search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "குறிஞ்சிப்பாடி"

    குறிஞ்சிப்பாடியில் ஒருதலை காதலால் ஆசிரியையை கொன்ற வாலிபர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. #KurinjipadiMurder

    உளுந்தூர்பேட்டை:

    கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி பழைய ஆஸ்பத்திரி வீதியை சேர்ந்தவர் சுப்பிரமணியன். இவரது மகள் ரம்யா (வயது 22). இவர் எம்.சி. படித்துள்ளார். ரம்யா குறிஞ்சிப்பாடி கடைவீதியில் உள்ள ஒரு தனியார் மெட்ரிக்குலேசன் பள்ளியில் ஆசிரியையாக கடந்த 2 மாதங்களுக்கு முன்பு பணியில் சேர்ந்தார்.

    விருத்தாசலத்தை அடுத்த விருத்தகிரி குப்பத்தை சேர்ந்த அரங்கண்ணல் மகன் ராஜசேகர் (23). இவர் டிப்ளமோ படித்துவிட்டு கடலூர் சிப்காட்டில் உள்ள தனியார் கம்பெனியில் வேலை பார்த்து வந்தார். கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு ரம்யா கடலூரில் உள்ள தனியார் கல்லூரியில் படித்தபோது பஸ்சில் சென்று வந்துள்ளார். அப்போது ராஜசேகர், ரம்யாவை பார்த்துள்ளார். அப்போது அவருக்கு ரம்யா மீது காதல் ஏற்பட்டது. அவரை ஒருதலையாக காதலித்தார்.

    தன்னை காதலிக்கும்படி ராஜசேகர் ரம்யாவிடம் பலமுறை வற்புறுத்தி உள்ளார். ஆனால் அவர் காதலை ஏற்க மறுத்ததால் ரம்யா மீது ஆத்திரம் அடைந்தார். தன்னை காதலிக்க மறுத்ததால் கடந்த 2 நாட்களுக்கு முன்பு குறிஞ்சிபாடி பள்ளி வளாகத்தில் புகுந்து ஆசிரியை ரம்யாவை கழுத்தை அறுத்து கொன்று விட்டு ராஜசேகர் தலைமறைவாகிவிட் டார்.

    இதுகுறித்து குறிஞ்சிப்பாடி போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தினர். ராஜசேகரை பிடிக்க மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சரவணன் உத்தரவின் பேரில் நெய்வேலி துணை போலீஸ் சூப்பிரண்டு சரவணன், இன்ஸ்பெக்டர்கள் ராமதாஸ், மீனாலட்சுமி, டெல்டா பிரிவு சப்-இன்ஸ்பெக்டர் நடராஜன் ஆகியோர் தலைமையில் மொத்தம் 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டது. இந்த தனிப்படை போலீசார் ராஜசேகரின் சொந்த ஊரான விருத்தகிரி குப்பத்துக்கு சென்று விசாரணை மேற்கொண்டனர்.

    பின்னர் ராஜசேகரின் செல்போன் சிக்னல் மூலம் அவர் பதுங்கி இருக்கும் இடத்தை கண்டறியும் முயற்சியில் இறங்கினர். அதன்படி அவரது செல்போன் எண்ணை தொடர்பு கொண்டனர். அப்போது பண்ருட்டி அருகே உள்ள சேந்தநாடு காட்டுபகுதியை டவர் காட்டியது. இந்த இடம் விழுப்புரம் மாவட்டம் திருநாவலூர் அருகே அமைந்துள்ளது. எனவே ராஜசேகர் அங்குள்ள காட்டு பகுதியில் பதுங்கி இருக்கலாம் என்று போலீசார் சந்தேகம் அடைந்தனர்.

    இதனைத்தொடர்ந்து நேற்று காலை டெல்டாபிரிவு சப்-இன்ஸ்பெக்டர் நடராஜன் மற்றும் 50-க்கும் மேற்பட்ட போலீசார் அந்த காட்டு பகுதிக்கு சென்றனர். ராஜசேகரின் தந்தை அரங்கண்ணலையும் உடன் அழைத்து சென்றனர். அவர்கள் நேற்று மாலை 5 மணிவரை அந்த பகுதியில் சல்லடைபோட்டு தேடினர். எங்கும் ராஜசேகரை கண்டுபிடிக்க முடியவில்லை.

    இன்று காலை தனிப்படை போலீசார் மீண்டும் 2-வது நாளாக காலை அங்கு சென்று தேடினர். அங்குள்ள கிணறு மற்றும் குளங்களில் ராஜசேகர் விழுந்து தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என்ற கோணத்திலும் தேடினர்.

    இந்த நிலையில் விழுப்புரம் மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே உள்ள தொப்புளான்குளம் முந்திரிகாட்டு பகுதிக்கு இன்று காலை அந்த பகுதியை சேர்ந்த சிலர் சென்றனர். அப்போது அங்குள்ள ஒரு மரத்தில் வாலிபர் ஒருவர் தூக்கில் பிணமாக தொங்குவதை பார்த்து அதிர்ச்சியடைந்தனர்.

    உடனே அவர்கள் இதுகுறித்து திருநாவலூர் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். அங்கு தூக்கில் தொங்கிய வாலிபர் பிணத்தை மீட்டனர். அருகில் மோட்டார் சைக்கிள் ஒன்று கிடந்தது.

    இதனைத்தொடர்ந்து போலீசார் தூக்கில் தொங்கிய வாலிபர் யார் என்று விசாரித்தபோது அது குறிஞ்சிப்பாடியில் ஆசிரியை ரம்யாவை கொன்ற வாலிபர் ராஜசேகர் என்பது தெரியவந்தது. உடனடியாக திருநாவலூர் போலீசார் இதுகுறித்து குறிஞ்சிப்பாடி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

    அதன்பேரில் குறிஞ்சிப்பாடி இன்ஸ்பெக்டர் ராமதாஸ் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். அங்கு தூக்கில் தொங்கிய ராஜசேகரின் உடலை மீட்டனர். மேலும் அங்கு கிடந்த மோட்டார் சைக்கிளையும் கைப்பற்றினர்.

    போலீசார் நடத்திய விசாரணையில் ஆசிரியை ரம்யாவை கொன்ற வாலிபர் தன்னை போலீசார் தீவிரமாக தேடுவதை அறிந்து முந்திரி மரத்தில் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்தது.

    ஆசிரியை கழுத்தை அறுத்து கொன்ற வாலிபர் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. #KurinjipadiMurder

    ×