என் மலர்
சென்னை
- மண்டலம் தோறும் நிர்வாகிகள் சந்திப்பு மாநாடு நடத்த தி.மு.க. தலைவர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டார்.
- 2-வது மண்டல மாநாடு தொடர்பான அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாக உள்ளதாக கூறப்படுகிறது.
தி.மு.க.வில் சட்டமன்ற தேர்தல் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. தேர்தலையொட்டி பல்வேறு அணிகளின் செயல்பாடுகள், ஆலோசனைகள் வழங்கப்பட்டு வருகிறது.
தி.மு.க. இளைஞர் அணியில் தமிழகம் முழுவதும் 5 லட்சம் நிர்வாகிகள், 50 லட்சத்திற்கும் மேற்பட்ட உறப்பினர்கள் உள்ளனர்.
இதில் உள்ள 5 லட்சம் நிர்வாகிகளை ஒன்றிணைத்து மண்டலம் தோறும் நிர்வாகிகள் சந்திப்பு மாநாடு நடத்த தி.மு.க. தலைவர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டார்.
அதன்படி முதற்கட்டமாக வடக்கு மண்டல நிர்வாகிகள் சந்திப்பு மாநாடு திருவண்ணாமலையில் நடைபெற்றது. அதனை தொடர்ந்து 2-வது மாநாட்டை நடத்த தி.மு.க. இளைஞரணி முடிவு செய்துள்ளது.
இந்த நிலையில், தென்மாவட்டங்கள் மற்றும் டெல்டா மாவட்டங்களுக்கான தி.மு.க. இளைஞரணி மாநாடு ஜனவரி 24-ந்தேதி நடைபெறும் என தகவல் வெளியாகி உள்ளது.
2-வது மண்டல மாநாடு தொடர்பான அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாக உள்ளதாக கூறப்படுகிறது.
- தங்கம் விலை மீண்டும் ரூ.99 ஆயிரத்தை தாண்டியது.
- தங்கம் விலையை போல, வெள்ளி விலையும் உயர்ந்துள்ளது.
சென்னை:
தங்கம் விலை கடந்த 15-ந்தேதி ஒரு சவரன் ரூ.1 லட்சத்தை தாண்டி இதுவரை இல்லாத உச்சமாக பதிவானது. இதன் தொடர்ச்சியாக நேற்று முன்தினம் சவரனுக்கு ரூ.1,320 குறைந்து, ஒரு கிராம் ரூ.12 ஆயிரத்து 350-க்கும், ஒரு சவரன் ரூ.98 ஆயிரத்து 800-க்கும் விற்பனை ஆனது.
நேற்றைய நிலவரப்படி மீண்டும் தங்கம் விலை உயர்ந்து இருந்தது. நேற்று கிராமுக்கு ரூ.50-ம், சவரனுக்கு ரூ.400-ம் உயர்ந்து, ஒரு கிராம் ரூ.12 ஆயிரத்து 400-க்கும், ஒரு சவரன் ரூ.99 ஆயிரத்து 200-க்கும் விற்பனை செய்யப்பட்டது. இதன் மூலம் தங்கம் விலை மீண்டும் ரூ.99 ஆயிரத்தை தாண்டியது.
இந்த நிலையில் இன்றும் தங்கம் விலை உயர்ந்துள்ளது. கிராமுக்கு 40 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் ரூ.12,440-க்கும் சவரனுக்கு 320 ரூபாய் உயர்ந்து ஒரு சவரன் ரூ.99,520-க்கும் விற்பனையாகிறது.
தங்கம் விலையை போல, வெள்ளி விலையும் உயர்ந்துள்ளது. வெள்ளி விலை கிராமுக்கு 2 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் வெள்ளி 224 ரூபாய்க்கும் பார் வெள்ளி 2 லட்சத்து 24 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

கடைசி ஐந்து நாள் தங்கம் விலை நிலவரம்:-
17-12-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.99,200
16-12-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.98,800
15-12-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,00,120
14-12-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.98,960
13-12-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.98,960
கடைசி ஐந்து நாள் வெள்ளி விலை நிலவரம்:-
17-12-2025- ஒரு கிராம் ரூ.222
16-12-2025- ஒரு கிராம் ரூ.211
15-12-2025- ஒரு கிராம் ரூ.215
14-12-2025- ஒரு கிராம் ரூ.210
13-12-2025- ஒரு கிராம் ரூ.210
- 2025-ம் ஆண்டு விரைவில் முடிவடைய உள்ளதால், இந்த உதவித் தொகைக்கான விண்ணப்ப காலம் விரைவில் முடிவடையும்.
