என் மலர்
கடலூர்
ஸ்ரீமுஷ்ணம்:
கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் அருகே உள்ள மேலவன்னியூர் கிராமத்தில் அரசு ஆதிதிராவிடர் மேல்நிலைப்பள்ளி இயங்கி வருகிறது. இந்த பள்ளியின் அருகே மாணவிகளுக்காக விடுதியும் உள்ளது.
இந்த விடுதியில் 6-ம் வகுப்பு முதல் பிளஸ்-2 வரை படிக்கும் 34 மாணவிகள் தங்கி படித்து வருகின்றனர்.
விடுதியில் காப்பாளரோ, விடுதியை சுத்தம் செய்வதற்கான ஆட்களோ இல்லை. சமையல் செய்யும் பெண் ஒருவர் மட்டுமே மாணவிகளுடன் தங்கி வருகின்றார்.
தற்போது இந்த விடுதியில் சுத்தம் செய்வதற்கான பணியாளர்கள் இல்லாததால் விடுதி வளாகம் மற்றும் கழிவறையை மாணவிகளே சுத்தம் செய்கின்றனர்.
இது குறித்து மாணவிகள் கூறும்போது, கழிவறையை சுத்தம் செய்ய கஷ்டமாக உள்ளது. இங்கு குளிப்பதற்கு நல்ல தண்ணீர் இல்லை. எனவே உப்பு நீரில் குளித்து வருகிறோம். குடிநீருக்காக அருகில் உள்ள கைப்பம்பு மூலம் குடத்தில் தண்ணீர் எடுத்து வந்து குடிக்கிறோம். இங்கு மின்விளக்கு வசதி இல்லை. இதனால் இரவு நேரங்களில் படிக்க முடியாமல் அவதியடைந்து வருகிறோம். விடுதியை சுற்றிலும் சீமை கருவேல மரங்கள் அடர்ந்து புற்கள் மண்டி உள்ளது. எனவே விஷ பாம்பு விடுதிக்குள் வந்து விடுகின்றன.
எனவே மாவட்ட கலெக்டரும், பள்ளி நிர்வாகமும் உடனடியாக நடவடிக்கை எடுத்து விடுதியில் போதுமான வசதிகள் செய்து தர வேண்டும், விடுதியை கவனிக்க வார்டன் மற்றும் கூடுதல் பணியாளர்களை நியமிக்க வேண்டும் என்றனர்.
பண்ருட்டி அருகே உள்ளது கொங்கராயனூர். இந்த பகுதியை சேர்ந்தவர் ராஜகிளி (வயது 46). வியாபாரி. இவர் அதே பகுதியில் மளிகை கடை வைத்துள்ளார்.
நேற்று மாலை மோட்டார் சைக்கிளில் மளிகை பொருட்கள் வாங்க மேல்பாட்டம்பாக்கம் சென்றார். பின்னர் அவர் பொருட்கள் வாங்கி விட்டு ஊர் திரும்பி வந்து கொண்டிருந்தார்.
கொங்கராயனூர் அருகே வந்த போது எதிரே வந்த கார் மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் ராஜகிளி தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்தார்.
உடனடியாக அவரை புதுவையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனளிக்காமல் இன்று காலை ராஜகிளி பரிதாபமாக இறந்தார்.
விபத்தில் இறந்த ராஜகிளிக்கு மனைவி, 2 மகள்கள், ஒரு மகன் உள்ளனர். விபத்து குறித்து பண்ருட்டி போலீசில் புகார் செய்யப்பட்டது. இன்ஸ்பெக்டர் ஆரோக்கியராஜ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே கானாஞ்சாவடி பஸ் நிறுத்தம் அருகே கடந்த 1-ந்தேதி காலையில் 23 வயது மதிக்கத்தக்க இளம்பெண் ஒருவர் தீக்காயங்களுடன் உயிருக்காக போராடி கொண்டிருந்தார்.
அந்த வழியாக சென்ற 108 ஆம்புலன்ஸ் ஊழியர் சந்திரசேகரன் மற்றும் பொதுமக்கள் அந்த பெண்ணை மீட்டு பண்ருட்டி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தார்.
