என் மலர்
சென்னை
- தங்கம் விலை இன்று உயர்ந்து மீண்டும் புதிய உச்சத்தை தொட்டுள்து.
- வெள்ளி விலை இன்று அதிரடியாக உயர்ந்துள்ளது.
சென்னை:
தங்கம் விலை தொடர்ந்து 'ஜெட்' வேகத்தில் எகிறி வந்து, நேற்று முன்தினம் ஒரு சவரன் ரூ.1 லட்சத்து 15 ஆயிரத்தை தாண்டி வரலாறு காணாத உச்சத்தை எட்டிப்பிடித்து இருந்தது. தொடர்ந்து விலை ஏற்றம் கண்ட நிலையில், நேற்று விலை சற்று குறைந்தது.
நேற்று முன்தினம் ஒரு கிராம் ரூ.14 ஆயிரத்து 415-க்கும், ஒரு சவரன் ரூ.1 லட்சத்து 15 ஆயிரத்து 320-க்கும் விற்பனை ஆனது. நேற்றைய நிலவரப்படி, கிராமுக்கு ரூ.215-ம், சவரனுக்கு ரூ.1,720-ம் குறைந்து, ஒரு கிராம் ரூ.14 ஆயிரத்து 200-க்கும், ஒரு சவரன் ரூ.1 லட்சத்து 13 ஆயிரத்து 600-க்கும் விற்கப்பட்டது.
கடந்த 20-ந்தேதி ஒரு சவரன் ரூ.1 லட்சத்து 10 ஆயிரத்தையும், நேற்று முன்தினம் ரூ.1 லட்சத்து 15 ஆயிரத்தையும் கடந்திருந்தது. நேற்று விலை குறைந்து ஒரு சவரன் ரூ.1 லட்சத்து 14 ஆயிரத்துக்கு கீழ் வந்திருக்கிறது.
இந்நிலையில் தங்கம் விலை இன்று மீண்டும் உயர்ந்து புதிய உச்சத்தை தொட்டுள்து. சென்னையில் இன்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.3,600 உயர்ந்து ரூ.1,17,200-க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் விலை கிராமுக்கு ரூ.450 உயர்ந்து ரூ.14,650-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
வெள்ளி விலையும் இன்று அதிரடியாக உயர்ந்துள்ளது. வெள்ளி விலை கிராமுக்கு ரூ.20 உயர்ந்து ஒரு கிராம் ரூ.360-க்கும் பார் வெள்ளி 3 லட்சத்து 60 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
கடைசி ஐந்து நாள் தங்கம் விலை நிலவரம்:-
22-1-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,13,600
21-1-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,15,320
20-1-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,11,200
19-1-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,07,600
18-1-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,06,240
கடைசி ஐந்து நாள் வெள்ளி விலை நிலவரம்:-
22-1-2026- ஒரு கிராம் ரூ.340
21-1-2026- ஒரு கிராம் ரூ.345
20-1-2026- ஒரு கிராம் ரூ.340
19-1-2026- ஒரு கிராம் ரூ.318
18-1-2026- ஒரு கிராம் ரூ.310
- துணைப் பொதுச்செயலாளர் மாணிக்கராஜா கழகத்தின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பு உட்பட அனைத்துப் பொறுப்புகளில் இருந்தும் நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
- கட்சிக்கு களங்கம், அவப்பெயர் உண்டாகும் விதத்தில் செயல்பட்ட காரணத்தினால் கட்சியில் இருந்து நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
அ.ம.மு.க. துணை பொதுச்செயலாளர் S.V.S.P. மாணிக்கராஜாவை கட்சியில் இருந்து நீக்கம் செய்து அக்கட்சியின் பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
,இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிவிப்பில், துணைப் பொதுச்செயலாளர் S.V.S.P. மாணிக்கராஜா கழகத்தின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பு உட்பட அனைத்துப் பொறுப்புகளில் இருந்தும் நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
கட்சிக்கு களங்கம், அவப்பெயர் உண்டாகும் விதத்தில் செயல்பட்ட காரணத்தினால் கட்சியில் இருந்து நீக்கம் செய்வதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
- தவெக கட்சிக்கு விசில் சின்னம் ஒதுக்கப்பட்டுவிட்டதை குறிக்கும் வகையில் பதிவு.
- ஏற்கனவே விஜயுடன் சந்திப்பு, ஆதரவுக் கருத்து என சர்ச்சை கிளப்பியவர் பிரவீன் சக்கரவர்த்தி என்பது குறிப்பிடத்தக்கது.
விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகத்திற்கு 2026 சட்டமன்றத் தேர்தலுக்கான அதிகாரப்பூர்வத் தேர்தல் சின்னமாக விசில் சின்னத்தை இந்திய தேர்தல் ஆணையம் ஒதுக்கியுள்ளது.
இந்நிலையில், தவெக கட்சிக்கு விசில் சின்னம் ஒதுக்கப்படடு விட்டதை குறிக்கும் வகையில் காங்கிரஸ் கட்சியின் தரவுப் பகுப்பாய்வுப் பிரிவு தலைவர் பிரவீன் சக்கரவர்த்தி பதிவு வெளியிட்டுள்ளார்.
இதுகுறித்து பிரவீன் சக்கரவர்த்தி தனது எக்ஸ் தள பக்கத்தில்,"
தமிழ்நாடு 2026 தேர்தலுக்கான விசில் ஊதப்பட்டு விட்டது.
இப்போது அனைத்துக் கட்சிகளும் தேர்தல் ஓட்டத்திற்கு தயாராி விட்டன" என ஆங்கிலத்தில் பதிவிட்டுள்ளார்.
ஏற்கனவே விஜயுடன் சந்திப்பு, ஆதரவுக் கருத்து என சர்ச்சை கிளப்பியவர் பிரவீன் சக்கரவர்த்தி என்பது குறிப்பிடத்தக்கது.
- 'இந்தித் திணிப்பை என்றும் எதிர்ப்போம்' என்று டெல்லியை நோக்கி முழக்கமிடச் செய்கிறது.
