என் மலர்tooltip icon

    கடலூர்

    கருவேப்பிலங்குறிச்சி அருகே வி‌ஷ பூச்சி கடித்து இளம்பெண் பரிதாபமாக உயிரிழந்தார்.
    ஸ்ரீமுஷ்ணம்

    கருவேப்பிலங்குறிச்சி அருகே உள்ள மேலப்பாளையூரை சேர்ந்தவர் கமலன். இவரது மனைவி மல்லிகா (வயது 25). இவர் தனது விவசாய நிலத்தில் வேலை செய்து கொண்டிருந்தார். அப்போது மல்லிகாவை வி‌ஷப்பூச்சி கடித்தது.

    மயங்கி கிடந்த அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு விருத்தாசலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக முண்டியம்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி மல்லிகா பரிதாபமாக இறந்தார்.

    இது குறித்து கருவேப்பிலங்குறிச்சி போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    குறிஞ்சிப்பாடி அருகே பெற்ற 2 மகன்களையும் கிணற்றி தள்ளி கொன்று விட்டு தாயும் தற்கொலை செய்ய முயன்ற சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது.

    குறிஞ்சிப்பாடி:

    கடலூர் அருகே உள்ள கோதண்டராமபுரத்தைச் சேர்ந்தவர் வெங்கடேசன். இவரது மனைவி சாய்பாபு (வயது 35). இவர்களுக்கு கோகுல் (8), கோ‌ஷன் (7) என்ற 2 மகன்கள் உள்ளனர்.

    கோகுல் அந்த பகுதியில் உள்ள பள்ளி ஒன்றில் 3-ம் வகுப்பும், கோ‌ஷன் 2-ம் வகுப்பும் படித்து வந்தனர்.

    வெங்கடேசன் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார். சாய்பாபு தனது 2 மகன்களுடன் கோதண்டராமபுரத்தில் தனியாக வசித்து வந்தார்.

    கணவர் இறந்து விட்டதால் சாய்பாபு குடும்பம் நடத்த போதிய பணம் இல்லாமல் தவித்து வந்தார். மகன்களின் படிப்பு செலவு மற்றும் வீட்டு செலவுக்கு கஷ்டப்பட்டு வந்தார்.

    அக்கம் பக்கத்தினர் மற்றும் உறவினர்களிடம் கடன் வாங்கி குடும்ப செலவை சமாளித்து வந்தார். இந்த நிலையில் சாய்பாபுவிடம் கடன் கொடுத்தவர்கள் அந்த பணத்தை திருப்பி கேட்டனர். ஆனால், சாய்பாபு பணத்தை கொடுக்க முடியாமல் அவதிப்பட்டார்.

    வாங்கிய கடன்களை திருப்பி கொடுக்க முடிய வில்லையே என்ற மனவேதனையில் இருந்து வந்தார்.

    இந்த நிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு தனது 2 மகன்களையும் அழைத்து கொண்டு கடலூர் மாவட்டம் குள்ளஞ்சாவடி அடுத்த சிம்மராவுத்தன்குப்பத்தில் உள்ள உறவினர் வீட்டுக்கு சென்றார்.


    அங்கும் சாய்பாபு யாருடனும் பேசாமல் இருந்தார். கடன் தொகையை கொடுக்க முடியாததால் அவர் தனது 2 மகன்களுடன் தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்தார்.

    அதன்படி இன்று காலை உறவினரின் வீட்டின் அருகே உள்ள கிணற்று பகுதிக்கு தனது 2 மகன்களையும் சாய்பாபு அழைத்து கொண்டு சென்றார். கோகுல், கோ‌ஷன் ஆகிய 2 பேரையும் முதலில் அந்த கிணற்றில் தூக்கி வீசினார். பின்னர் தானும் கிணற்றுக்குள் குதித்தார்.

    இதையறிந்த அக்கம் பக்கத்தினர் அங்கு விரைந்து வந்தனர். கிணற்றுக்குள் குதித்து 3 பேரையும் காப்பாற்ற முயற்சி செய்தனர். ஆனால் கோ‌ஷன், கோகுல் ஆகிய 2 பேரும் கிணற்றில் மூழ்கி இறந்து விட்டனர். தண்ணீரில் தத்தளித்து கொண்டிருந்த சாய்பாபுவை மட்டும் உயிருடன் மீட்டனர்.

