என் மலர்tooltip icon

    சென்னை

    • அனைத்து சிவன் கோவில்களிலும் பக்தர்கள் குவிந்தனர்.
    • சிவனை தரிசனம் செய்யும் வகையில் தடுப்புகள் அமைக்கப்பட்டன.

    சென்னை:

    மகா சிவராத்திரி தினத்தன்று அனைத்து சிவன் கோவில்களிலும் 4 கால சிறப்பு பூஜைகள் விமரிசையாக நடைபெறுவது வழக்கம்.

    பக்தர்கள் காலையில் நீராடிய பிறகு விரதம் மேற்கொள்வார்கள். விரத காலத்தில் சிவபெருமான் நாமத்தை இடைவிடாமல் உச்சரித்து வருவதுடன் சிவலிங்கத்திற்கு வில்வ இலைகளால் அர்ச்சனை செய்வார்கள். பழங்கள், இனிப்புகள், பால் போன்ற நைவேத்யங்களை சிவபெருமானுக்கு பக்தியுடன் படைத்து வழிபடுவார்கள்.

    இந்நிலையில், நேற்று மாலை 6 மணி முதல் சென்னை மற்றும் புறநகரில் உள்ள அனைத்து சிவன் கோவில்களிலும் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.

    மயிலாப்பூர் கபாலீஸ்வரர், திருவான்மியூர் மருந்தீஸ்வரர், சைதாப்பேட்டை காரணீஸ்வரர், புரசை கங்காதீஸ்வரர் உள்ளிட்ட சிவன் கோவில்களில் பக்தர்கள் குவிந்தனர். அனைவரும் சிவபெருமானை தரிசனம் செய்யும் வகையில் தடுப்புகள் அமைத்து ஏற்பாடுகள் செய்யப்பட்டன.

    பால், தயிர், பழங்கள், தேன், இளநீர், சந்தனம், விபூதி உள்ளிட்ட பல்வேறு புனிதப் பொருள்களைக் கொண்டு சிவபெருமானுக்கு அபிஷேகம் நடைபெற்றன.

    ஒவ்வொரு கால பூஜை முடிந்ததும் தீபாராதனை காட்டப்பட்டது. பிரசாதங்களும் விநியோகம் செய்யப்பட்டது.

    நேற்று மாலை முதல் இன்று அதிகாலை வரை 4 கால பூஜையும் வெகு விமர்சையாக நடைபெற்றது. பக்தர்களுக்கு அருட்பிரசாதங்கள் வழங்கப்பட்டன. தீபாராதனைகளின் போது பக்தர்கள் உற்சாகத்துடன் ஓம் நமசிவாய கோஷம் எழுப்பினர்.

    இதேபோல், இந்தியா முழுவதிலும் உள்ள 12 ஜோதிர்லிங்க தலங்கள் உள்ளிட்ட அனைத்து பிரபலமான கோவில்களிலும் சிவராத்திரி வழிபாடுகள் விமர்சையாக நடந்தன.

    • இலங்கை தமிழர்களில் 40 சதவீதம் பேர் இந்திய மண்ணிலேயே பிறந்தவர்கள்.
    • இலங்கைத் தமிழர்களை சட்டவிரோதமாக குடியேறியவர்களாகக் கருதக்கூடாது.

    இலங்கை தமிழர்களுக்கு குடியுரிமை வழக்க வேண்டும் என பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.

    அந்த கடிதத்தில் அவர் கூறியிருப்பதாவது:-

    தமிழ்நாட்டில் சுமார் 89 ஆயிரம் இலங்கை தமிழர்கள் வசித்து வருகின்றனர்.

    40 ஆண்டுகளுக்கு மேலாக தமிழ்நாட்டில் வசிக்கும் இலங்கை தமிழர்களுக்கு குடியுரிமை வழங்க வேண்டும்.

    நீண்ட கால விசா வழங்குதல் உள்ளிட்ட நிலையான, மனிதாபிமான அடிப்படையிலான நிரந்தர தீர்வு காண வேண்டும்.

    தமிழ்நாட்டில் வசிக்கும் இலங்கை தமிழர்களில் 40 சதவீதம் பேர் இந்திய மண்ணிலேயே பிறந்தவர்கள்.

    குடியுரிமை (அ) நீண்டகால விசா போன்ற நிலையான சட்டப்பூர்வமான தீர்வுகள் இலங்கை தமிழர்களுக்கு கிடைக்கவில்லை.

