என் மலர்tooltip icon

    சென்னை

    • காலை 9 மணி முதல் பிற்பகல் 2 வரை மின் தடை செய்யப்படும்.
    • விஜிபி சந்தோஷ் நகர், பிருந்தாவன் கார்டன், ஐயர் தோட்டம், சாமியார் தோட்டம்

    சென்னை:

    சென்னையில் பராமரிப்பு பணிகள் காரணமாக ஒரு சில பகுதிகளில் மின் தடை செய்யப்படுகிறது. காலை 9 மணி முதல் பிற்பகல் 2 வரை மின் தடை செய்யப்படும். பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும்.

    அந்த வகையில், நாளை மின் தடை செய்யப்படும் பகுதிகள் குறித்து தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதன்படி, சென்னையில் நாளை (23.01.2026) காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின் வாரிய பராமரிப்பு பணி காரணமாக பின்வரும் இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும். அதன்படி,

    மாதவரம் : லேதர் எஸ்டேட், ஜம்பலி நியூ காலனி, ரவி கார்டன், கேகேஆர் கார்டன், கண்ணாபுரம், ஆர்சி லிட்டில் விங்ஸ், ஆர்சி மேத்தா, RC Lorrels, பழனியப்பா நகர், மேத்தா நகர், அலெக்ஸ் நகர், A To D காலனி, பத்மாவதி நகர் மற்றும் விரிவு, தெற்கு டெலிபோன் காலனி, பாஷியம் நகர்.

    ஜிஎன்டி சாலை: விஜிபி சந்தோஷ் நகர், பிருந்தாவன் கார்டன், ஐயர் தோட்டம், சாமியார் தோட்டம், தணிகாசலம் நகர் F ப்ளாக்ம், அண்ணா சாலை, காமாட்சி நகர், வாசுதேவன் தோட்டம், VOC தெரு, காமராஜ் சாலை 1 முதல் 4 தெரு வரை.

    திருமுடிவாக்கம்: இந்திரா நகர், குரு நகர், விவேகானந்தா நகர், பழந்தண்டலம், நாகன் தெரு மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகள். 

    • சிக்னல் அமைப்பு, தண்டவாள செயல்திறன், ரெயில் இயக்கம், உறுதித் தன்மை உள்ளிட்டவைகள் பரிசோதிக்கப்பட்டது.
    • பூந்தமல்லி - வடபழனி இடையே பயணிகள் ரெயில் சேவையை தொடங்குவதற்கான அனுமதியை வழங்கும்.

    சென்னை:

    சென்னையில் 116 கிலோ மீட்டர் தொலைவுக்கு 3 வழித்தடங்களில் 2-ம் கட்ட மெட்ரோ ரெயில் திட்டப் பணிகள் நடந்து வருகிறது. இதில், கலங்கரை விளக்கம் - பூந்தமல்லி வரையிலான வழித்தடத்தில் (26 கிலோ மீட்டர்) பூந்தமல்லி - போரூர் வரையிலான 10 கிலோ மீட்டர் தொலைவுக்கு பணிகள் முடிந்துள்ளது. இந்த பூந்தமல்லி - போரூர் இடையே மெட்ரோ ரெயில் சேவையை தொடங்குவதற்கான பாதுகாப்பு சான்றிதழையும் ரெயில்வே வாரியம் வழங்கியது.

    இந்த நிலையில், போரூர் - வடபழனி இடையில் அனைத்துப் பணிகளும் முடிவடைந்து கடந்த 11-ந்தேதி வெற்றிகரமாக சோதனை ஓட்டம் நடத்தி பார்க்கப்பட்டது.

