search icon
என் மலர்tooltip icon

  செய்திகள்

  சென்னையில் கால்வாயை தூர்வாரி இருந்தால் மழைநீர் தேங்கி இருக்காது: மு.க.ஸ்டாலின்
  X

  சென்னையில் கால்வாயை தூர்வாரி இருந்தால் மழைநீர் தேங்கி இருக்காது: மு.க.ஸ்டாலின்

  எண்ணூரில் இருந்து முட்டுக்காடு வரை உள்ள கால்வாயை தூர்வாரி இருந்தால், சென்னை மாநகரில் எந்தவொரு இடத்திலும் தண்ணீர் தேங்க முடியாத நிலை ஏற்பட்டிருக்கும் என மு.க.ஸ்டாலின் கூறினார்.
  சென்னை:

  தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று கொளத்தூர் தொகுதிக்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டார்.

  திரு.வி.க. நகரில் உள்ள மண்டல அலுவலகத்தில் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.

  அன்னை சத்யா நகரில் உள்ள விநாயகர் கோயில் தெரு ஓடை, வார்டு எண் 64-க்கு உட்பட்ட அம்பேத்கர் நகர் பகுதியில் உள்ள ஓடை, ரெட்டேரி ஓடை அம்பேத்கர் நகர் பிரதான சாலை ஓடை ஆகியவற்றை நேரில் பார்வையிட்டார்.

  கொளத்தூர் சட்டமன்ற அலுவலகத்தில் நிர்வாகிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார். பின்னர் மு.க.ஸ்டாலின் அளித்த பேட்டி வருமாறு:-

  சென்னை மாநகரில் தொடர்ந்து மழை பெய்து கொண்டிருக்கும் காரணத்தினால், ஆங்காங்கே மழைநீர் தேங்கி, பொதுமக்களுக்கு பலவித தொல்லைகள் ஏற்பட்டுள்ள சூழ்நிலையில், கொளத்தூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட மாநகராட்சி குடிநீர் வாரியம், மின்துறை, நெடுஞ்சாலைத்துறை, பொதுப்பணித்துறை போன்ற பல துறைகளின் அதிகாரிகளை எல்லாம் சட்டமன்ற உறுப்பினர் என்ற முறையில் அழைத்து, இன்று காலையில் மண்டல அலுவலகத்தில் ஆலோசனை நடத்தி இருக்கிறேன்.

  மாநகராட்சி, குடிநீர் வடிகால் வாரியம் மற்றும் பல்வேறு துறைகள் ஒருங்கிணைந்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்திருந்தால், எவ்வளவு மழை பெய்தாலும் மழை நீர் தேங்கும் நிலை உருவாகி இருக்காது. எனவே, இனியாவது விழித்தெழுந்து உரிய நிவாரணப் பணிகளில் ஈடுபட வேண்டும் என கேட்டுக்கொண்டேன்.

  எண்ணூரில் இருந்து முட்டுக்காடு வரையில், ஏறக்குறைய 49 கிலோமீட்டர் உள்ள கால்வாயை தூர்வாரி இருந்தால், சென்னை மாநகரில் எந்தவொரு இடத்திலும் தண்ணீர் தேங்க முடியாத நிலை ஏற்பட்டிருக்கும். ஆனால், ‘குதிரை பேர’ ஆட்சி அதனை மேற்கொள்ளவில்லை. அந்தக் கால்வாய் பொதுப்பணித்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது.

  கொளத்தூரில் வெள்ள சேதத்தை பார்வையிட்ட மு.க.ஸ்டாலின் ஒரு குழந்தையை பார்த்து கையசைத்த காட்சி.

  முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் தலைமையில் தான் அந்தத் துறை செயல்படுகிறது. ஆனால், இதுபற்றி எல்லாம் அவர் கவலைப்படவில்லை.

  பல்வேறு பகுதிகளையும் நேரில் சென்று பார்வையிட்டு வந்தேன். அதுமட்டுமல்ல, கொளத்தூர் தொகுதிக்குட்பட்ட தி.மு.க. நிர்வாகிகளை அழைத்து, ஆலோசனை மேற்கொண்டு, மாநகராட்சி மற்றும் அரசுத்துறை அதிகாரிகள் தங்கள் பணிகளை நிறைவேற்ற அனைவரும் பக்கபலமாக இருந்து துணை நிற்க வேண்டும் என்றும் அதேபோல, மக்களுடைய பிரச்சனைகளை அறிந்து உடனுக்குடன் அவற்றை போக்கும் வகையில் செயல்பட வேண்டும் என்று கேட்டுக் கொண்டிருக்கிறேன்.