    இலங்கைத் தமிழர்களை சட்டவிரோதமாக குடியேறியவர்களாகக் கருதக்கூடாது என்று அறிவித்திட வேண்டும்.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    • தமிழ் அழகன் அவர்கள் காலமானார் என்ற செய்தி அறிந்து மிகுந்த துயருற்றேன்.
    • அவரை இழந்து வாடும் குடும்பத்தாருக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

    அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள எக்ஸ் தள பக்கத்தில் கூறியிருப்பதாவது:-

    புரட்சித்தலைவர் எம்ஜிஆர், புரட்சித்தலைவி அம்மா ஆகியோரின் அமைச்சரவையில் மூத்த அமைச்சராக பணியாற்றியவரும், அதிமுக-வில் மூத்த முன்னோடியாக விளங்கிய, மறைந்த மரியாதைக்குரிய ஆர்.எம். வீரப்பன் அவர்களின் மகனும்,

    தமிழ்த் திரையுலகில் தயாரிப்பாளராகவும் இயக்குனராகவும் பணியாற்றியவரும், சிறப்பான ஆன்மீக சேவை புரிந்தவருமான

    வீ. தமிழ் அழகன் அவர்கள் காலமானார் என்ற செய்தி அறிந்து மிகுந்த துயருற்றேன்.

    அவரை இழந்து வாடும் குடும்பத்தாருக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்வதுடன், மறைந்த அவர்தம் ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்.

    இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

    • நாட்டை தாய்நாடு என்றும், நதிக்கும், நெல்லும் பெண்களின் பெயரை வைப்பது மட்டும் பெருமையல்ல.
    • தமிழக பெண் தெய்வங்களிடம் பகிரங்கமாக வருத்தம் தெரிவிப்பதுதான் அரசியல் நாகரீகமாகும்.

    தவெக தலைவர் விஜய் குறித்த கேள்விக்கு நடிகை திரிஷாவை தொடர்புபடுத்தி பேசிய நயினார் நாகேந்திரனுக்கு பாமக நிறுவனர் ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார்.

    மேலும் பேசிய அவர்," திரிஷா குறித்து அவதூறாக பேசியதற்கு குஷ்பு கண்டனம் தெரிவிக்காமல் இருப்பது வருத்தம் அளிக்கிறது" என்றார்.

    இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-

    தமிழகத்தின் 2026 சட்டமன்ற தேர்தல் முன்னெடுப்பாக சேலத்தில் தவெக தலைவர் விஜய், சீலநாயக்கன்பட்டி அருகே தாளமுத்து பகுதியில் தவெக நிர்வாகிகள் சந்திப்புக் கூட்டம் நடைபெற்றது.

    இக்கூட்டத்தில் பேசிய விஜய், "என்னை வீட்டை விட்டு வெளியே வா என்கிறார்கள்; என் வீடு எது தெரியுமா? தமிழ்நாடுதான் என் வீடு. 8 கோடி தமிழக மக்களும் தான் என் குடும்பம். அவர்களுடன் முதல் படை வீரனாக நிற்பதே எனது குறிக்கோள். நான் வாக்கு கேட்க வரவில்லை. மக்களுக்காக நீதி கேட்க வந்துள்ளேன். மற்ற கட்சிகளுக்கு பொதுக்கூட்டம் நடத்த அனுமதி வழங்கப்படுகின்ற நிலையில் எனக்கு தடைகள் விதிக்கப்படுகிறது. கூட்டணிகளை மட்டும் நம்பி இருக்கக் கூடிய 50, 70 வருட கட்சினு ஆட்சி அதிகாரத்தில் இருப்பவர்களை மீறி, இன்றைக்கு களத்தில் தமிழகத்தில் 30 சதவீத வாக்கு வங்கியுடன் முதன்மை சக்தியாக தவெக உள்ளது" என்றார்.

    விஜய்யின் இக்கருத்திற்கு பாஜக மாநிலத்தலைவர் நயினார் நாகேந்திரன் பத்திரிக்கையாளர்களுடன் பேசும்போது, "அரசியலில் பாவம் அவருக்கு அனுபவம் இல்லை. முதலில் வீட்டை விட்டு வெளியே வரவேண்டும். திரிஷாவை விட்டு வெளியே வரவேண்டும். வெளியே வந்தால் தான் என்ன நடக்கிறது என்பது தெரியும்" என்றார்.

