என் மலர்
சென்னை
- கறிக்கோழி வாங்கும் நிறுவனங்களுக்கு சாதகமாக தமிழக அரசு செயல்படுகிறது.
- மாணவர்களுக்கான இலவச மடிக்கணினி வழங்கும் திட்டத்தை தி.மு.க. அரசு நிறுத்தி வைத்தது.
சட்டசபையில் விவசாயிகள் பிரச்சனை குறித்து பேச அனுமதி மறுக்கப்பட்டதால் அ.தி.மு.க. எம்.எல்.ஏக்கள் வெளிநடப்பு செய்தனர்.
இந்நிலையில் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களிடம் கூறியதாவது:
* விவசாயிகளின் முக்கிய பிரச்சனை குறித்து சட்டசபையில் பேச முயன்றபோது அனுமதி மறுக்கப்பட்டது.
* 5 லட்சம் கறிக்கோழி விவசாயிகள் தற்போது பாதிப்பை சந்தித்து வருகிறார்கள்.
* ஒரு கிலோவுக்கு ரூ.6.50 கூலியாக வளர்ப்பாளர்களுக்கு வழங்கப்படுகிறது.
* கோழி வளர்ப்புக்கான கூலியை உயர்த்தி கொடுக்க வேண்டும்.
* கறிக்கோழி வாங்கும் நிறுவனங்களுக்கு சாதகமாக தமிழக அரசு செயல்படுகிறது.
* ஜீரோ ஹவரில் எதிர்க்கட்சித் தலைவர் பேச முடியும். முந்தைய காலங்களிலும் இது நடந்துள்ளது.
* 6 மாதமாக விவசாயிகள் போராடி வருகிறார்கள். 5 லட்சம் தொழிலாளர்களின் வாழ்வாதார பிரச்சனை.
* பேச்சுவார்த்தை நடத்துவதாக கூறி விட்டு அரசு பின்வாங்குவது ஏன்?
* மகளிருக்கு ரூ.1500 வழங்கப்படும் என்ற குலவிளக்கு திட்டத்தை 2021-ல் ஏற்கனவே அறிவித்தோம்.
* ஒவ்வொரு முறையும் அ.தி.மு.க. தான் தேர்தல் அறிக்கையை முதலில் வெளியிடும்.
* மாணவர்களுக்கான இலவச மடிக்கணினி வழங்கும் திட்டத்தை தி.மு.க. அரசு நிறுத்தி வைத்தது.
* மாணவர்களின் வாக்குகளை கவரவே இலவச மடிக்கணினிகளை அரசு வழங்குகிறது.
* மாணவர்கள் மத்தியில் தி.மு.க. மீது வெறுப்பு, அதை சமாளிக்கவே மடிக்கணினி வழங்கப்படுகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
- இ.பி.எஸ். எழுப்பிய பிரச்சனை குறித்து தொடர்புடைய அமைச்சர் நாளை பதில் அளிப்பார் என்று கூறினார்.
- சபாநாயகர் அறிவுறுத்தியபோதும், ஏற்க மறுத்து அ.தி.மு.க. எம்.எல்.ஏக்கள் கடும் அமளியில் ஈடுபட்டனர்.
சட்டசபை கூட்டத்தொடரின் 3-வது நாள் அமர்வு இன்று காலை தொடங்கியது. வினாக்கள்-விடைகள் நேரத்தில் உறுப்பினர்களின் கேள்விகளுக்கு துறை சார்ந்த அமைச்சர்கள் பதில் அளித்தனர்.
சட்டசபையில் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி பேசுகையில்,
அவையில் எதிர்க்கட்சி தலைவருக்கு பேச அனுமதி மறுக்கப்படுகிறது. விவசாயிகள் தொடர்பான முக்கிய பிரச்சனைகளை சட்டசபையில் பேச அனுமதிக்க வேண்டும் என்று கூறினார்.
எடப்பாடி பழனிசாமி பிரச்சனை எழுப்பிய நிலையில் அதற்கு பதில் அளித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், விவசாயிகள் சம்பந்தப்பட்ட பிரச்சனையை நாளை பேசலாம். இ.பி.எஸ். எழுப்பிய பிரச்சனை குறித்து தொடர்புடைய அமைச்சர் நாளை பதில் அளிப்பார் என்று கூறினார்.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிலை ஏற்க மறுத்து அ.தி.மு.க. எம்.எல்.ஏக்கள் கடும் அமளியில் ஈடுபட்டனர். முதலமைச்சரின் பதிலில் திருப்தி இல்லை எனக்கூறி அவர்கள் கடும் கூச்சலிட்டனர்.
