என் மலர்
சிறப்புக் கட்டுரைகள்

மகளிர் மருத்துவம்- பெண்களை பாதிக்கும் சிறுநீர் கசிவு பிரச்சனை
- பொதுவாக பெண்களுக்கு சிறுநீர் கசிவு ஏற்படுவதற்கு பல காரணங்கள் உள்ளன.
- பொதுவாகவே வயது கூடும்போது எல்லா தசைகளுமே பலவீனமாகும்.
பெண்கள் அதிகமாக எதிர்நோக்கும் உடல்நல பிரச்சனைகளை பற்றி பார்த்துக்கொண்டு இருக்கிறோம். பெண்களுக்கு 40 வயதாகும் போது ஏற்படும் முக்கியமான பிரச்சனைகளில் ஒன்று சிறுநீர் கசிவு பிரச்சனையாகும். எங்களிடம் 40 வயதில் சிகிச்சைக்கு வரும் நிறைய பெண்கள் இதுபற்றி சொல்வது உண்டு.
'டாக்டர் என்னால் சிறுநீரை அடக்கவே முடியவில்லை. கழிவறைக்கு செல்லும் முன்பே அவசரமாக கசிந்து விடுகிறது. மேலும் பல நேரங்களில் அடிக்கடி சிறுநீர் போக வேண்டும் என்பது போல் இருக்கிறது. சில நேரங்களில் சிறுநீர் கழித்து முடிந்தவுடன் மறுபடியும் மறுபடியும் சிறுநீர் வருவது போன்ற உணர்வு ஏற்படுகிறது.
எப்போதுமே சிறுநீர் பை நிரம்பி இருப்பது போன்ற உணர்வு தென்படுகிறது. சிறுநீர் கசிவதை கட்டுப்படுத்த முடியவில்லை. இருமல், தும்மல் வரும் போதும், குனிந்து ஏதாவது பொருளை எடுக்கும் போதும் என்னை அறியாமல் சிறுநீர் கசிந்து விடுகிறது. சில நேரங்களில் சிரிக்கும் போது கூட சிறுநீர் கசிவு ஏற்படுகிறது' என்று கூறுகிறார்கள்.
பெண்களுக்கு சிறுநீர் கசிவு எதனால் ஏற்படுகிறது?
பெண்களுக்கு ஏற்படும் சிறுநீர் கசிவு பிரச்சனைகளை யூரினரி இன்காண்டினன்ஸ் என்று ஆங்கிலத்தில் சொல்வோம். இது கட்டுப்பாடு இழந்த சிறுநீர்ப்போக்கு அல்லது தன்னிச்சையான சிறுநீர் கசிவு என்று பொருள்படும். அதாவது சிறுநீர் உங்களை அறியாமலேயே கசியக்கூடிய சில விஷயங்கள் ஆகும். சிறுநீரை கட்டுப்படுத்த முடியாத நிலை ஏற்படும்.
இந்த யூரினரி இன்காண்டினன்ஸ் என்பது 40 வயதுக்கு மேல் நிறைய பெண்கள் எதிர்நோக்குகிற ஒரு முக்கியமான விஷயம் ஆகும். குறிப்பாக 48 வயது, 49 வயதாகும் போது பெண்கள் எல்லோருக்கும் மெனோபாஸ் வந்து விடும். மெனோபாஸ் வந்த பிறகு பெண்கள் எதிர்நோக்கும் முக்கியமான பிரச்சனை இதுவாகும்.
பெண்களுக்கு இந்த பிரச்சனை ஏன் ஏற்படுகிறது? இதற்கான காரணங்கள் என்ன? இதற்கான தீர்வுகள் என்ன என்பதை பற்றி பார்க்கலாம்.
பொதுவாக பெண்களுக்கு சிறுநீர் கசிவு ஏற்படுவதற்கு பல காரணங்கள் உள்ளன. அதில் முதல் முக்கியமான காரணம் ஹார்மோன்கள் ஆகும். ஏனென்றால் சிறுநீர்ப்பையின் பிரதான ஆதரவு பகுதியே பெல்விக் டயப்ரம் எனப்படும் இடுப்பு தள தசை தான். இடுப்பு தள தசை என்பது இடுப்பை சுற்றியுள்ள தசைகளின் அடுக்காகும். சிறுநீர்ப்பையில் இருந்து சிறுநீரை வெளியே கொண்டு போகிற குழாய், இந்த இடுப்பு தள தசையின் ஆதரவுடன் தான் இயங்கும்.
சிறுநீரை குழாய் வழியாக வெளியே கொண்டு செல்வதில் இந்த இடுப்பு தள தசை முக்கிய பங்கு வகிக்கிறது. இந்த தசைதான் சிறுநீரை கட்டுப்படுத்தும். சிறுநீர் செல்லும் குழாயை கட்டுப்படுத்தி அதனை இறுக்கி பிடித்திருக்கும். மேலும் அதில் இருக்கிற ஒரு வேல்யூலர் மெக்கானிசத்துக்கு இந்த இடுப்பு தள தசைதான் மிக முக்கியமான ஒன்றாகும்.
