என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "எழுத்தாளர்கள்"

    • ஒரு நல்ல நாவல், அதன் பக்கங்களில் ஆயிரமமாயிரம் சினிமாக்களை பொதிந்து வைத்துள்ளது. நேர்த்தியான அழகுணர்ச்சியை கொண்டுள்ளது.
    • உணர்வுகளின் ரகசிய முகமூடிகள் கழன்று விழுந்து, உள்ளுக்குள் நடப்பதை அப்பட்டமாகக் காட்டுகின்றன.

    புத்தகம்! மக்களிடையே காட்சி மீது உருவாகியுள்ள ஈர்ப்பு, எழுத்து மீது குறைந்து வருவது குறித்து அனைவரும் ஒரு கட்டத்தில் உணர நேரிடும். கண் முன் கிண்டி வைத்த படத்தை நோகாமல், எந்த மெனக்கிடலும் இல்லாமல் பார்த்துப் பழகியதால் அதிக கவனத்தை கோரும் எழுத்தின் பக்கம் பலர் செல்லாமலேயே இருந்து விடுவது உண்டு.

    ஆனால் இரண்டும் வெவ்வேறு வழிகளில் அதனதன் தன்மைகளில் சுவை தருபவை. எழுத்தில் வாசகர்களின் கற்பனைக்கு அதிக இடம் உண்டு. தேடலுக்கு இடம் உண்டு. முழுமையான உணர்வுக்கு இடம் உண்டு. ஆனால் இவ்வின்பங்கள் துய்க்கப்படாமலேயே நம் கண் முன் வீணாவது வேதனையே. ஒரு நல்ல புத்தகம் 100 நண்பர்களுக்கு சமம் என்பதற்கினங்க நம் சிந்தனைக்கு வேலை தரும் புத்தகங்கள் ஏராளம்.

    புத்தக வாசிப்பு என்பது ஒரு கடல். அது முழு உலகம், அதன் கதவுகள் என்றும் அகலத் திறந்தே உள்ளன. ஆனால் தயக்கம் பலரை தடுக்கிறது. இந்த சிறு தடையை கடந்து வந்தால் இந்த உலகின் பிரமாண்டங்களையும், ஆச்சர்யங்களையும் காணலாம். மனிதர்களின் மனதின் மிக நுணுக்கமான உணர்ச்சிகளை நாம் புரிந்து கொள்ளலாம்.

    ஒரு நல்ல நாவல், அதன் பக்கங்களில் ஆயிரமமாயிரம் சினிமாக்களை பொதிந்து வைத்துள்ளது. நேர்த்தியான அழகுணர்ச்சியை கொண்டுள்ளது. அக சிடுக்குகளை ஆராய்கிறது. இது சினிமாவில் 100 சதவீதம் சாத்தியமாவது அரிதே.

    சரி, புத்தம் படிக்கலாம் என்று முடிவெடித்துவிட்டோம், எங்கு?, எப்படி தொடங்குவது? என்று கேட்கிறீர்களா?, உலகம் உருண்டையாக இருப்பதால் அதற்கு தொடக்கப் புள்ளி என்று ஒன்று கிடையாது. அதே போலவே புத்தகங்களும்.

    "தேடல் உள்ள உயிர்களுக்கே தினமும் பசியிருக்கும் தேடல் என்பது உள்ளவரை வாழ்வில் ருசியிருக்கும்" என்ற துள்ளாத மனமும் துள்ளும் குட்டியின் பாடலுக்கு இணங்க தேடல், உங்களை உங்கள் வாழ்வையே, வாழ்வு குறித்த உங்கள் பார்வையையே, மாற்றக் கூடிய புத்தகத்துக்கு உங்களை இட்டுச் செல்லலாம்.

    இதற்கு ஏற்ற களம் புத்தக கண்காட்சி என கூறலாம். ஒவ்வொரு மாவட்டத்த்திலும் புத்தக கண்காட்சிகள் ஆண்டுதோறும் நடந்து தான் வருகின்றன.

