search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
    X
    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

    14 எதிர்க்கட்சிகள் கூட்டத்தில் மு.க.ஸ்டாலின் பங்கேற்கிறார்- பாஜகவை தோற்கடிக்க புதிய அதிரடி திட்டம்

    காங்கிரஸ் கட்சிக்கு தி.மு.க., ராஷ்ட்ரீய ஜனதா தளம், மதசார்பற்ற ஜனதா தளம், கம்யூனிஸ்டுகள் மற்றும் இஸ்லாமிய கட்சிகள் நல்ல உறவு நிலையுடன் தோழமைக் கட்சிகளாக உள்ளன.
    சென்னை:

    பாராளுமன்றத்துக்கு கடந்த 2019-ம் ஆண்டு நடந்த தேர்தலில் பா.ஜனதா கட்சி அமோக வெற்றி பெற்று ஆட்சியை பிடித்தது. காங்கிரஸ் கட்சி பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சி அந்தஸ்தை கூட பெற இயலாத வகையில் படுதோல்வியை சந்தித்தது. மாநில கட்சிகளுடன் காங்கிரஸ் கட்சி ஒருங்கிணைந்து செயல்படத் தவறியதால் அந்த கட்சிக்கு இத்தகைய பெரிய இழப்பு ஏற்பட்டது.

    இந்தநிலையில் பாராளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் சமீபத்தில் நடந்தது. இந்த கூட்டத்தொடரில் வேளாண் சட்ட மசோதா, பெகாசஸ் உளவு கேட்ட விவகாரம் உள்ளிட்ட பிரச்சனைகளில் எதிர்க்கட்சிகள் அனைத்தும் ஓரணியில் திரண்டன. 14 எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்ததால் பாராளுமன்றத்தை பா.ஜனதா அரசால் சுமூகமாக நடத்தி முடிக்க முடியவில்லை. 80 சதவீத பாராளுமன்ற பணிகள் எதிர்க்கட்சிகளின் ஒருங்கிணைப்பால் முடங்கின.

    எதிர்க்கட்சிகளின் இந்த ஒருங்கிணைப்பு காங்கிரஸ்  தலைவர்களிடம் உற்சாகத்தை ஏற்படுத்தி உள்ளது. அடுத்த ஆண்டு (2022) உத்தரபிரதேசம் உட்பட 5 மாநில சட்டசபைக்கு தேர்தல் நடைபெற உள்ளது. அதுபோல 2024-ம் ஆண்டு பாராளுமன்றத்துக்கு தேர்தல் நடைபெற உள்ளது.

    அதற்கு முன்னதாக எதிர்க்கட்சிகள் அனைத்தையும் ஓரணியில் கொண்டு வந்து வலுப்படுத்த வேண்டும் என்று காங்கிரஸ் மூத்த தலைவர்கள் விரும்புகிறார்கள். நாடு முழுவதும் உள்ள எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்தால்தான் பா.ஜனதாவை வீழ்த்த முடியும் என்ற முடிவுக்கு வந்துள்ளனர்.

    இதையடுத்து காங்கிரஸ்
    மூத்த தலைவர்கள் நாடு முழுவதும் உள்ள எதிர்க்கட்சித் தலைவர்களுடன் பேசினார்கள். அதன் பயனாக எதிர்க்கட்சித் தலைவர்களிடம் மனமாற்றம் ஏற்பட்டுள்ளது. குறிப்பாக திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜி, தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார், சிவசேனா தலைவர் உத்தவ்தாக்கரே ஆகியோர் காங்கிரஸ் தலைமையில் ஒருங்கிணைந்து செயல்பட முன்வந்துள்ளனர்.

    சோனியா காந்தி


    கடந்த சில வாரங்களாக அவர்கள் டெல்லியில் காங்கிரஸ்  தலைவர் சோனியாவை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார்கள். அப்போது பா.ஜனதாவுக்கு எதிராக நாடு முழுவதும் உள்ள எதிர்க்கட்சிகளை ஒன்று திரட்டி ஆலோசனை நடத்த முடிவு செய்யப்பட்டது.

    காங்கிரஸ் கட்சிக்கு தி.மு.க., ராஷ்ட்ரீய ஜனதா தளம், மதசார்பற்ற ஜனதா தளம், கம்யூனிஸ்டுகள் மற்றும் இஸ்லாமிய கட்சிகள் நல்ல உறவு நிலையுடன் தோழமைக் கட்சிகளாக உள்ளன. இதுதவிர பகுஜன் சமாஜ், சமாஜ்வாடி, ஆம் ஆத்மி, பிஜூ ஜனதாதளம், தெலுங்கானா, ராஷ்ட்ரீய கட்சி, தெலுங்குதேசம் போன்ற கட்சிகளை தங்கள் பக்கம் கொண்டு வர காங்கிரஸ் தீவிர முயற்சியில் ஈடுபட்டுள்ளது.

