என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    புத்தக வெளி: வாசிப்பு தரும் வாழ்வனுபவம் - ரசனையின் விரிவும் ஆழமும் தேடி - புத்தக அறிமுகமும் சில பரிந்துரைகளும்
    X

    புத்தக வெளி: வாசிப்பு தரும் வாழ்வனுபவம் - ரசனையின் விரிவும் ஆழமும் தேடி - புத்தக அறிமுகமும் சில பரிந்துரைகளும்

    • ஒரு நல்ல நாவல், அதன் பக்கங்களில் ஆயிரமமாயிரம் சினிமாக்களை பொதிந்து வைத்துள்ளது. நேர்த்தியான அழகுணர்ச்சியை கொண்டுள்ளது.
    • உணர்வுகளின் ரகசிய முகமூடிகள் கழன்று விழுந்து, உள்ளுக்குள் நடப்பதை அப்பட்டமாகக் காட்டுகின்றன.

    புத்தகம்! மக்களிடையே காட்சி மீது உருவாகியுள்ள ஈர்ப்பு, எழுத்து மீது குறைந்து வருவது குறித்து அனைவரும் ஒரு கட்டத்தில் உணர நேரிடும். கண் முன் கிண்டி வைத்த படத்தை நோகாமல், எந்த மெனக்கிடலும் இல்லாமல் பார்த்துப் பழகியதால் அதிக கவனத்தை கோரும் எழுத்தின் பக்கம் பலர் செல்லாமலேயே இருந்து விடுவது உண்டு.

    ஆனால் இரண்டும் வெவ்வேறு வழிகளில் அதனதன் தன்மைகளில் சுவை தருபவை. எழுத்தில் வாசகர்களின் கற்பனைக்கு அதிக இடம் உண்டு. தேடலுக்கு இடம் உண்டு. முழுமையான உணர்வுக்கு இடம் உண்டு. ஆனால் இவ்வின்பங்கள் துய்க்கப்படாமலேயே நம் கண் முன் வீணாவது வேதனையே. ஒரு நல்ல புத்தகம் 100 நண்பர்களுக்கு சமம் என்பதற்கினங்க நம் சிந்தனைக்கு வேலை தரும் புத்தகங்கள் ஏராளம்.

    புத்தக வாசிப்பு என்பது ஒரு கடல். அது முழு உலகம், அதன் கதவுகள் என்றும் அகலத் திறந்தே உள்ளன. ஆனால் தயக்கம் பலரை தடுக்கிறது. இந்த சிறு தடையை கடந்து வந்தால் இந்த உலகின் பிரமாண்டங்களையும், ஆச்சர்யங்களையும் காணலாம். மனிதர்களின் மனதின் மிக நுணுக்கமான உணர்ச்சிகளை நாம் புரிந்து கொள்ளலாம்.

    ஒரு நல்ல நாவல், அதன் பக்கங்களில் ஆயிரமமாயிரம் சினிமாக்களை பொதிந்து வைத்துள்ளது. நேர்த்தியான அழகுணர்ச்சியை கொண்டுள்ளது. அக சிடுக்குகளை ஆராய்கிறது. இது சினிமாவில் 100 சதவீதம் சாத்தியமாவது அரிதே.

    சரி, புத்தம் படிக்கலாம் என்று முடிவெடித்துவிட்டோம், எங்கு?, எப்படி தொடங்குவது? என்று கேட்கிறீர்களா?, உலகம் உருண்டையாக இருப்பதால் அதற்கு தொடக்கப் புள்ளி என்று ஒன்று கிடையாது. அதே போலவே புத்தகங்களும்.

    "தேடல் உள்ள உயிர்களுக்கே தினமும் பசியிருக்கும் தேடல் என்பது உள்ளவரை வாழ்வில் ருசியிருக்கும்" என்ற துள்ளாத மனமும் துள்ளும் குட்டியின் பாடலுக்கு இணங்க தேடல், உங்களை உங்கள் வாழ்வையே, வாழ்வு குறித்த உங்கள் பார்வையையே, மாற்றக் கூடிய புத்தகத்துக்கு உங்களை இட்டுச் செல்லலாம்.

