என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "World Tamil Research Conference"

    • 200-க்கும் மேற்பட்ட தமிழ் அறிஞர்கள், கவிஞர்கள், எழுத்தாளர்கள் பங்கேற்கின்றனர்.
    • மாநாட்டை தொடங்கி வைக்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் அனுமதி கேட்டுள்ளோம்.

    சென்னை:

    சென்னையில் 11-வது உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாடு ஜூலை 7-ந்தேதி தொடங்கி 3 நாட்கள் நடைபெற உள்ளது. இதில் 200-க்கும் மேற்பட்ட தமிழ் அறிஞர்கள், கவிஞர்கள், எழுத்தாளர்கள் பங்கேற்கின்றனர்.

    இது தொடர்பாக உலக தமிழ் ஆராய்ச்சி மன்றத்தின் தலைவர் மு.பொன்ன வைக்கோ, துணைத் தலைவர் இ.சுந்தரமூர்த்தி, மாநாடு ஏற்பாட்டுக் குழு தலைவர் ஜி. ஜான்சாமுவேல், பொதுச் செயலாளர் உலகநாயகி பழனி ஆகியோர் சென்னை பல்கலைக்கழகத்தில் நிருபர்களிடம் கூறியதாவது:-

    உலகத் தமிழ் ஆராய்ச்சி மன்றம் சார்பில் இதுவரை 10 மாநாடுகள் நடத்தப்பட்டு உள்ளன. 11-வது உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாடு ஜூலை 7 முதல் 9-ந்தேதி வரை சென்னை அடுத்த செம்மஞ்சேரியில் உள்ள ஆசியவியல் நிறுவனத்தில் நடைபெற உள்ளது. மாநாட்டை தொடங்கி வைக்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் அனுமதி கேட்டுள்ளோம். ஒப்புதல் கிடைக்கும் என நம்புகிறோம்.

    உலகமெல்லாம் தமிழோசை பரவ வேண்டும் என்பது இம்மாநாட்டின் மையப் பொருள். தமிழ்மொழி, இலக்கியம், தமிழர் பண்பாடு, கலாச்சாரம், நாகரீகம் ஆகியவை குறித்து இளைஞர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கில் இந்த மாநாடு நடத்தப்படுகிறது.

    இதில் இந்தியாவில் இருந்து மட்டுமின்றி ஜப்பான், தென்கொரியா, பிரான்ஸ், ஜெர்மனி உள்ளிட்ட நாடுகளில் இருந்தும் 200-க்கும் மேற்பட்ட தமிழ் அறிஞர்கள், கவிஞர்கள், எழுத்தாளர்கள், பதிப்பாளர்கள், மொழி பெயர்ப்பாளர்கள், அகழ்வாராய்ச்சி நிபுணர்கள் பங்கேற்கின்றனர்.

    தமிழின் தொன்மை, தமிழ் பண்பாடு, தமிழ் இலக்கியம், தொல்லியல், கல்வெட்டியல், மானுடவியல், சமூகவியல், மொழி பெயர்ப்பியல், மொழியியல் என பல்வேறு தலைப்புகளில் வல்லுநர்கள் உரையாற்ற உள்ளனர்.

    மொத்தம் 200 ஆய்வுக் கட்டுரைகள் சமர்ப்பிக்கப் பட உள்ளன. மாநாட்டில் புத்தகக் கண்காட்சி, நூல் வெளியீட்டு நிகழ்ச்சிகள், கலை நிகழ்ச்சிகள் ஆகியவையும் இடம்பெறுகின்றன. மாநாட்டின் நிறைவு நாளில் முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட உள்ளன.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.

    • ஆய்வாளர், படைப்பாளர் என்ற இரு தளங்களில் செயல்படும் இவர் 15 நூல்களின் ஆசிரியர்.
    • திருக்குறள் குறித்த இவரது செயல்பாடும் பங்களிப்பும் உலகத்தமிழர்களால் பாராட்டப்பட்டுள்ளது.

    தமிழ் இலக்கியத்தில் இளங்கலை மற்றும் முதுகலைப் பட்டங்களை வென்ற ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி ஆர்.பாலகிருஷ்ணன் உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தின் தலைவராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

    இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-

    ஆர். பாலகிருஷ்ணன் இ.ஆ.ப. (ஓய்வு) ஒரு புகழ்பெற்ற தமிழ்மொழி அறிஞரும், ஆட்சிப்பணி வல்லுநரும் ஆவார். தமிழ் இலக்கியத்தில் இளங்கலை மற்றும் முதுகலைப் பட்டங்களைப் பெற்ற இவர், தமிழில் குடிமைப்பணித் தேர்வுகளை எழுதி வென்ற முதல் தமிழ் மாணவர்.

    ஆய்வாளர், படைப்பாளர் என்ற இரு தளங்களில் செயல்படும் இவர் 15 நூல்களின் ஆசிரியர். சிந்துவெளிப் பண்பாட்டு தொல்லியல் தரவுகளை சங்க இலக்கியங்கள் மற்றும் தமிழ்நாட்டு அகழாய்வுத் தரவுகளோடு ஒப்பிட்டு இவர் எழுதியுள்ள ஆங்கிலம் மற்றும் தமிழ் நூல்கள் உலகின் கவனத்தை ஈர்த்துள்ளன.

    இந்திய ஆட்சிப் பணியில் 1984-ஆம் ஆண்டு தேர்ந்தெடுக்கப்பட்ட இவர், ஒடிசா அரசிலும் இந்தியத் தேர்தல் ஆணையத்திலும் 34 ஆண்டுகள் சிறப்பாகப் பணியாற்றியவர்.

    ஒடிசா மாநிலத்தின் நிதித்துறைச் செயலர், கூடுதல் தலைமைச் செயலாளர், வளர்ச்சி ஆணையர் போன்ற பொறுப்புகளை வகித்தவர்.

    2018-ல் பணிஓய்வு பெற்ற இவர் அதன்பிறகு முன்னாள் ஒடிசா மாநில முதல்வரின் தலைமை ஆலோசகராக 2024 வரையில் பொறுப்பு வகித்தார்.

    திராவிட மொழிக்குடும்பத்தின் பரவல், சிந்து சமவெளிப் பண்பாடு, தொல்தமிழ்த் தொன்மங்கள், சங்க இலக்கியங்கள் மற்றும் திருக்குறள் குறித்த இவரது செயல்பாடும் பங்களிப்பும் உலகத்தமிழர்களால் பாராட்டப்பட்டுள்ளது.

    இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

    ×