- உடன்பிறப்புகளின் திருச்சி வருகையை உங்களில் ஒருவனான நான் எதிர்பார்த்துக் காத்திருக்கிறேன்.
தீ பரவட்டும், வீரவணக்கம்.. வெற்றி முழக்கம்..!- திமுக தொண்டர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மடல் எழுதியுள்ளார்.
இதுதொடர்பாக, முதலமைச்சர் மு.க ஸ்டாலின் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் கூறியிருப்பதாவது:-
தீ பரவட்டும்!
வீரவணக்கம்… வெற்றி முழக்கம்!
நம் உயிருடன் கலந்திருக்கும் தலைவர் கலைஞரின் அன்பு உடன்பிறப்புகளுக்கு, உங்களில் ஒருவன் எழுதும் மொழிப்போர்த் தியாகிகள் வீரவணக்க நாள் மடல்.
'செந்தமிழைக் காப்பதற்குச் சேனை ஒன்று தேவை' என்று நம் தாய்மொழியாம் தமிழ்மொழியை, இந்தி ஆதிக்கத்திடமிருந்து காத்திடப் புரட்சிக்கவிஞர் பாவேந்தர் பாரதிதாசன் எழுதிய உணர்ச்சிமிக்க கவிதை வரிகள்தான் ஏறத்தாழ 90 ஆண்டுகளுக்கு முன், தமிழ்நாட்டின் ஒவ்வொரு ஊரிலும் ஊர்வலப் பாட்டாக ஒலித்தது.
அப்போது, 14 வயது பள்ளி மாணவனாக இருந்த நம் உயிர்நிகர் தலைவர் கலைஞர் அவர்கள், தன் கையில் தமிழ்க்கொடி ஏந்தி, 'ஓடிவந்த இந்திப் பெண்ணே கேள், நீ தேடி வந்த கோழையுள்ள நாடிதல்லவே' என்று முரசு கொட்டி, தன் வயதையொத்த மாணவர்களுடன் தேரோடும் திருவாரூர் வீதிகளில் இந்தி ஆதிக்கத்தை எதிர்த்து ஊர்வலமாகச் சென்றார்.
தந்தை பெரியாரும், பேரறிஞர் அண்ணாவும், முத்தமிழறிஞர் கலைஞரும், புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் உள்ளிட்ட எண்ணற்ற தமிழறிஞர்களும் ஊட்டிய அந்த உணர்வு இன்று வரை நம் உள்ளத்தில் தீயாகக் கனன்று கொண்டிருக்கிறது. அன்று பள்ளி மாணவராக முத்தமிழறிஞர் கலைஞர் உயர்த்திப் பிடித்த தமிழ்க்கொடியின் நோக்கம் என்னவோ, அதுதான் இன்று நம் கைகளில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் இருவண்ணக் கொடியாக உயர்ந்து நிற்கிறது. 'இந்தித் திணிப்பை என்றும் எதிர்ப்போம்' என்று டெல்லியை நோக்கி முழக்கமிடச் செய்கிறது.
மொழியும் இனமும் கழகத்தின் இரு கண்கள். அவற்றின் உரிமைகளைக் காப்பதற்காக உருவானதுதான் திராவிட முன்னேற்றக் கழகம். மொழிக்காக உயிரையே மாய்த்துக் கொண்ட தீரமிக்க தொண்டர்களின் கோட்டம் இது. இப்போதும் அதிகார மனப்பான்மையுடன் ஒன்றிய அரசு இந்தியைத் திணிக்கும் வேலையைத் தொடர்ந்து செய்கிறது. பேரறிஞர் அண்ணா வகுத்துத் தந்த இருமொழிக் கொள்கைக்கு மாற்றாக, இந்தியைத் திணிக்கும் மும்மொழிக் கொள்கையை ஏற்றுக்கொண்டால்தான் கல்விக்கான நிதியைத் தருவோம் என்று தமிழ்நாட்டை வஞ்சிக்கிறது.
தமிழ்மொழியின் மீது இந்தி ஆதிக்கத்தையும், தமிழர்களின் பண்பாட்டின் மீது மதவெறிக் கலவரங்களையும் முன்னெடுத்து, தமிழ்நாட்டின் வளர்ச்சியைத் தடுக்கும் தடைக்கற்களையும் ஒன்றிய பா.ஜ.க. அரசு தொடர்ந்து போட்டு வருகிறது. எத்தனை தடைகள் வந்தாலும் அவற்றைத் தகர்த்தெறியும் தடந்தோள்கள் எங்களுக்கு உண்டு என்ற உறுதியுடன், உங்களில் ஒருவனான என் தலைமையிலான அரசும், எனக்கு உறுதுணையாக நிற்கும் அன்பு உடன்பிறப்புகளான நீங்களும் எதிர்கொண்டு நிற்கிறோம்.
தமிழ்நாட்டுக்கு ஒன்றிய பா.ஜ.க அரசு தொடர்ந்து செய்து வரும் வஞ்சகத்தைத் தட்டிக் கேட்கும் துணிச்சலும், நிமிர்ந்து நின்று எதிர்க்கும் முதுகெலும்பும் திராவிட முன்னேற்றக் கழகத்திற்கே உண்டு. எதிர்க்கட்சியான அ.தி.மு.க.வும் அதிலிருந்து உதிர்ந்த இலை - தழை - சருகுகளும் பழைய வழக்குகளின் கோப்புகள் தூசு தட்டப்படும் சத்தம் கேட்டதுமே, பயந்து நடுங்கி, டெல்லிக்கு ஓடி பா.ஜ.க.வின் பாதம் பணிந்து நின்று விடுகின்றன.
ஒன்றிய பா.ஜ.க. அரசின் கைப்பாவைகளாகிவிட்ட அமலாக்கத்துறை, சி.பி.ஐ., வருமானவரித்துறை இன்னும் உள்ள புலனாய்வு அமைப்புகளை வைத்துத் தி.மு.க.வினரையும் முடக்கிவிடலாம் என்கிற சதித்திட்டம் தொடர்ந்துகொண்டுதான் இருக்கிறது. நாம் பணிய மாட்டோம். துணிந்து நிற்போம். இனம் - மொழி - நிலம் காத்திடும் போரைத் தொடர்ந்திடுவோம்.
