search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "இளம்பெண் கடத்தல்"

    • வேணுகோபால் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பேரிகை போலீசில் திரிஷா புகார் செய்ததாக கூறப்படுகிறது.
    • சி.சி.டி.வி. கேமரா பதிவுகளை கைப்பற்றி ஆய்வு செய்து, திரிஷாவை கடத்திச் சென்ற வேணுகோபால் உள்ளிட்டவர்களை தீவிரமாக தேடி வருகின்றனர்.

    ஓசூர்:

    கிருஷ்ணகிரி மாவட்டம் பேரிகை அருகே கொல்லப்பள்ளி என்ற கிராமத்தை சேர்ந்த நாராயணப்பா என்பவரது மகள் திரிஷா (19). இவர், ஓசூரில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் பி.ஏ. 2-ம் ஆண்டு படித்து வருகிறார்.

    இதேபோல், பேரிகை அருகே அலசபள்ளி கிராமத்தை சேர்ந்தவர் வேணுகோபால் (22), இவரும் அதே கல்லூரியில் எம்.பி.ஏ. படித்து வருகின்றனர்.

    இவர்கள் இருவரும் பிளஸ்-2 படிக்கும் போதிலிருந்தே ஒருவரையொருவர் காதலித்து வந்ததாக தெரிகிறது. இருவரும் வெவ்வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள். இதனால் திரிஷாவின் வீட்டில், இவர்களது காதலுக்கு பலத்த எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

    இதனை தொடர்ந்து, வேணுகோபாலுடனான காதலை தான் முறித்துக் கொண்டதாகவும், அவர் தொடர்ந்து வற்புறுத்துவதால், வேணுகோபால் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கடந்த செப்டம்பர் மாதம், பேரிகை போலீசில் திரிஷா புகார் செய்ததாக கூறப்படுகிறது.

    பின்னர் திரிஷாவுக்கும், பர்கூர் அருகே எலத்தகிரியை சேர்ந்த ரமேஷ் என்ற வாலிபருக்கும் திருமணம் நடந்தது.

    இந்த நிலையில், நேற்று தேர்வு எழுதுவதற்காக திரிஷாவை அவரது கணவர் ரமேஷ் எலத்தகிரியிலிருந்து மோட்டார் சைக்கிளில் ஓசூர் அழைத்து வந்தார்.

    பின்னர் தேர்வு முடிந்து மீண்டும் மாலையில் மனைவியை அழைத்துக் கொண்டு ஊருக்கு திரும்பும்போது, ஓசூர்-கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலையில் பேரண்டபள்ளி அருகே உள்ள ஒரு பெட்ரோல் நிலைய பகுதியில், ரமேஷ் ஓட்டி வந்த வண்டியை ஒரு கார் வழிமறித்தது. அந்த காரில் 3 பேருடன் வந்த திரிஷாவின் முன்னாள் காதலன் வேணுகோபால், திரிஷாவை வலுக்கட்டாயமாக காரில் ஏற்றி, கண்ணிமைக்கும் நேரத்தில் அங்கிருந்து தப்பிவிட்டார்.

    இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த ரமேஷ், இது குறித்து ஓசூர் அட்கோ போலீசுக்கு தகவல் தெரிவித்தார். இதையடுத்து போலீசார் அங்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். மேலும் அந்த பகுதியில் உள்ள சி.சி.டி.வி. கேமரா பதிவுகளை கைப்பற்றி ஆய்வு செய்து, திரிஷாவை கடத்திச் சென்ற வேணுகோபால் உள்ளிட்டவர்களை தீவிரமாக தேடி வருகின்றனர்.

    மேலும், அவர்களை பிடிக்க அட்கோ போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் வினோத்குமார் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம், ஓசூர் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • இளம்பெண்ணின் பெற்றோர் பொள்ளாச்சி தாலுகா போலீசில் புகார் அளித்தனர்.
    • 2 பெண்களை திருமணம் செய்த பிறகும் 3-வதாக ஒரு பெண்ணை கடத்திச் சென்ற வாலிபரை போலீசார் தேடி வருகிறார்கள்.

    கோவை:

    கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள மானூரை சேர்ந்தவர் 21 வயது இளம்பெண். இவர் பிளஸ்-2 வரை படித்து முடித்துவிட்டு பொள்ளாச்சி தொழிற்பேட்டையில் உள்ள ஒரு கம்பெனியில் வேலை செய்துவந்தார்.

