என் மலர்
கடலூர்
சிதம்பரம்:
கடலூர் மாவட்டத்தில் பெட்ரோலிய ரசாயன மண்டலம் அமைப்பதற்கு பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
இதுதொடர்பான மக்கள் கருத்துக்கேட்பு கூட்டம் சிதம்பரம் அருகே உள்ள கடவாச்சேரி கிராமத்தில் நடந்தது. விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் கலந்துகொண்டு பேசினார். அப்போது அவர் பேசியதாவது:-
கடலூர், நாகை மாவட்டத்தில் 45 கிராமங்களில் 57 ஆயிரத்து 500 ஏக்கர் அளவில் விளைநிலங்களை கையகப்படுத்தி பெட்ரோலிய ரசாயன மண்டலம் அமைக்கும் திட்டத்தை செயல்படுத்த மத்திய, மாநில அரசுகள் திட்டமிட்டுள்ளன. இதற்காக சுமார் ரூ.92 ஆயிரம் கோடி முதலீடு செய்யவும், அதில் முதற்கட்டமாக ரூ.1,146 கோடி ஒதுக்கீடு செய்து ரெயில் தண்டவாளங்கள், சாலைகள் போன்ற உட்கட்டமைப்பு வசதிகளை மேற்கொண்டு வருவதாகவும் தெரிகிறது.
இந்த திட்டம் செயல்பட்டால் நெய்வேலி போன்று இந்த பகுதி மாறிவிடும். இப்பகுதியில் 1,000 குடும்பத்தினர் காலி செய்யப்படுவார்கள். பெட்ரோலிய ரசாயன பூங்கா அமைக்கப்பட்டால் விளைநிலங்கள் மட்டுமின்றி குடிநீரும் பாதிக்கப்படும்.
இந்த பகுதியில் பூமிக்கு அடியில் ஏராளமான தாது பொருட்கள் உள்ளன. இதை எடுக்க மத்திய, மாநில அரசுகள் 20 ஆண்டுகளுக்கு முன்பே திட்டம் தீட்டியுள்ளது. வேளாண் மண்டலமான நமது டெல்டா பூமியை வேதி மண்டலமாக உருவாக்கப்படப்போகிறது. பெட்ரோலிய ரசாயன மண்டலம் அமைந்தால் இயற்கை சூழ்நிலையில் உள்ள பிச்சாவரம் சுற்றுலா மைய சதுப்புநிலக் காடுகள் முற்றிலும் அழிந்து போகும். இந்த திட்டத்தை நாம் செயல்படுத்த அனுமதிக்கக்கூடாது. நாம் ஒன்றுபட்டு, போராடி, இந்த திட்டத்தை தடுத்து நிறுத்த வேண்டும். வாழ்வாதாரத்தை பாதுகாக்க சாதி, மதம் பார்க்காமல் நாம் ஒன்று சேர்ந்து போராட வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
இதனை தொடர்ந்து திருமாவளவன் தில்லைநாயகபுரம், புதுச்சத்திரம் ஆகிய பகுதிகளில் பொதுமக்களிடம் கருத்துகளை கேட்டார்.
கடலூர் மாவட்டத்தில் அடிக்கடி வெள்ளச்சேதம் ஏற்பட்டு வருகிறது. இதில் பலர் பாதிக்கப்பட்டு வருகிறார்கள்.
இதனை தொடர்ந்து வெள்ளச்சேதத்தை தடுக்க, மழைநீர் சேமிக்க, தடுப்பணை கட்ட பூகோள ரீதியில் இடம் தேர்வு செய்ய பேரிடர் மேலாண்மை துறை சார்பில் ஆளில்லா விமானம் மூலம் ஆய்வு செய்ய தீர்மானிக்கப்பட்டது. இதையொட்டி சென்னை அண்ணா பல்கலைக்கழக சென்னை இன்ஸ்ட்டியூட் ஆப் டெக்னாலஜியின் விமானவியல் துறையுடன் தமிழக அரசு ஒப்பந்தம் செய்தது.