    கடந்த 2023-ம் ஆண்டு குஷ்பூ குறித்து திமுக பேச்சாளர் சிவாஜி கிருஷ்ணமூர்த்தி அவதூறாக பேசியதற்கு, தற்போது பாஜகவில் உள்ள குஷ்பு கொதித்தெழுந்து பெண்களை பற்றி தவறாக பேச யாருக்கும் தைரியம் வரக்கூடாது வந்தால் அடிப்போம் என்றார்.

    ஆனால் இது குறித்து அவர் கண்டனம் தெரிவிக்காதது வருத்தம் அளிக்கிறது. அதே நேரம் கனிமொழி எம்பி தனது கண்டனத்தை பதிவு செய்துள்ளார்.

    பெண்களுக்கு உரிய மரியாதையையும், அவர்களுக்கான சமூக அந்தஸ்தையும் கொடுப்பது ஒவ்வொருவரின் கடமையாகும்.

    நாட்டை தாய்நாடு என்றும், நதிக்கும், நெல்லும் பெண்களின் பெயரை வைப்பது மட்டும் பெருமையல்ல. மூத்த அரசியல்வாதியாகவும், தேசிய கட்சியான பாரதிய ஜனதா கட்சியின் தமிழ்நாடு தலைவாராக உள்ள நயினார் நாகேந்திரன் தன் பேச்சுக்கு தமிழக பெண் தெய்வங்களிடம் பகிரங்கமாக வருத்தம் தெரிவிப்பதுதான் அரசியல் நாகரீகமாகும்.

    நான் எப்போதும் பெண் குழந்தைகளை பிறந்தது முதல் 19 வயது வரை பெண் தெய்வங்கள் என்றும் 19 வயதிற்கு மேல் தேவதைகள் என்றும் சொல்லி வருகிறேன். பெண்களே இந்நாட்டின் ஆணிவேர். அவர்களை மதித்திடுங்கள். அதன் பின் "பெண்கள் பாதுகாப்பு, போதை பொருள் இல்லாத தமிழ்நாடு உருவாக்க வேண்டும் இதுதான் பாஜகவின் கனவு என்று சொல்லுங்கள்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • நாளை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.
    • அதிகாலை வேளையில் ஓரிரு இடங்களில் லேசான பனிமூட்டம் காணப்படும்.

    சென்னை:

    சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

    பூமத்தியரேகைக்கு அருகிலுள்ள இந்தியப் பெருங்கடலின் கிழக்கு பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது.

    இதன் காரணமாக, ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி தெற்கு வங்கக்கடலின் மையப்பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய பூமத்தியரேகைக்கு அருகிலுள்ள இந்தியப் பெருங்கடல் பகுதிகளில் அடுத்த 48 மணிநேரத்தில் உருவாகக்கூடும்.

    தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் இன்று முதல் 19-ந்தேதி வரை வறண்ட வானிலை நிலவக்கூடும்.

    20-ந்தேதி தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசான மழை பெய்யக்கூடும்.

    21-ந்தேதி தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

    இதனிடையே நாளை முதல் 20-ந்தேதி வரை வட தமிழக மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் அதிகாலை வேளையில் லேசான பனிமூட்டம் காணப்படும். குறிப்பாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர் மாவட்டங்கள் மற்றும் புதுவையில் ஓரிரு இடங்களில் 16 ஆம் தேதி அதிகாலை வேளையில் மிதமான பனிமூட்டம் காணப்படும்.

    சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் 17 ஆம் தேதி அதிகாலை வேளையில் லேசான பனிமூட்டம் காணப்படும்.

    இதற்கிடையே இன்று முதல் 19-ந்தேதி வரை தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலை ஓரிரு இடங்களில் 2° செல்சியஸ் வரை இயல்பை விட அதிகமாக இருக்கக்கூடும்.

    சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகாலை வேளையில் ஓரிரு இடங்களில் மிதமான பனிமூட்டம் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 31-32° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 22° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.

    நாளை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகாலை வேளையில் ஓரிரு இடங்களில் லேசான பனிமூட்டம் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 31-32° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 22-23° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.

    மீனவர்களுக்கான எச்சரிக்கை:

    இன்று மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய தென்தமிழக கடலோரப்பகுதிகள், குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 60 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.

    நாளை தென்மேற்கு வங்கக்கடலின் சில பகுதிகள் அதனை ஒட்டிய தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய பூமத்தியரேகைக்கு அருகிலுள்ள இந்தியப் பெருங்கடலின் கிழக்கு பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.