காடாம்புலியூர் இன்ஸ்பெக்டர் முருகேசன் மற்றும் போலீசார் ஆஸ்பத்திரிக்கு விசாரணை நடத்தினர்.
அப்போது அவர் சென்னை கொளத்தூரை சேர்ந்த சக்தி என்பதும், அங்குள்ள கல்லூரியில் பட்டப்படிப்பு படித்து வந்ததும் தெரிய வந்தது.
மேலும் அவர் கிருஷ்ணகிரியை சேர்ந்த முரளி (23) என்ற வாலிபரை பேஸ்புக் மூலம் காதலித்து வந்ததும் தெரிந்தது. சக்தியும், முரளியும் கடந்த சில நாட்களுக்கு முன்பு ஒரு காரில் மதுரை, தஞ்சை உள்பட பல இடங்களுக்கு சென்றனர்.
பின்னர் அவர்கள் கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே சாலையோர கோவிலில் திருமணம் செய்து கொண்டனர். அதன் பின்பு அவர்கள் சந்தோஷமாக இருந்தனர். பின்னர் நம் குடும்பத்தினர் நம்மை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். தற்கொலை செய்து கொள்வோம் என்று சக்தியிடம் முரளி கூறினார். சக்தியை ஏமாற்றி அவரை கொலை செய்ய முரளி திட்டமிட்டார்.
பின்னர் அங்குள்ள முந்திரி தோப்புக்கு சக்தியை அழைத்து சென்று அவரது உடலில் டீசலை ஊற்றி தீ வைத்து விட்டு முரளி காரில் ஏறி தப்பி ஓடி விட்டார்.
தப்பி ஓடிய முரளியை பிடிக்க போலீஸ் சூப்பிரண்டு விஜயகுமார் அதிரடி நடவடிக்கையில் ஈடுபட்டார்.
பண்ருட்டி துணை போலீஸ் சூப்பிரண்டு சுந்தரவடிவேல், இன்ஸ்பெக்டர் ஆரோக்கியராஜ் ஆகியோர் கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டது. அவர்கள் சேலம், கிருஷ்ணகிரி, கடலூர் போன்ற தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.
இந்த நிலையில் முரளி கிருஷ்ணகிரியில் உள்ள ஒரு செல்போன் கடையில் இருப்பது பேலீசாருக்கு தெரிய வந்தது. இன்று காலை அங்கு விரைந்து சென்று முரளியை மடக்கி பிடித்து கைது செய்தனர்.
அவரிடம் விசாரணை நடத்திய போது அவருக்கு திருமணமாகி மனைவியும், ஒரு குழந்தை இருப்பதும் தெரிய வந்தது. மேலும் இவர் அங்கு செல்போன் கடை நடத்தி வந்ததும் தெரிய வந்தது.
கைது செய்யப்பட்ட முரளியை தனிப்படை போலீசார் கடலூருக்கு அழைத்து வருகிறார்கள்.
மாணவியை எரித்து கொல்ல முயன்ற காதலனை கைது செய்த தனிப்படை போலீசாரை போலீஸ் சூப்பிரண்டு பாராட்டி உள்ளார்.
சென்னை மணலியை சேர்ந்தவர் அப்துல்மாலிக். துணி வியாபாரி. இவரது மகன் ஹாதிக்அஸ்ரத் (வயது 17). பிளஸ்-2 படித்து வந்தார்.
இவரும், அதே பகுதியை சேர்ந்த அகமத்துல்லா என்பவரது மகள் ஷானேஸ் (17) என்பவரும் காதலித்து வந்தனர்.
இந்நிலையில் காதலர்கள் இருவரும் சுற்றுலா செல்ல முடிவு செய்தனர். அதன்படி ஹாதிக் அஸ்ரத்துக்கு சொந்தமான காரில் மகாபலிபுரம், புதுவை ஆகிய பகுதிகளுக்கு சென்றனர். காரை ஹாதிக் அஸ்ரத் ஓட்டி வந்தார்.
பின்னர் புதுவையில் இருந்து கேரளாவுக்கு காரில் புறப்பட்டனர். அவர்கள் சென்ற கார் கடலூர் மாவட்டம் திட்டக்குடியை அடுத்த ராமநத்தம் அருகே வந்த போது கார் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடி அருகில் இருந்த பாலத்தின் தடுப்பு சுவரில் மோதி தலைகுப்புற கவிழ்ந்தது.