    அப்போது, சிக்னல் அமைப்பு, தண்டவாள செயல்திறன், ரெயில் இயக்கம், உறுதித் தன்மை உள்ளிட்டவைகள் பரிசோதிக்கப்பட்டது. இதனால், பூந்தமல்லி - வடபழனி இடையில் மெட்ரோ ரெயிலை இயக்குவதற்கான அனைத்து சோதனை பணிகளையும் சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனம் முழுமையாக முடித்துள்ளது. இதேபோல, போரூர் - வடபழனி இடையே இம்மாத இறுதிக்குள் ரெயில்வே பாதுகாப்பு கமிஷனர் ஆய்வு மேற்கொள்ள இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

    இதைத்தொடர்ந்து, பூந்தமல்லி - வடபழனி வரையிலான வழித்தடத்தில் வரும் பிப்ரவரி மாதம் மெட்ரோ ரெயில் சேவை இயக்கப்பட இருக்கிறது.

    இதுகுறித்து, சென்னை மெட்ரோ ரெயில்வே அதிகாரி ஒருவர் கூறியதாவது:-

    பூந்தமல்லி - வடபழனி இடையே சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனம் மேற்கொண்டு வந்த சோதனை பணிகள் அனைத்தும் நிறைவு பெற்றுள்ளது. ரெயில்வே பாதுகாப்பு கமிஷனர் குறிப்பிட்ட வழித்தடம், பயணிகள் வசதி உள்ளிட்டவைகளை ஆய்வு செய்த பின்னர் அவருடைய ஆய்வுக் குறிப்புகள் ரெயில்வே வாரியத்திற்கு அனுப்பி வைக்கப்படும். இதைத்தொடர்ந்து, பூந்தமல்லி - வடபழனி இடையே பயணிகள் ரெயில் சேவையை தொடங்குவதற்கான அனுமதியை வழங்கும். பிப்ரவரி மாதம் இவ்வழித்தடத்தில் சேவை தொடங்கும் என எதிர்பார்க்கிறோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • காய்ச்சல் பாதிப்பு பதிவான பகுதிகளில் தீவிர தூய்மை பணிகளை செய்ய வேண்டும்.
    • தேவையான அளவு பூச்சிக்கொல்லி மருந்துகள் மற்றும் உபகரணங்கள் இருப்பதை அதிகாரிகள் உறுதி செய்ய வேண்டும்.

    சென்னை:

    சிக்குன் குனியா என்பது ஏ.டி.எஸ். வகை கொசுக்களால் பரவும் ஒரு வகை வைரஸ் காய்ச்சல் ஆகும். இந்த காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டால் மூட்டு வலி, அதீத தசை வலி, உடல் அசதி, தலைவலி ஆகியவை ஏற்படும். தமிழகத்தில் கடந்த 2007-ம் ஆண்டு சிக்குன் குனியா பாதிப்பு தீவிர தாக்கத்தை ஏற்படுத்தியது. அதன்பின்னர், சிக்குன் குனியா பாதிப்பு கட்டுப்பாட்டுக்குள் வந்தது. ஆனாலும், அவ்வப்போது சிக்குன் குனியா பாதிப்புகள் தலைதூக்குகிறது.

    இதற்கிடையே, தமிழகத்தில் கடந்த சில மாதங்களாகவே சிக்குன் குனியாவின் தாக்கம் மீண்டும் ஏற்பட்டிருப்பதாக சுகாதாரத்துறை தெரிவித்தது. தற்போது சென்னை, விழுப்புரம், செங்கல்பட்டு, தென்காசி உள்ளிட்ட மாவட்டங்களில் சிக்குன் குனியா பாதிப்பு அதிகரித்து வருவதாக பொது சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. சிக்குன் குனியா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், மாவட்ட அளவில் கண்காணிப்பு மற்றும் தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்துமாறு மாவட்ட சுகாதார அதிகாரிகளுக்கு பொது சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது.

    இதுகுறித்து, பொது சுகாதாரத்துறை அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    சென்னை, விழுப்புரம், தென்காசி, தேனி, கடலூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், அரியலூர் ஆகிய மாவட்டங்களிலும் சிக்கன் குனியா பாதிப்புகள் அதிகரித்து காணப்படுகிறது. எனவே, மாவட்ட சுகாதார அதிகாரிகள் உரிய கண்காணிப்புடன் கூடிய நோய்த் தடுப்பு நடவடிக்கைகளை அனைத்து மாவட்டங்களிலும் மேற்கொள்ள வேண்டும்.

