என் மலர்tooltip icon

    கடலூர்

    கடலூர் மாவட்டத்தில் கடந்த 3 மாதங்களில் 14 பேர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்படு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதனை தொடர்ந்து காய்ச்சல் வராத அளவுக்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
    கடலூர்:

    கடலூர் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக கடும் வெயிலின் தாக்கமும், மாலையில் இடி-மின்னலுடன் பலத்த மழையும் பெய்தது. இதன் மூலம் சீதோ‌ஷணம் மாற்றம் ஏற்பட்டுள்ளது. மேலும் கடலூர் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் நீர் தேங்கி உள்ளது.

    இதன் மூலம் தற்போது அதிகளவில் கொசு உற்பத்தி ஏற்பட்டு வருகிறது. இதனால் மாவட்டம் முழுவதும் மர்ம காய்ச்சல் மற்றும் டெங்கு காய்ச்சல் பொதுமக்களுக்கு ஏற்பட்டு உள்ளது.

    இதன் காரணமாக தனியார் மற்றும் அரசு ஆஸ்பத்திரி, ஆரம்ப சுகாதார நிலையங்களில் பொதுமக்கள் அதிகளவில் சென்று சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    மேலும் கடலூர் மாவட்டத்தில் கடந்த 3 மாதங்களில் 14 பேர் டெங்கு காய்ச்சல் ஏற்பட்டு சிகிச்சை பெற்றனர். இதில் 4 பேர் தற்போது அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் நூற்றுக்கணக்கான பொதுமக்கள் காய்ச்சலால் தற்போது சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

    இந்த நிலையில் கடலூர் மாவட்டம் முழுவதும் மாவட்ட நிர்வாகம் சார்பில் கொசு உற்பத்தியை தடுக்க கொசு மருந்து அடித்து வருகிறார்கள். மேலும் நோய்கள் பரவாமல் தடுக்க குளோரின் கரைசல் குடி தண்ணீரிலும், தண்ணீர் தேங்கி உள்ள பகுதிகளில் தெளிக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சி பகுதிகளில் உள்ள அதிகாரிகளுக்கு பாதுகாக்கப்பட்ட குடிநீர் மற்றும் குப்பைகள் அதிகளவில் சேராமல் உடனடியாக அகற்ற உத்தரவிடப்பட்டுள்ளது.

    வீடுகள் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் தண்ணீர் தேங்கி இருந்தால் உடனடியாக அப்புறப்படுத்த வேண்டும். மேலும் டயர்கள், தேங்காய் மட்டைகள் உள்ளிட்ட பொருட்களில் தண்ணீர் தேங்கி இருந்தால் உடனடியாக அகற்ற வேண்டும் என பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    கடலூர் மாவட்டத்தில் எந்த பகுதியில் இருந்தும் 3-க்கும் மேற்பட்டவர்கள் காய்ச்சல் என சிகிச்சை பெற்று வருகிறார்களோ, அவர்களது முழு விவரத்தையும் பெற்று அந்த பகுதி முழுவதும் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு மேற்கொண்டு  

    கடலூர் மாவட்டத்தில் இருந்து புதுவை மாநிலத்தில் உள்ள தனியார் மற்றும் அரசு ஆஸ்பத்திரிகளில் யார் சிகிச்சைக்கு சென்றாலும், அவர்கள் முழு விவரங்களையும் பெறு வதற்கு ஒவ்வொரு ஆஸ்பத்திரியிலும் கடலூர் மாவட்ட நிர்வாகம் சார்பில் தனியாக பணியாளர்கள் நியமித்து கண்காணிக்கப்படுகிறது. இதன் மூலம் விரைவில் காய்ச்சல் கட்டுப்படுத்தப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
    தமிழகத்தில் எந்த கட்சியும் தனித்து ஆட்சி அமைக்க முடியாது என்று தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார்.