    இது குறித்து குள்ளஞ்சாவடி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். கிணற்றில் மூழ்கி பலியான கோ‌ஷன், கோகுல் ஆகியோரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக குறிஞ்சிப்பாடி அரசு ஆஸ் பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து சாய்பாபுவிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    பெற்ற 2 மகன்களையும் கிணற்றி தள்ளி கொன்று விட்டு தாயும் தற்கொலை செய்ய முயன்ற சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பையும், சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது.

    சிதம்பரம் அருகே வறுமை காரணமாக 2 மாதகுழந்தையை ரூ.1500-க்கு விற்ற சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
    சிதம்பரம்:

    சிதம்பரம் அடுத்த புவனகிரி அருகே உள்ள மருதூர் பகுதியை சேர்ந்தவர் செந்தாமரைக்கண்ணன்(வயது 32). தொழிலாளி. இவரது மனைவி பிரியா(31). இவர்களுக்கு கவுசல்யா(5), கவுசிகா(2 மாதம்). ஆகிய 2 குழந்தைகள் உள்ளன.

    செந்தாமரைக்கண்ணன் குடும்பம் வறுமையில் வாடியது. 2 பெண் குழந்தைகளையும் வளர்க்க முடியாமல் தவித்தார். இதனால் ஒரு குழந்தையை விற்க முடிவு செய்தார். நேற்று மாலையில் செந்தாமரைக்கண்ணன் குடிபோதையில் வீட்டில் இருந்த 2 மாத பெண் குழந்தை கவுசிகாவை தூக்கிக்கொண்டு சிதம்பரம் பஸ்நிலையத்துக்கு வந்தார்.

    அங்கிருந்த சீர்காழியை சேர்ந்த ஒரு பெண்ணிடம் தனக்கு 2 பெண் குழந்தை உள்ளது. எங்கள் குடும்பத்தில் வறுமை ஏற்பட்டுள்ளதால் என்னால் இந்த குழந்தையை வளர்க்க முடியவில்லை. இந்த குழந்தையை நீங்கள் வளர்த்துக்கொள்ளுங்கள் என்று கூறினார்.

    பின்னர் செந்தாமரைக்கண்ணன் அந்த பெண்ணிடம் அந்த குழந்தையை ஒப்படைத்துவிட்டு ரூ.1500 பெற்றுக்கொண்டு சென்றார். குழந்தையை விலைக்கு வாங்கிய அந்த பெண் பஸ்நிலையத்தில் இருந்த ஒரு கடைக்காரரிடம் குடிபோதையில் ஒருவர் என்னிடம் இந்த குழந்தையை வளர்க்குமாறு கூறிச்சென்றார்.

    இதனால் குழந்தையை தேடி யாராவது வந்தால் எனது வீட்டு முகவரிக்கு வரும்படி கடைக்காரரிடம் கூறிச்சென்றார்.

    இந்த நிலையில் வீட்டில் இருந்த குழந்தை காணாதது கண்டு பிரியா அதிர்ச்சியடைந்தார். வீட்டுக்கு வந்த கணவர் செந்தாமரைக்கண்ணனிடம் குழந்தையை காணவில்லை குழந்தையை பார்த்தீர்களா? என்று கேட்டார். அதற்கு அவர் குழந்தையை பற்றி தனக்கு எதுவும் தெரியாது என்றார்.

    இதனைத்தொடர்ந்து பிரியா சிதம்பரம் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் உதவி போலீஸ் சூப்பிரண்டு நிஷா உத்தரவின்பேரில் தனிப்படை அமைக்கப்பட்டது. தனிப்படை போலீசார் சிதம்பரம் பஸ்நிலையத்துக்கு சென்று விசாரணை நடத்தினர். அப்போது அங்குள்ள கடைக்காரர் ஒருவர் போலீசாரிடம் கூறும்போது, ஒரு பெண் குழந்தையை வாங்கிச்சென்றது குறித்தும் அந்த பெண் கொடுத்த முகவரியையும் தெரிவித்தார்.

