என் மலர்
உள்ளூர் செய்திகள்
- சென்னை சூப்பர் கிங்ஸ் அணி குறித்த புத்தகத்தின் வெளியீட்டு விழா இன்று நடைபெற்றது.
- 100வது டெஸ்ட் போட்டிக்கு நினைவு பரிசு வழங்க தோனியை அழைத்தேன், அவரால் வரமுடியவில்லை
தமிழக அரசின் தலைமை வழக்கறிஞரான பி.எஸ்.ராமன், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி குறித்து எழுதிய புத்தகத்தின் வெளியீட்டு விழா இன்று நடைபெற்றது. இதில் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர்களாக அஷ்வின், ஸ்ரீகாந்த் மற்றும் இசையமைப்பாளர் அனிருத் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இந்த நிகழ்வில் பேசிய அஷ்வின், "என்னுடைய 100வது டெஸ்ட் போட்டிக்கு நினைவு பரிசு வழங்க தோனியை அழைத்தேன், அவரால் வரமுடியவில்லை. ஆனால், மீண்டும் என்னை சிஎஸ்கேவுக்கு அழைத்து மறக்க முடியாத பரிசை தோனி கொடுத்து விட்டார்" என்று நெகிழ்ச்சியாக தெரிவித்தார்.
முன்னதாக பேசிய ஸ்ரீகாந்த், "வெங்கட்ராமனுக்குப் பிறகு தமிழகத்திலிருந்து இந்தியாவுக்காக உச்சம் தொட்ட ஸ்பின்னர் அஷ்வின்தான். அஷ்வினை தோனி நன்றாகப் பயன்படுத்தி மெருகேற்றினார். பஞ்சாப், ராஜஸ்தான் என ஒரு ரவுண்ட் அடித்துவிட்டு அஷ்வின் மீண்டும் சென்னைக்கு வந்திருக்கிறார்" என்று தெரிவித்தார்.
- நாம் பட்ஜெட்டில் குறிப்பிட்ட ரூ என்பதை தமிழை பிடிக்காதவர்கள் பெரிய செய்தியாக்கிவிட்டனர்.
- மத்திய நிதி அமைச்சரே பலமுறை ரூ என்ற குறியீட்டை பயன்படுத்தியுள்ளனர்.
தமிழக பட்ஜெட்டில் ரூ என குறிப்பிடப்பட்டது பூதாகரமாக வெடித்தது ஏன் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விளக்கம் அளித்துள்ளார்.
இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள வீடியோவில் அவர் கூறியிருப்பதாவது:-
மொழிக் கொள்கையில் நாம் எந்தளவுக்கு உறுதியுடன் உள்ளோம் என்பதை காட்டவே ரூ என்ற எழுத்தை பெரிதாக வைத்தோம்.
நாம் பட்ஜெட்டில் குறிப்பிட்ட ரூ என்பதை தமிழை பிடிக்காதவர்கள் பெரிய செய்தியாக்கிவிட்டனர்.
மத்திய நிதி அமைச்சரே பலமுறை ரூ என்ற குறியீட்டை பயன்படுத்தியுள்ளனர். கல்வி நிதி கேட்ட போதெல்லாம் பதில் பேசாத மத்திய நிதியமைச்சர் ரூ என்று மாற்றப்பட்டதை பற்றி பேசுகிறார்.
ஆங்கிலத்தில் கூட Rs என்றே பயன்படுத்துகின்றனர். அதெல்லாம் பிரச்சனையாக தெரியாதவர்களுக்கு ரூ மட்டும் பிரச்சனையாக உள்ளது" என்றார்.
தமிழ்நாடு நிதிநிலை அறிக்கை குறித்து ஆங்கில நாளேடுகளில் வௌியான செய்திகளை சுட்டிக்காடி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருமிதத்தோடு கூறினார்.
அப்போது அவர்," தமிழ்நாடு அரசின் நிதிநிலை அறிக்கையை அனைத்து ஆங்கில நாளேடுகளும் பாராட்டியுள்ளன" என்றார்.
- திருச்செந்தூர் கோவிலில் பக்கதர்கள் கூட்டம் அலைமோதியது.
- வரிசையில் நின்றுக் கொண்டிருந்த ஓம் குமாருக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டுள்ளது.
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் தரிசனத்திற்காக வரிசையில் காத்திருந்த பக்தர் திடீரென மூச்சுத்திணறி உயிரிழந்துள்ளார்.
கோவிலில், 100 ரூபாய் கட்டண வரிசையில் நின்ற காரைக்குடியை சேர்ந்த ஓம்குமார் (50) என்ற பக்தர் மூச்சுத்திணறி உயிரிழந்துள்ளார்.