பாசிசப் படையை எதிர்க்கும் சமூகநீதி - ஜனநாயகப் படையாகத் திராவிட முன்னேற்றக் கழகம் தேர்தல் களத்திற்கு ஆயத்தமாகி விட்டது. அதற்கான முரசு கொட்டும் நிகழ்ச்சியாக, ஜனவரி 20-ஆம் நாள் கழகத்தின் தலைமை நிலையமான அண்ணா அறிவாலயத்தில் மாவட்டக் கழகச் செயலாளர்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் அமைந்துள்ளன.
கழகத்தின் இளைஞர்களும் மகளிரும் இந்தத் தேர்தல் களத்தில் அணிவகுத்து ஆற்ற வேண்டிய பணிகள் குறித்து திட்டமிடப்பட்டுள்ளன. ஜனநாயகப் போர்க்களத்தின் முன்கள வீரர்களாக நியமிக்கப்பட்டள்ள பாக முகவர்கள், வாக்குச்சாவடிக் குழு உறுப்பினர்கள் மற்றும் டிஜிட்டல் முகவர்கள் ஆகியோருக்கான பயிற்சிக் களமும் மண்டல வாரியாகத் திட்டமிடப்பட்டுள்ளது. தமிழ்நாட்டைத் தலைகுனிய விடாமல், அனைத்து இலக்குகளிலும் மாநிலத்தை முன்னேற்றி வருகிற திராவிட மாடல் அரசின் சாதனைகளைத் தொகுதிகள் தோறும் முழங்குகின்ற பொதுக்கூட்டங்கள் நடைபெறவிருக்கின்றன.
2021-ஆம் ஆண்டு ஆட்சிப் பொறுப்பேற்றது முதல், ஒவ்வொரு குடும்பமும் பயன்பெறுகிற பல்வேறு நலத்திட்டங்களைக் கழக அரசு செயல்படுத்தியுள்ளது. குறிப்பாக மகளிர் நலன் காக்கும் முன்னோடித் திட்டங்களை இந்தியாவின் பிற மாநிலங்களும் பின்பற்றும் வகையில் சிறப்பாகச் செயல்படுத்தி வருகிறோம். இவற்றை மக்களிடம் வீடு வீடாகப் பரப்புரை செய்யும் 'வெல்லும் தமிழ்ப் பெண்கள்' என்ற தலைப்பிலான மகளிர் குழுவினரின் பயணம் ஒவ்வொரு பாகத்திலும் பிப்ரவரி 1 முதல் பிப்ரவரி 8 வரை நடைபெறவுள்ளது.
'தமிழ்நாட்டைத் தலைகுனிய விடமாட்டோம்' எனத் தொகுதிகள் தோறும் நடைபெறவுள்ள பொதுக்கூட்டங்கள் பிப்ரவரி 28 வரை நடைபெறவுள்ளன. அத்துடன், ஜனவரி 26 அன்று டெல்டா மண்டல வெல்லும் தமிழ்ப் பெண்கள் மகளிர் மாநாடு எழுச்சியுடன் நடைபெறவிருக்கிறது. பிப்ரவரி 7-ஆம் நாள் விருதுநகரில் நடைபெறும் தென் மண்டல இளைஞரணி நிர்வாகிகள் சந்திப்பில் கழக இளைஞர்கள் அணிவகுக்க ஆயத்தமாகிவிட்டனர். மகளிர் படையையும், இளைஞர் பட்டாளத்தையும் உற்சாகப்படுத்தி உத்வேகமளித்திடும் வகையில் உங்களில் ஒருவனான நான் அந்த இரு நிகழ்வுகளிலும் பங்கேற்கிறேன்.
வீடு வீடாகப் பரப்புரை, தொகுதிகள் தோறும் பொதுக்கூட்ட முழக்கங்கள், களத்தில் நிற்கும் கழகத்தினருக்குப் பயிற்சிக் கூட்டங்கள் என பிப்ரவரி மாதம் முழுவதும் தேர்தல் களத்திற்கான முன்னோட்டப் பயணத்தைக் கழகம் மேற்கொள்ளும் நிலையில், அதன் முத்தாய்ப்பாகத் தீரர் கோட்டமாம் திருச்சியில் மார்ச் 8 அன்று, பத்து இலட்சம் உடன்பிறப்புகள் கூடுகின்ற திராவிட முன்னேற்றக் கழகத்தின் மாநில மாநாடு பேரெழுச்சியுடன் நடைபெறவிருக்கிறது. இப்படியொரு கொள்கைப் பட்டாளம் இந்தியாவில் எந்த இயக்கத்திலும் கிடையாது என்பதை உரக்கச் சொல்லிடும் வகையில், உடன்பிறப்புகளின் திருச்சி வருகையை உங்களில் ஒருவனான நான் எதிர்பார்த்துக் காத்திருக்கிறேன்.
ஜனநாயகப் போர்க்கள வீரர்களான உடன்பிறப்புகளுக்கு ஓய்வில்லை. உங்களை வழிநடத்தும் தலைமைப் பொறுப்பை ஏற்றுள்ள உங்களில் ஒருவனான எனக்கு ஓய்வுமில்லை - உறக்கமுமில்லை.
நம் உடன்பிறப்புகள் தேர்தலுக்கான கட்சி அரசியல் வேலைகளை மட்டும் செய்யவில்லை. ஒவ்வொரு குடிமக்களின் ஜனநாயக ஆயுதமான வாக்குரிமையைப் பாதுகாக்கும் பணியையும் களத்தில் நின்று நிறைவேற்றியிருக்கிறார்கள்.