    சேத்தியாத்தோப்பு:

    கடலூர் மாவட்டம் தமிழ் மாநில காங்கிரஸ் சார்பில் காமராஜர் பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் சேத்தியாத்தோப்பில் கடை வீதியில் நடைபெற்றது. கூட்டத்தில் மாநில தலைவர் ஜி.கே.வாசன் பேசியதாவது:-

    தமிழகத்தில் நடந்து வரும் மக்களின் பல்வேறு பிரச்சினைக்கு குரல் கொடுப்பது த.மா.கா.தான். திராவிட கட்சிகள் மக்களை ஏமாற்றி வருகின்றனர். 5 ஆண்டிற்கு ஒருமுறை திராவிட கட்சிகள் மாற்றி மாற்றி ஆட்சி செய்தாலும் மக்களுக்காக யாரும் பாடுபடவில்லை. இதற்கு குரல் கொடுத்து வருவது மட்டும் இல்லாமல் மீனவர் பிரச்சினைகள், விவசாயிகள், தொழிலாளர்கள், வியாபாரிகள் என அனைத்து மக்களுக்காகவும் போராட்டம், ஆர்ப்பாட்டம், உண்ணாவிரதம் போன்ற செயல் பாட்டில் உள்ளது தமிழ்மாநில காங்கிரஸ் என்பதை மக்கள் உணர்கின்றனர்.

    தமிழகத்தில் எந்த ஒரு கட்சியும் தனித்து ஆட்சிஅமைக்க முடியாது அது மறைந்த ஜெயலலிதாவோடு முடிந்து விட்டது. இனி கூட்டணி ஆட்சிதான். தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி இல்லாமல் ஆட்சி அமைக்க முடியாது.

    நீட் தேர்வால் மாணவ-மாணவிகள் மனவேதனை அடைந்து வருகின்றனர். இதற்கு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    கடலூர் மாவட்டம் அதிக அளவில் மீனவர்கள் வசித்து வருகின்றனர். மீன்வர்கள் பிரச்சினைக்கு மத்திய மாநில அரசு முற்றப்புள்ளி வைக்கவேண்டும். கதிராமங்கலம் விவசாயிகள் கைது செய்யப்பட்டதினை விடுதலை செய்யவேண்டும்.

    நெய்வேலியில் நிலம் கொடுத்த தொழிலாளர்களுக்கு பணி நிரந்தரம் செய்யவில்லை. உடன்பணி நிரந்தரம் செய்யவேண்டும் ஒப்பந்த தொழிலாளர்களுக்கு 26 நாட்களை குறைத்து 19 நாட்களாக குறைத்து பணி வழங்கி உள்ளது. இதனை உடன் நடவடிக்கை எடுத்து 26 நாட்கள் பணிபுரிய உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இந்தியா முழுவதும் ஒரே மாதிரியான ஜி.எஸ்.டி. தேவை தான் அதற்கு உணவு பொருட்களுக்கு வரி தீப்பெட்டி உற்பத்தி தொழிலாளர்கள் 5 லட்சம் பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

    பட்டாசு தொழிற்சாலை, நெசவாளர்கள் பிரச்சினைக்கு மத்திய அரசு முடிவு எடுக்க வேண்டும். இல்லை என்றால் ஆகஸ்ட் 2-வது வாரத்தில் தமிழ்மாநில காங்கிரஸ் சார்பில் மிகப்பெரிய போராட்டம் நடத்தும்.

    ஸ்ரீமுஷ்ணம் அருகே மணல் குவாரியில் வெடி குண்டு வீசிய மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

    ஸ்ரீமுஷ்ணம்:

    கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் அருகே உள்ள மதகளிர் மாணிக்கம் பகுதியில் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு அரசு மணல்குவாரி திறக்கப்பட்டது. இந்த மணல் குவாரியால் நீர்வளம் பாதிக்கும் என்று பொதுமக்கள் குற்றம் சாட்டினர். இந்த குவாரியில் மணல் அள்ள எதிர்ப்பு தெரிவித்து மதகளிர் மாணிக்கம் மற்றும் அதை சுற்றி உள்ள பொதுமக்கள் பல்வேறு போராட்டங்கள் நடத்தி வந்தனர்.

    கடந்த வாரம் அனைத்து கட்சி சார்பில் தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடத்தினர். அதன் பின்னரும் மணல் குவாரியில் மணல் அள்ளுவதை நிறுத்தவில்லை. இதனால் பொதுமக்கள் தரப்பில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டு வந்தது. இதனால் மணல்குவாரியில் 10 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வந்தனர்.

