என் மலர்
சென்னை
- விமான நிலைய பணியாளர்கள் காத்திருந்தனர்.
- விமானத்தை பத்திரமாக தரையிறக்கினார்.
ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் இருந்து சென்னைக்கு இன்று காலை வந்த விமானத்தின் டயர் திடீரென வெடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த விபத்தில் நல்வாய்ப்பாக விமானத்தில் இருந்த அனைவரும் பத்திரமாக உயிர் தப்பியுள்ளனர்.
சென்னைக்கு வந்து கொண்டிருந்த விமானம் தரையிறக்கப்படுவதற்கு முன், அதன் டயரில் கோளாறு ஏற்பட்டு இருப்பதை விமானி கண்டறிந்துள்ளார். அதனைத் தொடர்ந்து, அவர் விமான நிலைய அதிகாரிகளுக்கு இது குறித்து தகவல் கொடுத்தார். ஓடுதளத்தில் உரிய முன்னேற்பாடுகளுடன் விமான நிலைய பணியாளர்கள் இருந்தனர்.
டயரில் கோளாறு ஏற்பட்ட நிலையில், சாதுரியமாக செயல்பட்ட விமானி அசம்பாவிதம் ஏற்படாத வகையில் விமானத்தை பத்திரமாக தரையிறக்கினார். தரையிறங்கிய பின் விமானத்தின் டயர்களை பரிசோதனை செய்ததில், 2-வது சக்கரத்திலுள்ள டயர் வெளியே வெடித்த நிலையில் இருந்தது கண்டறியப்பட்டுள்ளது.
- டி.டி.வி. தினகரன், ஓ.பி.எஸ். ஆகியோர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக அ.தி.மு.க.வினரை முழுவதுமாக அணி திரட்ட முடியவில்லை.
- எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக செங்கோட்டையனை கொம்பு சீவி விட்டு என்ன நடக்கப் போகிறது? என்று கேள்வி எழுப்பினார்.
சென்னை:
அ.தி.மு.க.-பா.ஜ.க. கூட்டணி பேச்சுவார்த்தைகள் தொடங்கி உள்ள நிலையில் எடப்பாடி பழனிசாமி டெல்லி சென்று அமித்ஷாவை சந்தித்து பேசிய பரபரப்பு அடங்குவதற்குள், அ.தி.மு.க. மூத்த தலைவர்களில் ஒருவரான செங்கோட்டையனும் ரகசியமாக டெல்லி சென்று அமித்ஷாவை சந்தித்து பேசி விட்டு சென்னை திரும்பி இருப்பது அ.தி.மு.க.வினர் மத்தியில் சூட்டை கிளப்பி இருப்பதுடன் குழப்பத்தையும் ஏற்படுத்தி உள்ளது.
இதற்கிடையே அமித்ஷா-செங்கோட்டையன் சந்திப்பின் போது பேசப்பட்டது என்ன? என்பது பற்றி பரபரப்பான தகவல்கள் வெளியாகி உள்ளன. அ.தி.மு.க. பொதுச்செயலாளராக அங்கீகரிக்கப்பட்டு, எடப்பாடி பழனிசாமி செயல்பட்டு வரும் நிலையில் மீண்டும் ஒரு குழப்பத்தை ஏற்படுத்தும் வகையில் செயல்பட வேண்டாம் என்று அமித்ஷா, செங்கோட்டையனிடம் கேட்டுக்கொண்டதாக கூறப்படுகிறது.
இது பற்றி தமிழக பாரதிய ஜனதா கட்சியின் மூத்த நிர்வாகி ஒருவர் கூறும் போது, டி.டி.வி. தினகரன், ஓ.பி.எஸ். ஆகியோர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக அ.தி.மு.க.வினரை முழுவதுமாக அணி திரட்ட முடியவில்லை. அப்படி இருக்கும் போது எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக செங்கோட்டையனை கொம்பு சீவி விட்டு என்ன நடக்கப் போகிறது? என்று கேள்வி எழுப்பினார். எடப்பாடி பழனிசாமியுடன் கூட்டணி பேச்சுவார்த்தையை நடத்தி விட்டு செங்கோட்டையனை அவருக்கு எதிராக எப்படி திருப்பி விட முடியும் என்பதும் பாரதிய ஜனதா கட்சியினரின் கேள்வியாக உள்ளது.
