என் மலர்tooltip icon

    சென்னை

    • இன்று முதல் 9-ந்தேதி வரை தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலையில் பொதுவாக பெரிய மாற்றத்திற்கான வாய்ப்பு குறைவு.
    • சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நாளை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.

    சென்னை:

    சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

    தென்தமிழகம் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. தென்னிந்திய பகுதிகளின் மேல், வளிமண்டல கீழடுக்கு பகுதிகளில், கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி நிலவுகிறது.

    இதனால் இன்று தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், தேனி, திண்டுக்கல், தென்காசி, கரூர், திருச்சி, அரியலூர், பெரம்பலூர் மற்றும் கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

    நாளை தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

    கோயம்புத்தூர் மாவட்ட மலைப்பகுதிகள், நீலகிரி, தேனி மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

    7-ந்தேதி முதல் 9-ந்தேதி வரை தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

    10 மற்றும் 11-ந்தேதிகளில் தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

    அதிகபட்ச வெப்பநிலை பற்றிய முன்னறிவிப்பு:

    அதிகபட்ச வெப்பநிலை மாறுதலின் போக்கு:

    இன்று முதல் 9-ந்தேதி வரை தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலையில் பொதுவாக பெரிய மாற்றத்திற்கான வாய்ப்பு குறைவு.

    இயல்பு நிலையிலிருந்து அதிகபட்ச வெப்ப அளவின் வேறுபாடு:

    இன்று மற்றும் நாளை தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அதிகபட்ச வெப்ப நிலை இயல்பை ஒட்டி இருக்கக்கூடும்.

    7-ந்தேதி முதல் 9-ந்தேதி வரை தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை 2-3° செல்சியஸ் இயல்பை விட அதிகமாக இருக்கக்கூடும்.

    சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நாளை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசான முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 37-38° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 27° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.

    • இந்திய ரெயில்வே பயணக் கட்டுரைகளுக்கான போட்டியை அறிவித்துள்ளது.
    • ரெயில்வே நிர்வாகமே, போட்டி விதிகளை மாற்று!

    சென்னை:

    மதுரை பாராளுமன்ற தொகுதி உறுப்பினரான சு.வெங்கடேன், மத்திய அரசுக்கு எதிராக அவ்வப்போது தனது கண்டனத்தை தெரிவித்து வருகிறார். அந்த வகையில் இன்று, அவர் எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,

    இந்திய ரெயில்வேயா?

    இந்தி ரெயில்வேயா?

    இந்திய ரெயில்வே பயணக் கட்டுரைகளுக்கான போட்டியை அறிவித்துள்ளது. ஆனால் இந்தியில் தான் எழுதப்பட வேண்டும் என்று நிபந்தனை.

    இவர்களின் நோக்கம் பயணத்தை நினைவுக் கூறுவதல்ல,

    இந்தியை திணிப்பது மட்டுமே.

    ரெயில்வே நிர்வாகமே,

    போட்டி விதிகளை மாற்று! என கூறியுள்ளார்.

    • தமிழ்நாட்டில் மட்டும் நீட் தேர்வில் இவ்வளவு கெடுபிடிகள் ஏன்?
    • அனிதா இறந்தவுடன் நீட்டை ஒழிப்போம், ரகசியம் வைத்துள்ளோம் என சொன்ன தி.மு.க. இதுவரை என்ன செய்துள்ளது?

    சென்னை:

    நாடு முழுவதும் நேற்று மருத்துவ படிப்புக்கான நீட் தேர்வு நடைபெற்றது. தமிழகத்தில் மாணவர்கள் கடும் சோதனைக்குட்பட்டே தேர்வு எழுத அனுமதிக்கப்பட்டனர். இதனால் மாணவர்கள் கடும் மன உளைச்சலுக்கு ஆளாகினர். இதற்கு பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

    இந்த நிலையில், நீட் தேர்வு நடைமுறைகள் குறித்து நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

    * நீட் தேர்வு முறை குறித்து எழுப்பப்படும் கேள்விகளுக்கு இதுவரை பதில் கிடைக்கவில்லை.

    * பயிற்சி மையங்கள் சம்பாதிக்கவே நீட் தேர்வு நடத்தப்படுகிறது.

    * நீட் தேர்வை அமெரிக்காவை சேர்ந்த தனியார் நிறுவனம் நடத்தி கொண்டிருக்கிறது. நமது நாட்டினரால் நடத்த முடியாதா?

    * ஒரு மாணவனை தேர்வு செய்யும் தேர்வு நடத்த முடியாதவர்களால் நாட்டிற்கான தலைவரை எப்படி தேர்ந்தெடுக்க முடியும்?

