என் மலர்
கடலூர்
ஸ்ரீமுஷ்ணம் அருகே உள்ள பாளையங்கோட்டை கீழ்பாதி கிராமத்தை சேர்ந்தவர் நாராயணசாமி (வயது 66) விவசாயி. இவர் தனது வீட்டுக்கு தேவையான பொருட்களை வாங்குவதற்காக அதேப்பகுதியில் உள்ள கடைக்கு நடந்து சென்றார். பின்னர் பொருட்கள் வாங்கி விட்டு வீட்டுக்கு புறப்பட்டார்.
சந்தைதோப்பு அருகே உள்ள பாளையங்கோட்டை-ஸ்ரீமுஷ்ணம் சாலையில் நாராயணசாமி நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அதே வழியாக மண் லோடு ஏற்றி கொண்டு டிராக்டர் வந்து கொண்டிருந்தது. கண் இமைக்கும் நேரத்தில் அந்த டிராக்டர் எதிர்பாராதவிதமாக நடந்து சென்ற நாராயணசாமி மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட நாராயணசாமி தலையில் அடிப்பட்டு பலத்த காயம் அடைந்தார்.
அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு சிதம்பரம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் அங்கிருந்து மேல்சிகிச்சைக்காக புதுவை ஜிப்மர் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனளிக்காமல் நாராயணசாமி பரிதாபமாக இறந்தார்.
விபத்து குறித்து சோழத்தரம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சித்ரா வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
குறிஞ்சிப்பாடி:
கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே உள்ள பாலூரைச் சேர்ந்தவர் அஜித் (வயது 21). கூலி தொழிலாளி. இவர் கடந்த சில நாட்களாக குறிஞ்சிப்பாடி பகுதியில் கரும்பு வெட்டும் தொழிலில் ஈடுபட்டு வந்தார்.
அப்போது அவர் குறிஞ்சிப்பாடி அருகே உள்ள பொட்டவெளிகாலனி பகுதிக்கு சென்றார். அங்கு 10 வயது சிறுமி ஒருவர் தெருவில் விளையாடி கொண்டிருந்தார்.
அஜித், அந்த சிறுமியிடம் பேசி அருகே உள்ள கரும்பு தோட்டத்துக்கு அழைத்துச் சென்றார். அங்கு சிறுமியை அவர் பாலியல் பலாத்காரம் செய்ய முயற்சி செய்தார்.
இதனால் அந்த சிறுமி அலறினாள். அலறல் சத்தம் கேட்ட அக்கம் பக்கத்தினர் அங்கு விரைந்து வந்தனர். இதைப் பார்த்த அஜித் அங்கிருந்து தப்பி ஓடி விட்டார்.
இது குறித்து சிறுமி தனது தந்தையிடம் கூறினாள். அவர் குறிஞ்சிப்பாடி போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து அஜித்தை கைது செய்தனர். அவரிடம் தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.
நெய்வேலி என்.எல்.சி.நிறுவனத்துக்கு நிலம் கொடுத்த 1000-க்கும் மேற்பட்டோர் ஒப்பந்த தொழிலாளர்களாக பணியாற்றி வருகிறார்கள். இவர்களுக்கு என்.எல்.சி. நிறுவனம் மாதத்தில் 29 நாட்கள் பணி வழங்கி வந்தது.
இந்தநிலையில் திடீரென்று பணிநாட்களை 19 நாட்களாக குறைத்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஒப்பந்த தொழிலாளர்கள் கடந்த 12-ந்தேதி முதல் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இவர்களது போராட்டம் குறித்து புதுச்சேரியில் முத்தரப்பு பேச்சுவார்த்தை நடைபெற்றது. இந்த பேச்சுவார்த்தை தோல்வியில் முடிவடைந்தது. இதையடுத்து ஒப்பந்த தொழிலாளர்கள் சங்க கூட்டமைப்பு நிர்வாகிகள் அவசர கூட்டம் நடத்தினர்.
இதில் அடுத்தக்கட்டமாக 21-ந்தேதி குடும்பத்துடன் உண்ணாவிரத போராட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டது.
அதன்படி நெய்வேலி தெர்மல் பஸ்நிலையம் கியூ.பாலம் அருகே ஒப்பந்த தொழிற்சங்க கூட்டமைப்பின் சார்பில் இன்று குடும்பத்துடன் உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது.