- டேபிள் டென்னிஸ் வீரர் சரத் கமல், கேல் ரத்னா விருதை வென்றுள்ளார்.
- 2019 ஆம் ஆண்டு பத்மஸ்ரீ விருது அவருக்கு வழங்கப்பட்டது.
இந்தியா சார்பாக 5 முறை ஒழும்பிக் போட்டிகளில் விளையாடிய தமிழக டேபிள் டென்னிஸ் வீரர் சரத் கமல் ஓய்வை அறிவித்துள்ளார்.
சென்னையில் நேற்று நடந்த WTT ஸ்டார் போட்டியாளர் போட்டியின் 16வது சுற்றில் தோல்வியடைந்த பிறகு ஓய்வு பெறுவதாக சரத்கமல் அறிவித்தார்.
42 வயதானால் சரத்கமல் 20 ஆண்டுக்கும் மேலாக இந்திய டேபிள் டென்னிஸ் போட்டியில் ஆதிக்கம் செலுத்திவந்தார்.
சரத் கமல், இதுவராவ் ஐந்து காமன்வெல்த் போட்டிகளில் பங்கேற்று 7 தங்கம், 3 வெள்ளி மற்றும் பல வெண்கலப் பதக்கங்களை வென்றுள்ளார்.
டேபிள் டென்னிஸ் விளையாட்டில் சிறப்பாக விளையாடியதற்காக கேல் ரத்னா விருதை அவர் வென்றுள்ளார், மேலும் 2019 ஆம் ஆண்டில், இந்தியாவின் நான்காவது மிக உயர்ந்த விருதான பத்மஸ்ரீ விருதைப் பெற்றுள்ளார்.
- இந்த சிறப்பு சலுகையை ஒரு சுற்றுப் பயணத்துக்கு பயன்படுத்தலாம்.
- ஞாயிற்றுக்கிழமை கால அட்டவணையின்படி இன்று மெட்ரோ ரெயில்கள் இயக்கப்படும்.
சென்னை:
மெட்ரோ ரெயில்வே நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
சென்னை சென்ட்ரல் மெட்ரோ ரெயில் நிலையம் அருகில் உள்ள ஜவஹர்லால் நேரு மைதானத்தில் இன்று பிரேசில் லெஜண்ட்ஸ்-இந்திய லெஜண்ட்ஸ் அணிகளுக்கு இடையில் கால்பந்து போட்டி நடைபெற உள்ளது. இதில் பங்கேற்கும் ரசிகர்களுக்கு தடையில்லா போக்குவரத்தை வழங்குவதற்காக, சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனம் தனியார் நிறுவனத்துடன் இணைந்து, கட்டணமில்லா பயணத்தை வழங்குவதற்காக உடன்பாடு செய்துள்ளது. கால்பந்து போட்டிக்கான பயணச்சீட்டுகளை வைத்திருப்பவர்களுக்கு மட்டுமே இந்த பிரத்யேக மெட்ரோ பயணம் வழங்கப்படும்.
கால்பந்து போட்டிக்கு வருபவர்கள் போட்டிக்கான நுழைவுச் சீட்டுகளில் உள்ள தனித்துவமான கியூ ஆர்-கோர்டு குறியீட்டை தானியங்கி நுழைவு எந்திரத்தில் 'ஸ்கேன்' செய்து மெட்ரோவில் பயணிக்கலாம். இந்த சிறப்பு சலுகையை ஒரு சுற்றுப் பயணத்துக்கு பயன்படுத்தலாம்.
ஞாயிற்றுக்கிழமை கால அட்டவணையின்படி இன்று மெட்ரோ ரெயில்கள் இயக்கப்படும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- வேலூரில் நேற்று 103 டிகிரி அளவுக்கு வெப்பம் வாட்டியது.
- 2 முதல் மூன்று டிகிரி செல்சியஸ் அளவுக்கு அதிகரிக்கக்கூடும்.
