என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சிறப்பு கட்டுரைகள்"

    • பொதுவாக சிகிச்சை என்பது இரண்டு வகையாக பிரிக்கப்படுகிறது.
    • மருத்துவரின் ஆலோசனையுடன் உபயோகப்படுத்தி மூக்கையும், உடலையும் ஆரோக்கியமாக பேணி பாதுகாப்போம்.

    ஐம்புலன்கள் என்று அழைக்கப்படும் வாய், மெய், கண், காது, மூக்கு என்ற 5 உறுப்புகளும் அமைந்திருக்கும் இடம் தலை. இதில் மெய் எனப்படும் தோல் மட்டும் உடலெங்கும் பரவியிருக்கும், மீதமுள்ள 4 புலன்களும் தலையில் மட்டும் அமைந்திருக்கும். இதுவே நம் உடலின் அமைப்பு. அதன் காரணமாகவே தலை ஒரு மனிதனுக்கு மிக முக்கியமான உறுப்பு. அதை பேணிக்காக்கவேண்டும். எண் சாண் உடலுக்கு சிரசே பிரதானம் என்ற சொல்லாடல் மூலம் இதனை அறியலாம்.

    தலையில் உள்ள 5 புலன்களில் மிக முக்கியமானது கண். இரண்டாவதாக மூக்கு. ஏன் என்றால் ஒரு மனிதன் உணவில்லாமல் சில நாட்கள் வாழலாம், ஆனால் பிராணவாயு இல்லாமல் சில நிமிடங்கள் கூட வாழமுடியாது. அந்த அளவுக்கு முக்கியமான பிராணவாயு மூக்கு வழியாகத்தான் செல்ல முடியும். ஏன் வாய்வழியாக சுவாசித்தால் உடலுக்கு போகாதா என்று கேட்கலாம், ஆனால் மூக்கு வழியாக சுவாசிப்பதே சாலச் சிறந்தது. ஏன் எனில் மூக்கில் வாயுவை சுத்திகரிப்பதற்கான செயல்பாடுகள் நடைபெறுகிறது. மூக்கு துவாரத்தில் உள்ள முடிகள் மற்றும் கோழைப்படலம் காற்றிலுள்ள தூசிகளை சுத்தம் செய்கின்றன. இதனால் மூக்கு வழியாக சுவாசிப்பதே சாலச்சிறந்தது. அதோடு மட்டுமல்லாமல் மூக்குதான் தலையின் துவாரம் என்கிறது ஆயுர்வேதம். அதாவது வாய் என்பது உடலின் துவாரம். தலையை ஒரு மருந்து சென்றடைய வேண்டுமெனில் அதற்கு மூக்குதான் துவாரம். மூக்கு சுவாசிப்பதற்கு மட்டுமா, மணத்தை அறிய முக்கிய பங்கு ஆற்றுகிறது அல்லவா... நுகர்தல் என்ற செயல்பாட்டிற்கு காரணமாக அமைகிறது.

    ஒரு மனிதனின் இயல்பான மூக்கின் அமைப்பை மாற்றினால் முழுவதுமாக முக அமைப்பே மாறிவிடும். ஆக இவ்வளவு சிறப்பு வாய்ந்த, மூக்கை எவ்வாறு பராமரிப்பது என்பது பற்றி பார்ப்போம்.

    நலமாய் வாழ ஆரோக்கியத்திட்டத்தில் தினமும் கடைபிடிக்க வேண்டிய நடைமுறைகளில் மூக்கும் இடம்பெறுகிறது. ஆம் மூக்கில் எண்ணையிடும்படி ஆயுர்வேதம் அறிந்திருக்கிறது. அதற்கு நஸ்யம் சிகிச்சை என்று பெயர். ஒரு விஷயத்தை சற்று கவனித்தால் ஆரோக்கியமாக வாழ தினசரி கடைபிடிக்கவேண்டியவை என்பது முகத்திலுள்ள 5 புலன்களை கவனிப்பாகவே இருக்கின்றது. ஆம் வாயிலுள்ள பல் பராமரிப்பு, வாய் கொப்பளித்தல், மூக்கை பராமரிக்க நஸ்ய சிகிச்சை, கண்ணை பராமரிக்க கண் மை, காதுகளை பராமரிக்க காதில் எண்ணெய் தேய்த்தல், காதில் மருந்து செலுத்துதல், முகத்தில் உள்ள தோலை பராமரிக்க எண்ணெய் தேய்த்தல் என்று நீள்கிறது.

    ஏனெனில் இதன் மூலம் கிருமித்தொற்று தாக்க வழிவுள்ளது. எனவே இவற்றை ஆரோக்கியமாக பராமரிக்க அதிக அறிவுரைகளை ஆயுர்வேதம் வழங்கியுள்ளது. அவ்வாறு கூறப்பட்ட சிகிச்சை தான் நஸ்யம் என்பது.


    Dr. ரா.பாலமுருகன்

    அரசு ஆயுர்வேத மருத்துவர்

    90257 44149

    பொதுவாக சிகிச்சை என்பது இரண்டு வகையாக பிரிக்கப்படுகிறது. ஒன்று அதிகரித்துயிருக்கின்ற வாத, பித்த, கப தோஷங்களை சமப்படுத்துதல், மற்றொன்று அதிகரித்துயிருக்கின்ற தோஷங்களை உடலிலிருந்து வெளியேற்றி உடலை சுத்தப்படுத்துதல். ஆயுர்வேத மருத்துவ சிகிச்சையானது உடலை சுத்தப்படுத்தவே அதிக கவனம் செலுத்துகிறது. அவ்வாறு உடலை சுத்தப்படுத்த 5 வகை சிகிச்சைகள் கூறப்பட்டுள்ளன. அவற்றில் நஸ்யம் என்ற சிகிச்சையும் ஒன்று, இந்த சிகிச்சை தான் மிக எளிதானது. அதிக செலவில்லாதது. வீட்டிலேயே அனைவரும் செய்து கொள்ளலாம்.

    இந்த சிகிச்சை உடலை சுத்தம் செய்வதோடு மட்டும் இல்லை. நோய் வராமல் தடுக்க தினமும் அனைவரும் செய்துகொள்ளலாம். அதுவே இந்த சிகிச்சையின் விசேஷம்.

    சரி இந்த சிகிச்சையை தினமும் எடுத்துக்கொண்டால் அப்படி என்ன விசேஷம் நிகழப்போகிறது என்றுக் கேட்டால், அதற்கு மிக நீண்ட பதிலுரையை ஆயுர்வேதம் வழங்குகிறது. அது யாதெனில் கண், காது, மூக்கு போன்ற புலன்களில் கேடு வருவதில்லை. முடி தாடி மீசைகளில் எந்த தொந்தரவும் ஏற்படுவதில்லை. முடி உதிராது. நன்றாக வளரும். கழுத்து, தோள் பட்டை வலி ஏற்படாது. முக வாதம் ஏற்படாது. சைனஸ், ஜலதோஷம், தலைவலி, ஒன்றை தலை வலி ஏற்படாது. தலையிலுள்ள நரம்புகள், தமனிகள், சிரைகள் சந்திகள் நன்றாக இயங்கும். பல், தாடை தொண்டை போன்ற இடங்களில் அவ்வளவு எளிதாக நோய் உண்டாகாது, முக வசீகரம் ஏற்படும், நல்ல தூக்கம் ஏற்படும், கழுத்துக்கு மேலே உள்ள உறுப்புகளில் வயது முதிர்வு தென்படாது. சில வியாதிகளில் கழுத்து கீழே உள்ள உறுப்புகளில் கூட நஸ்யம் சிகிச்சை பயனுள்ளதாக இருக்கும்.

    சரி இதனை எவ்வாறு மேற்கொள்ளுவது. இவற்றிக்கென ஒரு வரையறை ஆயுர்வேதம் மிக தெளிவாக வழங்குகிறது. அதாவது நஸ்யம் செய்வதற்கு முன் என்ன செய்ய வேண்டும் என்பதை குறித்து எல்லாம் ஓர் ஆயுர்வேத மருத்துவர் நன்கு அறிவுறுத்துவார். எனவே அருகிலுள்ள ஆயுர்வேத மருத்துவரை அணுகினாலே போதும். நஸ்ய சிகிச்சை குறித்து விவரிப்பார்.

    இந்த சிகிச்சைக்கு அனு தைலம் என்ற மருத்து பயன்படுத்தப்படுகிறது. இதனை மருத்துவரின் ஆலோசனையுடன் உபயோகப்படுத்தி மூக்கையும், உடலையும் ஆரோக்கியமாக பேணி பாதுகாப்போம்.

    • திங்கட்கிழமைகளில் அதிக மாரடைப்பு ஏற்படுவதாக ஆய்வுகள் கூறுகின்றன.
    • உடலின் 99 சதவீதம் கால்சியம் பற்களில்தான் இருக்கின்றது.

    நீங்கள் வெட்கப்படும் போது கன்னம் மட்டுமல்ல வயிறும் சிவக்கின்றது.

    * உடலில் 1 சதவீதம் தண்ணீர் குறைந்தாலே தண்ணி தாகம் ஏற்படும். 5 சதவீதத்துக்கு மேல் உடலில் நீர் குறைந்தால் மயக்கம் ஏற்படும். 10 சதவீதம் நீர் வற்றினால் உயிர் இழப்பே ஏற்படும்.

