என் மலர்tooltip icon

    செய்திகள்

    கடன் தொல்லை: 2 மகன்களை கிணற்றில் வீசி கொன்ற தாய்
    X

    கடன் தொல்லை: 2 மகன்களை கிணற்றில் வீசி கொன்ற தாய்

    குறிஞ்சிப்பாடி அருகே பெற்ற 2 மகன்களையும் கிணற்றி தள்ளி கொன்று விட்டு தாயும் தற்கொலை செய்ய முயன்ற சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது.

    குறிஞ்சிப்பாடி:

    கடலூர் அருகே உள்ள கோதண்டராமபுரத்தைச் சேர்ந்தவர் வெங்கடேசன். இவரது மனைவி சாய்பாபு (வயது 35). இவர்களுக்கு கோகுல் (8), கோ‌ஷன் (7) என்ற 2 மகன்கள் உள்ளனர்.

    கோகுல் அந்த பகுதியில் உள்ள பள்ளி ஒன்றில் 3-ம் வகுப்பும், கோ‌ஷன் 2-ம் வகுப்பும் படித்து வந்தனர்.

    வெங்கடேசன் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார். சாய்பாபு தனது 2 மகன்களுடன் கோதண்டராமபுரத்தில் தனியாக வசித்து வந்தார்.

    கணவர் இறந்து விட்டதால் சாய்பாபு குடும்பம் நடத்த போதிய பணம் இல்லாமல் தவித்து வந்தார். மகன்களின் படிப்பு செலவு மற்றும் வீட்டு செலவுக்கு கஷ்டப்பட்டு வந்தார்.

    அக்கம் பக்கத்தினர் மற்றும் உறவினர்களிடம் கடன் வாங்கி குடும்ப செலவை சமாளித்து வந்தார். இந்த நிலையில் சாய்பாபுவிடம் கடன் கொடுத்தவர்கள் அந்த பணத்தை திருப்பி கேட்டனர். ஆனால், சாய்பாபு பணத்தை கொடுக்க முடியாமல் அவதிப்பட்டார்.

    வாங்கிய கடன்களை திருப்பி கொடுக்க முடிய வில்லையே என்ற மனவேதனையில் இருந்து வந்தார்.

    இந்த நிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு தனது 2 மகன்களையும் அழைத்து கொண்டு கடலூர் மாவட்டம் குள்ளஞ்சாவடி அடுத்த சிம்மராவுத்தன்குப்பத்தில் உள்ள உறவினர் வீட்டுக்கு சென்றார்.


    அங்கும் சாய்பாபு யாருடனும் பேசாமல் இருந்தார். கடன் தொகையை கொடுக்க முடியாததால் அவர் தனது 2 மகன்களுடன் தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்தார்.

    அதன்படி இன்று காலை உறவினரின் வீட்டின் அருகே உள்ள கிணற்று பகுதிக்கு தனது 2 மகன்களையும் சாய்பாபு அழைத்து கொண்டு சென்றார். கோகுல், கோ‌ஷன் ஆகிய 2 பேரையும் முதலில் அந்த கிணற்றில் தூக்கி வீசினார். பின்னர் தானும் கிணற்றுக்குள் குதித்தார்.

    இதையறிந்த அக்கம் பக்கத்தினர் அங்கு விரைந்து வந்தனர். கிணற்றுக்குள் குதித்து 3 பேரையும் காப்பாற்ற முயற்சி செய்தனர். ஆனால் கோ‌ஷன், கோகுல் ஆகிய 2 பேரும் கிணற்றில் மூழ்கி இறந்து விட்டனர். தண்ணீரில் தத்தளித்து கொண்டிருந்த சாய்பாபுவை மட்டும் உயிருடன் மீட்டனர்.

    இது குறித்து குள்ளஞ்சாவடி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். கிணற்றில் மூழ்கி பலியான கோ‌ஷன், கோகுல் ஆகியோரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக குறிஞ்சிப்பாடி அரசு ஆஸ் பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து சாய்பாபுவிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    பெற்ற 2 மகன்களையும் கிணற்றி தள்ளி கொன்று விட்டு தாயும் தற்கொலை செய்ய முயன்ற சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பையும், சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது.

    Next Story
    ×