போராட்டதுக்கு சி.ஐ.டி.யூ.சங்க நிர்வாகி சக்கரபாணி தலைமை தாங்கினார். போராட்டத்தை தொ.மு.ச. தலைவர் வீர.ராமச்சந்திரன் தொடங்கி வைத்து பேசினார். இதில் சி.ஐ.டி.யூ., அண்ணா தொழிலாளர் ஊழியர் சங்கம், தொழிலாளர் விடுதலை முன்னணி பாரதிய மஸ்தூர் சங்கம், ஐ.என்.டி.யூ.சி., தமிழக வாழ்வுரிமை கட்சி, பாட்டாளி மக்கள் கட்சி உள்பட பல்வேறு தொழிற்சங்கங்களை சேர்ந்த நிர்வாகிகள் உள்பட 1000 பேர் உண்ணாவிரத போராட்டத்தில் கலந்து கொண்டனர்.
இந்த உண்ணாவிரத போராட்டத்தில் ஏராளமான பெண்கள் கைக்குழந்தைகளுடன் பங்கேற்றனர். போராட்டத்தின் முடிவில் அடுத்த கட்ட போராட்டம் நடத்துவது குறித்து நிர்வாகிகள் முடிவு செய்கிறார்கள்.
இந்தநிலையில் என்.எல்.சி.ஒப்பந்த தொழிலாளர்கள் சங்க கூட்டமைப்பு நிர்வாகிகள் தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி என்.எல்.சி.மனிதவள துறைப்பொதுமேலாளர் குருநாதனிடம் நேற்று வேலை நிறுத்த நோட்டீசை வழங்கினர்.
பண்ருட்டி அருகே காதலர்களை அபகரித்ததால் நர்சு திவ்யாவை காதலனுடன் சேர்ந்து தோழி சித்ரா கொலை செய்து கெடிலம் ஆற்றங்கரையில் புதைத்தார். இந்தசம்பவம் குறித்து சித்ராவிடம் காடாம்புலியூர் போலீசார் விசாரித்தனர்.
பின்னர் சப்-இன்ஸ்பெக்டர் ஜெயதேவி, பெண் போலீஸ் கெஜலட்சுமி உள்பட 4 பேர் திவ்யா கொலை செய்யப்பட்டு புதைக்கப்பட்ட கெடிலம் ஆற்றங்கரைக்கு சித்ராவை அழைத்து சென்றனர். அங்கு திவ்யா புதைக்கப்பட்ட இடத்தை சித்ரா அடையாளம் காட்டினார்.
மேலும் திவ்யா வைத்திருந்த செல்போன் மற்றும் பையை ஒரு கிணற்றின் அருகே வைத்திருப்பதாக சித்ரா போலீசாரிடம் கூறினார். இதையடுத்து சித்ராவை போலீசார் பாதுகாப்பாக அங்கு அழைத்து சென்றனர். அப்போது சித்ரா திடீரென்று போலீசாரின் கண் எதிரே அங்குள்ள கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டார்.
தீயணைப்பு படையினர் கடும் போராட்டத்துக்கு பின்பு அவரது உடலை மீட்டு விழுப்புரம் முண்டியம்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
போலீஸ் பிடியிலிருந்து தப்பிஓடி சித்ரா தற்கொலை செய்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதுதொடர்பாக கடலூர் மாவட்ட முதன்மை நீதிபதி உத்தரவின்பேரில் பண்ருட்டி குற்றவியல் நீதிமன்ற நீதிபதி கணேஷ் விசாரணை நடத்த முடிவு செய்தார். இன்று அவர் முண்டியம்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு சென்றார்.
சித்ராவை விசாரணைக்காக அழைத்து சென்ற போலீஸ் சப்-இன்ஸ் பெக்டர் ஜெயதேவி, பெண் போலீஸ் கெஜலெட்சுமி உள்பட 4 பேரிடம் விசாரணை நடத்தினார்.
தனது காதலர்களை அபகரித்ததால் நர்சு திவ்யாவை கிணற்றில் தள்ளி கொலை செய்ய சித்ரா முடிவு செய்தார். அதற்காக கீழ்காங்கயம் குப்பத்தில் உள்ள ஒரு கிணற்றை தேர்ந்தெடுத்தார்.