இந்த ஆய்வுப்பணியை அண்ணா பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த டாக்டர் செந்தில்குமார் தலைமையிலான குழுவினரிடம் ஒப்படைக்கப்பட்டது. அந்த குழுவினர் ஆளில்லா விமானத்துடன் கடலூர் வந்தனர்.
ஆளில்லா விமானம் மூலம் ஆய்வு செய்யும் பணி தொடக்க விழா கடலூர் புதிய கலெக்டர் அலுவலகத்தில் இன்று நடைபெற்றது.
விழாவுக்கு அமைச்சர் எம்.சி.சம்பத் தலைமை தாங்கினார். ஆளில்லா விமானம் மூலம் ஆய்வு செய்யும் பணியை வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தொடங்கி வைத்தார்.
முன்னதாக விழாவுக்கு வருவாய்த்துறை முதன்மை செயலாளர் சத்திய கோபால், வருவாய்த்துறை அரசு செயலாளர் சந்திர மோகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கலெக் டர் ராஜேஷ் வரவேற்றார். இதில் போலீஸ் சூப்பிரண்டு விஜயகுமார் மற்றும் அரசு அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
முடிவில் மாவட்ட வருவாய் அதிகாரி விஜயா நன்றி கூறினார்.
இந்த ஆளில்லா விமானம் மூலம் கடலூர் மாவட்டத்தில் உள்ள நீர்நிலைகள் தொடர்ந்து ஆய்வு செய்யப்படும். இந்த ஆய்வில் எடுக்கப்படும் வரைப்படங்கள் மற்றும் அவை குறித்த அறிக்கைகள் கலெக்டர் மூலம் பேரிடர் மேலாண்மைத்துறைக்கு அனுப்பி வைக்கப்படும். அதன்பேரில் வெள்ளப் பாதிப்பை தடுக்க அரசு நடவடிக்கை மேற்கொள்ளும்.
இந்த நிகழ்ச்சியில் கடலூர் மாவட்ட எம்.பி.க்கள் அருண்மொழிதேவன், சந்திரகாசி, எம்.எல்.ஏ.க்கள் சத்தியா பன்னீர்செல்வம், பாண்டியன், முருகுமாறன், கலைச்செல்வன் ஆகியோர் கலந்து கொள்ளாமல் புறக்கணித்தனர்.
கடலூர் மஞ்சக்குப்பம் மைதானத்தில் வருகிற 16-ந் தேதி எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா நடக்கிறது. இந்த விழாவில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் அமைச்சர்கள் கலந்து கொள்கிறார்கள். இதையொட்டி விழா ஏற்பாடுகள் தீவிரமாக நடை பெற்று வருகிறது.
இந்த நிலையில் இன்று அ.தி.மு.க. நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் மஞ்சக் குப்பம் மைதானத்தில் நடைபெற்றது.
கூட்டத்துக்கு மாவட்டச் செயலாளரும், அமைச்சருமான எம்.சி. சம்பத் தலைமை தாங்கினார். அனைத்துலக எம்.ஜி.ஆர். மன்ற துணைச் செயலாளர் சொரத்தூர் ராஜேந்திரன் முன்னிலை வகித்தார். நகர செயலாளர் குமரன் வரவேற்றார்.
கூட்டத்தில் அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், செங்கோட்டையன், தங்கமணி ஆகியோர் கலந்து கொண்டனர்.
திண்டுக்கல் சீனிவாசன் பேசுகையில்:-
கடலூர் மாவட்டம் என்றும் அ.தி.மு.க.வின் கோட்டையாகும். ஜெயலலிதா முதல்-அமைச்சராக இருந்த போது புயல்-மழை போன்ற பாதிப்புகளின் போது கடலூர் மாவட்டத்துக்கு தனிக்கவனம் செலுத்தி இயல்பு வாழ்க்கை பாதிக்காத வகையில் அனைத்து பணிகளையும் செய்து கொடுத்தார்.
