என் மலர்tooltip icon

    ஈரோடு

    தொண்டர்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைய உள்ள பெரிய அரசியல் மாற்றம் இன்று மாலை நடக்க உள்ளது என கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் பேசியுள்ளார்.
    கோபி:

    ஈரோடு மாவட்டம் கோபி தொகுதியில் கல்வி அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் பல்வேறு நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.

    கோபி அடுத்த வெள்ளாளபாளையத்தில் நடந்த விழாவில் அமைச்சர் செங்கோட்டையன் பேசியதாவது:-

    தொண்டர்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைய உள்ள பெரிய மாற்றம் இன்று மாலை நடக்க உள்ளது. அ.தி.மு.க.வின் 2 அணிகளும் இன்று மாலை இணைகிறது. இந்த அரசியல் மாற்றம் அ.தி.மு.க.தொண்டர்களுக்கு மட்டுமல்ல. தமிழக மக்களுக்கும் மகிழ்ச்சியை கொடுத்துள்ளது.

    முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியும், ஓ.பன்னீர்செல்வமும் இணையும் இந்த நிகழ்ச்சிக்கு பிறகு அ.தி.மு.க.வை.அம்மா வழியில் நடக்கும் இந்த அரசை யாரும் அசைக்க முடியாது. இந்த ஆட்சி இன்னும் 4 ஆண்டு அல்ல 40 ஆண்டுகளுக்கும் மேலாக நீடிக்கும். யாரும் எதுவும் செய்ய முடியாது.

    மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா அறிவுரைபடி கல்வித்துறை இன்று புதிய எழுச்சியுடன் புதிய உட்வேகத்துடன் செயல்பட்டு வருகிறது.

    இவ்வாறு அவர் பேசினார்.
    சிவகிரி அருகே கார் மோதிய விபத்தில் வியாபாரி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

    சிவகிரி:

    நெல்லை மாவட்டம் சிவகிரி அருகே உள்ள உள்ளாறு கிராமத்தை சேர்ந்தவர் சேதுபாண்டியன் (வயது 70). இவர் அப்பகுதியில் டீக்கடை நடத்தி வந்தார். இன்று அதிகாலை டீக்கடையை திறப்பதற்காக அவர் அப்பகுதியில் உள்ள தென்காசி-ராஜபாளையம் சாலையை கடக்க முயன்றார்.

    அப்போது அந்த வழியாக வந்த கார் எதிர்பாராதவிதமாக சேதுபாண்டியன் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

    இது குறித்து தகவல் அறிந்த சிவகிரி போலீசார் விரைந்து வந்து பலியான சேது பாண்டியன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    இந்த விபத்து குறித்து சிவகிரி போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கவுந்தப்பாடி அருகே அதிகாலை நேரத்தில் தெருவோரம் குழந்தை பெற்று அங்கேயே இளம்பெண் போட்டுவிட்டு சென்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    கவுந்தப்பாடி:

    ஈரோடு மாவட்டம் கவுந்தப்பாடி அருகே உள்ள ஊர் சலங்கப்பாளையம் இங்குள்ள பட்டத்தரசியம்மன் கோவில் பக்கத்தில் விநாயகர் கோவில் வீதி உள்ளது.

    இன்று (சனிக்கிழமை) அதிகாலை 3 மணியளவில் தெருவில் பச்சிளம் குழந்தை அழும் சத்தம் கேட்டது. தெருவில் குழந்தை அழும் சத்தம் கேட்கிறதே.. என்று அப்பகுதியை சேர்ந்த பெண்கள் தங்கள் வீடுகளின் கதவை திறந்து வெளியே வந்து பார்த்தனர்.

    அப்போது தெருவில் அவர்கள் கண்ட காட்சி நெஞ்சை பதற வைத்தது.

    அங்குள்ள கான்கிரீட் தளத்தில் பிறந்த சில நிமிடங்களே ஆன ஒரு ஆண் குழந்தை கட்டாந்தரையில் கிடந்து பசியுடன் கதறி அழுது கொண்டு கிடந்தது. குழந்தையை கண்ட பெண்கள் அங்கும்-இங்கும் பார்த்தனர். யாரும் இல்லை.