    ஒரு சுற்றுலாத் தளத்துக்கு செல்வது போல, திரையரங்குக்கு செல்வது போல அங்கு சென்று, உங்கள் பார்வையை அலைபாய விடுங்கள். அப்படி என்னதான் இருக்கிறது? என்ற கேள்வியை இறுகப் பற்றிக் கொள்ளுங்கள். ஒரு அட்டைப்படம் உங்களை ஈர்க்கலாம், ஒரு எழுத்தாளரின் பெயர் உங்களை ஈர்க்கலாம், புத்தம் குறித்து அதன் பின்னட்டையில் கொடுக்கப்பட்டுள்ள அறிமுகம் உங்களை ஈர்க்கலாம்.

    பல நேரங்களில் உங்கள் உள்ளுணர்வு இதை படிக்கலாம் என்று நிச்சயம் சொல்லும். வாங்குங்கள். 199 ரூபாய் செலவில் ஒரு 2 மணிநேர சினிமாவை முடித்து வெளியே வந்தால் உங்களிடம் நிறைவு இருக்கலாம், ஆனால் உங்கள் கையில் ஒன்றும் இருக்காது. ஒரு புத்தகம் உங்கள் வாழ்நாள் முழுவதும் உங்களுடன் தான் இருக்கும். அதை மீண்டும் மீண்டும் மறு வாசிப்பு செய்யலாம், பிடித்தவர்களுக்கு பரிசளிக்கலாம். உங்களுக்கு புரிகிறது தானே. அவ்வளவு தான் விஷயம்.

    புத்தகத்தை வாங்கிவிட்டு படிக்க முடியாமல் போகிறதே என்று கேட்கிறீர்களா?, தயக்கத்தை தூக்கியெறியுங்கள். நிச்சயம் ஒரு நாள் நீங்கள் படித்தே தீர்வீர்கள். இந்த புத்தகம் வாங்கும் விஷயமே வேண்டாம் என நினைக்கிறீர்களா? இருக்கவே இருக்கிறது ஊர்தோறும் நூலகங்கள்.

    ஒரு நாள் சுற்றிப் பார்க்கவாவது செல்லுங்கள், நூலகத்தின் மாயத்தன்மையின் புத்தக வாசமும், அறிவுச் சூழலும் நிச்சயம் உங்களை மீண்டும் அதை நோக்கி இழுக்கும். மெதுவாக ஒரு புத்தகத்தை கையில் எடுத்து அலட்சியமாக பார்ப்பீர்கள்.பின்னர், சில பக்கங்களின் மீது உங்கள் கண்கள் அலைபாயும். ஒரு வரி, பத்தி உங்களை ஈர்க்கலாம். மேஜையில் வந்து அமர்வீர்கள். முதல் பக்கத்தை படிப்பீர்கள். அது உங்களை உள்ளே இழுக்கும். பின்னர் என்ன? நீங்கள் ஒரு முழுமையான வாசகன் ஆவீர்கள். அதில் உள்ள சுகத்தை உணர்வீர்கள். ரசனை வளரும். ரசனையோடு உங்கள் பார்வையும் விரிவடையும்.

    புதிதாக படிக்கும் வாசகர் என்றால் 100 பக்கங்களுக்குள் உள்ள புத்தகங்களை முதலில் தேர்ந்தெடுக்கலாம். முழுதாக படித்து முடிக்கும் அனுபவம் தான், அடுத்த புத்தகத்துக்கு உங்களை அழைத்து போகும். தினம் டிவி பார்ப்பது போல சில பக்கங்களை அசை போடுங்கள். 

    சரி விஷயத்துக்கு வருவோம். 2026 சென்னை புத்தக கண்காட்சி தொடங்கி விட்டது. இது தமிழ்நாட்டிலேயே மிகப்பெரிய புத்தக கண்காட்சி.

    பல புத்தக விரும்பிகளுக்கு இது சொர்க்கம். பதிப்பகம் வாரியாக அரங்குகள் அமைத்து 10 சதவீத தள்ளுபடி விலையில் விற்பனை நடைபெறும். இதே போல உங்கள் ஊரிலோ மாவட்டத்திலோ வருடந்தோறும் நடக்கும். பயன்படுத்திக் கொள்ளலாம்.

    இத்தனையும் பேசிவிட்டு தலைப்பிற்கு இணங்க நல்லதொரு தொடக்கத்திற்கு சில புத்தகங்களை குறிப்பிடாமல் போனால் நன்றாக இருக்காது. எனவே அவை கீழ்வருமாறு..