மக்கள் என்றும் அ.தி.மு.க.வுக்கு ஆதரவாக உள்ளனர். எனவே அ.தி.மு.க.வை எவராலும் அசைக்க முடியாது.
இவ்வாறு அவர் பேசினார்.
அமைச்சர் செங்கோட்டையன் பேசும்போது, கருணாநிதியிடம் போராடி அ.தி.மு.க.வை எம்.ஜி.ஆர். வளர்த்தார். இன்று வரை இந்த கட்சி சிறப்பாக நடந்து கொண்டு இருக்கிறது. இதனை பார்க்கும்போது தர்மம்தான் வென்று வருகிறது என்பது எடுத்துக் காட்டாகும். ஆட்சியை ஒழிக்க வேண்டும் என்று பலர் நினைத்தாலும் அ.தி.மு.க.வை யாராலும் ஒழிக்க முடியாது.
அ.தி.மு.க.வில் 134 எம்.எல்.ஏ.க் களும், 50 எம்.பி.க்களும் உள்ளனர். இந்த 50 எம்.பி.க்கள் மூலமாகதான் மோடியிடமும், பாராளு மன்றத்திலும் நம்மால் பேச முடிகிறது. இதுதான் நம் இயக்கத்தின் சக்தியாகும்.
வருகிற 4 ஆண்டுகளும் அ.தி.மு.க. ஆட்சி தொடரும். எந்த கொம்பனாலும் இதை அசைக்க முடியாது. முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அரசு பற்றி பொதுமக்களிடம் கட்சி நிர்வாகிகள் எடுத்து கூற வேண்டும். எப்போதும் நீங்கள் உழைப்பதற்கு தயாராக இருக்க வேண்டும். எப்போதும் நீங்கள் தயாராகத்தான் உள்ளீர்கள் என்பதும் எங்களுக்கு தெரியும். தமிழகத்தில் கடைசி வரை அ.தி.மு.க.தான் ஆளுங்கட்சியாக இருக்கும்.
இவ்வாறு அவர் பேசினார்.
கூட்டத்தில் அமைச்சர் தங்கமணி பேசும்போது, “இந்த நிர்வாகிகள் கூட்டத்தில் அ.தி.மு.க.வினர் ஆர்வமாக கலந்து கொண்டுள்ளார்கள். இந்த ஆர்வம் இருப்பதால்தான் அ.தி.மு.க.வை யாராலும் அழிக்க முடியவில்லை. அழிக்கவும் முடியாது. அ.தி.மு.க.வை எதிர்ப்பது எதிர்க்கட்சிக்கு சவாலாக உள்ளது” என்றார்.
இன்று நடைபெற்ற அ.தி.மு.க. நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்தி லும் எம்.பி.க்கள் அருண் மொழிதேவன், சந்திரகாசி, எம்.எல்.ஏ.க்கள் சத்தியா பன்னீர்செல்வம், பாண்டியன், முருகுமாறன், கலைச் செல்வன் ஆகியோரும் கலந்து கொள்ளாமல் புறக்கணித்தனர்.
சிதம்பரம்:
முன்னாள் மத்திய மந்திரி ப.சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரம். தமிழக காங்கிரஸ் கட்சி முக்கிய நிர்வாகிகளில் ஒருவராக உள்ளார். சிதம்பரம் நடராஜர் கோவிலுக்கு இன்று காலை கார்த்தி சிதம்பரம் சாமி தரிசனம் செய்வதற்காக வந்தார்.
கோவிலில் உள்ள நடராஜர், சிவகாமசுந்தரி அம்மன், சித்ரகுப்தர் ஆகிய சன்னதிகளில் தரிசனம் செய்தார். பின்னர் கோவில் அருகே உள்ள தில்லை காளிஅம்மன் கோவிலுக்கு சென்று அங்கும் வழிபாடு செய்தார். பின்னர் சென்னைக்கு புறப்பட்டு சென்றார்.