இந்த விபத்தில் ஹாதிக்அஸ்ரத் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பரிதாபமாக இறந்தார். ஷானேஸ் படுகாயம் அடைந்தார்.
தகவல் அறிந்த ராமநத்தம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து காரின் இடிபாட்டிற்குள் சிக்கி உயிருக்கு போராடி கொண்டிருந்த ஷானேசை மீட்டு பெரம்பலூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு முதல் உதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் மேல் சிகிச்சைக்காக சென்னையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.
இந்த விபத்து குறித்து ராமநத்தம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே கானாஞ்சாவடி கிராமத்தில் பஸ் நிறுத்தம் அருகே கடந்த 1-ந் தேதி காலையில் 23 வயது மதிக்கத்தக்க இளம்பெண் ஒருவர் தலை மற்றும் முகத்தில் தீக்காயங்களுடன் உயிருக்காக போராடி கொண்டிருந்தார்.
அந்த வழியாக வந்த 108 ஆம்புலன்ஸ் ஊழியர் சந்திரசேகரன் அந்த பெண்ணை மீட்டு பண்ருட்டி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தார்.
பண்ருட்டி துணை போலீஸ் சூப்பிரண்டு சுந்தரவடிவேல், காடாம் புலியூர் இன்ஸ்பெக்டர் முருகேசன் மற்றும் போலீசார் ஆஸ்பத்திரிக்கு சென்று சிகிச்சை பெறும் பெண்ணிடம் விசாரணை நடத்தினர்.
அப்போது அந்த பெண் சுயநினைவு இல்லாமல் இருந்ததை தொடர்ந்து அவர் யார்? எந்த ஊர்? என்பதை கண்டுபிடிக்க முடியாமல் போலீசார் திணறினர். ஆஸ்பத்திரியில் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டதை தொடர்ந்து அவர் சுயநினைவு பெற்றார்.
அவரிடம் போலீசார் விசாரணை நடத்திய போது அந்த இளம்பெண் கூறியதாவது:-
எனது பெயர் சக்தி. சொந்த ஊர் சென்னை கொளத்தூர். நான் சென்னையில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் 2-ம் ஆண்டு பட்டப்படிப்பு படித்து வருகிறேன். எனக்கும், சேலத்தைச் சேர்ந்த லாரி டிரைவர் முரளி என்பவருக்கும் இடையே ‘பேஸ்புக்’ மூலம் பழக்கம் ஏற்பட்டது.
பின்னர் எங்களுக்குள் காதல் மலர்ந்தது. அப்போது முரளி என்னை திருமணம் செய்து கொள்வதாக ஆசைவார்த்தை கூறினார். அவரை நான் நம்பினேன். கடந்த 28-ந்தேதி அவர் சென்னைக்கு வந்து என்னை ஒரு காரில் அழைத்து சென்றார்.
அங்கிருந்து நாங்கள் மதுரை, தஞ்சாவூர் போன்ற ஊர்களுக்கு சென்றோம். பின்னர் பெங்களூர் சென்று திருமணம் செய்து கொள்ளலாம் என்று முரளி கூறினார். திடீரென்று பண்ருட்டிக்கு காரில் அழைத்து வந்தார். அங்குள்ள சாலையோர கோவிலில் வைத்து என்னை திருமணம் செய்து கொண்டார்.
நாங்கள் சந்தோஷமாக இருந்தோம். அப்போது நமக்கு வாழ்க்கை நடத்த போதிய பணம் இல்லை. மேலும் பெற்றோருக்கு தெரியாமல் நாம் திருமணம் செய்து கொண்டதால் அவர்கள் வருத்தப்படுவார்கள். இதனால் நாம் தற்கொலை செய்து கொள்வோம் என்று முரளி கூறினார்.
இதையடுத்து இருவரும் பண்ருட்டி அருகே உள்ள ஒரு முந்திரி காட்டுக்கு சென்றோம். அப்போது முரளி முதலில் நீ இறந்து விடு. என்னை ஒரு பெண் ஏமாற்றி விட்டாள். அவளை கொன்று விட்டு இதே இடத்துக்கு வந்து நானும் தற்கொலை செய்து கொள்கிறேன் என்று கூறினார்.