    அதன்பேரில் போலீசார் சீர்காழியில் உள்ள அந்த பெண்ணின் வீட்டுக்கு சென்று அவரிடம் விசாரணை நடத்தினர்.

    அப்போது ரூ.1500-ஐ கொடுத்து குழந்தையை வாங்கியதாக அவர் கூறினார். இதனைத்தொடர்ந்து சிதம்பரம் இன்ஸ்பெக்டர் அம்பேத்கார் அந்த குழந்தையை மீட்டு குழந்தையின் தாயார் பிரியாவிடம் ஒப்படைத்தார்.

    மேலும் குழந்தையை விற்ற செந்தாமரைக்கண்ணனை போலீசார் எச்சரித்து வீட்டுக்கு அனுப்பி வைத்தனர். வறுமை காரணமாக 2 மாதகுழந்தையை ரூ.1500-க்கு விற்ற சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
    கடலூரில் இன்று காலை ஆம்புலன்சில் திடீரென தீ பிடித்து எரிந்தது. அக்கம் பக்கத்தினர் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். அவர்கள் வந்து தீயை அணைத்தனர்.

    கடலூர்:

    கடலூரை அடுத்த செல்லாங்குப்பத்தில் சாலையோரம் 108 ஆம்புலன்ஸ் பழுதாகி நின்று கொண்டு இருந்தது. அந்த ஆம்புலன்சில் ஆட்கள் யாரும் இல்லை.

    இந்த நிலையில் இன்று காலை திடீரென அந்த ஆம்புலன்சில் இருந்து புகை கிளம்பியது. சிறிது நேரத்தில் ஆம்புலன்ஸ் தீப்பிடித்து எரிந்தது. அந்த பகுதி முழுவதும் புகை மூட்டமாக காட்சி அளித்தது.

    இதை கண்ட அக்கம் பக்கத்தினர் அதிர்ச்சி அடைந்தனர். இது பற்றி கடலூர் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் விரைந்து வந்து ½ மணி நேரம் போராடி தீயை அணைத்தனர்.

    அருகே நின்று கொண் டிருந்த மற்ற வாகனங்களுக்கும் தீ பரவ விடாமல் தடுத்தனர். இதனால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.

    இது குறித்து கடலூர் முதுநகர் போலீசில் புகார் செய்யப்பட்டது. தீ எதனால் பிடித்தது? என்று விசாரித்து வருகின்றனர்.

    இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    பண்ருட்டி அருகே மாணவியை கடத்தி ஆசிரியர் திருமணம் செய்து கொண்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
    பண்ருட்டி:

    கடலூர் அருகே உள்ள நடுவீரப்பட்டு வன்னியர்புரத்தை சேர்ந்தவர் பன்னீர்செல்வம் (வயது 33). இவர் பண்ருட்டி அருகே உள்ள மருங்கூர் அரசு மேல்நிலை பள்ளியில் வேதியியல் ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இவரது மனைவி கார்த்திகா. இவரும் அதே பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றிவருகிறார்.

    இந்தநிலையில் கணவன்-மனைவிக்கிடையே குடும்ப தகராறு ஏற்பட்டது. இதனால் அவர்கள் தனித்தனியாக பிரிந்து வாழ்ந்து வருகிறார்கள். மருங்கூர் அரசு மேல்நிலை பள்ளியில் கீழக்கொல்லையை சேர்ந்த சசிகலா (16). பிளஸ்-2 படித்து வருகிறார்.

    ஆசிரியர் பன்னீர்செல்வத்துக்கும், மாணவி சசிகலாவுக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது. கடந்த 4.6.17 அன்று பன்னீர்செல்வம் ஆசைவார்த்தை கூறி மாணவி சசிகலாவை திருப்பதிக்கு கடத்திசென்று திருமணம் செய்துகொண்டார். பின்னர் அவர் மாணவியை தனது வீட்டுக்கு அழைத்து வந்து குடும்பம் நடத்திவந்தார்.