சபாநாயகர் அறிவுறுத்தியபோதும், ஏற்க மறுத்து அ.தி.மு.க. எம்.எல்.ஏக்கள் கடும் அமளியில் ஈடுபட்டனர்.
இதையடுத்து சட்டசபையில் இருந்து அ.தி.மு.க. எம்.எல்.ஏக்கள் வெளிநடப்பு செய்தனர்.
- பா.ஜ.க. மற்றும் கூட்டணி கட்சி தலைவர்கள் பிரதமரை வரவேற்கிறார்கள்.
- பிரதமர் வருகையையொட்டி மதுராந்தகம் மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில் உச்சக்கட்ட பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.
சென்னை:
தமிழகத்தில் சட்டமன்ற தேர்தலை சந்திப்பதற்கு தீவிரமாகி உள்ள பா.ஜ.க. கூட்டணி பேச்சுவார்த்தைகளை தீவிரப்படுத்தி உள்ள நிலையில் தேர்தல் பிரசாரத்தையும் இப்போதே முடுக்கி விட்டுள்ளது.
இதன்படி பிரதமர் மோடி கலந்து கொள்ளும் பிரமாண்ட பொதுக் கூட்டத்துக்கு நாளை ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. சென்னையை அடுத்துள்ள மதுராந்தகத்தில் தேசிய நெடுஞ்சாலையையொட்டி உள்ள பகுதியில் பிரதமரின் கூட்டத்திற்காக விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன. பிரதமர் பங்கேற்கும் கூட்டத்துக்காக 15 ஆயிரம் போலீசார் பாது காப்பு பணியில் ஈடுபடுத்தப்படுகிறார்கள்.
பிரதமரின் வருகையையொட்டி நேற்று காலையில் இருந்தே டெல்லியில் இருந்து சென்னை வந்துள்ள மத்திய பாதுகாப்பு படை போலீசார் பொதுக்கூட்டம் நடைபெறும் இடத்தை தங்களது முழு கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர். பொதுக் கூட்டம் நடைபெறும் இடத்தில் மூன்றடுக்கு பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது. கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் நாளை காலையில் நடைபெறும் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் பிரதமர் மோடி அங்கிருந்து மதியம் 1.15 மணிக்கு தனி விமானத்தில் சென்னைக்கு வருகிறார்.
சென்னை விமான நிலையத்தில் இருந்து மதியம் 2.15 மணிக்கு ஹெலிகாப்டரில் புறப்பட்டு மதுராந்தகத்தில் பொதுக்கூட்டம் நடைபெறும் இடத்தை சென்றடைகிறார். அங்கு பா.ஜ.க. மற்றும் கூட்டணி கட்சி தலைவர்கள் பிரதமரை வரவேற்கிறார்கள். இதன் பிறகு பிரதமர் மோடி தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் பங்கேற்று பேசுகிறார். பிரதமர் பங்கேற்கும் இந்த கூட்டத்தில் அ.தி.மு.க.-பா.ஜ.க. கூட்டணியில் இடம் பெற்றுள்ள தலைவர்கள் அனைவரும் கலந்து கொள்கிறார்கள்.
அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, பா.ம.க. தலைவர் அன்புமணி, அ.ம.மு.க. பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரன் மற்றும் கூட்டணியில் இடம் பெற்றுள்ள சிறிய கட்சிகளை சேர்ந்த அனைத்து தலைவர்களும் மேடையில் தோன்றுகிறார்கள். அவர்கள் அனைவருடனும் பிரதமர் மோடி ஒன்றாக கையை உயர்த்தி காண்பிக்கிறார். இதன் மூலம் தமிழகத்தில் அ.தி.மு.க.-பா.ஜ.க. கூட்டணியின் பலத்தை காட்டவும் தமிழக பா.ஜ.க. தலைவர்கள் முடிவு செய்து இருக்கிறார்கள்.
