என் மலர்
சென்னை
- ஒரு பொய்யை உண்மை என நம்பவைக்கும் கோயபல்ஸின் தத்துவம்.
- தமிழ்நாடு அரசு மொழிக்கொள்கையில் நாடகமாடுகிறது என்று கூறுதெல்லாம் எந்த வகையில் நியாயம்.
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி மாநில தலைவர் செல்வப்பெருந்தகை வெளியிட்டுள்ள எக்ஸ் தள பக்கத்தில் கூறியிருப்பதாவது:-
ஒரு பொய்யை உண்மை என நம்பவைக்கும் கோயபல்ஸின் தத்துவம்.
பி.எம்.ஸ்ரீ. பள்ளிகளை தமிழ்நாடு அரசு ஏற்கும் என்று சொல்லவில்லை. ''பி.எம்.ஸ்ரீ. பள்ளிகள் திட்டம் பற்றி ஆராய ஒரு குழு அமைத்துள்ளோம், அதன் பரிந்துரைகள் அடிப்படையில் முடிவுகள் எடுப்போம்'' என்று தான் 2024 மார்ச் மாதம் 15 ஆம் தேதி அன்றைய தலைமைச் செயலாளர் திரு ஷிவ்தாஸ் மீனா அவர்கள், ஒன்றிய அரசுக்கு கடிதம் எழுதி உள்ளார். அந்தக் கடிதத்தைத்தான் ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் வெளியிட்டுள்ளார்.
அக்கடிதத்தை படித்தாலே, அதன் அர்த்தம் அனைவருக்கும் புரிந்துவிடும். ஆனால், தமிழ்நாடு அரசு மொழிக்கொள்கையில் நாடகமாடுகிறது என்று கூறுதெல்லாம் எந்த வகையில் நியாயம் என்று புரியவில்லை.
மருத்துவம் பயின்ற ஐயா அன்புமணி ராமதாஸ் போன்றவர்கள் கடிதத்தில் உள்ள உண்மையை மக்களுக்கு தெரிவிக்காமல், அவதூறு கூறுவது எந்த வகையிலும் ஏற்றுக்கொள்ளமுடியாது.
ஒரு பொய்யை உண்மை என நம்பவைக்கும்வரை அதைப்பற்றி திரும்பத் திரும்ப உரக்கப் பேச வேண்டும் என்பது கோயபல்ஸின் தத்துவம்.
இவ்வாறு அவர் கூறினார்.
- பா.ஜ.க. தமிழ் நாட்டின் அரசியல் எதிரிகள்.
- தி.மு.க. நயவஞ்சகர்கள் அல்ல.
தமிழ்மொழி விஷயத்தில் தி.மு.க. நாடகமாடுவதாக பாராளுமன்றத்தில் மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.
இதற்கு ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ பதிலடி கொடுத்தார். அவர் கூறியதாவது:-
அவர்கள் (பா.ஜ.க.) தமிழ் நாட்டின் அரசியல் எதிரிகள். அவர்கள் ஏதாவது சொல்ல வேண்டும். தி.மு.க. நயவஞ்சகர்கள் அல்ல. அவர்கள் (பா.ஜ.க.) நயவஞ்சகர்கள்.
இவ்வாறு வைகோ கூறினார்.
- நெல் மூட்டைகள் வீணானதற்கு தமிழக அரசே பொறுப்பேற்று அதற்கான இழப்பீட்டை அரசே ஏற்றுக்கொள்ள வேண்டும்.
- நெல்கொள்முதல் நிலையங்களில் நெல்மூட்டைகளைப் பாதுகாக்க தொடர் கண்காணிப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.
சென்னை:
த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
தமிழகத்தில் டெல்டா மாவட்டமான நாகை மாவட்டப் பகுதியில் சுமார் 1 லட்சத்து 60 ஆயிரம் ஏக்கரில் பயிரிடப்பட்ட சம்பா குறுவை சாகுபடியில் சுமார் 1 லட்சத்து 80 ஆயிரம் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டது. பல நெல்கொள்முதல் நிலையங்களில் கொள்முதல் செய்யப்பட்ட நெல்மூட்டைகள் மழையில் நனைந்து வீணாகிவிட்டது.