சென்னையில் இன்று 100 டிகிரி செல்ஷியஸ் அளவுக்கு வெயில் வாட்டி வதைக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
நேற்று சென்னை உள்ளிட்ட தமிழ்நாட்டின் 11 இடங்களில் வெயில் சதம் அடித்தது. கோடை வெயில் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தமிழ்நாட்டில் அதிகபட்சமாக மதுரை விமான நிலையம் மற்றும் சேலத்தில் நேற்று 104 டிகிரி அளவுக்கு வெப்பம் வாட்டியது.
மதுரை நகர் பகுதியிலும், ஈரோட்டிலும் 103 டிகிரி ஃபாரன்ஹீட் அளவுக்கு வெயில் கொளுத்தியதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னை மீனம்பாக்கத்திலும், வேலூரிலும் நேற்று 103 டிகிரி அளவுக்கு வெப்பம் வாட்டியது.
தருமபுரி, கரூர் பரமத்தி மற்றும் திருச்சியில் நேற்று 102 டிகிரி வெயில் பதிவானது. கோவை மற்றும் திருத்தணியிலும் 100 டிகிரியை கடந்து வெயில் கொளுத்தியதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழ்நாட்டில் கோடை வெயில் வாட்டி வரும் நிலையில், இன்றும் அதிகபட்ச வெப்பநிலையில் 2 முதல் மூன்று டிகிரி செல்சியஸ் அளவுக்கு அதிகரிக்கக்கூடும் என தெரிவித்துள்ளது. ஒரு சில இடங்களில் அதிக வெப்பநிலையால் மக்களுக்கு அசவுகரியம் ஏற்பட வாய்ப்புள்ளதாகவும் அறிவுறுத்தியுள்ளது.
தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் இன்றும் வறண்ட வானிலையை நீடிக்கும் என்று தெரிவித்து இருக்கிறது. வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் அதிகபட்ச வெப்பநிலை 37 முதல் 38 செல்ஷியஸை ஒட்டியும் குறைந்தபட்சம் 27 டிகிரி வரை வெப்பம் பதிவாகக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருக்கிறது.
- எளியவன் உழைத்தாலும் கூலியைக் கொடுக்காமல் வயிற்றில் அடி என்கிறது ஒன்றிய அரசின் புதுமொழி.
- பைசா கூட ஒதுக்காத ஒன்றிய அரசைக் கண்டித்து தமிழ்நாடு முழுக்க திமுக போராட்டம் நடத்தியது.
தி.மு.க எம்.பி கனிமொழி தனது எக்ஸ் தள பக்கத்தில் கூறியிருப்பதாவது:-
"உழைப்பவன் கூலியை வியர்வை உலர்வதற்கு முன்பு கொடுத்துவிடு" எனச் சொல்கிறது ஒரு பொன்மொழி.
ஆனால், எளியவன் உழைத்தாலும் கூலியைக் கொடுக்காமல் வயிற்றில் அடி என்கிறது ஒன்றிய அரசின் புதுமொழி.
100 நாள் வேலைத் திட்டத்திற்கான சம்பளப் பாக்கி 4,034 கோடி ரூபாயை நிறுத்தி வைத்து கொடுங்கோல் ஆட்சியாகவே மாறிவிட்டது ஒன்றிய அரசு.
வறுமையின் காரணமாக 100 நாள் வேலையில் இணைந்து உழைப்பவர்கள் அனைவரையும் ஊழல்வாதிகள் போலச் சித்தரித்து ஊதியப் பணத்தைக் கொடுக்க மாட்டோம் என்பது கொடுங்கோல் ஆட்சியில் கூட நடக்காதது.
ஏழைகள் உழைப்பிற்குக் கூலி கொடுக்க மனமில்லாத ஒன்றிய பாஜக அரசு, உழைக்கும் மக்களையே ஊழல்வாதிகள் என முத்திரை குத்த தமிழ்நாடு பாஜகவினர் களமிறக்கப்பட்டிருக்கிறார்கள்.
100 நாள் வேலைத் திட்டத்திற்கான நிதியை ஒதுக்கச் சொல்லி முதலமைச்சர் அவர்கள் கடிதம் எழுதி வலியுறுத்தினார்; நாடாளுமன்றத்தில் திமுக மற்றும் திமுக கூட்டணி உறுப்பினர்கள் குரல் எழுப்பினார்கள்.