பிரதமர் வருகையையொட்டி மதுராந்தகம் மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில் உச்சக்கட்ட பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது. சென்னையில் இருந்து தென் மாவட்டங்கள் நோக்கி செல்லும் தேசிய நெடுஞ்சாலை என்பதால் நாளை பிற்பகலில் பாதுகாப்பு காரணங்களை கருத்தில் கொண்டு அந்த வழியாக போக்குவரத்தும் தடை செய்யப்பட உள்ளது.
தேசிய நெடுஞ்சாலையில் செல்லும் வாகனங்கள் மாமண்டூர் மற்றும் மாமல்லபுரம் வழியாக திருப்பி விடப்படும் என போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
பிரதமர் வருகையையொட்டி சென்னை விமான நிலையத்தில் இருந்து மதுராந்தகத்தில் பொதுக்கூட்டம் நடைபெறும் இடம் வரையில் பாதுகாப்பு ஒத்திகையும் நடத்தப்பட்டு உள்ளது. சென்னை விமான நிலையத்தில் இருந்து ஹெலிகாப்டரை இயக்கி பொதுக்கூட்டம் நடைபெறும் இடம் அருகில் அமைக்கப்பட்டுள்ள ஹெலிபேடில் இறக்கி பாதுகாப்பு அதிகாரிகள் ஒத்திகை பார்த்தனர்.
அந்த பகுதி முழுவதுமே மத்திய பாதுகாப்பு படையினரும், போலீசாரும் தீவிரமாக கண்காணித்து வருகிறார்கள்.
- மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் உள்ளிட்ட பா.ஜ.க. தலைவர்கள் தனது இல்லத்துக்கு வந்தது மகிழ்ச்சி.
- தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு அடியோடு சீர்கெட்டு உள்ளது.
சென்னை பசுமை வழிச்சாலையில் உள்ள அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இல்லத்தில் மத்திய அமைச்சரும் தமிழக பா.ஜ.க. தேர்தல் பொறுப்பாளருமான பியூஷ் கோயலுக்கு காலை விருந்தளித்தார்.
அவருடன் மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், பா.ஜ.க. மூத்த தலைவர்கள் பொன்.ராதாகிருஷ்ணன், எச்.ராஜா, மத்திய இணை அமைச்சர் எல்.முருகன், வானதி சீனிவாசன் உள்ளிட்டோரும் கலந்து கொண்டனர்.
இந்நிலையில் அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:
* மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் உள்ளிட்ட பா.ஜ.க. தலைவர்கள் தனது இல்லத்துக்கு வந்தது மகிழ்ச்சி.
* பிரதமர் மோடி பங்கேற்கும் நாளைய பொதுக்கூட்டம் தமிழ்நாட்டில் மிகப்பெரிய மாற்றத்தை உண்டாக்கும்.
* தமிழகத்தில் மாற்றத்தை ஏற்படுத்தும் கூட்டணியாக தேசிய ஜனநாயக கூட்டணி அமையும்.
* மத்தியில் பிரதமர் மோடி தலைமையிலான ஆட்சி, தமிழகத்தில் அ.தி.மு.க. ஆட்சி அமையும்.
* அனைத்து துறைகளிலும் தி.மு.க. அரசு தோல்வி அடைந்துள்ளது.
* தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு அடியோடு சீர்கெட்டு உள்ளது.
* தி.மு.க. ஆட்சியில் நடைபெற்ற ஊழல் தொடர்பான அறிக்கையை ஆளுநரிடம் வழங்கி உள்ளோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
- தி.மு.க. குடும்ப ஆட்சியில் உழவர்கள், பெண்கள், இளைஞர்கள் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளனர்.
- அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி எனது பழைய நண்பர்.
சென்னை பசுமை வழிச்சாலையில் உள்ள அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இல்லத்தில் மத்திய அமைச்சரும் தமிழக பா.ஜ.க. தேர்தல் பொறுப்பாளருமான பியூஷ் கோயலுக்கு காலை விருந்தளித்தார்.
அவருடன் மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், பா.ஜ.க. மூத்த தலைவர்கள் பொன்.ராதாகிருஷ்ணன், எச்.ராஜா, மத்திய இணை அமைச்சர் எல்.முருகன், வானதி சீனிவாசன் உள்ளிட்டோரும் கலந்து கொண்டனர்.