பெட்ரோலிய ரசாயன மண்டல திட்டத்தை எதிர்த்து, கடலூர் தெற்கு மாவட்ட பா.ம.க சார்பில் சிதம்பரம் அருகே பரங்கிப்பேட்டை ஒன்றியத்துக்கு உட்பட்ட பெரியப்பட்டு கிராமத்தில் பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடந்தது.
இதில் பா.ம.க. இளைஞரணி தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் எம்.பி. கலந்துகொண்டு பேசியதாவது:-
கடலூர், நாகை மாவட்டத்தில் மத்திய, மாநில அரசு சார்பில் பெட்ரோலிய ரசாயன மண்டலம் அமைய உள்ளது. இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டால் மக்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்படும். இந்த திட்டத்தை நாங்கள் கொண்டுவர விடமாட்டோம்.
இந்த திட்டத்துக்காக கடலூர், நாகை மாவட்டங்களில் 45 வருவாய் கிராமங்களை தேர்வு செய்து, 57 ஆயிரம் ஏக்கர் நிலம் கையகப்படுத்தி, 2 லட்சம் மக்களை அப்புறப்படுத்த உள்ளார்கள். இந்த திட்டம் மக்களுக்கு செய்யும் துரோகமாகும். இந்த திட்டம் ஒரு ஏமாற்றுவேலை. மோசடி திட்டமாகும். இந்த திட்டத்தை 2001-ல் தொடங்கியவர் அப்போது முதல்-அமைச்சராக இருந்த கருணாநிதி தான்.
இந்த திட்டத்தை ரத்துசெய்யும் வரையில் நான் தொடர்ந்து போராடுவேன். இந்த திட்டத்திற்காக இப்பகுதிகளில் இருந்து ஒரு பிடி மண்ணைக்கூட தொடவிடமாட்டேன்.
தற்போது ஆளும் அ.தி.மு.க.வும், முன்னர் ஆண்ட தி.மு.க.வும் கொள்ளையடிக்கவே இந்த திட்டத்திற்கு துணை போகிறார்கள். இந்த திட்டத்தினால் கடலூர், நாகை, திருவாரூர் உள்ளிட்ட 5 மாவட்டங்களில் உள்ள 20 லட்சம் பேர் பாதிக்கப்படுவார்கள்.
மக்களுக்கு எதிரான பெட்ரோலிய ரசாயன மண்டல திட்டத்தை மத்திய, மாநில அரசுகள் திரும்பப் பெறவேண்டும். இந்த திட்டத்தை எதிர்த்து பா.ம.க. போராட்டம் நடத்தும்.
வருகிற 15-ந்தேதி நடைபெறும் கிராமசபை கூட்டங்களில் பெட்ரோலிய ரசாயன மண்டல திட்டம் தேவையில்லை என்று ஒருமனதாக முதல் தீர்மானம் நிறைவேற்றவேண்டும்.
இவ்வாறு டாக்டர் அன்புமணி ராமதாஸ் எம்.பி. பேசினார்.
கடலூர், நாகை மாவட்டங்களை சேர்ந்த 45 கிராமங்களை உள்ளடக்கிய பெட்ரோலிய ரசாயன மண்டலம் அமைக்கப்போவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.
இதனால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து கிராம மக்களிடம் கருத்துகேட்க முன்னாள் மத்திய மந்திரியும், பா.ம.க. மாநில இளைஞர் அணி தலைவருமான அன்புமணி ராமதாஸ் எம்.பி. முடிவு செய்தார்.
அதன்படி இன்று மதியம் 12.30 மணிக்கு அவர் கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே உள்ள பெரியப்பட்டு கிராமத்துக்கு வந்தார். அங்கு மக்களிடம் கருத்துகேட்பு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் அன்புமணி ராமதாஸ் மக்களிடம் கருத்து கேட்டறிந்தார்.