- இந்த வாய்ப்பை தவறவிட்டால் மீண்டும் விண்ணப்பிக்க முடியாது என்ற வாசகங்களுடன் ஒரு தகவல் சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது.
சென்னை:
சமீபகாலமாக டிஜிட்டல் மோசடி குற்றங்கள் அதிகரித்த வண்ணம் உள்ளன. மோசடிக்காரர்கள் வங்கி அதிகாரிகள் போல் பேசி, கடவு சொற்களை பெறுவதும், சிறிது நேரத்திலேயே கணக்கில் இருந்த பணத்தை சூறையாடுவதும் தொடர்கதையாகி விட்டது. இதை தடுக்க 'சைபர்' கிரைம் போலீசாரும் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுப்பதுடன், விழிப்புணர்வுடன் இருக்குமாறு அறிவுறுத்தி வருகிறார்கள்.
ஆனாலும், திரை மறைவில் கொள்ளையர்கள் இருந்துகொண்டு செல்போனுக்கு போலியான குறுஞ்செய்திகளை அனுப்புகிறார்கள். அந்த லிங்கை தொட்ட சில கணங்களில் அவர்களது வங்கி கணக்கில் பணம் இல்லாமல் முற்றிலும் துடைத்து எடுக்கப்படுகிறது.
இந்த நிலையில், "மத்திய அரசு சார்பில் ஒவ்வொரு குடிமகனுக்கும் ரூ.30 ஆயிரம் வழங்கப்படும். 2025-ம் ஆண்டு விரைவில் முடிவடைய உள்ளதால், இந்த உதவித் தொகைக்கான விண்ணப்ப காலம் விரைவில் முடிவடையும். எனவே தயவுசெய்து கீழே உள்ள லிங்கை உடனடியாக அழுத்தி உங்கள் தொகையைப் பெறுங்கள். இந்த வாய்ப்பை தவறவிட்டால் மீண்டும் விண்ணப்பிக்க முடியாது" என்ற வாசகங்களுடன் ஒரு தகவல் சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது.
இதனை பலரும் பகிர்ந்து வருவதோடு, உதவிதொகை பெற விண்ணப்பிக்குமாறு தங்கள் குடும்பத்தினரையும் வற்புறுத்துகிறார்கள். இது தூண்டில் போட்டு மீனை பிடிப்பதுபோல, வங்கி கணக்கில் இருக்கும் பணத்தை லாவகமாக எடுக்க கையாளப்படும் முயற்சியாகும் என சிலர் லிங்கை தொடுவதை தவிர்த்து வருகின்றனர். இதையடுத்து இந்த விவகாரம் குறித்து தமிழக அரசு விளக்கம் அளித்துள்ளது.
இதுதொடர்பாக தமிழக அரசின் சமூக ஊடக கணக்கான தகவல் சரிபார்ப்பகம் வெளியிட்டுள்ள பதிவில், "மத்திய அரசின் சார்பில் ஒவ்வொரு குடிமகனுக்கும் ரூ.30 ஆயிரம் வழங்கும் திட்டம் எதுவும் செயல்படுத்தப்படவில்லை. இது போலியானச் செய்தி. வதந்தியைப் பரப்பாதீர்கள்" என்று கூறப்பட்டுள்ளது.
- ஜெ.தீபா வழக்கு தொடர்ந்து, வருமான வரித்துறை நோட்டீசுக்கு ஐகோர்ட்டில் தடை உத்தரவு பெற்றார்.
- வரி பாக்கியில் தனது பங்கை தீபக் தவணை முறையில் செலுத்த தொடங்கிவிட்டார்.
சென்னை:
மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா, ரூ.36 கோடியே 56 லட்சம் வருமான வரி பாக்கி வைத்துள்ளதாக கூறி அதனை 7 நாட்களுக்குள் செலுத்த வேண்டும் என அவரது சட்டப்பூர்வமான வாரிசுகளான ஜெ.தீபா, ஜெ.தீபக் ஆகியோருக்கு வருமான வரித்துறை நோட்டீஸ் அனுப்பியது.