    இந்த தகவல் அவரது மனைவி கார்த்திகாவுக்கு தெரியவந்தது. இதுகுறித்து அவர் பண்ருட்டி அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்தார். அதில் மாணவி சசிகலாவுக்கு 16 வயது தான் ஆகிறது. ஆனால் அவரை எனது கணவர் பன்னீர்செல்வம் திருமணம் செய்துள்ளார். இது சட்டப்படி குற்றம். எனது கணவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியிருந்தார். இதனைத் தொடர்ந்து போலீசார் மாணவி சசிகலாவை மீட்டு கடலூர் குழந்தைகள் நல காப்பகத்தில் சேர்த்தனர்.

    இந்தநிலையில் பண்ருட்டி மகளிர் போலீசார் மாணவியை கடத்தி திருமணம் செய்த ஆசிரியர் பன்னீர் செல்வம் மீது வழக்குபதிவு செய்துள்ளனர். இதுபற்றி தகவல் அறிந்ததும் ஆசிரியர் தப்பி ஓடிவிட்டார். அவரை போலீசார் தேடிவருகின்றனர்.

    மாணவியை கடத்தி ஆசிரியர் திருமணம் செய்து கொண்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
    திட்டக்குடி அருகே லாரி மீது பஸ் மோதிய விபத்தில் 2 பேர் பலியாகினர். படுகாயம் அடைந்த 15 பேரையும் பெரம்பலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
    திட்டக்குடி:

    சென்னை தாம்பரத்தில் இருந்து நேற்று இரவு 1 மணியளவில் அரசு பஸ் ஒன்று திருச்சி நோக்கி புறப்பட்டது. பஸ்சில் 40-க்கும் மேற்பட்ட பயணிகள் இருந்தனர். இந்த பஸ்சை கள்ளக்குறிச்சி அருகே உள்ள கச்சிராயப்பாளையத்தை சேர்ந்த அரசுகாரன் (வயது 42) ஓட்டி வந்தார்.

    இன்று காலை 6-30 மணியளவில் அந்த பஸ் வேகமாக கடலூர் மாவட்டம் திட்டக்குடி அருகே வெங்கனூர் பஸ் நிறுத்தம் அருகே வந்து கொண்டிருந்தது. அப்போது திடீரென்று முன்னால் சென்ற மணல் லாரி மீது பயங்கரமாக மோதியது. விபத்தில் பஸ்சின் ஒரு பகுதி முழுவதும் பலத்த சேதம் அடைந்தது.

    இதில் பஸ்சில் வந்த செங்கல்பட்டை சேர்ந்த கண்டக்டர் மூர்த்தி (40), சென்னையை சேர்ந்த ஆட்டோ டிரைவர் ராஜா (35) ஆகியோர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பரிதாபமாக இறந்தனர். மேலும் இந்த விபத்தில் பஸ்சில் இருந்த 15 பேர் படுகாயம் அடைந்தனர்.

    இந்த விபத்து குறித்து தகவல் அறிந்ததும் ராமநத்தம் போலீசார் விரைந்து சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர். படுகாயம் அடைந்த 15 பேரையும் பெரம்பலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களில் 6 பேர் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. விபத்தில் இறந்த மூர்த்தி, ராஜா ஆகியோரின் உடல்களை மீட்டு திட்டக்குடி அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

    இந்த விபத்தால் அந்த பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
    புதுச்சேரியில் விதிமுறைகளுக்குட்பட்டு தான் நியமன எம்.எல்.ஏ.க்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர் என்று மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் கூறினார்.
    நெல்லிக்குப்பம்:

    கடலூர் மாவட்டம் நெல்லிக்குப்பத்தை அடுத்த அழகியநத்தம் கிராமத்தில் பா.ஜனதா கட்சி சார்பில் புதிய உறுப்பினர் சேர்க்கை நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு புதிய உறுப்பினர் சேர்க்கைக்கான படிவங்களை வழங்கினார்.

    தமிழகத்தில் பா.ஜனதா கட்சி மிக வேகமாக வளர்ந்து வருகிறது. மோடியின் 3 ஆண்டு சாதனைகள் கிராமங்கள் தோறும் தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது. மத்தியில் ஊழலற்ற ஆட்சி, நேர்மையான ஆட்சி நடக்கிறது.