    * நீட் தேர்வு எழுதுவதாலேயே தரமான மருத்துவர்கள் வருவார்கள் என்பது பைத்தியக்காரகத்தனமாது.

    * நீட் தேர்வால் கிராம மாணவர்களின் மருத்துவ கனவு நிறைவேறவில்லை.

    * வசதி படைத்த மாணவன் மருத்துவன் ஆகலாம், கிராமப்புறங்களில் கஷ்டப்படும் ஒரு மாணவனுக்கு மருத்துவ கனவு வரக்கூடாதா?

    * தமிழ்நாட்டில் மட்டும் நீட் தேர்வில் இவ்வளவு கெடுபிடிகள் ஏன்?

    * வட இந்தியாவில் புத்தகத்தை திறந்து வைத்து நீட் தேர்வு எழுதுகின்றனர், மேற்பார்வையாளர் காவலுக்கு நிற்கின்றனர்.

    * மூக்குத்தி மூலம் மாணவி எப்படி பிட் கொண்டு செல்ல முடியும்? பட்டன்கள் மூலம் மாணவர்கள் பிட் கொண்டு செல்ல முடியுமா?

    * உள்ளாடைகளை கழட்டச் சொல்வதால் ஜவுளிக்கடையில் நீட் தேர்வுக்கு ஏற்ற ஆடை விற்கும் நிலை ஏற்பட்டுள்ளது. சோதனை என்ற பெயரில் வதை செய்தால் மாணவர்கள் எப்படி தேர்வெழுதும் மனநிலைக்கு வருவர்.

    * அனிதா இறந்தவுடன் நீட்டை ஒழிப்போம், ரகசியம் வைத்துள்ளோம் என சொன்ன தி.மு.க. இதுவரை என்ன செய்துள்ளது? என கேள்வி எழுப்பினார்.

    • கழக நிர்வாகிகளை விடியா திமுக மாடல் அரசு இன்று காலை கைது செய்த அராஜகத்தை வன்மையாக கண்டிக்கிறேன்.
    • எத்தனை அடக்குமுறைகளை ஸ்டாலினின் அரசு ஏவி விட்டாலும் அவைகளை எதிர்கொள்ளக் கூடிய வல்லமை எங்களுக்கு எப்போதும் உண்டு.

    சென்னை:

    அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,

    அரக்கோணம் MRF அண்ணா தொழிற்சங்கம் சார்பில் புதிய ஊதிய ஒப்பந்தம் உள்ளிட்ட தொழிலாளர்களின் அடிப்படை கோரிக்கைகளை விளக்கவும், மே தின தொழிலாளர்கள் நல்வாழ்த்துகளைக் கூறும் வகையில் வாயிற் கூட்டம் நடத்தி, சங்கக் கொடி ஏற்றி இனிப்பு வழங்க வருகை தந்த ராணிப்பேட்டை கிழக்கு மாவட்ட கழகச் செயலாளரும், அரக்கோணம் சட்டமன்ற உறுப்பினருமான இரவி, அண்ணா தொழிற்சங்க பேரவை செயலாளர் கமலக்கண்ணன், கழக அமைப்புச் செயலாளரும்,

    முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான அரி உள்ளிட்ட கழக நிர்வாகிகளை விடியா திமுக மாடல் அரசு இன்று காலை கைது செய்த அராஜகத்தை வன்மையாக கண்டிக்கிறேன்.

    இது போன்ற பூச்சாண்டிகளுக்கு எல்லாம் பயப்படுபவர்கள் கழகத்தினர் அல்ல. எத்தனை அடக்குமுறைகளை ஸ்டாலினின் அரசு ஏவி விட்டாலும் அவைகளை எதிர்கொள்ளக் கூடிய வல்லமை எங்களுக்கு எப்போதும் உண்டு என்பதை நினைவில் கொள்ளுங்கள் என கூறியுள்ளார். 



    • நிகழ்ச்சியில் பாவேந்தரின் எழுச்சி பாடல்கள், நடன நிகழ்ச்சி, பட்டிமன்றம் நடைபெற்றது.
    • பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பரிசுகள் வழங்கி சிறப்புரையாற்றினார்.

    சென்னை:

    பாவேந்தர் பாரதிதாசனின் பிறந்தநாள் தமிழ் வார விழாவாக கொண்டாடப்படும் என்று சட்டசபையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்து இருந்தார்.

    அதன்படி பாரதிதாசன் பிறந்தநாளான ஏப்ரல் 29-ந்தேதி தொடங்கி மே 5-ந்தேதி வரை தமிழ்நாடு முழுவதும் தமிழ்வார விழா கொண்டாடப்படுகிறது.

    தமிழ்வார விழாவின் நிறைவு விழா சென்னை கலைவாணர் அரங்கில் இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்றது.

