search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ராகுல்தான் பிரதமர் வேட்பாளர்: முக ஸ்டாலின் பேச்சு பா.ஜ.க.வுக்கு உதவுவது போல் உள்ளது- தினகரன் குற்றச்சாட்டு
    X

    ராகுல்தான் பிரதமர் வேட்பாளர்: முக ஸ்டாலின் பேச்சு பா.ஜ.க.வுக்கு உதவுவது போல் உள்ளது- தினகரன் குற்றச்சாட்டு

    ராகுல் காந்தியை பிரதமர் வேட்பாளராக அறிவித்தது பா.ஜ.க.வுக்கு உதவி செய்வது போல் உள்ளது என்று மு.க.ஸ்டாலின் மீது தினகரன் குற்றம் சாட்டியுள்ளார். #dinakaran #mkstalin #rahulgandhi #bjp

    திருச்சி:

    திருச்சியில் இன்று அம்மா மக்கள் முன்னேற்றக்கழக துணை பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் நிருபர்களிடம் கூறியதாவது:-

    அ.தி.மு.க.வில் இருந்து ஓ. பன்னீர்செல்வத்தின் தம்பி ராஜா நீக்கப்பட்டுள்ளார். ஓ.பன்னீர்செல்வம் குடும்பத்தினரின் அரசியல் அடாவடி ஊருக்கே தெரியும். ஓ.பி. எஸ். அ.தி.மு.க.வை ஒரு குடும்பத்தின் பிடியில் இருந்து மீட்போம் என்று கூறிவிட்டு அவரது குடும்பம்தான் அடாவடிகளில் ஈடுபட்டுள்ளது.

    ஓ.பி.எஸ். தம்பி மட்டு மல்ல அவரது மகன், சொந்தக்காரர்கள் அனைவருமே இது போன்று ஈடுபடுகிறார்கள். விரைவில் அது அனைவருக்கும் புரியும்.

    அ.ம.மு.க. அ.தி.மு.க.வுடன் இணையும் என்று வதந்தி பரப்புகிறார்கள். அது ஒரு போதும் நடக்காது. அ.ம.மு.க.வில்தான் அ.தி.மு.க. வின் 90 சதவீத தொண்டர்கள் உள்ளனர். இன்னும் அங்கிருக்கும் 10 சதவீதம் பேரும் விரைவில் அ.ம.மு.க. வுக்கு வருவார்கள். அவர்களை சேர்த்து கொள்வோம்.

    ஆனால் ஊழல் குற்றச்சாட்டுக்கு ஆளான 12 பேரை சேர்த்து கொள்ளமாட்டோம். நாங்கள் ஒருபோதும் துரோகிகளுடன் சேரமாட்டோம். ஆட்சி போன பிறகு அ.தி.மு.க. கட்சியே இருக்காது. அனைவரும் இங்கு வந்து விடுவார்கள். கூட்டணி குறித்து உரிய நேரத்தில் முடிவு எடுப்போம்.

    சென்னையில் நடந்த கருணாநிதி சிலை திறப்பு விழாவின் போது, தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் ராகுல் காந்தியை பிரதமர் வேட்பாளராக அறிவித்துள்ளார். அவர் ராகுல்காந்தியே வருக, நிலையான ஆட்சி தருக என்று அறிவித்ததை கூட்டணி கட்சிகளில் உள்ள யாரும் விரும்பவில்லை.


    மு.க.ஸ்டாலின் ஏதோ மைக் கிடைத்ததும் எதை வேண்டுமானாலும் பேசி விடலாம் என்று பேசி விட்டார். 40 ஆண்டு கால அரசியல் அனுபவம் உள்ளவர். இப்படி பேசியது ஆச்சரியம் அளிக்கிறது. அவரது பேச்சு சிறுபிள்ளைத்தனமானது.

    ராகுல் காந்தியே தன்னை பிரதமர் வேட்பாளராக அறிவிக்கவில்லை. மு.க.ஸ்டாலினின் இந்த செயல்பாடு பா.ஜ.க.வுக்கு எதிராக வலுவான கூட்டணி உருவாகி விடக்கூடாது என்பதற்காக பா.ஜ.க.வுக்கு உதவி செய்வது போல் உள்ளது. ராகுல் காந்திக்கும் தர்ம சங்கடத்தை ஏற்படுத்தி விட்டார்.

    தி.மு.க. 1996-ல் காங்கிரசுடன் கூட்டணி வைத்தது. பின்னர் 1999-ல் பா.ஜனதாவுடன் கூட்டணி சேர்ந்து மத்திய அமைச்சரவையில் பங்கு வகித்தனர். பிறகு 2004-ல் பா.ஜனதாவை கழற்றி விட்டு காங்கிரசுடன் கூட்டணி சேர்ந்தனர். 2009-ல் மீண்டும் காங்கிரசுடன் கூட்டணி சேர்ந்து மந்திரி சபையில் அங்கம் பெற்றார்கள்.

    அதன்பிறகு 2014-ல் காங்கிரசை கழற்றி விட்டார்கள். மு.க.ஸ்டாலினின் செயல்பாடு இப்போதும் அப்படித்தான் உள்ளது.

    ஸ்டெர்லைட் ஆலையை தேர்தல் வரை திறக்கமாட்டார்கள். தேர்தல் முடிந்ததும் ஸ்டெர்லைட் ஆலை மட்டுமல்ல மக்களுக்கு எதிரான ஆலைகள், மீத்தேன், ஹைட்ரோ கார்பன் திட்டங்கள் என அனைத்தையும் கொண்டு வந்து விடுவார்கள்.

    கஜா புயல் பாதிக்கப்பட்ட பகுதிகளில் அரசு சரியாக செயல்படவில்லை. நாங்கள் 12 நாட்கள் அங்கு பாதிக்கப்பட்ட பகுதிகளில் இருந்த போது இதை பார்த்தோம். இப்போது நடப்பது பேய்கள் ஆட்சி. பேய்கள் ஆட்சியில் இப்படித்தான் இருக்கும். இந்த நிலை விரைவில் மாறும். 

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×