    ஆஸ்பத்திரிகள் மற்றும் ஆய்வகங்களில் உரிய நேரத்தில் சிக்குன் குனியா பரிசோதனைகளை முன்னெடுத்து நோய் பரவலைத் தடுப்பது அவசியம். ஆஸ்பத்திரிகளில் டெங்கு அல்லது சிக்குன் குனியாவுக்கென பிரத்யேக வார்டுகளை அமைக்க வேண்டும். பாதிப்பை கண்டறியும் எலிசா பரிசோதனைகளை மேற்கொள்வதற்குத் தேவையான உபகரணங்களை போதிய அளவு இருப்பில் வைத்திருப்பது கட்டாயம். நடமாடும் மருத்துவ விரைவுக் குழுக்களை தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும். மாவட்ட கலெக்டர்கள் தலைமையில் நோய்த் தடுப்பு நடவடிக்கைகளை முன்னெடுப்பதுடன் அதனை ஆய்வு செய்வதும் முக்கியம்.

    வீடுதோறும் கொசு உற்பத்தியை கண்காணிப்பதற்கான பணியில் போதிய நபர்கள் ஈடுபடுத்தப்பட வேண்டும். மாவட்ட பூச்சியியல் வல்லுனர்கள், சுகாதார ஆய்வாளர்கள் வீடுகள் தோறும் லார்வா புழு உற்பத்தி குறித்த பரிசோதனைகளை மேற்கொள்ள வேண்டும். காய்ச்சல் பாதிப்பு பதிவான பகுதிகளில் தீவிர தூய்மை பணிகளை செய்ய வேண்டும். தேவையான அளவு பூச்சிக்கொல்லி மருந்துகள் மற்றும் உபகரணங்கள் இருப்பதை அதிகாரிகள் உறுதி செய்ய வேண்டும். தண்ணீர் தேங்கும் அனைத்து பொருட்களையும் அப்புறப்படுத்த வேண்டும்.

    திடக்கழிவுகளை முறையாக அகற்றுவது கட்டாயம். வாரம் ஒரு முறை தண்ணீர் தொட்டிகளை சுத்தம் செய்வது குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். சிக்குன் குனியா தொடர்பான விழிப்புணர்வை மக்களிடத்திலே ஏற்படுத்த வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. 

    • தமிழக மக்கள் அதிமுக-பாஜக கூட்டணியை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்.
    • இந்தக் கூட்டணி தமிழக மக்களால் நிராகரிக்கப்பட்ட கூட்டணி என்றார்.

    சென்னை:

    தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை நேற்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:

    தமிழக மக்கள் அதிமுக-பாஜக கூட்டணியை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்.

    என்டிஏ கூட்டணியில் இணைந்துள்ள டிடிவி தினகரன் எடப்பாடி பழனிசாமியை துரோகி என்றெல்லாம் கடுமையாக விமர்சனம் செய்தார்.

    டிடிவி தினகரன் இன்று கூட்டணியில் சேர்ந்தும் இபிஎஸ் பெயரை சொல்வதையே தவிர்க்கிறார். ஆகவே, இந்தக் கூட்டணி தமிழக மக்களால் நிராகரிக்கப்பட்ட கூட்டணி.

    மோடி ஒரு முறை அல்ல, 100 முறை வந்தாலும் தமிழ்நாட்டு மக்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்.

    பிரதமர் மோடி ஒடிசாவுக்குச் சென்றால் தமிழகத்தில்தான் ஒடிசாவின் கஜானா சாவி இருக்கிறது என பேசுகிறார். பீகாருக்குச் சென்றால் பீகாரிகளை தமிழக மக்கள் வஞ்சிக்கிறார்கள் என்று கூறுவார்.

    இப்படி எல்லாம் பேசிவிட்டு தமிழக மக்கள் யாரும் விவரம் இல்லாதவர்கள், மறந்துவிடுவார்கள், பா.ஜ.க.வுக்கு வாக்களிப்பார்கள் என பேராசையோடு படையெடுக்கிறார்கள். இந்தப் படையெடுப்பை தமிழக மக்கள் முறியடிப்பார்கள்.