    மேலும் ஆண்கள் டார்ச் லைட் அடித்தபடி தேடினர். ஆனால் யாரும் இல்லை. அதே சமயம் அந்த கான்கிரீட் வீதியில் ஆங்காங்கே ரத்தக்கறை கிடந்தது. அந்த ரத்தம் கூட காயவில்லை.

    சில நிமிடங்களுக்கு முன்புதான் யாரோ ஒரு இளம்பெண் குழந்தையை பெற்றெடுத்து பிறகு அங்கேயே போட்டு விட்டு சென்று விட்டாள்.

    குழந்தை அழும் சத்தத்தை கேட்டு பரிதாபப்பட்ட அப்பகுதி மக்கள் அந்த பெண் யார்? என்று தேடுவதை விட்டு விட்டு குழந்தையை காப்பாற்றும் முயற்சியில் இறங்கினர். இது குறித்து உடனடியாக 108 அவசர ஆம்புலன்சுக்கு தகவல் கொடுத்தனர்.

    விரைந்து வந்த ஆம்புலன்சு ஊழியர்கள் அந்த குழந்தையை மீட்டனர். தொப்புள் கொடிக்கு முடிச்சு போட்டு கொண்டு குழந்தையை எடுத்து கொண்டு கவுந்தப்பாடி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.

    அங்கு அந்த குழந்தைக்கு முதலுதவி சிகிச்சை அளித்து விட்டு மேல் சிகிச்சைக்காக ஈரோடு அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

    அங்கு குழந்தைக்கு டாக்டர்கள் மற்றும் நர்சுகள் தீவிர சிகிச்சை அளித்து வருகிறார்கள்.

    இந்த சம்பவம் குறித்து கவுந்தப்பாடி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    அந்த குழந்தையை நடு தெருவில் பிரசவித்து போட்டு சென்ற இளம்பெண் யார்? கள்ளக்காதலில் அந்த குழந்தை பிறந்ததா? என்று போலீசார் பல கோணங்களில் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.

    சலங்கபாளையம் மற்றும் அதன் சுற்றுப்புற பகுதியை சேர்ந்த பெண்ணாகத்தான் இருக்க கூடும் என்றும் அந்த பகுதிகளுக்கும் போலீசார் சென்று விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    அதிகாலை நேரத்தில் தெருவோரம் குழந்தை பெற்று அங்கேயே இளம்பெண் போட்டுவிட்டு சென்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.



    கோபி அருகே காதல் திருமணம் செய்த பேராசிரியை கணவருடன் ஏற்பட்ட தகராறில் தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    கோபி:

    ஈரோடு மாவட்டம் கோபி அருகே உள்ள ஆயிபாளையத்தை சேர்ந்தவர் லிங்கேஸ்வரன் (வயது 28). எம்.ஈ. படித்துள்ளார். இவரது மனைவி பெயர் மஞ்சுளா (26). இவரும் எம்.ஈ. படித்தவர். கோவையில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் பேராசிரியையாக பணி புரிந்தார்.

    இருவரும் காதல் திருமணம் செய்து கொண்டனர். கடந்த 6.6.2016 அன்று திருமணம் நடந்தது. இந்த காதல் தம்பதியினருக்கு 8 மாதத்தில் ஒரு பெண் குழந்தை உள்ளது.

    இதற்கிடையே கணவன்- மனைவி இடையே தகராறு ஏற்பட்டது.

    இதனால் பேராசிரியை மஞ்சுளா மனம் உடைந்த நிலையில் இருந்ததாக கூறப்படுகிறது.