    * சுமார் 700 என்சைம்களாவது உடலில் சுறுசுறுப்பாக செயல்படுகின்றன.

    * கண் வெண் விழிபடலத்துக்கு மட்டும் ரத்த ஓட்டம் இல்லை. இதற்குத் தேவையான ஆக்சிஜனை இது காற்றில் இருந்து பெறுகின்றது.

    * பிறந்த குழந்தையால் சுமார் 6 மாதம் வரை மூச்சு விட்டுக் கொண்டு விழுங்குவதனை சுமார் 6 மாதம் வரை செய்ய முடியும்.

    * மண்டைக்கு மட்டும் 29 வித்தியாசமான எலும்புகள் உள்ளன.

    * 2 மற்றும் 3 பகுதி மக்கள் தலையினை வலது பக்கம் சற்று சாய்ப்பார்கள்.

    * சுமார் 7 சதவீதம் மக்கள் இடது கை பழக்கம் உடையவர்கள்.

    * உடலின் 99 சதவீதம் கால்சியம் பற்களில்தான் இருக்கின்றது.

    * 100 முதல் 200 வைரஸ் கிருமிகள் சளி பிடிக்க காரணம் ஆகின்றன.

    * நாக்குதான் உடலின் வலுவான தசை.

    * ஒரு வளர்ந்த மனிதன் மூச்சை உறிஞ்சி உள்ளிழுத்து 23 ஆயிரம் முறை வெளி விடுகிறான். இது ஒருநாள் கணக்கு.

    * கண்ணை திறந்து கொண்டு தும்ம முடியாது.

    * திங்கட்கிழமைகளில் அதிக மாரடைப்பு ஏற்படுவதாக ஆய்வுகள் கூறுகின்றன.

    * மனித மூளையின் ஞாபகத்திறன் 4 டெராபைட்ஸ்-ஹார்ட் டிசைன்ஸ் என்கின்றனர்.

    * நரம்புகளின் உணர்வு, செய்திகள் 274 கி.மீ. / ஒரு மணி என்று ஆய்வு கூறுகின்றது.

    * மனித கருவின் 3 மாதத்திலேயே விரல் பதிவுகள் ஏற்படுகின்றன.

    * 90 சதவீத மக்கள் தங்கள் கனவினை மறுநாள் மறந்து விடுகின்றார்கள்.

    * தலை மூலமாகவே உடலின் 40 சதவீத உஷ்ணம் வெளியேறுகின்றது.

    * நமது சருமம் நம் வாழ்நாளில் 1000 முறை புதுப்பிக்கப்படுகின்றது.

    * நம் உடலின் ரத்த குழாய்களை நீட்டினால் 1,00,000 கி.மீ. ஆகும்.

    * மனிதர்கள் மட்டுமே முதுகின் மேல் படுத்து தூங்குகின்றனர்.

    * சுமார் 7 நிமிடத்தில் நல்ல தூக்கம் வருவது ஆரோக்கியத்தின் அறிகுறி.

    கைரேகை: விரல்களில் உள்ள கோடுகள்- தெய்வ ரகசியம்.

    * வயிற்றில் கரு 4 மாதம் இருக்கும் போதே இந்த கோடுகள் உருவாகின்றன. இந்த அடையாளம் பதிக்கப்படுகின்றது.

    * இவை நமது உடலின் டி.என்.ஏ. கட்டளைப்படி உருவாகின்றது. இவை அக்குழந்தையின் பெற்றோர்கள், மூதாதையர் ரேகைளை ஒத்திருப்பதில்லை.

    * ஏதோ கண்ணுக்குத் தெரியாத (ரேடியோ) காந்த அலைகள் சக்தியால் உருவாக்கப்படுகின்றதோ? என்று தோன்றும். மனித சக்தியினை தாண்டிய செயலாகத் தெரியும்.

    * ஒவ்வொரு தனி மனிதனின் வரிகளும் உலகில் உள்ள ஒருவருடனும் ஒத்து இருக்காது.

    * இதனை வித்தியாசமான தனித்தன்மை வாய்ந்த கலைஞன் தனித்தனியான ஒற்றை உருவத்தினை உருவாக்கும் வல்லமை பெற்றுள்ளான்.

    * மிகச் சிறந்த நுட்பம் கொண்ட கம்ப்யூட்டரால் கூட இவ்வாறு உருவாக்க முடியாது. எனவே இது மனித சக்திக்கு அப்பாற்பட்டது.

    * இது இறைவனின் மொழி.

    * விபத்தில் கை விரல்கள் பாதிக்கப்பட்டாலோ, அல்லது தீ விபத்தில் பாதிக்கப்பட்டாலோ காயம் ஆறி விரல் பழைய நிலை அடையும் போது அதே வரிகள் ஒரு புள்ளி மாற்றம் இல்லாமல் அப்படியேத் தோன்றும்.

    * எனவே இது வெறும் சருமத்தோடு சம்பந்தப்பட்டது அல்ல. நம் ஆன்மாவோடு சம்பந்தப்பட்டது.

    * உலகின் வேறு எந்த பகுதிக்கும் இப்படி மறு உருவாக்கம் தர இயலாது.

    * விஞ்ஞானம் இன்று வரை இதற்கு விளக்கம் முழுமையாய் அளிக்க முடியவில்லை.

    இதன் சங்கு, சக்கர சுற்றுகள், வளைவுகள் இவைப் பிரத்யேக மொழி. படைத்தவனால் மட்டுமே புரிந்து கொள்ள முடியும்.

    * பிரபஞ்ச விதி, நாம் செய்த கர்ம வினைகளை கூறும் மொழி.

    * எந்த முறையாலும் ஏ.ஐ. உள்பட இந்த வரிகளைப் போல் உருவாக்க முடிவதில்லை என்கின்றனர்.

    * இது நமது விதியின் தெய்வீக ஸ்கிரிப்ட் என்கின்றனர்.

    * மேலே ஒருவன் நம்மை கவனிக்கின்றான், உருவாக்குகின்றான், நடத்துகின்றான்.

    * இதனை 'பிரம்மா' என்று குறிப்பிடுகின்றனர். மனிதன் ரத்தம், சதையால் ஆன பொம்மை அல்ல. பரந்து விரிந்தவன். ஆத்ம பலம் கொண்டவன். எழுந்து இயங்குங்கள். நீங்கள் சாதாரணமானவர் அல்ல.

    இக்கட்டுரையினை நான் படித்து பகிர்ந்து கொள்கிறேன். நம்பித்தான் ஆக வேண்டும் என்ற கட்டாயம் இல்லை. தெரிந்து கொள்ளுங்கள். அவ்வளவே.


    கமலி ஸ்ரீபால்

    நீங்கள் ' ஏமாந்த சோணகிரி' இல்லை என மற்றவர்கள் ஜாக்கிரதையாய் இருக்க வேண்டுமா?

    * மற்றவர்களின் எதிரில் இருப்பவரின் கண்களைப் பார்த்து பேசுங்கள். இது உங்களின் மனத் தெளிவினை, சுய கட்டுப்பாட்டினை, தன்னம்பிக்கையினை வெளிப்படுத்தும். எதிரில் இருப்பவர் எவ்வளவு பெரிய ஆளாக இருந்தாலும் கண்ணைப் பார்த்து பேசுங்கள். இது மரியாதைக் குறைவு அவருக்கு ஏற்படுத்தாது. மாறாக உங்கள் சுய மரியாதையினைக் கூட்டும். உங்கள் மன வலுவினைக் காட்டும்.

    * எதற்கும் உடனடி யாக, நொடிப் பொழுதில் ரியாக்ஷன் வேண்டாம். உடனடியாக ஓடுவது, எதிர்ப்பது, தாவி கொடுப்பது போன்றவை ஒருவரது பதட்டத்தினையே காண்பிக்கும். எதற்கும் சில நொடிகள் அவகாசம் கொடுங்கள். மனம் அமைதி பெறும். தெளிவு பெறும். வார்த்தைகள் கட்டுப்பாட்டில் இருக்கும். உணர்ச்சி பூர்வ செயல்கள் வராது. உணர்வு பூர்வ செயல்களே இருக்கும்.

    * நமது பலம் அடுத்தவருக்கு தெரிகின்றதோ இல்லையோ நமது பலவீனம் பிறருக்குத் தெரியக் கூடாது. தெரிந்தால் 'ஏமாந்த சோணகிரி" ஆக்கி விடுவர். பயம், பாதுகாப்பு உணர்வின்மை, அதிகம் யோசித்தல், சுய சந்தேகம், சுய நம்பிக்கை இன்மை பிறர் முன்னே நம்மை தாழ்த்தி விடும். யாரும் இரக்கம் கொள்ள மாட்டார்கள். மாறாக உங்களை நன்கு பயன்படுத்தி தலையில் மிளகாய் அரைத்து விடுவர்.

    * எப்போதும் அமைதியாய் இருக்க வேண்டும். வாழ்க்கையில் புயலே வீசினாலும் அமைதி அவசியப்படுகின்றது. பேசுவது எளிது, முடியுமா? எனலாம். முடியத்தான் வேண்டும். உங்கள் அமைதி மற்றவரை கதி கலங்கச் செய்து விடும். குழப்பத்தில், அமைதி நம்மை தவறு செய்ய விடாது தடுக்கும். எதனையும் நம்மால் கையாள முடியும்.