    ஒரு மனிதன் ஒரு வீடு ஒரு உலகம் (நாவல்) - ஜெயகாந்தன்

    தனது நாவல்களில் தனக்கு மிகவும் பிடித்தமானது என்று ஜெயகாந்தனாலும் அவரது நாவல்களில் ஆகச் சிறப்பானது என்று இலக்கிய விமர்சகர்களாலும் குறிப்பிடப்படுவது 'ஒரு மனிதன் ஒரு வீடு ஒரு உலகம்.'

    எந்த ஊர், பெற்றோர் யார், என்ன இனம், என்ன சாதி என்று எதுவும் தெரியாத, அது பற்றிக் கவலையும் கொள்ளாத ஒரு உலகப் பொது மனிதனைக் கதாபாத்திரமாக்கி, அவன் எதிர்கொள்ளும் அனுபவங்களின் மூலம் இந்த வாழ்க்கையின் போக்கு குறித்த புரிதலை உணர்த்த முனையும் நாவல் இது.

    ஒரு புளியமரத்தின் கதை (நாவல்) - சுந்தர ராமசாமி

    தமிழ் நவீன இலக்கிய உலகில் பலருக்கும் பிடித்தமான நாவல் சுந்தர ராமசாமி எழுதிய ஒரு புளியமரத்தின் கதை. 1966-ல் முதல் பதிப்பு வெளிவந்த காலத்திலிருந்து வாசகர்கள் பலரால் தொடர்ச்சியாக வாசிக்கப்படும் நாவல். சுதந்திரத்திற்கு முன்னால் தொடங்கி, சுதந்திரத்திற்குப் பிற்பாடு வரையிலான ஒரு கால கட்டத்தை புளியமரத்தோடு பல நிகழ்வுகைளைத் தொகுத்து நமக்குக் காட்டும் நாவல் இது.

    கடலுக்கு அப்பால் – ப.சிங்காரம்

    இது இரண்டாம் உலகப் போரின் பின்னணியில், தமிழகத்திலிருந்து பர்மா, இந்தோனேஷியா, மலேசியா ஆகிய தென் கிழக்கு ஆசிய நாடுகளுக்குப் பிழைப்பு தேடிச் சென்ற தமிழர்களின் வாழ்க்கை, காதல், பிரிவு மற்றும் துயரங்களை சித்தரிக்கிறது.

    எழுத்தாளர் சி.மோகன் கூற்றுப்படி, ப. சிங்காரம், நவீன தமிழ் இலக்கிய எழுத்தாளர்களில் ஓர் அபூர்வ ஆளுமை. கதை மாந்தர்களின் மனமொழி தமிழில் இவரளவுக்கு எவரிடமும் இவ்வளவு அநாயசமாகக் கூடி வரவில்லை. மனக்குகை வாசல்கள் தாமாகவே திறந்து கொண்டு விட்டிருக்கின்றன. உணர்வுகளின் ரகசிய முகமூடிகள் கழன்று விழுந்து, உள்ளுக்குள் நடப்பதை அப்பட்டமாகக் காட்டுகின்றன. கடலுக்கு அப்பால் நாவலில் கடவுளின் மலர்ந்த சிரிப்பும் உள்ளுறைந்திருக்கின்றது.

    புயலிலே ஒரு தோணி (நாவல்) - ப.சிங்காரம்

    கடலுக்கு அப்பால் நாவலின் இன்னும் ஆழமான தொடர்ச்சி புயலிலே ஒரு தோணி. பிறந்த இடத்தில் தொலைத்த தங்களின் வாழ்க்கையை அந்நிய நிலத்தில் மீட்டெடுக்கப் போராடும் மனிதர்களை இதில் பார்க்க முடியும். அவர்களின் அன்றாட வாழ்க்கை ஒரு சாகசம் போலத் தெரியும்.

    நிச்சயமற்ற வாழ்க்கையில் நிச்சமுள்ள ஒரு விஷயத்தைத் தேடிச் செல்லும் புலம்பெயர்ந்தவர்களின் வாழ்க்கையை இந்த நாவல் நம் கண்முன்னால் கொண்டு வருகிறது. 'மனதை இழக்காதவரை நாம் எதையும் இழப்பதில்லை' - புயலிலே ஒரு தோணி நாவலின் கடைசி வரி இது.