    இதற்கு ஏற்ற களம் புத்தக கண்காட்சி என கூறலாம். ஒவ்வொரு மாவட்டத்த்திலும் புத்தக கண்காட்சிகள் ஆண்டுதோறும் நடந்து தான் வருகின்றன.

    ஒரு சுற்றுலாத் தளத்துக்கு செல்வது போல, திரையரங்குக்கு செல்வது போல அங்கு சென்று, உங்கள் பார்வையை அலைபாய விடுங்கள். அப்படி என்னதான் இருக்கிறது? என்ற கேள்வியை இறுகப் பற்றிக் கொள்ளுங்கள். ஒரு அட்டைப்படம் உங்களை ஈர்க்கலாம், ஒரு எழுத்தாளரின் பெயர் உங்களை ஈர்க்கலாம், புத்தம் குறித்து அதன் பின்னட்டையில் கொடுக்கப்பட்டுள்ள அறிமுகம் உங்களை ஈர்க்கலாம்.

    பல நேரங்களில் உங்கள் உள்ளுணர்வு இதை படிக்கலாம் என்று நிச்சயம் சொல்லும். வாங்குங்கள். 199 ரூபாய் செலவில் ஒரு 2 மணிநேர சினிமாவை முடித்து வெளியே வந்தால் உங்களிடம் நிறைவு இருக்கலாம், ஆனால் உங்கள் கையில் ஒன்றும் இருக்காது. ஒரு புத்தகம் உங்கள் வாழ்நாள் முழுவதும் உங்களுடன் தான் இருக்கும். அதை மீண்டும் மீண்டும் மறு வாசிப்பு செய்யலாம், பிடித்தவர்களுக்கு பரிசளிக்கலாம். உங்களுக்கு புரிகிறது தானே. அவ்வளவு தான் விஷயம்.

    புத்தகத்தை வாங்கிவிட்டு படிக்க முடியாமல் போகிறதே என்று கேட்கிறீர்களா?, தயக்கத்தை தூக்கியெறியுங்கள். நிச்சயம் ஒரு நாள் நீங்கள் படித்தே தீர்வீர்கள். இந்த புத்தகம் வாங்கும் விஷயமே வேண்டாம் என நினைக்கிறீர்களா? இருக்கவே இருக்கிறது ஊர்தோறும் நூலகங்கள்.

    ஒரு நாள் சுற்றிப் பார்க்கவாவது செல்லுங்கள், நூலகத்தின் மாயத்தன்மையின் புத்தக வாசமும், அறிவுச் சூழலும் நிச்சயம் உங்களை மீண்டும் அதை நோக்கி இழுக்கும். மெதுவாக ஒரு புத்தகத்தை கையில் எடுத்து அலட்சியமாக பார்ப்பீர்கள்.பின்னர், சில பக்கங்களின் மீது உங்கள் கண்கள் அலைபாயும். ஒரு வரி, பத்தி உங்களை ஈர்க்கலாம். மேஜையில் வந்து அமர்வீர்கள். முதல் பக்கத்தை படிப்பீர்கள். அது உங்களை உள்ளே இழுக்கும். பின்னர் என்ன? நீங்கள் ஒரு முழுமையான வாசகன் ஆவீர்கள். அதில் உள்ள சுகத்தை உணர்வீர்கள். ரசனை வளரும். ரசனையோடு உங்கள் பார்வையும் விரிவடையும்.

    புதிதாக படிக்கும் வாசகர் என்றால் 100 பக்கங்களுக்குள் உள்ள புத்தகங்களை முதலில் தேர்ந்தெடுக்கலாம். முழுதாக படித்து முடிக்கும் அனுபவம் தான், அடுத்த புத்தகத்துக்கு உங்களை அழைத்து போகும். தினம் டிவி பார்ப்பது போல சில பக்கங்களை அசை போடுங்கள்.