    * சுத்தமாக, நேர்த்தியாக உடை உடுத்துங்கள். நாம் பேசுவதற்கு முன்னால் நம் உடை பேசும். பேச்சு எடுபடும். நாம் சித்தர் அல்ல. ஒரு அழுக்கு துணி சுத்தி இருந்தாலும் உடலில் கண்களில் இருந்து சித்தர்கள் ஒளி வீசுவார்கள். நறுமணம் ஊரை கூட்டும். சாதாரண மனிதனுக்கோ அன்றாடம் குளித்தாலே அடுத்த வேளை வியர்வை நாற்றம் நாறும். ஆக சுத்தமான குளியல், நேர்த்தியான ஆடை இவை நம்மைப் பற்றி அதிகம் பேசும். உங்கள் பேச்சை மக்கள் காது கொடுத்து கேட்பார்கள்.

    ஒலி பெருக்கி போல் சத்தம் போட்டு பேசாதீர்கள். வேகமாக பேசாதீர்கள். நிதானமாய், மெதுவாய் பேசும் பொழுதே அடுத்தவர் உங்கள் பேச்சை கூர்ந்து கவனிப்பார். சிங்கம் போல் கர்ஜிப்பது வீரம். அது சாதாரண பேச்சில் இடம் பெறாது. சத்தமான பேச்சு அடுத்தவருக்கு தலைவலி ஏற்படுத்தும். அமைதியான பேச்சு அதிக முக்கியத்துவம் பெறும்.

    வளைந்து, நெளிந்து, மடங்கி, கூன் போட்டு மனித வடிவே இல்லாத தோற்றத்தில் நிற்காதீர்கள், நடக்காதீர்கள், இவை உங்களுக்கு 'பவர்' இல்லாதது போல் காட்டும். நிமிர்ந்த நன்னடை அமைதியான ஆனால் 'பவர்' நிறைந்தவராகக் காட்டும்.

    இவங்க என்ன நினைப்பாங்க, அவங்க என்ன நினைப்பாங்க என்று ரொம்ப யோசிக்காதீங்க. அளவு கடந்த யோசனை எதனையும் செய்ய விடாது. நீங்கள் நன்கு ஆராய்ந்து மனதிற்கு சரி என்று பட்டதை தைரியமாய் செய்யுங்கள்.

    நம்மை மீறிய சில செயல்கள் இருக்கும். புயல், மழை இவை ஒவ்வொருவர் வாழ்க்கையிலும் கூட நிகழலாம். நம்மால் அனைத்தையும் மாற்ற முடியாது. நிகழ்வுகளை ஏற்று கடந்து செல்லத்தான் வேண்டும். அதை எதிர்ப்பது என்பது தெரிந்தே சுவரில் முட்டிக் கொள்வது போல்தான்.

    வாழ்க்கையை வாழுங்கள். உங்கள் தனித்தன்மை இருக்கட்டும்.

    புன்னகையுங்கள். கண்களும் புன்னகைக்கட்டும். அது மனதார இருக்கும். அடுத்தவர்களுக்கு அச்சம் இன்றி இருக்கும். உறுதியாக இருங்கள். இலக்கை அடைய வேண்டும். வெற்றி பெற வேண்டும் என்ற உறுதியோடு இருங்கள். மனம் இரும்பு போல் உறுதியாக இருக்க வேண்டும்.

    எதற்கெடுத்தாலும் பிறரின் அனுமதி தேவையில்லை. இப்படியொரு பழக்கம் இருந்தால் நீங்களாகவே அடிமை ஆகி விடுவீர்கள்.

    சண்டை போடத்தெரிய வேண்டும். விருப்பமில்லாததற்கு, முடியாத செயலுக்கு 'நோ' என்பதனை உறுதியாக சொல்ல வேண்டும். மறுப்பதற்கு அடிதடி, குத்து சண்டை தேவையில்லை. அமைதியே மிகப்பெரிய ஆயுதம். ஆயினும் தேவைப்படும் பொழுது கையுறை, ஷூ அணிந்து எதிர்ப்பினைக் காட்டி சாதிக்கவும் தெரிய வேண்டும்.

    இப்படியெல்லாம் இருந்தால் எல்லோரும் உங்களை "ஏமாந்த சோணகிரி" என்று சொல்ல மாட்டார்கள். கெட்டிக்காரன் என்பார்கள்.

    • பொதுவாக பெண்களுக்கு சிறுநீர் கசிவு ஏற்படுவதற்கு பல காரணங்கள் உள்ளன.
    • பொதுவாகவே வயது கூடும்போது எல்லா தசைகளுமே பலவீனமாகும்.

    பெண்கள் அதிகமாக எதிர்நோக்கும் உடல்நல பிரச்சனைகளை பற்றி பார்த்துக்கொண்டு இருக்கிறோம். பெண்களுக்கு 40 வயதாகும் போது ஏற்படும் முக்கியமான பிரச்சனைகளில் ஒன்று சிறுநீர் கசிவு பிரச்சனையாகும். எங்களிடம் 40 வயதில் சிகிச்சைக்கு வரும் நிறைய பெண்கள் இதுபற்றி சொல்வது உண்டு.

    'டாக்டர் என்னால் சிறுநீரை அடக்கவே முடியவில்லை. கழிவறைக்கு செல்லும் முன்பே அவசரமாக கசிந்து விடுகிறது. மேலும் பல நேரங்களில் அடிக்கடி சிறுநீர் போக வேண்டும் என்பது போல் இருக்கிறது. சில நேரங்களில் சிறுநீர் கழித்து முடிந்தவுடன் மறுபடியும் மறுபடியும் சிறுநீர் வருவது போன்ற உணர்வு ஏற்படுகிறது.

    எப்போதுமே சிறுநீர் பை நிரம்பி இருப்பது போன்ற உணர்வு தென்படுகிறது. சிறுநீர் கசிவதை கட்டுப்படுத்த முடியவில்லை. இருமல், தும்மல் வரும் போதும், குனிந்து ஏதாவது பொருளை எடுக்கும் போதும் என்னை அறியாமல் சிறுநீர் கசிந்து விடுகிறது. சில நேரங்களில் சிரிக்கும் போது கூட சிறுநீர் கசிவு ஏற்படுகிறது' என்று கூறுகிறார்கள்.

    பெண்களுக்கு சிறுநீர் கசிவு எதனால் ஏற்படுகிறது?

    பெண்களுக்கு ஏற்படும் சிறுநீர் கசிவு பிரச்சனைகளை யூரினரி இன்காண்டினன்ஸ் என்று ஆங்கிலத்தில் சொல்வோம். இது கட்டுப்பாடு இழந்த சிறுநீர்ப்போக்கு அல்லது தன்னிச்சையான சிறுநீர் கசிவு என்று பொருள்படும். அதாவது சிறுநீர் உங்களை அறியாமலேயே கசியக்கூடிய சில விஷயங்கள் ஆகும். சிறுநீரை கட்டுப்படுத்த முடியாத நிலை ஏற்படும்.

    இந்த யூரினரி இன்காண்டினன்ஸ் என்பது 40 வயதுக்கு மேல் நிறைய பெண்கள் எதிர்நோக்குகிற ஒரு முக்கியமான விஷயம் ஆகும். குறிப்பாக 48 வயது, 49 வயதாகும் போது பெண்கள் எல்லோருக்கும் மெனோபாஸ் வந்து விடும். மெனோபாஸ் வந்த பிறகு பெண்கள் எதிர்நோக்கும் முக்கியமான பிரச்சனை இதுவாகும்.

    பெண்களுக்கு இந்த பிரச்சனை ஏன் ஏற்படுகிறது? இதற்கான காரணங்கள் என்ன? இதற்கான தீர்வுகள் என்ன என்பதை பற்றி பார்க்கலாம்.

    பொதுவாக பெண்களுக்கு சிறுநீர் கசிவு ஏற்படுவதற்கு பல காரணங்கள் உள்ளன. அதில் முதல் முக்கியமான காரணம் ஹார்மோன்கள் ஆகும். ஏனென்றால் சிறுநீர்ப்பையின் பிரதான ஆதரவு பகுதியே பெல்விக் டயப்ரம் எனப்படும் இடுப்பு தள தசை தான். இடுப்பு தள தசை என்பது இடுப்பை சுற்றியுள்ள தசைகளின் அடுக்காகும். சிறுநீர்ப்பையில் இருந்து சிறுநீரை வெளியே கொண்டு போகிற குழாய், இந்த இடுப்பு தள தசையின் ஆதரவுடன் தான் இயங்கும்.

    சிறுநீரை குழாய் வழியாக வெளியே கொண்டு செல்வதில் இந்த இடுப்பு தள தசை முக்கிய பங்கு வகிக்கிறது. இந்த தசைதான் சிறுநீரை கட்டுப்படுத்தும். சிறுநீர் செல்லும் குழாயை கட்டுப்படுத்தி அதனை இறுக்கி பிடித்திருக்கும். மேலும் அதில் இருக்கிற ஒரு வேல்யூலர் மெக்கானிசத்துக்கு இந்த இடுப்பு தள தசைதான் மிக முக்கியமான ஒன்றாகும்.

