என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஸ்ரீமுஷ்ணம் அருகே மணல் குவாரியில் வெடி குண்டு வீச்சு
    X

    ஸ்ரீமுஷ்ணம் அருகே மணல் குவாரியில் வெடி குண்டு வீச்சு

    ஸ்ரீமுஷ்ணம் அருகே மணல் குவாரியில் வெடி குண்டு வீசிய மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

    ஸ்ரீமுஷ்ணம்:

    கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் அருகே உள்ள மதகளிர் மாணிக்கம் பகுதியில் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு அரசு மணல்குவாரி திறக்கப்பட்டது. இந்த மணல் குவாரியால் நீர்வளம் பாதிக்கும் என்று பொதுமக்கள் குற்றம் சாட்டினர். இந்த குவாரியில் மணல் அள்ள எதிர்ப்பு தெரிவித்து மதகளிர் மாணிக்கம் மற்றும் அதை சுற்றி உள்ள பொதுமக்கள் பல்வேறு போராட்டங்கள் நடத்தி வந்தனர்.

    கடந்த வாரம் அனைத்து கட்சி சார்பில் தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடத்தினர். அதன் பின்னரும் மணல் குவாரியில் மணல் அள்ளுவதை நிறுத்தவில்லை. இதனால் பொதுமக்கள் தரப்பில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டு வந்தது. இதனால் மணல்குவாரியில் 10 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வந்தனர்.

    இந்தநிலையில் நேற்று இரவு மணல் குவாரியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் நள்ளிரவு எசனூர் பகுதியில் உள்ள பள்ளிக்கூடத்துக்கு தூங்க சென்றுவிட்டனர். இதனை நோட்டமிட்ட மர்மநபர்கள் சிலர் நள்ளிரவில் மணல் குவாரிக்கு வந்தனர்.

    பின்னர் அங்கு நிறுத்தியிருந்த பொக்லைன் எந்திரத்தின் மீது நாட்டு வெடிகுண்டை வீசினர். அது பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறியது. இதில் பொக்லைன் எந்திரம் சேதம் அடைந்தது. அங்கு மணல் ஏற்றுவதற்காக லாரியுடன் காத்திருந்த டிரைவர்கள் இந்த சத்தத்தை கேட்டு அதிர்ச்சியடைந்தனர்.

    இதுகுறித்து ஸ்ரீமுஷ்ணம் போலீசில் புகார் செய்யப்பட்டது. இன்ஸ்பெக்டர் பீர்பாட்ஷா தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். மணல் குவாரியில் மணல் அள்ளுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து மர்ம மனிதர்கள் நாட்டு வெடிகுண்டு வீசியது தெரியவந்தது. அந்த மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

    மேலும் இந்த பகுதியில் அசம் பாவித சம்பவங்கள் நடை பெறாமல் தடுக்க 300-க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பதட்டத்தை ஏற்படுத்தி உள்ளது.

    Next Story
    ×