    கோபல்ல கிராமம் (நாவல்) - கி.ராஜநாராயணன்

    கரிசல் நிலத்தை, கரிசல் மக்களின் வாழ்வை, கரிசல் மண்ணின் வாசனையோடு பதிவு செய்யும் நாவல் இது. கரிசல் காட்டுக் கிராம மக்களின் பேச்சு வழக்கையும் சொலவடைகளையும் சரளமாகக் கையாண்டு வாய்மொழிக் கதை மரபில், புதிய வடிவத்தில் இந்த நாவலை உருவாக்கியுள்ளார் கி. ராஜ நாராயணன்.

    எரியும் பனிக்காடு – மூலம் - Red Tea - பி.எச். டேனியல்

    பாலாவின் "பரதேசி" திரைப்படத்தின் மூலவடிவமாக அமைந்த நாவல் இது. ஆங்கிலேயர்கள் ஆட்சி காலத்தில் கங்காணி முறையினை பயன்படுத்தி எப்படி சமூகத்தில் தாழ்த்தப்பட்ட மக்களை அடிமைகளாக ஆனைமலைக் காட்டில், தேயிலை தோட்டங்களில் எப்படியாக சிறைபடுத்தினார்கள் என்பதை சித்தரிக்கும் வரலாற்றுப் புதினம்.

    தேயிலைத் தோட்டங்களில் பணிபுரிந்தவர்களின் துன்பதுயரங்களை கண்முன் நிறுத்துகிறது. சாதிய, பாலியல், மற்றும் உழைப்பு சுரண்டல்களால் அன்றைய காலங்களில் மக்களின் வாழ்வு எப்படி சீர்குலைந்தது என்பதையும் அறிந்து கொள்ள முடியும்.

    ஏழு தலைமுறைகள் (நாவல்) - அலெக்ஸ் ஹேலி

    இது 18-ஆம் நூற்றாண்டில் கானாவில் இருந்து அமெரிக்காவிற்கு அடிமையாகக் கொண்டுவரப்பட்ட ஒரு கறுப்பின இளைஞனின் குடும்ப வரலாறு, அவர்களின் வேர்கள் மற்றும் அடிமைத்தனத்தின் கொடூரமான பாதிப்புகளை ஏழு தலைமுறைகளாக விவரிக்கும் ஆழமான, வேதனை நிறைந்த கதை.

    1852 ஆம் ஆண்டில் வெளிவந்த 'அங்கிள் டாம்ஸ் கேபின்' நாவலுக்குப் பிறகு கடந்த நூற்றிருபது வருட நீண்ட காலத்தில் உலகத்தையே குலுக்கிய இது போன்ற புத்தகம் வேறெதுவுமே வந்ததில்லை. 

    • நிகழ்ச்சியில் பாவேந்தரின் எழுச்சி பாடல்கள், நடன நிகழ்ச்சி, பட்டிமன்றம் நடைபெற்றது.
    • பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பரிசுகள் வழங்கி சிறப்புரையாற்றினார்.

    சென்னை:

    பாவேந்தர் பாரதிதாசனின் பிறந்தநாள் தமிழ் வார விழாவாக கொண்டாடப்படும் என்று சட்டசபையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்து இருந்தார்.

    அதன்படி பாரதிதாசன் பிறந்தநாளான ஏப்ரல் 29-ந்தேதி தொடங்கி மே 5-ந்தேதி வரை தமிழ்நாடு முழுவதும் தமிழ்வார விழா கொண்டாடப்படுகிறது.

    தமிழ்வார விழாவின் நிறைவு விழா சென்னை கலைவாணர் அரங்கில் இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்றது.

    விழாவில் தமிழறிஞர்களின் படைப்புகள் உலக மக்கள் அனைவரிடமும் சென்று சேர வேண்டும் என்ற உயரிய நோக்கில், கடந்த 4 ஆண்டுகளில் 32 அறிஞர்களின் 1,442 நூல்கள் நாட்டுடைமை செய்யப்பட்டு நூலுரிமைத் தொகையாக ரூபாய் 3 கோடியே 79 லட்சத்து 35 ஆயிரம் வழங்கப்பட்டுள்ளதாக விழாவில் அறிவிக்கப்பட்டது. முத்தமிழறிஞர் கலைஞர் பல்வேறு காலகட்டங்களில் எழுதி வெளிவந்த அனைத்துப் படைப்புகளும் அறிவுப் பொதுவுடைமை செய்யும் வகையில் நூலுரிமைத் தொகையின்றி நாட்டுடைமையாக்கப்பட்டுள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டது.