    இந்தநிலையில் நேற்று இரவு மணல் குவாரியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் நள்ளிரவு எசனூர் பகுதியில் உள்ள பள்ளிக்கூடத்துக்கு தூங்க சென்றுவிட்டனர். இதனை நோட்டமிட்ட மர்மநபர்கள் சிலர் நள்ளிரவில் மணல் குவாரிக்கு வந்தனர்.

    பின்னர் அங்கு நிறுத்தியிருந்த பொக்லைன் எந்திரத்தின் மீது நாட்டு வெடிகுண்டை வீசினர். அது பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறியது. இதில் பொக்லைன் எந்திரம் சேதம் அடைந்தது. அங்கு மணல் ஏற்றுவதற்காக லாரியுடன் காத்திருந்த டிரைவர்கள் இந்த சத்தத்தை கேட்டு அதிர்ச்சியடைந்தனர்.

    இதுகுறித்து ஸ்ரீமுஷ்ணம் போலீசில் புகார் செய்யப்பட்டது. இன்ஸ்பெக்டர் பீர்பாட்ஷா தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். மணல் குவாரியில் மணல் அள்ளுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து மர்ம மனிதர்கள் நாட்டு வெடிகுண்டு வீசியது தெரியவந்தது. அந்த மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

    மேலும் இந்த பகுதியில் அசம் பாவித சம்பவங்கள் நடை பெறாமல் தடுக்க 300-க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பதட்டத்தை ஏற்படுத்தி உள்ளது.

    பண்ருட்டி அருகே அக்காள்-தங்கையை தாக்கி நகைகளை கொள்ளையடித்து சென்ற கொள்ளையர்களை போலீசார் தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    பண்ருட்டி:

    கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே உள்ள பெரியபகண்டை கிராமம் நவநீதம் நகரில் வசித்து வருபவர் ராமலிங்கம் (வயது 52). விவசாயி. இவரது மனைவி வள்ளி (45). இவரது அக்காள் தமிழரசி (48). இவர் புதுவையில் வசித்து வருகிறார். பெரியபகண்டை கிராமத்தில் நடைபெற்ற துக்க நிகழ்ச்சிக்கு வந்திருந்தார்.

    நேற்று இரவு அந்த பகுதியில் கர்ணமோட்சம் என்ற தெருக்கூத்து நடைபெற்றது. இதை பார்க்க வள்ளி- தமிழரசி ஆகியோர் சென்றிருந்தனர்.

    தெருக்கூத்து நிகழ்ச்சி முடிந்ததும் அக்காள்- தங்கை இருவரும் வீட்டுக்கு வந்தனர். பின்னர் அவர்கள் வீட்டின் முன்பு படுத்து தூங்கினார்கள்.

    நள்ளிரவு 1 மணி அளவில் மர்ம மனிதர்கள் ராமலிங்கம் வீட்டுக்கு வந்தனர். அங்கு வீட்டு முன்பு தூங்கி கொண்டிருந்த வள்ளி, தமிழரசி ஆகியோர் கழுத்தில் அணிந்திருந்த தங்க சங்கிலிகளை பறிக்க முயன்றனர்.

    திடுக்கிட்டு எழுந்த அவர்கள் கூச்சலிட்டனர். இதனால் ஆத்திரம் அடைந்த மர்ம மனிதர்கள் உருட்டு கட்டையால் அக்காள்- தங்கையை சரமாரியாக தாக்கினர். பின்னர் அவர்கள் அணிந்திருந்த 12 பவுன் தங்க சங்கிலியை பறித்து கொண்டு ஓடிவிட்டனர். இவைகளின் மதிப்பு ரூ.3 லட்சம் ஆகும்.

    கொள்ளையர்கள் தாக்குதலில் படுகாயம் அடைந்த வள்ளி கடலூர் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது.

    இந்த கொள்ளை சம்பவம் குறித்து பண்ருட்டி போலீசில் ராமலிங்கம் புகார் செய்யப்பட்டது. இன்ஸ்பெக்டர் ஆரோக்கியராஜ், சப்- இன்ஸ்பெக்டர் அழகிரி ஆகியோர் விரைந்து சென்று பார்வையிட்டனர்.