    சம்பவத்தன்று வேலைக்கு செல்லாமல் வீட்டில் இருந்த இளம்பெண் பீரோவில் இருந்த ஆதார் கார்டு, ரேஷன் கார்டு, வங்கி புத்தகம் ஆகியவற்றை எடுத்துக்கொண்டு மாயமானார். இதுகுறித்து இளம்பெண்ணின் பெற்றோர் பொள்ளாச்சி தாலுகா போலீசில் புகார் அளித்த னர்.

    புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் இளம்பெண்ணுக்கு பொள்ளாச்சி கொள்ளுபாளையத்தை சேர்ந்த ஏற்கனவே 2 முறை திருமணமான 27 வயது வாலிபருடன் பழக்கம் இருந்தது தெரியவந்தது.

    இந்த பழக்கம் நாளடைவில் கள்ளக்காதலாக மாறியுள்ளது. வாலிபரின் 2-வது மனைவி பிரசவத்திற்கு அவரது தாய் வீட்டிற்கு சென்று இருந்தார். அப்போது வாலிபர் இளம்பெண்ணை அவரது வீட்டுக்கே அழைத்து சென்று உல்லாசமாக இருந்தது தெரியவந்தது.

    தற்போது 2 பேரும் மாயமாகி விட்டனர். 2 பெண்களை திருமணம் செய்த பிறகும் 3-வதாக ஒரு பெண்ணை கடத்திச் சென்ற வாலிபரை போலீசார் தேடி வருகிறார்கள்.

    • வீட்டைவிட்டு வெளியே சென்றார். அவர் மீண்டும் திரும்பிவரவில்லை.
    • போலீசார் வழக்கு பதிவு செய்து மாயமான ஜோட்டிகுமாரியையும், ரகுல்சவுத்ரியையும் தேடிவருகின்றனர்.

    ஓசூர்,

    கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் முல்லை நகரைச் சேர்ந்தவர் ராம்பள்ளி சவுத்ரி. இவரது மனவைி புல்மாசியா தேவி. இவரது மகள் ஜோட்டி குமாரி (வயது21). இவர் அதே பகுதியில் உள்ள கார்மெண்ட்சில் வேலை பார்த்து வருகிறார்.

    கடந்த 4-ந் தேதி வீட்டைவிட்டு வெளியே சென்றார். அவர் மீண்டும் திரும்பிவரவில்லை. இதுகுறித்து பெண்ணின் தாயார் புல்மாசியாதேவி ஓசூர் டவுன் போலீஸ் நிலையத்தில் பீகார் மாநிலத்தை சேர்ந்த ரகுல் சவுத்ரி என்பவர் கடத்தி சென்றிருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில் புகார் செய்தார்.

    புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து மாயமான ஜோட்டிகுமாரியையும், ரகுல்சவுத்ரியையும் தேடிவருகின்றனர்.

    • போலீசார் மாவட்டம் முழுவதும் உள்ள சோதனை சாவடிகளுக்கு தகவல் தெரிவித்து வாலிபரை பிடிக்க உத்தரவிட்டனர்.
    • போலீசார் மதுரை சென்று இளம்பெண்ணை மீட்டு பல்லடத்திற்கு அழைத்து வந்து விசாரணை நடத்தினர்.

    திருப்பூர்:

    ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடி பகுதியை சேர்ந்தவர் ரோபாஸ்டன் (வயது 21). மீனவர். இவர் அந்த பகுதியை சேர்ந்த 21வயதான இளம்பெண்ணை கடந்த 3 வருடங்களாக காதலித்து வந்தார். இந்தநிலையில் இருவரும் ஊட்டிக்கு செல்ல திட்டமிட்டனர்.

    இதையடுத்து நேற்று சாயல்குடியில் இருந்து ஊட்டிக்கு மோட்டார் சைக்கிளில் புறப்பட்டனர். மதுரை, ஒட்டன்சத்திரம், தாராபுரம் வழியாக சென்று கொண்டிருந்தனர். பல்லடம் அருகே செல்லும் போது திடீரென அவர்களது மோட்டார் சைக்கிளை பின்தொடர்ந்து வாலிபர் ஒருவர் வந்தார்.