பொதுமக்கள் கூறும்போது, கடலூர் மாவட்டத்தில் பெட்ரோலிய மண்டலம் அமைக்கக்கூடாது. பெட்ரோல் மண்டலம் அமைத்தால் விவசாயம் பெரிதும் பாதிக்கும் என ஆவேசமாக கூறினர். அதன்பின்னர் அன்புமணி ராமதாஸ் அரிய கோஷ்டி, கடவாச்சேரி ஆகிய கிராமங்களுக்கு சென்று அங்குள்ள மக்களிடமும் கருத்துகேட்டார்.
கடலூர் மாவட்ட மக்களிடம் கருத்துகேட்ட பின்பு அன்புமணி ராமதாஸ் மதியம் நாகை மாவட்டம் சென்று மாதானம், திருமுல்லைவாசல், மங்கைமடம் ஆகிய கிராமங்களுக்கு சென்று பொதுமக்களிடம் கருத்து கேட்கிறார்.
அ.தி.மு.க. (அம்மா) அணியின் துணை பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரன், நேற்று புதிய நிர்வாகிகள் பட்டியலை அறிவித்தார். அதில் கடலூர் மாவட்டம் பண்ருட்டி தொகுதி எம்.எல்.ஏ. சத்யா பன்னீர்செல்வமும் ஒருவர். அவருக்கு மாநில மகளிர் அணி இணைச் செயலாளர் பதவி வழங்கப்பட்டு உள்ளது.
ஆனால் அந்த பதவியை சத்யா பன்னீர்செல்வம் ஏற்க மறுத்துவிட்டார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் சிறப்பாக ஆட்சி நடைபெற்று வரும் நிலையில் என்னை மாநில மகளிர் அணி இணைச் செயலாளராக டி.டி.வி.தினகரன் அறிவித்து இருப்பது தொண்டர்களிடமும், பொதுமக்களிடமும் குழப்பத்தை ஏற்படுத்தும். எனவே இந்த பொறுப்பை நான் ஏற்றுக்கொள்ள விரும்பவில்லை. எடப்பாடி பழனிசாமி தலைமையில் எனது கட்சிப்பணி தொடரும்” என்று கூறி இருக்கிறார்.
கடலூர்:
கடலூர் சேடப்பாளையத்தை சேர்ந்தவர் கலியபெருமாள் (வயது 85). இவர் திடீரென்று வீட்டில் இருந்த விஷத்தை குடித்து மயங்கி விழுந்தார். அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு கடலூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனளிக்காமல் இன்று காலை கலியபெருமாள் இறந்தார்.
இது குறித்து முதுநகர் போலீசார் விசாரணை நடத்தினர். அதில் கலியபெருமாள் உடல்நலம் பாதிக்கப்பட்டதால் மனம் உடைந்து விஷம் குடித்து தற்கொலை செய்தது தெரியவந்தது.
நெய்வேலி என்.எல்.சி. சுரங்கம் 1-ஏ பகுதியில் வேலை செய்யும் 2,500-க்கும் மேற்பட்ட ஒப்பந்த தொழிலாளர்கள் கடந்த 12-ந்தேதி முதல் தங்களுக்கு முழுமையாக 26 நாட்கள் பணி வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கடந்த 13-ந்தேதி அவர்கள் என்.எல்.சி. அதிகாரிகளை சுரங்கும் 1-ஏ அலுவலகத்தில் சிறை பிடித்து போராட்டம் நடத்தினர். அதன் பின்னர் ஒப்பந்த தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம், மறியல் போன்று பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வந்தனர்.
இந்த நிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு மாவட்ட கலெக்டர் ராஜேஷ், என்.எல்.சி. தொழிற்சங்க நிர்வாகிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். அதில் சுமூக உடன்பாடு ஏற்பட்டது.