    தமிழகத்தில் லஞ்சம் பெருகி விட்டது என்று நடிகர் கமல்ஹாசன் கூறியதற்கு பாராட்டு தெரிவித்துக்கொள்கிறேன். கிராம மக்களிடையே ஊழல், லஞ்சம் பற்றிய விழிப்புணர்வு வந்து விட்டது. இலவசங்கள் ஒரு வகையில் லஞ்சம் என்பதை மக்கள் புரிந்து உள்ளனர்.

    மத்திய அரசு எக்காரணத்தை கொண்டும் அ.தி.மு.க. ஆட்சியையோ, அதிகாரத்தையோ பறிப்பதற்கு தயாராக இல்லை. ஆனால் மாறாக ஒரு கட்சி என்கிற முறையில் பா.ஜ.க. தமிழகத்தில் உள்ள கட்சிகளை மிஞ்சி வருவதற்கு நாங்கள் முயற்சி செய்து வருகிறோம். அதில் வெற்றி பெற்று வருகிறோம்.



    புதுச்சேரியில் நியமன எம்.எல்.ஏ.க்களை மத்திய அரசின் ஆலோசனை பெற்றே நியமிக்க வேண்டும். அதுதான் நடந்து உள்ளது. மேலும் விதிமுறைகளுக்கு உட்பட்டு தான் நியமன எம்.எல்.ஏ.க்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர். அதனை மதிக்க வேண்டும் என்பது மாநில அரசின் கடமை. மேலும் மாநில அரசு தான் நியமன உறுப்பினர்களை நியமிக்க வேண்டும் என்றால் எதற்காக நியமன உறுப்பினர்களை நியமிக்க காலதாமதம் செய்தார்கள்? அதில் மத்திய அரசின் ஆலோசனை பெற்று தான் நடக்க வேண்டும்.

    இவ்வாறு பொன்.ராதாகிருஷ்ணன் கூறினார்.

    கடலூர் முதுநகர் பகுதியில் சாராயம் விற்ற பெண்ணை கைது செய்யாத ஏட்டுகள் 2 பேரை சஸ்பெண்டு செய்து போலீஸ் சூப்பிரண்டு விஜயகுமார் உத்தரவிட்டார்.
    கடலூர்:

    கடலூர் முதுநகர் பகுதியில் புதுச்சேரியில் இருந்து சாராயம் மற்றும் மதுபாட்டில்களை கடத்தி வந்து விற்பனை செய்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு விஜயகுமார் உத்தரவிட்டார்.

    கடலூர் சிப்காட் மதுவிலக்கு அமலாக்க பிரிவு போலீசார் கடலூர் முதுநகர் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.

    அப்போது சாராயம் விற்ற ஒரு பெண்ணை, போலீசார் பிடித்து போலீஸ் நிலையத்துக்கு கொண்டு வந்தனர். அந்த பெண் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து கைது செய்யவில்லை. அவரிடம் இருந்த சாராயத்தை பறிமுதல் செய்யாமல் அவரை திருப்பி அனுப்பி விட்டனர்.

    இது பற்றி போலீஸ் உயர் அதிகாரிகள் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டது. இதுதொடர்பாக விசாரணை நடத்தப்பட்டது. இதில் சாராயம் விற்றபோது பிடிபட்ட பெண்மீது வழக்கு பதிவுசெய்து அவரை கைது செய்யாமல் விடுவித்ததற்கு மதுவிலக்கு அமலாக்க பிரிவு போலீஸ் நிலைய ஏட்டுகள் சரவணன், செந்தில்குமார் ஆகியோர் காரணம் என தெரியவந்தது. அவர்கள் 2 பேரையும் சஸ்பெண்டு செய்து போலீஸ் சூப்பிரண்டு விஜயகுமார் உத்தரவிட்டார்.