    விழாவில் தமிழறிஞர்களின் படைப்புகள் உலக மக்கள் அனைவரிடமும் சென்று சேர வேண்டும் என்ற உயரிய நோக்கில், கடந்த 4 ஆண்டுகளில் 32 அறிஞர்களின் 1,442 நூல்கள் நாட்டுடைமை செய்யப்பட்டு நூலுரிமைத் தொகையாக ரூபாய் 3 கோடியே 79 லட்சத்து 35 ஆயிரம் வழங்கப்பட்டுள்ளதாக விழாவில் அறிவிக்கப்பட்டது. முத்தமிழறிஞர் கலைஞர் பல்வேறு காலகட்டங்களில் எழுதி வெளிவந்த அனைத்துப் படைப்புகளும் அறிவுப் பொதுவுடைமை செய்யும் வகையில் நூலுரிமைத் தொகையின்றி நாட்டுடைமையாக்கப்பட்டுள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டது.

    இவ்வரிசையில், இந்த ஆண்டு மறைந்த தமிழறிஞர்களான கவிக்கோ அப்துல் ரகுமான், எழுத்தாளர் மெர்வின், ஆ. பழநி ஆகியோரின் நூல்கள் நாட்டுடைமை செய்து அவர்களது மரபுரிமையர்களுக்கு ரூ.10 லட்சம் வீதமும் வாழும் தமிழறிஞர்களான கொ.மா. கோதண்டம் புலவர் இலமா. தமிழ்நாவன் ஆகியோரின் நூல்கள் நாட்டுடைமை செய்து நூலுரிமைத் தொகையாக ஒவ்வொருவருக்கும் ரூ.10 லட்சம் வீதமும் தமிழ்நாடு முதலமைச்சர் திருக்கரங்களால் வழங்கி சிறப்பிக்கப்படவுள்ளது.

    கவிக்கோ அப்துல் ரகுமான் மதுரை மாவட்டம், கிழக்குச் சந்தைப் பேட்டையில் 1937-ம் ஆண்டு பிறந்தவர். தமிழ்ப் பேராசிரியராகவும், கவிஞராகவும் சிறந்து விளங்கியவர். பால்வீதி என்ற கவிதைத் தொகுதியின் மூலம் தம்மை ஒரு சோதனைப் படைப்பாளியாக இனங்காட்டிக் கொண்டவர். தியாகராசர் நடத்திய தமிழ்நாடு என்ற நாளிதழில் மெய்ப்பு திருத்துநராகவும், வாணியம்பாடி இசுலாமியக் கல்லூரி உள்ளிட்ட ஐந்து கல்லூரிகளில் விரிவுரையாளராகவும் பணியாற்றியவர். பால்வீதி, நேயர் விருப்பம், சொந்தச் சிறைகள்(வசன கவிதை), ஆலாபனை, பித்தன் உள்ளிட்ட 41 நூல்களைப் படைத்த பெருமைக்குரியவர்.

    தமிழறிஞரும் எழுத்தாளருமான மெர்வின் சென்னை, துரைப்பாக்கத்ததைச் சேர்ந்தவர். 50 ஆண்டுகளுக்கும் மேலாக எழுத்துத் துறையில் முழு நேர எழுத்தாளராக பணிபுரிந்தவர். 1968-1970-ம் ஆண்டுகளில் 'பூச் செண்டு' என்ற மாணவ மாத இதழை நடத்தியவர். 'உன் வாழ்க்கை உன் கைகளிலே' என்ற நூலுக்காக அதிசய மனிதர் ஜி.டி. நாயுடு அவர்களால் பாராட்டப்பெற்றவர். இவர் உயர்வு உன்னிடமே, முயற்சியே முன்னேற்றம், மேதைகளின் வாழ்விலே, வாழ்க்கை ஒரு வசந்தம், பெண் வாழ்வின் கண் உள்ளிட்ட 85க்கும் மேற்பட்ட நூல்களைப் படைத்த பண்பாளர்.

    ஆ.பழநி 7.11.1931 அன்று ஆண்டியப்பன் – உமையாள் தம்பதியினருக்கு 9-வது மகனாக காரைக்குடியில் பிறந்தவர். 1962-ல் புலவர் பட்டம் பெற்றார். 1964-ம் ஆண்டு முதல் காரைக்குடி மீ.சு. உயர்நிலைப்பள்ளியில் தமிழாசிரியராகப் பணிபுரிந்தார். 1997-ல் தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக் கழகத்தின் பேரவை உறுப்பினராகவும் பணிபுரிந்துள்ளார். நாடகம், உரை, திறன்நூல், காப்பியம், ஒப்பீட்டு நூல் எனப்பல நூல்களை எழுதியுள்ளார். தமிழ் இலக்கியத்தின் பல்வேறு தளங்களில் இயங்கிய இவர் பல்வேறு பரிசுகளும், விருதுகளும் பெற்றுள்ளார். சாலிமைந்தன், பாரதிதாசன் பாரதிக்கு தாசனா, காரல் மார்க்சு காப்பியம் மாணிக்கனாரின் கவிதைத் தமிழ் உள்ளிட்ட 16 நூல்கள் படைத்தவர்.