பைசா கூட ஒதுக்காத ஒன்றிய அரசைக் கண்டித்து தமிழ்நாடு முழுக்க திமுக போராட்டம் நடத்தியது. மோடி அரசுக்கு எதிரான போராட்டத்தைப் பொறுத்துக் கொள்ள முடியாமல் தவிக்கிறது கமலாலயம்!
தமிழ்நாட்டின் ஏழைகள் ஊதியமின்றி தெருவில் நிற்கும் போது ஒன்றிய அரசிடம் போராடி பணத்தைப் பெற்றுத் தருவதுதானே தமிழ்நாட்டைச் சார்ந்தவர்களின் கடமையாக இருக்க வேண்டும்?
கல்வி நிதி, பேரிடர் நிதியை எல்லாம் தராத ஒன்றிய அரசு, இப்போது 100 நாள் வேலை பணியாளர்களின் ஊதியத்தை நிறுத்தி அவர்களைப் பட்டினி போடுகிறது.
உழைப்பை உறிஞ்சிக்கொண்டு ஊதியத்தைக் கேட்பவர்களையே கொச்சைப்படுத்தும் பாஜகவினருக்குத் தமிழ்நாட்டு மக்கள் தக்கப் பாடம் புகட்டுவார்கள்.
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
- ஒருநாள் கூத்துக்கு மீசையை வைத்தான் மேடையிலே... என்பதுபோல் ஒருநாள் குல்லா அணிந்து விட்டு ஓடுபவர் அல்ல நம் முதல்வர்.
- உங்களிடம் வாக்குகள் மட்டும் கேட்டு வருகின்ற தலைவர்கள் அல்ல எங்கள் தலைவர்.
கொளத்தூர் தொகுதியில் திமுக சார்பில் இஸ்லாமியப் பெருமக்களுக்கு ரமலான் பரிசுப் பொருட்கள் நிகழ்ச்சி நடைபெற்றது. சென்னை பெரம்பூர் டான் பாஸ்கோ பள்ளி வளாகத்தில் நடைபெற்ற இப்தார் நிகழ்ச்சியில் தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பங்கேற்று, கொளத்தூர் தொகுதி இஸ்லாமியப் பெருமக்களுக்கு ரமலான் பரிசுப் பொருட்கள் வழங்கினார்.
இந்த விழாவில் கலந்து கொண்ட அமைச்சர் சேகர் பாபு முதலமைச்சர் மு.க. ஸ்டாலினை வரவேற்று பேசினார். அப்போது நமது முதல்வர் ஒருநாள் குல்லா அணிந்துவிட்டு ஓடுபவர் அல்ல எனப் பேசினார்.
தமிழக வெற்றிக்கழகம் கட்சி சார்பில் ரமலான் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. அதில் அக்கட்சி தலைவர் விஜய், ஒருநாள் முழுவதும் நோன்பு மேற்கொண்டு கலந்து கொண்டார். அப்போது தலையில் குல்லா அணிந்திருந்தார். அதனை மனதில் வைத்து சேகர் பாபு மறைமுகமாக தாக்கி பேசியுள்ளார்.
அமைச்சர் சேகர் பாபு பேசும்போது "இஸ்லாமியர் குடும்பங்களில் ஒளியேற்றி வைத்த இயக்கும் திமுக. இஸ்லாமியர்களுக்கு இடஒதுக்கீடு தந்தவர் கலைஞர். ஆனால் இன்று ஒருநாள் கூத்துக்கு மீசையை வைத்தான் மேடையிலே... என்பதுபோல் ஒருநாள் குல்லா அணிந்து விட்டு ஓடுபவர் அல்ல நம் முதல்வர். தொப்புல்கொடி உறவாம் இஸ்லாமிய நண்பர்களின் பாதுகாவலர்தான் நம் முதல்வர். ஒருநாள் கஞ்சி குடித்து ஓடுபவர்கள் மத்தியில், இஸ்லாமியர்களில் நெஞ்சில் குடியிருப்பவர் முதல்வர்.