    திடீரென 2பேரையும் வழிமறித்த அவர், நான் போலீஸ், உங்களை பார்க்கும் போது எனக்கு சந்தேகமாக இருக்கிறது. உங்களிடம் தனித்தனியாக விசாரணை நடத்த வேண்டும் என்று கூறிய அந்த வாலிபர், ரோபாஸ்டனை மோட்டார் சைக்கிளில் ஒரு கி.மீ. தூரம் வரை அழைத்து சென்ற அவர், பல்லடம் -திருச்சி சாலை மாதப்பூர் கருப்பசாமி கோவில் அருகே நிற்க வைத்து விட்டு, காதலியிடம் விசாரணை நடத்த செல்வதாக கூறிவிட்டு சென்றார்.

    இந்நிலையில் அந்த வாலிபர் மீது சந்தேகமடைந்த ரோபாஸ்டன் உடனே காதலி நிற்குமிடத்திற்கு சென்று பார்த்தார். அப்போது அங்கு காதலியை காணவில்லை. அதிர்ச்சியடைந்த அவர் அப்பகுதியில் தேடி பார்த்தார். ஆனால் எங்கு தேடியும் கிடைக்கவில்லை. உடனே இது குறித்து பல்லடம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.

    போலீசார் மாவட்டம் முழுவதும் உள்ள சோதனை சாவடிகளுக்கு தகவல் தெரிவித்து வாலிபரை பிடிக்க உத்தரவிட்டனர். இதைத்தொடர்ந்து போலீசார் மாவட்டம் முழுவதும் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். கண்காணிப்பு கேமராக்களில் பதிவாகிய காட்சிகளையும் பார்வையிட்டனர்.

    இந்நிலையில் இன்று காலை கடத்தப்பட்ட இளம்பெண் மதுரையில் நிற்பது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் மதுரை சென்று இளம்பெண்ணை மீட்டு பல்லடத்திற்கு அழைத்து வந்து விசாரணை நடத்தினர்.

    விசாரணையில் அவர், போலீஸ்காரர் என்று கூறியதால் வாலிபருடன் சென்றதாக கூறினார். இதையடுத்து போலீஸ்காரர் என்று கூறி இளம்பெண்ணை கடத்திய வாலிபர் யார் , எதற்காக கடத்தி சென்றார் என்று போலீசார் விசாரணை நடத்தி அந்த வாலிபரை தேடி வருகின்றனர். காதலனுடன் ஊட்டிக்கு சென்ற இளம்பெண்ணை வாலிபர் கடத்திய சம்பவம் திருப்பூரில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    • இளம்பெண்ணின் விருப்பம் இல்லாமல் கட்டாயப்படுத்தி திருமணம் செய்வதற்காக பாண்டிச்சேரிக்கு கோகுல கிருஷ்ணன் கடத்தி சென்றது தெரிந்தது.
    • கோகுல கிருஷ்ணன் மீது போலீசார் ஆள்கடத்தல் பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்துசிறையில் அடைத்தனர்.

    திருவெற்றியூர்:

    திருவொற்றியூர் பாலகிருஷ்ணா நகரைச் சேர்ந்தவர் கோகுல கிருஷ்ணன் (வயது 28). அ.தி.மு.க. மேற்கு பகுதி மாணவரணி செயலாளரான இவர் சென்னை ஐகோர்ட்டில் வக்கீலாகவும் உள்ளார்.

    இவரும் அதே பகுதியைச் சேர்ந்த 24 வயது பட்டதாரி இளம்பெண் ஒருவரும் காதலித்து வந்ததாக தெரிகிறது. அந்த இளம்பெண் ஓ.எம்.ஆர்.சாலையில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். கடந்த சில மாதங்களாக அவர்களுக்கு இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதனால் அந்த இளம்பெண் கோகுலகிருஷ்ணனுடன் பழகுவதை தவிர்த்தார். அவரிடம் பேசவில்லை என்று தெரிகிறது.

    இதனால் கோபம் அடைந்த கோகுல கிருஷ்ணன் கடந்த 21-ந்தேதி காலை வீட்டில் இருந்து வெளியே வந்த இளம்பெண்ணை வலுக்கட்டாயமாக காரில் ஏற்றி கடத்தி சென்றார். இதுகுறித்து பெண்ணின் பெற்றோர் சாத்தாட்காடு போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர்.