    சிறுநீரை கட்டுப்படுத்தும் இடுப்பு தள தசை பலவீனம் அடைதல்:

    பல நேரங்களில் இந்த தசைகள் பலகீனமாகி, தளர்வாகி தானாக திறக்கும் போது இந்த பெண்களுக்கு சிறுநீர் கசிவு பிரச்சனை ஏற்படலாம். இந்த இடுப்பு தளதசை எப்போதெல்லாம் தளர்வாகும் என்றால், முக்கியமாக பெரி மெனோபாஸ், மெனோபாஸ் காலகட்டத்தில் ஈஸ்ட்ரோஜன் ஹார்மோன் குறைவாகும் போது இந்த இடுப்பு தள தசை பலவீனம் அடைகிறது. இந்த பலவீனம் தான் பெண்களுக்கு சிறுநீர் கசிவு ஏற்படுவதற்கு ஒரு முக்கியமான காரணம் ஆகும்.


    டாக்டர் ஜெயராணி காமராஜ்

    குழந்தையின்மை சிகிச்சை நிபுணர்

    செல்: 72999 74701

    பொதுவாகவே வயது கூடும்போது எல்லா தசைகளுமே பலவீனமாகும். குறிப்பாக 40 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தசைகள் பலவீனமாக தொடங்கும். நமது வீடுகளில் உள்ள தாத்தா, பாட்டி போன்ற வயது முதிர்ந்தவர்களை பார்க்கும்போது அவர்களின் தசைகள் மிகவும் பலவீனமாக தொளதொளவென காணப்படும். அந்த தசைகளின் அடர்த்தி குறைவாகும். இதற்கு பல காரணங்கள் உள்ளன.

    ஒருவருக்கு வயதாகும் போது ஏற்படுகிற செல்களின் மாற்றங்கள், உடல் ரீதியாக ஏற்படுகிற சில ஹார்மோன் மாற்றங்கள் மற்றும் அவர்களுடைய ஸ்டெம்செல்களின் வலிமையில் தளர்வு ஏற்படுதல் ஆகியவை தசைகள் பலவீனமாவதற்கு ஒரு காரணம். இதேபோல அந்த இடுப்பு தள தசை பலவீனம் ஆகி அதன் செயல்பாடு குறைவாவதும் சிறுநீர் கசிய ஒரு காரணம். மேலும் வயதாகும்போது அந்த சிறுநீர்ப்பையின் தசை சுவர்களே பலவீனமாகும். வழக்கமாக ஒரு லிட்டர் சிறுநீரை கட்டுப்படுத்தி வைத்திருக்கும் சிறுநீர்ப்பையானது, அதன் தசைகள் பலவீனம் அடைவதால் 300 மில்லி, 400 மில்லி சிறுநீரை கூட அதனால் கட்டுப்படுத்தி வைத்திருக்க முடியாது. அதற்குள்ளேயே அவர்களுக்கு ஒரு அவசரநிலை வந்துவிடும். இதனால் அதை கட்டுப்படுத்தி வைத்திருக்கும் தன்மை குறைவாகும்.

    சிறுநீர்ப்பை தசைகளின் வலுவில் மாற்றம் ஏற்படுதல்:

    பல நேரங்களில் சிறுநீர்ப்பை தசைகளின் வலுவில் மாற்றம் ஏற்பட்டு முறையற்ற வகையில் கட்டுப்பாட்டை இழக்கும். அதன் காரணமாக சிறுநீர்ப்பையின் கீழே உள்ள வால்வு திறந்து இடுப்பு தள தசையில் தளர்வு ஏற்படுவதால் சிறுநீர் கசிவு ஏற்படும்.

    வயதாகும்போது சிறுநீர்ப்பையில் உள்ள தசைகளின் வலிமை குறைவாவதன் மூலம் சுருக்கம் சரியாக ஏற்படாததால் சிறுநீர்ப்பையில் சிறுநீர் முழுமையாக காலி ஆகாது. ஒருவேளை முழுமையாக காலியாகாமல் கொஞ்சம் குறைவாக சிறுநீர் இருக்கும் போது அது ஒருவித எரிச்சல் தன்மையை கொடுத்து அந்த பெண்களுக்கு சிறுநீரை கட்டுப்படுத்துவதில் பிரச்சனைகள் வரும். இவைதான் முக்கியமான காரணங்கள் ஆகும்.

    இவை தவிர வயதாகும்போது நரம்பு தளர்ச்சி ஏற்பட்டு நரம்புகள் சேதம் அடையும். சில நேரங்களில் நீரிழிவு வரலாம், ரத்த அழுத்தம் ஏற்படலாம். இதனால் ஏற்படுகிற நரம்பு தளர்வுகளும் இந்த இடுப்பு தள தசைக்கும், சிறுநீர்ப்பைக்கு போகிற நரம்புகளை பாதித்து, அதனால் இந்த நரம்புகள் பலவீனமாகி சிறுநீர் கசிவு ஏற்படலாம்.

    இந்த மாதிரியான சிறுநீர் கசிவு ஏற்படுகிற பெண்கள் செய்ய வேண்டிய பல முக்கியமான விஷயங்களை கருத்தில் கொள்ள வேண்டும். ஹார்மோன் குறைவது என்பது இயற்கை தான். அதேபோல் உடல் வயதாகும்போது தளர்வு அடைவதும் இயற்கை தான். வியாதிகள் வருகிறது என்று வைத்துக் கொள்ளுங்கள், குறிப்பாக சர்க்கரை வியாதி வரும்போது அதை கட்டுப்பாட்டில் வைத்தால் சிறுநீர் கசிவு என்பது குறைவாகும். கட்டுப்பாடு இல்லாத சர்க்கரை வியாதி இருப்பவர்களுக்கு இந்த பாதிப்பு அதிகமாகும்.

    ஏற்கனவே இயற்கையாகவே தசைகளின் வலு குறைவாக உள்ளவர்களுக்கு இந்த சர்க்கரை வியாதியானது அதன் பாதிப்பை மேலும் அதிகரிக்கும். மேலும் சர்க்கரை அதிகமாக இருக்கும்போது தொற்றுக்கள் வருவதை அதிகப்படுத்தும். சில நேரங்களில் சிறுநீர்ப்பையில் சிறுநீர் முழுமையாக காலியாகாமல் சிறுநீர் தேங்கி இருப்பதால் கூட தொற்றுக்கள் அதிகமாகும். எனவே இதுவும் ஒரு காரணமாக அமையும்.

    சிறுநீர் கசிவை கட்டுப்படுத்துவதற்கான வழிமுறைகள், பயிற்சிகள்:

    இந்த வகையில் சிறுநீர் கசிவு ஏற்பட்டு எங்களிடம் சிகிச்சைக்கு வரும் பெண்களுக்கு முதலில் நாங்கள் பரிசோதனைகளை செய்வோம். இடுப்பு தள தசையின் செயல்பாடு மற்றும் அதன் வலிமை ஆகியவற்றை பரிசோதித்து பார்ப்பதற்கு சில வழிமுறைகள் உண்டு.

    மேலும் அதன் பாதிப்புகளை சரி செய்து அதனை கட்டுப்படுத்துவதற்கு சில பயிற்சி முறைகளும் உண்டு. முதலில் இதற்கான காரணத்தை கண்டுபிடித்து அதற்கான தீர்வுகளை கொடுக்க வேண்டும். அதற்கு ரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்த வேண்டும். தொற்றுக்கள் இருந்தால் அதை சரி செய்து குணப்படுத்த வேண்டும்.

    ஹார்மோன் மிகவும் குறைவதால் இடுப்பு தள தசை பலவீனம் ஆகிறது. இதன் காரணமாக இந்த தசைகள் மிகவும் சுருங்கி போய் காணப்படும். அப்படி இருந்தால் கண்டிப்பாக அதற்கு ஹார்மோன் ரீபிளேஸ்மெண்ட் தெரபியோ அல்லது அதற்கு பிரத்தியேகமான ஈஸ்ட்ரோஜனை அதிகப்படுத்துவதற்கான ஜெல், கிரீம் ஆகியவற்றை கொடுப்பதன் மூலமாக இந்த பிரச்சனைக்கு ஒரு நல்ல தீர்வை ஏற்படுத்த முடியும்.

    இதற்கு நாங்கள் வழக்கமாக பார்ப்பது யூரோ டைனமிக் பரிசோதனை ஆகும். இந்த யூரோ டைனமிக்ஸ் பரிசோதனை மூலம் எந்தெந்த மட்டத்தில் இந்த தளர்வு பாதிப்பு இருக்கிறது என்பதை முறையாக பரிசோதிப்போம். பல நேரங்களில் சிறுநீர்ப்பை திறக்கும் இடத்தில் உள்ள வால்வு பகுதியில் தளர்வு ஏற்பட்டு அது திறப்பது கட்டுப்பாட்டில் இல்லாமல் இருக்கலாம். அதற்கு ஸ்ட்ரெஸ் இன்காண்டினன்ஸ் என்று சொல்வோம். அதை சரி செய்வதற்கு பல நேரங்களில் இடுப்பு தளதசை உடற்பயிற்சி செய்ய வேண்டும்.

    இவற்றின் மூலமாக இந்த தசையை பலப்படுத்தும் போது இந்த வால்வு மெக்கானிசம் வலுவடைந்து பல நேரங்களில் சிறுநீர் கசிவு ஏற்படுவதை தடுக்க முடியும். மேலும் சிறுநீர்க்குழாயின் தன்மை சுருங்கும் போதும் இது வரலாம். இதற்கும் ஹார்மோன் ரீபிளேஸ்மென்ட் தெரபி மூலமா கத்தான் தீர்வு காண முடியும்.