    பண்ருட்டி துணை போலீஸ் சூப்பிரண்டு சுந்தரவேலும் சம்பவ இடத்துக்கு நேரில் சென்று விசாரணை நடத்தினார்.

    கடலூரில் இருந்து போலீஸ் மோப்ப நாய் சீமா வரவழைக்கப்பட்டது. அது வீட்டின் வாசலில் மோப்பம் பிடித்து விட்டு வயல் வழியாக மேல்குமாரங்கலம் பாதை வரை ஓடி நின்று விட்டது.

    அக்காள்-தங்கையை தாக்கி நகைகளை கொள்ளையடித்து சென்ற கொள்ளையர்களை போலீசார் தேடிவருகின்றனர்.

    இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    நிலுவையில் உள்ள ஊதியத்தை வழங்கக்கோரி பாதிரிக்குப்பத்தில் தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்ட தொழிலாளர்கள் நேற்று சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
    கடலூர்:

    மத்திய அரசின் தேசிய ஊரக வேலை வாய்ப்பு திட்டம் கிராமப்புற தொழிலாளர்களின் வாழ்வாதாரத்துக்கு பேருதவியாக இருக்கிறது. ஆனால் சமீபகாலமாக தேசிய ஊரக வேலை வாய்ப்பு திட்ட தொழிலாளர்களுக்கு சரியாக வேலை வழங்கப்படுவதில்லை என்று கூறப்படுகிறது.

    கடலூர் ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட பாதிரிக்குப்பத்தில் தேசிய ஊரக வேலை வாய்ப்பு திட்ட தொழிலாளர்கள் 1,500 பேர் உள்ளனர். ஆனால் அங்கு சுழற்சி அடிப்படையில் வேலை வழங்கப்படுவதால் வாரத்துக்கு சுமார் 150 பேருக்கு மட்டுமே வேலை வழங்கப்படுகிறது. அதோடு கடந்த ஜூன் மாதம் முதல் ஊதியமும் வழங்கப்படவில்லையாம்.

    இதனால் ஆத்திரமடைந்த தொழிலாளர்கள் நேற்று பாதிரிகுப்பத்தில் சாலைமறியலில் ஈடுபட்டனர். அனைத்து தொழிலாளர்களுக்கும் சரியான முறையில் வேலை வழங்க வேண்டும், நிலுவையில் உள்ள ஊதியத்தை வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி தொழிலாளர்களின் போராட்டம் நடந்தது.

    இது பற்றிய தகவல் கிடைத்ததும் வட்டார வளர்ச்சி அதிகாரிகள் குர்ஷிதாபேகம், சாரதி ஆகியோர் சம்பவ இடத்துக்கு வந்து தொழிலாளர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். இதையடுத்து தொழிலாளர்கள் போராட்டத்தை கைவிட்டனர்.
    தமிழகத்தில் மதவாத சக்திகள் ஆட்சியை பிடிக்க விடமாட்டோம் என கடலூரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் திருமாவளவன் பேசினார்.
    கடலூர்:

    அம்பேத்காரின் 125-வது பிறந்த நாள் நிறைவு விழா பொதுக்கூட்டம் கடலூர் திருப்பாதிரிப்புலியூர் தேரடி தெருவில் நடந்தது.

    கூட்டத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் பேசியதாவது:-

    அம்பேத்கார் பிறந்த நாள் விழா இந்தியா முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. பாராளுமன்றத்திலும் அம்பேத்கார் பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது. அதில் பங்கேற்று பேசிய பிரதமர் நரேந்திரமோடி சாதாரண குடும்பத்தில் பிறந்த நான் பிரதமர் அளவுக்கு உயர்ந்ததற்கு அம்பேத்கார் தான் காரணம் என்று கூறி இருக்கிறார்.

    பிரதமர் எதை சொன்னாலும் நம்ப மாட்டேன். ஆனால் இதை நம்பி தான் ஆக வேண்டும். சாதாரண குடும்பத்தில் பிறந்தவர் உயர்ந்தவராக வர முடியும் என்பதை நிரூபித்து காட்டியவர் அம்பேத்கார்.