இதை எதிர்த்து ஜெ.தீபா வழக்கு தொடர்ந்து, வருமான வரித்துறை நோட்டீசுக்கு ஐகோர்ட்டில் தடை உத்தரவு பெற்றார்.
இதையடுத்து, நோட்டீசை திரும்ப பெற்ற வருமான வரித்துறை, ரூ.13 கோடியே 69 லட்சம் வரி பாக்கியை செலுத்தும் படி புதிய நோட்டீசை அனுப்பியது.
இதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கு நீதிபதி சி.சரவணன் முன்பு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.
வருமான வரித்துறை சார்பில் ஆஜரான வக்கீல் ஜெ.பிரதாப், 'வரி பாக்கியில் தனது பங்கை தீபக் தவணை முறையில் செலுத்த தொடங்கிவிட்டார். எனவே, வரி பாக்கித் தொகையை செலுத்த முடியாது என தீபா கூற முடியாது' என்றார்.
ஜெ.தீபா சார்பில் ஆஜரான வக்கீல் சத்தியகுமார், 'ஜெயலலிதா வருமான வரிப்பாக்கி தொடர்பான வழக்குகள் நிலுவையில் உள்ளன. முதலில் ரூ.46 கோடி வரி பாக்கி என தெரிவித்த வருமான வரித்துறை, பின்னர் ரூ.36 கோடியாக குறைத்தது.
தற்போது, ரூ.13 கோடியே 69 லட்சம் என கூறுகிறது. உண்மையிலே எவ்வளவு வரி பாக்கி உள்ளது என்பதை வருமான வரித்துறை தெளிவாக கூறவில்லை' என்றார்.
வழக்கை விசாரித்த நீதிபதி, 'ஜெயலலிதாவின் வருமான வரி பாக்கி எவ்வளவு? என்பது குறித்து வருமான வரித்துறை விரிவான பிரமாண மனுவை தாக்கல் செய்யவேண்டும்' என உத்தரவிட்டு விசாரணையை ஜனவரி 12-ந்தேதிக்கு தள்ளிவைத்தார்.
- தமிழக அரசின் மீது சுமை கூடுகிறது.
- ஏழைகளுக்கு சேர வேண்டிய பணம், உதவி, நலத்திட்டங்கள் எல்லாம் குறைகிறது.
சென்னை:
சென்னை விமான நிலையத்தில் மக்கள் நீதி மய்யத் தலைவரும், மாநிலங்களவை எம்.பி.யுமான கமல்ஹாசன் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது, பாராளுமன்றத்தில் 100 நாள் வேலைவாய்ப்பு திட்டம் குறித்து காரசார விவாதம் நடைபெற்றது. இதில் உங்களின் பங்களிப்பு எப்படி இருந்தது? கருத்து என்ன? என்று செய்தியாளர் கேள்வி எழுப்பினார்.
அதற்கு கமல்ஹாசன், இதில் கருத்து தான் சொல்ல முடியும். காந்தியார் அவர்களின் பெயரை காக்கவோ, மீட்கவோ வேண்டிய அவசியம் இல்லை. இதில் நாம் கவனிக்க வேண்டியது என்னவென்றால் தமிழக அரசின் மீது சுமை கூடுகிறது. ஏழைகளுக்கு சேர வேண்டிய பணம், உதவி, நலத்திட்டங்கள் எல்லாம் குறைகிறது. அதை மீட்கவும், காக்கவும் தான் முயற்சி செய்ய வேண்டும். அதை விட்டு வேறு இடத்தில் விளையாட கூடாது என்று தான் என்னுடைய தாழ்மையான கருத்து என்றார்.
தேர்தல் நெருங்கி வருகிறது. தேர்தலையொட்டி பிரதமர் மோடி, அமித்ஷா உள்ளிட்டவர்கள் பா.ஜ.க.வுக்கு ஆதரவாக தமிழ்நாட்டில் வருகை தர உள்ளனர். இது அவர்களுக்கு சாதகமாக இருக்கும் என்று நினைக்கிறீர்களா? என்ற கேள்விக்கு அதை நான் எப்படி சொல்லமுடியும்? மக்கள்தான் சொல்லமுடியும் என்றார்.