இதற்காக தனது காதலன் மோகனுடன் திவ்யாவை மோட்டார் சைக்கிளில் 8-ந் தேதி காலை அந்த கிணற்றுக்கு அழைத்து சென்றார். கிணற்றில் தள்ளி கொன்றால் துர்நாற்றம் வீசும், அதன் மூலம் போலீசார் கண்டுபிடித்து விடுவார்கள் என நினைத்தார். எனவே அந்த திட்டத்தை கைவிட்டார். எனவே அடுத்த திட்டத்தை கையில் எடுத்தார்.
இதையடுத்து மதுவில் விஷம் கலந்து கொடுத்து கொல்ல தீர்மானித்தார். அதற்காக கெடிலம் ஆற்றங்கரைக்கு அழைத்து சென்று மதுவில் விஷம் கலந்து கொடுத்து நர்சு திவ்யாவை கொலை செய்தார். இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி சித்ராவை போலீசார் கைது செய்தனர். அப்போது அவரிடம் திவ்யா பயன்படுத்திய பை மற்றும் செல்போன் எங்கே? என்று கேட்டனர்.
அப்போது கீழ்காங்கயம் குப்பத்தில் உள்ள தங்கராசு என்பவருக்கு சொந்தமான நிலத்தில் புதைத்து வைத்திருப்பதாக கூறினார். உடனே போலீசார் அவரை அங்கு அழைத்து சென்றனர்.
தனது தோழி திவ்யாவை தள்ளி கொல்ல நினைத்த கிணற்றில் தானும் குதித்து தற்கொலை செய்ய முடிவு செய்தார். அதன்படி போலீசாரை அந்த கிணற்று பகுதிக்கு அழைத்து சென்றார். அப்போது சித்ரா போலீஸ் பிடியில் இருந்து தப்பி ஓடினார். அவரை பிடிக்க போலீசார் துரத்தினர். யாரும் எதிர்பாராத வகையில் அங்குள்ள பாழுங்கிணற்றில் திடீரென்று சித்ரா குதித்தார்.
அந்த கிணற்றில் தண்ணீர் இல்லாததால் பலத்த காயம் அடைந்த சித்ரா அதே இடத்தில் பரிதாபமாக இறந்தார். அந்த கிணறு 150 அடி ஆழம் கொண்டதாகும். கிணற்றை யாரும் பயன்படுத்தவில்லை. மேலும் அந்த கிணற்றில் வெப்பம் அதிகம் இருந்தது. இதைத் தொடர்ந்து தற்கொலை செய்து கொண்ட சித்ராவின் உடலை மீட்க போலீசார் மற்றும் தீயணைப்பு படையினர் முடிவு செய்தனர்.
கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே உள்ள புலியூர் காட்டுசாகையை சேர்ந்தவர் சக்திவேல். இவரது மகள் திவ்யா (வயது 19). நர்சிங் படித்து முடித்து உள்ளார்.
சென்னையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் நர்சாக வேலை பார்த்து வந்தார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு திவ்யா வேலையை விட்டு நின்று விட்டார். பின்னர் அவர் பண்ருட்டி அடுத்த சாத்தமாம்பட்டில் உள்ள தனது சித்தி ஜெகதீஷ்வரி என்பவருடன் வசித்து வந்தார்.
திவ்யா முண்டியம்பாக்கத்தில் உள்ள கல்லூரியில் நர்சிங் படித்த போது அதே கல்லூரியில் படித்த கீழ்காங்கயன்குப்பத்தைச் சேர்ந்த சித்ரா என்பவருடன் அறிமுகமானார். பின்னர் இருவரும் நெருங்கிய தோழிகளாக ஆனார்கள். நர்சிங் படித்து முடித்த பின்னரும் அவர்களது நட்பு தொடர்ந்து நீடித்தது.
இந்த நிலையில் கடந்த மாதம் 8-ந்தேதி திவ்யா தனது சித்தியிடம் சென்னை செல்வதாக கூறி சென்றார். அதன் பின்னர் அவர் வீடு திரும்பவில்லை. இதனால் கவலை அடைந்த ஜெகதீஷ்வரி காடாம்புலியூர் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
அப்போது திவ்யா செல்போனில் யாருடன் பேசினார்? என்பது குறித்து விசாரித்த போது அவரது தோழி சித்ராவுடன் பேசியிருந்தது தெரிய வந்தது. இதையடுத்து சித்ராவை போலீசார் பிடித்து விசாரித்தனர். அப்போது அவர் தனது காதலனுடன் சேர்ந்து தோழி திவ்யாவை கொலை செய்து ஆற்றில் புதைத்ததாக கூறினார்.
