுழைவு பாலம் மிகவும் சேதமடைந்துள்ளது. இதனால் நாளை (19-ந் தேதி) முதல் ரெயில்வே நுழைவு பாலத்தை சீரமைக்கும் பணி நடைபெறுவதால் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

    இதில் கரூர், மூலனூர், வெள்ளகோவில், தாராபுரம் மற்றும் காங்கேயத்திலிருந்து ஈரோடு வரும் அனைத்து பஸ்கள் மட்டும் அண்ணமார் பெட்ரோல் பங்க் வந்தடைந்து நாடார் மேட்டிலிருந்து இடது புறமாக திரும்பி ரீட்டா பள்ளி, சாஸ்திரி நகர் மற்றும் ரெயில்வே மேம்பாலம் வழியாக வந்து சென்னிமலை ரோடு வழியாக மாநகர் பகுதியை அடையலாம்.

    இதேபோல் ஈரோட்டில் இருந்து கரூர், மூலனூர், வெள்ளகோவில், தாராபுரம் மற்றும் காங்கேயத்திற்கு செல்லும் அனைத்து வாகனங்களும் வழக்கம் போல் காளைமாடு சிலை, லோட்டஸ் ரவுண்டானா வழியாக செல்லலாம்.

    அனைத்து கனரக வாகனங்கள் மற்றும் லாரிகளும் ரிங்ரோடு வழியாக முத்துகவுண்டன் பாளையம், ஆணைக்கல்பாளையம், ரங்கம்பாளையம் ஆர்ட்ஸ் காலேஜ் வழியாக திண்டல் வந்தடைந்து மாநகருக்குள் செல்லலாம்.

    இதேபோல் அனைத்து கனரக வாகனங்கள் மற்றும் லாரிகள் மாற்று பாதையான அண்ணமார் பெட்ரோல் பங்க், நாடார் மேடு, சாஸ்திரி நகர் வழியாக செல்ல கட்டாயம் அனுமதி இல்லை.

    இவ்வாறு அவர் அதில் கூறியுள்ளார்.

    • தீயணைப்பு மீட்பு மற்றும் பேரிடர் மேலாண்மை துறை சார்பில் பேரிடர் காலங்களில் வெள்ளத்தில் சிக்கியவர்கள் மீட்பது மற்றும் தீத்தடுப்பு குறித்த ஒத்திகை நிகழ்ச்சி நடைபெற்றது.
    • இதில் கிராம மக்கள் பங்கேற்று தீத்தடுப்பு நடவடிக்கை குறித்து செயல் விளக்கத்தை பார்வையிட்டனர்.

    சென்னிமலை:

    தீயணைப்பு மீட்பு மற்றும் பேரிடர் மேலாண்மை துறை சார்பில் பேரிடர் காலங்களில் வெள்ளத்தில் சிக்கியவர்கள் மீட்பது மற்றும் தீத்தடுப்பு குறித்த ஒத்திகை நிகழ்ச்சி நடைபெற்றது.

    பெருந்துறை நிலைய அலுவலர் நவீன்தரன் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் வெள்ளோடு குளத்தில் சிக்கி உயிருக்கு போராடும் நபரை மீட்பது குறித்து செயல் விளக்கம் செய்து காண்பித்தனர்.

    வீட்டில் தீ விபத்து ஏற்பட்டால் அதனை தண்ணீரால் நனைந்த சாக்குப்பையை போட்டு அணைப்பது குறித்தும் விளக்கம் அளிக்கப்பட்டது.

    இதில் கிராம மக்கள் பங்கேற்று தீத்தடுப்பு நடவடிக்கை குறித்து செயல் விளக்கத்தை பார்வையிட்டனர்.

    மேலும் பேரிடர் காலங்களில் வெள்ளம் வரும்போது பொதுமக்கள் முன்னெச்சரிக்கையாக இருப்பது குறித்து அப்பகுதியில் சென்ற வாகன ஓட்டிகளிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

    • அந்தியூர் வட்டாரத்தில் செயல்படுத்தப்படும் கலைஞரின் ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து சென்னை வேளாண்மை இயக்குனரக கூடுதல் வேளாண் இயக்குனர் சிவக்குமார் தலைமையில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

    அந்தியூர்:

    அந்தியூர் வட்டாரத்தில் செயல்படுத்தப்படும் கலைஞரின் ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து சென்னை வேளாண்மை இயக்குனரக கூடுதல் வேளாண் இயக்குனர் சிவக்குமார் தலைமையில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

    இதில் மைக்கேல் பாளையம், பிரம்மதேசம் பஞ்சாயத்துகளில் செயல்படுத்தப்பட்டு வரும் கலைஞரின் ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்ட தரிசு நிலங்களை விளை நிலங்களாக மாற்றும் தொகுப்பு நிலத்தினை ஆய்வு மேற்கொண்டார்.