    மேலும் தொற்றுக்கள் அதிகரிப்பதன் மூலமும் சிறுநீர் கசிவு ஏற்படுகிறது. இந்த பிரச்சனைக்கு முழுமையாக தீர்வு காண்பது எப்படி என்பது பற்றி அடுத்த வாரம் பார்க்கலாம்.

    • வாழ்க்கை அனுபவங்களை ஒவ்வொரு மனிதனும் கற்றல் அனுபவங்களாக மாற்றிக்கொள்ள வேண்டும்.
    • ஒரு ஞானி, தான் ஞானத்தைச் சாலையில் பொதி சுமந்துசெல்லும் கழுதையிடம் இருந்து கற்றுக்கொண்டதாகத் தெரிவித்தார்.

    வாழ்க்கையின் அனுபவங்களைப் பாடங்களாகக் கற்றுக் கொண்டிருக்கும் அன்பின் வாசகப் பெருமக்களே வணக்கம்!.

    'கற்றல்' என்பது பள்ளி முதலான கல்விக்கூடங்களுக்குச் சென்று ஆசிரியர் பாடங்களைக் கற்பிக்க, அவற்றைக் கண்ணும் கருத்துமாய் மாணவராக இருந்து படிப்பது மட்டுமல்ல. கல்விக்கூடங்களில் கற்பது என்பது முறையாகப் படித்துத், தேர்வுகள் எழுதிப் பட்டங்கள் பெறுவது ஆகும்; இக்கற்றல் ஒரு குறிப்பிட்ட பருவநிலையோடு நின்றுபோய்விடும். படித்த படிப்பிற்கேற்ற பணி, பிறகு திருமணம், குடும்பம், பிள்ளை குட்டிகள் என்று ஆனபிறகு கற்றல் என்பது கேள்விக்குரியதாகவே ஆக்கப்படும். ஆனால் வாழ்க்கைப் பயணத்தில் அன்றாடம் ஏற்படும் ஒவ்வொரு அனுபவமும், அது துன்ப நிகழ்வாக இருந்தாலும், இன்ப மகிழ்வாக அமைந்தாலும் அவை ஒவ்வொன்றில் இருந்தும் ஒரு பாடத்தைக் கற்றுக்கொள்ள மனிதன் தயாராகும் போதுதான் அது அர்த்தமுள்ளதாக மாறி விடுகிறது.

    வாழ்க்கை அனுபவங்களை ஒவ்வொரு மனிதனும் கற்றல் அனுபவங்களாக மாற்றிக்கொள்ள வேண்டும். அதனால்தான் கல்வியின் சிறப்பை எடுத்தியம்பும் வாக்கில் சாகும்வரை ஒவ்வொரு மனிதனும் கற்க வேண்டும் என்று திருவள்ளுவர் வலியுறுத்துகிறார்.

    "யாதானும் நாடாமால் ஊராமால்

    என்னொருவன்

    சாந்துணையுங் கல்லாதவாறு".

    கற்றல் மனோபாவம் ஒவ்வொரு மனிதனுக்கும் பணிவையும், அரிதின் முயலும் ஆர்வத்தையும் நல்குகிறது. இளம்பருவத்தில் கல்விக் கூடங்களில் கற்கும்போது, கற்பிக்கப்படுகிற பாடத்தின்மீது அக்கறையும், கற்பிக்கின்ற ஆசிரியர்மீது பயபக்தியும் தாமாகவே ஏற்பட்டுவிடுகின்றன. பள்ளிப் பருவம் முடித்து, குடும்ப வாழ்க்கைப் பயணம் தொடரும் போது, நமது உத்தியோகத்தால், அந்தஸ்தால், வயது மூப்பால், துன்பச் சூழல்களால் நம்மையும் அறியாத ஒரு உயர்வு மனப்பான்மை அல்லது ஆணவம் நம் எண்ணத்தில் தலைதூக்கி விடுகிறது. இதனால் தேவையற்ற மன உளைச்சல், வாழ்க்கையின் மீது ஆர்வமின்மை போன்ற எதிர்மறைப் போக்குகள் நம்மைப் பற்றிக் கொள்கின்றன.

    வாழ்வின் எல்லா அனுபவங்களில் இருந்தும் எதையாவது கற்றுக்கொள்ள விரும்பும் ஆர்வம் நமக்குப் பணிவையும், புதுமை விரும்பும் போக்கையும் நல்கி, நம்மைப் புத்துணர்வோடு வைத்திருக்கிறது.

    கல்விக் கூடங்களில் நமக்கு மேலான கல்வி கற்றவர்களிடமிருந்தே நாம் பாடம் படித்து வந்தோம். ஆனால், வாழ்வின் அனுபவத் தருணங்களில் நமக்கு மேலானவர், கீழானவர் என்கிற பேதமில்லாமல் எல்லோரிடமும், எல்லாவற்றைப் பற்றியும் கற்றுக் கொள்வதற்கு நாம் ஆயத்தமாக இருக்க வேண்டும்.

    ஒரு ஞானி, தான் ஞானத்தைச் சாலையில் பொதி சுமந்துசெல்லும் கழுதையிடம் இருந்து கற்றுக்கொண்டதாகத் தெரிவித்தார். சுமையைத் தூக்கிவைத்தால் சுமப்பது!, யாராவது தொந்தரவு செய்தால் காலால் எட்டி உதைப்பது!, நேரங்கெட்ட நேரத்தில் கத்துவது! ஆகிய இவற்றைத் தவிர வேறு எதுவும் தெரியாத கழுதை எப்படி அந்தத் துறவிக்கு ஞானத்தைக் கற்றுத் தந்திருக்கும்?. துறவியிடம் கேட்டார் ஒருவர். அன்று காலை துவைப்பதற்காக முதுகில் அழுக்குத் துணி மூட்டையோடு ஆற்றை நோக்கிச் சென்று கொண்டிருந்தது கழுதை. " பார்! பார்! நன்றாகப் பார்த்துக்கொள்!" என்றார் ஞானி. கேள்வி கேட்டவரை, மாலையும் வந்து என்னோடு இருந்து கழுதை ஆற்றில் இருந்து வீட்டுக்குத் திரும்பிச் செல்வதையும் பார்த்துச் செல்லவேண்டும் என்று வேண்டிக் கொண்டார்.

    மாலை வந்தது; கழுதை, வெளுத்த துணிமூட்டையோடு திரும்பிக் கொண்டிருந்தது. துறவி அந்த நண்பரிடம் கேட்டார், "காலையில் நீ பார்த்த கழுதைக் காட்சிக்கும், இப்போது நீ பார்க்கும் கழுதைக் காட்சிக்கும் ஏதேனும் மாறுதல் உணருகிறாயா?".


    முனைவர் சுந்தர ஆவுடையப்பன்

    தொடர்புக்கு 9443190098 

    " இல்லை! காலை ஆற்றுக்குப் போகும்போது எப்படிச் சென்றதோ அதே போலத்தான் இப்போது வீட்டுக்குத் திரும்பிச் சென்று கொண்டிருக்கிறது" என்றார் நண்பர். "இந்த ஞானத்தைத் தான் நான் கழுதையிடம் இருந்து கற்றுக்கொண்டேன். காலையில் அழுக்குத் துணிகளைச் சுமக்கிறோமே! என்று கழுதை வருந்தவுமில்லை; மாலையில் வெளுத்த துணிகளைச் சுமந்து செல்கிறோமே! என மகிழவுமில்லை!; இதுதான் ஞானம்!. துன்பத்தில் வருந்துவது; இன்பத்தில் மகிழ்வது ஆகிய இரண்டையும் ஒழித்துவிட்டு, இன்பம், துன்பம் இரண்டையும் ஒன்றுபோலவே பார்க்கிற சமநிலை ஞானத்தை நான் கழுதையிடமிருந்து கற்றுக்கொண்டேன்!" என்றார் ஞானி.

    இயற்கையின் அனுசரணையில்தான் மனித வாழ்க்கை நடந்து கொண்டிருக்கிறது. மனிதன் ஒவ்வொரு நொடியும் கற்றுக் கொள்வதற்கான அனுபவங்களோடு இயற்கையும் சக உயிர்களும் காத்திருக்கின்றன. நாம்தாம் கற்றுக்கொள்வதற்குத் தயாராக இருக்க வேண்டும். இவர் யார் கற்றுத் தர? நாம் ஏன் கற்றுக் கொள்ளவேண்டும்? என்று உதாசீன உணர்வோடு இருந்தால் வாழ்க்கையில் வருகின்ற இன்பங்களைக்கூட நிம்மதியாக அனுபவிக்க முடியாது. இந்த உலகிலேயே அதிசிறந்த அறிவையும், ஆற்றலையும் உடையவராக நாம் இருக்கிறோம்! என்பது ஒருவகையில் உண்மையாகக்கூட இருக்கலாம்; ஆனால் ஒரு குருவி கட்டும் கூட்டை அதே நுட்பத்துடன் உருவாக்கும் ஆற்றல் நம்மிடம் இருக்கிறதா? குருவிடமிருந்து கற்றுக்கொள்வது ஒருபுறம் இருக்கட்டும்; குறைந்த பட்சம் குருவியிடமிருந்து கற்றுக் கொள்வதையாவது கற்றுக்கொள்வோம்.