    கொ.மா. கோதண்டம் ராசபாளையத்தில் 1938, செப்டம்பர் 15-ல் மாடசாமிராஜா- சீதாலட்சுமி இணையருக்கு மகனாகப் பிறந்தவர். மணிமேகலை மன்றம், திருக்குறள் சிறார் பயிற்சிக் கழகம் ஆகியவற்றின் தலைவராகவும் கோகுலம் சிறுவர் சங்கம், வாசுகி மாதர் சங்கம், தமிழ்நாடு இலக்கிய பெருமன்றக் கிளை ஆகியவற்றில் பொறுப்பேற்று செவ்விய முறையில் செயல்பட்டு வருபவர். புதினம், கவிதை, புதுக்கவிதை, சிறுவர் புதினம், சிறுவர் கதைகள், சிறுவர் நாடகங்கள், சிறுவர் கவிதைகள் எனப் பன்முகப்பாங்கில் 125க்கும் மேலான நூல்களைப் படைத்தவர். இவரது படைப்புகள் சில உருசிய ஆங்கிலம், சிங்களம், இந்தி, வங்காளம், தெலுங்கு முதலிய மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டு உள்ளன.

    புலவர் இலமா. தமிழ்நாவன் சென்னை, முகப்பேர் பகுதியை சேர்ந்தவர். தமிழாசிரியராகவும் உதவித் தலைமையாசிரியராகவும் பணியாற்றிய அனுபவம் பெற்றவர். இவர் வள்ளுவம் கண்ட அறமும் வாழ்வும், பெரியார் ஈ.வே.ரா. குறும் பாவியம், பாவேந்தரும் பாட்டாளியும், சுரதா பிள்ளைத்தமிழ், நல்ல குடும்பம் ஒரு பல்கலைக்கழகம், உள்ளிட்ட 34 நூல்களை வெளியிட்டுள்ளார்.

    நிகழ்ச்சியில் பாவேந்தரின் எழுச்சி பாடல்கள், நடன நிகழ்ச்சி, பட்டிமன்றம் நடைபெற்றது.

    இதில் பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பரிசுகள் வழங்கி சிறப்புரையாற்றினார்.

    நிகழ்ச்சிக்கு செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன், மா.சுப்பிரமணியன், பி.கே.சேகர்பாபு முன்னிலை வகித்தனர். அரசு கூடுதல் தலைமைச் செயலாளர் மணிவாசன் வரவேற்று பேசினார். முடிவில் கவிதா ராமு நன்றி கூறினார்.

    • ஓட்டலில் உள்ள கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்து வைர நகை வாங்க வந்தவர்கள் குறித்த விபரங்களை சேகரித்தனர்.
    • பிடிபட்ட 4 பேரையும் சிப்காட் போலீஸ் நிலையம் கொண்டு சென்று தீவிர விசாரணை நடத்தினர்.

    சென்னை விருகம்பாக்கத்தை சேர்ந்தவர் சந்திரசேகர். வைர வியாபாரி. இவர் மதுரையை சேர்ந்த தொழில் அதிபர் ஒருவரது 17 கேரட் வைர நகையை விற்பனை செய்ய இடைத்தரகர்களான வில்லிவாக்கத்தை சேர்ந்த ராகுல், மணலி சேக்காடு பகுதியை சேர்ந்த ஆரோக்கியராஜ் மற்றும் சைதாப்பேட்டையை சேர்ந்த சுப்பன் ஆகியோரை அணுகினார்.

    இதையடுத்து இடைத்தரகர்கள், வைரத்தை வாங்குவதற்காக லண்டன் ராஜன் மற்றும் அவரது நண்பரான விஜய், மற்றும் உதவியாளர் அருணாச்சலம் ஆகியோரை அழைத்து வந்தனர். அவர்கள் வைர நகையை பார்த்து விட்டு ரூ.23 கோடி விலை பேசி சென்றனர்.

    இந்த நிலையில் நேற்று காலை சந்திரசேகரை தொடர்பு கொண்ட இடைத்தரகர்கள் வைரத்தை வாங்க பணம் ரெடியாகிவிட்டது. வடபழனியில் உள்ள நட்சத்திர ஓட்டலுக்கு வைர நகையுடன் வந்து அதனை கொடுத்துவிட்டு பணத்தை பெற்று செல்லுமாறு தெரிவித்தனர்.

