என் மலர்tooltip icon

    சிறப்புக் கட்டுரைகள்

    நசிய சிகிச்சையின் நன்மைகள்...
    X

    நசிய சிகிச்சையின் நன்மைகள்...

    • பொதுவாக சிகிச்சை என்பது இரண்டு வகையாக பிரிக்கப்படுகிறது.
    • மருத்துவரின் ஆலோசனையுடன் உபயோகப்படுத்தி மூக்கையும், உடலையும் ஆரோக்கியமாக பேணி பாதுகாப்போம்.

    ஐம்புலன்கள் என்று அழைக்கப்படும் வாய், மெய், கண், காது, மூக்கு என்ற 5 உறுப்புகளும் அமைந்திருக்கும் இடம் தலை. இதில் மெய் எனப்படும் தோல் மட்டும் உடலெங்கும் பரவியிருக்கும், மீதமுள்ள 4 புலன்களும் தலையில் மட்டும் அமைந்திருக்கும். இதுவே நம் உடலின் அமைப்பு. அதன் காரணமாகவே தலை ஒரு மனிதனுக்கு மிக முக்கியமான உறுப்பு. அதை பேணிக்காக்கவேண்டும். எண் சாண் உடலுக்கு சிரசே பிரதானம் என்ற சொல்லாடல் மூலம் இதனை அறியலாம்.

    தலையில் உள்ள 5 புலன்களில் மிக முக்கியமானது கண். இரண்டாவதாக மூக்கு. ஏன் என்றால் ஒரு மனிதன் உணவில்லாமல் சில நாட்கள் வாழலாம், ஆனால் பிராணவாயு இல்லாமல் சில நிமிடங்கள் கூட வாழமுடியாது. அந்த அளவுக்கு முக்கியமான பிராணவாயு மூக்கு வழியாகத்தான் செல்ல முடியும். ஏன் வாய்வழியாக சுவாசித்தால் உடலுக்கு போகாதா என்று கேட்கலாம், ஆனால் மூக்கு வழியாக சுவாசிப்பதே சாலச் சிறந்தது. ஏன் எனில் மூக்கில் வாயுவை சுத்திகரிப்பதற்கான செயல்பாடுகள் நடைபெறுகிறது. மூக்கு துவாரத்தில் உள்ள முடிகள் மற்றும் கோழைப்படலம் காற்றிலுள்ள தூசிகளை சுத்தம் செய்கின்றன. இதனால் மூக்கு வழியாக சுவாசிப்பதே சாலச்சிறந்தது. அதோடு மட்டுமல்லாமல் மூக்குதான் தலையின் துவாரம் என்கிறது ஆயுர்வேதம். அதாவது வாய் என்பது உடலின் துவாரம். தலையை ஒரு மருந்து சென்றடைய வேண்டுமெனில் அதற்கு மூக்குதான் துவாரம். மூக்கு சுவாசிப்பதற்கு மட்டுமா, மணத்தை அறிய முக்கிய பங்கு ஆற்றுகிறது அல்லவா... நுகர்தல் என்ற செயல்பாட்டிற்கு காரணமாக அமைகிறது.

    ஒரு மனிதனின் இயல்பான மூக்கின் அமைப்பை மாற்றினால் முழுவதுமாக முக அமைப்பே மாறிவிடும். ஆக இவ்வளவு சிறப்பு வாய்ந்த, மூக்கை எவ்வாறு பராமரிப்பது என்பது பற்றி பார்ப்போம்.

    நலமாய் வாழ ஆரோக்கியத்திட்டத்தில் தினமும் கடைபிடிக்க வேண்டிய நடைமுறைகளில் மூக்கும் இடம்பெறுகிறது. ஆம் மூக்கில் எண்ணையிடும்படி ஆயுர்வேதம் அறிந்திருக்கிறது. அதற்கு நஸ்யம் சிகிச்சை என்று பெயர். ஒரு விஷயத்தை சற்று கவனித்தால் ஆரோக்கியமாக வாழ தினசரி கடைபிடிக்கவேண்டியவை என்பது முகத்திலுள்ள 5 புலன்களை கவனிப்பாகவே இருக்கின்றது. ஆம் வாயிலுள்ள பல் பராமரிப்பு, வாய் கொப்பளித்தல், மூக்கை பராமரிக்க நஸ்ய சிகிச்சை, கண்ணை பராமரிக்க கண் மை, காதுகளை பராமரிக்க காதில் எண்ணெய் தேய்த்தல், காதில் மருந்து செலுத்துதல், முகத்தில் உள்ள தோலை பராமரிக்க எண்ணெய் தேய்த்தல் என்று நீள்கிறது.