நெல்கொள்முதல் நிலையங்களில் திறந்த வெளியில் பாதுகாப்பற்ற முறையில் சுமார் 30 ஆயிரம் டன் நெல் மூட்டைகள் வைக்கப்பட்டிருந்ததால், நேற்று பெய்த மழையில் நனைந்து முற்றிலும் சேதமுற்றன.
நெல் மூட்டைகள் வீணானதற்கு தமிழக அரசே பொறுப்பேற்று அதற்கான இழப்பீட்டை அரசே ஏற்றுக்கொள்ள வேண்டும். மேலும் நெல்கொள்முதல் நிலையங்களில் நெல்மூட்டைகளைப் பாதுகாக்க தொடர் கண்காணிப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.
இவ்வாறு அவர் கூறி உள்ளார்.
- பாராளுமன்றத் தொகுதி மறுசீரமைப்பு - இந்தித் திணிப்பு என்று தமிழ்நாட்டின் உரிமைகளுக்கு எதிராகச் செயல்படும் ஒன்றிய அரசு.
- பா.ஜ.க. அரசுக்கு எதிரான தமிழ்நாடு போராடும் தமிழ்நாடு வெல்லும்! கண்டனப் பொதுக்கூட்டங்கள் இன்று மாலை தமிழ்நாடு முழுவதும் நடைபெறுகின்றன.
தி.மு.க. தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,
பாராளுமன்றத் தொகுதி மறுசீரமைப்பு - இந்தித் திணிப்பு என்று தமிழ்நாட்டின் உரிமைகளுக்கு எதிராகச் செயல்படும் ஒன்றிய பா.ஜ.க. அரசுக்கு எதிரான தமிழ்நாடு போராடும் தமிழ்நாடு வெல்லும்! கண்டனப் பொதுக்கூட்டங்கள் இன்று மாலை தமிழ்நாடு முழுவதும் நடைபெறுகின்றன…
திருவள்ளூரில் உங்களைச் சந்திக்கிறேன்!
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- கலைஞர் இருக்கிற காலத்தில் இருந்தே எங்கள் வீட்டில் தொடர்ந்து காதல் திருமணம்.
- மணமக்களுக்கு ஒரே ஒரு வேண்டுகோள். உடனே குழந்தை பெற்றுக் கொள்ளுங்கள்.
சென்னை:
சென்னை கிழக்கு மாவட்ட தி.மு.க. சார்பில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாளையொட்டி, மக்கள் முதல்வரின் மனித நேய விழா என்ற பெயரில் அமைச்சர் பி.கே.சேகர்பாபு தினமும் நிகழ்ச்சி நடத்தி வருகிறார்.
அந்த வகையில் சென்னை கலைவாணர் அரங்கில் இன்று 72 ஜோடி திருமணத்தை துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நடத்தி வைத்து 50 வகையான சீர்வரிசைகளை மணமக்களுக்கு வழங்கினார்.
இந்த விழாவில் அமைச்சர் பி.கே.சேகர்பாபு வரவேற்று பேசினார். மணமக்களை வாழ்த்தி துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசியதாவது:-
சேகர்பாபுவுக்கு 2 முகங்கள் உண்டு. ஏனென்றால் அத்தனை நிகழ்ச்சிகள் நடத்துகிறார். எல்லா இடத்திலேயும் இருக்கிறீர்கள். எல்லோருக்கும் சிம்ம சொப்பனமாக போட்டியாக இருக்கிறீர்கள். முழு நேர அரசியல்வாதி. அவர் நடத்துகிற நிகழ்ச்சிக்கு பக்கத்திலே யாருமே நிற்க முடியாது. யாருமே தெரிய மாட்டார்கள். இதற்கு பல அர்த்தங்கள் உண்டு. அது மேடையிலே இருக்கிற அத்தனை பேருக்கும் தெரியும். அவருக்கும் தெரியும். அமைச்சர் சேகர்பாபு ஆயிரக்கணக்கான திருமணங்களை செய்து வைத்து உள்ளார். 3 வருடத்தில் மட்டும் 1700 திருமணங்களை அவரது துறை சார்பாக நடத்தி வைத்துள்ளார். அந்த வகையில் இன்று 72 ஜோடி திருமணங்களை நடத்தி வைத்து உள்ளார்.