இதைத்தொடர்ந்து போலீசார் சித்ராவை கைது செய்தனர். அப்போது திவ்யாவை கொலை செய்தது ஏன்? என்பது குறித்து சித்ரா பரபரப்பு வாக்குமூலம் அளித்தார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-
எனக்கு, திருவாம்பூரைச் சேர்ந்த தனியார் பஸ்சில் கண்டக்டராக பணியாற்றி வரும் மோகன் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது. நாங்கள் இருவரும் திருமணம் செய்து கொள்ளாமல் குடும்பம் நடத்தி வந்தோம்.
மேலும் எனக்கு ஆனந்தூரைச் சேர்ந்த விஜயராஜ் (22) என்பவருடனும் பழக்கம் ஏற்பட்டது. அவருடனும் நான் உல்லாசமாக இருந்து வந்தேன்.
இந்த நிலையில் எனது தோழி சித்ரா எனக்கு வேலை ஒன்றும் கிடைக்கவில்லை என்று என்னிடம் கூறினார். அப்போது நான் விஜயராஜை, திவ்யாவுக்கு அறிமுகம் செய்து வைத்தேன். பின்னர் திவ்யா எனக்கு தெரியாமல் விஜயராஜை தனிமையில் சந்தித்து அவருடன் நெருக்கமாக இருந்து வந்தாள்.
மேலும் அவள் எனது காதலன் மோகனுடனும் தொடர்பு வைத்து அவருடனும் நெருங்கி பழகி வந்தார். இது எனக்கு பிடிக்கவில்லை. இது தொடர்பாக சித்ராவிடம் எனது காதலர்களை விட்டு விடு. அவர்களிடம் பழகாதே என்று பலமுறை எச்சரித்தேன். ஆனால், திவ்யா அதை கேட்கவில்லை. எனக்கு தெரியாமல் மீண்டும் மீண்டும் அவர்களுடன் பேசி வந்தார்.
இதனால் ஆத்திரம் அடைந்த நான் திவ்யாவை கொலை செய்ய திட்டமிட்டேன். இது குறித்து எனது காதலன் மோகனிடம் கூறினேன். அவரும் இதற்கு சம்மதம் தெரிவித்தார். பின்னர் நான் திவ்யாவுக்கு போன் செய்து சென்னையில் வேலை வாங்கி தருகிறேன். உடனே பண்ருட்டிக்கு வா என்று கடந்த 8-ந்தேதி அழைத்தேன். திவ்யாவும் அதை நம்பி வந்தாள்.
பின்னர் மோகன், நான் (சித்ரா), திவ்யா ஆகிய 3 பேரும் பண்ருட்டியில் உள்ள ஒரு மது கடைக்கு சென்று 5 பீர் பாட்டில் வாங்கினோம். திவ்யாவை கொல்வதற்காக விஷ பாட்டிலும் வாங்கி வைத்திருந்தோம்.
பின்னர் திவ்யாவிடம் நாம் சென்னை செல்வதற்கு முன்பு கெடிலம் ஆற்றுக்கு சென்று உல்லாசமாக இருந்து விட்டு செல்லலாம் என்று கூறினேன். அதற்கு திவ்யா முதலில் மறுத்தாள். பின்னர் ஒத்துக்கொண்டாள்.
கெடிலம் ஆற்றங்கரை சென்ற நாங்கள் திவ்யாவுக்கு தெரியாமல் பீர் பாட்டிலில் விஷத்தை கலக்கினோம். அதன் பின்னர் திவ்யாவுக்கு மதுவை கொடுத்தோம். அவளும் வாங்கி குடித்தாள். அவளுடன் சேர்ந்து நாங்களும் மது குடிப்பது போல் நடித்தோம். மது குடித்த சிறிது நேரத்தில் திவ்யா மயங்கி விழுந்தாள்.
ஆனால், அவள் இறக்கவில்லை. இதனால் நான் எனது துப்பட்டாவால் அவளது கழுத்தை இறுக்கி கொலை செய்தேன். பின்னர் நானும், மோகனும் ஆற்றங்கரையில் குழி தோண்டி திவ்யாவின் பிணத்தை புதைத்தோம்.