இந்நிலையில் அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி இல்லத்தில் மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:
* தமிழ்நாட்டில் வரும் தேர்தலில் தி.மு.க. அரசை அகற்றிவிட்டு தேசிய ஜனநாயக கூட்டணி வெல்லும்.
* தி.மு.க. குடும்ப ஆட்சியில் உழவர்கள், பெண்கள், இளைஞர்கள் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளனர்.
* அனைத்து துறைகளிலும் ஊழல் செய்தது மட்டும் தான் தி.மு.க. அரசின் சாதனை.
* உதயநிதி ஸ்டாலினை உடனடியாக துணை முதலமைச்சர் பதவியில் இருந்து நீக்க வேண்டும்.
* உதயநிதி ஸ்டாலின் தேசியத்திற்கு எதிரான கருத்துகளை கூறி வருகிறார்.
* உதயநிதி பேச்சுக்கு நீதிமன்றமே தனது கண்டனத்தை தெரிவித்து இருப்பது குறிப்பிடத்தக்கது.
* அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி எனது பழைய நண்பர்.
இவ்வாறு அவர் கூறினார்.
- மறைந்த உறுப்பினர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் சட்டசபை அலுவல்கள் தள்ளி வைக்கப்பட்டன.
- வினாக்கள்-விடைகள் நேரத்தில் உறுப்பினர்களின் கேள்விகளுக்கு துறை சார்ந்த அமைச்சர்கள் பதில் அளித்து வருகின்றனர்.
சென்னை:
தமிழ்நாடு சட்டசபை நேற்று காலை 9.30 மணிக்கு கூடியது. மறைந்த எம்.எல்.ஏ. மற்றும் முக்கிய பிரமுகர்களுக்கு நேற்று சட்டசபையில் இரங்கல் குறிப்புகளையும், இரங்கல் தீர்மானங்களையும் சபாநாயகர் அப்பாவு வாசித்தார்.
முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் சா.பன்னீர்செல்வம், எல்.கணேசன் ஆகியோருக்கு இரங்கல் குறிப்பை சபாநாயகர் வாசித்தார். அவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில், அனைத்து உறுப்பினர்களும் சில நொடிகள் எழுந்து நின்று மவுன அஞ்சலி செலுத்தினர்.
அதைத் தொடர்ந்து, முருகப்பா குழுமத்தின் முன்னாள் தலைவரும், பிரபல தொழிலதிபருமான அருணாசலம் வெள்ளையன், பிரபல கவிஞர் ஈரோடு தமிழன்பன் என்ற செகதீசன், சினிமா தயாரிப்பாளர் ஏ.வி.எம். சரவணன், முதுபெரும் அரசியல் தலைவரும், மக்களவை முன்னாள் தலைவருமான சிவராஜ் பாட்டீல், சேந்தமங்கலம் தொகுதி எம்.எல்.ஏ. (தி.மு.க.) பொன்னுசாமி ஆகியோரின் மறைவுக்கு சபாநாயகர் அப்பாவு இரங்கல் தீர்மானத்தை வாசித்தார்.
இதையடுத்து எம்.எல்.ஏ.க்கள் அனைவரும், சில நொடிகள் எழுந்து நின்று மவுன அஞ்சலி செலுத்தினர். மறைந்த உறுப்பினர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் சட்டசபை அலுவல்கள் தள்ளி வைக்கப்பட்டன. நேற்று 8 நிமிடங்கள் மட்டுமே சட்டசபை அலுவல்கள் நடந்தன.
இந்நிலையில் சட்டசபை கூட்டத்தொடரின் 3-வது நாள் அமர்வு இன்று காலை 9.30 மணிக்கு தொடங்கியது. வினாக்கள்-விடைகள் நேரத்தில் உறுப்பினர்களின் கேள்விகளுக்கு துறை சார்ந்த அமைச்சர்கள் பதில் அளித்து வருகின்றனர்.
- நேற்று தங்கம் விலையில் பெரிய ஏற்றம் இருந்தது.
- வெள்ளி விலை இன்று அதிரடியாக குறைந்து உள்ளது.