    மத்தியில் பாரதிய ஜனதா ஆட்சி நடந்தாலும், செயல்திட்டங்களை வகுத்து கொடுப்பது ஆர்.எஸ்.எஸ். தான். இந்த இயக்கத்தில் 13 ஆயிரம் பேர் திருமணம் செய்து கொள்ளாமல் இருக்கிறார்கள். இவர்களின் திட்டம் இந்து மதத்தை பரப்புவது, இந்தியாவை இந்து நாடாக உருவாக்க வேண்டும் என்பது தான். இதில் இந்து முன்னணி, விசுவ இந்து பரி‌ஷத் உள்ளிட்ட பல்வேறு துணை அமைப்புகளும் உள்ளன. இவர்கள் தாழ்த்தப்பட்டவர்கள் மதம் மாறுவதை தடுக்க தொடர் பிரசாரம் செய்து வருகிறார்கள்.

    விடுதலை சிறுத்தைகள் கட்சி இருக்கும் வரை தமிழகத்தில் சாதி, மத வெறியர்களால் சென்னை கோட்டையில் கொடியேற்ற முடியாது. ஜெயலலிதா மறைந்துவிட்டதால், ஏற்பட்டுள்ள வெற்றிடத்தை பயன்படுத்தி ஆட்சி அதிகாரத்தை பிடிக்க நினைக்கும் மதவாத சக்திகளை விடமாட்டோம்.

    நடிகர்கள் ரஜினிகாந்த், கமல்ஹாசன் ஆகியோரை கண்டு பயப்படுகிறவர்கள் தான் அவர்களுக்கு எதிராக பேசுகிறார்கள். எங்களுக்கு எந்த பயமும் இல்லை. ஜனநாயக நாட்டில் யாரும் அரசியலுக்கு வரலாம். அப்படி ரஜினிகாந்த், கமல்ஹாசன் அரசியலுக்கு வந்தால், அவர்களை களத்தில் சந்திக்கிற துணிச்சல் விடுதலை சிறுத்தைகளுக்கு உண்டு. சேர்ந்தும், பிரிந்தும் எதிர்ப்போம். தி.மு.க., அ.தி.மு.க. கட்சிகளுக்கு மாற்றாக வலிமை மிக்க கட்சியாக விடுதலை சிறுத்தைகள் கட்சி உள்ளது. அம்பேத்காரின் கொள்கையை உயர்த்தி பிடிக்கிற கட்சி விடுதலை சிறுத்தைகள் கட்சிதான். தமிழக அரசியலில் மாபெரும் சக்தியாக விடுதலை சிறுத்தைகள் கட்சி வளர்ந்து வருகிறது.

    இவ்வாறு திருமாவளவன் பேசினார்.
    புவனகிரியில் பா.ம.க. சார்பில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் தமிழக அரசை அவதூறாக பேசியதாக தொடரப்பப்பட்ட வழக்கில் காடுவெட்டி குரு ஆஜரானார்.
    பரங்கிப்பேட்டை:

    கடந்த 2014-ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலின் போது புவனகிரியில் பா.ம.க. சார்பில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் வன்னியர் சங்க மாநில தலைவர் காடுவெட்டி குரு கலந்து கொண்டு பேசினார். அப்போது, அவர் தமிழக அரசை விமர்சித்து அவதூறாக பேசியதாக புவனகிரி போலீசார் குரு மீது வழக்குப்பதிவு செய்தனர்.

    பரங்கிப்பேட்டை குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் இந்த வழக்கு விசாரணை நடைபெற்று வந்தது.

    இந்த வழக்கின் விசாரணையின் போது காடுவெட்டி குரு கோர்ட்டில் ஆஜராகவில்லை. எனவே அவருக்கு பிடிவாரண்டு பிறப்பித்து நீதிபதி வாசுதேவன் உத்தரவிட்டார்.