    எண்ணூர் போலீஸ் உதவி கமிஷனர் பிரம்மானந்தம் தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர் நந்த குமார் மற்றும் தனிப்படை போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். அப்போது கோகுலகிருஷ்ணன் திருமணம் செய்வதற்காக இளம்பெண்ணை பாண்டிச்சேரியில் உள்ள ஒட்டலில் கடத்தி வைத்திருந்தது தெரிய வந்தது. இதைத் தொடர்ந்து தனிப்படை போலீசார் பாண்டிச்சேரிக்கு விரைந்து சென்று இளம்பெண்ணை மீட்டனர். மேலும் கோகுலகிருஷ்ணனை கைது செய்து சாத்தாங்காடு போலீஸ் நிலையம் அழைத்து வந்து விசாரித்தனர்.

    இதில் இளம்பெண்ணின் விருப்பம் இல்லாமல் கட்டாயப்படுத்தி திருமணம் செய்வதற்காக பாண்டிச்சேரிக்கு கோகுல கிருஷ்ணன் கடத்தி சென்றது தெரிந்தது. இதைத்தொடர்ந்து கோகுல கிருஷ்ணன் மீது போலீசார் ஆள்கடத்தல் பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்துசிறையில் அடைத்தனர்.

    • சரஸ்வதி யாரிடமும் கூறாமல் பிரகாசுடன் சென்றுவிட்டதாக தெரிகிறது.
    • கடத்தப்பட்ட பெண்ணையும், அவரை கடத்திய வாலிபரையும் தீவிரமாக போலீசார் தேடி வருகின்றனர்.

    வத்தலக்குண்டு:

    திண்டுக்கல் மாவட்டம் வத்தலக்குண்டு அருகில் உள்ள விருவீடு தெப்பத்துப்பட்டியை சேர்ந்த தங்கபாண்டி மனைவி சரஸ்வதி(34). இவர்களுக்கு ஒரு மகள் மற்றும் ஒரு மகன் உள்ளனர். இந்நிலையில் மதுரை மாவட்டம் குருவித்துறையை சேர்ந்த சேகர் மகன் பிரகாஷ் என்பவர் சரஸ்வதியிடம் தான் முருக்கு கம்பெனியில் வேலை பார்த்து வருவதாகவும், அங்கு வந்தால் அதிக சம்பளம் கிடைக்கும் எனவும் ஆசைவார்த்தை கூறியுள்ளார்.

    இதனையடுத்து சரஸ்வதி யாரிடமும் கூறாமல் பிரகாசுடன் சென்றுவிட்டதாக தெரிகிறது. தனது மனைவியை காணாமல் பல இடங்களில் தேடிப்பார்த்த அவரது கணவர் தங்கபாண்டி இதுகுறித்து விருவீடு போலீசில் புகார் அளித்தார். சரஸ்வதியை பிரகாஷ்தான் கடத்தி சென்றிருக்கக்கூடும் என்றும், இதற்கு உடந்தையாக அவரது உறவினர்கள் அன்னக்களி, பாண்டி, தெப்பத்துப்பட்டியை சேர்ந்த சந்திரசேகர், அவரது மனைவி பொன்மணி ஆகியோர் உள்ளனர் என்றும், தனது புகாரில் தெரிவித்துள்ளார்.

    மேலும் தனது மனைவியை மீட்டுத்தரும் வரை தான் செல்லமாட்டேன் எனக்கூறி போலீஸ் நிலையத்தில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டார். இதனையடுத்து போலீசார் அவரை சமாதானப்படுத்தி வீட்டிற்கு அனுப்பி வைத்தனர். மேலும் கடத்தப்பட்ட பெண்ணையும், அவரை கடத்திய வாலிபரையும் தீவிரமாக தேடி வருகின்றனர்.

    • சுமிகாவை அவரது பெற்றோர் கேரளாவில் உள்ள உறவினர் வீட்டிற்கு அழைத்து சென்று இருப்பதாக தகவல் கிடைத்தது.
    • தனிப்படை போலீசார் கேரளாவுக்கு விரைந்தனர். அவர்கள் சுமிகாவையும், அவரது பெற்றோரையும் தீவிரமாக தேடி வந்தனர்.

    நெல்லை மாவட்டம் கூடங்குளம் அருகே உள்ள ஸ்ரீரெங்கநாராயணபுரத்தைச் சேர்ந்த தங்கராஜா மகன் முருகன் (வயது 24). இவரது பக்கத்து வீட்டைச் சேர்ந்த முருகேசன்-பத்மா தம்பதியரின் மகள் சுமிகா (19). முருகன், சுமிகா கடந்த 5 ஆண்டுகளாக காதலித்து வந்தனர். இதற்கு சுமிகாவின் பெற்றோர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். கடந்த மாதம் 18-ந் தேதி இருவரும் வீட்டை விட்டு வெளியேறி, சென்னையில் பதிவு திருமணம் செய்து கொண்டனர்.