சென்னை:
தங்கம் விலை மீண்டும் ஏற்றம் கண்டு மக்களுக்கு 'ஷாக்' கொடுத்து வருகிறது. அதிலும் இம்மாதம் ஆரம்பத்தில் இருந்து தாறுமாறாக எகிறுகிறது. கடந்த 13-ந் தேதி ஒரு சவரன் ரூ.1 லட்சத்து 5 ஆயிரத்தை கடந்த நிலையில், நேற்று முன்தினம் ரூ.1 லட்சத்து 10 ஆயிரத்தையும் தாண்டிவிட்டது.
விலையை கேட்டாலே கிறுகிறுக்க வைக்கும் அளவுக்கு கடந்த 3 தினங்களாக அதன் ஏற்றம் படுவேகமாக இருப்பதை பார்க்க முடிகிறது. அதிலும் கடந்த சில நாட்களாகவே தங்கம் விலை காலை மற்றும் பிற்பகல் என 2 முறை மாற்றம் கண்டு வருகிறது.
அந்த வகையில் நேற்று முன்தினம் ஒரே நாளில் சவரனுக்கு ரூ.3,600 அதிகரித்திருந்தது. அதன் தொடர்ச்சியாக நேற்றும் தங்கம் விலையில் பெரிய ஏற்றம் இருந்தது.
நேற்று முன்தினம் ஒரு கிராம் ரூ.13 ஆயிரத்து 900-க்கும், ஒரு சவரன் ரூ.1 லட்சத்து 11 ஆயிரத்து 200-க்கும் விற்கப்பட்டது. நேற்று காலை நேர நிலவரப்படி, கிராமுக்கு ரூ.350-ம், சவரனுக்கு ரூ.2,800-ம் அதிகரித்திருந்த நிலையில், பிற்பகலில் மேலும் கிராமுக்கு ரூ.165-ம், சவரனுக்கு ரூ.1,320-ம் என ஒரே நாளில் கிராமுக்கு ரூ.515-ம், சவரனுக்கு ரூ.4,120-ம் உயர்ந்து, ஒரு கிராம் ரூ.14,415-க்கும், ஒரு சவரன் ரூ.1 லட்சத்து 15 ஆயிரத்து 320-க்கும் விற்பனை ஆனது. கடந்த 3 நாட்களில் மட்டும் கிராமுக்கு ரூ.1,135-ம், சவரனுக்கு ரூ.9 ஆயிரத்து 80-ம் உயர்ந்தது.
இது ஒரு பக்கம் தாக்கத்தை ஏற்படுத்த, வெள்ளி விலையும் மறுபுறம் அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது. அதுவும் விண்ணை முட்டும் அளவுக்கு எகிறுகிறது. நேற்று கிராமுக்கு ரூ.5-ம், கிலோவுக்கு ரூ.5 ஆயிரமும் அதிகரித்து, ஒரு கிராம் ரூ.345-க்கும், ஒரு கிலோ ரூ.3 லட்சத்து 45 ஆயிரத்துக்கும் விற்பனையானது.
இந்நிலையில் தங்கம் விலை இன்று அதிரடியாக குறைந்துள்ளது. சென்னையில் இன்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.1,720 குறைந்து ரூ.1,13,600-க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் விலை கிராமுக்கு ரூ.215 குறைந்து ரூ.14,200-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
வெள்ளி விலையும் இன்று அதிரடியாக குறைந்து உள்ளது. வெள்ளி விலை கிராமுக்கு ரூ.5 குறைந்து ஒரு கிராம் ரூ.340-க்கும் பார் வெள்ளி 3 லட்சத்து 40 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
கடைசி ஐந்து நாள் தங்கம் விலை நிலவரம்:-
21-1-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,15,320
20-1-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,11,200
19-1-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,07,600
18-1-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,06,240
17-1-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,06,240
கடைசி ஐந்து நாள் வெள்ளி விலை நிலவரம்:-
21-1-2026- ஒரு கிராம் ரூ.345
20-1-2026- ஒரு கிராம் ரூ.340
19-1-2026- ஒரு கிராம் ரூ.318
18-1-2026- ஒரு கிராம் ரூ.310
17-1-2026- ஒரு கிராம் ரூ.310
- பியூஸ் கோயல் முன்னிலையில் டி.டி.வி.தினகரன் தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைந்தார்.
- தேசிய ஜனநாயக கூட்டணி என்பது 2026 தேர்தலில் வெற்றி பெறக்கூடிய கூட்டணியாக மாறிக்கொண்டு இருக்கிறது.