    இந்த நிலையில், காடுவெட்டி குரு பரங்கிப்பேட்டை கோர்ட்டில் நீதிபதி வாசுதேவன் முன்பு நேற்று ஆஜரானார். கடந்த காலங்களில் விசாரணைக்கு ஆஜராக முடியாததற்கான காரணத்தை விளக்கினார். இதையடுத்து குருவின் மீதான பிடிவாரண்டை நீதிபதி ரத்து செய்தார். இந்த வழக்கு விசாரணையை அடுத்த மாதம் (ஆகஸ்டு) 19-ந் தேதிக்கு ஒத்தி வைத்து உத்தரவிட்டார்.
    விருத்தாசலம் அருகே டிராக்டர் மோதி பெண் சம்பவ இடத்திலேயே பலியானார். தகவல் அறிந்த உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
    விருத்தாசலம் அருகே உள்ள கார்குடல் கிராமத்தை சேர்ந்தவர் வெங்கடேசன். இவரது மனைவி மீனாட்சி (வயது 34). இவர் பொன்னேரியில் உள்ள உறவினர் வீட்டுக்கு சென்றார். பின்னர் அங்கிருந்து வீட்டுக்கு செல்வதற்காக பொன்னேரி பஸ் நிறுத்தத்தில் இன்று காலை பஸ்சுக்காக காத்திருந்தார்.

    அப்போது அதேப்பகுதியில் உள்ள ஏரியில் இருந்து மண் ஏற்றி கொண்டு டிராக்டர் வந்து கொண்டிருந்தது. கண்இமைக்கும் நேரத்தில் அந்த டிராக்டர் பஸ்சுக்காக காத்திருந்த மீனாட்சி மீது எதிர்பாராதவிதமாக மோதியது. இதில் தூக்கி வீசப்பட்டு ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக மீனாட்சி இறந்தார். விபத்து நடந்த உடன் டிரைவர் டிராக்டரை அங்கேயே நிறுத்தி விட்டு தப்பி ஓடிவிட்டார்.

    தகவல் அறிந்த மீனாட்சியின் உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் சம்பவ இடத்துக்கு திரண்டனர். அவர்கள் டிராக்டரை முற்றுகையிட்டு சாலை மறியலில் ஈடுபட்டனர். விருத்தாசலம் தாசில்தார் பன்னீர்செல்வம், போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜதாமரைபாண்டியன் மற்றும் போலீசார் விரைந்து வந்து பேச்சுவார்த்தை நடத்தினர்.

    அப்போது விபத்தில் இறந்த மீனாட்சியின் குடும்பத்துக்கு நிவாரணம் வழங்க வேண்டும், இந்த பகுதியில் வாகனங்கள் வேகமாக செல்வதை தடுக்க வேண்டும் என அவரது உறவினர்கள் போலீசாரிடம் தெரிவித்தனர். இதை கேட்ட போலீசார் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தனர். இதை ஏற்று கொண்ட அவர்கள் சாலை மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர்.

    இதையடுத்து மீனாட்சியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக விருத்தாசலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கதிராமங்கலம் போராட்டத்துக்கு வருமாறு ஆதரவு திரட்டியதாக கைது செய்யப்பட்ட அண்ணாமலை பல்கலைக்கழக மாணவருக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி சிதம்பரம் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

    சிதம்பரம்:

    கடலூர் மாவட்டம் சிதம்பரம் சிவசண்முகம் தெருவை சேர்ந்தவர் குபேரன் (வயது 32). சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக ஆராய்ச்சி மாணவர். இவர் புதுக்கோட்டை மாவட்டம் நெடுவாசல், தஞ்சை மாவட்டம் கதிராமங்கலம் ஆகிய இடங்களில் எரிவாயு மற்றும் ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு எதிரான போராட்டத்தில் கைதான பேராசிரியர் ஜெயராமன், விடுதலைச்சுடர் உள்ளிட்ட நிர்வாகிகளை விடுதலை செய்யக்கோரியும், போராட்டத்துக்கு வருமாறு மாணவர்களை அழைப்பு விடுத்து முகநூல் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் பதிவு செய்திருந்தார்.

    கடந்த 20-ந்தேதி அண்ணாமலை பல்கலைக்கழக மாணவர்களை வகுப்பு புறக்கணிப்பு செய்ய சொல்லி, போராட்டம் நடத்த மாணவர்களை அழைத்ததாக குபேரன் மீது சிதம்பரம் அண்ணாமலைநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர். அவர் கடலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

    இந்நிலையில் குபேரனுக்கு ஜாமீன் கேட்டு அவரது சார்பில் வக்கீல் கோபாலகிருஷ்ணன் தலைமையில் சிதம்பரம் 1-வது மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் வக்கீல்கள் மனு தாக்கல் செய்தனர். இந்த மனு மீதான விசாரணை நீதிபதி ஆயிஷாபேகம் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.