நம் உயிர்நிகர் தலைவர் கலைஞர் அடிக்கடி சொன்னதுபோல, நாம் எதிர்கொள்கின்ற 2026 தேர்தல் களம் ஆரிய - திராவிடப் போரின் மற்றொரு களம். அந்தக் களத்தில், திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமையில் சமூகநீதி - மதநல்லிணக்கம் - மாநில உரிமைகளை இலட்சியமாகக் கொண்ட கொள்கைக் கூட்டணி வலிமையுடன் களத்தில் நிற்கிறது. தமிழ்ப் பண்பாட்டை அழிக்க நினைக்கும் அரசியல் எதிரிகளையும், அந்த எதிரிகளின் கூலிப்பட்டாளமாகிவிட்ட அடிமைகளையும் எதிர்கொண்டு வெற்றியை உறுதி செய்யும் களம்.
போர்க்களம் காணும் படை வீரர்கள் தங்களின் நாட்டைக் காத்திட உறுதியேற்பது வழக்கம். ஜனநாயகக் களம் காணும் கழகத்தின் இலட்சிய வீரர்களான உடன்பிறப்புகள், ஜனவரி 25 அன்று மாநிலம் முழுவதும் நடைபெறவுள்ள மொழிப்போர்த் தியாகிகள் வீரவணக்க நாள் பொதுக்கூட்டங்களில் பங்கேற்று, தமிழ் இன - மொழி எதிரிகளான பா.ஜ.க.வையும் அதன் அடிமைக் கூட்டணியையும் வீழ்த்திட உறுதியேற்க வேண்டும்.
உங்களில் ஒருவனான நான், தமிழ்மொழி காத்திடும் அறப்போரில் தங்கள் இன்னுயிரை ஈந்த தியாகிகளாம் தாளமுத்து - நடராசன் நினைவிடத்தில் வீரவணக்கம் செலுத்தி உறுதியேற்க இருக்கிறேன். பேரறிஞர் பெருந்தகை அண்ணா பிறந்த காஞ்சிபுரத்தில் நடைபெறும் வீரவணக்க நாள் கூட்டத்தில் உரையாற்றுகிறேன்.
வீரவணக்கத்துடன் தொடங்கும் கழக உடன்பிறப்புகளின் அணிவகுப்பும் களப்பணியும் 2026 சட்டமன்றத் தேர்தல் நிறைவு பெறும் வரை ஓய்வின்றிச் செல்லட்டும். தொய்வின்றித் தொடரட்டும். மகத்தான வெற்றியுடன் திராவிட மாடல் 2.0 ஆட்சி அமையட்டும்! கழகத்தின் வெற்றி முழக்கம் எட்டுத் திக்கும் ஒலிக்கட்டும்!
இவ்வாறு அவர் கூறினார்.
- தூத்துக்குடியில் புதிய சிப்காட் தொழில் பூங்காக்கள் உருவாக்கப்பட்டு, மோட்டார் வாகன உற்பத்தி உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன.
- வரும் காலங்களில் தாமிரபரணி ஆற்றின் நீரானது பொதுமக்களின் குடிநீர் தேவை மற்றும் விவசாயத்திற்கு மட்டுமே பயன்படுத்தப்படும்.
சென்னை:
தமிழ்நாடு முழுவதும் பரவலான தொழில் வளர்ச்சியை உருவாக்கி பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்காக தமிழ்நாடு அரசு பல்வேறு முற்போக்கான முன்னெடுப்புகளை மேற்கொண்டுவருகிறது.
அதன்படி, கடந்த 4½ ஆண்டுகளில் தென் மாவட்டங்களின் வளர்ச்சியை மேம்படுத்தும் விதமாக, தூத்துக்குடியில் புதிய சிப்காட் தொழில் பூங்காக்கள் உருவாக்கப்பட்டு, மோட்டார் வாகன உற்பத்தி உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன.
மேலும், செயற்கை நூற்பு இழை நிறுவனம், மின்னணு உற்பத்தி நிறுவனங்கள், அறைகலன் தயாரிக்கும் நிறுவனங்கள் செயல்பட உள்ளன. இவைமட்டுமின்றி, கப்பல் கட்டுமான தொழிற்சாலை, பசுமை சக்தி உற்பத்தி நிறுவனங்கள், விண்வெளி சாதன உற்பத்தி நிறுவனங்கள் அமைப்பதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டு விரைவில் கட்டுமான பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன.
இந்த வளர்ச்சியினை மேலும் விரைவுபடுத்தும் விதமாக, தூத்துக்குடி வ.உ.சி துறைமுகம் விரிவாக்கம், விமான நிலையம் விரிவாக்கம் மற்றும் மதுரை -தூத்துக்குடி தொழில் வழித்தடங்கள் போன்றவை இப்பகுதியின் தொழில் வளர்ச்சிக்கு பெரும் உந்துசக்தியாக அமைந்துள்ளன.
இதன் தொடர்ச்சியாக, இப்பகுதியின் சமச்சீர் வளர்ச்சியை மேம்படுத்தும் வகையில் தொழில் நிறுவனங்களின் தேவைகளுக்காக தற்போது தாமிரபரணி ஆற்றின் நீர் பயன்படுத்தப்பட்டு வருவதற்கு மாற்றாக, ஒரு மாபெரும் முன்னெடுப்பாக, தூத்துக்குடி மாவட்டம், முள்ளக்காடு கிராமத்தில் நாளொன்றுக்கு 60 மில்லியன் லிட்டர் உற்பத்தித்திறன் கொண்ட கடல்நீரை நன்னீராக்கும் ஆலை நிறுவி தண்ணீர் வழங்க வகை செய்யும் இத்திட்டம் ரூ.2292.38 கோடி திட்ட மதிப்பீட்டில் 40 சதவீதம் சிப்காட் பங்களிப்புடனும், தனியார் கூட்டமைப்பின் 60 சதவீதம் பங்களிப்புடனும் மேற்கொள்ளப்படுகிறது.