    17-ந்தேதி முதல் 19-ந்தேதி வரை தென்மேற்கு வங்கக்கடலின் சில பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய பூமத்தியரேகைக்கு அருகிலுள்ள இந்தியப் பெருங்கடலின் கிழக்கு பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 60 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாமென்று அறிவுறுத்தப்படுகிறார்கள்.

    • இந்திய அணியுடன் விளையாட முடியாது என பாகிஸ்தான் தெரிவித்து இருந்தது.
    • இந்தியா - பாகிஸ்தான் அணிகள் இடையிலான போட்டி இன்று இரவு நடைபெறுகிறது.

    டி20 உலகக் கோப்பை 2026 கிரிக்கெட் தொடரை இந்தியா மற்றும் இலங்கை நாடுகள் இணைந்து நடத்துகின்றன. இந்தத் தொடரில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கும் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் இடையிலான போட்டி இன்று (பிப். 15) இரவு 7.00 மணிக்கு தொடங்குகிறது.

    முன்னதாக டி20 உலகக் கோப்பை தொடரில் இந்திய அணியுடன் விளையாட முடியாது என பாகிஸ்தான் தெரிவித்து இருந்தது. எனினும், பின்னர் தனது முடிவை மாற்றிக் கொண்ட நிலையில், இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் இடையிலான போட்டி இன்று இரவு நடைபெறுகிறது.

    வழக்கமாக இந்தியா - பாகிஸ்தான் அணிகள் இடையிலான போட்டியில் பரபரப்புக்கு பஞ்சம் இருக்காது. இந்த நிலையில், இந்தியா - பாகிஸ்தான் அணிகள் மோதும் போட்டியை சென்னை மெரினா கடற்கரையில் ஒளிபரப்பு செய்ய சென்னை மாநகராட்சி சார்பில் சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    • மகளிர் உரிமைத் தொகை ஒரு சிறந்த நலத்திட்டம். செயல்படுத்தியது பாராட்டத்தக்கது.
    • தேர்தலில் வெற்றியை உறுதிப்படுத்தும் என்று நம்புவது ஒரு மூடநம்பிக்கை.

    சென்னை:

    அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தரவு தொடர்பு துறையின் தலைவர் பிரவீன் சக்கரவர்த்தி வெளியிட்டுள்ள 'எக்ஸ்' வலைதளப் பதிவில் கூறியிருப்பதாவது:-

    மகளிர் உரிமைத் தொகை ஒரு சிறந்த நலத்திட்டம். செயல்படுத்தியது பாராட்டத்தக்கது. ஆனால், அது மட்டுமே தேர்தலில் வெற்றியை உறுதிப்படுத்தும் என்று நம்புவது ஒரு மூடநம்பிக்கை. கடந்த 3 ஆண்டுகளில், தேர்தலுக்கு முன்னதாக இது போன்ற திட்டங்களை அறிவித்த 9 பெரிய மாநில அரசுகளில், 4 மட்டுமே வெற்றி பெற்றன; 5 தோல்வியடைந்தன.

    இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.

    • சுமார் ஆயிரம் ஆண்டுகள் பழமையான கோவில்கள் புனரமைக்கப்பட்டுள்ளன.
    • 8,423 கோடி ரூபாய் மதிப்பிலான கோவில் நிலங்கள் தி.மு.க. ஆட்சியில் மீட்கப்பட்டுள்ளன.

    சென்னை :

    சென்னை கீழ்ப்பாக்கத்தில் வள்ளலாரின் வாழ்க்கை வரலாற்று புகைப்பட கண்காட்சியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். இதன்பின் புகைப்படக் கண்காட்சியை பார்வையிட்டார்.

    அதனை தொடர்ந்து அனைத்துலக வள்ளலார் மாநாட்டை தொடங்கி வைத்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:-

    * அறநிலையத்துறை இவ்வளவு சிறப்பாக செயல்படமுடியும் என காட்டியவர் சேகர்பாபு.

    * தான் செயல்பாபு என்பதை தொடர்ந்து நிரூபித்து கொண்டிருப்பவர் அமைச்சர் சேகர்பாபு.

    * தி.மு.க. ஆட்சியில் 4,192 கோவில்கள் புதுப்பிக்கப்பட்டு குடமுழுக்கு நடத்தப்பட்டுள்ளது.

    * சுமார் ஆயிரம் ஆண்டுகள் பழமையான கோவில்கள் புனரமைக்கப்பட்டுள்ளன.

    * 8,423 கோடி ரூபாய் மதிப்பிலான கோவில் நிலங்கள் தி.மு.க. ஆட்சியில் மீட்கப்பட்டுள்ளன.