    இந்த நிலையில் நேற்று இரவு 10 மணியளவில் மஞ்சுளா வீட்டினுள் தனது துப்பட்டாவால் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    இந்த பரிதாப சம்பவம் குறித்து கடத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    மேலும் பேராசிரியை தற்கொலை குறித்து கோபி ஆர்.டி.ஓ. கோவிந்தராஜன் மற்றும் துணை போலீஸ் சூப்பிரண்டு செல்வமும் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    அந்தியூரில் இன்று காலை காலி குடங்களுடன் பெண்கள் சாலை மறியல் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் 30 நிமிடம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
    அந்தியூர்:

    ஈரோடு மாவட்டம் அந்தியூர் அடுத்த புதுப்பாளையத்தில் 500-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகிறார்கள். புதுப்பாளையத்தில் கடந்த ஒரு வாரத்துக்கும் மேலாக குருநாதர் சாமி கோவில் திருவிழா நடந்து வருகிறது.

    இந்த நிலையில் புதுப்பாளையம் பகுதியில் கடந்த 1 மாதமாக சீரான குடிநீர் விநியோகம் செய்யப்படவில்லையாம். இது பற்றி பல மனுக்கள் கொடுத்தும் உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்று அந்த பகுதி மக்கள் கூறினர்.

    மேலும் திருவிழாவையொட்டி சரியாக குடிநீர் கிடைக்காததால் புதுப்பாளையம் பகுதி மக்கள் மிகவும் அவதிப்பட்டு வந்தார்கள்.

    இந்த நிலையில் இன்று (வெள்ளிக்கிழமை) அந்த பகுதியை சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட பெண்கள் மற்றும் ஆண்கள் திரண்டனர்.

    புதுப்பாளையம்-பர்கூர் ரோட்டில் அவர்கள் அமர்ந்து திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. மேலும் காலை நேரத்தில் பள்ளி வேன் மற்றும் வாகனங்கள் செல்வதால் மாணவ-மாணவிகள் அவதிப்பட்டனர்.

    இது பற்றி தகவல் கிடைத்ததும் அந்தியூர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். அவர்கள் சாலை மறியல் நடத்திய பெண்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

    மேலும் அதிகாரிகளிடம் கூறி நடவடிக்கை எடுப்பதாகவும் கூறினர். அந்தியூர் வட்டார வளர்ச்சி அலுவலர் மகேஸ்வரியும் போனில் தொடர்பு கொண்டு குடிநீர் பிரச்சனைக்கு தீர்வு காணப்படும் என்று கூறினார்.

    இதைத்தொடர்ந்து பொதுமக்கள் சாலை மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். இந்த மறியலால் சுமார் 30 நிமிடம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
    சங்ககிரி ரெயில் நிலையம் அருகே ரெயில் மோதி தண்டவாளத்தில் உயிருக்கு போராடிய பயணி ஆஸ்பத்திரிக்கு செல்லும் வழியில் பரிதாபமாக உயிரிழந்தார்.
    ஈரோடு:

    ஈரோடு ரெயில் நிலையத்திற்கு உட்பட்ட சங்ககிரி ரெயில் நிலையம் அருகே உள்ள தண்டவாளத்தில் சுமார் 45 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் ரெயிலில் அடிப்பட்டு உயிருக்கு போராடி கொண்டு இருப்பதாக ஈரோடு ரெயில்வே போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

    இதையடுத்து சம்பவ இடத்துக்கு விரைந்து ரெயில்வே போலீசார் சென்று அந்த நபரை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அவரை பரிசோதித்த டாக்டர் வரும் வழியிலேயே அவர் இறந்து விட்டதாக தெரிவித்தார்.

    இது குறித்து ஈரோடு ரெயில்வே போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இறந்தவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? என்பன போன்ற விவரம் தெரியவில்லை. இறந்தவர் பஞ்சை நிற கோடு போட்ட அரை கை சட்டையும், லைட் சிமெண்ட் கலர் பேண்டும் அணிந்திருந்தார்.