திடீரென்று அவர் எனது உடலில் டீசலை ஊற்றி தீ வைத்தார். நான் அலறினேன். அவர் கண்டுகொள்ளவில்லை. அங்கிருந்து காரில் தப்பி சென்று விட்டார். அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் என்னை காப்பாற்றி விட்டனர்.
இவ்வாறு சக்தி கண்ணீர் மல்க கூறினார்.
இதைத்தொடர்ந்து போலீஸ் சூப்பிரண்டு விஜய குமார், துணை போலீஸ் சூப்பிரண்டு ஆகியோர் சென்னையில் உள்ள சக்தியின் குடும்பத்தினருக்கு தகவல் தெரிவித்து உடனே வருமாறு அழைத்தனர்.
அவர்களும் நேற்று மாலை பண்ருட்டி ஆஸ்பத்திரிக்கு வந்து சிகிச்சை பெற்று வரும் தனது மகள் சக்தியை பார்த்து கண்ணீர் வடித்தனர். அதன் பின்னர் பெற்றோருடன் சக்தியை சென்னைக்கு போலீசார் அனுப்பி வைத்தனர்.
மாணவியை ஏமாற்றி அழைத்துச்சென்று திருமணம் செய்து உல்லாசம் அனுபவித்து விட்டு தீ வைத்து எரித்துக் கொல்ல முயன்ற காதலன் முரளி தலைமறைவாகி விட்டார்.
அவரை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. தனிப்படை போலீசார் சேலம் மற்றும் சுற்று வட்டார பகுதிகளுக்கு சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.
முரளி ‘பேஸ்புக்’ மூலம் வேறு பெண்களையும் இதுபோன்று ஏமாற்றி உள்ளாரா? என்பது குறித்தும் போலீசார் விசாரித்து வருகிறார்கள்.
கடலூர்:
கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே உள்ள மேலிருப்பு கிராமத்தைச் சேர்ந்தவர் சிவலிங்கம் (வயது 58). விவசாயி. இவரது மனைவி தவமணி (50). இவர்கள் இன்று காலை கடலூர் கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுக்க வந்திருந்தனர். அவர்களது கையில் மண்எண்ணை கேன் வைத்திருந்தனர்.
திடீரென்று கணவன்- மனைவி இருவரும் தங்களது உடலில் மண்எண்ணை ஊற்றி தீக்குளிக்க முயன்றனர். அப்போது அங்கு பாதுகாப்பில் இருந்த போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தினர்.
அவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது அவர்கள் கந்து வட்டி கொடுமை தாங்க முடியாமல் தீக்குளிக்க முயன்றதாக கூறி கண்ணீர் விட்டு கதறினர். பின்னர் போலீசாரிடம் மனு கொடுத்தனர்.
பண்ருட்டி அருகே உள்ள மேலிருப்பு கிராமத்தை சேர்ந்தவர் அன்பழகன். இவர் வட்டிக்கு பணம் கொடுத்து வருகிறார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு அவரிடம் நாங்கள் ரூ.1 லட்சம் வட்டிக்கு பணம் வாங்கினோம்.
2 மாதங்களாக வட்டி பணம் கொடுத்தோம். அதன் பின்பு எங்களால் வட்டி பணத்தை கொடுக்க முடியவில்லை. இதைத் தொடர்ந்து அன்பழகன், எங்களது நிலத்தை கிரையம் செய்து கொண்டார்.
அதன் பின்பு நாங்கள் ரூ.1 லட்சத்து 85 ஆயிரத்தை அன்பழகனிடம் கொடுத்தோம். ஆனால், அவர் வட்டி 3 லட்சமாக ஆகிவிட்டது. 3 லட்சம் ரூபாய் தந்தால்தான் நிலத்தை திரும்ப தர முடியும் என்றார். நாங்கள் பலமுறை சென்று கேட்டும் அவர் நிலத்தை தராமல் கொலை மிரட்டல் விடுத்தார்.
எங்களது குடும்பத்துக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டும். நிலத்தை மீட்டு தர வேண்டும்.