தொழிலாளர்களுக்கு 26 நாட்கள் பணி வழங்கப்படும் என்றும், போராட்டத்தில் ஈடுபட்ட தொழிலாளர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட மாட்டாது என்றும் உறுதி அளித்தார். அதனை ஏற்றுக்கொண்ட தொழிற் சங்க நிர்வாகிகள் 22 நாட்களாக நடத்தி வந்த போராட்டத்தை வாபஸ் பெற்று பணிக்கு செல்வதாக அறிவித்தனர்.
அதனை தொடர்ந்து நேற்று முன்தினம் இரவு முதல் ஒப்பந்த தொழிலாளர் பணிக்கு திரும்பினர். இந்த நிலையில் போராட்டத்தின் போது அதிகாரிகளை சிறைபிடித்த தொழிலாளர்கள் அந்தோணிராஜ், பூவராகவன், சங்கர் ஆகியோர் மீது என்.எல்.சி. அதிகாரிகள் புகார் கொடுத்ததின் பேரில் அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு இருந்தது. அவர்கள் நேற்று காலை பணிக்கு வந்தனர். அவர்கள் பணி செய்ய அனுமதிக்கப்படவில்லை. தடையில்லா சான்று பெற்றுவர வேண்டும் என்று ஒப்பந்ததாரர்கள் கூறினார்கள்.
இதை கண்டித்து தொழிலாளர்கள் மீண்டும் போராட்டம் நடத்த முடிவு செய்தனர். அதன்படி சுரங்கம் 1-ல் இன்று உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்ட னர்.
போராட்டத்தில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்களுடன் அதிகாரிகள் மற்றும் தொழிற் சங்க பிரமுகர்கள் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.
இது குறித்து ஏ.ஐ.டி.யூ,சி. மாவட்ட செயலாளர் சேகர் கூறியதாவது:-
தொழிலாளர்கள் 3 பேர் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டதற்காக அவர்களுக்கு அனுமதி பாஸ் வழங்கப்படவில்லை.
மாவட்ட நிர்வாகம் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்பட மாட்டாது என்று உத்தரவாதம் அளித்து இருந்தது.
இந்த நிலையில் தொழிலாளர்கள் மீது நடவடிக்கை எடுத்து, பணி தர மறுப்பது மீண்டும் தொழிலாளர்களுக்கிடையே குழப்பமான சூழ்நிலையை ஏற்படுத்தியுள்ளது. எனவே, என்.எல்.சி. நிர்வாகம் உடனடியாக இந்த பிரச்சனைக்கு சுமூக தீர்வு காண வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
தொழிலாளர்கள் போராட்டத்தையொட்டி என்.எல்.சி. சுரங்கத்துக்குள் மத்திய பாதுகாப்பு படையினர் குவிக்கப்பட்டுள்ளனர். சுரங்கத்துக்கு வெளியே நெய்வேலி போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
கடலூர் மாவட்டம், காட்டுமன்னார்கோவில் அருகே உள்ள வ.கொளக் குடியை சேர்ந்தவர் ராமர் (வயது 41). இவரது மனைவி அஞ்சாலாட்சி(36). இவர்கள் குடும்ப பிரச்சனை காரணமாக கடந்த 5 ஆண்டுகளாக பிரிந்து வாழ்ந்து வருகின்றனர்.
அஞ்சலாட்சி லால் பேட்டையில் உள்ள தனியார் பள்ளியில் குழந்தைகள் பராமரிப்பாளராக வேலை செய்து வந்தார். இவர்களுக்கு 2 மகள்கள், ஒரு மகன் உள்ளனர். இந்நிலையில் நேற்று பள்ளியின் பின்புறம் அஞ்சாலாட்சி வெட்டுக்காயங்களுடன் உயிருக்கு போராடி கொண்டிருந்தார்.
உடனே அங்கிருந்த பொதுமக்கள் அஞ்சாலாட்சியை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் காட்டுமன்னார்கோவில் அரசு மருத்துவனைக்கு கொண்டு சென்றனர். டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர். ஆனால் அவர் சிகிச்சை பலனின்றி இறந்தார்.