உங்களிடம் வாக்குகள் மட்டும் கேட்டு வருகின்ற தலைவர்கள் அல்ல எங்கள் தலைவர். உங்கள் வாழ்வுரிமையையும், வாழ்வாதார உரிமையையும், வழிபாட்டு உரிமையை மீட்டுத்தரும் தலைவர்கள்தான் மு.க. ஸ்டாலின்.
2026 தேர்தலில் உங்களுடைய 200 இடங்கள் என்பது நிச்சயம். 234 என்பது லட்சியமாக கொண்டு செயல்படுவோம்.
இவ்வாறு சேகர் பாபு பேசினார்.
- மத்தியில் இந்தியா கூட்டணியின் ஆட்சியமைந்தால் 'நீட் தேர்வு ரத்து செய்யப்படும்' என்று கழகத் தலைவர் உறுதியளித்திருந்தார்.
- பாஜக - அதிமுக கூட்டணி அமையும் என்று அமித்ஷா இன்றுகூடச் சொல்லியிருக்கிறார்.
தமிழ்நாட்டின் நலன்களே முக்கியம் என்றால் நீட் தேர்வை ரத்து செய்தால்தான் கூட்டணி என்று உறுதியைப் பெற்றுக் கொண்டு பாஜகவுடன் கூட்டணி வைக்க தயாரா? என்று எடப்பாடி பழனிசாமிக்கு நிதியமைச்சர் தங்கம் தென்னரசு கேள்வி எழுப்பியுள்ளார்.
இதுகுறித்து தங்கம் தென்னரசு மேலும் கூறியிருப்பதாவது:-
மத்தியில் இந்தியா கூட்டணியின் ஆட்சியமைந்தால் 'நீட் தேர்வு ரத்து செய்யப்படும்' என்று கழகத் தலைவர் உறுதியளித்திருந்தார். அதே உறுதிமொழியை ராகுல் காந்தி அவர்களையும் அளிக்கச் செய்திருந்தார்.
டெல்லியில் மூன்று கார்களை மாற்றி மாற்றிச் சென்று 'பிரத்தியேகமாக யாரையும் சந்திக்க வரவில்லை' என்று சொல்லிவிட்டு இரவோடு இரவாக உள்துறை அமைச்சர் அமித்ஷா அவர்களைச் சந்தித்த எடப்பாடி பழனிசாமி அவர்களே!
பாஜக - அதிமுக கூட்டணி அமையும் என்று அமித்ஷா இன்றுகூடச் சொல்லியிருக்கிறார். தமிழ்நாட்டின் நலன்களே உங்களுக்கு முக்கியம் என்றால் நீட் தேர்வை ரத்து செய்தால்தான் கூட்டணி என்று உறுதியைப் பெற்றுக் கொண்டு கூட்டணி வைக்க நீங்கள் தயாரா?
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
- வக்ஃபு வாரிய திருத்த சட்டத்திற்கு எதிராக அதைத் திரும்பப் பெற வேண்டும்.
- சிறுபான்மையினருக்கு எந்த பாதிப்பு வந்தாலும் முதலில் குரல் கொடுப்பது திமுக தான்
சென்னை பெரம்பூரில் உள்ள டான்பாஸ்கோ பள்ளியில் நடைபெறும் ரமலான் விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்றார்.
இந்நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது:-
இஸ்லாமிய மக்களுக்கு ரமலான் பெருவிழா வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.
இஸ்லாமியர்களையும் திமுகவையும் யாரும் பிரிக்க முடியாது.
வக்ஃபு வாரிய திருத்த சட்டத்திற்கு எதிராக அதைத் திரும்பப் பெற வேண்டும்.
வக்பு வாரிய சட்டத் திருத்தத்திற்கு எதிரான தீர்மானம் நிறைவேற்ற கூட சட்டப்பேரவைக்கு எடப்பாடி பழனிசாமி வரவில்லை. தீர்மனாத்திற்கு ஆதரவு கொடுக்க வராமல் டெல்லிக்கு சென்றுவிட்டார்.
இருமொழிக் கொள்கை குறித்து வலியுறுத்துங்கள் என எடப்பாடி பழனிசாமிக்கு கூறினேன். இருமொழிக் கொள்கை குறித்து பேசியதாக எடப்பாடி பழனிசாமி கூறினார். மக்கள் சார்பில் நன்றி கூறிக் கொள்கிறேன்.