சீர்திருத்த முறையில், சுயமரியாதை திருமணத்தை நடத்தி வைத்திருக்கிறோம். இதில் கலப்பு திருமணங்கள் மட்டுமின்றி, காதல் திருமணங்கள் இருக்கும் என நம்புகிறேன்.
இந்த காலத்தில் கலப்பு திருமணம் நடப்பது பெரிய விசயம். அதில் காதல் திருமணம் என்பது இன்னும்... எனக்கும் காதல் திருமணம்தான். ஆனால் எங்கள் வீட்டில் எந்த பிரச்சனையும் இல்லை.
கலைஞர் இருக்கிற காலத்தில் இருந்தே எங்கள் வீட்டில் தொடர்ந்து காதல் திருமணம். கிட்டத்தட்ட இரண்டு தலைமுறையாக. எங்கள் வீட்டில் போய் யாராவது காதல் திருமணம் இல்லை, பெற்றோர் பார்த்து வைத்த திருமணம் என்றால் எங்கள் தாத்தா ஒரு மாதிரியாக பார்ப்பார். அந்த அளவுக்கு எங்கள் வீட்டில் காதல் திருமணம். பலருக்கும் பல அனுபவங்கள் இருக்கிறது.
நமது அரசு அமைந்த பிறகு முதலமைச்சர் போட்ட முதல் கையெழுத்து மகளிருக்கான கையெழுத்துதான். விடியல் பயணம் திட்டம். மகளிருக்கு கட்டணமில்லா பேருந்து திட்டம். கிட்டத்தட்ட 4 வருடங்களில் மட்டும் 625 கோடி முறை பயணங்கள் மேற்கொண்டு உள்ளனர். இதுதான் இந்த திட்டத்தோட வெற்றி. ஒவ்வொரு மகளிரும் மாதம் ரூ.800-ல் இருந்து 850 வரை சேமிக்கிறார்கள்.
நம் தேர்தல் அறிக்கையில் சொன்ன திட்டம், செயல்படுத்த முடியாத திட்டம் இப்போது கிட்டத்தட்ட 25 மாதமாக செயல்படுத்தும் கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம். ஒவ்வொரு மாதமும் 1 கோடியே 15 லட்சம் மகளிருக்கு மாதம் ரூ.1000 வழங்கிக் கொண்டு இருக்கிறோம். இப்படி பல்வேறு திட்டங்களை முதலமைச்சர் செய்து கொண்டு இருக்கிறார்.
நம் தலைவர் 2019-ம் ஆண்டு முதல் சந்தித்த அனைத்து தேர்தலிலும் வெற்றி பெற்று வருகிறார். கிட்டத்தட்ட 11 தேர்தலில் தமிழ்நாட்டு மக்கள் நமக்கு வெற்றியை தந்து உள்ளனர். மீண்டும் சட்டமன்ற தேர்தல் 2026-ல் வரப்போகுது. தலைவர் அதில் அத்தனை பேருக்கும் இலக்கு கொடுத்து உள்ளார். 243-ல் ஜெயித்து காட்ட வேண்டும் என்று சொல்லி உள்ளார். அது நீங்கள் இருக்கிற நம்பிக்கையில் தான்.
எனவே மணமக்களுக்கு ஒரே ஒரு வேண்டுகோள். உடனே குழந்தை பெற்றுக் கொள்ளுங்கள். நிறைய பெற்றுக் கொள்ளாதீர்கள். அதிலும் மத்திய அரசு பார்த்து கொண்டிருக்கிறது.
அதாவது ஒன்றிய அரசு குடும்பக் கட்டுப்பாட்டை வலியுறுத்தி ஜனத்தொகை அதிகமாக இருக்கிறது. அதை கட்டுப்படுத்த வேண்டும் என்று சொல்லியது. அதை வெற்றிகரமாக செய்து கொடுத்தது தமிழக அரசு. அதற்காக இப்போது நாம் தண்டிக்கப்படுகிறோம்.
இப்போது தொகுதி மறுசீரமைப்பு கொண்டு வரப் போகிறார்கள். இங்கு பாராளுமன்ற எம்.பி.க்கள் எண்ணிக்கை 39. இந்த மறுசீரமைப்பு வந்தால் 8 தொகுதி குறைந்து 31 தொகுதியாகி விடும்.