திவ்யாவை கொலை செய்து விட்டு ஒன்றும் தெரியாதது போல் இருந்து வந்தேன். ஆனால், போலீசாரின் கிடுக்கிப்பிடி விசாரணையில் நான் சிக்கி கொண்டேன்.
இவ்வாறு சித்ரா கூறியுள்ளார்.
அதன்படி கொலை செய்து புதைக்கப்பட்ட திவ்யாவின் உடலை தாசில்தார் விஜய்ஆனந்த் முன்னிலையில் தோண்டி எடுக்கப்பட்டது.
பின்னர் ஆற்றில் வைத்தே புதுவை டாக்டர் குழுவினர் பிரேத பரிசோதனை செய்தனர். இதையடுத்து திவ்யாவின் உடல் பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது.
திவ்யாவை கொலை செய்த சித்ராவின் காதலன் மோகன் தலைமறைவாகி விட்டான். இதனை தொடர்ந்து அவனை பிடிக்க போலீஸ் சூப்பிரண்டு விஜயகுமார் தனிப்படை ஒன்று அமைத்தார்.
இந்த தனிப்படையில் டெல்டா போலீசார் இடம் பெற்றிருந்தனர். அவர்கள் தீவிர விசாரணை நடத்தினர். விசாரணையின் போது சித்ராவின் காதலன் மோகன் கோவையில் பதுங்கி இருப்பது தெரிய வந்தது.
நேற்று இரவு கோவை விரைந்து சென்ற தனிப்படையினர் அங்கு பதுங்கி இருந்த மோகனை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கடலூர் மாவட்டம் குள்ளஞ்சாவடி அருகே உள்ள புலியூர் காட்டு சாகையை சேர்ந்தவர் சக்திவேல். இவரது மகள் திவ்யா. இவர் பி.எஸ்.சி.நர்சிங் படித்து விட்டு சென்னையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் நர்சாக பணியாற்றி வந்தார்.
கடந்த மே மாதம் 8-ந் தேதி விடுமுறையில் பண்ருட்டி அருகே உள்ள சாத்தம்பட்டு கிராமத்தில் வசித்து வரும் தனது அக்காள் ஜெகதீஸ்வரி வீட்டுக்கு வந்திருந்தார். பின்னர் அவர் சென்னை செல்வதாக கூறிச் சென்றார். ஆனால் அவர் சென்னை செல்லவில்லை.
இதனைத்தொடர்ந்து அவரது தந்தை சக்திவேல் திவ்யாவை பல இடங்களில் தேடி பார்த்தார். எங்கும் அவரை காணவில்லை. இதுகுறித்து அவர் காடாம்புலியூர் போலீசில் புகார் செய்தார். இந்த வழக்கை துரிதப்படுத்தும் படி துணை போலீஸ் சூப்பிரண்டு சுந்தரவடிவேல் போலீசாருக்கு அறிவுரை வழங்கினார்.
அதன்பேரில் போலீசார் பல்வேறு கோணங்களில் மாயமான நர்ஸ் பற்றி விசாரணை நடத்தினர். மேலும் அவர் செல்போனில் யார்? யாரிடம் பேசினார் என்பது குறித்தும் விசாரணை நடத்தினர்.
விசாரணையில் பண்ருட்டி அருகே உள்ள திருவாமூர் கிராமத்தை சேர்ந்த அவரது தோழியிடம் திவ்யா பேசியது தெரியவந்தது. இதனைத்தொடர்ந்து போலீசார் அவரிடம் விசாரணை நடத்தியபோது திவ்யா கொலை செய்யப்பட்டு பண்ருட்டி அருகே காமாட்சி பேட்டை ஆற்றங்கரையில் பிணம் புதைக்கப்பட்டது தெரியவந்தது.
போலீசார் பிணத்தை தோண்டி எடுக்க முடிவு செய்துள்ளனர். அவரை கொலை செய்தது யார்? காதல் தகராறில் கொலை செய்யப்பட்டாரா? என போலீசார் விசாரணை நடத்தி கொலையாளிகளை தேடி வருகின்றனர்.
ஸ்ரீமுஷ்ணம்:
கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பு அருகே உள்ள டி.ஆதனூர் கிராமத்தை சேர்ந்தவர் கந்தசாமி(வயது 65). விவசாயி. இவரது மனைவி தையல் நாயகி(60). இவர்களுக்கு 2 மகன்கள், ஒரு மகள் உள்ளனர். அனைவருக்கும் திருமணம் ஆகிவிட்டது.மூத்தமகன் சிவானந்தம் மட்டும் அதே பகுதியில் குடும்பத்துடன் வசித்து வருகிறார்.