இவ்வாறு அந்த மனுவில் கூறியிருந்தனர்.
இதைத்தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கந்து வட்டி கொடுமையால் கலெக்டர் அலுவல கத்தில் கணவன்- மனைவி தீக்குளிக்க முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
பண்ருட்டி:
விழுப்புரம் மாவட்டம் சங்கராபுரத்தை சேர்ந்தவர் நாராயணன். இவரது மனைவி சக்தி (வயது 23). இவர் நேற்று இரவு சங்கராபுரம் பஸ் நிறுத்தத்தில் பஸ்சுக்காக காத்திருந்தார். அப்போது அங்கு வந்த மர்ம நபர்கள் 4 பேர் சக்தியிடம் நைசாக பேச்சுக்கொடுத்தனர். சக்தி பேசிக்கொண்டிருக்கும் போதே அவர்களில் ஒருவர் சக்தியின் முகத்தில் துணியால் அமுக்கிய சிறிது நேரத்தில் சக்தி மயக்கமடைந்தார்.
பின்னர் அந்த 4 பேரும் சேர்ந்து சக்தியை காரில் கடத்தி சென்றனர். அந்த கார் இன்று காலை கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே கானாஞ்சாவடியில் உள்ள முந்திரிதோப்பு அருகே காரை நிறுத்தி அங்கிருந்து சக்தியை மர்மநபர்கள் முந்திரிதோப்புக்கு தூக்கி சென்றனர். பின்னர் காரில் இருந்த டீசலை எடுத்து சக்தியின் மீது ஊற்றி உயிருடன் தீ வைத்தனர். இதனால் சக்தி வலிதாங்க முடியாமல் அலறினார். உடனே சக்தி இறந்துவிடுவார் என நினைத்த மர்ம நபர்கள் 4 பேரும் அங்கிருந்து காரில் தப்பி சென்றுவிட்டனர்.
ஆனால் பலத்த தீக்காயங்களுடன் உயிர் பிழைத்த சக்தி அங்கிருந்து நடந்து சென்றார். ஆனால் சக்தி கானாஞ்சாவடி பஸ் நிலையம் வந்ததும் மயங்கி விழுந்து விட்டார். இந்த நிலையில் அந்த வழியாக சென்றவர்கள் தீக்காயங்களுடன் இளம்பெண் உயிருக்கு போராடிக் கொண்டிருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தனர். பின்னர் இதுகுறித்து 108 ஆம்புலன்சுக்கு தகவல் தெரிவித்ததர். உடனே 108 ஆம்புலன்ஸ் மூலம் அவரை மீட்டு பண்ருட்டி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சக்திக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதுகுறித்து தகவல் அறிந்த காடாம்புலியூர் இன்ஸ்பெக் டர் முருகேசன், சப்-இன்ஸ்பெக்டர் ஜெயதேவி தலைமையிலான போலீசார் ஆஸ்பத்திரிக்கு விரைந்தனர். அங்கு சக்தி மயங்கியநிலையில் சிகிச்சை பெறுவதால் அவரிடம் மேற்கொண்டு விசாரிக்க முடியவில்லை. மேலும் சக்தியை எதற்காக தீவைத்து எரித்தார்கள் என்பது தொடர்பாக தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும் சக்திக்கும் அந்த மர்மநபர்களுக்கும் இடையே முன்விரோதம் உள்ளதா? அல்லது காரில் கடத்திசென்று கற்பழித்துவிட்டு தீவைத்து எரித்தார்களா? என்ற பல்வேறு கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இளம்பெண்ணை உயிருடன் எரித்து கொள்ளமுயன்ற சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
ஸ்ரீமுஷ்ணம்:
சோழத்தரம் அருகே உள்ள வடக்குப்பாளையாங் கோட்டையை சேர்ந்தவர் ஞானபிரகாசம். இவரது மகன் அலெக்ஸ் பாண்டியன் (வயது 25). இவர் சிமெண்ட் சிலாப் தயார் செய்வதில் தனது தந்தைக்கு உதவியாக இருந்து வந்தார்.
