search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    போக்குவரத்து தொழிலாளர்கள் பேச்சுவார்த்தை தோல்வி: திட்டமிட்டப்படி 15-ந்தேதி ‘ஸ்டிரைக்’
    X

    போக்குவரத்து தொழிலாளர்கள் பேச்சுவார்த்தை தோல்வி: திட்டமிட்டப்படி 15-ந்தேதி ‘ஸ்டிரைக்’

    அமைச்சர் விஜயபாஸ்கருடன் போக்குவரத்து தொழிலாளர்கள் நடத்திய பேச்சுவார்த்தை தோல்வி அடைந்ததையொட்டி திட்டமிட்டப்படி வருகிற 15-ந்தேதி வேலை நிறுத்தப் போராட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
    சென்னை:

    தமிழக அரசு போக்குவரத்து தொழிலாளர்களுக்கான ஊதிய உயர்வு ஒப்பந்த பேச்சுவார்த்தை 2 கட்டமாக நடைபெற்றது.

    போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் அனைத்து தொழிற்சங்க பிரதிநிதிகளுடன் ஆலோசனை நடத்தினார். அப்போது ஊதிய உயர்வு, ஓய்வூதியதாரர்களுக்கான பென்சன், பணிக்கொடை போன்ற சலுகைகள், படிகள் குறித்து தொழிற்சங்க பிரதிநிதிகள் வலியுறுத்தினார்கள்.

    தொழிலாளர்களுக்கு கொடுக்க வேண்டிய நிலுவை தொகையினை உடனே வழங்க வேண்டும். அதற்காக முதல் கட்டமாக ரூ.2500 கோடி ஒதுக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது.

    இந்த கோரிக்கைகளை ஏற்காதபட்சத்தில் 15-ந்தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவதாக தொழிற்சங்கங்கள் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளன.

    இந்த நிலையில் போக்குவரத்து தொழிலாளர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றுவதற்கான குறைந்த பட்சமாக ரூ. 500 கோடி நிதி ஒதுக்குவதாக அறிவிக்கப்பட்டது. அதனை தொழிற்சங்கங்கள் ஏற்கவில்லை.

    இதனைத் தொடர்ந்து முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் சந்தித்து பேசினார். பஸ் தொழிலாளர்களின் பிரச்சனையை தீர்த்து போராட்டத்தை கைவிட முயற்சியில் அரசு தீவிரம் காட்டி வருகிறது.

    அதன் அடிப்படையில் இன்று மீண்டும் பேச்சுவார்த்தைக்கு வருமாறு தொழிற்சங்க பிரதிநிதிகளுக்கு நேற்று அழைப்பு கொடுக்கப்பட்டது. அதனை ஏற்று பல்லவன் இல்லத்தில் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தலைமையில் இன்று பேச்சுவார்த்தை நடந்தது.

    இதில் தொ.மு.ச.வைச் சேர்ந்த சண்முகம், ஐ.என்.டி.யூ.சி., சி.ஐ.டி.யூ. தலைவர் சவுந்திரராஜன், தொழிற்சங்க தலைவர் டாக்டர் விஷ்ணுபிரசாத் உள்ளிட்ட 52 சங்க பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.


    கூட்டத்தில் பிரதிநிதிகள் தங்கள் கோரிக்கைகளை முன் வைத்து பேசினார்கள். அதற்கு அமைச்சர் உங்கள் கோரிக்கைகளை படிப்படியாக நிறைவேற்றுவதாகவும் முதல் கட்டமாக தொழிலாளர்கள் பிரச்சனையை தீர்க்க ரூ. 750 கோடி ஒதுக்கப்பட்டு இருப்பதாகவும் அதனால் வேலை நிறுத்தத்தை கைவிடுமாறும் கேட்டுக்கொண்டார்.

    பின்னர் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    போக்குவரத்து தொழி லாளர்களின் கோரிக்கையை நிறைவேற்ற முதல் கட்டமாக ரூ.750 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. முதல்-அமைச்சரிடம் பிரச்சனையை எடுத்து கூறி பேசியதையடுத்து கூடுதலாக நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

    இதை ஏற்று வேலை நிறுத்த போராட்டத்தை விலக்கி கொள்ளும்படி தொழிற்சங்கத்திடம் தெரிவித்துள்ளோம். அவர்கள் நல்ல முடிவை அறிவிப்பார்கள் என்று நம்புகிறோம்.

    மேலும் புதிதாக 2000 புதிய பஸ்கள் வாங்குவதற்கும் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் போக்குவரத்து கழகம் மேலும் வளர்ச்சியடையும் என்றார்.

    இதற்கிடையில் சி.ஐ. டி.யு. தொழிற்சங்க தலைவர் சவுந்திரராஜன் கூறுகையில், “போக்குவரத்து தொழிலாளர்களின் வேலை நிறுத்தம் திட்டமிட்டப்படி 15-ந்தேதி நடைபெறும். தொழிலாளர்களுக்கு ரூ. 7 ஆயிரம் கோடி நிதி ஒதுக்க வேண்டும் என்று கோரி இருந்தோம். ஆனால் வெறும் ரூ.750 கோடி ஒதுக்கி உள்ளதாக கூறியதை ஏற்க முடியாது. அதனால் அமைச்சருடன் நடந்த பேச்சுவார்த்தையில் எவ்வித உடன்பாடும் ஏற்படவில்லை என்றார்.
    Next Story
    ×