  கேள்வி:- தாம்பரம், முடிச்சூர் ஆகிய பகுதிகளில் ஒருநாள் பெய்த மழைக்கே மக்கள் எல்லாம் வீடுகளை விட்டு வெளியேறும் நிலை ஏற்பட்டு இருக்கிறதே?

  பதில்:- கடந்த டிசம்பர் மாத மழையின் போதும், வர்தா புயலின்போதும் இந்த நிலை ஏற்பட்டது. அதன் பிறகாவது அந்தப் பகுதிகளில் உரிய நடவடிக்கைகளை எடுத்திருந்தால், இன்றைக்கு இந்த நிலை ஏற்பட்டிருக்காது.

  ஆனால், பெரும்பான்மையை இழந்துவிட்ட இந்த ‘குதிரை பேர’ ஆட்சிக்கு அதுபற்றியெல்லாம் கவலை இல்லை. தங்களுடைய ஆட்சியை எப்படி தக்க வைத்துக் கொள்வது, எம்.எல்.ஏ.க்களை எப்படி சரி செய்வது, அமைச்சர்களை வேறு அணிகளுக்கு சென்று விடாமல் தடுத்தி நிறுத்தி வைப்பது, அதற்கு எவ்வளவு கமி‌ஷன் கொடுப்பது என்ற கவலையில் மட்டும் தான் இந்த ஆட்சி இருக்கிறது.

  கே:- கிரானைட் விவகாரத்தில் சி.பி.ஐ. விசாரணை தேவையில்லை என்று அரசு சொல்லியிருக்கிறதே?

  ப:- அரசு அமைத்த கமி‌ஷனின் சார்பில் விசாரணை மேற்கொண்ட சகாயம் அறிக்கையையே கூட எடுத்துக் கொள்ளக்கூடாது என்று சொல்கிறார்கள். இன்றைக்கு டி.ஜி.பி. பதவியில் இருக்கும் டி.கே.ராஜேந்திரன் குட்கா விவகாரத்தில் சம்பந்தப்பட்டு இருக்கிறார். கிரானைட் வழக்கில் சகாயம் கமி‌ஷனின் அறிக்கையை மூடி மறைக்க திட்டமிட்டு, சிபிஐ விசாரணை தேவையில்லை என்றும் சொல்கிறார்கள். இப்படிப்பட்ட நிலையில் தான் இந்த ஆட்சி தொடர்கிறது.

  கே:- குட்கா விவகாரத்தில் வருமான வரித்துறை வழக்கில் இதுவரை உரிய நடவடிக்கை எடுக்கவில்லையே?

  ப:- மத்திய அரசு மறைமுகமாக அல்ல, நேரடியாகவே பெரும்பான்மையை இழந்துவிட்ட இந்த ‘குதிரை பேர’ ஆட்சி தொடர்வதற்கு பக்கபலமாக இருந்து செயல்பட்டுக் கொண்டிருக்கிறது என்பதற்கு இதெல்லாம் ஒரு எடுத்துக்காட்டு.

  கே:- செம்பரம்பாக்கம் வெள்ளத்தால் சென்னை கடுமையாக பாதிக்கப்பட்டும் இந்த அரசு விழித்துக் கொள்ளவில்லையே?

  ப:- சென்னை மாநகரம் மட்டுமல்ல, சென்னை புறநகர் மற்றும் சுற்றியிருக்கும் மாவட்ட மக்களும் அந்த வெள்ளத்தால் எந்தளவுக்கு கடுமையாக பாதிக்கப்பட்டார்கள் என்பது அனைவருக்குமே நன்றாக தெரியும். இந்த அரசுக்கும் அது தெரியும். ஆனால், உரிய நடவடிக்கை எடுக்காத காரணத்தால் தான் இன்றைக்கு மக்கள் அச்சமடைந்து இருக்கின்றனர்.

  எனவே தான், இந்த அரசை நம்பி எந்த பிரயோசனமும் இல்லை, திமுகவினர் பேரிடர் வந்தால் சமாளிக்க தயாராக இருந்து மக்களை பாதுகாக்க வேண்டும் என்று நான் அறிக்கை வெளியிட்டேன். அதன்படி, தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர்களும் மற்ற தி.மு.க. நிர்வாகிகளும் பல்வேறு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். தொடர்ந்து ஈடுபடுவார்கள்.

  இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
  Next Story
  ×