சிறுபான்மையினருக்கு எந்த பாதிப்பு வந்தாலும் முதலில் குரல் கொடுப்பது திமுக தான்.
இஃப்தார் விழாக்களை பலரும் நடத்துவார்கள். ஆனால், இஸ்லாமியர்களுக்கு ஒரு தீமை என்றால் வாயே திறக்கமாட்டார்கள்.
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
- தேர்தல் ஆணையம் நடத்திய விசாரணையில் பொய்யான பிரமாண பத்திரம் தாக்கல் செய்யப்பட்டது கண்டுபிடிப்பு.
- கே.சி.வீரமணி மீது மக்கள் பிரதிநிதித்துவ சட்டம் 125 ஏ பிரிவின் கீழ் வழக்கு பதிவு.
2021ம் ஆண்டு நடைபெற்ற சட்டசபை தேர்தலில் ஜோலார்பேட்டை தொகுதியில் போட்டியிட்ட அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணி பொய்யான பிரமாண பத்திரம் தாக்கல் செய்ததாக வழக்கு தொடரப்பட்டது.
ராமமூர்த்தி என்பவர் 2021-ம் அண்டு இதுகுறித்து தேர்தல் ஆணையத்தில் புகார் அளித்ததுடன், சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து இருந்தார்.
உயர்நீதிமன்ற உத்தரவின் பேரில் தேர்தல் ஆணையம் நடத்திய விசாரணையில் பொய்யான பிரமாண பத்திரம் தாக்கல் செய்யப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது.
இதையடுத்து கே.சி.வீரமணி மீது மக்கள் பிரதிநிதித்துவ சட்டம் 125 ஏ பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது.
இந்நிலையில், இந்த வழக்கின் மீதான விசாரணை இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் வந்தது.
அப்போது, முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணி மீது பதிவு செய்யப்பட்ட வழக்கின் விசாரணைக்கு இடைக்கால தடைவிதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
- மாணவர் கொல்லி நீட் தேர்வுக்கு முடிவு கட்ட மத்திய மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- தமிழ்நாட்டில் நீட் தேர்வு அச்சத்தால் நடப்பு மார்ச் மாதத்தில் தற்கொலை செய்து கொண்ட இரண்டாவது மாணவி தர்ஷினி ஆவார்.
பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
நீட் அச்சத்தால் மேலும் ஒரு மாணவி தற்கொலை: மாணவர் கொல்லி நீட் தேர்வுக்கு முடிவு கட்ட மத்திய மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்...!
மருத்துவப் படிப்புக்கான நீட் நுழைவுத்தேர்வில் போதிய மதிப்பெண்களை எடுக்க முடியாதோ? என்ற அச்சத்தில் சென்னையை அடுத்த கிளாம்பாக்கத்தில் தர்ஷினி என்ற மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டிருக்கிறார். தர்ஷினியை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கல்களையும், அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
கிளாம்பாக்கத்தைச் சேர்ந்த மாணவி தர்ஷினி ஏற்கனவே இருமுறை நீட் தேர்வு எழுதியும் போதிய மதிப்பெண்களை பெற முடியாததால் மருத்துவப் படிப்பில் சேர முடியவில்லை.
இந்த முறையாவது மருத்துவப் படிப்பில் சேர்ந்து விட வேண்டும் என்ற எண்ணத்தில் சென்னை அண்ணாநகரில் உள்ள தனியார் பயிற்சி மையத்தில் தர்ஷினி பயின்று வந்தார்.
நீட் தேர்வுக்கு இன்னும் ஒரு மாதம் மட்டுமே உள்ள நிலையில், தம்மால் போதிய மதிப்பெண் பெற முடியாதோ? என்ற அச்சத்தில் தான் அவர் தற்கொலை செய்து கொண்டதாகக் கூறப்படுகிறது.
தமிழ்நாட்டில் நீட் தேர்வு அச்சத்தால் நடப்பு மார்ச் மாதத்தில் தற்கொலை செய்து கொண்ட இரண்டாவது மாணவி தர்ஷினி ஆவார். இதற்கு முன் விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்தையடுத்த தாதாபுரம் கிராமத்தைச் சேர்ந்த இந்துமதி என்ற மாணவி வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். நீட் தேர்வு அறிமுகப்படுத்தப்பட்டு 8 ஆண்டுகளாகியும் தற்கொலைகள் தொடர்வது பெரும் கவலையளிக்கிறது.