    இவ்வரிசையில், இந்த ஆண்டு மறைந்த தமிழறிஞர்களான கவிக்கோ அப்துல் ரகுமான், எழுத்தாளர் மெர்வின், ஆ. பழநி ஆகியோரின் நூல்கள் நாட்டுடைமை செய்து அவர்களது மரபுரிமையர்களுக்கு ரூ.10 லட்சம் வீதமும் வாழும் தமிழறிஞர்களான கொ.மா. கோதண்டம் புலவர் இலமா. தமிழ்நாவன் ஆகியோரின் நூல்கள் நாட்டுடைமை செய்து நூலுரிமைத் தொகையாக ஒவ்வொருவருக்கும் ரூ.10 லட்சம் வீதமும் தமிழ்நாடு முதலமைச்சர் திருக்கரங்களால் வழங்கி சிறப்பிக்கப்படவுள்ளது.

    கவிக்கோ அப்துல் ரகுமான் மதுரை மாவட்டம், கிழக்குச் சந்தைப் பேட்டையில் 1937-ம் ஆண்டு பிறந்தவர். தமிழ்ப் பேராசிரியராகவும், கவிஞராகவும் சிறந்து விளங்கியவர். பால்வீதி என்ற கவிதைத் தொகுதியின் மூலம் தம்மை ஒரு சோதனைப் படைப்பாளியாக இனங்காட்டிக் கொண்டவர். தியாகராசர் நடத்திய தமிழ்நாடு என்ற நாளிதழில் மெய்ப்பு திருத்துநராகவும், வாணியம்பாடி இசுலாமியக் கல்லூரி உள்ளிட்ட ஐந்து கல்லூரிகளில் விரிவுரையாளராகவும் பணியாற்றியவர். பால்வீதி, நேயர் விருப்பம், சொந்தச் சிறைகள்(வசன கவிதை), ஆலாபனை, பித்தன் உள்ளிட்ட 41 நூல்களைப் படைத்த பெருமைக்குரியவர்.

    தமிழறிஞரும் எழுத்தாளருமான மெர்வின் சென்னை, துரைப்பாக்கத்ததைச் சேர்ந்தவர். 50 ஆண்டுகளுக்கும் மேலாக எழுத்துத் துறையில் முழு நேர எழுத்தாளராக பணிபுரிந்தவர். 1968-1970-ம் ஆண்டுகளில் 'பூச் செண்டு' என்ற மாணவ மாத இதழை நடத்தியவர். 'உன் வாழ்க்கை உன் கைகளிலே' என்ற நூலுக்காக அதிசய மனிதர் ஜி.டி. நாயுடு அவர்களால் பாராட்டப்பெற்றவர். இவர் உயர்வு உன்னிடமே, முயற்சியே முன்னேற்றம், மேதைகளின் வாழ்விலே, வாழ்க்கை ஒரு வசந்தம், பெண் வாழ்வின் கண் உள்ளிட்ட 85க்கும் மேற்பட்ட நூல்களைப் படைத்த பண்பாளர்.

    ஆ.பழநி 7.11.1931 அன்று ஆண்டியப்பன் – உமையாள் தம்பதியினருக்கு 9-வது மகனாக காரைக்குடியில் பிறந்தவர். 1962-ல் புலவர் பட்டம் பெற்றார். 1964-ம் ஆண்டு முதல் காரைக்குடி மீ.சு. உயர்நிலைப்பள்ளியில் தமிழாசிரியராகப் பணிபுரிந்தார். 1997-ல் தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக் கழகத்தின் பேரவை உறுப்பினராகவும் பணிபுரிந்துள்ளார். நாடகம், உரை, திறன்நூல், காப்பியம், ஒப்பீட்டு நூல் எனப்பல நூல்களை எழுதியுள்ளார். தமிழ் இலக்கியத்தின் பல்வேறு தளங்களில் இயங்கிய இவர் பல்வேறு பரிசுகளும், விருதுகளும் பெற்றுள்ளார். சாலிமைந்தன், பாரதிதாசன் பாரதிக்கு தாசனா, காரல் மார்க்சு காப்பியம் மாணிக்கனாரின் கவிதைத் தமிழ் உள்ளிட்ட 16 நூல்கள் படைத்தவர்.