2026 தேர்தலில் தி.மு.க.வுக்கு ஆதரவாக பிரசாரம் செய்வீர்களா? என்ற கேள்விக்கு கண்டிப்பாக உண்டு என்று கூறினார்.
- நெல்லையில் இருந்து இரவு 11.30 மணிக்கு புறப்பட்டு தாம்பரம் வரும் சிறப்பு ரெயில் மறுநாள் காலை தாம்பரம் வந்தடையும்.
- தாம்பரத்தில் இருந்து மாலை 3.30 மணிக்கு புறப்பட்டு நெல்லை செல்லும் சிறப்பு ரெயில் மறுநாள் நெல்லை சென்றடையும்.
சென்னை:
தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டை முன்னிட்டு நெல்லை-தாம்பரம் இடையே சிறப்பு ரெயில்கள் இயக்கப்பட உள்ளது. அதன் விவரம் வருமாறு:-
நெல்லையில் இருந்து வருகிற 28, ஜனவரி 4 ஆகிய தேதிகளில் இரவு 11.30 மணிக்கு புறப்பட்டு தாம்பரம் வரும் சிறப்பு ரெயில் (வண்டி எண்.06166), கோவில்பட்டி, சாத்தூர், விருதுநகர், மதுரை, திண்டுக்கல், திருச்சி, விருத்தாச்சலம், விழுப்புரம், மேல்மருவத்தூர், செங்கல்பட்டு வழியாக மறுநாள் காலை 10.55 மணிக்கு தாம்பரம் வந்தடையும்.
மறுமார்க்கமாக, தாம்பரத்தில் இருந்து வருகிற 29, ஜனவரி 5 ஆகிய தேதிகளில் மாலை 3.30 மணிக்கு புறப்பட்டு நெல்லை செல்லும் சிறப்பு ரெயில் (06165), மேற்கண்ட வழித்தடம் வழியாக மறுநாள் அதிகாலை 4 மணிக்கு நெல்லை சென்றடையும். இந்த ரெயில்களுக்கான முன்பதிவு இன்று (வியாழக்கிழமை) காலை 8 மணிக்கு தொடங்க உள்ளது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- திருப்பூர், கோவை, ஈரோடு, கரூரில் உள்ள ஏற்றுமதியாளருக்கு தினமும் ரூ.60 கோடி அளவிற்கு இழப்பு.
- அமெரிக்காவின் வரி விதிப்பின் காரணமாக லட்சக்கணக்கான வேலைவாய்ப்பு பறிபோகும் நிலை உள்ளது.
சென்னை :
இந்திய பொருட்கள் மீதான அமெரிக்காவின் வரி விதிப்பு தொடர்பாக பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். அக்கடிதத்தில்,
* இந்திய பொருட்கள் மீதான அமெரிக்க வரி விதிப்பு பாதிப்புகளை இருதரப்பு ஒப்பந்தம் மூலம் விரைந்து களைய வேண்டும்.
* அமெரிக்க வரி விதிப்பால் தமிழ்நாட்டின் ஏற்றுமதி துறைகளின் பாதிப்புகளை கருத்தில் கொண்டு விரைந்து தீர்வு காண வேண்டும்.
* இந்தியாவின் ஜவுளி, ஆடைத்துறை ஏற்றுமதியின் அடித்தளமாக தமிழ்நாடு விளங்கி வருகிறது.
* வரி விதிப்பின் காரணமாக தமிழ்நாட்டின் ஏற்றுமதி துறையில் நெருக்கடி அதிகரித்து வருவது கவலை அளிக்கிறது.
* அமெரிக்க வரி விதிப்பினால் ஏற்பட்ட இடர்பாடு வெறும் பொருளாதார பின்னடைவு மட்டுமல்ல ஈடு செய்ய முடியாத இழப்பு.
* நாட்டின் பின்னலாடை தலைநகரான திருப்பூரில் ஏற்றுமதியாளருக்கு ரூ.15,000 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது.
* பின்னலாடைத்துறையில் 30 விழுக்காடு வரை கட்டாய உற்பத்தி குறைப்பு ஏற்பட்டுள்ளது.
* திருப்பூர், கோவை, ஈரோடு, கரூரில் உள்ள ஏற்றுமதியாளருக்கு தினமும் ரூ.60 கோடி அளவிற்கு இழப்பு.
* வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர் மாவட்டங்களின் காலணி உற்பத்தி நிறுவனங்களிலும் மோசமான சூழல் நிலவுகிறது.
* அமெரிக்காவின் வரி விதிப்பின் காரணமாக லட்சக்கணக்கான வேலைவாய்ப்பு பறிபோகும் நிலை உள்ளது.
* அமெரிக்காவின் வரி விதிப்பு இளைஞர், மகளிர் வேலைவாய்ப்புக்கு அச்சுறுத்தலான நீண்டகால தாக்கம் ஏற்படுகிறது என்று கூறியுள்ளார்.
- புறவழிச்சாலை முதல் போரூர் சந்திப்பு வரையிலான வழித்தட சேவை விரைவில் தொடங்கவுள்ளது.
- பயணிகள் தண்டவாளத்தில் தவறி விழுவதை தடுக்க நடவடிக்கையை எடுத்துள்ளது.
சென்னை மெட்ரோ ரெயில் திட்டம் கட்டம்-2 வழித்தடம் 4-ல் பூந்தமல்லி புறவழிச்சாலை முதல் போரூர் சந்திப்பு வரையிலான வழித்தடத்தில் பயணிகள் சேவை விரைவில் தொடங்கவுள்ளது.
இந்நிலையில், போரூர்-பூந்தமல்லி வழித்தட மெட்ரோ ரெயில் நிலையங்களில் பாதுகாப்பு தடுப்புக் கதவுகள் அமைக்கப்பட்டுள்ளது.
பயணிகள் தண்டவாளத்தில் தவறி விழுவதை தடுக்க சென்னை மெட்ரோ நிர்வாகம் இந்த புதிய நடவடிக்கையை எடுத்துள்ளது.
- தங்களது ஆட்சியில் 52 லட்சம் மாணவர்களுக்கு இலவச லேப்டாப் வழங்கப்பட்டதாக அதிமுக தெரிவித்தது.
- போராட்டத்தில் பாஜக, அமமுக, கொங்கு இளைஞர் பேரவை, புரட்சி பாரதம் கட்சிகளின் பிரதிநிதிகள் பங்கேற்றனர்.
கல்லூரி மாணவரகள் 10 லட்சம் பேருக்கு இலவச லேப்டாப் வழங்கப்படும் என தமிழக அரசு சார்பில் அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில், ப்ளஸ் 1, ப்ளஸ் 2 மாணவர்களுக்கு இலவச லேப்டாப் வழங்க வலியுறுத்தி சென்னையில் அதிமுகவினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
திமுக ஆட்சியில் மாணவர்களின் வாக்குகளைப் பெறுவதற்காக லேப்டாப் வழங்குவதால் அதிமுகவினர் புகார் அளித்துள்ளனர்.
தங்களது ஆட்சியில் 52 லட்சம் மாணவர்களுக்கு இலவச லேப்டாப் வழங்கப்பட்டதாக அதிமுக தெரிவித்தது.
இந்த போராட்டத்தில் பாஜக, அமமுக, கொங்கு இளைஞர் பேரவை, புரட்சி பாரதம் கட்சிகளின் பிரதிநிதிகள் பங்கேற்றனர்.
இதற்கிடையே, இலவச லேப்டாப் திட்டத்தால் பயன்பெற்றவர்களுடன் சென்னை ராயப்பேட்டையில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கலந்துரையாடினார்.
இது ஒரு பக்கம் இருக்க, மதுரையில் மாநகராட்சியில் ரூ.200 கோடி ஊழல் எனக் கூறி அதிமுக போராட்டம் நடத்தியது.
- நிதிஆயோக் வெளியிட்டிருக்கும் இலக்குகளில் தமிழ்நாடு முதல் இடத்தில் இருக்கிறது.
- காலநிலை மாற்றச் சவால்களையும் எதிர்த்து, தமிழ்நாடு போராடும்! தமிழ்நாடு வெல்லும்!