நீட் தேர்வு தமிழகத்துக்கு தேவையில்லாத ஒன்று. மருத்துவக் கல்வியின் தரத்தை அதிகரிக்கவோ, மருத்துவக் கல்வி வணிகமயமாவதைத் தடுக்கவோ நீட் தேர்வு எந்த வகையிலும் உதவவில்லை என்பது கடந்த 8 ஆண்டுகால புள்ளிவிவரங்களில் இருந்து உறுதியாகிறது.
இதை உணர்ந்து நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்று பாமக தொடர்ந்து வலியுறுத்தி வரும் போதிலும் அதை மத்திய அரசு செவிமடுக்கவில்லை.
தமிழகத்தில் நாங்கள் ஆட்சிக்கு வந்தால் அடுத்த நாளே நீட் தேர்வை ரத்து செய்வோம் என்று வாக்குறுதி அளித்து ஆட்சிக்கு வந்தவர்கள் இன்று வரை நீட் தேர்வை ரத்து செய்யவில்லை. மாணவ, மாணவிகளின் தற்கொலைக்கு மத்திய, மாநில அரசுகள் தான் பொறுப்பேற்க வேண்டும்.
மாணவச் செல்வங்களைக் காக்க நீட் தேர்வை ரத்து செய்ய மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். தற்கொலை செய்து கொண்ட மாணவி தர்ஷினியின் குடும்பத்திற்கு தமிழக அரசு ரூ.25 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும்.
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
- புதிய முயற்சிகளில் எல்லாம் வெற்றி பெற்று சீரோடும், சிறப்போடும் வாழ்ந்திட வேண்டும்- இ.பி.எஸ் யுகாதி வாழ்த்து.
- தமிழ் மண்ணுக்கும், தமிழ் மக்களுக்கும் பெருமை சேர்ப்பதாக அமைந்துள்ளது.
அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள யுகாதி திருநாள் வாழ்த்துச் செய்தியில் கூறியிருப்பதாவது:-
'யுகாதி' என்னும் புத்தாண்டுத் திருநாளை உற்சாகத்துடன் கொண்டாடி மகிழும், தெலுங்கு மற்றும் கன்னட மொழி பேசும் மக்கள் அனைவருக்கும் எனது இதயமார்ந்த யுகாதி திருநாள் நல்வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்வதில் மகிழ்ச்சி அடைகிறேன்.
தெலுங்கு மற்றும் கன்னட மக்கள், தாங்கள் பேசும் மொழி வேறுபட்டிருந்தாலும், வாழும் இடம் ஒன்று என்ற உணர்வுடன் தமிழகத்தில் பலநூறு ஆண்டுகளாய் ஒருமித்து வாழ்ந்து வருவதும், ஒருவரோடு ஒருவர் நல்லுறவைப் பேணி, ஒற்றுமையுடன் வாழ்ந்து வருவதுமான செயல், தமிழ் மண்ணுக்கும், தமிழ் மக்களுக்கும் பெருமை சேர்ப்பதாக அமைந்துள்ளது.
இவ்வண்ணம் தமிழ் மக்களோடு ஒன்றி, உறவாடி, உவகையுற வாழ்ந்து வரும் தெலுங்கு மற்றும் கன்னட மொழி பேசும் மக்கள் அனைவரும் இந்தப் புத்தாண்டில் மேற்கொள்ளும் புதிய முயற்சிகளில் எல்லாம் வெற்றி பெற்று சீரோடும், சிறப்போடும் வாழ்ந்திட வேண்டும் என்று மனதார வாழ்த்தி, புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர்., புரட்சித் தலைவி அம்மா ஆகியோரது நல்வழியில், அனைவருக்கும் எனது இனிய யுகாதி திருநாள் நல்வாழ்த்துகளை மீண்டும் ஒருமுறை உரித்தாக்கிக் கொள்கிறேன்.
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.