    கொ.மா. கோதண்டம் ராசபாளையத்தில் 1938, செப்டம்பர் 15-ல் மாடசாமிராஜா- சீதாலட்சுமி இணையருக்கு மகனாகப் பிறந்தவர். மணிமேகலை மன்றம், திருக்குறள் சிறார் பயிற்சிக் கழகம் ஆகியவற்றின் தலைவராகவும் கோகுலம் சிறுவர் சங்கம், வாசுகி மாதர் சங்கம், தமிழ்நாடு இலக்கிய பெருமன்றக் கிளை ஆகியவற்றில் பொறுப்பேற்று செவ்விய முறையில் செயல்பட்டு வருபவர். புதினம், கவிதை, புதுக்கவிதை, சிறுவர் புதினம், சிறுவர் கதைகள், சிறுவர் நாடகங்கள், சிறுவர் கவிதைகள் எனப் பன்முகப்பாங்கில் 125க்கும் மேலான நூல்களைப் படைத்தவர். இவரது படைப்புகள் சில உருசிய ஆங்கிலம், சிங்களம், இந்தி, வங்காளம், தெலுங்கு முதலிய மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டு உள்ளன.

    புலவர் இலமா. தமிழ்நாவன் சென்னை, முகப்பேர் பகுதியை சேர்ந்தவர். தமிழாசிரியராகவும் உதவித் தலைமையாசிரியராகவும் பணியாற்றிய அனுபவம் பெற்றவர். இவர் வள்ளுவம் கண்ட அறமும் வாழ்வும், பெரியார் ஈ.வே.ரா. குறும் பாவியம், பாவேந்தரும் பாட்டாளியும், சுரதா பிள்ளைத்தமிழ், நல்ல குடும்பம் ஒரு பல்கலைக்கழகம், உள்ளிட்ட 34 நூல்களை வெளியிட்டுள்ளார்.

    நிகழ்ச்சியில் பாவேந்தரின் எழுச்சி பாடல்கள், நடன நிகழ்ச்சி, பட்டிமன்றம் நடைபெற்றது.

    இதில் பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பரிசுகள் வழங்கி சிறப்புரையாற்றினார்.

    நிகழ்ச்சிக்கு செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன், மா.சுப்பிரமணியன், பி.கே.சேகர்பாபு முன்னிலை வகித்தனர். அரசு கூடுதல் தலைமைச் செயலாளர் மணிவாசன் வரவேற்று பேசினார். முடிவில் கவிதா ராமு நன்றி கூறினார்.

    • 200-க்கும் மேற்பட்ட தமிழ் அறிஞர்கள், கவிஞர்கள், எழுத்தாளர்கள் பங்கேற்கின்றனர்.
    • மாநாட்டை தொடங்கி வைக்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் அனுமதி கேட்டுள்ளோம்.

    சென்னை:

    சென்னையில் 11-வது உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாடு ஜூலை 7-ந்தேதி தொடங்கி 3 நாட்கள் நடைபெற உள்ளது. இதில் 200-க்கும் மேற்பட்ட தமிழ் அறிஞர்கள், கவிஞர்கள், எழுத்தாளர்கள் பங்கேற்கின்றனர்.

    இது தொடர்பாக உலக தமிழ் ஆராய்ச்சி மன்றத்தின் தலைவர் மு.பொன்ன வைக்கோ, துணைத் தலைவர் இ.சுந்தரமூர்த்தி, மாநாடு ஏற்பாட்டுக் குழு தலைவர் ஜி. ஜான்சாமுவேல், பொதுச் செயலாளர் உலகநாயகி பழனி ஆகியோர் சென்னை பல்கலைக்கழகத்தில் நிருபர்களிடம் கூறியதாவது:-

    உலகத் தமிழ் ஆராய்ச்சி மன்றம் சார்பில் இதுவரை 10 மாநாடுகள் நடத்தப்பட்டு உள்ளன. 11-வது உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாடு ஜூலை 7 முதல் 9-ந்தேதி வரை சென்னை அடுத்த செம்மஞ்சேரியில் உள்ள ஆசியவியல் நிறுவனத்தில் நடைபெற உள்ளது. மாநாட்டை தொடங்கி வைக்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் அனுமதி கேட்டுள்ளோம். ஒப்புதல் கிடைக்கும் என நம்புகிறோம்.