    அவர் ரெயில் பயணம் செய்த போது தவறி கீழே விழுந்தாரா? அல்லது சங்ககிரி ஆர்.எஸ்.பகுதியில் நடந்த சென்ற போது ரெயில் மோதி இறந்தாரா? என்று தெரியவில்லை.
    ஈரோடு மாவட்டம் முழுவதும் பலத்த மழை கொட்டி வருகிறது. மேலும் வனக்குட்டைகளும் நிரம்பி உள்ளது.
    ஈரோடு:

    ஈரோடு மாவட்டத்தில் தொடர்ந்து தினமும் பரவலாக மழை பெய்து வருகிறது. ஒரு சில இடங்களில் பலத்த மழையும் பெய்து வருகிறது.

    நேற்று மாலை மற்றும் இரவில் மொடக்குறிச்சி, சென்னிமலை மற்றும் கொடுமுடி பகுதிகளில் பலத்த மழை கொட்டியது.

    இந்த பகுதிகளில் தாழ்வான இடங்களில் மழை தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. கழிவு நீர் கால்வாய்களில் மழை வெள்ளம் பாய்ந்து ஓடியது.

    குறிப்பாக சென்னிமலை பகுதியில் மாலை 5 மணிக்கு பெய்யத் தொடங்கிய மழை 6.20 வரை பெய்தது. கடும் வறட்சியில் காணப்பட்ட அப்பகுதியில் பெய்த இந்த மழையால் சென்னிமலையில் எங்கு பார்த்தாலும் வெள்ளக் காடாக காட்சி அளித்தது.

    இந்த மழையால் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டாலும் பலத்த மழையால் விவசாயிகளும், பொது மக்களும் மகிழ்ச்சி தெரிவித்தனர்.

    இதே போல் மொடக்குறிச்சி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளிலும் நேற்று கன மழை கொட்டியதால் மழை வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.

    சத்தியமங்கலம் வனப்பகுதியிலும் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. தாளவாடி பகுதியில நேற்று முன்தினம் போல் நேற்றும் மழை பெய்தது. இதனால் வனக்குட்டைகள் நிரம்பியது.

    மேலும் கடம்பூர் வனப் பகுதியிலும் மழை கொட்டி வருகிறது. கடம்பூரை அடுத்த உகினியம் செல்லும் வழியில் உள்ள காகரகுட்டை மழையால் நிரம்பி உள்ளது. இதனால் அந்த பகுதியில் உள்ள வன விலங்குகளுக்கு தண்ணீர் பஞ்சம் தீர்ந்தது.

    மாலை நேரங்களில் யானைகள் குட்டிகளுடன் வந்து தண்ணீர் குடித்து செல்கிறது. அப்போது ஆர்வ மிகுதியால் யாரும் அங்கே செல்ல வேண்டாம். போட்டோ எதுவும் எடுக்க வேணடாம் என வனத் துறையினர் கேட்டு கொண்டுள்ளனர்.
    ஈரோடு அருகே மின்சார வயரை இழுத்த 11 மாத ஆண் குழந்தை மின்சாரம் தாக்கி பலியானது. இது குறித்து கருங்கல்பாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    ஈரோடு:

    ஈரோடு கருங்கல் பாளையம் கே.ஏ.எஸ்.நகர் மரப்பாலம் 2-வது வீதியை சேர்ந்தவர் செல்வராஜ்(வயது26). இவருக்கு 11 மாதமே ஆன நித்திஷ் என்கிற ஆண் குழந்தை இருந்தது.

    நேற்று காலை நித்திஷ் வீட்டில் விளையாடி கொண்டிருந்தான். அப்போது டி.வி. அருகே மின்சாரம் வரும் ஒயரை பிடித்து இழுத்தான். எதிர்பாராத வகையில் நித்திஷ் மீது மின்சாரம் பாய்ந்தது.

    இதில் தூக்கி வீசப்பட்ட நித்திஷ் மயக்கம் அடைந்தான். இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த நித்திஷ் பெற்றோர் அவனை சிகிச்சைக்காக ஈரோட்டில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.

    பின்னர் மேல்சிகிச்சைக்காக ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு நித்திசை பரிசோதித்த டாக்டர்கள் வரும் வழியிலேயே நித்திஷ் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    இதை கேட்டு நித்திஷ் பெற்றோர் கதறி அழுதனர். இது குறித்து கருங்கல்பாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    இதே போன்று குழந்தைகள் இருக்கும் வீட்டில் பெற்றோர்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். குழந்தைகள் கைபடும் அளவுக்கு எந்த பொருட்களையும் வைக்க கூடாது என்று போலீசார் தெரிவித்தனர்.