அலெக்ஸ்பாண்டியனுக்கு நிச்சயதார்த்தம் முடிந்து அடுத்த மாதம் திருமணம் நடக்க இருந்தது. இந்த நிலையில் வீட்டில் இருந்து சோழத்தரத்துக்கு தனது மோட்டார் சைக்கிளில் சென்று விட்டு பின்னர் ஊர் திரும்பி கொண்டிருந்தார்.
அவர் வந்த மோட்டார் சைக்கிள் அண்ணாநகர் பகுதியில் உள்ள சிதம்பரம்-ஸ்ரீமுஷ்ணம் சாலையில் சென்ற போது அவரது கட்டுப்பாட்டை இழந்து சாலையோர மின் கம்பத்தில் மோதியது.
இதில் தூக்கி வீசப்பட்ட அலெக்ஸ்பாண்டியன் பலத்த காயம் அடைந்து உயிருக்கு போராடி கொண்டிருந்தார். அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு சிதம்பரம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக புதுவை ஜிப்மர் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் அலெக்ஸ்பாண்டியன் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
விபத்து குறித்து சோழத்தரம் சப்-இன்ஸ்பெக்டர் சித்ரா வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
அடுத்த மாதம் திருமணம் நடைபெற இருந்த நிலையில் அலெக்ஸ்பாண்டியன் விபத்தில் சிக்கி பலியான சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
விருத்தாசலம்:
விருத்தாசலம் பெரியவடவாடியைச் சேர்ந்தவர் கோவிந்தசாமி. இவரது மனைவி அமுதா(32). இவர்களுக்கு 3 பெண் குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் மீண்டும் நிறைமாத கர்ப்பிணியாக இருந்த அமுதா விருத்தாசலம் ஜங்ஷன் சாலையில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.
அப்போது அறுவை சிகிச்சை மூலம் அவருக்கு பிரசவம் நடந்தது. இதில் அவருக்கு பிறந்த பெண் குழந்தை இறந்தது. அப்போது அமுதாவிற்கு ரத்த கசிவு நிற்காமல் சென்றுள்ளது. டாக்டர்கள் சிகிச்சையளித்தும் சிகிச்சை பலனின்றி அமுதாவும் இறந்து விட்டார்.
பிரசவத்தின் போது தாயும், குழந்தையும் இறந்த தகவல் அப்பகுதியில் பரவியது. இதைத்தொடர்ந்து விடுதலை சிறுத்தைகள் கட்சி தொகுதி செயலாளர் அய்யாயிரம் தலைமையில் மருதையன், ராஜ்குமார், ரவி, முருகன், சுப்புஜோதி மற்றும் அமுதாவின் உறவினர்கள் அந்த பகுதிக்கு திரண்டு வந்து ஆஸ்பத்திரியை முற்றுகையிட்டனர்.
அமுதாவிற்கு டாக்டர்கள் தாமதமாக வந்து சிகிச்சையளித்ததால்தான் அமுதாவும், அவரது குழந்தையும் இறந்து விட்டதாக கூறி சாலை மறியலில் ஈடுபட்டனர். தகவல் கிடைத்து விரைந்து வந்த இன்ஸ்பெக்டர் ராஜதாமரைபாண்டியன் தலைமையிலான போலீசார் சாலைமறியலில் ஈடுபட்டவர்களிடம் சமாதான பேச்சுவார்த்தை நடத்தினர்.
அப்போது போலீசாருக்கும், விடுதலை சிறுத்தைகள் கட்சியினருக்கும் இடையே கடும் வாக்கு வாதம் ஏற்பட்டது. பின் சமாதானம் அடைந்த விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் போராட்டத்தை கைவிட்டு சம்பவத்திற்கு காரணமான டாக்டர்கள் மீதும், மருத்துவமனை மீதும் நடவடிக்கை எடுக்க கோரி விருத்தாசலம் போலீஸ் நிலையம் சென்று புகார் கொடுத்தனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் கடலூரில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தபோது கூறியதாவது:-
உடல் நலத்துக்கு கேடு விளைவிக்கும் குட்கா, பான் மசாலா ஆகிய பொருட்களை விற்பனை செய்ய சுப்ரீம் கோர்ட்டு தடை விதித்துள்ளது. ஆனால் இந்த பொருட்களை தமிழ்நாட்டில் விற்பனை செய்ய அனுமதிப்பதற்காக அமைச்சர் மற்றும் அதிகாரிகளுக்கு ஓராண்டுக்கு ரூ.40 கோடி லஞ்சம் கொடுக்கப்பட்டுள்ளதை வருமான வரித்துறை கண்டுபிடித்துள்ளது.