தகவல் அறிந்த காட்டு மன்னார்கோவில் போலீசார் அங்கு விரைந்து சென்றனர். அங்கு கத்தியோடு நின்றிருந்த ராமரை போலீஸ் நிலையம் அழைத்து வந்து விசாரணை செய்தனர். விசாரணையில், ராமர் கூறியதாவது:-
எனக்கும் மனைவி அஞ்சாலாட்சிக்கும் இடையே குடும்ப பிரச்சனை இருந்து வந்தது. நாங்கள் தனித்தனியாக வாழ்ந்து வந்தோம்.
இந்நிலையில் அஞ்சலாட்சியை தன்னுடன் சேர்ந்து வாழ பலமுறை அழைத்தேன். ஆனால் அஞ்சாலாட்சி அதை மறுத்தார். இதனால் மனைவி மீது சந்தேகமடைந்தேன். அவரை கொலை செய்ய திட்டமிட்டேன்.
நேற்று மதியம் பள்ளியின் பின்புறம் நின்ற அஞ்சாலாட்சியை யாரும் எதிர்பாராத வகையில் கத்தியால் வெட்டிக் கொன்றேன்.
இவ்வாறு அவர் போலீசில் கூறினார்.
இதையொட்டி ராமரை போலீசார் கைது செய்தனர்.
நெய்வேலி என்.எல்.சி. நிறுவனத்தில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஒப்பந்த தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். சுரங்கம் 1-ஏ பகுதியில் வேலை பார்க்கும் ஒப்பந்த தொழிலாளர்களின் வேலை நாட்களை 26-ல் இருந்து 19 நாட்களாக என்.எல்.சி. நிர்வாகம் குறைத்தது.
இதனை கண்டித்தும், மீண்டும் 26 நாட்கள் பணி வழங்க கோரியும் ஒப்பந்த தொழிலாளர்கள் கடந்த மாதம் 12-ந் தேதி வேலை நிறுத்த போராட்டத்தை தொடங்கினர். இதுதொடர்பாக நடத்தப்பட்ட பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்ததையடுத்து ஒப்பந்த தொழிலாளர்களின் வேலைநிறுத்தப் போராட்டம் நீடித்தது.
இந்நிலையில், மாவட்ட ஆட்சியர், மாவட்ட கண்காணிப்பாளர் ஆகியோர் தலைமையில் இன்று மீண்டும் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. அப்போது, ஒப்பந்த தொழிலாளர்களுக்கு ஏற்கனவே இருந்ததுபோன்று, மாதத்திற்கு 26 நாட்கள் வேலை தருவதாக என்.எல்.சி. நிர்வாகம் உறுதி அளித்தது. இதையடுத்து ஒப்பந்த தொழிலாளர்கள், 23 நாட்களாக நடத்தி வந்த வேலைநிறுத்தப் போராட்டத்தை திரும்ப பெற்றனர்.
குறிச்சிப்பாடியை அடுத்த மீனாட்சிபேட்டையை சேர்ந்தவர் சஞ்சீவ்ராவ்(வயது 45). தொழிலாளி. இவர் அங்குள்ள பாலத்தின் அருகே நடந்து சென்றபோது அதே பகுதியை சேர்ந்த சரத்(22) மோட்டார் சைக்கிளில் வந்தார்.
அப்போது திடீரென்று சஞ்சீவ்ராவ் மீது மோட்டார் சைக்கிள் மோதியது. இதுதொடர்பாக அவர் சரத்திடம் தட்டிக்கேட்டார். இதில் 2 பேருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அதில் ஆத்திரமடைந்த சரத் கத்தியால் சஞ்சீவ்ராவ் முகத்தில் வெட்டினார்.
இதில் படுகாயம் அடைந்த அவர் குறிஞ்சிப்பாடி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த சம்பவம் தொடர்பாக குறிஞ்சிப்பாடி போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்கு பதிவு செய்து சரத்தை கைது செய்தனர்.