    * 19 திருக்கோவில்களில் முதலுதவி மருத்துவமனைகள் அமைக்கப்பட்டுள்ளன.

    * 12 திருக்கோவில்களில் நாள் முழுவதும் அன்னதான திட்டம் விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது.

    * 5 லட்சம் பேர் கலந்து கொண்ட முருகன் மாநாட்டை நடத்தி காட்டினோம்.

    * உலகிற்கே தனிப்பெருங்கருணை என்ற அன்பு வழியை போதித்தவர் வள்ளலார்.

    * பசிப்பிணியை போக்கும் திட்டங்கள் தான் திராவிட மாடல் அரசின் திட்டங்கள்.

    * வள்ளலார் தமிழ் சமூகத்தில் உதித்த புரட்சியாளர்.

    * வள்ளலாரை போற்ற வேண்டியது தமிழ் சமூகத்தின் கடமை.

    * அனைத்துலக வள்ளலார் மாநாட்டை குறிக்கும் விதமாக நினைவுத்தூண் அமைக்கப்படும்.

    * வள்ளலார் சன்மார்க்க பயிற்சி பள்ளி அரசு சார்பில் அமைக்கப்படும்.

    * 3 இடங்களில் வள்ளலார் அன்னதான கூடங்கள் அமைக்கப்படும்.

    * வடலூரில் வள்ளலார் பெயரில் மூலிகை தோட்டம் அமைக்கப்படும்.

    * தலைநகர் சென்னையில் வள்ளலார் ஆய்வு மையம் அமைக்கப்படும் என்றார். 

    • வருகிற மார்ச் 1-ந்தேதி மதுரையில் பிரதமர் பங்கேற்கும் பிரமாண்ட பொதுக்கூட்டத்துக்கு பாரதிய ஜனதா ஏற்பாடு செய்து வருகிறது.
    • தேசிய ஜனநாயக கூட்டணி பொதுக்கூட்டமாக நடத்தப்படும் இந்த கூட்டத்தில் அ.தி.மு.க. உள்ளிட்ட அனைத்து கூட்டணி கட்சி தலைவர்களும் பங்கேற்கிறார்கள்.

    சென்னை:

    தமிழகத்தில் ஏப்ரல் மாதம் சட்டமன்ற தேர்தல் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சட்டமன்ற தேர்தல் தொடர்பான அறிவிப்பு இந்த மாத இறுதியிலோ அல்லது அடுத்த மாத தொடக்கத்திலோ வெளியாக உள்ளது.

    தமிழகத்தில் தி.மு.க. தலைமையில் ஒரு அணியும் அ.தி.மு.க. தலைமையில் இன்னொரு அணியும் செயல்பட்டு வரும் நிலையில், தமிழக வெற்றி கழக தலைவர் விஜய், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் ஆகியோர் தனித்து களமிறங்குகிறார்கள்.

    இதனால் சட்டமன்ற தேர்தலில் 4 முனை போட்டி ஏற்பட்டுள்ளது. தேர்தலில் மீண்டும் வெற்றி பெற்று ஆட்சி அமைக்க வேண்டும் என்கிற எண்ணத்தில் தி.மு.க. பம்பரமாக சுழன்று வருகிறது. அதே நேரத்தில் தி.மு.க.வை வீழ்த்தி ஆட்சியைப் பிடிக்க வேண்டும் என்கிற எண்ணத்தில் அ.தி.மு.க.வும் தீவிரமாக செயல்பட்டு வருகிறது. அ.தி.மு.க. தலைமையிலான கூட்டணியில் பா.ஜ.க., அன்புமணி தலைமையிலான பா.ம.க., டி.டி.வி.தினகரனின் அ.ம.மு.க., ஜி.கே.வாசனின் த.மா.கா. ஆகிய கட்சிகள் இடம் பெற்றுள்ளன.

    மேலும் பல சிறிய கட்சிகளும் இந்த கூட்டணிக்கு ஆதரவு தெரிவித்துள்ளன.

    கடந்த பாராளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க. கூட்டணியில் இடம் பெற்றிருந்த தே.மு.தி.க. தற்போது எந்தக் கூட்டணியிலும் இல்லை என்கிற அறிவிப்பை வெளியிட்டு விட்டு யாருடன் கூட்டணி அமைப்பது என்று ரகசிய பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகிறது.

    இது தொடர்பாக தி.மு.க. அ.தி.மு.க. ஆகிய 2 கட்சிகளுடன் தே.மு.தி.க. திரைமறைவில் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக பரபரப்பான தகவல்கள் வெளியாகிக் கொண்டே இருக்கின்றன.