    என்டிஏ கூட்டணி ஒரு மூழ்கும் கப்பல். அந்தக் கப்பலில் யாரெல்லாம் பயணிக்கிறார்களோ அவர்களும் சேர்ந்துதான் மூழ்கிப் போவார்கள் என தெரிவித்தார்.

    • 38 நாட்கள் கழித்து அரசியல் பேச விஜய் தயாராகிறார் என கூறப்படுகிறது.
    • கிறிஸ்துமஸ் விழாவிற்கு பிறகு எந்த ஒரு அரசியல் நிகழ்விலும் விஜய் பங்கேற்கவில்லை.

    மாமல்லபுரத்தில் நடைபெறவுள்ள செயல் வீரர்கள் கூட்டத்தில் தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் உரையாற்ற உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

    கடந்த ஆண்டு டிசம்பர் 18ம் தேதி அன்று நடந்த கிறிஸ்துமஸ் விழாவுக்கு பிறகு 38 நாட்கள் கழித்து அரசியல் பேச விஜய் தயாராகிறார் என கூறப்படுகிறது.

    கிறிஸ்துமஸ் விழாவிற்கு பிறகு எந்த ஒரு அரசியல் நிகழ்விலும் விஜய் பங்கேற்கவில்லை.

    இந்நிலையி், சிபிஐ விசாரணை, ஜனநாயகன் சென்சார் பிரச்சனை நீடித்து வரும் நிலையில் ஜனவரி 25ம் தேதியில் தவெக செயல் வீரர்கள் கூட்டம் நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.

    • ஒரே நேரத்தில் 38 காவல் ஆய்வாளர்களை இடமாற்றம்.
    • சென்னை மாநகர காவல் ஆணையர் உத்தரவிட்டுள்ளார்.

    பெருநகர சென்னை காவல்துறையில் நிர்வாக நலன் கருதி, ஒரே நேரத்தில் 38 காவல் ஆய்வாளர்களை இடமாற்றம் செய்து சென்னை மாநகர காவல் ஆணையர் உத்தரவிட்டுள்ளார்.

     

    • கஞ்சா மாடல் தி.மு.க ஆட்சியில் தமிழ்நாட்டின் சட்டம் ஒழுங்கு நிலைமை மிகவும் கவலைக்கிடமாக உள்ளது.
    • மாநிலம் முழுவதும் இத்தகைய வன்முறைச் சம்பவங்கள் தொடர்ந்து அரங்கேறி வருகின்றன.

    கஞ்சா மாடல் திமுக ஆட்சியின் கீழ் தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டுள்ளது என பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

    கோவையில் கஞ்சா போதையில் இருந்த கும்பல் இளைஞரை கொடூரமாக தாக்கும் வீடியோவை பகிர்ந்து அண்ணாமலை குற்றம்சாட்டியுள்ளார்.

    இது ஒரு இடத்தில நடந்த வன்முறை சம்பவம் அல்ல, சமீபத்தில் திருத்தணி, சென்னை, நேற்று கோவையில் நடந்துள்ளது.

    இதுகுறித்து அண்ணாமலை வெளியிட்டுள்ள எக்ஸ் தள பக்கத்தில் கூறியிருப்பாவது:-

    கஞ்சா மாடல் தி.மு.க ஆட்சியில் தமிழ்நாட்டின் சட்டம் ஒழுங்கு நிலைமை மிகவும் கவலைக்கிடமாக உள்ளது.

    கோவை கணபதி பகுதியில், கஞ்சா போதையில் இருந்த ஒரு கும்பல் ஒரு இளைஞரை மிகக் கொடூரமாகத் தாக்கியதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. அங்கிருந்த பொது மக்கள் சரியான நேரத்தில் தலையிட்டிருக்காவிட்டால், அந்தத் தாக்குதல் ஒரு உயிரிழப்பில் முடிந்திருக்கும்.

    இது ஒரு தனிப்பட்ட சம்பவம் அல்ல. சமீபத்தில் திருத்தணியிலும், பிறகு சென்னையின் வேளச்சேரியிலும், நேற்று கோவையிலும் என மாநிலம் முழுவதும் இத்தகைய வன்முறைச் சம்பவங்கள் தொடர்ந்து அரங்கேறி வருகின்றன.