தமிழ்நாட்டில் மக்கள் தொகை 7 கோடி. ஆனால் குடும்பக் கட்டுப்பாட்டை சரியாக செய்யாத, சரியாக விழிப்புணர்வை ஏற்படுத்தாத வட மாநிலங்கள் இதனால் பயன் அடைய போகிறார்கள்.
இவ்வாறு அவர் பேசினார்.
- வைரஸ் காய்ச்சல் மற்றும் சுவாச நோய்த்தொற்றுகள் தற்போது அதிகமாக காணப்படுகிறது.
- காய்ச்சல், இருமல் மற்றும் சளியுடன் பலர் மருத்துவமனைக்கு சிகிச்சை பெற வருகிறார்கள்.
சென்னை:
சென்னையில் தற்போது வைரஸ் காய்ச்சல் தாக்கம் தொடர்ந்து காணப்படுகிறது.
தமிழகத்தில் கடந்த ஆண்டு ஜூன், ஜூலை மாதங்களில் தென்மேற்கு மழை தொடங்கியதால் பருவநிலையில் மாற்றம் ஏற்பட்டு இன்புளூயன்சா வைரஸ் காய்ச்சல் பரவத் தொடங்கியது. கடந்த ஆகஸ்டு மாதத்தில் இருந்தே வைரஸ் காய்ச்சல் பாதிப்பு அதிகரிக்க தொடங்கியது.
வழக்கமாக மழைக்காலம் முடிந்து பருவநிலை மாறிய பிறகு வைரஸ் காய்ச்சல் பாதிப்புகளும் குறைந்து விடும். ஆனால் இந்தமுறை வைரஸ் காய்ச்சல் பாதிப்பு குறையாமல் 7 மாதங்களை கடந்த பிறகும் நீடிக்கிறது. இதனால் சென்னையில் வைரஸ் காய்ச்சல் காரணமாக ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற வரும் நோயாளிகளின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
இதுகுறித்து மருத்துவர்கள் கூறியதாவது:-
சென்னையில் கடந்த 7 மாதங்களுக்கும் மேலாக காய்ச்சல் மற்றும் சுவாச நோய் தொற்றுக்களுடன் நோயாளிகள் சிகிச்சை பெற வருகிறார்கள். வைரஸ் காய்ச்சல் மற்றும் சுவாச நோய்த்தொற்றுகள் தற்போது அதிகமாக காணப்படுகிறது. அரசியல் கட்சிகள் நடத்தும் கூட்டங்கள், பொழுது போக்கு நிகழ்ச்சியில் பொதுமக்கள் கூட்டமாக கூடுதல் ஆகிய காரணங்களாலும், வானிலை மாற்றம் காரணமாகவும் தற்போது பாதிப்பு அதிகரித்து வருவதாக சந்தேகிக்கப்படுகிறது.
காய்ச்சல், இருமல் மற்றும் சளியுடன் பலர் மருத்துவமனைக்கு சிகிச்சை பெற வருகிறார்கள். அவர்களுக்கு பரிசோதித்து பார்க்கும் போது 60 சதவீதம் பேருக்கு இன்புளூயன்சா வைரஸ் பாதிப்பு காணப்படுகிறது.
பெரும்பாலான நோயாளிகளுக்கு இன்புளூயன்ஸா ஏ வைரஸ் மற்றும் குறிப்பாக அதன் துணை வைரஸ்களான எச்1 என்1, எச்3 என்2, ஆர்.எஸ்.வி. மற்றும் அடினோ வைரஸ் போன்ற வைரஸ்கள் கலவையாக காணப்படுகின்றன.
பெரும்பாலான மக்கள் ஒரு வாரத்திற்குள் காய்ச்சல் பாதிப்பில் இருந்து மீண்டாலும், சிலருக்கு தொடர்ச்சியான இருமல் மற்றும் உடல்வலி ஏற்படுகிறது. இணை நோய்கள் உள்ள வயதான நோயாளிகளுக்கு பாதிப்புகள் அதிகரிக்கலாம்.
இருமல், தும்மல் அல்லது பேசும்போது சுவாச துளிகள் மூலம் இந்த வைரஸ் காய்ச்சல் பரவுகிறது. எனவே பொதுமக்கள் அதிக கூட்டமான பகுதிக்கு சென்றால் அவசியமாக முக கவசம் அணிவது நல்லது. இதன் மூலம் காய்ச்சல் பரவுவது தடுக்கப்படும்.
இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.
- கோவை, நீலகிரி, ஈரோடு மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது.
- புதுச்சேரி மற்றும் காரைக்காலில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது.
சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது:
* தமிழ்நாட்டில் 6 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு உள்ளது.
* கோவை, நீலகிரி, ஈரோடு, திருப்பூர், திண்டுக்கல், தேனி மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது.
* தமிழ்நாட்டின் ஒரு சில இடங்கள், புதுச்சேரி மற்றும் காரைக்காலில் 18-ந்தேதி வரை மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- தமிழகத்தில் 15 லட்சம் மாணவர்கள் இந்தி பயில்வதாக தமிழக அரசு கூறுகிறது.
- கல்வி உரிமையில் கனிமொழியின் மகனுக்கு ஒரு நியாயம், ஏழை மாணவனுக்கு ஒரு நியாயமா?
தூத்துக்குடி:
தென்காசி மாவட்டம் புளியங்குடியில் இன்று மாலை பா.ஜ.க. கட்சி சார்பில் பொதுக்கூட்டம் நடக்கிறது. இதில் கலந்து கொள்வதற்காக பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை விமானம் மூலம் இன்று மதியம் தூத்துக்குடி வந்தார். விமான நிலையத்தில் அவர் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது கூறியதாவது:-
தமிழக எம்.பி.க்கள் மும்மொழி கொள்கையில் தமிழக மக்களை தவறாக வழி நடத்துகிறார்கள். இதை சுட்டிக்காட்டவே பாராளுமன்றத்தில் கல்வி மந்திரி தர்மேந்திர பிரதான் பேசினார். ஆனால் தமிழக மக்களை அவர் பேசியதாக கூறுகின்றனர்.
முதலமைச்சரை குற்றம் சாட்டினால் அது தமிழக மக்களை குற்றம் சாட்டியதாக ஆகுமா?.
தமிழகத்தில் 4479 மெட்ரிக் பள்ளிகள் செயல்பட்டு வருகிறது. இங்கு மும்மொழிகள் கற்பிக்கப்பட்டு வருகிறது. சி.பி.எஸ்.இ. பள்ளிகளில் 16 லட்சம் பேர் இந்தி பயில்கிறார்கள். தமிழகத்தில் 15 லட்சம் மாணவர்கள் இந்தி பயில்வதாக தமிழக அரசு கூறுகிறது. விரைவில் 30 லட்சம் மாணவர்கள் இந்தி கற்பதாக ஒப்புக்கொள்வார்கள்.
தமிழக பள்ளிகளில் மாணவர்களுக்கு பாடம் கற்பிக்கப்படுவதற்கு பதில் வேறு ஏதோ கற்பிக்கப்படுகிறது. தமிழக கல்வித்துறை திவாலாகி விட்டது.
தமிழக அரசின் மதுபான கொள்கை மூலம் ரூ.1000 கோடி கருப்பு பணம் மாற்றப்பட்டுள்ளது. இந்த பணம் தி.மு.க.விற்கு சென்றுள்ளதாக தெரிகிறது. இதனை வைத்து 2026 தேர்தலை எதிர்கொள்ள திட்டமிட்டுள்ளனர்.
டாஸ்மாக் மதுபான முறைகேட்டை மறைக்கவே தமிழக எம்.பி.க்கள் பாராளுமன்றத்தில் ஓவர் பெர்மாமன்ஸ்' செய்து வருகிறார்கள். டாஸ்மாக் விற்பனையில் சுமார் 1000 கோடி ரூபாய் முறைகேடு நடைபெற்றுள்ளது.
கனிமொழி எம்.பி.யின் மகன் சிங்கப்பூர் குடியுரிமை பெற்றவர். அவர் எங்கு கல்வி கற்றுக்கொண்டு இருக்கிறார் என்பது தெரியுமா? கல்வி உரிமையில் கனிமொழியின் மகனுக்கு ஒரு நியாயம், ஏழை மாணவனுக்கு ஒரு நியாயமா?