இத்திட்டம், தூத்துக்குடி சிப்காட் தொழில் பூங்காவில் அமைந்துள்ள நிறுவனங்களுக்கு மட்டுமல்லாது சுற்றுப் பகுதிகளில் உள்ள தொழில் நிறுவனங்களுக்கும் குழாய் மூலம் தடை இல்லாத நீர் வழங்கும் சேவையினை உறுதி செய்திடும். இதனால், வரும் காலங்களில் தாமிரபரணி ஆற்றின் நீரானது பொதுமக்களின் குடிநீர் தேவை மற்றும் விவசாயத்திற்கு மட்டுமே பயன்படுத்தப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
நிகழ்ச்சியில், அமைச்சர்கள் கீதா ஜீவன், அனிதா ஆர். ராதாகிருஷ்ணன், டி.ஆர்.பி. ராஜா மற்றும் கனிமொழி எம்.பி., தலைமைச் செயலாளர் முருகானந்தம், தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத்துறை அரசு செயலாளர் அருண் ராய், சிப்காட் நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் செந்தில்ராஜ் கலந்து கொண்டனர்.
முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று தலைமைச் செயலகத்தில், திட்டம், வளர்ச்சி மற்றும் சிறப்பு முயற்சிகள் துறையின் சென்னை மெட்ரோ சொத்து மேலாண்மை நிறுவனம் சார்பில் ரூ.167 கோடியே 9 லட்சம் மதிப்பீட்டில் தற்போதைய மந்தைவெளி பேருந்து பணிமனை மற்றும் முனையத்தில் ஒருங்கிணைந்த பன்முக போக்குவரத்து மற்றும் வணிக வளாகத்திற்கான கட்டுமான பணிக்கு அடிக்கல் நாட்டினார். மேலும், சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனம் சார்பில் ரூ.60 கோடி மதிப்பீட்டில், ராஜீவ் காந்தி சாலை ஒக்கியம் மடுவில் புதியதாக கட்டப்பட்டுள்ள 4 வழிசாலைப்பாலத்தை மக்கள் பயன்பாட்டிற்காக திறந்து வைத்தார்.
முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று தலைமைச் செயலகத்தில், பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத் துறையின் சார்பில் வெளிநாட்டில் பட்டமேற்படிப்பு பயில 10 சிறுபான்மையின மாணவ, மாணவிகளுக்கு கல்வி உதவித்தொகை வழங்கும் திட்டத்தின் கீழ், 10 சிறு பான்மையின மாணவ, மாணவியர்களுக்கு தலா ரூ.36 லட்சம் கல்வி உதவித்தொகைக்கான ஆணைகளை வழங்கினார். மேலும், 2 தொன்மையான தேவாலயங்கள் மற்றும் 2 பழைமை வாய்ந்த தேவாலயங்களை புனரமைப்பதற்கு முதல் தவணைத் தொகையாக ரூ.1 கோடியே 81 லட்சத்து 97 ஆயிரத்திற்கான காசோலைகளை தேவாலய பிரதிநிதிகளிடம் வழங்கினார்.
- பிப்ரவரி முதல் வாரத்தில் மக்கள் பயன்பாட்டிற்கு திறக்க திட்டமிடப்பட்டுள்ளது.
- 35 மீட்டர் நீளமுள்ள இறுதி டெக்ஸ்லாப் பாக்ஸ் அமைக்கும் பணி தற்போது நடைபெற்று வருகிறது.
சென்னை:
சென்னையில் மத்திய கைலாஷ் சந்திப்பு போக்குவரத்து நெரிசல் மிகுந்த பகுதியாக காணப்படுகிறது. அங்கு ஒரு மணி நேரத்திற்கு சுமார் 11 ஆயிரம் வாகனங்கள் கடந்து செல்வதாக கணக்கிடப்பட்டுள்ளது.
கிண்டியில் இருந்து ஓஎம்ஆர் வரை வழித்தடத்தில் மட்டும் 3762 வாகனங்கள் செல்கின்றன. இதனால் ஏற்படுகின்ற போக்குவரத்து நெரிசலை குறைக்க 650 மீட்டர் நீளமுள்ள எல் வடிவிலான மேம்பாலம் கட்டப்பட்டு வருகிறது.
பருவமழை மற்றும் இரும்பு கொள்முதலில் ஏற்பட்ட தாமதத்தின் காரணமாக கட்டுமான பணியில் சுணக்கம் ஏற்பட்டது. தற்போது இறுதி கட்ட பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
மேம்பாலத்தின் மத்திய பகுதியில் ஒரு தளம் அமைக்கப்பட்டு பணிக்கான இடம் சீர் செய்யப்பட்டுள்ளது. இதன் காரணமாக போக்குவரத்து போலீசார் தற்போது அடையாரில் இருந்து கிண்டிக்குச் செல்லும் வாகனங்களை சர்தார் படேல் சாலை வழியாக நேராக செல்ல அனுமதிக்க உள்ளனர்.
சர்தார் படேல் சாலையை ராஜீவ் காந்தி சாலையுடன் இணைக்கும் எல் வடிவ மேம்பாலத்தின் கட்டுமான பணிகள் நிறைவடையும் தருவாயில் உள்ளன. பிப்ரவரி முதல் வாரத்தில் மக்கள் பயன்பாட்டிற்கு திறக்க திட்டமிடப்பட்டுள்ளது. 35 மீட்டர் நீளமுள்ள இறுதி டெக்ஸ்லாப் பாக்ஸ் அமைக்கும் பணி தற்போது நடைபெற்று வருகிறது.
இந்த மேம்பாலம் திறக்கப்பட்டால் ஐ.ஐ.டி, அடையார் புற்றுநோய் நிறுவனம் பகுதியில் போக்குவரத்து நெரிசல் கணிசமாக குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அடையாறில் இருந்து துரைப்பாக்கம் நோக்கி பயணிக்கும் வாகனங்களுக்கு டைடல் பார்க் சந்திப்பில் போக்குவரத்து நெரிசல் அதிகரிக்க கூடும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
சர்தார் படேல் சாலையில் இருந்து ராஜீவ் காந்தி சாலைக்கு, நெரிசலான மத்திய கைலாச சந்திப்பை தவிர்த்து தடையில்லாமல் செல்ல அனுமதிக்கும் வகையில் ஒருங்கிணைந்த மூன்று வழி மேம்பாலம் கட்ட கையெழுத்திடப்பட்டுள்ளது. திறப்பு விழாவை தொடர்ந்து சர்தார் படேல் சாலை, காந்தி மண்டபம் சாலை, ராஜீவ் காந்தி சாலை ஆகிய மூன்று சாலைகளிலும் போக்குவரத்து நெரிசலை குறைக்க சுழற்சி முறையில் மாற்றங்களை செய்ய மாநில நெடுஞ்சாலை மற்றும் போக்குவரத்து போலீசார் திட்டமிட்டுள்ளன.