    தி.மு.க-வோடு தொடர்புடையவர்கள் போதைப் பொருள் கடத்தலில் ஈடுபடுவது மீண்டும் மீண்டும் அம்பலமாகும் போது, ஏன் கஞ்சா வலைப்பின்னல் செழித்து வளர்கிறது என்பதும், வன்முறை ஏன் கட்டுக்கடங்காமல் போகிறது என்பதும் தெளிவாகத் தெரிகிறது.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    • 2 வாரங்களில் பதில் அளிக்க வருமான வரித்துறைக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
    • ஜெ.தீபா தாக்கல் செய்த வழக்கில் ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

    மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு எதிரா வருமான வரி வழக்கில் வசூல் நடவடிக்கைகளை நிறுத்திவைக்க வருமான வரித்துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

    மேலும், ஜெயலலிதா செலுத்த வேண்டிய வரி பாக்கி தொடர்பாக 2 வாரங்களில் பதில் அளிக்க வருமான வரித்துறைக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

    வருமான வரி பாக்கி தொடர்பாக அனுப்பிய, நோட்டீசை எதிர்த்து ஜெ.தீபா தாக்கல் செய்த வழக்கில் ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. 

    • தாய் கழகம் என்று நினைத்து கொண்டு ஒரு தீய கழகத்தில் தன்னை இணைத்துக் கொண்டுள்ளார் வைத்திலிங்கம்.
    • திமுகவினரின் எண்ணத்திற்கு வலு சேர்த்திடும் வகையில் அதிமுகவினர் செயல்படுவதால் வேதனை அளிக்கிறது.

    ஓ.பன்னீர்செல்வம் ஆதரவு எம்.எல்.ஏ.வான முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம் தனது எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்தார். சபாநாயகர் அப்பாவுவை நேரில் சந்தித்து தனது எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்யும் கடிதத்தை வைத்திலிங்கம் அளித்தார். இந்தநிலையில் அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் தி.மு.க.வில் வைத்திலிங்கம் இணைந்தார்.

    இதுதொடர்பாக கருத்து தெரிவித்த சசிசலா கூறியதாவது:

    முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம் திமுகவில் இணைந்தது துரதிருஷ்டவசமானது. தாய் கழகம் என்று நினைத்து கொண்டு ஒரு தீய கழகத்தில் தன்னை இணைத்துக் கொண்டுள்ளார் வைத்திலிங்கம்.

    திமுகவினரின் எண்ணத்திற்கு வலு சேர்த்திடும் வகையில் அதிமுகவினர் செயல்படுவதால் வேதனை அளிக்கிறது.

    இந்த நிலைமைகளுக்கெல்லாம் காரணம் ஒன்றே ஒன்றுதான். ஒரு சிலரின் சுயநலத்தால் நடக்கிறது.

    திமுக ஆட்சியை வீட்டுக்கு அனுப்ப புதிய வியூகங்களை வகுத்துக்கொண்டு இருக்கிறேன்.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    • நாங்கள் யாருடன் கூட்டணி அமைக்கப் போகிறோம் என்பதை தெரிந்து கொள்வதில் எங்களைவிட நீங்கள் ஆர்வமாக இருக்கிறீர்கள்.
    • தே.மு.தி.க.வை பொறுத்தவரை மாவட்ட செயலாளர்கள், நிர்வாகிகளை கலந்தாலோசித்து தெளிவான ஒரு முடிவை உங்களை அழைத்து அறிவிப்பேன்.

    சென்னை:

    தே.மு.தி.க. பொதுச் செயலாளர் பிரேமலதா சென்னையில் இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    கேள்வி: மத்திய மந்திரி பியூஷ் கோயல் சென்னை வந்துள்ளார். கூட்டணியை பலப்படுத்துவதற்காக பேச்சுவார்த்தைகள் போய் கொண்டிருக்கிறது. கூட்டணி தொடர்பாக உங்கள் முடிவு என்ன என்று தொண்டர்கள் ஆவலோடு காத்திருக்கிறார்கள். நீங்கள் என்ன சொல்ல விரும்புகிறீர்கள்?