    இந்த முறை தி.மு.க. கூட்டணியில் இடம் பெற்று தே.மு.தி.க. தேர்தலை சந்திக்க தயாராகி விட்டதாகவும் இது தொடர்பான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் எதிர்பார்க்கப்பட்ட நிலையில் முக்கிய திருப்பமாக தே.மு.தி.க.வை தங்களது கூட்டணியில் எப்படியாவது தக்க வைத்துக் கொள்ள வேண்டும் என்று பாரதிய ஜனதா கட்சியும் தொடர் முயற்சிகளில் ஈடுபட்டு வருகிறது.

    இது தொடர்பாக தமிழக பா.ஜனதா தலைவர்கள் மற்றும் தே.மு.தி.க. தலைவர்கள் ஆகியோர் நேரில் சந்தித்து பேச்சு நடத்தி இருப்பதாக புதிய தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.

    தமிழகத்தில் ஏற்கனவே சுற்றுப்பயணம் செய்துள்ள பிரதமர் மோடி சென்னையை அடுத்த மதுராந்தகத்தில் நடைபெற்ற கூட்டத்தில் கலந்து கொண்டார்.

    இந்த நிலையில் வருகிற மார்ச் 1-ந்தேதி மதுரையில் பிரதமர் பங்கேற்கும் பிரமாண்ட பொதுக்கூட்டத்துக்கு பாரதிய ஜனதா ஏற்பாடு செய்து வருகிறது.

    தேசிய ஜனநாயக கூட்டணி பொதுக்கூட்டமாக நடத்தப்படும் இந்த கூட்டத்தில் அ.தி.மு.க. உள்ளிட்ட அனைத்து கூட்டணி கட்சி தலைவர்களும் பங்கேற்கிறார்கள்.

    இந்த கூட்டத்தில் தே.மு.தி.க. பொதுச்செயலாளர் பிரேமலதாவையும் ஒன்றாக மேடை ஏற்றுவதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது.

    இது தொடர்பாகவே பா.ஜனதா-தே.மு.தி.க. இடையே பேச்சுவார்த்தைகளும் நடத்தப்பட்டுள்ளன. இந்த பேச்சுவார்த்தையை இன்னும் சில தினங்களில் முடித்து அ.தி.மு.க.-பா.ஜனதா கூட்டணியில் தே.மு.தி.க. இடம் பெறுவதை உறுதி செய்துவிட வேண்டும் என்று மத்திய மந்திரி அமித்ஷா தமிழக பா.ஜ.க. தலைவர்களிடம் அறிவுறுத்தி உள்ளார்.

    கடந்த முறை மதுராந்தகத்தில் நடைபெற்ற பிரதமரின் பொதுக்கூட்டத்திலேயே தே.மு.தி.க. பொதுச்செயலாளர் பிரேமலதா பங்கேற்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது.

    ஆனால் கூட்டணி தொடர்பான பேச்சு வார்த்தைகள் இறுதி செய்யப்படாததால் பிரேமலதா அந்த கூட்டத்தில் பங்கேற்கவில்லை.

    இதுபோன்ற சூழலில் தான் இன்னும் 2 வாரத்தில் மீண்டும் பிரதமர் தமிழகம் வர இருக்கிறார். அதற்குள் தே.மு.தி.க.வுடன் பேச்சுவார்த்தையை உறுதி செய்து தங்களது கூட்டணியில் அந்தக் கட்சி இருப்பதை எப்படியாவது உறுதி செய்து விட வேண்டும் என்று தமிழக பா.ஜ.க. தலைவர்களும் தீவிரமான முயற்சிகளில் ஈடுபட்டுள்ளனர்.

    இதுபற்றி பா.ஜனதா நிர்வாகி ஒருவர் கூறும் போது, வருகிற சட்டமன்ற தேர்தலில் நிச்சயம் தே.மு.தி.க. ஜனநாயக கூட்டணியிலேயே இடம்பெறும் என்று நம்புவதாகவும், இது தொடர்பான பேச்சுவார்த்தைகள் விரைவில் முடிவடையும் என்றும் தெரிவித்துள்ளார்.

    • இந்த வளைவில் வாகனங்கள் 30 கிலோ மீட்டர் வேகத்தில் தான் பயணிக்க வேண்டும் என்ற வேக கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.
    • இரவு நேரங்களில் பாதுகாப்பான பயணத்தை கருத்தில் கொண்டு மின் விளக்குகளும் பொருத்தப்பட்டுள்ளன.