    இதையடுத்து சந்திரசேகர், தனது வளர்ப்பு மகள் ஜானகியுடன் நட்சத்திர ஓட்டலுக்கு வந்தார். அப்போது சந்திரசேகர் மட்டும் குறிப்பிட்ட அறைக்குள் வைரத்துடன் சென்றார். ஜானகி ஓட்டலுக்கு வெளியே நின்றார்.

    இதற்கிடையே நீண்ட நேரம் வரை சந்திரசேகர் வெளியே வராததால் சந்தேகம் அடைந்த ஜானகி அறைக்கு சென்று பார்த்த போது அங்கு சந்திரசேகர் கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில் இருப்பதையும், அறையில் இருந்த நபர்கள் அவரை தாக்கி வைரத்தை கொள்ளையடித்து சென்று இருப்பதையும் கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

    அவரை மீட்டு வைரநகை கொள்ளை குறித்து வடபழனி போலீசுக்கு தகவல் தெரிவித்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தினர். ஓட்டலில் உள்ள கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்து வைர நகை வாங்க வந்தவர்கள் குறித்த விபரங்களை சேகரித்தனர்.

    மேலும் அவர்களை பிடிக்க தனிப்படையும் அமைக்கப்பட்டது. இது தொடர்பாக இடைத்தரகர்கள் ராகுல், ஆரோக்கியராஜ், சுப்பன் ஆகியோரிடம் விசாரணை நடத்தி வந்தனர்.

    வைர நகை கொள்ளை குறித்து அனைத்து மாவட்ட போலீசாருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டு உஷார் படுத்தப்பட்டனர். சோதனை சாவடிகளில் சோதனை தீவிரப்படுத்தப்பட்டது.

    இந்த நிலையில் நேற்று நள்ளிரவு தூத்துக்குடி, புதூர் பாண்டியாபுரம் சுங்கச்சாவடி அருகே புதியம் புத்தூர் போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது சந்தேகத்திற்கிடமாக வந்த காரை நிறுத்தி போலீசார் சோதனை செய்தனர்.

    அதில் சென்னை ஓட்டலில் வைரத்தை கொள்ளையடித்து தப்பி வந்த பரமக்குடியை சேர்ந்த அருண் பாண்டியராஜன், அய்யப்பன் தாங்கலை சேர்ந்த ஜான் லயார், வளசரவாக்கத்தை சேர்ந்த விஜய், திருவேற்காடு ரதீஷ் என்பது தெரிந்தது. அவர்கள் 4 பேரையும் போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து வைரம் மற்றும் தப்பி செல்ல பயன்படுத்திய கார் பறிமுதல் செய்யப்பட்டது.

    பிடிபட்ட 4 பேரையும் சிப்காட் போலீஸ் நிலையம் கொண்டு சென்று தீவிர விசாரணை நடத்தினர்.

    மேலும் கொள்ளையர்கள் பிடிபட்டது தொடர்பாக சென்னை தனிப்படை போலீசுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் விமானம் மூலம் தூத்துக்குடி விரைந்து சென்று பிடிபட்ட அருண்பாண்டியராஜன் உள்பட 4 பேரையும் விசாரணைக்காக சென்னை அழைத்து வந்தனர். அவர்களிடம் தீவிர விசாரணை நடந்து வருகிறது.

    வைரம் கொள்ளையில் வேறு யாருக்கேனும் தொடர்பு உள்ளதா? தூத்துக்குடிக்கு தப்பி சென்றது ஏன்? என்பது குறித்து அவர்களிடம் விசாரணை நடத்தப்படுகிறது.

    இடைத்தரகர்கள், நகை வாங்க வந்தவர்கள் மற்றும் தற்போது பிடிபட்டவர்கள் என குழப்பங்களுக்கு விடை காண போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தி உள்ளனர்.

    இதில் மேலும் பல தகவல்கள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. வைரம் கொள்ளையில் 4 பேர் பிடிபட்டு உள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • வெள்ளி விலையில் மாற்றமில்லை.
    • ஒரு கிராம் ரூ.108-க்கும், பார் வெள்ளி ரூ.1 லட்சத்து 8 ஆயிரத்துக்கு விற்பனையாகிறது.

    சென்னை:

    தங்கம் விலை இந்த ஆண்டு தொடக்கத்தில் இருந்தே அதிகரித்து வருகிறது. ஒவ்வொரு நாளும் விலை உயர்ந்து புதிய உச்சத்தில் விற்கப்படுவதால் தங்கம் எட்டாக்கனியாகி விடுமோ என்று மக்கள் கவலை அடைந்துள்ளனர். திருமணம், சுப நிகழ்ச்சிக்காக தங்கம் வாங்க நினைப்பவர்களும் செய்வதறியாது தவிக்கின்றனர்.