    பதில்: எங்கள் தொண்டர்கள் காத்திருக்கிறார்கள் என்றால் நாங்கள் பார்த்துக் கொள்கிறோம். நீங்கள்தான் காத்திருக்கிறீர்கள். தொண்டர்கள் அனைவரும் தெளிவாக இருக்கிறார்கள்.

    நாங்கள் யாருடன் கூட்டணி அமைக்கப் போகிறோம் என்பதை தெரிந்து கொள்வதில் எங்களைவிட நீங்கள் ஆர்வமாக இருக்கிறீர்கள். உங்களை நான் அழைத்து உரிய நேரத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவிப்பேன். பியூஷ் கோயல் வந்திருப்பதாகவும் எங்களுடன் பேச இருப்பதாகவும் நீங்கள்தான் சொல்கிறீர்கள். எங்களுக்கு இன்னும் தகவல் வரவில்லை. இது தான் உண்மை.

    எங்களுக்கு அப்படி ஒரு செய்தி இந்த நிமிடம் வரை வரவில்லை. எங்களை யாரும் அணுகவும் இல்லை. தொலைபேசியில் கூட தொடர்பு கொள்ளவில்லை. பியூஷ் கோயல் எதற்காக வந்திருக்கிறார் என்பது எனக்கு தெரியாது. கூட்டணி தொடர்பாக முடிவு எடுத்தால் முதலில் உங்களை கூப்பிட்டு தெரிவிக்கிறேன்.

    கேள்வி: யாருடன் கூட்டணி என்று முடிவு எடுத்திருக்கிறீர்கள்?

    பதில்: நாங்கள் இன்னும் எந்த முடிவும் எடுக்கவில்லை. நாளை மறுநாள் (23-ந்தேதி) பிரதமர் வருகிறார் என்பதை தொலைக்காட்சியில்தான் பார்த்தேன். அது அவர்கள் கட்சி சார்பான கூட்டமா அல்லது கூட்டணி தொடர்பான கூட்டமா என்பது கூட தெரியவில்லை.

    தே.மு.தி.க.வை பொறுத்தவரை மாவட்ட செயலாளர்கள், நிர்வாகிகளை கலந்தாலோசித்து தெளிவான ஒரு முடிவை உங்களை அழைத்து அறிவிப்பேன். வருகிற 24-ந்தேதி முதல் பிப்ரவரி 2-ந்தேதி வரை 4-ம் கட்ட பயணத்துக்கு நாங்கள் கிளம்புகிறோம். அந்த பயணம் திட்டமிட்டபடி நடைபெறும்.

    கேள்வி: கூட்டணி குறித்து நாங்கள் உறுதி செய்து விட்டோம். உரிய நேரத்தில் அறிவிப்போம் என்று மாநாட்டில் அறிவித்தீர்களே?

    பதில்: எங்கள் கட்சிக்குள் கலந்து ஆலோசித்து இருக்கிறோம். அவர்களின் கருத்துக்களை கேட்டு இருக்கிறேன். அவர்கள் விருப்பத்தை தெரிவித்து இருக்கிறார்கள். அதை நாங்கள் அதிகாரப்பூர்வமாக அறிவிப்போம்.

    கேள்வி: தேசிய ஜனநாயக கூட்டணி குழப்பத்தில் உள்ளதா?

    பதில்: பா.ஜ.க. தலைவர்களிடம் கேட்க வேண்டிய கேள்வியை என்னிடம் கேட்டால் பதில் இல்லை.

    கேள்வி: தேசிய ஜனநாயக கூட்டணியில் அழைத்தால் சேருவீர்களா?

    பதில்: நடக்காத ஒரு விஷயத்துக்கு இப்போது என்னால் பதில் சொல்ல முடியாது. தே.மு.தி.க. யாருடன் கூட்டணி என்பதை இன்னும் முடிவு செய்யவில்லை.