சிறுநீரை கட்டுப்படுத்தும் இடுப்பு தள தசை பலவீனம் அடைதல்:
பல நேரங்களில் இந்த தசைகள் பலகீனமாகி, தளர்வாகி தானாக திறக்கும் போது இந்த பெண்களுக்கு சிறுநீர் கசிவு பிரச்சனை ஏற்படலாம். இந்த இடுப்பு தளதசை எப்போதெல்லாம் தளர்வாகும் என்றால், முக்கியமாக பெரி மெனோபாஸ், மெனோபாஸ் காலகட்டத்தில் ஈஸ்ட்ரோஜன் ஹார்மோன் குறைவாகும் போது இந்த இடுப்பு தள தசை பலவீனம் அடைகிறது. இந்த பலவீனம் தான் பெண்களுக்கு சிறுநீர் கசிவு ஏற்படுவதற்கு ஒரு முக்கியமான காரணம் ஆகும்.
டாக்டர் ஜெயராணி காமராஜ்
குழந்தையின்மை சிகிச்சை நிபுணர்
செல்: 72999 74701
பொதுவாகவே வயது கூடும்போது எல்லா தசைகளுமே பலவீனமாகும். குறிப்பாக 40 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தசைகள் பலவீனமாக தொடங்கும். நமது வீடுகளில் உள்ள தாத்தா, பாட்டி போன்ற வயது முதிர்ந்தவர்களை பார்க்கும்போது அவர்களின் தசைகள் மிகவும் பலவீனமாக தொளதொளவென காணப்படும். அந்த தசைகளின் அடர்த்தி குறைவாகும். இதற்கு பல காரணங்கள் உள்ளன.
ஒருவருக்கு வயதாகும் போது ஏற்படுகிற செல்களின் மாற்றங்கள், உடல் ரீதியாக ஏற்படுகிற சில ஹார்மோன் மாற்றங்கள் மற்றும் அவர்களுடைய ஸ்டெம்செல்களின் வலிமையில் தளர்வு ஏற்படுதல் ஆகியவை தசைகள் பலவீனமாவதற்கு ஒரு காரணம். இதேபோல அந்த இடுப்பு தள தசை பலவீனம் ஆகி அதன் செயல்பாடு குறைவாவதும் சிறுநீர் கசிய ஒரு காரணம். மேலும் வயதாகும்போது அந்த சிறுநீர்ப்பையின் தசை சுவர்களே பலவீனமாகும். வழக்கமாக ஒரு லிட்டர் சிறுநீரை கட்டுப்படுத்தி வைத்திருக்கும் சிறுநீர்ப்பையானது, அதன் தசைகள் பலவீனம் அடைவதால் 300 மில்லி, 400 மில்லி சிறுநீரை கூட அதனால் கட்டுப்படுத்தி வைத்திருக்க முடியாது. அதற்குள்ளேயே அவர்களுக்கு ஒரு அவசரநிலை வந்துவிடும். இதனால் அதை கட்டுப்படுத்தி வைத்திருக்கும் தன்மை குறைவாகும்.
சிறுநீர்ப்பை தசைகளின் வலுவில் மாற்றம் ஏற்படுதல்:
பல நேரங்களில் சிறுநீர்ப்பை தசைகளின் வலுவில் மாற்றம் ஏற்பட்டு முறையற்ற வகையில் கட்டுப்பாட்டை இழக்கும். அதன் காரணமாக சிறுநீர்ப்பையின் கீழே உள்ள வால்வு திறந்து இடுப்பு தள தசையில் தளர்வு ஏற்படுவதால் சிறுநீர் கசிவு ஏற்படும்.
வயதாகும்போது சிறுநீர்ப்பையில் உள்ள தசைகளின் வலிமை குறைவாவதன் மூலம் சுருக்கம் சரியாக ஏற்படாததால் சிறுநீர்ப்பையில் சிறுநீர் முழுமையாக காலி ஆகாது. ஒருவேளை முழுமையாக காலியாகாமல் கொஞ்சம் குறைவாக சிறுநீர் இருக்கும் போது அது ஒருவித எரிச்சல் தன்மையை கொடுத்து அந்த பெண்களுக்கு சிறுநீரை கட்டுப்படுத்துவதில் பிரச்சனைகள் வரும். இவைதான் முக்கியமான காரணங்கள் ஆகும்.
இவை தவிர வயதாகும்போது நரம்பு தளர்ச்சி ஏற்பட்டு நரம்புகள் சேதம் அடையும். சில நேரங்களில் நீரிழிவு வரலாம், ரத்த அழுத்தம் ஏற்படலாம். இதனால் ஏற்படுகிற நரம்பு தளர்வுகளும் இந்த இடுப்பு தள தசைக்கும், சிறுநீர்ப்பைக்கு போகிற நரம்புகளை பாதித்து, அதனால் இந்த நரம்புகள் பலவீனமாகி சிறுநீர் கசிவு ஏற்படலாம்.