எனவே தடைசெய்யப்பட்ட பொருட்களை விற்பனை செய்ய லஞ்சம் வாங்கிக்கொண்டு அனுமதித்த விவகாரத்தில் தொடர்புடையதாக கருதப்படும் அமைச்சர் விஜயபாஸ்கர் ராஜினாமா செய்ய வேண்டும். இல்லை என்றால் அவரை பதவிநீக்கம் செய்ய தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் இதில் மிகப்பெரிய ஊழல் முறைகேடு நடந்து இருப்பதால் உயர்மட்ட குழு அமைத்து விசாரணை நடத்த வேண்டும்.
நாளை முதல் அமலுக்கு வரும் ஜி.எஸ்.டி. வரி விதிப்பு முறையால் பல்வேறு துறைகள் கொந்தளித்துப் போய் இருக்கின்றன. ஜி.எஸ்.டி. வரியால் சிறு, குறு, தொழில்கள் கடுமையாக பாதிக்கப்படும் நிலை உருவாகி இருக்கிறது.
வணிகர்கள் ஆட்சேபனை தெரிவித்துள்ளனர். மருந்துகடை உரிமையாளர்கள், சிவகாசி பட்டாசு தொழிற்சாலை உரிமையாளர்கள், சினிமா தியேட்டர் உரிமையாளர்கள் ஆகியோர் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். ஜி.எஸ்.டி. வரி விதிப்பு அமலாக்கத்தை தள்ளி வைக்க வேண்டும். வரிவிகிதத்தையும் குறைக்க வேண்டும்.
நீட் தேர்வுக்கு விதிவிலக்கு கோரி தமிழ்நாட்டில் நிறைவேற்றப்பட்ட சட்டத்துக்கு ஜனாதிபதியின் ஒப்புதலை பெற மத்திய அரசு எந்த முயற்சியும் எடுக்கவில்லை. மாநில அரசை பொறுத்தவரை 3 அணிகளுக்கும் மத்திய அரசு மீதான பயத்தால் ஜனாதிபதி தேர்தலில் போட்டி போட்டுக்கொண்டு ஆதரவு தெரிவிக்கிறார்கள்.
தமிழகத்துக்கு துரோகம் விளைவிக்கும் பல்வேறு முடிவுகளை மத்திய அரசு மேற்கொண்டுள்ளது. இதில் இருந்து தமிழக மக்களை பாதுகாக்க 3 அணியினரும் எந்தவித நடவடிக்கையயும் எடுக்கவில்லை.
இவ்வாறு அவர் கூறினார்.
தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றாத பாரதீய ஜனதாவிடம் இருந்து தேசத்தை மீட்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்திய கம்யூனிஸ்டு கட்சி சார்பில் இன்று முதல் ஜூலை 5-ந் தேதி வரை தமிழகம் முழுவதும் அரசியல் பிரசார பேரியக்கம் நடத்தப்படுகிறது.
அதன்தொடக்க விழா இன்று கடலூர் தலைமை தபால் நிலையம் அருகே நடைபெற்றது. இதில் அரசியல் பிரசார பேரியக்க வாகனத்தை இந்திய கம்யூனிஸ்டு கட்சி மாநில செயலாளர் முத்தரசன், விடுதலை சிறுத்தை கட்சியின் பொதுச்செயலாளர் ரவிக்குமார் ஆகியோர் கொடியசைத்து தொடங்கி வைத்தனர்.