    இந்த நிலையில், வார தொடக்க நாளான இன்று தங்கம் விலை சற்று உயர்ந்துள்ளது. கிராமுக்கு 20 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் ரூ.8,775-க்கும் சவரனுக்கு 160 உயர்ந்து ஒரு சவரன் ரூ.70,200-க்கும் விற்பனையாகிறது.



    வெள்ளி விலையில் மாற்றமில்லை. ஒரு கிராம் ரூ.108-க்கும், பார் வெள்ளி ரூ.1 லட்சத்து 8 ஆயிரத்துக்கு விற்பனையாகிறது.

    கடைசி ஐந்து நாள் தங்கம் விலை நிலவரம்:-

    04-05-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.70,040

    03-05-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.70,040

    02-05-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.70,040

    01-05-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.70,200

    30-04-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.71,840

    கடைசி ஐந்து நாள் வெள்ளி விலை நிலவரம்:-

    04-05-2025- ஒரு கிராம் ரூ.108

    03-05-2025- ஒரு கிராம் ரூ.108

    02-05-2025- ஒரு கிராம் ரூ.109

    01-05-2025- ஒரு கிராம் ரூ.109

    30-04-2025- ஒரு கிராம் ரூ.111

    • பஹல்காம் தாக்குதல் உலக நாடுகளை உலுக்கியுள்ளது.
    • இதைக் கண்டித்து பா.ஜ.க. சார்பில் கவன ஈர்ப்பு போராட்டம் நடைபெறும்.

    சென்னை:

    தமிழக பா.ஜ.க. மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:

    காஷ்மீர் மாநிலத்திற்கு சுற்றுலா சென்ற மக்களை மதத்தின் பெயரால் கடந்த ஏப்ரல் 22-ம் தேதி பயங்கரவாதிகள் படுகொலை செய்த கொடூரம் உலக நாடுகளையே உலுக்கியுள்ளது.

    இந்த பயங்கரவாத தாக்குதலைக் கண்டித்தும், பாகிஸ்தான், வங்கசேத்தைச் சேர்ந்த சட்டவிரோத குடியேறிகளைத் தொடர்ந்து அடையாளம் கண்டு வெளியேற்றுவதிலும் தமிழக அரசு மும்முரமாக செயல்பட வேண்டும் என்பதை வலியுறுத்தியும், ராணுவத்தின் மீதும் தேச பாதுகாப்பின் மீதும் வதந்திகளைக் கிளப்பும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரியும் பா.ஜ.க. சார்பில் திங்கட்கிழமை கவன ஈர்ப்பு போராட்டம் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • அத்தனை அதிகாரங்களையும் திமுக பெற்றது "நீட் தேர்வு ரத்து" என்ற வாக்குறுதியால் தானே?
    • இத்தனை மாணவ- மாணவியரின் மரணங்களுக்கு உரிய நீதியை,மக்கள் நிச்சயம் வழங்குவார்கள்!

    நீட் தேர்வு ரத்து என்ற பொய்யால் 21 மாணவர்கள் உயிர் பறிபோய் இருக்கிறது, முதலமைச்சர் ஸ்டாலினுக்கு இப்போது கூட மனசாட்சி உறுத்தவில்லையா ? என அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பியுள்ளார்.

    இதுகுறித்து அவர் வௌயிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-

    இன்று நீட் தேர்வு நடைபெற்ற நிலையில், செங்கல்பட்டு மாவட்டம் மேல்மருவத்தூர் அருகே கயல்விழி என்ற மாணவி நீட் தேர்வு அச்சத்தால் தன் இன்னுயிரை மாய்த்துக்கொண்டதாக வரும் செய்தி அதிர்ச்சியளிக்கிறது.

    தமிழ்நாட்டில் ஆட்சி, நாடாளுமன்றத்தில் 39 எம்.பி.க்கள் என அத்தனை அதிகாரங்களையும் திமுக பெற்றது "நீட் தேர்வு ரத்து" என்ற வாக்குறுதியால் தானே?

    "ரகசியம் இருக்கிறது, ஆட்சிக்கு வந்ததும் பாருங்கள்" என்று வாய் சவடால் பேசியதெல்லாம் எங்கே போனது? வெட்கம், மானம், சூடு, சுரணை எல்லாம் எங்கே போனது?

    உங்களுடைய தேர்தல் அரசியலுக்கான ஒற்றைப் பொய்யால் மட்டுமே 21 மாணவ மாணவியரின் உயிர் பறிபோய் இருக்கிறது. இன்னும் எத்தனை பிள்ளைகள் திரு. மு.க.ஸ்டாலின் அவர்களே? உங்களுக்கு இப்போது கூட மனசாட்சி உறுத்தவில்லையா?