    உலகமெல்லாம் தமிழோசை பரவ வேண்டும் என்பது இம்மாநாட்டின் மையப் பொருள். தமிழ்மொழி, இலக்கியம், தமிழர் பண்பாடு, கலாச்சாரம், நாகரீகம் ஆகியவை குறித்து இளைஞர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கில் இந்த மாநாடு நடத்தப்படுகிறது.

    இதில் இந்தியாவில் இருந்து மட்டுமின்றி ஜப்பான், தென்கொரியா, பிரான்ஸ், ஜெர்மனி உள்ளிட்ட நாடுகளில் இருந்தும் 200-க்கும் மேற்பட்ட தமிழ் அறிஞர்கள், கவிஞர்கள், எழுத்தாளர்கள், பதிப்பாளர்கள், மொழி பெயர்ப்பாளர்கள், அகழ்வாராய்ச்சி நிபுணர்கள் பங்கேற்கின்றனர்.

    தமிழின் தொன்மை, தமிழ் பண்பாடு, தமிழ் இலக்கியம், தொல்லியல், கல்வெட்டியல், மானுடவியல், சமூகவியல், மொழி பெயர்ப்பியல், மொழியியல் என பல்வேறு தலைப்புகளில் வல்லுநர்கள் உரையாற்ற உள்ளனர்.

    மொத்தம் 200 ஆய்வுக் கட்டுரைகள் சமர்ப்பிக்கப் பட உள்ளன. மாநாட்டில் புத்தகக் கண்காட்சி, நூல் வெளியீட்டு நிகழ்ச்சிகள், கலை நிகழ்ச்சிகள் ஆகியவையும் இடம்பெறுகின்றன. மாநாட்டின் நிறைவு நாளில் முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட உள்ளன.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.

    • பல தமிழ் எழுத்தாளர்கள் சாகித்ய அகாடமி விருதை பெற்றுள்ளனர்.
    • சாகித்ய அகாடமி விருதுடன் ரூ.1,00,000 வழங்கப்படுகிறது.

    சாகித்ய அகாடமி விருது என்பது இந்திய இலக்கிய படைப்பாளிகளுக்கு வழங்கப்படும் கௌரவமான விருது. அங்கீகரிக்கப்பட்ட இந்திய மொழிகளில் வெளியிடப்பட்ட இலக்கியத் தகுதியின் மிகச் சிறந்த புத்தகங்களுக்கு சாகித்ய அகாடமி விருது வழங்கப்படுகிறது.

    சாகித்ய அகாடமியானது 1954 ஆம் ஆண்டு மார்ச் 12 ஆம் தேதி இந்திய அரசால் இலக்கிய உரையாடல், வெளியீடு மற்றும் ஊக்குவிப்புக்கான மைய நிறுவனமாக தொடங்கப்பட்டது. ஆங்கிலம் உட்பட 24 இந்திய மொழிகளில் இலக்கிய விருதாக சாகித்ய அகாடமி வழங்கப்படுகிறது.

    இந்த விருதை தமிழில் பல எழுத்தாளர்கள் ஒவ்வொரு வருடமும் பெறுகிறார்கள். கல்கி, பாரதிதாசன், கண்ணதாசன், ஜெயகாந்தன், எஸ்.செல்லப்பா, பிரபஞ்சன் மற்றும் பல தமிழ் எழுத்தாளர்கள் சாகித்ய அகாடமி விருதை பெற்றுள்ளனர்.

    மேலும், சாகித்ய அகாடமி விருதுடன் சேர்த்து 2009-லிருந்து ரொக்கப் பரிசாக ரூ.1,00,000 வழங்கப்படுகிறது. இந்நிலையில், கடந்த 14 ஆண்டுகளாக பரிசுத் தொகையில் மாற்றம் இல்லாமல் அதே ரூ.1,00,000 வழங்கப்பட்டு வருகிறது.