    சிதம்பரத்தில் காங்கிரஸ் கட்சி ஆலோசனை கூட்டத்தில் இரு கோஷ்டியினரிடையே ஏற்பட்ட மோதலில் 8 பேரை போலீசார் கைது செய்தனர்.
    சிதம்பரம்:

    சிதம்பரத்தில் காங்கிரஸ் கட்சி ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. அப்போது இரு கோஷ்டியினரிடையே மோதல் ஏற்பட்டது. இதில் இருதரப்பினரும் ஒருவரையொருவர் ஆபாசமாக திட்டி, தாக்கி கொண்டனர்.

    மேலும் கட்சி நிர்வாகியின் கார் கண்ணாடியும் அடித்து நொறுக்கப்பட்டது. இது தொடர்பாக கட்சியின் மாநில எஸ்.சி., எஸ்.டி. பிரிவு நிர்வாகி மணிரத்தினத்தின் ஆதரவாளர் ஜோசப்டென்சன் சிதம்பரம் நகர போலீசில் புகார் செய்தார்.

    இதையொட்டி தெற்குமாவட்ட காங்கிரஸ் கட்சி தலைவர் விஜயசுந்தரம் உள்பட 3 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். அதில் எம்.ஜி.ஆர். தோட்டம் செந்தில்குமார்(55), கோழிபள்ளம் தமிழரசன்(48) ஆகிய 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

    இதேபோல், விஜயசுந்தரத்தின் ஆதரவாளர் புவனேஷ் கொடுத்த புகாரின் பேரில் மணிரத்தினம் உள்பட 7 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதில் ஜோசப்டென்சன்(43), தயாளன்(30), வஞ்சிதேவன்(28), தங்கத்துரை(35), கருணாநிதி(35), குமார்(33) ஆகிய 6 பேரை போலீசார் கைது செய்தனர்.

    சிதம்பரம் குடோனில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த ரூ.2 லட்சம் மதிப்புள்ள புகையிலை பொருட்களை போலீசார் பறிமுதல் செய்து நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.
    சிதம்பரம்:

    சிதம்பரம் ஓமகுளம் பஸ் நிறுத்தம் அருகே உள்ள ஒரு குடோனில் புகையிலை பொருட்கள் பதுக்கி வைத்து மாவட்டத்தில் உள்ள கடைகளுக்கு விற்பனை செய்யப்பட்டு வருவதாக சிதம்பரம் நகர போலீசாருக்கு புகார் சென்றது. இதையடுத்து சிதம்பரம் உதவி போலீஸ் சூப்பிரண்டு நிஷா தலைமையில் இன்ஸ்பெக்டர் அம்பேத்கர், பயிற்சி சப்–இன்ஸ்பெக்டர் புகழேந்தி மற்றும் போலீசார் நேற்று அந்த குடோனுக்கு சென்று அதிரடியாக சோதனை நடத்தினர்.

    அப்போது அங்கு அரசால் தடை செய்யப்பட்ட குன்கா, பான்பராக் உள்ளிட்ட புகையிலை பொருட்கள் விற்பனைக்காக பதுக்கி வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

    இதையடுத்து அந்த புகையிலை பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர். அதன் மதிப்பு சுமார் ரூ.2 லட்சம் ஆகும். மேலும் புகையிலை பொருட்களை பதுக்கி வைத்திருந்தது தொடர்பாக சிதம்பரம் கொத்தவால் தெருவை சேர்ந்த முகமது மைதீன்(வயது 50) என்பவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    காட்டுமன்னார்கோவில் அருகே கல்லூரி உதவி பேராசிரியை மாயமானார். இது குறித்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    காட்டுமன்னார்கோவில்:

    கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் அருகே உள்ள மழுவத்தேரி பகுதியை சேர்ந்தவர் வீரபாண்டியன், விவசாயி. இவரது மனைவி அனிதா. இவர்களுக்கு அபிலா (வயது 25) என்ற மகள் உள்ளார்.

    அபிலா, நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டில் உள்ள விடுதியில் தங்கி அங்குள்ள ஒரு தனியார் கல்லூரியில் உதவி பேராசிரியையாக பணியாற்றி வந்தார். கடந்த சில நாட்களுக்கு முன்பு விடுமுறையில் மழுவத்தேரி பகுதியில் உள்ள தனதுவீட்டுக்கு அபிலா வந்தார், விடுமுறை முடிந்ததும் மீண்டும் கல்லூரிக்கு சென்றார்.