இந்தநிகழ்ச்சியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு மாவட்ட செயலாளர் ஆறுமுகம், இந்திய கம்யூனிஸ்டு மாவட்ட துணைசெயலாளர் குளோப், நகர செயலாளர் அரிகிருஷ்ணன், நகர துணை செயலாளர் துரைராஜ், விடுதலை சிறுத்தை கட்சி மாவட்ட செயலாளர் முல்லைவேந்தன், கடலூர் நாடாளுமன்ற தொகுதி செயலாளர் தாமரைச்செல்வன், நகர செயலாளர் செந்தில் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
இந்தநிகழ்ச்சி முடிந்ததும் இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் நிருபர்களிடம் கூறியதாவது:-
இந்தியாவில் மதவாத சக்தியாக பாரதீய ஜனதா செயல்படுவதால் பெரும் ஆபத்து உள்ளது. மேலும் மக்களுக்கு வாக்குறுதி நிறைவேற்றாமல் மதம், ஜாதி, மொழி உணர்வு ரீதியாக மதசார்பற்ற கொள்கைகளுக்கு எதிராக மாநில உரிமைகளையும், நலன்களையும் பறிக்கும் மத்திய அரசை எதிர்த்தும், மாநில ஆட்சியை காப்பாற்ற செயல்படும் மத்திய அரசை கண்டித்தும் இந்த பிரசார இயக்கம் தொடங்கப்பட்டுள்ளது.
இந்த அரசியல் பிரசார பேரியக்கம் தமிழகம் முழுவதும் 6 இடங்களில் நடக்கிறது. இதன் நிறைவு விழா ஜூலை 5-ந் தேதி திருச்சி உழவர் சந்தையில் முடிவடைகிறது. அங்கு பொதுக்கூட்டம் நடக்கிறது.
இந்தக்கூட்டத்தில் தலைவர்கள் கலந்து கொள்கிறார்கள். அப்போது பல்வேறு போராட்ட அறிவிப்புகள் வெளியிடப்படும்.
தமிழகத்தில் தடைசெய்யப்பட்ட குட்கா பொருட்களை விற்பனை செய்வதற்கு அமைச்சர்களுக்கும், காவல்துறையினருக்கும் ரூ.40 கோடி லஞ்சம் கொடுக்கப்பட்டதாக வருமான வரித்துறை அறிவித்துள்ளது.
ஆனால் வருமான வரித்துறையினர் சோதனை செய்து இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. ஆகையால் இதுசம்பந்தமாக வருமான வரித்துறையினர் விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
பண்ருட்டி:
சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் இருந்து முந்திரி கட்டைகள் ஏற்றிக் கொண்டு லாரி ஒன்று பண்ருட்டிக்கு வந்து கொண்டிருந்தது. லாரியை விருத்தாசலம் அருகே உள்ள பூண்டியார் குப்பத்தைச் சேர்ந்த ராஜசந்திரன் (வயது 36) என்பவர் ஓட்டி வந்தார். கிளீனராக சஞ்சய்காந்தி (28) என்பவர் இருந்தார்.
இன்று அதிகாலை அந்த லாரி பண்ருட்டி அருகே அங்குசெட்டிப்பாளையம் என்ற இடத்தில் வந்தது. அப்போது காய்கறி லோடு ஏற்றிக் கொண்டு மினி லாரி ஒன்று எதிரே வந்தது.
அப்போது திடீரென்று மினி லாரி மீது முந்திரி கட்டை ஏற்றி வந்த லாரி மோதியது. இதில் முந்திரிகட்டை ஏற்றி வந்த லாரி நிலைதடுமாறி நடுரோட்டில் கவிழ்ந்தது.
இந்த விபத்தில் லாரி டிரைவர் ராஜசந்திரன், கிளீனர் சஞ்சய்காந்தி, மினி லாரி டிரைவரான விழுப்புரம் மாவட்டம் வேப்பம்பாளையத்தைச் சேர்ந்த கொளஞ்சி (40) மற்றும் மினி லாரியில் வந்த அருள்அரசன், தனபால் ஆகியோர் படுகாயம் அடைந்தனர். இவர்கள் 5 பேரும் முண்டியம்பாக்கம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர்.
இந்த விபத்தால் கடலூர்- சித்தூர் சாலையில் 1 மணி நேரம் போக்கு வரத்து பாதிக்கப்பட்டது.
பண்ருட்டி துணை போலீஸ் சூப்பிரண்டு சுந்தரவடிவேல், புதுப்பேட்டை இன்ஸ்பெக்டர் முருகேசன் மற்றும் போலீசார் விரைந்து சென்று போக்குவரத்தை சீர் செய்யும் பணியில் ஈடுபட்டனர்.