அமைச்சர் பி.டி.ஆர். மும்மொழி கொள்கைளை அறிவற்றவர்கள்தான் பேசுவார்கள் என்று கூறியுள்ளார். அவரது மகன் மும்மொழி கற்பதால் பி.டி.ஆருக்கு அறிவு இல்லை என்று எடுத்துக்கொள்ளலாமா?
இதற்கு முன்பு தேர்தல் நேரத்தில் தி.மு.க.வினர் வீடுகளில் சோதனை நடத்திக்கொண்டே காங்கிரஸ் கட்சி சட்டமன்ற தேர்தலில் தொகுதி பேரம் நடத்தியது. இதுதான் கூட்டாட்சி தத்துவமா?
இவ்வாறு அவர் கூறினார்.
- திசை திருப்பும் முயற்சிகளில் தமிழக அரசு ஈடுபட்டு வருவது கண்டிக்கத்தக்கது.
- திசை திருப்பும் முயற்சிகளில் தமிழக அரசு ஈடுபட்டு வருவது கண்டிக்கத்தக்கது.
சென்னை:
பா.ம.க. தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
தமிழ்நாட்டில் மது வணிகத்துக்கு பொறுப்பு வகிக்கும் டாஸ்மாக் நிறுவனத்தின் தலைமை அலுவலகம் மற்றும் பல்வேறு மது ஆலைகளில் அமலாக்கத் துறையினர் நடத்திய சோதனைகளில் குறைந்தது ரூ.1000 கோடி அளவுக்கு முறைகேடுகள் நடத்தப்பட்டிருப்பது தெரிய வந்திருப்பதாக வெளியாகியுள்ள செய்திகள் பெரும் அதிர்ச்சியளிக்கின்றன.
டாஸ்மாக் நிறுவனத்தில் நடைபெறும் ஊழல்கள் குறித்து புதிது புதிதாக குற்றச்சாட்டுகள் வெளியாகிவரும் நிலையில் அவற்றை முழுமையாக மறைத்து விட்டு, திசை திருப்பும் முயற்சிகளில் தமிழக அரசு ஈடுபட்டு வருவது கண்டிக்கத்தக்கது. அமலாக்கத்துறை சோதனையில் தெரிய வந்துள்ள ரூ.1000 கோடி டாஸ்மாக் ஊழலால் பயனடைந்தவர்கள் யார், யார்? என்பதை மக்களுக்கு தெரிவிக்க வேண்டியதும், அவர்களுக்கு தண்டனை பெற்றுத்தர வேண்டியதும் அவசியம் ஆகும்.
தமிழகக் காவல்துறை அதை செய்யும் என்ற நம்பிக்கை தமிழ்நாட்டு மக்களுக்கு இல்லை. எனவே, டாஸ்மாக் ஊழல்கள் குறித்து சி.பி.ஐ. விசாரணைக்கு தமிழ்நாடு அரசு ஆணையிட வேண்டும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
- கல்வி நிதியை பெறாமல் தி.மு.க. அரசு அரசியல் செய்கிறது.
- நிதியை மத்திய அரசு மறுப்பது நியாயம் அல்ல.
சென்னை:
பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
தமிழ்நாட்டில் 24,338 அரசு தொடக்கப் பள்ளிகளுக்கு இணைய வசதி பெறுதல் மற்றும் 14,665 அரசு தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளி களுக்கும், 4,934 அரசு உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளுக்கும் இணைப்புக் கட்டணம் மற்றும் ஒரு முறைக் கட்டணம் செலுத்த வேண்டியுள்ளது.
இதற்குத் தேவையான ரூ.189.11 கோடியை பள்ளிக் கல்வித்துறை வழங்கியிருக்க வேண்டும். ஆனால், பேரூராட்சிகளில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் ரூ.5.49 கோடியை மாநில நிதியில் இருந்து ஒதுக்கீடு செய்துள்ள பள்ளிக்கல்வித்துறை, மீதமுள்ள ரூ.183.62 கோடியை உள்ளாட்சி அமைப்புகள் தான் ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று ஆணையிட்டுள்ளது.
ஊரக உள்ளாட்சி அமைப்புகளில் போதிய நிதியும், வருவாயும் இல்லாமல் வளர்ச்சிப் பணிகள் முடங்கிக் கிடக்கின்றன.