சென்னை:
தமிழ்நாடு காலநிலை மாற்றத்திற்கான ஆட்சி மன்ற குழுவின் 3-வது கூட்டம் சென்னை தலைமைச் செயலக 10-வது மாடி கூட்டரங்கில் இன்று நடைபெற்றது. கூட்டத்திற்கு தலைமை தாங்கி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:-
காலநிலை மாற்றத்தின் விளைவுகளை இப்போது கண்கூடாக பார்த்து கொண்டு இருக்கிறோம். இப்போது கூட, 'டிட்வா புயல்' எப்படிப்பட்ட கோர தாண்டவத்தை ஆடியது. அதனால் இலங்கை உள்ளிட்ட நாடுகள் எப்படி பாதிக்கப்பட்டது என்று பார்த்தோம். நம்முடைய அரசு தொடர்ந்து மேற்கொண்டு வந்த பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளால், பெரியளவில் பாதிப்புகள் ஏற்படாமல் தமிழ்நாட்டை காப்பாற்றி இருக்கிறோம். எப்போதோ ஒருமுறை, புயல்-வெள்ளங்களை எதிர்கொண்ட காலத்தை எல்லாம் நாம் கடந்து விட்டோம். அதை உணர்ந்து தான் 3 ஆண்டுகளுக்கு முன்பே இந்த பேரிடர்களுக்கேற்ற தடுப்பு மற்றும் தகவமைப்பு உட்கட்டமைப்புகளை தொடங்கிவிட்டோம்.
காலநிலை மாற்ற ஆட்சி மன்றக்குழு, பசுமைத் தமிழ் நாடு இயக்கம், தமிழ்நாடு ஈரநில இயக்கம், தமிழ்நாடு காலநிலை மாற்ற இயக்கம், தமிழ்நாடு நெய்தல் மீட்சி இயக்கம் என்று நாம் முன் கூட்டியே நிறைய செய்து கொண்டிருக்கிறோம். இதனால், இந்தியாவிற்கே வழிகாட்டும் நிலையில் தமிழ்நாடு இருக்கிறது.
கடந்த பட்ஜெட் கூட்டத் தொடரில், ரூ.24 கோடி மதிப்பீட்டில் காலநிலைக் கல்வியறிவு முன்னெடுப்பு குறித்த அறிவிப்பை வெளியிட்டோம். அதைத் தொடர்ந்து, தமிழ்நாடு முழுவதும் திறமைமிகு 4 ஆயிரம் பள்ளி ஆசிரியர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு இருக்கிறார்கள். மிக விரைவில், காலநிலைக் கல்வியறிவு குறித்த பயிற்சிகள் வழங்கப்பட இருக்கிறது.
அதுமட்டுமல்லாமல், பள்ளி மாணவர்களுக்கு, சுற்றுச்சூழல் விழிப்புணர்வு ஏற்படுத்த ஆண்டுக்கு இரண்டு முறை, மாவட்ட காலநிலை மாற்ற இயக்கம் மூலமாக, நடத்தப்படும் ஒரு நாள் கோடைக்கால மற்றும் குளிர்கால சிறப்பு முகாம்களை 2 நாள் முகாம்களாக பள்ளிக் கல்வித்துறை மூலமாக நடத்த ஏற்பாடு செய்தி ருக்கிறோம்.
மேலும், கூல் ரூபிங் திட்டத்தை, தமிழ்நாடு காலநிலை மாற்ற இயக்கத்தின் 2025-26-ம் ஆண்டிற்கான செயல்திட்டத்தில் சேர்த்திருக்கிறோம். அம்பத்தூரில் இருக்கும் பெருந்தலைவர் காமராஜர் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி வகுப்பறைகளில், கூல் ரூபிங் எனப்படும் அதிக வெப்ப பிரதிபலிப்புமிக்க வெள்ளைப் பூச்சுகள் பூசப்பட்டிருக்கிறது. இதன் மூலமாக வகுப்பறைகளில் வெப்ப அளவினை கணக்கி டக்கூடிய சென்சார்கள் வைத்து கண்காணித்ததில், அறை வெப்ப நிலை 1.5 டிகிரி முதல் 3 டிகிரி வரை குறைந்திருக்கிறது. இதுகுறித்த அறிக்கையின் அடிப் படையில், இந்தத் திட்டத்தை தமிழ்நாட்டில் இருக்கும் 297 பசுமைப் பள்ளிகளிலும் செயல்படுத்த இருக்கிறோம்.