புதிய மேம்பாலம் திறக்கப்பட்டதும், காந்தி மண்டபம் சாலையிலிருந்து (கோட்டூர்புரம்) கிண்டி நோக்கி செல்லும் வாகனங்கள் புதிய மேம்பாலத்தின் கீழ் யு வடிவ திருப்பம் செய்து இடது புறமாக திருப்பி விடப்படும்.
அடையாறு, திருவான்மியூரில் இருந்து கோட்டூர்புரம் நோக்கி செல்லும் வாகனங்கள் அடையாறு மேம்பாலத்திற்கு முன்னால் சிக்னல் இல்லாத வலது புறம் திரும்பும் என்று அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
தற்போது சர்தார் படேல் சாலையில் இருந்து (அண்ணா பல்கலைக்கழகம் பக்கம்) கோட்டூர்புரம் நோக்கி செல்லும் வாகனங்கள் அடையாறு மற்றும் திருவான்மியூர் நோக்கி செல்லும் வாகனங்கள் அடையாறு மேம்பாலத்தை பயன்படுத்த வேண்டும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்த மேம்பாலம் 652 மீட்டர் நீளமும் 7.5 மீட்டர் அகலமும் கொண்டது. புதிய மேம்பாலத்தில் போக்குவரத்து தொடங்கிய பிறகு மாற்றங்கள் கொண்டு வரப்படுகிறது.
சர்தார் படேல் சாலையில் இருந்த நடைபாதை அளவு குறைக்கப்பட்டு உள்ளது. அந்த சாலை அகலப்படுத்த பணிகள் நடந்து வருகின்றன. சர்தார் படேல் சாலை அகலப்படுத்தும் திட்டத்திற்காக மாநில நெடுஞ்சாலைத்துறை விரைவில் டெண்டர் வெளியிட உள்ளது.
பல லட்சம் ஊழியர்கள் பயணம் செய்யும் இந்த சாலையின் மேம்பாட்டிற்கு ரூ.45 கோடி செலவாகும் என மதிப்பிடப்பட்டுள்ளது. இரு கூடுதல் பாதைகள் அமைத்தல், பாதசாரிகளுக்கான நடைபாதை மேம்படுத்துதல் மற்றும் ஐ.ஐ.டி.க்கு அருகில் உள்ள புற்றுநோய் மையத்தை சுற்றி ஒலி தடுப்பு சுவர் கட்டுதல் ஆகியவை திட்டத்தின் முக்கிய அம்சங்கள் ஆகும்.
புதிய மேம்பாலம் கட்டப்பட உள்ளதால் அதன் கீழ் உள்ள சாலை சுமார் 400 மீட்டர் தூரத்திற்கு ஏற்கனவே அகலப்படுத்தப்பட்டுள்ளது. ஐ.ஐ.டி முதல் அண்ணாசாலை வரையிலான பகுதி விரிவுபடுத்தப்பட்டு அதிக வாகனங்கள் செல்ல அனுமதிக்கும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்தத் திட்டப் பணிகள் இரண்டு கட்டங்களாக மேற்கொள்ளப்படும் முதல் கட்டமாக ஐ.ஐ.டி. முதல் ராஜ்பவன் வரையிலான 1.70 கிலோ மீட்டர் தூர பணிகள் தொடங்கும். அதனை தொடர்ந்து ராஜ் பவன் முதல் அண்ணா சாலை வரையிலான 0.80 இரண்டாம் கட்ட பணிகள் மேற்கொள்ளப்படும்.
புதிய மேம்பாலம் திறக்கப்பட்டு பொதுமக்கள் பயன்பாட்டிற்கு வரும் நிலையில் நீண்டகால போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு ஏற்படும்.
- தி.மு.க. அரசுக்கு எதிரான பிரசாரங்களை முன்னெடுப்பது குறித்தும் கருத்துக்கள் பரிமாறப்பட்டு உள்ளன.
- அ.தி.மு.க.-பா.ஜ.க. கூட்டணியில் தே.மு.தி.க.வையும் சேர்ப்பதற்கு தீவிர பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருகின்றன.
அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று பா.ஜ.க. தலைவர்களுக்கு விருந்து அளித்து தேர்தல் வியூகம் குறித்து முக்கிய ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார்.
இவை பற்றிய பரபரப்பான தகவல்கள் வருமாறு:-
பா.ஜ.க. வருகிற சட்டமன்ற தேர்தலில் 30 தொகுதிகள் வரையில் போட்டியிடுவதற்கு விருப்பம் தெரிவித்து உள்ளது.
ஆனால் எடப்பாடி பழனிசாமி பா.ஜ.க.வுக்கு 25 தொகுதிகள் ஒதுக்குவதற்கு சம்மதித்து உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. அ.ம.மு.க.வுக்கு 6 அல்லது 7 தொகுதிகள் ஒதுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அன்புமணி தலைமையிலான பா.ம.க.வுக்கு 17 சட்டமன்ற தொகுதிகள் ஒதுக்க வாய்ப்பு இருப்பதாக தெரிகிறது. அத்துடன் அன்புமணிக்கு மேல்சபை எம்.பி. பதவி அளிக்கப்பட இருப்பதாகவும் கூறப்படுகிறது.
எடப்பாடி பழனிசாமி, பியூஸ் கோயல் இடையேயான இந்த சந்திப்பின் போது தமிழகத்தில் சட்டமன்ற தேர்தலை அனைத்து கூட்டணி கட்சிகளோடும் இணைந்து ஒற்றுமையுடன் சந்திப்பது பற்றி விரிவாக ஆலோசிக்கப்பட்டது. பிரதமர் மோடி நாளை சென்னை வரும் நிலையில் அந்த கூட்டத்தில் கலந்து கொள்வது குறித்தும் எடப்பாடி பழனிசாமியுடன் பா.ஜ.க. தலைவர்கள் ஆலோசனை மேற்கொண்டனர்.