    ஏனெனில் இதன் மூலம் கிருமித்தொற்று தாக்க வழிவுள்ளது. எனவே இவற்றை ஆரோக்கியமாக பராமரிக்க அதிக அறிவுரைகளை ஆயுர்வேதம் வழங்கியுள்ளது. அவ்வாறு கூறப்பட்ட சிகிச்சை தான் நஸ்யம் என்பது.


    Dr. ரா.பாலமுருகன்

    அரசு ஆயுர்வேத மருத்துவர்

    90257 44149

    பொதுவாக சிகிச்சை என்பது இரண்டு வகையாக பிரிக்கப்படுகிறது. ஒன்று அதிகரித்துயிருக்கின்ற வாத, பித்த, கப தோஷங்களை சமப்படுத்துதல், மற்றொன்று அதிகரித்துயிருக்கின்ற தோஷங்களை உடலிலிருந்து வெளியேற்றி உடலை சுத்தப்படுத்துதல். ஆயுர்வேத மருத்துவ சிகிச்சையானது உடலை சுத்தப்படுத்தவே அதிக கவனம் செலுத்துகிறது. அவ்வாறு உடலை சுத்தப்படுத்த 5 வகை சிகிச்சைகள் கூறப்பட்டுள்ளன. அவற்றில் நஸ்யம் என்ற சிகிச்சையும் ஒன்று, இந்த சிகிச்சை தான் மிக எளிதானது. அதிக செலவில்லாதது. வீட்டிலேயே அனைவரும் செய்து கொள்ளலாம்.

    இந்த சிகிச்சை உடலை சுத்தம் செய்வதோடு மட்டும் இல்லை. நோய் வராமல் தடுக்க தினமும் அனைவரும் செய்துகொள்ளலாம். அதுவே இந்த சிகிச்சையின் விசேஷம்.

    சரி இந்த சிகிச்சையை தினமும் எடுத்துக்கொண்டால் அப்படி என்ன விசேஷம் நிகழப்போகிறது என்றுக் கேட்டால், அதற்கு மிக நீண்ட பதிலுரையை ஆயுர்வேதம் வழங்குகிறது. அது யாதெனில் கண், காது, மூக்கு போன்ற புலன்களில் கேடு வருவதில்லை. முடி தாடி மீசைகளில் எந்த தொந்தரவும் ஏற்படுவதில்லை. முடி உதிராது. நன்றாக வளரும். கழுத்து, தோள் பட்டை வலி ஏற்படாது. முக வாதம் ஏற்படாது. சைனஸ், ஜலதோஷம், தலைவலி, ஒன்றை தலை வலி ஏற்படாது. தலையிலுள்ள நரம்புகள், தமனிகள், சிரைகள் சந்திகள் நன்றாக இயங்கும். பல், தாடை தொண்டை போன்ற இடங்களில் அவ்வளவு எளிதாக நோய் உண்டாகாது, முக வசீகரம் ஏற்படும், நல்ல தூக்கம் ஏற்படும், கழுத்துக்கு மேலே உள்ள உறுப்புகளில் வயது முதிர்வு தென்படாது. சில வியாதிகளில் கழுத்து கீழே உள்ள உறுப்புகளில் கூட நஸ்யம் சிகிச்சை பயனுள்ளதாக இருக்கும்.

    சரி இதனை எவ்வாறு மேற்கொள்ளுவது. இவற்றிக்கென ஒரு வரையறை ஆயுர்வேதம் மிக தெளிவாக வழங்குகிறது. அதாவது நஸ்யம் செய்வதற்கு முன் என்ன செய்ய வேண்டும் என்பதை குறித்து எல்லாம் ஓர் ஆயுர்வேத மருத்துவர் நன்கு அறிவுறுத்துவார். எனவே அருகிலுள்ள ஆயுர்வேத மருத்துவரை அணுகினாலே போதும். நஸ்ய சிகிச்சை குறித்து விவரிப்பார்.

    இந்த சிகிச்சைக்கு அனு தைலம் என்ற மருத்து பயன்படுத்தப்படுகிறது. இதனை மருத்துவரின் ஆலோசனையுடன் உபயோகப்படுத்தி மூக்கையும், உடலையும் ஆரோக்கியமாக பேணி பாதுகாப்போம்.

    Next Story
    ×