கடலோர வாழ்விடங்களை, இயற்கை சார்ந்த தீர்வுகள் மூலம் மறு சீரமைக்கும் திட்டத்தின்கீழ், தொடர்ச்சியாக அலையாத்தி மரக்கன்றுகள் நடப்பட்டு வருகிறது. இதன் ரிசல்ட் என்ன தெரியுமா? தமிழ்நாட்டில் 4500 ஹெக்டேர் பரப்பளவுக்கு இருந்த அலையாத்திக் காடுகள், 9 ஆயிரம் ஹெக்டேராக, அதாவது, இரண்டு மடங்காக அதிகரித்திருக்கிறது.
காலநிலை மாற்றத்தை எதிர்கொள்வதில் பெண்களின் பங்குதான் அளப்பரியது.
அதனால்தான், 100 மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு, காலநிலை மாற்றம் மற்றும் நெகிழி ஒழிப்புப் பரப்புரையையும் மேற்கொள்ள, 100 இ-ஆட்டோக்கள் வழங்கப்பட்டிருக்கிறது.
தமிழ்நாட்டின் மொத்த பசுமை இல்ல வாயு வெளியேற்றம் போக்குவரத்துத் துறையின் பங்கு 12 சதவீதத்தில் இருந்து 19 சதவீதமாக உயர்ந்திருக்கிறது என்று ஆய்வறிக்கைகளில் தெரிய வந்திருக்கிறது. அதுவும், கடந்த 2005 முதல் 2019-க்கு இடைப்பட்ட காலத்தில், இது 3 மடங்கு அதிகரித்திருக்கிறது.
சென்னை போன்ற மெட்ரோ சிட்டியில் போக்குவரத்து நெரிசலும் அதிகரித்து வருகிறது. மக்கள் அதிகமாக பொது போக்குவரத்தை பயன்படுத்துவது தான் இதைக் குறைக்க சிறந்த வழி! அதை ஊக்குவிப்பதற்காகதான், எம்.டி.சி. மூலமாக, முதற்கட்டமாக 120 மின்சாரப் பஸ்களை பயன்பாட்டிற்கு கொண்டு வந்திருக்கிறோம். மக்களிடம் நல்ல வரவேற்பு இருக்கிறது. அதனால், மேலும் 600 மின்சாரப் பஸ்களை விரைவில் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்போகிறோம். இதனால், நெரிசல் குறையும், காற்று மாசு குறையும், எல்லோருடைய நேரமும் மிச்சமாகும்.
வேறு எந்த மாநிலத்திலும் இல்லாத அளவுக்கு இவ்வளவும் செய்திருப்பதால்தான், ஒன்றிய அரசே நமக்கு சான்றிதழ் வழங்கியிருக்கிறார்கள். நிதிஆயோக் வெளியிட்டிருக்கும் இலக்குகளில் தமிழ்நாடு முதல் இடத்தில் இருக்கிறது.
"நம்முடைய அரசுக்கு வளர்ச்சி ஒரு கண் என்றால், சுற்றுச்சூழல் மற்றும் இயற்கை வளங்களைப் பாதுகாப்பது மற்றொரு கண்" புவி வெப்பமயமாதலைப் பொறுத்தவரை, தமிழ்நாடு 2070-ம் ஆண்டிற்கு முன்பே, 'நெட் ஜீரோ' இலக்கை அடைய வேண்டும்! நம்முடைய அரசு வருவதற்கு முன்பு, இதற்கான நிதி ஒதுக்கீடும் மிகவும் குறைவாகதான் இருந்தது. ஆனால், திராவிட மாடல் அரசில் ரூ.500 கோடி வரை இதற்காக ஒதுக்கி இருக்கிறோம்.
நமது மாநிலத்தை பாதித்த பேரிடர்களுக்கான நிவாரண நிதியாக தமிழ்நாடு அரசு கேட்டதில் வெறும் 17 விழுக்காடுதான் ஒன்றிய அரசு விடுவித்திருக்கிறது. நாம் கேட்டது 24 ஆயிரத்து ரூ.679 கோடி. அவர்கள் வழங்கியது வெறும் ரூ.4 ஆயிரத்து 136 கோடி மட்டும்தான்!
எத்தனையோ சவால்களை எதிர்கொண்டு தமிழ்நாடு போராடியிருக்கிறது! வென்றிருக்கிறது! நாட்டிற்கே வழிகாட்டி இருக்கிறது! அதுபோல், இந்த காலநிலை மாற்றச் சவால்களையும் எதிர்த்து, தமிழ்நாடு போராடும்! தமிழ்நாடு வெல்லும்!