    "நீட் ஒழிய வேண்டும் என்றால் '2.ஓ' வர வேண்டும்" என்று கூச்சமின்றி திமுக-வினர் 2026ல் வாக்கு கேட்கும் போது, "உரிய மரியாதையுடன்" மக்கள் பதில் அளிப்பார்கள்! இத்தனை மாணவ- மாணவியரின் மரணங்களுக்கு உரிய நீதியை,மக்கள் நிச்சயம் வழங்குவார்கள்!

    ஊழ்வினை உருத்து வந்து ஊட்டும்!

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    • பெங்களூரில் நடைபெற்ற முதல் தென்னிந்திய அளவிலான டென்பின் பவுலிங் போட்டி.
    • முதல் நிலை வீரரான விவேக் சிங் ஆகியோரை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு முன்னேறினார்.

    கர்நாடக மாநிலம், பெங்களூரில் உள்ள அமோபாவில் கடந்த ஏப்ரல் மாதம் 28-ம் தேதி முதல் மே 1ம் தேதி வரை முதல் தென்னிந்திய டென்பின் பவுலிங் போட்டி தொடர் (1st South Zone Tenpin Bowling Tournament) நடைபெற்றது.

    இப்போட்டியில் ஆண்கள் பிரிவின் இறுதிப் போட்டியில் 2வது நிலை வீரரான கர்நாடாகை சேர்ந்த கிஷான்.ஆர், டாப் வீரர் தெலுங்கானாவை சேர்ந்த விவேக் சிங்குடன் மோதினார்.

    இரண்டு கேம்களில் ஒட்டுமொத்த பின்ஃபால் அடிப்படையில் விளையாடிய கிஷான்.ஆர், (கேம் ஒன் 179) பின்களோடு, 159 பின்கள் எடுத்த விவேக்கை விட 20-பின்கள் முன்னிலை பெற்றார்.

    மேலும், 2வது கேமில், விவேக் 189 பின்களும், கிஷான் 174 பின்களும் ஸ்கோர் செய்த நிலையில், ஒட்டுமொத்தமாக 353-348 என்ற பின்களோடு, 5 பின்கள் வித்தியாசத்தில் விவேக்கை வீழ்த்தி கிஷான்.ஆர் சாம்பியன் பட்டம் வென்றார்.

    முன்னதாக ஆண்கள் பிரிவில் நடைபெற்ற ஸ்டெப்லேடர் முதலாவது சுற்றில், 5வது நிலை வீரரான கர்நாடகாவை சேர்ந்த பர்வேஸ் அகமது, (364), 3வது நிலை வீரரான தெலுங்கானாவை சேர்ந்த லலித்குமார் (327) மற்றும் கர்நாடாகவை சேர்ந்த ஈஸ்வர்ராவ் (324) ஆகியோரை வீழ்த்தி அரையிறுதி சுற்றுக்கு முன்னேறினார்.

    2வது நிலை வீரரான தெலுங்கானாவை சேர்ந்த நவீன் சித்தம் ((395) 6 வது நிலை வீரரான கர்நாடாகாவின் விஜய் பஞ்சாபி (303) மற்றும் 8 வது நிலை வீரரான ஆந்திரப் பிரதேசின் அப்துல் முசீப் (365) ஆகியோரை வீழ்த்தி அரையிறுதிக்கு சுற்றுக்கு முன்னேறினார்.

    3வது நிலை வீரரான கிஷன் ஆர் (394) 4வது நிலை வீரரான நவீன் சித்தம் (340) மற்றும் 5 வது நிலை வீரரான பர்வேஸ் அகமது (366) ஆகியோரை வீழ்த்தி, முதல் நிலை வீரரான விவேக் சிங் ஆகியோரை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு முன்னேறினார்.

    மகளிர் பிரிவு இறுதிப் போட்டியில், தமிழக வீராங்கனை சனா சலீம் ( கேம் ஒன் 172) 5 பின்கள் வித்தியாசத்தில் முதலிடத்தைப் பிடித்தார். அவர் கர்நாடக வீராங்கனை ஹிட்டாஷா சிசோடியா (167) மற்றும் மற்றொரு தமிழக வீராங்கனை சபீனா அதிகா (167) ஆகியோரை வீழ்த்தினார்.

    ஹிட்டாஷா தொடர்ச்சியாக நான்கு ஸ்ட்ரைக்குகளை பெற்றார். பின்னர் 199 ஸ்கோர் செய்தார். சபீனா மிகுந்து போராடியும் 185 மட்டுமே ஸ்கோர் செய்தார். சனா சலீம் 147 பின்கள் மட்டுமே எடுத்தார். இதையடுத்து 14 பின்கள் வித்தியாசத்தில் ஹிட்டாஷா (366-352-319) முதல் இடத்தை பிடித்தார்.