சட்டமன்ற தேர்தலில் தி.மு.க. அரசுக்கு எதிராக வியூகம் அமைத்து செயல்படுவது பற்றியும் இன்றைய சந்திப்பின் போது எடப்பாடி பழனிசாமி, பியூஸ் கோயல் இருவரும் ஆலோசனை நடத்தி உள்ளனர். இதன்படி தேர்தல் அறிவிப்பு வெளியான பிறகு கூட்டணி கட்சி தலைவர்களோடு இணைந்து பொதுக் கூட்டங்கள் நடத்துவது பற்றியும் அதில் தி.மு.க. அரசுக்கு எதிரான பிரசாரங்களை முன்னெடுப்பது குறித்தும் கருத்துக்கள் பரிமாறப்பட்டு உள்ளன.
பிரதமர் மோடி நாளை சென்னை வரும் நிலையில் கடந்த 2 நாட்களாக சென்னையில் பியூஸ் கோயல் அ.தி.மு.க.-பா.ஜ.க. கூட்டணி கட்சி தலைவர்களை சந்தித்து பேசி இருப்பது அரசியல் களத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
அ.தி.மு.க. கூட்டணியில் கடந்த மாதம் வரையில் பா.ஜ.க. கட்சி மட்டுமே இடம் பெற்றிருந்த நிலையில் புத்தாண்டு பிறந்த பிறகு அந்த கூட்டணியில் அதிரடி திருப்பமாக அன்புமணி தலைமையிலான பா.ம.க.வும், டி.டி.வி.தினகரன் தலைமையிலான அ.ம.மு.க.வும் சேர்ந்து இருப்பது குறிப்பிடத்தக்கது. இதன் மூலம் அ.தி.மு.க.-பா.ஜ.க., பா.ம.க., அ.ம.மு.க. ஆகிய கட்சிகளின் தொண்டர்களும், கூட்டணியில் இடம் பெற்றுள்ள மற்ற சிறிய கட்சிகளின் தொண்டர்களும் உற்சாகம் அடைந்து இருப்பதாக அ.தி.மு.க. மூத்த நிர்வாகி ஒருவர் தெரிவித்தார்.
இதுதொடர்பாக அவர் மேலும் கூறும் போது, வருகிற சட்டமன்ற தேர்தலை மெகா கூட்டணி அமைத்து சந்திப்போம் என்று எங்களது கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தொடர்ந்து கூறி வந்தார். அப்போது எல்லாம் எதிர்க்கட்சியை சேர்ந்தவர்கள் ஏளனம் செய்தார்கள். அவர்களது வாயை எல்லாம் அடைக்கும் வகையில் அ.தி.மு.க. கூட்டணி மெகா கூட்டணியாக மாறி இருக்கிறது. இதே வேகத்தோடு சென்று நிச்சயம் வருகிற தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சி அமைப்போம் என்றும் தெரிவித்தார்.
அ.தி.மு.க.-பா.ஜ.க. கூட்டணியில் தே.மு.தி.க.வையும் சேர்ப்பதற்கு தீவிர பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருகின்றன. இதன் மூலம் தே.மு.தி.க.வும் விரைவில் அ.தி.மு.க. கூட்டணியில் இணையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இப்படி கூட்டணி இறுதி செய்யப்பட்டதும் கூட்டணி கட்சிகள் அனைத்திற்கும் தொகுதிகளை பங்கீடு செய்து கொடுத்து விட்டு அ.தி.மு.க. 170 தொகுதிகளில் களம் இறங்க திட்டமிட்டு இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.
சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் அல்லது மே மாதத்தில் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில் அ.தி.மு.க.-பா.ஜ.க. கூட்டணி தமிழகத்தில் தீவிர தேர்தல் பணிகளை மேற்கொண்டு உள்ளது. இதன் மூலம் தமிழக அரசியல் களம் சூடுபிடித்துள்ளது.
- மாநில, மாவட்ட அளவிலான கழகச் செயல்வீரர்கள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற உள்ளது.
- சட்டமன்றத் தேர்தல் பணிகள் குறித்து ஆலோசிக்கப்பட உள்ளது.
த.வெ.க. பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது:
வரும் 25ஆம் தேதி (25.01.2026, ஞாயிற்றுக்கிழமை) காலை 10.30 மணிக்கு மாமல்லபுரம் ஃபோர் பாயிண்ட்ஸ் பை ஷெரட்டனில், தமிழக வெற்றிக் கழகத் தலைவர் கலந்துகொள்ளும் மாநில, மாவட்ட அளவிலான கழகச் செயல்வீரர்கள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற உள்ளது. இதில், சட்டமன்றத் தேர்தல் பணிகள் குறித்து ஆலோசிக்கப்பட உள்ளது.
இந்த நிகழ்ச்சியில் QR குறியீட்டுடன் கூடிய அனுமதிச் சீட்டு வழங்கப்பட்டுள்ள மாநில, மாவட்ட அளவிலான கழகச் செயல்வீரர்கள் மட்டுமே கலந்துகொள்வார்கள் என்பதைத் தெரிவித்துக்கொள்கிறோம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தனது இல்லத்தில் பியூஷ் கோயலுக்கு காலை விருந்தளித்தார்.
- மிகப் பெரிய பெரும்பான்மையுடன் தேசிய ஜனநாயக கூட்டணி தமிழகத்தில் ஆட்சியை பிடிக்கும்.
தமிழ்நாடு பா.ஜ.க. தேர்தல் பொறுப்பாளரும், மத்திய வர்த்தகம் மற்றும் தொழில் துறை மந்திரியுமான பியூஸ் கோயல் முன்னிலையில், அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன், தேசிய ஜனநாயக கூட்டணியில் நேற்று இணைந்தார்.
அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தனது இல்லத்தில் பியூஷ் கோயலுக்கு காலை விருந்தளித்தார்.
இந்நிலையில், சென்னை நுங்கம்பாக்கத்தில் த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன், புதிய நீதிக்கட்சி தலைவர் ஏ.சி.சண்முகம் ஆகியோருடன் மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் ஆலோசனை நடத்தினார். இதன்பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:
* மிகப் பெரிய பெரும்பான்மையுடன் தேசிய ஜனநாயக கூட்டணி தமிழகத்தில் ஆட்சியை பிடிக்கும்.
* சமூக நல்லிணக்கத்திற்கு எதிராக பேசும் உதயநிதி ஸ்டாலின் தண்டிக்கப்பட வேண்டும் என்று கூறினார்.
அப்போது த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் செய்தியாளர்களிடம் கூறுகையில், தமிழ் மாநில காங்கிரஸ் தனிச்சின்னத்தில் போட்டியிடும் என்று அறிவித்தார்.
- தமிழ்நாட்டு மாணவர்களின் அறிவையும் திறமையையும் கொச்சைப்படுத்தி, பொய்களைப் பரப்பி வரும் ஆளுநருக்கு பட்டம் வழங்கும் தகுதி இல்லை.
- சென்னைப் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவைப் புறக்கணிக்கிறேன்.
சென்னை:
உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி செழியன் அளித்த பேட்டியில் கூறியதாவது:-
தமிழக சட்டமன்றத்தின் மாண்பைக் கெடுக்கும் வகையிலும், தமிழுக்கும் தமிழினத்துக்கும் தமிழ்நாட்டுக்கும் எதிரான செயல்களையே ஆளுநர் ஆர்.என்.ரவி தொடர்ந்து செய்து வருகிறார்.
தமிழ்நாட்டு மாணவர்களின் அறிவையும் திறமையையும் கொச்சைப்படுத்தி, பொய்களைப் பரப்பி வரும் ஆளுநருக்கு பட்டம் வழங்கும் தகுதி இல்லை. எனவே சென்னைப் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவைப் புறக்கணிக்கிறேன்.
இவ்வாறு உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி செழியன் கூறினார்.
- போராட்டத்தில் ஈடுபட்ட அரசு ஊழியர்களை சிறையில் அடைக்கவில்லை.
- 23 ஆண்டு கால பிரச்சனையை நாங்கள் தீர்த்து வைத்துள்ளோம்.
சட்டசபையில் உரையாற்றிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியதாவது:
* போராட்டத்தில் ஈடுபட்ட அரசு ஊழியர்களை சிறையில் அடைக்கவில்லை.
* அ.தி.மு.க. ஆட்சியை போல் இரவோடு இரவாக அரசு ஊழியர்களை நாங்கள் கைது செய்யவில்லை.
* நாங்கள் அரசு ஊழியர்கள் பிரச்சனையில் 95 சதவீதம் நிறைவேற்றி விட்டோம்.
* அரசு ஊழியர்களின் கோரிக்கை கட்டாயம் நிறைவேற்றப்படும்.
* 23 ஆண்டு கால பிரச்சனையை நாங்கள் தீர்த்து வைத்துள்ளோம்.
* அரசு ஊழியர்களின் போராட்டத்தை நாங்கள் வெறுமனே வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்க மாட்டோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
- கறிக்கோழி வாங்கும் நிறுவனங்களுக்கு சாதகமாக தமிழக அரசு செயல்படுகிறது.
- மாணவர்களுக்கான இலவச மடிக்கணினி வழங்கும் திட்டத்தை தி.மு.க. அரசு நிறுத்தி வைத்தது.
சட்டசபையில் விவசாயிகள் பிரச்சனை குறித்து பேச அனுமதி மறுக்கப்பட்டதால் அ.தி.மு.க. எம்.எல்.ஏக்கள் வெளிநடப்பு செய்தனர்.
இந்நிலையில் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களிடம் கூறியதாவது:
* விவசாயிகளின் முக்கிய பிரச்சனை குறித்து சட்டசபையில் பேச முயன்றபோது அனுமதி மறுக்கப்பட்டது.
* 5 லட்சம் கறிக்கோழி விவசாயிகள் தற்போது பாதிப்பை சந்தித்து வருகிறார்கள்.
* ஒரு கிலோவுக்கு ரூ.6.50 கூலியாக வளர்ப்பாளர்களுக்கு வழங்கப்படுகிறது.
* கோழி வளர்ப்புக்கான கூலியை உயர்த்தி கொடுக்க வேண்டும்.
* கறிக்கோழி வாங்கும் நிறுவனங்களுக்கு சாதகமாக தமிழக அரசு செயல்படுகிறது.
* ஜீரோ ஹவரில் எதிர்க்கட்சித் தலைவர் பேச முடியும். முந்தைய காலங்களிலும் இது நடந்துள்ளது.
* 6 மாதமாக விவசாயிகள் போராடி வருகிறார்கள். 5 லட்சம் தொழிலாளர்களின் வாழ்வாதார பிரச்சனை.
* பேச்சுவார்த்தை நடத்துவதாக கூறி விட்டு அரசு பின்வாங்குவது ஏன்?
* மகளிருக்கு ரூ.1500 வழங்கப்படும் என்ற குலவிளக்கு திட்டத்தை 2021-ல் ஏற்கனவே அறிவித்தோம்.
* ஒவ்வொரு முறையும் அ.தி.மு.க. தான் தேர்தல் அறிக்கையை முதலில் வெளியிடும்.
* மாணவர்களுக்கான இலவச மடிக்கணினி வழங்கும் திட்டத்தை தி.மு.க. அரசு நிறுத்தி வைத்தது.
* மாணவர்களின் வாக்குகளை கவரவே இலவச மடிக்கணினிகளை அரசு வழங்குகிறது.
* மாணவர்கள் மத்தியில் தி.மு.க. மீது வெறுப்பு, அதை சமாளிக்கவே மடிக்கணினி வழங்கப்படுகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.