    மனுவை நீதிபதி விசாரித்து குபேரனுக்கு நிபந்தனையின் பேரில் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார். மறுஉத்தரவு வரும் வரை தினந்தோறும் காலை 10 மணிக்கும், மாலை 5 மணிக்கும் வந்து சிதம்பரம் கோர்ட்டில் குபேரன் கையெழுத்து போட்டு விட்டு செல்ல வேண்டும் என்று உத்தரவிட்டார்.

    ஊதிய குறைப்பை கண்டித்து அதிகாரிகள் சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக துணை வேந்தரை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
    சிதம்பரம்:

    சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தை கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு அரசு ஏற்றது. பின்னர் பல்கலைக்கழகத்தில் அதிகப்படியான செலவினங்களை குறைப்பது, ஆட்கள் மற்றும் ஊதிய குறைப்பு நடவடிக்கையில் அரசு நிர்வாகம் ஈடுபட்டு வருகிறது.

    இதையொட்டி பல்கலைக்கழகத்தில் உள்ள ஏராளமான ஊழியர்கள் தமிழகம் முழுவதும் உள்ள அரசு சார்ந்த நிறுவனங்களுக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டு வருகின்றனர்.

    நிதி நெருக்கடியை குறைக்க தற்போது ஊழியர்களுக்கு ஊதிய குறைப்பு செய்ய பல்கலைக்கழக நிர்வாகம் ஆலோசித்து வருகிறது.

    இந்த நிலையில் பல்கலைக்கழக படிப்பு மைய அதிகாரி மற்றும் சிறப்பு அதிகாரிகள் சங்கம் சார்பில் ஊதிய குறைப்பு நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.

    இதையடுத்து இன்று காலை 11 மணிக்கு சங்க நிர்வாகிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். ஊதிய குறைப்பை கண்டித்து பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் அலுவலகத்துக்கு சென்று துணை வேந்தர் மணியனை முற்றுகையிட்டனர். இந்த சம்பவத்தால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
    26 நாட்கள் வேலை வழங்க வலியுறுத்தி என்.எல்.சி. தலைமை அலுவலகத்தை முற்றுகையிட முயன்ற தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் மற்றும் ஒப்பந்த தொழிலாளர்கள் 1,000 பேரை போலீசார் கைது செய்தனர்.
    நெய்வேலி:

    நெய்வேலி என்.எல்.சி. நிறுவனத்தில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஒப்பந்த தொழிலாளர்களாக பணிபுரிந்து வருகின்றனர். சுரங்கம் 1-ஏ பகுதியில் வேலை பார்க்கும் ஒப்பந்த தொழிலாளர்களின் வேலை நாட்களை 26-ல் இருந்து 19 நாட்களாக என்.எல்.சி. நிர்வாகம் குறைத்தது.

    இதனை கண்டித்தும், மீண்டும் 26 நாட்கள் பணி வழங்க கோரியும் ஒப்பந்த தொழிலாளர்கள் கடந்த 12-ந் தேதி முதல் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

    ஒப்பந்த தொழிலாளர்கள் பிரச்சனை தொடர்பாக புதுவையில் உள்ள உதவி தொழிலாளர் நல ஆணையர் அலுவலகத்தில் அதிகாரி கணேசன் முன்னிலையில் முத்தரப்பு பேச்சுவார்த்தை நடந்தது. இந்த பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது. இதையொட்டி ஒப்பந்த தொழிற்சங்க கூட்டமைப்பு சார்பில் என்.எல்.சி. தலைமை அலுவலகத்தில் வேலைநிறுத்த நோட்டீஸ் வழங்கப்பட்டது.

    இந்த நிலையில் 26 நாட்கள் வேலை வழங்கக்கோரி என்.எல்.சி. தலைமை அலுவலகத்தை இன்று (24-ந் தேதி) முற்றுகையிட்டு போராட்டம் நடத்தப் போவதாக தொழிற் சங்கம் சார்பில் அறிவிக்கப்பட்டது.