இந்த நிலையில் கந்தசாமி சில ஆண்டுகளுக்கு முன்பு புதிய வீடு ஒன்று கட்டினார். இதற்காக அவர் தனியார் நிறுவனத்திடம் கடன் வாங்கினார். அந்த கடனை தனியார் நிறுவனத்தினர் அவரிடம் கேட்டனர். அவர் தனது மகன்களை அந்த கடன் தொகையை தனியார் நிறுவனத்திடம் செலுத்துமாறு கூறினார்.
ஆனால் அவர்கள் அந்த பணத்தை தனியார் நிறுவனத்திடம் கொடுக்கவில்லை. இதனால் கடன் தொல்லை காரணமாக கந்தசாமியும், தையல் நாயகியும் மனம் வருந்தினர்.
இதுதொடர்பாக அவர்களுக்கிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. நேற்று மாலையிலும் தகராறு ஏற்பட்டது.
பின்னர் அவர்கள் தற்கொலை செய்ய முடிவு செய்தனர். நேற்று இரவு 7 மணியளவில் கந்தசாமியும், தையல்நாயகியும் தங்கள் காதில் விஷத்தை ஊற்றினர். சிறிது நேரத்தில் அவர்கள் இருவரும் மயங்கி விழுந்தனர்.
அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் அவர்களை மீட்டு சிதம்பரம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் வழியில் தையல் நாயகி இறந்து விட்டார். ஆஸ்பத்திரியில் கந்தசாமிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. அங்கு அவர் சிகிச்சை பலனின்றி பரிதாப இறந்தார்.
இந்தசம்பவம் குறித்து சேத்தியாத்தோப்பு போலீசில் புகார் செய்யப்பட்டது. அதன்பேரில் இன்ஸ்பெக்டர் வீரமணி வழக்குபதிவு செய்து விசா ரணை நடத்தி வருகிறார்.
கணவன்-மனைவி காதில் விஷம் ஊற்றி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும்சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
காட்டுமன்னார்கோவில் அருகே உள்ள ஓமாப்புலியூர் கொள்ளிடம் ஆற்றங் கரையில் இரவு நேரங்களில் மணல் கடத்தப்படுவதாக காட்டுமன்னார்கோவில் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதையொட்டி இன்ஸ்பெக்டர் ஷியாம்சுந்தர் தலைமையிலான போலீசார் நள்ளிரவில் ஓமாப்புலியூர் கொள்ளிடம் ஆற்றுப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர்.
அப்போது மணல் கடத்தி கொண்டு டிராக்டர் ஒன்று வந்து கொண்டிருந்தது. போலீசாரை பார்த்ததும் டிராக்டரை ஓட்டி வந்த டிரைவர் டிராக்டரில் இருந்து இறங்கி தப்பி ஓடினார். போலீசார் அந்த டிராக்டரை பறிமுதல் செய்தனர்.
இது குறித்து போலீசார் விசாரணை நடத்தியதில் டிராக்டரில் மணல் கடத்தி வந்தவர் குணவாசல் கிராமத்தை சேர்ந்த தமிழ்சேகரன் (வயது 33) என்பது தெரிய வந்தது. இதையடுத்து அவரை போலீசார் தேடி வருகின்றனர்.
கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் தெற்குஇருப்பு பகுதியை சேர்ந்தவர் இந்திராணி. இவரது மகன் இளைய ராஜா (வயது 37). மாற்றுத் திறனாளி.
நேற்று இரவு இந்திராணி சமையல் செய்து கொண்டிருந்தார். அப்போது கியாஸ் கசிவு ஏற்பட்டு கூரை வீட்டில் தீப்பிடித்தது.
இதையறிந்த இந்திராணி வீட்டில் படுத்திருந்த தனது மகன் இளையராஜாவை தூக்கி கொண்டு வெளியே ஓடி வந்து உயிர் தப்பினார். அவரது அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடிவந்து தீயை அணைக்க முயன்றனர்.
இது குறித்து காட்டுமன்னார்கோவில் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து தீயணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.