    மலையிடமிருந்து மன உறுதியையும், மண்ணாகிய பூமித் தாயிடமிருந்து பொறுமையையும், மென்மையை அனிச்சப்பூவிடம் இருந்தும் கற்றுக்கொள்ள நாம் சம்மதித்து விட்டால், தினையளவு உதவியையும் பனையளவாக மதிக்கும் செய்ந்நன்றியறியும் குணமும், மனத்துக்கண் மாசிலனாகும் மனமும், நல்லோரோடு இணக்கமாக வாழ்ந்து நட்பு பாராட்டும் நலமும், உலகத்தோடு ஒட்ட ஒழுகும் வாழ்நிலை அறமும் நமக்குத் தாமாகவே அமைந்து விடும் என்கிறார் வள்ளுவர்.

    அலுவலகமாயினும், தொழில்கூடமாயினும் நமக்கு மேலுள்ளவர்கள் சொற்படி கேட்டுக், கற்றுக்கொண்டு நடக்க வேண்டியது விதியாகவே கருதப்படும். ஆனால் நமது சக பணியாளரிடமோ அல்லது நமக்குக் கீழே பணியாற்றக் கூடியவரிடமிருந்தோ கற்றுக் கொள்ளும் சூழ்நிலை வாய்த்தால் அதற்கும் நாம் தயாராக இருக்க வேண்டும். என்னுடைய தகுதி, தன்முனைப்பு இடம்கொடுக்க மறுக்கிறதே என்று விலகி நிற்க நேரிட்டால், உண்மையில் தோற்றுப்போக வேண்டிய சூழல் நமக்கு ஏற்பட்டுவிடும். இங்கே எல்லோரிடமும் கற்றுக் கொள்ளலாம் என்கிற தாராள மனப்பான்மை உருவானால் எல்லோரோடும் பேதமில்லாத சமத்தன்மை உருவாகிவிடும். எதிரிகளும் நண்பர்களாகிப் போகும் இன்பநிலை உண்டாகும்.

    எல்லா விஷயங்களிலும் எல்லோரும் திறமையானவர்களாக இருக்க முடியாது. வீட்டையே எடுத்துக்கொள்வோம்; அம்மா சாம்பார் வைப்பதில் கெட்டிக்காரர் என்றால், புளிக்குழம்பு வைப்பதில் மனைவி புலியாக இருக்கலாம்; சாம்பார், புளிக்குழம்பு விஷயங்களில் மாமியாரும், மருமகளும் ஒருவருக்கொருவர் ஒத்துப்போய்க் கற்றுக் கொள்ளும் மனநிலைக்கு வந்துவிட்டால், வீட்டுச் சமையலறையே சொர்க்கமாக மாறிவிடும் அல்லவா? அலுவலகங்களிலும் அப்படித்தான். கற்றுக் கொள்வ தில் வேலை நிரவல்கள் ஏற்பட்டால் எல்லோருக்கும் மகிழ்ச்சியைத் தவிர வேறு எதுதான் பரிசாய் அமையும்?.

    பல கல்வி நிலையங்களில் ஆசிரியர்கள், மாணவர்களி டமிருந்து கற்றுக்கொள்வதாகக் கூறுகிறார்கள். உண்மைதான் அறிவுத் தேடுதல் உடைய ஒவ்வொரு மாணவனின் ஆழமான ஒவ்வொரு கேள்வி யுமே ஆசிரியரின் புதிய கற்றலுக்கான வாசல்களைத் திறந்து வைக்கின்றன.

    ஆசிரியர் கற்கக் கற்க அவரும் மாணவர் ஆகிறார்; ஆசிரியரும், மாணவரும் அறிவுப் பங்காளிகள் ஆகிப்போகின்றனர். சில இடங்களில் புதிதாக வேலைக்கு வருவோரிடம் புதிய அறிவு வெளிச்சங்கள் நிரம்பிக் கிடக்கலாம்; மூத்தவர்கள், இளையோரிடமும் கற்றுக்கொள்ளச் சம்மதிக்கும்போது அந்த அலுவலகமே நட்புக் கூடமாக நளினம் அடைந்துவிடும்.

    ஒரே வானம், ஒரே சூரியன், ஒரே நிலா, அதே மேகங்கள், அதே காற்று, அதே மழை, அதே மரம், செடி கொடிகள், அதே அருவி, அதே நதி, அதே பறவை, அதே மலை... என்று இயற்கை எப்போதும் ஒன்றுபோலவே இருந்தாலும் அவை எப்போதும் ஒன்றுபோலவே இருப்பதில்லை. நம்முடைய வருத்தம் மற்றும் இன்பச் சூழ்நிலைகளுக்கு ஏற்ப நாம் மனத்தை இலகுவாக்கிக்கொண்டு இயற்கையோடு ஈடுபடத் தொடங்கினால், அவற்றில் இருந்து கற்றுக்கொள்ளத் தயாராகிவிட்டால், நாமும் இயற்கையும் ஒன்றாகிவிடுவோம்!; புத்துணர்வில் நமது உள்ளத்திலும் பூப்பூக்கத் தொடங்கிவிடும்.

    ஒரு குருவிடம் அவரது சீடர்கள், "உங்களது குரு யார்?" என்று கேட்டார்கள். "நான் எத்தனையோ பேரிடமிருந்து எத்தனையோ விஷயங்களைக் கற்றுக் கொண்டிருக்கிறேன். ஆனாலும் அவர்களில் மூன்று பேரை நான் குருவாக மதிக்கிறேன்" என்றார் குரு. அவரே சொன்னார்:

    என்னுடைய முதல் குரு ஒரு திருடன்: ஒரு கிராமத்தில் இரவு நேரத்தில் ஒரு வீட்டுக்குள் திருடப் புகுவதற்காக சுவற்றில் ஓட்டை போட்டுக் கொண்டிருந்தான். அவனிடம் 'இங்கு இரவு தங்குவதற்கு இடம் கிடைக்குமா?' என்று கேட்டேன். 'திருடனோடு தங்கச் சம்மதமா?' என்று கேட்டுவிட்டு, நான் 'சரி'யென்றதும் அவனோடு தங்க அனுமதித்தான். ஒருமாதம் தங்கியிருந்தேன்; இரவு முழுவதும் திருடப்போவான்; நான் ஓய்வெடுப்பேன். அதிகாலை வருவான்; 'ஏதாவது கிடைத்ததா?' என்று கேட்பேன். 'இன்று கிடைக்கவில்லை! நாளை நிச்சயம் கிடைக்கும்!' என்று நம்பிக்கையோடு சொல்வான். நாள்தோறும் கேட்கும் இந்த நம்பிக்கை வார்த்தைதான், என்னைத் தொடர்ந்து நம்பிக்கையோடு பிரார்த்தனை பண்ணக் கற்றுத்தந்தது.

    இரண்டாவது குரு ஒரு நாய்: ஒருநாள் நண்பகல் வேளை. கடுமையான தண்ணீர் தாகம். தண்ணீர் பருகுவதற்காக ஆற்றை நோக்கிச் சென்று கொண்டிருந்தேன்; என்னோடு ஒரு நாயும் வந்தது; அதற்கும் நாவறட்சி; தண்ணீர் தேவைப்பட்டது. ஆற்றைப் பார்த்ததும் இறங்கி தாகம் தணியத் தண்ணீர் பருகினேன்; திரும்பி நாயைப் பார்த்தேன். அது அச்சத்தோடு ஆற்றை நெருங்க முடியாமல் தவித்துக் கொண்டிருந்தது. நாயைப் பிடித்துத் தூக்கி ஆற்றுக்குள் போட்டேன்; ஆசைதீர தண்ணீர் பருகத் தொடங்கிவிட்டது. தண்ணீரைவிட்டு லேசில் வெளியே வரவும் மறுத்துவிட்டது. மனித மனமும் இப்படித்தான்; சிலவற்றில் ஈடுபடுவதற்கு அஞ்சி அஞ்சிச் செத்துக்கொண்டே இருக்கிறது. துணிச்சலுடன் தூக்கிப்போட்டுவிட்டால் சாதனைமேல் சாதனை புரியத் தொடங்கி விடுகிறது.

    மூன்றாவது குரு ஒரு குழந்தை: அது ஒரு மெழுகுவர்த்தியை ஏற்றியது; ஒளி எங்கிருந்து வந்தது? என்று கேட்டேன். விளக்கை ஊதியணைத்த குழந்தை இப்போது ஒளி எங்கு போனதோ அங்கிருந்து வந்தது! என்று சொல்லிச் சிரித்தது. அன்றோடு என் ஆணவம் சரிந்து தரைமட்டமாகிப் போய்விட்டது என்றார் ஞானி.

    கற்றல் நம்மை நாமாக உணர வைக்கிறது; நம்மில் அனைவரும் எனும் உலகத்துவத்தை உன்னதப்படுத்துகிறது.

    • தாம்பத்திய உறவு என்கிற அடிப்படையே பிரச்சனையாகும் போது குழந்தைபேறு கேள்விக்குறியாகி விடுகிறது.
    • குழந்தை வேண்டும் என்று திட்டமிட்டோமோ அப்போது தாம்பத்திய உறவில் எங்களுக்கு பிரச்சனை வந்துவிட்டது என்பார்கள்.