    சரி விஷயத்துக்கு வருவோம். 2026 சென்னை புத்தக கண்காட்சி தொடங்கி விட்டது. இது தமிழ்நாட்டிலேயே மிகப்பெரிய புத்தக கண்காட்சி.

    பல புத்தக விரும்பிகளுக்கு இது சொர்க்கம். பதிப்பகம் வாரியாக அரங்குகள் அமைத்து 10 சதவீத தள்ளுபடி விலையில் விற்பனை நடைபெறும். இதே போல உங்கள் ஊரிலோ மாவட்டத்திலோ வருடந்தோறும் நடக்கும். பயன்படுத்திக் கொள்ளலாம்.

    இத்தனையும் பேசிவிட்டு தலைப்பிற்கு இணங்க நல்லதொரு தொடக்கத்திற்கு சில புத்தகங்களை குறிப்பிடாமல் போனால் நன்றாக இருக்காது. எனவே அவை கீழ்வருமாறு..

    ஒரு மனிதன் ஒரு வீடு ஒரு உலகம் (நாவல்) - ஜெயகாந்தன்

    தனது நாவல்களில் தனக்கு மிகவும் பிடித்தமானது என்று ஜெயகாந்தனாலும் அவரது நாவல்களில் ஆகச் சிறப்பானது என்று இலக்கிய விமர்சகர்களாலும் குறிப்பிடப்படுவது 'ஒரு மனிதன் ஒரு வீடு ஒரு உலகம்.'

    எந்த ஊர், பெற்றோர் யார், என்ன இனம், என்ன சாதி என்று எதுவும் தெரியாத, அது பற்றிக் கவலையும் கொள்ளாத ஒரு உலகப் பொது மனிதனைக் கதாபாத்திரமாக்கி, அவன் எதிர்கொள்ளும் அனுபவங்களின் மூலம் இந்த வாழ்க்கையின் போக்கு குறித்த புரிதலை உணர்த்த முனையும் நாவல் இது.

    ஒரு புளியமரத்தின் கதை (நாவல்) - சுந்தர ராமசாமி

    தமிழ் நவீன இலக்கிய உலகில் பலருக்கும் பிடித்தமான நாவல் சுந்தர ராமசாமி எழுதிய ஒரு புளியமரத்தின் கதை. 1966-ல் முதல் பதிப்பு வெளிவந்த காலத்திலிருந்து வாசகர்கள் பலரால் தொடர்ச்சியாக வாசிக்கப்படும் நாவல். சுதந்திரத்திற்கு முன்னால் தொடங்கி, சுதந்திரத்திற்குப் பிற்பாடு வரையிலான ஒரு கால கட்டத்தை புளியமரத்தோடு பல நிகழ்வுகைளைத் தொகுத்து நமக்குக் காட்டும் நாவல் இது.

    கடலுக்கு அப்பால் – ப.சிங்காரம்

    இது இரண்டாம் உலகப் போரின் பின்னணியில், தமிழகத்திலிருந்து பர்மா, இந்தோனேஷியா, மலேசியா ஆகிய தென் கிழக்கு ஆசிய நாடுகளுக்குப் பிழைப்பு தேடிச் சென்ற தமிழர்களின் வாழ்க்கை, காதல், பிரிவு மற்றும் துயரங்களை சித்தரிக்கிறது.

    எழுத்தாளர் சி.மோகன் கூற்றுப்படி, ப. சிங்காரம், நவீன தமிழ் இலக்கிய எழுத்தாளர்களில் ஓர் அபூர்வ ஆளுமை. கதை மாந்தர்களின் மனமொழி தமிழில் இவரளவுக்கு எவரிடமும் இவ்வளவு அநாயசமாகக் கூடி வரவில்லை. மனக்குகை வாசல்கள் தாமாகவே திறந்து கொண்டு விட்டிருக்கின்றன. உணர்வுகளின் ரகசிய முகமூடிகள் கழன்று விழுந்து, உள்ளுக்குள் நடப்பதை அப்பட்டமாகக் காட்டுகின்றன. கடலுக்கு அப்பால் நாவலில் கடவுளின் மலர்ந்த சிரிப்பும் உள்ளுறைந்திருக்கின்றது.