    இதையடுத்து முருகன், சுமிகா ஆகியோர் கூடங்குளத்தில் வீடு எடுத்து தங்கியிருந்து வந்தனர். சம்பவத்தன்று இரவு அவர்கள் ஸ்ரீரெங்கநாராயணபுரத்தில் உள்ள வீட்டுக்கு வந்தனர். இதை அறிந்த சுமிகாவின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் அங்கு வந்து சுமிகாவை தாக்கி காரில் ஏற்றி கடத்தி சென்றதாக கூறப்படுகிறது.

    இதுகுறித்து முருகன் கூடங்குளம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் 12 பேர் மீது வழக்குப்பதிவு செய்து, சுமிகாவின் உறவினரான ஸ்ரீரெங்கநாராயணபுரத்தை சேர்ந்த அமுதா, அனுசுயா, பாப்பா, தங்கம்மாள் உள்பட 5 பேரை நேற்று முன்தினம் கைது செய்தனர்.

    இந்த சம்பவம் தொடர்பாக சிலர் கன்னியாகுமரிக்கு தப்பிச் சென்றதாக கிடைத்த தகவலின் பேரில் கூடங்குளம் போலீசார் அங்கு சென்றனர். அப்போது, அங்கிருந்த செல்வகுமார், விஜயகுமார், வைகுண்ட மணி ஆகியோரை கைது செய்தனர். ஆனால் அங்கு சுமிகா, அவரது பெற்றோர் இல்லாததால் அவர்கள் எங்கே சென்றார்கள்? என்பது குறித்து தெரியவில்லை.

    சுமிகாவை அவரது பெற்றோர் கேரளாவில் உள்ள உறவினர் வீட்டிற்கு அழைத்து சென்று இருப்பதாக தகவல் கிடைத்தது.

    இதையடுத்து தனிப்படை போலீசார் கேரளாவுக்கு விரைந்தனர். அவர்கள் சுமிகாவையும், அவரது பெற்றோரையும் தீவிரமாக தேடி வந்தனர்.

    இந்நிலையில், சுமிகாவை கடத்தியது தொடர்பாக பெற்றோர் உள்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர். கேரள மாநிலம் பாலராமபுரத்தில் பதுங்கி இருந்த சுமிகா தாய் பத்மா, தந்தை முருகேசன், சித்தி ஆகியோரை போலீசார் கைது செய்துள்ளனர்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • கடத்தப்பட்ட சுமிகாவை மீட்க தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது.
    • தனிப்படை போலீசார் தீவிர விசாரணை நடத்தி சுமிகாவை தேடி வருகின்றனர்.

    நெல்லை:

    நெல்லை மாவட்டம் கூடங்குளம் அருகே உள்ள ஸ்ரீரெங்க நாராயணபுரம் அம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் முருகன் (வயது 24).

    இவரும் அதே பகுதியை சேர்ந்த சுமிகா (19) என்ற பெண்ணும் காதலித்து வந்துள்ளனர். இவர்களது காதலுக்கு பெண் வீட்டார் கடும் எதிர்ப்பு தெரிவித்ததாக கூறப்படுகிறது.

    இதனால் கடந்த மாதம் 18-ந்தேதி காதல் ஜோடி வீட்டை விட்டு வெளியேறி திருமணம் செய்துள்ளனர். பின்னர் கடந்த 25-ந்தேதி திருமணத்தை பதிவு செய்துள்ளனர்.

    இந்நிலையில் நேற்று அவர்கள் ஊர் திரும்பினர். இதையறிந்த சுமிகாவின் தந்தை முருகேசன் தாயார் பத்மா உள்பட 12 பேர் கும்பலாக முருகன் வீட்டுக்குள் சென்று சுமிகாவை அழைத்துள்ளனர்.

    ஆனால் சுமிகா அவர்களுடன் செல்ல மறுத்து விட்டார். அப்போது முருகனையும், அவரது குடும்பத்தினரையும் தகாத வார்த்தைகளால் பேசிய கும்பல் சுமிகாவை பிடித்து இழுத்து ஒரு காரில் வலுக்கட்டாயமாக ஏற்றிச்சென்றுள்ளனர்.