    அதன்படி இன்று காலை நெய்வேலி ஸ்டோர் ரோடு பகுதியில் ஒப்பந்த தொழிலாளர்கள் ஏராளமானோர் திரண்டனர். அங்கிருந்து அவர்கள் என்.எல்.சி. தலைமை அலுவலகத்தை முற்றுகையிட ஊர்வலமாக புறப்பட்டனர். ஊர்வலத்தை தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் தொடங்கி வைத்து பேசினார்.

    ஊர்வலம் நெய்வேலி நேரு சிலை அருகே சென்ற போது அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த நெய்வேலி துணைபோலீஸ் சூப்பிரண்டு வெங்கடேசன் தலைமையிலான 150-க்கும் மேற்பட்ட போலீசார் தடுத்து நிறுத்தினர்.

    இதை மீறி என்.எல்.சி. தலைமை அலுவலகத்தை முற்றுகையிட முயன்ற தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் மற்றும் என்.எல்.சி. ஒப்பந்த தொழிலாளர்கள் 1,000 பேரை போலீசார் கைது செய்து வேனில் ஏற்றிச் சென்றனர். அவர்கள் அருகில் உள்ள தனியார் மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டனர்.
    விருத்தாசலத்தில் நள்ளிரவில் கதவை உடைத்து ஆசிரியை வீட்டில் ரூ. 2 லட்சம் மதிப்புள்ள நகை மற்றும் பணத்தை மர்ம மனிதர்கள் கொள்ளையடித்து சென்றனர்.

    விருத்தாசலம்:

    கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அருகே உள்ள ஏ.வடக்குப்பம் பகுதியை சேர்ந்தவர் செந்தில் ராஜா (வயது 40). இவர் விருத்தாசலம் வட்டார வள மையத்தில் ஆசிரியர் பயிற்றுனராக வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி அபிராமி (35). இவர் தொட்டிக்குப்பம் அரசு பள்ளியில் ஆசிரியையாக உள்ளார்.

    நேற்று இரவு கணவன்-மனைவி இருவரும் வீட்டில் தூங்கி கொண்டிருந்தனர். நள்ளிரவில் மர்ம மனிதன் அங்கு வந்தான். அவன் வீட்டின் பின்பக்க கதவை உடைத்து வீட்டுக்குள் புகுந்தான்.

    கணவன்- மனைவி படுத்திருந்த அறைக் குள் சென்றான். அங்கு மேஜையில் வைக்கப்பட்டிருந்த ரூ.30 ஆயிரத்தை கொள்ளையடித்தான். பின்னர் தூங்கி கொண்டிருந்த ஆசிரியை அபிராமி கழுத்தில் கிடந்த 8 பவுன் நகையையும் பறித்தான். கண்விழித்த அபிராமி திருடன்... திருடன்... என அலறினார்.

    இந்த சத்தம் கேட்டு எழுந்த செந்தில்ராஜா அந்த மர்ம மனிதனை பிடிக்க முயன்றார். ஆனால், அந்த மர்ம மனிதன் நகை, பணத்துடன் தப்பி ஓடிவிட்டான். கொள்ளையடிக்கப்பட்ட நகை- பணத்தின் மதிப்பு ரூ.2 லட்சம் ஆகும்.

    இதையடுத்து செந்தில்ராஜா அக்கம் பக்கத்தினர் உதவியுடன் கொள்ளையனை அங்குள்ள தெருக்களில் தேடினார்.

    அந்த பகுதியில் சந்தேகத்துக் கிடமாக நின்று கொண்டிருந்த வாலிபரை பிடித்து விசாரித்த போது அவர் முன்னுக்குப்பின் முரணான தகவலை கூறினார். இதனால் சந்தேகம் அடைந்த செந்தில்ராஜா மற்றும் பொதுமக்கள் அவரை பிடித்து விருத்தாசலம் போலீசில் ஒப்படைத்தனர்.

    போலீசார் அந்த வாலிபரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    நள்ளிரவு நேரத்தில் ஆசிரியை வீட்டில் நடந்த இந்த கொள்ளை சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    ×