இந்த நிலையில் இணைய வசதிக் கட்டணத்தையும் உள்ளாட்சி அமைப்புகளே ஏற்க வேண்டும் என்றால், அதை ஊரக உள்ளாட்சி அமைப்புகளால் ஏற்கமுடியாது. அதனால், ஊரக உள்ளாட்சிகளில் அடிப்படை வசதிகளைக் கூட செய்ய முடியாத நிலை உருவாகும். அதை அரசு தவிர்க்க வேண்டும்.
தமிழ்நாட்டில் அரசு பள்ளிகளுக்கான இணைய வசதிக் கட்டணம் ஒருங்கிணைந்த கல்வித் திட்ட நிதியிலிருந்து வழங்கப்பட்டு வந்தது. மும்மொழிக் கொள்கையை செயல்படுத்த தமிழக அரசு மறுத்து விட்டதையடுத்து அந்த நிதியை மத்திய அரசு நிறுத்தி விட்டது.
அத்தகைய சூழலில் இணையவசதிக் கட்டணத்தை தமிழக அரசு தான் ஏற்றுக்கொள்ள வேண்டுமே தவிர உள்ளாட்சி அமைப்புகள் மீது திணிக்கக் கூடாது.
தமிழகத்துக்கு வழங்க வேண்டிய நிதியை மத்திய அரசு மறுப்பது நியாயம் அல்ல.
உச்சநீதி மன்றத்தில் வழக்குத் தொடர்ந்து தமிழகத்திற்கு நிதியையும், நீதியையும் பெறுவதை விட, இந்த சிக்கலை வைத்து அரசியல் செய்வதில் தான் திமுக அரசு தீவிரம் காட்டுகிறது.
ஒருங்கிணைந்தக் கல்வித் திட்ட நிதியை மத்திய அரசிடமிருந்து பெறாதது தமிழக அரசின் தோல்வி. அதற்காக உள்ளாட்சி அமைப்புகளைத் தண்டிப் பது எந்த வகையிலும் நியாயமல்ல.
எனவே, அரசு பள்ளிகளுக்கான இணைய வசதிக் கட்டணத்தை உள்ளாட்சி அமைப்புகள் தான் ஏற்க வேண்டும் என்று பிறப்பிக்கப்பட்ட அரசாணையை தமிழக அரசு ரத்து செய்ய வேண்டும்.
உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்து ஒருங்கிணைந்த கல்வித் திட்ட நிதியைப் பெறுவதற்கும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறியுள்ளார்.
- வார இறுதியில் பயணிப்பதற்காக 11 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பயணிகள் முன்பதிவு செய்துள்ளனர்.
- பயணிகளின் தேவைகேற்ப அனைத்து இடங்களில் இருந்தும் சிறப்பு பஸ்கள் இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
சென்னை:
பவுர்ணமியையொட்டி திருவண்ணாமலையில் கிரிவலம் செல்ல இருக்கும் பக்தர்களின் வசதிக்காக சென்னையில் இருந்து திருவண்ணாமலைக்கு 350 சிறப்பு பஸ்கள் இயக்க ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.
இதுதொடர்பாக அரசு விரைவு போக்குவரத்து கழகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
பவுர்ணமியையொட்டி சென்னையில் இருந்து திருவண்ணாமலைக்கு நாளை (13-ந்தேதி) 350 சிறப்பு பஸ்கள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. அதைத்தொடர்ந்து வார இறுதிநாள் விடுமுறையையொட்டி சென்னை கிளாம்பாக்கத்தில் இருந்து திருவண்ணாமலை, திருச்சி, கும்பகோணம், மதுரை, திருநெல்வேலி, நாகர்கோவில், கன்னியாகுமரி, தூத்துக்குடி, கோவை, சேலம், ஈரோடு, திருப்பூர் ஆகிய இடங்களுக்கு 14, 15-ந் தேதிகளில் 545 பஸ்கள் இயக்கப்பட உள்ளன.
மேலும் கோயம்பேட்டில் இருந்து திருவண்ணாமலை, நாகை, வேளாங்கண்ணி, ஓசூர், பெங்களூரு ஆகிய இடங்களுக்கு 51 பஸ்களும், மாதவரத்தில் இருந்து 20 பஸ்களும் என 616 சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது. வார இறுதியில் பயணிப்பதற்காக 11 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பயணிகள் முன்பதிவு செய்துள்ளனர்.
