என் மலர்tooltip icon

    செய்திகள்

    குட்கா விற்பதற்கு ரூ.40 கோடி லஞ்சம்: வருமான வரித்துறையினர் விசாரணை நடத்த வேண்டும்- முத்தரசன்
    X

    குட்கா விற்பதற்கு ரூ.40 கோடி லஞ்சம்: வருமான வரித்துறையினர் விசாரணை நடத்த வேண்டும்- முத்தரசன்

    தடை செய்யப்பட்ட குட்கா விற்பதற்கு ரூ.40 கோடி லஞ்சம் கொடுக்கப்பட்டதால் இது குறித்து விசாரிக்க வருமான வரித்துறையினர் தீவிர விசாரணை நடத்த வேண்டும் என்று முத்தரசன் கூறினார்.
    கடலூர்:

    தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றாத பாரதீய ஜனதாவிடம் இருந்து தேசத்தை மீட்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்திய கம்யூனிஸ்டு கட்சி சார்பில் இன்று முதல் ஜூலை 5-ந் தேதி வரை தமிழகம் முழுவதும் அரசியல் பிரசார பேரியக்கம் நடத்தப்படுகிறது.

    அதன்தொடக்க விழா இன்று கடலூர் தலைமை தபால் நிலையம் அருகே நடைபெற்றது. இதில் அரசியல் பிரசார பேரியக்க வாகனத்தை இந்திய கம்யூனிஸ்டு கட்சி மாநில செயலாளர் முத்தரசன், விடுதலை சிறுத்தை கட்சியின் பொதுச்செயலாளர் ரவிக்குமார் ஆகியோர் கொடியசைத்து தொடங்கி வைத்தனர்.

    இந்தநிகழ்ச்சியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு மாவட்ட செயலாளர் ஆறுமுகம், இந்திய கம்யூனிஸ்டு மாவட்ட துணைசெயலாளர் குளோப், நகர செயலாளர் அரிகிருஷ்ணன், நகர துணை செயலாளர் துரைராஜ், விடுதலை சிறுத்தை கட்சி மாவட்ட செயலாளர் முல்லைவேந்தன், கடலூர் நாடாளுமன்ற தொகுதி செயலாளர் தாமரைச்செல்வன், நகர செயலாளர் செந்தில் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    இந்தநிகழ்ச்சி முடிந்ததும் இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் நிருபர்களிடம் கூறியதாவது:-

    இந்தியாவில் மதவாத சக்தியாக பாரதீய ஜனதா செயல்படுவதால் பெரும் ஆபத்து உள்ளது. மேலும் மக்களுக்கு வாக்குறுதி நிறைவேற்றாமல் மதம், ஜாதி, மொழி உணர்வு ரீதியாக மதசார்பற்ற கொள்கைகளுக்கு எதிராக மாநில உரிமைகளையும், நலன்களையும் பறிக்கும் மத்திய அரசை எதிர்த்தும், மாநில ஆட்சியை காப்பாற்ற செயல்படும் மத்திய அரசை கண்டித்தும் இந்த பிரசார இயக்கம் தொடங்கப்பட்டுள்ளது.

    இந்த அரசியல் பிரசார பேரியக்கம் தமிழகம் முழுவதும் 6 இடங்களில் நடக்கிறது. இதன் நிறைவு விழா ஜூலை 5-ந் தேதி திருச்சி உழவர் சந்தையில் முடிவடைகிறது. அங்கு பொதுக்கூட்டம் நடக்கிறது.

    இந்தக்கூட்டத்தில் தலைவர்கள் கலந்து கொள்கிறார்கள். அப்போது பல்வேறு போராட்ட அறிவிப்புகள் வெளியிடப்படும்.

    தமிழகத்தில் தடைசெய்யப்பட்ட குட்கா பொருட்களை விற்பனை செய்வதற்கு அமைச்சர்களுக்கும், காவல்துறையினருக்கும் ரூ.40 கோடி லஞ்சம் கொடுக்கப்பட்டதாக வருமான வரித்துறை அறிவித்துள்ளது.

    ஆனால் வருமான வரித்துறையினர் சோதனை செய்து இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. ஆகையால் இதுசம்பந்தமாக வருமான வரித்துறையினர் விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×