    இதுகுறித்து முருகன் கூடங்குளம் போலீசில் புகார் செய்தார். அதில், எனது மனைவி சுமிகாவை அவரது தந்தை முருகேசன், தாய் பத்மா, அண்ணன் சுமித் மற்றும் உறவினர்கள் உள்பட 12 பேர் சேர்ந்து காரில் கடத்தி சென்று விட்டனர். அவர்களிடம் இருந்து எனது மனைவியை மீட்டுத்தர வேண்டும் என கூறியிருந்தார்.

    புகாரின் பேரில் சுமிகாவின் பெற்றோர் முருகேசன்-பத்மா உள்பட 12 பேர் மீது கடத்தல் உள்ளிட்ட 4 பிரிவிகளின் கீழ் இன்ஸ்பெக்டர் ஜான்பிரிட்டோ வழக்குப் பதிவு செய்தார்.

    மேலும் கடத்தப்பட்ட சுமிகாவை மீட்க தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது. தனிப்படை போலீசார் தீவிர விசாரணை நடத்தி சுமிகாவை தேடி வருகின்றனர். இதுதொடர்பாக 5 பெண்களை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    தென்காசியில் கடந்த சில நாட்களுக்கு முன்பு காதல் திருமணம் செய்த குருத்திகா என்ற இளம்பெண் அவரது பெற்றோரால் கடத்தப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது.

    அதேபோல நெல்லையில் நடைபெற்ற இந்த சம்பவம் கூடங்குளம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • மதுரை ஐகோர்ட்டில் வக்கீல் இசக்கிராஜ் என்பவர், இளம்பெண்ணை கண்டுபிடித்து தர வேண்டும் என்று ஆட்கொணர்வு மனுவை தாக்கல் செய்தார்.
    • தற்போது கடத்தப்பட்ட இளம்பெண் வழக்கில் திருப்பு முனையாக நேற்று ஒரு வீடியோ வெளிவந்துள்ளது.

    தென்காசி:

    தென்காசி அருகே உள்ள இலஞ்சி கொட்டாக்குளத்தை சேர்ந்த மாரியப்பன் மகன் வினித் (வயது 22). இவருக்கும், அதே பகுதியை சேர்ந்த நவீன் பட்டேல் மகள் கிருத்திகா என்பவருக்கும் காதல் ஏற்பட்டு இருவரும் வீட்டை விட்டு வெளியே சென்று திருமணம் செய்து கொண்டனர்.

    இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு நவீன் பட்டேல் மற்றும் அவருடன் உறவினர்கள் 6 பேர் சேர்ந்து வலுக்கட்டாயமாக, காதல் கணவர் வினித் கண்முன்னே கிருத்திகாவை தாக்கி ஒரு காரில் கடத்தி சென்றுவிட்டனர்.

    இதுகுறித்து குற்றாலம் போலீசார் கிருத்திகாவின் பெற்றோர் உள்பட 7 பேர் மீது கடத்தல் வழக்குப்பதிவு செய்து வலைவீசி தேடி வந்தனர். தென்காசி துணை போலீஸ் சூப்பிரண்டு மணிமாறன் தலைமையில் 4 தனிப்படைகள் அமைக்கப்பட்டு இளம்பெண்ணை தேடி வருகின்றனர்.

    இந்நிலையில் மதுரை ஐகோர்ட்டில் வக்கீல் இசக்கிராஜ் என்பவர், இளம்பெண்ணை கண்டுபிடித்து தர வேண்டும் என்று ஆட்கொணர்வு மனுவை தாக்கல் செய்தார். தற்போது கடத்தப்பட்ட இளம்பெண் வழக்கில் திருப்பு முனையாக நேற்று ஒரு வீடியோ வெளிவந்துள்ளது.

    அந்த வீடியோவில் பேசும் கிருத்திகா தனக்கு உறவினர் ஒருவருடன் திருமணம் முடிந்துள்ளதாகவும், தான் பாதுகாப்பாக உள்ளதாகவும், தன்னை யாரும் கடத்தவில்லை எனவும், எந்தவிதமான அச்சுறுத்தலும் இன்றி நான் திருமணம் முடித்து சந்தோசமாக இருப்பதாகவும், என்னை வைத்து ஏதேனும் பிரச்சனை நடைபெற்றால் அதை அப்படியே விட்டுவிடுங்கள் எனவும் வாக்குமூலமாக பதிவு செய்து வெளியிட்டுள்ளார்.