வருகிற 16-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) சொந்த ஊர்களில் இருந்து சென்னை மற்றும் பெங்களூரு திரும்புவதற்கு வசதியாக பயணிகளின் தேவைகேற்ப அனைத்து இடங்களில் இருந்தும் சிறப்பு பஸ்கள் இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- குற்றப்பத்திரிகையில் இடம்பெற்றுள்ள தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளன.
- தொப்பி அணிந்து தனது முகத்தை மறைத்துக் கொண்டார்.
சென்னை:
சென்னை அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட விவகாரத்தில் கோட்டூர்புரத்தை சேர்ந்த ஞானசேகரன் என்பவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்த வழக்கை சென்னை ஐகோர்ட் நியமித்த 3 பெண் ஐ.பி.எஸ். அதிகாரிகளை கொண்ட சிறப்பு புலனாய்வு குழுவினர் விசாரித்து சென்னை சைதாப்பேட்டை கோர்ட்டில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர்.
அந்த குற்றப்பத்திரிகையில் ஞானசேகரன் பெயர் மட்டுமே இடம்பெற்றுள்ளது. வேறு யாருக்கும் அதில் தொடர்பு இல்லை என்றும் கூறப்பட்டுள்ளது. அந்த குற்றப்பத்திரிகையில் இடம்பெற்றுள்ள தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளன. ஞானசேகரன் அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் தான் இருந்ததற்கான தடயம் மற்றும் ஆதாரத்தை மறைப்பதற்காக அவர் தனது செல்போனை பிளைட் மோடுக்கு மாற்றினார். தொப்பி அணிந்து தனது முகத்தை மறைத்துக் கொண்டார்.
பல்கலைக்கழக படிக்கட்டுகளில் அமர்ந்திருந்த மாணவியையும், அவரது நண்பரான மாணவரையும் பார்த்த ஞானசேகரன், மாணவரை தாக்கி கல்லூரி அடையாள அட்டையை பறித்தார். பின்னர் அவர்களை வீடியோ எடுத்திருப்பதாகவும், அதை டீன் மற்றும் ஊழியர்களிடம் காண்பிப்பதாகவும் மிரட்டினார். அவர்கள் கெஞ்சியதால் மாணவரை அங்கிருந்து அனுப்பிவிட்டு மாணவியின் செல்போனை பிளைட் மோடுக்கு மாற்ற சொன்னார். பின்னர் மாணவியை ஒதுக்குப்புறமான இடத்திற்கு அழைத்து சென்று பாலியல் வன்கொடுமை செய்தார். அதை வீடியோவாகவும் பதிவு செய்தார். தான் பல்கலைக்கழக அதிகாரி என்ற தோற்றத்தை ஏற்படுத்துவதற்காக யாரிடமோ போனில் பேசுவதாக நடித்து, "சார், நான் மாணவியை எச்சரித்து போக விடுகிறேன்" என்று கூறியுள்ளார்.
மாணவி பெற்றோரின் செல்போன் எண்களையும் பெற்றுக்கொண்டு தான் அழைக்கும் போதெல்லாம் வரவேண்டும் என்று கூறிவிட்டு அங்கிருந்து வெளியேறினார். மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த வீடியோவை செல்போனில் மறைத்து வைத்திருந்ததாகவும், பின்னர் அதை அழித்து விட்டதாகவும் கூறியுள்ளார்.
மேற்கண்ட தகவல்கள் குற்றப்பத்திரிகையில் கூறப்பட்டு இருப்பதாக தெரிய வந்துள்ளன.
இதுகுறித்து போலீஸ் உயர் அதிகாரி ஒருவர் கூறுகையில், 'ஞானசேகரன் பயன்படுத்திய செல்போனின் அழைப்புகளை சிறப்பு புலனாய்வு குழுவினர் ஆய்வு செய்தனர். அவர் மாணவியை மிரட்டுவதற்காக யாருடனோ செல்போனில் பேசுவது போல் நடித்து, அவரை 'சார்' என்று சும்மா அழைத்தார். உண்மையில் சார் என்று யாரும் இல்லை' என்று தெரிவித்துள்ளார்.