அப்போது வீட்டில் இருந்த சமையல் கியாஸ் சிலிண்டர் பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறியது. இதனால் தீ கொழுந்து விட்டு எரிய தொடங்கியது. தீயணைப்பு வீரர்கள் கடுமையாக போராடி தீயை அணைத்தனர்.
இந்த தீ விபத்தில் வீட்டில் இருந்த டெலிவிஷன், பீரோ, கட்டில் மற்றும் துணிமணிகள் எரிந்து சேதமானது.
இது குறித்து காட்டுமன்னார்கோவில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
வீடு தீப்பிடித்து எரிந்த போது சிலிண்டர் வெடித்ததால் அந்த பகுதி முழுவதும் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
நெய்வேலி என்.எல்.சி. நிறுவனத்துக்கு நிலம், வீடு கொடுத்தவர்கள் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பல்வேறு பிரிவுகளில் ஒப்பந்த தொழிலாளர்களாக பணியாற்றி வருகிறார்கள்.
இவர்களுக்கு என்.எல்.சி. நிர்வாகம் ஒப்பந்த அடிப்படையில் மாதத்தில் 29 நாட்கள் பணி வழங்கி வந்தது. இந்த நிலையில் வேலை நாட்களை 19 நாட்களாக குறைத்தது.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஒப்பந்த தொழிலாளர்கள் கடந்த 12-ந் தேதி முதல் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் அவர்கள் பணி அலுவலகம் முற்றுகை, அதிகாரிகள் சிறைபிடிப்பு போன்ற பல்வேறு போராட்டங்களை நடத்தினர்.
இன்று 8-வது நாளாக அவர்கள் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த நிலையில் இன்று புதுவையில் உள்ள உதவி தொழிலாளர் நல ஆணையர் கணேசன் தலைமையில் போராட்டம் தொடர்பாக முத்தரப்பு பேச்சுவார்த்தை நடைபெறுகிறது.
இந்த பேச்சுவார்த்தையில் என்.எல்.சி. நிர்வாக அதிகாரிகள், ஒப்பந்த தொழிலாளர்களின் தொழிற்சங்க கூட்டமைப்பின் நிர்வாகிகள் கலந்து கொள்கிறார்கள்.
இந்த பேச்சுவார்த்தையில் சுமூகமான தீர்வு காணப்படும் என்று தெரிகிறது. பேச்சுவார்த்தையில் இறுதி முடிவு எடுக்கப்படாவிட்டால் இன்று மாலை 7 மணிக்கு நெய்வேலி எட்டு ரோடு பகுதியில் அடுத்தக்கட்ட போராட்டம் குறித்து ஆலோசிக்கப்பட இருப்பதாக தொழிற் சங்க நிர்வாகிகள் கூறினர்.
கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அக்கறைவெளி, ஏனாதிமேடு, சித்தலூர், சாவடிக்குப்பம் ஆகிய பகுதிகளில் 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இந்த நிலையில் மாளிகை கோட்டத்தில் இருந்த டாஸ்மாக் கடைக்கு பதிலாக அக்கறைவெளியில் புதிதாக டாஸ்மாக் கடை அமைக்கும் பணி நடந்தது.
இதற்கு பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். ஆனால் டாஸ்மாக் கடை அமைப்பதற்கான முயற்சியை அதிகாரிகள் கைவிடவில்லை.
இந்த நிலையில் நேற்று அங்கு டாஸ்மாக் கடை திறக்கப்பட்டது. இதனால் கோபம் அடைந்த அக்கறைவெளி, ஏனாதிமேடு, சித்தலூர், சாவடிக்குப்பம் பகுதியை சேர்ந்த மக்கள் பா.ம.க. மாவட்ட இளைஞரணி செயலாளர் கார்த்திகேயன், பா.ம.க. நகர செயலாளர் முத்துகுமார், நகர தலைவர் துரை ஆகியோர் தலைமையில் டாஸ்மாக் கடையை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தகவல் அறிந்த கலால் தாசில்தார் ரவிச்சந்திரன் மற்றும் விருத்தாசலம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். போராட்டத்தில் ஈடுபட்ட மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, குடியிருப்பு பகுதியில் டாஸ்மாக் கடை திறக்கப்பட்டுள்ளதால் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை எனவே இந்த கடையை மூட வேண்டும் என்று பொதுமக்கள் வலியுறுத்தினர்.
இதையடுத்து அந்த டாஸ்மாக் கடை மூடப்பட்டது. பின்னர் பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.