ஞாயிற்றுக்கிழமையான இன்று திருச்செந்தூர் கோவிலில் பக்கதர்கள் கூட்டம் அலைமோதியது.
இதற்கிடையே, வரிசையில் நின்றுக் கொண்டிருந்த ஓம் குமாருக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டுள்ளது.
மயங்கி விருந்தவரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றபோது, அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்த சம்பவம் கோவில் சுற்று வட்டாரத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
- மதுரை ரெயில் நிலையத்திற்கு கஞ்சா கடத்தி வரப்படுவதாக ரெயில்வே போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்து உள்ளது.
- பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட போலீசார் சந்தேகத்துக்குரிய வகையில் வந்த 3 பயணிகளை பிடித்து அவர்களின் உடமைகளை சோதனையிட்டனர்.
மதுரை:
மதுரை ரெயில் நிலையத்திற்கு நாள்தோறும் நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் பல்லாயிரக்கணக்கான பயணிகள் வந்து செல்கின்றனர். இந்த நிலையில் மதுரை ரெயில் நிலையத்தில் சந்தேகத்துக்குரிய வகையில் நடமாடக்கூடிய பயணிகளிடம் ரெயில்வே மற்றும் இருப்புபாதை போலீசார் அவர்களின் உடமைகளை சோதனை நடத்தி வருகின்றனர்.
அதிலும் குறிப்பாக மதுரை ரெயில் நிலையத்திற்கு வெளி மாநிலத்திலிருந்து வரக்கூடிய ரெயில்களில் கஞ்சா மற்றும் தடை செய்யப்பட்ட போதை பொருட்களை அவ்வப்போது கடத்தி வருவதால், ரெயில்வே போலீசார் தீவிர சோதனை நடத்தி வருகிறார்கள். குறிப்பாக வெளி மாநிலத்தில் இருந்து வரக்கூடிய ரெயிலில் வரும் பயணிகள் மற்றும் சந்தேகப்படும்படியாக வருபவர்களை விசாரித்து அனுப்புகின்றனர்.
ெரயில்களில் பயணிகள் மூலமாக கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருட்கள் கடத்தப்படுவதை தடுக்க மோப்பநாய் உதவியுடன் போலீசார் சோதனையை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் மதுரை ரெயில் நிலையத்திற்கு கஞ்சா கடத்தி வரப்படுவதாக ரெயில்வே போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்து உள்ளது.
இதனையடுத்து மேற்குவங்க மாநிலம் புருளியா-நெல்லை எக்ஸ்பிரஸ் ரெயில் மதுரை ரெயில் நிலையத்திற்கு வந்தபோது கூடுதல் பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட போலீசார் சந்தேகத்துக்குரிய வகையில் வந்த 3 பயணிகளை பிடித்து அவர்களின் உடமைகளை சோதனையிட்டனர்.
அப்போது அவர்களது கைப்பைகளில் சுமார் 8 கிலோ கஞ்சா பொட்டலங்கள் இருப்பது தெரியவந்தது. அவர்களிடமிருந்து கஞ்சா பண்டல்களை பறிமுதல் செய்து மூன்று பேரையும் ரெயில்வே இருப்புப் பாதை போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினர். இதில் அவர்கள் திருநெல்வேலியை சேர்ந்த டேவிட் ராஜா (வயது 20), அஜித் குமார் (30) மற்றும் 17 வயது சிறுவன் என தெரியவந்தது. அவர்கள் எங்கிருந்து கஞ்சாவை கடத்தி வந்தனர் என்று விசாரணை மேற் கொள்ளப்பட்டு வருகிறது.
கைப்பற்றப்பட்ட கஞ்சா பொட்டலங்கள் மேற்குவங்காளம் உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து தென்மாவட்டங்களுக்கு கடத்தி வரப்பட்டு அவை நெல்லை, தூத்துக்குடி, தென்காசி கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் உள்ள இளைஞர்கள் மற்றும் மாணவர்களை குறிவைத்து சில்லறையாக விற்பனை செய்வதற்கு திட்டமிடப்பட்டிருப்பதும் தெரியவந்துள்ளதாக போலீசார் கூறினர்.
கைதான 3 பேரும் கஞ்சா பொட்டலங்களை யாரிடம் இருந்து வாங்கினார்கள் என்பது குறித்த பின்னணி தொடர்பாக தொடர் விசாரணை நடைபெற்று வருகிறது.
- நாங்கள் இருவரும் கணவன், மனைவி என்ற பந்தத்தில் இருக்கிறோம்.