தமிழக சட்டசபைக்கு இன்னும் சில மாதங்களில் தேர்தல் நடைபெற உள்ளது. இதனால் கூட்டணியை பலப்படுத்தும் நடவடிக்கையில் அரசியல் கட்சிகள் தீவிரம் காட்டி வருகின்றன.
தி.மு.க. தலைமையிலான கூட்டணி பாராளுமன்ற தேர்தலில் இருந்து தொடர்ந்து வருகிறது. எதிர்க்கட்சியான அ.தி.மு.க. பா.ஜ.க.வுடன் கூட்டணியை உறுதிபடுத்தியுள்ளது. இந்த கூட்டணியில் ஏற்கனவே பா.ம.க. இணைந்துள்ளது.
இந்த சூழ்நிலையில் செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகத்தில் நாளை பிரதமர் மோடி பங்கேற்கும் தேசிய ஜனநாயக கூட்டணி கட்சியின் பொதுக்கூட்டம் நடைபெறுகிறது. இதில் கூட்டணி தலைவர்கள் அணிவகுக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள தனியார் நட்சத்திர ஓட்டலில் தமிழ்நாடு பா.ஜ.க. தேர்தல் பொறுப்பாளரும், மத்திய வர்த்தகம் மற்றும் தொழில் துறை மந்திரியுமான பியூஸ் கோயல் முன்னிலையில் டி.டி.வி.தினகரன் தேசிய ஜனநாயக கூட்டணியில் நேற்று இணைந்தார்.
தேசிய ஜனநாயக கூட்டணியில் அ.ம.மு.க. இணைந்ததற்கு அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வரவேற்பு தெரிவித்தார்.
இந்நிலையில் சென்னை பசுமை வழிச்சாலையில் உள்ள அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இல்லத்திற்கு மத்திய அமைச்சரும் தமிழக பா.ஜ.க. தேர்தல் பொறுப்பாளருமான பியூஷ் கோயலுக்கு வருகை புரிந்தார்.
அவருடன் மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், பா.ஜ.க. மூத்த தலைவர்கள் பொன்.ராதாகிருஷ்ணன், எச்.ராஜா, மத்திய இணை அமைச்சர் எல்.முருகன், வானதி சீனிவாசன் உள்ளிட்டோரும் வந்து இருந்தனர். எடப்பாடி பழனிசாமி தனது இல்லத்தில், மத்திய அமைச்சர், பியூஷ் கோயல், பா.ஜ.க. தலைவர்களுக்கு காலை விருந்து அளிக்கிறார்.
இதுதொடர்பாக கோவை தெற்கு தொகுதி எம்.எல்.ஏ. வானதி சீனிவாசன் கூறுகையில்,
தேசிய ஜனநாயக கூட்டணி என்பது 2026 தேர்தலில் வெற்றி பெறக்கூடிய கூட்டணியாக மாறிக்கொண்டு இருக்கிறது. ஒவ்வொரு நாளும் எங்களுக்கு பலம் சேர்ந்து கொண்டே இருக்கிறது.
நாளை பிரதமர் மோடி சென்னை வருகின்றபோது அங்கு கூடுகின்ற கூட்டம் என்பது தமிழகத்தினுடைய ஆட்சி மாற்றத்திற்கு கட்டியம் கூறுகின்ற கூட்டமாக இருக்கும்.
காலை உணவு முடிந்த பிறகு மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் உங்களை சந்தித்து பேசுவார் என்று அவர் கூறினார்.
- குறிப்பிட்ட தேதியில் இந்த மாற்றம் செயல்படுத்தப்படாமல் ஒத்தி வைக்கப்பட்டது.
- ராயபுரம் மற்றும் தீவுத்திடலில் தற்காலிகமாக அமைக்கப்பட்டிருக்கும் பஸ் முனையங்களில் இருந்து இயக்கம்.
சென்னை:
பிராட்வே பஸ் முனையம் மறுசீரமைப்பு மற்றும் உள்கட்டமைப்பு பணிகள் நடைபெற இருப்பதால், கடந்த 7-ந்தேதி முதல் பிராட்வே பஸ் நிலையத்திலிருந்து இயக்கப்பட்ட பஸ்கள் ராயபுரம் மற்றும் தீவுத்திடலில் தற்காலிகமாக அமைக்கப்பட்டிருக்கும் பஸ் முனையத்திலிருந்து இயக்கப்படும் என்று சென்னை மாநகர போக்குவரத்து கழகத்தால் ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் குறிப்பிட்ட தேதியில் இந்த மாற்றம் செயல்படுத்தப்படாமல் ஒத்தி வைக்கப்பட்டது.