    இன்று குழந்தை நித்திஷ் உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு அவனது பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது.

    சென்னிமலை அருகே காதல் திருமணம் செய்த புதுப்பெண் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    ஈரோடு, ஆக. 14-

    சென்னிமலை அடுத்த முருங்கத்தொழுவு, அரிஜன காலனியை சேர்ந்தவர் சசிகுமார். இவரது மனைவி நந்தினி (வயது19).

    சசிகுமாரும், நந்தினியும் காதலித்து 5 மாதத்திற்கு முன்பு தான் திருமணம் செய்து கொண்டனர். இந்நிலையில் நந்தினிக்கு வயிற்று வலி இருந்ததாகவும், இதனால் அவதிப்பட்டு வந்ததாகவும் கூறப்படுகிறது.

    இந்நிலையில் சம்பவத்தன்று நந்தினி தற்கொலை செய்ய முடிவெடுத்து வீட்டின் படுக்கை அறைக்கு சென்று கதவை தாழ்போட்டு கொண்டு தூக்கில் தொங்கினார்.

    இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த நந்தினியின் மாமியார் சத்தம் போட்டார். அவரது சத்தம் கேட்டு அருகில் இருந்தவர்கள் ஓடி வந்து நந்தினியை மீட்டு சிகிச்சைக்காக சென்னிமலையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

    அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. எனினும் சிகிச்சை பலனின்றி நந்தினி பரிதாபமாக இறந்தார்.

    இது குறித்து சென்னிமலை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும் திருமணமாகி 5 மாதமே ஆவதால் இது குறித்து ஆர்.டி.ஓ. நர்மதாதேவியும் விசாரணை நடத்தி வருகிறார்.

    தண்ணீர் வரத்து அதிகரிப்பால், பவானிசாகர் அணை நீர்மட்டம் இன்று காலை 53.60 அடியாக இருந்தது. இன்று மாலைக்குள் அணையின் நீர் மட்டம் 54 அடியை தொட்டுவிடும்.
    பவானிசாகர் அணை நீர்மட்டம் 54 அடியை நெருங்கியது

    தண்ணீர் வரத்து அதிகரிப்பால், பவானிசாகர் அணை நீர்மட்டம் இன்று காலை 53.60 அடியாக இருந்தது. இன்று மாலைக்குள் அணையின் நீர் மட்டம் 54 அடியை தொட்டுவிடும்.

    ஈரோடு:

    சத்தியமங்கலம் அருகே உள்ள பவானிசாகர் அணைக்கு கடந்த சில நாட்களாக கணிசமாக தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. நீர்பிடிப்பு பகுதியில் பெய்து வரும் சாரல் மழையையொட்டி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.

    இன்று(திங்கட்கிழமை) காலை 9 மணி நிலவரப்பபடி அணைக்கு வினாடிக்கு 750 கனஅடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. குடிநீருக்கு ஆற்றுக்கு 150 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.

    இன்று காலை அணையின் நீர்மட்டம் 53.60 அடியாக இருந்தது. இன்று மாலைக்குள் அணையின் நீர் மட்டம் 54 அடியை தொட்டுவிடும்.

    அணைக்கு ஓரளவு தண்ணீர் வருவதையொட்டி கீழ்பவானி வாய்க்காலுக்கு உயிர்நீர் திறந்து விட வேண்டும் என விவசாயிகள், பா.ம.க, த.மா.கா. உள்பட பல்வேறு கட்சியிரும் வேண்டுகோள் விடுத்துள்ளனர். ஆனால் அணையில் இருந்து தண்ணீர் திறப்பது கேள்விக்குறியாகவே உள்ளது.