    இதன்படி மானாவாரி நிலங்களில் உள்ள விவசாயிகளை பதிவு செய்து போர்வெல் அமைத்து வேளாண்மை தோட்டக்கலை துறை, வேளாண் பொறியியல் துறை மூலம் நுண்ணீர் பாசன வசதி செய்து கொடுத்து நிலத்தின் தன்மை, நீரின் அளவு ஆகியவற்றை கருத்தில் கொண்டு பயிர் சாகுபடி மேற்கொள்ள ஆலோசனை வழங்கப்பட்டது.

    மேலும் இக்கிராமங்களில் செயல்படும் அனைத்து துறைகளில் மானியத் திட்டங்கள், தென்னங்கன்றுகள், உளுந்து விதைகள், பண்ணைக் குட்டைகள் மற்றும் ஊரக வளர்ச்சி துறை மூலம் செயல்படுத்தப்படும் கல் வரப்பு மற்றும் மண் பரப்பு போன்ற திட்டங்களை ஆய்வு மேற்கொண்டு விவசாயிகள் மற்றும் அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டு திட்டம் சிறப்பாக செயல்பட ஆலோசனை வழங்கினார்.

    ஆய்வின் போது வேளாண் இணை இயக்குனர் சின்னச்சாமி, துணை இயக்குனர்கள் அசோக், சிவக்குமார், தோட்டக்கலை துணை இயக்குனர் தமிழ்ச்செல்வி, வேளாண் பொறியியல் செயல் பொறியாளர் விஸ்வநாதன், வேளாண் உதவி இயக்குனர் கார்த்திகேயன் ஆகியோர் உடனிருந்தனர்.

    நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை அந்தியூர் வட்டார வேளாண் அலுவலர் ஜெயக்குமார், துணை வேளாண் அலுவலர் முருகன் மற்றும் உதவி வேளாண் அலுவலர்கள் மூர்த்தி, செந்தில், பால–முருகன், சக்திவேல் ஆகியோர் செய்திருந்தனர்.

    • சிவகிரி அருகே விளாங்காட்டு வலசு பகுதியில் வளைவில் திரும்பும் போது பஸ்சும்,மோட்டார் சைக்கிளும் நேருக்கு நேர் பயங்கர சத்தத்துடன் மோதியது.
    • இந்த விபத்து குறித்து சிவகிரி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    சிவகிரி:

    முத்தூரில் இருந்து ஈரோடு செல்வதற்காக தனியார் பஸ் ஒன்று வந்து கொண்டிருந்தது. பஸ் சிவகிரி அருகே விளாங்காட்டு வலசு பகுதியில் வந்து கொண்டிருந்தது.

    எதிர் திசையில் மோட்டார் சைக்கிளில் சேலத்தை சேர்ந்த ஆர்.சந்தோஷ் (வயது 24), பி.சந்தோஷ் (24) என்ற வாலிபர்கள் வந்து கொண்டிருந்தனர்.

    அப்போது அங்கு ஒரு வளைவில் திரும்பும் போது பஸ்சும்,மோட்டார் சைக்கிளும் நேருக்கு நேர் பயங்கர சத்தத்துடன் மோதியது. இதில் மோட்டார் சைக்கிளில் வந்த வாலிபர்கள் தூக்கி வீசப்பட்டதில் 2 பேரும் பலத்த காயம் ஏற்பட்டது.

    உடனே அக்கம் பக்கத்தினர் 2 பேரையும் மீட்டு தனியார் ஆம்புலன்ஸ் மூலம் ஈரோடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களை பரிசோதித்த டாக்டர்கள் வரும் வழியிலேயே ஆர்.சந்தோஷ் இறந்து விட்டதாக கூறினர். மற்றொரு வாலிபருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இந்த விபத்து குறித்து சிவகிரி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×