    கேள்வி: பியூஷ் கோயல் அழைத்தால் சந்தித்து பேச தயாராக இருக்கிறீர்களா?

    பதில்: இதுவரை அழைக்கவில்லை. அப்படி வந்தால் உங்களுக்கு சொல்கிறேன். பிரதமர் மோடி நாளை மறுநாள் (23-ந்தேதி)தான் வருகிறார். அன்றைக்கு பார்ப்போம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • அண்ணன் டிடிவி தினகரன் அவர்களுக்கு, எனது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
    • வரும் சட்டமன்றத் தேர்தலில், மக்கள் விரோத திமுக ஆட்சியை அகற்ற, முக்கியப் பங்கு வகிக்கும்.

    தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைந்த டிடிவி தினகரனுக்கு மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன் என பாஜக மாநில முன்னாள் தலைவர் அண்ணாமலை வரவேற்பு தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து அண்ணாமலை தனது எக்ஸ் தள பக்கத்தில் கூறியிருப்பதாவது:-

    வரும் தமிழக சட்டமன்றத் தேர்தலில், தேசிய ஜனநாயக கூட்டணியில், அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் இணைகிறது என்ற செய்தி, மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது. அமமுக பொதுச்செயலாளர், அன்பு அண்ணன் டிடிவி தினகரன் அவர்களுக்கு, எனது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

    அண்ணன் டிடிவி தினகரன் அவர்களின் ஆழ்ந்த அரசியல் அனுபவமும், தேர்ந்த வியூகங்களும், வரும் சட்டமன்றத் தேர்தலில், மக்கள் விரோத திமுக ஆட்சியை அகற்ற, முக்கியப் பங்கு வகிக்கும்.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    • கட்சியின் நலன் மற்றும் தமிழ்நாட்டு நலனை கருத்தில் கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டது.
    • தேவைப்பட்டால் எடப்பாடி பழனிசாமியை சந்திப்பேன்.

    சென்னை:

    அ.தி.மு.க-பா.ஜ.க. கூட்டணியில் டி.டி.வி. தினகரனின் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் இன்று இணைந்தது. இணைப்புக்கு பிறகு மத்திய மந்திரியும், பா.ஜனதா தமிழக தேர்தல் பொறுப்பாளருமான பியூஸ் கோயல் பேட்டி அளித்தனர். அப்போது அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் அளித்த பேட்டியில் கூறியதாவது:-

    தேசிய ஜனநாயக கூட்டணியை பலப்படுத்த அ.ம.மு.க. உறுதுணையாக இருக்கும். நாங்கள் அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என்று 2021-ம் ஆண்டிலேயே அமித்ஷா விரும்பினார்.

    2021-ம் ஆண்டு அமைக்க தவறிய ஜெயலலிதா ஆட்சியை இந்த முறை அமைத்தே தீருவோம். நாங்கள் எங்கள் பங்காளி சண்டைகளை ஓரம் வைத்து விட்டு அனைத்தையும் மறந்து சேர்ந்திருக்கிறோம். விட்டுக் கொடுப்பவர்கள் கெட்டுப் போவதில்லை என்ற நோக்கில் இணைந்திருக்கிறோம்.

    எங்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிகளை தூக்கி எறிந்துவிட்டு முழு மனதோடு கூட்டணிக்கு வந்து இருக்கிறோம். கட்சியின் நலன் மற்றும் தமிழ்நாட்டு நலனை கருத்தில் கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டது.

    தமிழ்நாட்டில் தேசிய ஜனநாயக கூட்டணியின் முதலமைச்சர் வேட்பாளர் யார் என உங்களுக்கே தெரியும்.

    தமிழ்நாட்டில் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி அமையும். இந்த கூட்டணி ஆட்சியில் அ.ம.மு.க. இடம் பெறும். தேவைப்பட்டால் எடப்பாடி பழனிசாமியை சந்திப்பேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    எடப்பாடி பழனிசாமி வரவேற்பு தெரிவித்து உள்ளதற்கும் பேரை குறிப்பிடாமல் அவருக்கு டி.டி.வி.தினகரன் நன்றி தெரிவித்தார்.

    ×