    குழந்தையின்மையில் சில பிரச்சனைகள் கேட்கும்போதே அப்படியா என்று ஆச்சரியத்தை ஏற்படுத்தும். பாலியல் உறவுகளால் கூட குழந்தையின்மை ஏற்படும் என்பது உங்களுக்கு தெரியுமா? இது ரொம்ப ஆச்சரியமாக இருக்கும். குழந்தை பாக்கியம் கிடைப்பதற்கு அடிப்படையே பாலியல் உறவு தான். ஆனால் பாலியல் உறவு என்பதே குழந்தையின்மைக்கு காரணமானால் எப்படி குழந்தைபேறு பெற முடியும்? இதில் ஒன்றை புரிந்து கொள்ள வேண்டும். பாலியல் உறவுகள் அடிப்படையில் சரியாக இருந்தால்தான் குழந்தை பேறு உருவாகும்.

    பாலியல் பிரச்சனைகளும் குழந்தையின்மைக்கான ஒரு காரணம்:

    குழந்தையின்மைக்கு பல்வேறு காரணங்கள் இருந்தாலும், குழந்தைபேறு சிகிச்சை பெற வரும் தம்பதியினர் எதிர்நோக்கும் பாலியல் பிரச்சனைகளும் குழந்தையின்மைக்கான ஒரு காரணமாகும். இதுதான் ரொம்ப பெரிய பிரச்சனையாகும். பல நேரங்களில் குழந்தைப்பேறு என்று வரும்போது பாலியல் உறவு என்பதே தம்பதியினரிடம் ஒரு பெரிய கேள்விக்குறியாக அமைகிறது.

    இன்றைக்கும் உலக அளவில் எடுக்கப்பட்ட பல ஆய்வுகள் சொன்ன ஒரு விஷயம், ரொம்ப வருந்தத்தக்க முக்கியமான தகவலை தருகிறது. குழந்தையின்மையால் பாதிக்கப்பட்ட தம்பதியினர் பலருடைய பாலியல் உறவுகளை வரையறுத்து இந்த ஆய்வுகள் செய்யப்பட்டன.

    இதில் குழந்தையின்மையால் பாதிக்கப்பட்ட பெண்களை எடுத்துக்கொண்டால் கிட்டத்தட்ட 58 முதல் 98 சதவீத பெண்களுக்கு இந்த பாலியல் பிரச்சனைகள் ஏற்படுகிறது. குழந்தைபேறு என்று வரும்போது பாலியல் உறவு என்பது ஒரு பெரிய பிரச்சனையாக கருதப்படுகிறது. குழந்தைக்காக தாம்பத்திய உறவு கொள்வது என்பது, பெரிய அளவில் மன அழுத்தத்தை ஏற்படுத்துகிறது என்று இந்த ஆய்வில் சொல்லப்பட்டுள்ளது.

    அதேபோல் ஆண்களை எடுத்துக் கொண்டால் 46 முதல் 58 சதவீத ஆண்களுக்கு குழந்தைபேறு என்று வரும்போது அவர்களின் தாம்பத்திய உறவுகளில் பிரச்சனைகள் ஏற்படுகிறது. இதனால் பாலியல் செயலிழப்பு என்கிற ஒரு முக்கியமான பிரச்சனையை அவர்கள் சந்திக்கிறார்கள். அதாவது குழந்தைபேறு என்று வரும்போது தாம்பத்திய உறவு பிரச்சனைகள் ஆண்களை அதிகமாக பாதிக்கிறது.

    குழந்தைபேறுக்கு அடிப்படையான விஷயமே கணவன், மனைவி இடையேயான தாம்பத்திய உறவு தான். இந்த தாம்பத்திய உறவில் பிரச்சனை என்றால் எப்படி குழந்தை பேறு பெறமுடியும்? இது ஒரு முக்கியமான விஷயம். குழந்தையின்மையால் பாதிக்கப்பட்டவர்களில் 98 சதவீத பெண்களுக்கும், 58 சதவீதம் ஆண்களுக்கும் பாலியல் பிரச்சனைகள் இருப்பது மிகப்பெரிய அளவாகும்.

    8 முதல் 10 மாதங்கள் தொடர்ந்து தாம்பத்திய உறவு:

    ஒரு தம்பதியினர் எந்த தடையும் இல்லாமல் 8 முதல் 10 மாதங்கள் தொடர்ந்து தாம்பத்திய உறவு கொள்ளும் போதுதான் குழந்தைபேறு பெற முடியும் என்பது பல ஆய்வுகளில் சொல்லப்பட்ட விஷயமாகும். அப்படி இருக்கும்போது பாலியல் உறவில் ஈடுபடுவதிலேயே பிரச்சனை இருந்தால் குழந்தைபேறு பெறுவது எப்படி சாத்தியமாகும்? இது ஒவ்வொரு தம்பதியினரும் புரிந்து கொள்ள வேண்டிய விஷயம்.



    இன்றைக்கும் குழந்தைபேறுக்காக, அதாவது ஒரு குழந்தை வேண்டும் என்று நினைத்து பாலியல் உறவு கொள்ளும் போது தம்பதியினரிடையே பலவிதமான மன அழுத்தம் ஏற்படுகிறது. இதை என்னிடம் சிகிச்சைக்கு வரும் தம்பதிகள் சொல்வதுண்டு. 'டாக்டர், எங்களுக்கு திருமணமாகி 4 வருடம் ஆகிறது. முதல் 2 வருடங்கள் குழந்தை வேண்டாம் என்று முடிவு செய்தோம். அப்போதெல்லாம் நாங்கள் தாம்பத்திய உறவின் போது ரொம்ப மகிழ்ச்சியாக இருந்தோம். ஆனால் எப்போது குழந்தை வேண்டும் என்று திட்டமிட்டோமோ அப்போது தாம்பத்திய உறவில் எங்களுக்கு பிரச்சனை வந்துவிட்டது' என்பார்கள்.

    'குழந்தை பாக்கியம் வேண்டும் என்ற நோக்கத்தில் உறவு கொள்ளும் போது என்னோட கணவருக்கு விறைப்புத்தன்மை குறைவாகி விடுகிறது. எங்களால் நேரத்துக்கு நேரம் தாம்பத்திய உறவு கொள்ள முடியவில்லை. சரியாக டாக்டர் சொல்கிற நேரத்திலோ அல்லது, கூகுளில் சொல்லப்படும் 14-வது நாளிலோ, சினைப்பையில் இருந்து முட்டை வெளிவரும் அண்டவிடுப்பு தினத்திலோ எங்களால் தாம்பத்தியம் கொள்ள முடியவில்லை என்று சொல்கின்ற தம்பதியினரின் எண்ணிக்கை அதிகம். இன்றைக்கும் குழந்தையின்மை சிகிச்சை முறைகளில் முக்கியமான ஒன்றாக நான் கருத்துகிற விஷயமே அவர்களுடைய தாம்பத்திய உறவு முறைகளை சீர்படுத்துவது தான். தம்பதிகள் முதலில் சிகிச்சை பெற வரும்போது அவர்களுடைய பாலியல் உறவு பற்றிய வரலாற்றை கேட்டால் அனைத்து நோயாளிகளும் வெளிப்படையாக சொல்கிற விஷயம், 'டாக்டர் நாங்கள் எப்போது குழந்தை வேண்டும் என்று திட்டமிட்டோமோ, அதற்காக எப்போது சிகிச்சைக்கு வந்தோமோ, அப்போதில் இருந்தே எங்களின் பாலியல் உறவு செயல்பாடு ரொம்ப பாதிக்கப்பட்டு விட்டது' என்பார்கள்.

    பாலியல் உறவுகளில் உள்ள 5 முக்கியமான விஷயங்கள்:

    இன்றைக்கும் குழந்தைபேறு என்று வரும்போது தம்பதிகளின் பாலியல் உறவுகளில் உள்ள செயல்பாடுகளை எடுத்தால் பலருக்கும் அவர்களுடைய விருப்பம், லூப்ரிகேஷன், உறவு கொள்ளுதல் உள்ளிட்ட எல்லாவிதமான விஷயங்களும் பாதிக்கப்படுகிறது. பாலியல் உறவுகளை பொருத்தவரை விருப்பம், தூண்டுதல், உச்சகட்டம், திருப்தி மற்றும் அதனுடைய வலி ஆகிய 5 முக்கியமான விஷயங்கள் இருக்கிறது. இவை ஆய்வுகளில் சொல்லப்படுகிற விஷயம்.

    நல்ல முறையில் தாம்பத்திய உறவு நடைபெறும் போது கண்டிப்பாக குழந்தைபேறு வரும் என்று நாம் நினைக்கிற நிலையில், தாம்பத்திய உறவு என்கிற அடிப்படையே பிரச்சனையாகும் போது குழந்தைபேறு கேள்விக்குறியாகி விடுகிறது.

    எங்களுடைய மையத்தில் எடுத்த ஒரு ஆய்வில், 'கிட்டத்தட்ட 28 முதல் 35 சதவீத தம்பதியினருக்கு வரும் பிரச்சனை என்னவென்றால், குழந்தைபேறு விஷயத்துக்காக தாம்பத்திய உறவு கொள்ளும் போது, லூப்ரிகேஷன் வருவதில்லை. இதனால் உலர்வு தன்மை ஏற்படுகிறது' என்கிறார்கள்.