    சென்னை:

    சென்னை அடையாறு மற்றும் கிண்டியை இணைக்கும் பிரதான சாலையாக சர்தார் படேல் சாலை உள்ளது. 3.2 கிலோ மீட்டர் தூரம் கொண்ட இந்த சாலையில் கவர்னர் மாளிகை, சென்னை ஐ.ஐ.டி. நிறுவனம், அண்ணா பல்கலைக்கழகம், அடையாறு புற்றுநோய் நிறுவனம், மத்திய தோல் ஆராய்ச்சி நிறுவனம், காந்தி மண்டபம், காமராஜர் நினைவிடம், கிண்டி சிறுவர் பூங்கா போன்றவை உள்ளன.

    சர்தார் படேல் சாலையின் மத்திய கைலாஷ் பகுதியில் இருந்து ராஜீவ்காந்தி சாலை (ஓ.எம்.ஆர். சாலை) தொடங்குகிறது.

    போக்குவரத்து நெரிசல் மிகுந்த பகுதியான இங்கு வாகனங்கள் எளிதாக செல்லும் வகையில் ரூ.61 கோடியில் 'எல்' வடிவ இருவழிச் சாலை மேம்பாலம் அமைக்கப்பட்டுள்ளது.

    இந்த மேம்பாலத்தில் ஒருவழி வாகன போக்குவரத்து மட்டுமே அனுமதிக்கப்படும். அதாவது, சர்தார் படேல் சாலையில் இருந்து ஓ.எம்.ஆர். சாலைக்கு செல்பவர்கள் மட்டும் 652 மீட்டர் (அணுகு சாலை உள்பட) நீளம் கொண்ட இந்த 'எல்' வடிவ மேம்பாலத்தை பயன்படுத்த வேண்டும்.

    அதேநேரத்தில், அடையாறு பகுதியில் இருந்து கிண்டி நோக்கி செல்லும் அனைத்து வாகனங்களும் தங்குதடையின்றி செல்வதற்கு ஏதுவாகவும் இந்த பாலம் இருக்கும். கிண்டியிலிருந்து அடையாறுக்கும், ஓ.எம்.ஆர். சாலையிலிருந்து கிண்டிக்கும் செல்லும் வாகனங்களும் தடையின்றி செல்லலாம்.

    வாகன ஓட்டிகளின் கூடுதல் பாதுகாப்புக்காக பாலத்தின் இருபுறமும் தடுப்புசுவரின் உயரம் அதிகரிக்கப்பட்டுள்ளது. வாகனங்கள் இந்த வளைவில் செல்லும் போது சிரமமின்றி கடந்து செல்லும் வகையில் குறுக்குவெட்டு சாய்வுடன் இருக்கும்படி வடிவமைக்கப்பட்டுள்ளது.

    இந்த வளைவில் வாகனங்கள் 30 கிலோ மீட்டர் வேகத்தில் தான் பயணிக்க வேண்டும் என்ற வேக கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.

    வேக கட்டுப்பாட்டுக்கான எச்சரிக்கை பலகைகள் பாலத்தின் தடுப்புச் சுவரில் பொருத்தப்பட்டுள்ளது. இரவு நேரங்களில் பாதுகாப்பான பயணத்தை கருத்தில் கொண்டு மின் விளக்குகளும் பொருத்தப்பட்டுள்ளன.

    இந்த 'எல்' வடிவ மேம்பால பணிகள் நிறைவடைந்த நிலையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இந்த மேம் பாலத்தை இன்று பொதுமக்கள் பயன்பாட்டிற்காக திறந்து வைத்தார். மேலும் மேம்பாலத்தில் நடந்து சென்று ஆய்வு மேற்கொண்டார்.

    இந்த மேம்பாலம் அந்த வழியாக செல்லும் ஆயிரக்கணக்கான வாகன ஓட்டிகளுக்கு மிகப்பெரிய நிம்மதியை தரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    • நாளை மின் தடை ஏற்படும் பகுதிகள் குறித்து தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
    • காலை 9 மணி முதல் பிற்பகல் 2 வரை மின் தடை செய்யப்படும்.

    சென்னை:

    சென்னையில் பராமரிப்பு பணிகள் காரணமாக ஒரு சில பகுதிகளில் மின் தடை செய்யப்படுகிறது. காலை 9 மணி முதல் பிற்பகல் 2 வரை மின் தடை செய்யப்படும். பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும்.