    இப்போதைக்கு தண்ணீர் இருப்பு குடிநீருக்கு பிரச்சனை இருக்காது. வாய்க்காலுக்கு தண்ணீர் திறந்து விட வேண்டுமென்றால் அணையின் நீர்மட்டம் குறைந்தது 70 அடியாக இருக்க வேண்டும் என பொதுப்பணி துறை அதிகாரிகள் கருதுகிறார்கள்.
    தமிழக ஆறுகளின் குறுக்கே தடுப்பணைகளை கட்ட திராவிட கட்சிகள் தவறியதால் ஆண்டு ஒன்றுக்கு ஏராளமான டி.எம்.சி. தண்ணீர் வீணாக சென்று கடலில் கலக்கிறது என அன்புமணி ராமதாஸ் பேசியுள்ளார்.
    பெருந்துறை:

    அத்திக்கடவு-அவினாசி திட்டத்தை நிறைவேற்றக்கோரி பா.ம.க. சார்பில் வாகன பேரணி நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி வாகன பேரணி கோவை மாவட்டம் காரமடை பகுதியில் இருந்து நேற்று தொடங்கியது.

    ஊர்வலத்தில் பா.ம.க. இளைஞர் அணி மாநில தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் எம்.பி. கலந்து கொண்டார். ஊர்வலம் அங்கிருந்து அன்னூர், அவினாசி வழியாக ஈரோடு மாவட்டம் நம்பியூரை சென்றடைந்தது. இதைத்தொடர்ந்து அத்திக்கடவு- அவினாசி திட்டத்தை நிறைவேற்ற வேண்டும் என்பதை வலியுறுத்தி பொதுக்கூட்டம் பெருந்துறையில் நடந்தது.

    கூட்டத்துக்கு கட்சியின் மாநில தலைவர் ஜி.கே.மணி முன்னிலை வகித்தார். டாக்டர் அன்புமணி ராமதாஸ் தலைமை தாங்கி பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

    அத்திக்கடவு-அவினாசி திட்டம் என்பது கடந்த 1962-ம் ஆண்டு காமராஜர் காலத்தில் தொடங்கப்பட்ட திட்டம் ஆகும். அப்போது இந்த திட்டத்துக்கு மேல் பவானி திட்டம் என அறிவிப்பு வெளியிடப்பட்டது. அத்திக்கடவு-அவினாசி திட்டம் என்பது உபரிநீரை சேமிக்கும் திட்டம் ஆகும்.

    தமிழக ஆறுகளின் குறுக்கே தடுப்பணைகளை கட்ட திராவிட கட்சிகள் தவறியதால் ஆண்டு ஒன்றுக்கு ஏராளமான டி.எம்.சி. தண்ணீர் வீணாக சென்று கடலில் கலக்கிறது.

    தமிழ்நாட்டில் 33 ஆறுகள் ஓடுகின்றன. இவற்றின் குறுக்கே ஒரு கிலோ மீட்டருக்கு ஒரு தடுப்பணை வீதம் கட்டினாலே தமிழக தண்ணீர் பிரச்சனை தீர்ந்து விடும். இந்த திட்டங்களை நிறைவேற்ற ரூ.40 ஆயிரம் கோடி போதும். விவசாயிகள் வாழ்வு மலர்ச்சி அடையும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    முன்னதாக நம்பியூரிலும் அத்திக்கடவு திட்டத்தை நிறைவேற்றக்கோரி நடந்த கூட்டத்தில் டாக்டர் அன்புமணி ராமதாஸ் பேசினார்.

    அப்போது அவர் கூறியதாவது.-

    அத்திக்கடவு-அவினாசி திட்டம் கொங்கு மண்டல மக்களின் முக்கியமான வாழ்வாதார திட்டம் ஆகும். கடந்த 50 வருடமாக தி.மு.க.வும், அ.தி.மு.க.வும் 10 முறை வாக்குறுதி கொடுத்து ஏமாற்றி உள்ளனர். மேலும் தமிழகம் முழுவதும் 20 நீர் திட்டங்கள் கிடப்பில் போடப்பட்டுள்ளது.