    உலர்வு தன்மையுடன் இருந்தால் ஏதாவது லூப்ரி கேஷன் பயன்படுத்துவார்கள். லூப்ரிகேஷன் பயன்படுத்தினால் ஆணின் உயிரணுக்கள் அதனுடைய உயிரோட்டத்தை இழந்துவிடும். ஏனென்றால் லூப்ரிகேஷன் உயிரணுக்களின் வாழ்க்கையை பாதிக்கும். அதனால் உயிரணுக்கள் இறந்து போகும் அல்லது உயிரணுக்களின் செயல்பாடு குறைந்துவிடும்.

    எனவே இந்த பிரச்சனைகள் தான் ஆண்கள், பெண்கள் இருவரும் தம்பதியினராக அதிகம் எதிர்நோக்குகிற விஷயம். அவர்கள் தங்களுக்கு ஒரு குழந்தை வேண்டும் என்ற எண்ணத்தில் தாம்பத்திய உறவில் ஈடுபடும் போது மன அழுத்தம் அதிகமாகிறது. இதனால் லூப்ரிகேஷன் வருவதில்லை. இதனால் அவர்கள் பிரச்சனைகளை சந்திக்கிறார்கள்.


    டாக்டர் ஜெயராணி காமராஜ், குழந்தையின்மை சிகிச்சை நிபுணர், செல்: 72999 74701

    எனவே பாலியல் பிரச்சனைகள் கண்டிப்பாக குழந்தையின்மையை உருவாக்கலாம். குழந்தையின்மையால் பாதிக்கப்பட்ட தம்பதியினருக்கு சிகிச்சை முறைகள் எடுக்கும் போது கண்டிப்பாக மேற்கண்ட பிரச்சனைகளையும் எதிர்நோக்கலாம். எனவே பாலியல் செயலிழப்பு என்பது, குழந்தையின்மையினால் வரலாம். பாலியல் உறவு பிரச்சனைகளால் குழந்தையின்மை ஏற்படலாம்.

    விருப்பத்தின் பேரிலேயே தாம்பத்திய உறவில் ஈடுபட வேண்டும்:

    இந்த வகையில் தம்பதியினரின் அடிப்படையிலான பாலியல் பிரச்சனைகள் என்ன என்பதை முழுமையாக பரிசோதிக்க வேண்டும். பெண், ஆண் இருவரும் சிகிச்சை பெற வரும்போது முறையாக சில விஷயங்களை கவனத்தில் கொள்ள வேண்டும். இந்த பிரச்சனை ஏன் வருகிறது என்பதை ஆராய்ந்து அதற்கு ஏற்ப வழிகளை யோசிக்க வேண்டும்.

    சிகிச்சைக்கு வரும் பெண்ணுக்கு மருத்துவர் ஸ்கேன் செய்து பார்த்து, இன்றைக்கு அண்டவிடுப்பு ஆகியிருக்கிறது என்று அவர்களிடம் தெரிவித்தால், அடுத்த நாளே அவர்கள் மீண்டும் வந்து மருத்துவர்களிடம் நிற்பார்கள். 'டாக்டர் நாங்கள் நேற்று தாம்பத்திய உறவே வைக்கவில்லை, எங்களுக்கு குழந்தை பாக்கியம் வருமா?' என்பார்கள்.

    எனவே தம்பதியினர் முக்கியமாக புரிந்து கொள்ள வேண்டிய விஷயம், தாம்பத்திய உறவு என்பது இயற்கையாக கணவன், மனைவி இருவரின் விருப்பத்தின் பேரில் நடக்க வேண்டிய விஷயம். அப்படித்தான் அதில் ஈடுபட வேண்டும். மன அழுத்தம் அதிகமாக இருக்கும் சூழ்நிலையில் கண்டிப்பாக உறவு கொள்வது என்பது இயலாத காரியம்.

    ஆண்களை பொருத்தவரைக்கும் பாலியல் உறவின் போது மன அழுத்தம் இருக்கக்கூடாது. தாம்பதிய உறவுக்கான சூழ்நிலைகள் சீராக இருக்க வேண்டும். குழந்தைபேறு என்பதை மனதில் இலக்காக வைத்து பாலியல் உறவில் ஈடுபட்டாலே பிரச்சனைகள் வரும். இந்த பாலியல் உறவு பிரச்சனைகள் இருக்கிற தம்பதியினரை முறையாக முழுமையாக பரிசோதிக்க வேண்டும். அவர்களுக்கு பாலியல் உறவில் என்னென்ன குறைபாடுகள் இருக்கிறதோ அதை சீர் செய்ய வேண்டும். பாலியல் உறவு பிரச்சனைகளால் பாதிக்கப்பட்ட தம்பதிகளுக்கான சிகிச்சைகள் என்னென்ன என்பதை அடுத்த வாரம் பார்ப்போம்.

    • அக்டோபர் 9-ந்தேதியை உலக அஞ்சல் தினமாக கொண்டாடப்படுகிறது.
    • ஒரு லட்சத்து 55 ஆயிரத்து 333 தபால் நிலையங்கள் உள்ளன.

    இன்றைய நாளில் தொழில்நுட்பத்தின் வளர்ச்சியால் உலகின் மூலையில் எங்கு இருந்தாலும் இணைய செயலிகளின் வழியே சில நொடிகளில் தகவல்களை பரிமாறிக்கொள்ளலாம். இதுவே சில ஆண்டுகளுக்கு முன் ஒரு தகவலை உறவினருக்கு தெரிவிக்க வேண்டும் எனில் கடிதம் எழுதி தபாலில் அனுப்பி வைக்கப்படும். இரண்டு, மூன்று நாட்கள் கழித்தே அந்த செய்தி உரியவரின் கைகளில் சேரும். இப்படியாக நட்பு, காதல், பாசம், கோபம் என அனைத்துவிதமான உணர்வுகளும் அஞ்சல் கடிதங்கள் வழியே பகிர்ந்து கொள்ளப்பட்டன.

    சுவிட்சர்லாந்தில் உள்ள போர்ன் நகரில் 1874-ம் ஆண்டு அக்டோபர் 9-ந்தேதி சர்வதேச அஞ்சல் ஒன்றியம் நிறுவப்பட்டது. இந்த நாளை நினைவு கூரும் விதமாக 1969-ம் ஆண்டு முதல் ஓவ்வொரு ஆண்டும் அக்டோபர் 9-ந் தேதியை உலக அஞ்சல் தினமாக கொண்டாடப்படுகிறது. அஞ்சல் சேவையின் முக்கியத்துவத்தையும், மக்களின் அன்றாட வாழ்வில் அஞ்சல் துறையின் பங்களிப்பு பற்றியும் பொதுமக்களிடம் எடுத்துரைப்பது இந்த நாளின் நோக்கமாகும்.

     உலக அளவில் அதிக எண்ணிக்கையில் தபால் நிலையங்களை கொண்ட நாடு இந்தியா ஆகும். இ்ந்தியாவில் ஒரு லட்சத்து 55 ஆயிரத்து 333 தபால் நிலையங்கள் உள்ளன. 1764-ம் ஆண்டு இந்திய அஞ்சல் துறை தொடங்கப்பட்டது. இந்தியா முழுவதும் 23 மண்டலங்களாக பிரிக்கப்பட்டுள்ள நிலையில், இதில் 89 சதவீதம் தபால் நிலையங்கள் கிராமங்களில் உள்ளன. தபால் துறைகளில் அரசு காப்பீடு திட்டங்கள், சேமிப்பு திட்டங்கள் என மக்களுக்கு பயன்படும் வகையில் நிறைய வரவேற்கத்தக்க நடவடிக்கைகளை இந்திய அஞ்சல் துறை எடுத்து வருகிறது.

    அஞ்சல் துறையில் பலவகையான அஞ்சல்களும் குழப்பமின்றி பிரிக்கப்பட்டு, விரைவாக அனுப்புவதற்கு வசதியாக அஞ்சல் குறியீட்டு எண்கள் பயன்படுத்தப்படுகின்றன. இந்த குறியீட்டு எண் திட்டம் முதன் முதலில் 1972ம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது. இதில் 6 இலக்கங்கள் பயன்படுத்தப்படுகின்றன.

    அதில் முதல் இலக்கம் மண்டலத்தையும், இரண்டாவது இலக்கம் துணை மண்டலத்தையும், மூன்றாவது இலக்கம் அந்த அஞ்சல் பிரிப்பக மாவட்டத்தையும் குறிக்கிறது. கடைசி மூன்று இலக்கங்கள் அந்த அஞ்சல் வட்டத்தின் தபால் நிலையத்தை குறிக்கும்.

    தற்போது ஒரு சில அரசு துறைகளின் தகவல்கள் மற்றும் அறிவிக்கைகள், தனிநபர்களின் பார்சல்கள் மட்டுமே தபால் துறையின் மூலம் அனுப்பப்படுகின்றன. எழுதுகோலை கையில் கொண்டு கடிதங்கள் எழுதி தபால் மூலம் அனுப்புவதின் அனுபவத்தை உணர்ந்த தலைமுறையினர் இளைஞர்களை கடிதங்கள் எழுதுமாறு எடுத்துரைக்க வேண்டும். இன்றைய செய்திகள் நாளைய வரலாறு என்று கூறுவார்கள். இன்றைய தகவல்களும் நாளைய சமூதாயத்தினருக்கு வரலாறாக மாறலாம். எனவே மீண்டும் நம்பிக்கையுடன் கடிதங்கள் எழுதுவோம்.

    ×