    • நல்லதொரு குடும்பம் பல்கலைக்கழகம் என்பதைக்காட்டும் அற்புதமான படம்.
    • சசிகுமார், இயக்குனர் அபிசன் ஜீவிந்த் உடன் என்னுடைய மகிழ்ச்சியையும் பாராட்டுக்களையும் பரிமாறிக்கொண்டேன்.

    சசிகுமார் அடுத்த படமாக டூரிஸ்ட் ஃபேமிலி என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். இப்படம் மே 1 அன்று உலகம் முழுவதும் வெளியானது. தமிழ்நாட்டில் பெரும்பாலான திரையரங்குகளில் ஹவுஸ் ஃபுல் ஷோக்களாக ஓடிக்கொண்டு இருக்கிறது.

    இப்படத்தை அறிமுக இயக்குநர் அபிஷன் ஜீவின்ந்த் இயக்கியுள்ளார். இந்த திரைப்படத்தில் சசிகுமார், சிம்ரன், மிதுன் ஜெய்சங்கர், கமலேஷ், யோகி பாபு, ரமேஷ் திலக், எம்.எஸ். பாஸ்கர், பக்ஸ் என்ற பகவதி பெருமாள் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

    இலங்கையில் இருந்து வந்த ஒரு குடும்பம் சென்னையில் வசித்து வருகிறது. அவர்களின் குடும்பம் பற்றியும், இவர்களின் குடும்பத்தால் ஏற்படும் மாற்றங்களை மையமாக வைத்து இக்கதைக்களம் அமைந்துள்ளது.

    இந்நிலையில் இந்த படம் குறித்து மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியின் தனது எக்ஸ் தள பக்கத்தில் பதிவு வெளியிட்டுள்ளார்.

    அந்த பதிவில் அவர் கூறியிருப்பதாவது:-

    டூரிஸ்ட் ஃபேமிலி (Tourist Family) என்ற படம் என் மனதை மிகவும் ஈர்த்தது.

    அக்கம் பக்கத்திலே இருப்பவரோடு மனிதாபிமான உறவோடும் பேரன்போடும் வாழும் வாழ்க்கையை போதிக்கிறது இப்படம்.

    படத்தின் நாயகன் சசிகுமார் பேரன்பும், இரக்கமும், உதவும் குணமும் உள்ளவராய் நடித்துள்ளார்… இல்லை..இல்லை வாழ்ந்தே காட்டியுள்ளார்.

    நல்லதொரு குடும்பம் பல்கலைக்கழகம் என்பதைக்காட்டும் அற்புதமான படம்.

    நேரம் கிடைக்கும் போதெல்லாம் தியேட்டர்களில் படம் பார்க்கும் இயல்புடைய நான் இன்று மதியம் குடும்பத்தினருடன் சென்று படம் பார்த்தேன்.

    படம் முடிந்து வெளிவந்தவுடன் நடிகர் சசிகுமார் அவர்களிடமும், இயக்குனர் அபிசன் ஜீவிந்த் அவர்களிடமும் அலைபேசியின் வாயிலாக என்னுடைய மகிழ்ச்சியையும் பாராட்டுக்களையும் பரிமாறிக்கொண்டேன்.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    • மட்டன் குழம்பை ஊற்றி சாப்பிட முயன்றபோது அதில் முழு தேறை இறந்து கிடைந்து இருந்துள்ளது.
    • ஓட்டல் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாடிக்கையாளர் கோரிக்கை வைத்தனர்.

    சென்னை பூந்தமல்லி நகராட்சி அலுவலகம் அருகே அமைந்துள்ளது நாவலடி என்கிற பிரபல தனியார் ஓட்டல்.

    இந்த ஓட்டலில் வாடிக்கையாளர் ஒருவர் சாப்பிட்டுக் கொண்டிருந்த நிலையில் சாப்பிட்ட உணவில் முழு தேரை இருந்ததைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

    மட்டன் குழம்பை ஊற்றி சாப்பிட முயன்றபோது அதில் முழு தேறை இறந்து கிடைந்து இருந்துள்ளது.

    இதையடுத்து, உணவு சாப்பிட்டவர்கள் நாவலடி ஓட்டல் நிர்வாகத்திடம் தேரை குறித்து கேட்டனர். அப்போது, வாடிக்கையாளருக்கும், ஓட்டலர் நிர்வாகத்திற்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

    தொடர்ந்து, உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் நாவலடி ஓட்டல் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாடிக்கையாளர் கோரிக்கை வைத்தனர். இந்த நிலையில், சம்பந்தப்பட்ட ஓட்டலுக்கு உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் சீல் வைத்தனர்.

    ×