இந்த நிலையில், பிராட்வே பஸ் நிலையத்திலிருந்து இயக்கப்பட்ட பஸ்கள் ராயபுரம் மற்றும் தீவுத்திடலில் தற்காலிகமாக அமைக்கப்பட்டிருக்கும் பஸ் முனையங்களில் இருந்து வருகிற 24-ந்தேதி (சனிக்கிழமை) முதல் இயக்கப்படும் என்று சென்னை மாநகர போக்குவரத்துக் கழகம் அறிவித்து உள்ளது.
- எங்கள் கோரிக்கைகளை 6 மாத காலத்திற்குள் நிறைவேற்றுவதாக கடந்த 2024-ம் ஆண்டு இந்திய வங்கிகள் சங்கம்உறுதி அளித்தது.
- கடந்த மார்ச் மாதம் அறிவிக்கப்பட்ட போராட்டம், அரசின் உறுதிமொழியை ஏற்று ஒத்திவைக்கப்பட்டது.
சென்னை:
அகில இந்திய வங்கி அதிகாரிகள் சங்கத்தின் பொதுச்செயலாளர் எஸ்.நாகராஜன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
எல்.ஐ.சி. நிறுவனத்தில் 100 சதவீத அன்னிய நேரடி முதலீட்டை வழங்கிய மத்திய அரசின் முடிவை ஏற்க முடியாது. மேலும், வங்கி ஊழியர்களுக்கு வாரத்திற்கு 5 நாட்கள் மட்டுமே வேலை, வேலை நேரத்தை முறைப்படுத்துதல், ஓய்வூதியத்தை உயர்த்துதல் உள்ளிட்ட கோரிக்கைகளை நாங்கள் நீண்ட நாட்களாக வலியுறுத்தி வருகிறோம். எங்கள் கோரிக்கைகளை 6 மாத காலத்திற்குள் நிறைவேற்றுவதாக கடந்த 2024-ம் ஆண்டு இந்திய வங்கிகள் சங்கம் (ஐ.பி.ஏ.) உறுதி அளித்தது. ஆனால், இதுவரை அந்த வாக்குறுதிகள் நிறைவேற்றப்படவில்லை.
கடந்த மார்ச் மாதம் அறிவிக்கப்பட்ட போராட்டம், அரசின் உறுதிமொழியை ஏற்று ஒத்திவைக்கப்பட்டது. ஆனால் தற்போது வரை அரசுடன் எந்த முன்னேற்றமும் இல்லாததால், வருகிற ஜனவரி 27-ந்தேதி ஒரு நாள் நாடு தழுவிய வேலைநிறுத்த போராட்டத்தை நடத்த முடிவு செய்துள்ளோம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- காலை 9 மணி முதல் பிற்பகல் 2 வரை மின் தடை செய்யப்படும்.
- விஜிபி சந்தோஷ் நகர், பிருந்தாவன் கார்டன், ஐயர் தோட்டம், சாமியார் தோட்டம்
சென்னை:
சென்னையில் பராமரிப்பு பணிகள் காரணமாக ஒரு சில பகுதிகளில் மின் தடை செய்யப்படுகிறது. காலை 9 மணி முதல் பிற்பகல் 2 வரை மின் தடை செய்யப்படும். பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும்.
அந்த வகையில், நாளை மின் தடை செய்யப்படும் பகுதிகள் குறித்து தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதன்படி, சென்னையில் நாளை (23.01.2026) காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின் வாரிய பராமரிப்பு பணி காரணமாக பின்வரும் இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும். அதன்படி,
மாதவரம் : லேதர் எஸ்டேட், ஜம்பலி நியூ காலனி, ரவி கார்டன், கேகேஆர் கார்டன், கண்ணாபுரம், ஆர்சி லிட்டில் விங்ஸ், ஆர்சி மேத்தா, RC Lorrels, பழனியப்பா நகர், மேத்தா நகர், அலெக்ஸ் நகர், A To D காலனி, பத்மாவதி நகர் மற்றும் விரிவு, தெற்கு டெலிபோன் காலனி, பாஷியம் நகர்.