இந்த மாதிரியான சிறுநீர் கசிவு ஏற்படுகிற பெண்கள் செய்ய வேண்டிய பல முக்கியமான விஷயங்களை கருத்தில் கொள்ள வேண்டும். ஹார்மோன் குறைவது என்பது இயற்கை தான். அதேபோல் உடல் வயதாகும்போது தளர்வு அடைவதும் இயற்கை தான். வியாதிகள் வருகிறது என்று வைத்துக் கொள்ளுங்கள், குறிப்பாக சர்க்கரை வியாதி வரும்போது அதை கட்டுப்பாட்டில் வைத்தால் சிறுநீர் கசிவு என்பது குறைவாகும். கட்டுப்பாடு இல்லாத சர்க்கரை வியாதி இருப்பவர்களுக்கு இந்த பாதிப்பு அதிகமாகும்.
ஏற்கனவே இயற்கையாகவே தசைகளின் வலு குறைவாக உள்ளவர்களுக்கு இந்த சர்க்கரை வியாதியானது அதன் பாதிப்பை மேலும் அதிகரிக்கும். மேலும் சர்க்கரை அதிகமாக இருக்கும்போது தொற்றுக்கள் வருவதை அதிகப்படுத்தும். சில நேரங்களில் சிறுநீர்ப்பையில் சிறுநீர் முழுமையாக காலியாகாமல் சிறுநீர் தேங்கி இருப்பதால் கூட தொற்றுக்கள் அதிகமாகும். எனவே இதுவும் ஒரு காரணமாக அமையும்.
சிறுநீர் கசிவை கட்டுப்படுத்துவதற்கான வழிமுறைகள், பயிற்சிகள்:
இந்த வகையில் சிறுநீர் கசிவு ஏற்பட்டு எங்களிடம் சிகிச்சைக்கு வரும் பெண்களுக்கு முதலில் நாங்கள் பரிசோதனைகளை செய்வோம். இடுப்பு தள தசையின் செயல்பாடு மற்றும் அதன் வலிமை ஆகியவற்றை பரிசோதித்து பார்ப்பதற்கு சில வழிமுறைகள் உண்டு.
மேலும் அதன் பாதிப்புகளை சரி செய்து அதனை கட்டுப்படுத்துவதற்கு சில பயிற்சி முறைகளும் உண்டு. முதலில் இதற்கான காரணத்தை கண்டுபிடித்து அதற்கான தீர்வுகளை கொடுக்க வேண்டும். அதற்கு ரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்த வேண்டும். தொற்றுக்கள் இருந்தால் அதை சரி செய்து குணப்படுத்த வேண்டும்.
ஹார்மோன் மிகவும் குறைவதால் இடுப்பு தள தசை பலவீனம் ஆகிறது. இதன் காரணமாக இந்த தசைகள் மிகவும் சுருங்கி போய் காணப்படும். அப்படி இருந்தால் கண்டிப்பாக அதற்கு ஹார்மோன் ரீபிளேஸ்மெண்ட் தெரபியோ அல்லது அதற்கு பிரத்தியேகமான ஈஸ்ட்ரோஜனை அதிகப்படுத்துவதற்கான ஜெல், கிரீம் ஆகியவற்றை கொடுப்பதன் மூலமாக இந்த பிரச்சனைக்கு ஒரு நல்ல தீர்வை ஏற்படுத்த முடியும்.
இதற்கு நாங்கள் வழக்கமாக பார்ப்பது யூரோ டைனமிக் பரிசோதனை ஆகும். இந்த யூரோ டைனமிக்ஸ் பரிசோதனை மூலம் எந்தெந்த மட்டத்தில் இந்த தளர்வு பாதிப்பு இருக்கிறது என்பதை முறையாக பரிசோதிப்போம். பல நேரங்களில் சிறுநீர்ப்பை திறக்கும் இடத்தில் உள்ள வால்வு பகுதியில் தளர்வு ஏற்பட்டு அது திறப்பது கட்டுப்பாட்டில் இல்லாமல் இருக்கலாம். அதற்கு ஸ்ட்ரெஸ் இன்காண்டினன்ஸ் என்று சொல்வோம். அதை சரி செய்வதற்கு பல நேரங்களில் இடுப்பு தளதசை உடற்பயிற்சி செய்ய வேண்டும்.
இவற்றின் மூலமாக இந்த தசையை பலப்படுத்தும் போது இந்த வால்வு மெக்கானிசம் வலுவடைந்து பல நேரங்களில் சிறுநீர் கசிவு ஏற்படுவதை தடுக்க முடியும். மேலும் சிறுநீர்க்குழாயின் தன்மை சுருங்கும் போதும் இது வரலாம். இதற்கும் ஹார்மோன் ரீபிளேஸ்மென்ட் தெரபி மூலமா கத்தான் தீர்வு காண முடியும்.
மேலும் தொற்றுக்கள் அதிகரிப்பதன் மூலமும் சிறுநீர் கசிவு ஏற்படுகிறது. இந்த பிரச்சனைக்கு முழுமையாக தீர்வு காண்பது எப்படி என்பது பற்றி அடுத்த வாரம் பார்க்கலாம்.