    இதுவரை காங்கிரஸ் தலைமையிலான எதிர்க்கட்சிகள் ஒருங்கிணைப்பில் இடம்பெற 14 கட்சிகள் சம்மதித்துள்ளன. இந்த 14 கட்சித் தலைவர்களுடன் ஆலோசனை நடத்த சமீபத்தில் முடிவு செய்யப்பட்டது.

    எதிர்க்கட்சிகளின் ஒற்றுமையை தொடர்ந்து கொண்டு செல்ல வேண்டும் என்பதில் காங்கிரஸ் தலைவர் சோனியா தீவிரமாக உள்ளார். அதை உறுதி செய்யும் வகையில் இன்று (வெள்ளிக்கிழமை) எதிர்க்கட்சித் தலைவர்கள் ஆலோசனைக் கூட்டத்துக்கு அவர் ஏற்பாடு  செய்துள்ளார்.

    மறைந்த முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தியின் 77-வது பிறந்தநாளான இன்று எதிர்க்கட்சிகளின் அதிரடியை தொடங்கும் வகையில் இந்த கூட்டத்துக்கு சோனியா வியூகம் வகுத்துள்ளார். இந்த கூட்டம் இன்று மாலை 4 மணிக்கு நடக்கிறது.

    வீடியோ கான்பரன்ஸ் மூலம் இந்த கூட்டத்துக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. எதிர்க்கட்சித் தலைவர்கள் தங்கள் அலுவலகங்களில் இருந்தபடி இந்த கூட்டத்தில் பங்கேற்க உள்ளனர்.

    தமிழகத்தில் இருந்து இந்த ஆலோசனைக் கூட்டத்தில் தி.மு.க. மட்டும் பங்கேற்கிறது. தி.மு.க. தலைவரும், முதல்-அமைச்சருமான மு.க.ஸ்டாலின், எதிர்க்கட்சித் தலைவர்களின் ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்று உரையாடுகிறார்.

    இந்த ஆலோசனைக் கூட்டத்தில் திரிணாமுல் காங்கிரஸ் தலைவரும், மேற்கு வங்காள முதல்-மந்திரியுமான மம்தா பானர்ஜி, சிவசேனா தலைவரும், மகாராஷ்டிரா மாநில முதல்- மந்திரியுமான உத்தவ்தா க்கரே, ஜார்க்கண்ட் முக்திமோர்ச்சா தலைவரும், ஜார்க்கண்ட் முதல்-மந்திரியுமான ஹேமந்த் சோரன் ஆகிய முதல்- மந்திரிகளும் கலந்து கொள்கிறார்கள். தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார், தேசிய மாநாட்டு கட்சித் தலைவர் பரூக் அப்துல்லா, மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சி சார்பில் சீதாராம் யெச்சூரி ஆகியோரும் கலந்து கொள்ள உள்ளனர்.

    எதிர்க்கட்சிகளின் ஆலோசனைக் கூட்டத்தில் பா.ஜனதாவுக்கு எதிராக இணைந்து செயல்பட பல்வேறு முக்கிய முடிவுகள் எடுக்கப்படுகின்றன. குறிப்பாக தேர்தல் களத்தில் இணைந்து செயல்படுவது பற்றி முடிவு எடுக்கப்படுகிறது.

    மேலும் பா.ஜனதாவுக்கு எதிராக நாடு தழுவிய போராட்டத்தை நடத்துவது பற்றியும் இன்று மாலை நடக்கும் கூட்டத்தில் ஆலோசிக்கப்படுகிறது. கூட்டத்தில் சில விஷயங்கள் தீர்மானங்களாக கொண்டு வரப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    தீர்மானங்கள் கொண்டு வரப்படாத பட்சத்தில் எதிர்க்கட்சிகளின் சார்பில் ஒருங்கிணைந்த அறிக்கை வெளியிடப்படலாம் என்று தெரிகிறது. எனவே சோனியா தலைமையில் நடக்கும் எதிர்க்கட்சிகளின் கூட்டத்தில் முக்கிய அறிவிப்புகள் வருமா? என்பது இன்று மாலை தெரிந்து விடும்.


    Next Story
    ×