    தமிழக அரசு டெங்குவால் 5 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர் என தெரிவிக்கிறது. கணக்கில் வந்தது இதுவென்றால் கணக்கில் வராதது எவ்வளவு என்று தெரியவில்லை. அத்திக்கடவு திட்டம் உடனடியாக நிறைவேறவில்லை என்றால் மிகப்பெரிய போராட்டம் நடைபெறும்.

    இளைஞர்கள் நடிகைக்காக ஒட்டு போடாமல் நாட்டின் நலனுக்காக வெளியே வந்து அவரவர் கருத்தை தெரியபடுத்தி அ.தி.மு.க, தி.மு.க.விடம் இருந்து தமிழ்நாட்டை காக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    கூட்டத்தில் பா.ம.க.தலைவர் ஜி.கே.மணியும் கலந்து கொண்டு பேசினார். மாநில பொதுச்செயலாளர்கள் பொ.வை.ஆறுமுகம், வேலுசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநில துணை தலைவர் வடிவேல், மாவட்ட செயலாளர்கள் அருள்மொழி, கோபால் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
    அரசு பள்ளி மாணவ-மாணவிகளுக்கு 3 வகையான சீருடைகள் விரைவில் கொண்டு வரப்படும் என அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
    கோபி:

    கோபி அருகே உள்ள நாதிபாளையம், நாகதேவன் பாளையம், சிறுவலூர், அயலூர் மற்றும் கோபி சட்டமன்ற தொகுதிகளில் ரூ. 1 கோடி 24 லட்சம் செலவில் சாலை பணிகள் நடைபெற உள்ளது. அதை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் இன்று பூமிபூஜை செய்து தொடங்கி வைத்தார்.

    பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:

    தமிழகத்தில் உள்ள அரசு பள்ளிகளில் படிக்கும் 1-ம் வகுப்பு முதல் 5-ம் வகுப்பு வரையிலும்,6-ம் வகுப்பு முதல் 10-ம் வகுப்பு வரையிலும், 11மற்றும் 12-ம் வகுப்பிற்கும் 3 வகையான சீருடைகள் கொண்டு வரபடுகிறது.

    பிளஸ்-1 தேர்வில் மாணவ-மாணவிகளுடைய சந்தேகங்களை நீக்குவதற்கு, இரண்டரை மணி நேர வினா தாள்கள் தயாரிக்கப்பட்டுள்ளது. அதற்கான அரசு அனுமதியும் கிடைத்து விட்டது. மாதிரி வினா தாள் மாணவ-மாணவிகளுக்கு விரைவில் தரப்படவுள்ளது.

    அவர்களுக்கு ஆசிரியர்கள் பயிற்சியளிக்க உள்ளனர், பிளஸ்-1 தேர்வில் தேர்ச்சி பெறவில்லையென்றால் பிளஸ்-2 படித்துக் கொண்டே ஜுன் மாதத்தில் அந்த தேர்வை எழுதலாம்,

    உள்ளாட்சி துறையில் அடங்கி உள்ள கிராம சாலைகளை விரிவுப்படுத்த கோபி சட்டமன்ற தொகுதியில் ரூ.1 கோடி 24 லட்சத்தில் பணிகள் நடைபெற உள்ளன. கோபியில் ஆர்ச்-ஆர்ச் வரையிலான சாலைகள் விரிவுப்படுத்த உள்ளன.

    அதில் உள்ள வியாபார கட்டிடங்கள் இடிக்கப்பட வேண்டிய நிலை உள்ளதால், புறவழிச்சாலை அமைக்க ரூ. 9 கோடி செலவில் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது, ஈரோடு எம்.ஜி.ஆர் சிலை முதல் திண்டல் வரை ரூ.300 கோடி செலவில் மேம்பாலம் கட்டப்பட உள்ளது.

    மேலும் ஈரோடு மாவட்டத்தில் பல்வேறு வளர்ச்சி திட்டப்பணிகள் நடைபெற உள்ளன. இதற்கான பணிகள் விரைவில் துவங்கப்பட உள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.
    ×