    தற்போது, அந்த வீடியோவானது அவரது வழக்கறிஞர் மூலம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சாம்சனிடம் வழங்கப்பட்டு உள்ளது. இளம்பெண்ணின் இந்த வாக்குமூலம் இந்த வழக்கில் திடீர் திருப்புமுனையை ஏற்படுத்தி உள்ளது.

    தென்காசி மாவட்ட போலீசார் தனிப்படைகள் அமைத்து கிருத்திகாவை தேடி வரும் சூழலில், கிருத்திகா குஜராத்தில் மற்றொருவரை திருமணம் செய்து கொண்டு வீடியோவை வெளியிட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    • வீட்டை விட்டு வெளியே சென்ற சுரேகா அதன்பிறகு வீடு திரும்பவில்லை.
    • சந்தோஷ்குமார் என்ற வாலிபர் கடத்தி சென்று விட்டதாக ராமமூர்த்தி சூளகிரி போலீசில் புகார் செய்தார்.

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி பகுதியை சேர்ந்தவர் ராமமூர்த்தி.இவரது மனைவி சுரேகா (வயது 21).

    கடந்த 12- ந்தேதி வீட்டை விட்டு வெளியே சென்ற சுரேகா அதன்பிறகு வீடு திரும்பவில்லை.

    சுரேகா பற்றி பல்வேறு இடங்களில் விசாரித்தும் எவ்வித தகவலும் கிடைக்கவில்லை.

    இந்நிலையில் திம்மண்ணப ள்ளிப்பகுதியை சேர்ந்த சந்தோஷ்குமார் என்ற வாலிபர் கடத்தி சென்று விட்டதாக ராமமூர்த்தி சூளகிரி போலீசில் புகார் செய்தார்.

    இந்த புகாரின் பேரில் சூளகிரி போலீசார் வழக்கு பதிவு செய்து மாயமான சுரேகாவையும், அவரை கடத்தியதாக கூறப்படும் சந்தோஷ்குமாரையும் தேடி வருகின்றனர்.

    • முனுசாமி நாயுடு கண்டிகை என்ற இடத்தில் திடீரென காரில் வந்த 2 வாலிபர்கள் ஆட்டோவை மடக்கினார்கள்.
    • ஆட்டோவில் இருந்த தாய் மஞ்சுளாவை வெளியே இழுத்து தள்ளிவிட்டு கண்ணிமைக்கும் நேரத்தில் சியாமளாவை காரில் கடத்தி மின்னல் வேகத்தில் மறைந்தனர்.

    திருத்தணி:

    பள்ளிப்பட்டு அடுத்த கொடி வளசை காலனியில் வசிப்பவர் சேகர். இவரது மகள் சியாமளா (வயது 24). 10ம் வகுப்பு படித்துவிட்டு தற்போது வீட்டில் இருக்கிறார்.

    நேற்று சியாமளாவை அழைத்துக் கொண்டு தாய் மஞ்சுளா ஆட்டோவில் பள்ளிப்பட்டு பகுதியில் பஜார் தெருவுக்கு சென்றார். அங்குள்ள கடையில் கொலுசு எடுத்துக்கொண்டு ஆட்டோவில் வீட்டுக்கு திரும்பி கொண்டு இருந்தனர்.

    முனுசாமி நாயுடு கண்டிகை என்ற இடத்தில் திடீரென காரில் வந்த 2 வாலிபர்கள் ஆட்டோவை மடக்கினார்கள். ஆட்டோவில் இருந்த தாய் மஞ்சுளாவை வெளியே இழுத்து தள்ளிவிட்டு கண்ணிமைக்கும் நேரத்தில் சியாமளாவை காரில் கடத்தி மின்னல் வேகத்தில் மறைந்தனர்.

    தன் மகள் கண்ணெதிரில் கடத்தப்பட்டதை கண்ட தாய் மஞ்சுளா கூச்சல் போடவே பொதுமக்கள் திரண்டனர். இது தொடர்பாக பள்ளிப்பட்டு போலீஸ் நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இன்ஸ்பெக்டர் ராஜ், சப்- இன்ஸ்பெக்டர் நாகராஜ் மற்றும் போலீஸ் குழுவினர் காரை பின் தொடர்ந்து விரட்டினர். ஆந்திரா மாநிலம் சர்க்கரை ஆலை அருகே ஆந்திரா போலீஸ் உதவியோடு பொதுமக்களும் இணைந்து காரை மடக்கி பிடித்தனர். கடத்தப்பட்ட சியாமளாவை மீட்ட போலீசார் பெற்றோரிடம் ஒப்படைத்தனர்.