    எனவே, சாகித்ய அகாடமி விருதுடன் வழங்கப்படும் பரிசுத் தொகையை மத்திய அரசு உயர்த்தி வழங்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • புத்தக கண்காட்சி நடத்தப்பட்ட நிலையில் அடுத்ததாக 48 வது புத்தக கண்காட்சி வரும் 27ம் தேதி தொடங்குகிறது.
    • கண்காட்சியில், சிறப்பு நிகழ்வுகள் உள்ளிட்டவையுடன் பண்பாட்டு நிகழ்ச்சிகளும் நடத்தப்படுகிறது.

    சென்னையில் தென்னிந்திய புத்தக விற்பனையாளர்கள் மற்றும் பதிப்பாளர்கள் சங்கத்தினரால் ஆண்டுதோறும் புத்தக கண்காட்சி நடத்தப்பட்டு வருகிறது. இக்கண்காட்சி பொதுவாக ஆங்கிலப் புத்தாண்டு பொங்கல் பண்டிகையை ஒட்டி ஜனவரி மாதம் நடைபெறும்.

    தமிழகம் முழுவதும் உள்ள வெளியீட்டாளர்கள் தனித்தனி ஸ்டால்களில் தங்கள் பதிப்பக புத்தகங்களை காட்சிப்படுத்துவர். கண்காட்சியோடு சேர்த்து சொற்பொழிவு, பேச்சாளர்களின் சிறப்பு நிகழ்வுகள் உள்ளிட்டவையுடன் பண்பாட்டு நிகழ்ச்சிகளும் நடத்தப்படும்.

    1977 ஆம் ஆண்டு முதல் புத்தக கண்காட்சி நடத்தப்பட்ட நிலையில் அடுத்ததாக 48 வது புத்தக கண்காட்சி வரும் 27ம் தேதி தொடங்குகிறது.

    இந்நிலையில், புத்தகக் காட்சியில் வழங்கப்பட உள்ள கலைஞர் பொற்கிழி விருதுகள் 6 எழுத்தாளர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளன.

    அதன்படி, பபாசி அமைப்புக்கு கலைஞர் வழங்கிய நிதியில் இருந்து வழங்கப்படும் இவ்விருதை இந்தாண்டு,

    பேராசிரியர் அருணன் - உரைநடை, நெல்லை ஜெயந்தா – கவிதை, சுரேஷ் குமார இந்திரஜித் – நாவல், என். ஸ்ரீராம் – சிறுகதைகள், கலைராணி – நாடகம், நிர்மால்யா – மொழிபெயர்ப்பு ஆகியோர் பெற இருப்பதாக பபாசி அமைப்பு அறிவித்துள்ளது.

    • எழுத்தாளர்கள் உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம் என தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
    • வருகிற 30-ந் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்

    பெரம்பலூர்:

    சமுதாய வளர்ச்சிக்கு பயன்படும் வகையிலான நூல்கள் எழுதும் ஆதிதிராவிடர், ஆதிதிராவிட கிறிஸ்தவர், பழங்குடியினர் பிரிவை சார்ந்த 10 எழுத்தாளர்கள் மற்றும் ஆதிதிராவிடர் அல்லாத ஒருவர் என மொத்தம் 11 எழுத்தாளர்களுக்கு உதவித்தொகையாக ரூ.1 லட்சம் வழக்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.

    சிறந்த படைப்பாக தேர்ந்தெடுக்கப்படும் நூல்களை எழுதியுள்ள எழுத்தாளர் அந்த நூலினை வெளியிடுவதற்கு தலா ரூ.1 லட்சம் நிதி உதவி அளிக்கப்படும். விண்ணப்பிக்க விரும்பும் எழுத்தாளர்கள் தங்களின் பெயர், முகவரி, படைப்பின் பொருள் விண்ணப்பங்கள் மற்றும் படைப்பின் 2 பிரதிகள் போன்ற விவரங்களுடன் வருகிற 30-ந் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். இதற்கான விண்ணப்பங்களை பெரம்பலூர் மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலகத்தில் பெற்றுக்கொள்ளலாம். விண்ணப்பத்தினை பூர்த்தி செய்து மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர், மாவட்ட கலெக்டர் அலுவலகம், பெரம்பலூர்- 621112 என்ற முகவரிக்கு நேரிலோ அல்லது தபால் மூலமாகவோ வருகிற 30-ந் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்."

    ×