    புயலிலே ஒரு தோணி (நாவல்) - ப.சிங்காரம்

    கடலுக்கு அப்பால் நாவலின் இன்னும் ஆழமான தொடர்ச்சி புயலிலே ஒரு தோணி. பிறந்த இடத்தில் தொலைத்த தங்களின் வாழ்க்கையை அந்நிய நிலத்தில் மீட்டெடுக்கப் போராடும் மனிதர்களை இதில் பார்க்க முடியும். அவர்களின் அன்றாட வாழ்க்கை ஒரு சாகசம் போலத் தெரியும்.

    நிச்சயமற்ற வாழ்க்கையில் நிச்சமுள்ள ஒரு விஷயத்தைத் தேடிச் செல்லும் புலம்பெயர்ந்தவர்களின் வாழ்க்கையை இந்த நாவல் நம் கண்முன்னால் கொண்டு வருகிறது. 'மனதை இழக்காதவரை நாம் எதையும் இழப்பதில்லை' - புயலிலே ஒரு தோணி நாவலின் கடைசி வரி இது.

    கோபல்ல கிராமம் (நாவல்) - கி.ராஜநாராயணன்

    கரிசல் நிலத்தை, கரிசல் மக்களின் வாழ்வை, கரிசல் மண்ணின் வாசனையோடு பதிவு செய்யும் நாவல் இது. கரிசல் காட்டுக் கிராம மக்களின் பேச்சு வழக்கையும் சொலவடைகளையும் சரளமாகக் கையாண்டு வாய்மொழிக் கதை மரபில், புதிய வடிவத்தில் இந்த நாவலை உருவாக்கியுள்ளார் கி. ராஜ நாராயணன்.

    எரியும் பனிக்காடு – மூலம் - Red Tea - பி.எச். டேனியல்

    பாலாவின் "பரதேசி" திரைப்படத்தின் மூலவடிவமாக அமைந்த நாவல் இது. ஆங்கிலேயர்கள் ஆட்சி காலத்தில் கங்காணி முறையினை பயன்படுத்தி எப்படி சமூகத்தில் தாழ்த்தப்பட்ட மக்களை அடிமைகளாக ஆனைமலைக் காட்டில், தேயிலை தோட்டங்களில் எப்படியாக சிறைபடுத்தினார்கள் என்பதை சித்தரிக்கும் வரலாற்றுப் புதினம்.

    தேயிலைத் தோட்டங்களில் பணிபுரிந்தவர்களின் துன்பதுயரங்களை கண்முன் நிறுத்துகிறது. சாதிய, பாலியல், மற்றும் உழைப்பு சுரண்டல்களால் அன்றைய காலங்களில் மக்களின் வாழ்வு எப்படி சீர்குலைந்தது என்பதையும் அறிந்து கொள்ள முடியும்.

    ஏழு தலைமுறைகள் (நாவல்) - அலெக்ஸ் ஹேலி

    இது 18-ஆம் நூற்றாண்டில் கானாவில் இருந்து அமெரிக்காவிற்கு அடிமையாகக் கொண்டுவரப்பட்ட ஒரு கறுப்பின இளைஞனின் குடும்ப வரலாறு, அவர்களின் வேர்கள் மற்றும் அடிமைத்தனத்தின் கொடூரமான பாதிப்புகளை ஏழு தலைமுறைகளாக விவரிக்கும் ஆழமான, வேதனை நிறைந்த கதை.

    1852 ஆம் ஆண்டில் வெளிவந்த 'அங்கிள் டாம்ஸ் கேபின்' நாவலுக்குப் பிறகு கடந்த நூற்றிருபது வருட நீண்ட காலத்தில் உலகத்தையே குலுக்கிய இது போன்ற புத்தகம் வேறெதுவுமே வந்ததில்லை.

    Next Story
    ×