    இது தொடர்பாக நடந்த விசாரணையில் கொடி வலசா கிராமம் அருகிலுள்ள அத்திமாஞ்சேரி பேட்டை காலனியை சேர்ந்த ஜெயக்குமார் (வயது 30). அதே பகுதியைச் சேர்ந்த விஜய் (வயது 27) ஆகிய இருவரும் சியாமளாவை கடத்தியது தெரியவந்தது.

    அவர்கள் இருவரும் சியாமளாவுக்கு உறவினர்கள் ஆவர். அவர்கள் என்ன நோக்கத்திற்காக கடத்தினார்கள் என்று தெரியவில்லை. இருவர் மீதும் வழக்கு பதிவு செய்த போலீசார் அவர்களை கைது செய்து திருத்தணி கிளை சிறையில் அடைத்தனர்.

    கடத்தலுக்கு பயன்படுத்திய காரையும் போலீசார் பறிமுதல் செய்தனர். நேற்று மாலை நடந்த இந்த கடத்தலில் ஒரு மணி நேரத்தில் போலீசார் குற்றவாளிகளை பிடித்தனர்.

    • ஏர்வாடியில் இளம்பெண்ணை கடத்த முயற்சி; தாய்-மகளுக்கு கத்திக்குத்து விழுந்தது.
    • தப்பியோடிய கார்த்திக், அஜித் ஆகிய இருவரையும் போலீசார் தேடி வருகின்றனர்.

    கீழக்கரை

    ராமநாதபுரம் மாவட்டம் ஏர்வாடி ஊராட்சியை சேர்ந்த சடைமுனியன் வலசை கிராமத்தை சேர்ந்தவர் முனீஸ்வரன். இவர் கேரளாவில் மீன்பிடி தொழில் செய்து வருகிறார்.

    இவரது மகள் கோகிலாவும் (21), சேதுக்கரையை சேர்ந்த பழனி மகன் கார்த்திக்கும் (27) காதலித்தனர். இந்த காதலுக்கு கோகிலாவின் குடும்பத்தார் எதிர்ப்பு தெரிவித்தனர். கார்த்திக்கின் நடத்தையில் சந்தேகம் ஏற்பட்டதால் கோகிலாவும் கார்த்திக்குடன் பேசுவதை நிறுத்திக் கொண்டார்.

    ஆத்திரமடைந்த கார்த்திக் நண்பர் சேதுக்கரை நாகவேல் மகன் அஜித்தை அழைத்துக் கொண்டு சேதுக்கரையை சேர்ந்த சர்வேஸ்வரன் (25) என்பவரது ஆட்டோவில் கோகிலாவின் வீட்டுக்கு நள்ளிரவில் வந்தார்.

    வீட்டின் பின்பக்கம் கதவை உடைத்து உள்ளே புகுந்த கார்த்திக், அஜித் ஆகியோர் அங்கு தூங்கிக் கொண்டிருந்த கோகிலாவை கடத்திச் செல்ல முயன்றனர். கோகிலா கூச்சலிட்டதை தொடர்ந்து தாயார் தெய்வ ராணி மகளை காப்பாற்ற முயன்றார். அப்போது மறைத்து வைத்திருந்த கத்தியால் கார்த்திக் இருவரையும் குத்திவிட்டு தப்பி விட்டார்.

    தெய்வ ராணியின் அலறல் சத்தம் கேட்டு அக்கம், பக்கத்தில் இருந்தவர்கள் ஓடி வந்து அங்கு நின்று கொண்டிருந்த ஆட்டோ டிரைவர் சர்வேசுவரனை மடக்கிப் பிடித்து போலீசில் ஒப்படைத்தனர்.

    போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து கோகிலாவையும், தெய்வ ராணியையும் ராமநாதபுரம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

    பின்னர் தெய்வராணி மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.ஆட்டோ டிரைவர் சர்வேஸ்வரனிடம் ஏர்வாடி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். தப்பியோடிய கார்த்திக், அஜித் ஆகிய இருவரையும் போலீசார் தேடி வருகின்றனர்.

    ×