    அதன் பின்பு அவர் பெற்றோரிடம் செல்போனில் பேசவில்லை. இதனால் கவலையடைந்த பெற்றோர், அபிலாவின் செல்போன் எண்ணுக்கு தொடர்பு கொண்டனர். ஆனால் அவரிடம் பேச முடியவில்லை.

    சந்தேகமடைந்த அவர்கள் கல்லூரிக்கு சென்றனர். அங்கிருந்த நிர்வாகிகளிடம் எனது மகள் கல்லூரிக்கு வந்தாரா? என்று கேட்டனர். ஆனால் கல்லூரி நிர்வாகம், விடுமுறை முடிந்த பின்னர் அபிலா கல்லூரிக்கு மீண்டும் பணிக்கு வரவில்லை என்று தெரிவித்தனர். இதைத்தொடர்ந்து அபிலாவை அவரது பெற்றோர் பல இடங்களில் தேடினர். எங்கும் அவரை காணவில்லை.

    இதையடுத்து அவரது தாய் அனிதா காட்டுமன்னார்கோவில் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் உதவி பேராசிரியை அபிலாவை யாராவது கடத்தி சென்றார்களா? அல்லது வேறு எங்கும் அவர் சென்றாரா? என்பது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரனை நடத்தி வருகின்றனர்.

    கல்லூரி உதவி பேராசிரியை மாயமான சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    நெய்வேலியில் தந்தை, மகன் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோதத்தை ஏற்படுத்தியுள்ளது.

    கடலூர்:

    கடலூர் மாவட்டம் நெய்வேலி புதுநகர் 21-வது வட்டம் இனாயத் தெருவைவச் சேர்ந்தவர் ராஜீ(வயது 58). மரவேலை செய்யும் ஆசாரியாக வேலை பார்த்து வந்தார். இவருக்கு சரவணகுமார்(22) என்ற மகனும், ஒரு மகளும் உள்ளனர். மகளுக்கு திருமணம் முடிந்து கோவில் பட்டியில் வசித்து வருகிறார்.

    ராஜீவின் மனைவி கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார். இதனால் ராஜீ தன் மகன் சரவணகுமாருடன் வீட்டில் வசித்து வந்தார். சரவணக்குமார் தன் தந்தைக்கு உதவியாக மரவேலை செய்து வந்தார்.

    இந்தநிலையில் மகன் சரவணக்குமாரை பார்த்து வெளியே சென்று வேலைக்கு செல்ல வேண்டியது தானே என ராஜீ பலமுறை கூறினார். இதனால் மனமுடைந்த சரவணக்குமார் வாழ்க்கையில் விரக்தி அடைந்தார். நேற்று இரவு வீட்டில் யாரும் இல்லாத போது சரவணக்குமார் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    அப்போது வெளியே சென்று வீட்டுக்கு வந்த ராஜீ தன் மகன் சரவணக்குமார் தூக்கில் பிணமாக தொங்கியதை பார்த்து அதிர்ச்சி யடைந்தார். கதறி அழுதார். பின்னர் அவர் ஒரு டைரியில், என் மகன் இறந்த பிறகு எனக்கு இந்த உலகில் வாழ விருப்பம் இல்லை. என் மரணத்துக்கு யாரும் காரணம் கிடையாது என எழுதினார். அதன் பின்னர் ராஜீவும் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    இந்நிலையில் இன்று காலை வீட்டின் கதவு வெகு நேரமாக திறக்கப்படாமல் இருப்பதை கண்டு அக்கம் பக்கத்தினர் சந்தேகம் அடைந்தனர். ஜன்னல் வழியாக திறந்து பார்த்தபோது தூக்கில் தந்தை-மகன் பிணமாக தொங்கியதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.

    இதுகுறித்து நெய்வேலி தெர்மல் போலீசுக்கு தகவல் கொடுத்தனர். போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து ராஜீ, சரவணக்குமார் பிணத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கடலூர் அரசு ஆஸ்பத் திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    தந்தை-மகன் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    ×