இவ்வாறு அவர் பேசினார்.
- சாதிவாரி கணக்கெடுப்பு என்பது சாதி பிரச்சனை கிடையாது. சமூகநீதி பிரச்சனை.
- தமிழ்நாட்டில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தக்கோரி பா.ம.க. 36 ஆண்டு காலமாக கோரிக்கை வைத்து வருகிறது.
தமிழகத்தில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தக்கோரி பாமக அன்புமணி தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது. சென்னை எழும்பூரில் பா.ம.க. தலைவர் அன்புமணி தலைமையில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் பா.ம.க. தொண்டர்கள், நிர்வாகிகள் கலந்துகொண்டுள்ளனர்.
அப்போது பா.ம.க. தலைவர் அன்புமணி கூறியதாவது:
* சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தாமல் இருக்க தி.மு.க. அரசு தொடர்ச்சியாக 3 பொய்களை சொல்லி வருகிறது.
* பொய் 1 - சாதிவாரி கணக்கெடுப்பை மத்திய அரசு தான் நடத்த வேண்டும்.
* பொய் 2 - தமிழகம் நடத்தினாலும் கோர்ட் தள்ளுபடி செய்து விடும்.
* பொய் 3 - சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த மாநில அரசுக்கு அதிகாரம் இல்லை என தி.மு.க அரசு கூறி வருகிறது.
* தமிழ்நாடு சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தாமல் தி.மு.க. அரசு சமூக நீதியை குழிதோண்டி புதைத்துவிட்டது.
* சாதியின் பெயரால் அடக்கப்பட்டு ஒடுக்கப்பட்ட சமுதாயங்களுக்கு சமூகநீதி கிடைக்க சாதிவாரி கணக்கெடுப்பு அவசியம்.
* சாதிவாரி கணக்கெடுப்பு என்பது சாதி பிரச்சனை கிடையாது. சமூகநீதி பிரச்சனை.
* 1931-ம் ஆண்டில் இந்தியாவின் மக்கள்தொகை 28 கோடி. தற்போதைய மக்கள்தொகை 146 கோடி.
* இன்றைக்கும் ஆங்கிலேயர் காலத்து புள்ளி விவரங்களை வைத்து இடஒதுக்கீடு கொடுப்பதா?
* தொழில்நுட்பம் வளர்ந்த இந்த காலகட்டத்தில் சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பை எளிதாக நடத்திவிட முடியும்.
* தமிழ்நாட்டில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தக்கோரி பா.ம.க. 36 ஆண்டு காலமாக கோரிக்கை வைத்து வருகிறது.
* தி.மு.க.வின் பொய்கள் இனியும் எடுபடாது. இன்னும் சில மாதங்களில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு சமூகநீதி நிலைநாட்டப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
- 19-ந்தேதி முதல் 22-ந்தேதி வரை தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும்.
- அதிகாலை வேளையில் ஓரிரு இடங்களில் லேசான பனிமூட்டம் காணப்படும்.
சென்னை:
சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
கிழக்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக இன்று தென் தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், வட தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
நாளை தென் தமிழகத்தில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அதிகாலை வேளையில் ஓரிரு இடங்களில் லேசான பனிமூட்டம் காணப்படும். வட தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும்.
19-ந்தேதி முதல் 22-ந்தேதி வரை தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும். அதிகாலை வேளையில் ஓரிரு இடங்களில் லேசான பனிமூட்டம் காணப்படும்.
23-ந்தேதி தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
இதனிடையே, நாளை முதல் 21-ந்தேதி வரை தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் குறைந்தபட்ச வெப்பநிலை ஒரிரு இடங்களில் 2-3° செல்சியஸ் வரை படிப்படியாக குறையக்கூடும்.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 30° செல்சியஸை ஒட்டியும், ஒட்டியும், குறைந்தபட்ச கு வெப்பநிலை 23-24° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.
நாளை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகாலை வேளையில் ஓரிரு இடங்களில் லேசான பனிமூட்டம் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 30° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 22-23° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.
மீனவர்களுக்கான எச்சரிக்கை:
இன்று முதல் 19-ந்தேதி வரை தென்தமிழக கடலோரப்பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள்.