    அந்த வகையில், நாளை மின் தடை ஏற்படும் பகுதிகள் குறித்து தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதன்படி, சென்னையில் நாளை (16.02.2026) காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின் வாரிய பராமரிப்பு பணி காரணமாக பின்வரும் இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும். அதன்படி,

    ராமாபுரம்: மங்களா நகர், அம்பாள் நகர், போரூர், மவுண்ட் பூந்தமல்லி ரோடு, ஆர்.இ.நகர், வன்னியர் தெரு.

    அம்பத்தூர்: மணலோடை தெரு, பத்மா சீனிவாச நகர், சரஸ்வதி நகர், லெனின் நகர், ஏரிக்கரை சாலை, வெங்கடேஸ்வரா நகர்.

    வியாசர்பாடி: இஎச் சாலை, பிவி காலனி, சாஸ்திரி நகர், இந்திரா நகர் விரிவாக்கம், வியாசர்பாடி தொழிற்பேட்டை, காந்தி நகர், ஸ்டீபன் சாலை, வியாசர் நகர், புதுநகர் முக்கிய தெருக்களில் எம்பிஎம் தெரு, மார்க்கெட் தெரு, சென்ட்ரல் கிராஸ் தெரு 10 முதல் 19 வரை, கிழக்கு குறுக்குத் தெரு 10 முதல் 19 வரை, எம்கேபி நகர் 1 முதல் 8வது மெயின் ரோடு, எம்கேபி நகர், கல்யாண்புரம், சத்தியமூர்த்தி நகர் 1 முதல் 25வது தெரு, சாமியார்தோட்டம் 1 முதல் 4வது தெரு, பல்லையா தெரு 1 முதல் 4வது தெரு வரை, உதய சூரியன் நகர், எஸ்.ஏ. காலனி, சர்மா நகர். 

    • 19-ந்தேதி தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசான மழை பெய்யக்கூடும்.
    • நாளை முதல் 19-ந்தேதி வரை வட தமிழக மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் அதிகாலை வேளையில் லேசான பனிமூட்டம் காணப்படும்.

    சென்னை :

    சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

    பூமத்திய ரேகைக்கு அருகிலுள்ள இந்தியப் பெருங்கடலின் கிழக்கு பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது.

    இதன் காரணமாக, ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி தெற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய இந்தியப் பெருங்கடல் பகுதிகளில் அடுத்த 48 மணிநேரத்தில் உருவாகக்கூடும்.

    கிழக்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக இன்று முதல் 18-ந்தேதி வரை தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும்.

    19-ந்தேதி தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசான மழை பெய்யக்கூடும்.

    20-ந்தேதி தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

    பனிமூட்டம் பற்றிய முன்னறிவிப்பு மற்றும் எச்சரிக்கை:

    நாளை முதல் 19-ந்தேதி வரை வட தமிழக மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் அதிகாலை வேளையில் லேசான பனிமூட்டம் காணப்படும்.

    சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் 15 ஆம் தேதி அதிகாலை வேளையில் மிதமான பனிமூட்டம் காணப்படும்.

    சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர் மாவட்டங்கள் மற்றும் புதுவையில் ஓரிரு இடங்களில் 16-ந்தேதி அதிகாலை வேளையில் மிதமான பனிமூட்டம் காணப்படும்.

    திருவள்ளூர், சேலம், தர்மபுரி மற்றும் நாமக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் 17 ஆம் தேதி அதிகாலை வேளையில் மிதமான பனிமூட்டம் காணப்படும்.

    கிருஷ்ணகிரி, தர்மபுரி மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் 18 ஆம் தேதி அதிகாலை வேளையில் மிதமான பனிமூட்டம் காணப்படும்.

    வேலூர், திருப்பத்தூர், கிருஷ்ணகிரி மற்றும் தர்மபுரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் 19 ஆம் தேதி அதிகாலை வேளையில் மிதமான பனிமூட்டம் காணப்படும்.

    சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகாலை வேளையில் ஓரிரு இடங்களில் மிதமான பனிமூட்டம் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 31-32° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 21-22° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.

    நாளை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகாலை வேளையில் ஓரிரு இடங்களில் மிதமான பனிமூட்டம் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 32° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 22-23 செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.

    மீனவர்களுக்கான எச்சரிக்கை:-

    18-ந்தேதி மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய தென்தமிழக கடலோரப்பகுதிகள், குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 60 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாமென்று அறிவுறுத்தப்படுகிறார்கள். 

    ×