ஜிஎன்டி சாலை: விஜிபி சந்தோஷ் நகர், பிருந்தாவன் கார்டன், ஐயர் தோட்டம், சாமியார் தோட்டம், தணிகாசலம் நகர் F ப்ளாக்ம், அண்ணா சாலை, காமாட்சி நகர், வாசுதேவன் தோட்டம், VOC தெரு, காமராஜ் சாலை 1 முதல் 4 தெரு வரை.
திருமுடிவாக்கம்: இந்திரா நகர், குரு நகர், விவேகானந்தா நகர், பழந்தண்டலம், நாகன் தெரு மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகள்.
- சிக்னல் அமைப்பு, தண்டவாள செயல்திறன், ரெயில் இயக்கம், உறுதித் தன்மை உள்ளிட்டவைகள் பரிசோதிக்கப்பட்டது.
- பூந்தமல்லி - வடபழனி இடையே பயணிகள் ரெயில் சேவையை தொடங்குவதற்கான அனுமதியை வழங்கும்.
சென்னை:
சென்னையில் 116 கிலோ மீட்டர் தொலைவுக்கு 3 வழித்தடங்களில் 2-ம் கட்ட மெட்ரோ ரெயில் திட்டப் பணிகள் நடந்து வருகிறது. இதில், கலங்கரை விளக்கம் - பூந்தமல்லி வரையிலான வழித்தடத்தில் (26 கிலோ மீட்டர்) பூந்தமல்லி - போரூர் வரையிலான 10 கிலோ மீட்டர் தொலைவுக்கு பணிகள் முடிந்துள்ளது. இந்த பூந்தமல்லி - போரூர் இடையே மெட்ரோ ரெயில் சேவையை தொடங்குவதற்கான பாதுகாப்பு சான்றிதழையும் ரெயில்வே வாரியம் வழங்கியது.
இந்த நிலையில், போரூர் - வடபழனி இடையில் அனைத்துப் பணிகளும் முடிவடைந்து கடந்த 11-ந்தேதி வெற்றிகரமாக சோதனை ஓட்டம் நடத்தி பார்க்கப்பட்டது.
அப்போது, சிக்னல் அமைப்பு, தண்டவாள செயல்திறன், ரெயில் இயக்கம், உறுதித் தன்மை உள்ளிட்டவைகள் பரிசோதிக்கப்பட்டது. இதனால், பூந்தமல்லி - வடபழனி இடையில் மெட்ரோ ரெயிலை இயக்குவதற்கான அனைத்து சோதனை பணிகளையும் சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனம் முழுமையாக முடித்துள்ளது. இதேபோல, போரூர் - வடபழனி இடையே இம்மாத இறுதிக்குள் ரெயில்வே பாதுகாப்பு கமிஷனர் ஆய்வு மேற்கொள்ள இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதைத்தொடர்ந்து, பூந்தமல்லி - வடபழனி வரையிலான வழித்தடத்தில் வரும் பிப்ரவரி மாதம் மெட்ரோ ரெயில் சேவை இயக்கப்பட இருக்கிறது.
இதுகுறித்து, சென்னை மெட்ரோ ரெயில்வே அதிகாரி ஒருவர் கூறியதாவது:-
பூந்தமல்லி - வடபழனி இடையே சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனம் மேற்கொண்டு வந்த சோதனை பணிகள் அனைத்தும் நிறைவு பெற்றுள்ளது. ரெயில்வே பாதுகாப்பு கமிஷனர் குறிப்பிட்ட வழித்தடம், பயணிகள் வசதி உள்ளிட்டவைகளை ஆய்வு செய்த பின்னர் அவருடைய ஆய்வுக் குறிப்புகள் ரெயில்வே வாரியத்திற்கு அனுப்பி வைக்கப்படும். இதைத்தொடர்ந்து, பூந்தமல்லி - வடபழனி இடையே பயணிகள் ரெயில் சேவையை தொடங்குவதற்கான அனுமதியை வழங்கும். பிப்ரவரி மாதம் இவ்வழித்தடத்தில் சேவை தொடங்கும் என எதிர்பார்க்கிறோம்.
இவ்வாறு அவர் கூறினார்.