- கடந்த 2 ஆண்டுகளாக எனது உடல்நிலை சரியில்லாத காரணத்தால் நாங்கள் பிரிந்து வாழ்ந்து வருகிறோம்.
ஏ.ஆர்.ரஹ்மானின் முன்னாள் மனைவி என தன்னை அழைக்க வேண்டாம் என ஏ.ஆர்.ரஹ்மானின் மனைவி சாய்ரா பானு தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து மேலும் கூறிய அவர், " நாங்கள் இருவரும் இன்னும் சட்டப்பூர்வமாக விவாகரத்து பெறவில்லை என தெளிவாக தெரிவித்துக் கொள்கிறேன்.
நாங்கள் இருவரும் கணவன், மனைவி என்ற பந்தத்தில் இருக்கிறோம்.
கடந்த 2 ஆண்டுகளாக எனது உடல்நிலை சரியில்லாத காரணத்தால் நாங்கள் பிரிந்து வாழ்ந்து வருகிறோம்.
ஏ.ஆர்.ரஹ்மானுக்கு, எந்த வகையிலும் நான் அழுத்தம் தர விரும்பவில்லை.
நாங்கள் பிரிந்திருந்தாலும் அவருக்காக இறைவனை வேண்டிக் கொள்கிறேன்" என்றார்.
- அப்பாராவ், 20 ஆண்டுகளுக்கு முன்பு இராமேஸ்வரம் ரயிலில் ஏறி சிவகங்கை சென்றுள்ளார்
- பல ஆண்டுகளாக கொத்தடிமையாக்கப்பட்ட இவரின் விபரம், தொழிலாளர் நலத்துறைக்கு தெரியவந்தது.
சிவகங்கை மாவட்டம் காளையார் கோயில் அருகே 20 ஆண்டுகளுக்கும் மேல் கொத்தடிமையாக ஆடு மேய்த்த முதியவர் மீட்கப்பட்டு குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டார்.
ஆந்திராவைச் சேர்ந்த தொழிலாளி அப்பாராவ், 20 ஆண்டுகளுக்கு முன்பு ரெயிலில் செல்கையில் டீ குடிக்க இறங்கியவர் தவறுதலாக இராமேஸ்வரம் ரயிலில் ஏறி, விபரம் அறியாமல் சிவகங்கை சென்றுள்ளார்
கடம்பங்குளம் பகுதியைச் சேர்ந்த மலைக்கண்ணு, அவரை கூட்டிச் சென்று ஆடு மேய்க்க வைத்துள்ளார். மலைக்கண்ணு இறந்துவிட, அதே ஊரைச் சேர்ந்த மற்றொருவரும் ஊதியம் இல்லாமல் உணவு மட்டும் கொடுத்து ஆடுமேய்க்க வைத்துள்ளார்.
சொந்த ஊருக்கும் செல்ல அனுமதிக்கப்படாமல் பல ஆண்டுகளாக கொத்தடிமையாக்கப்பட்ட இவரின் விபரம், தொழிலாளர் நலத்துறைக்கு தெரியவந்து விசாரணை நடத்தி குடும்பத்தை தொடர்பு கொள்ள முயற்சித்துள்ளனர்.
அப்பாராவின் மனைவி சீத்தாம்மா இறந்து விட்டதாகவும் மகளுக்கு திருமணமான தகவலும் தெரியவந்துள்ளது. மகள் மற்றும் மருமகனை அதிகாரிகள் வரவழைத்து அப்பாராவை ஒப்படைத்து சொந்த ஊருக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
- எம்.காம் பட்டதாரியான மகேஸ் பாண்டியன், சீனாவில் பணியில் உள்ளார்.
- பொங்கல் விடுமுறைக்காக ஊருக்கு வந்தவர், இன்று மாடுமுட்டி உயிரிழந்தார்.
சீனாவில் இருந்து விடுமுறைக்கு சொந்த ஊருக்கு வந்த இளைஞர், மதுரை அலங்காநல்லூரில் நடந்த ஜல்லிக்கட்டில் மாடு முட்டி உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மாடு முட்டியதில் உயிரிழந்த மகேஸ் பாண்டியன் (22), எம்.காம் படித்து விட்டு சீனாவில் வேலையில் இருந்துள்ளார். பொங்கல் விடுமுறைக்காக ஊருக்கு வந்தவர் ஏறுதழுவுதல் அரங்கில் நடந்த ஜல்லிக்கட்டில் பங்கேற்றுள்ளார்.
அப்போது மாடு முட்டியதில் நுரையீரலில் பலத்த காயமடைந்த மகேஸ் பாண்டியன் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
- டாஸ்மாக்கில் ஆயிரம் கோடி ஊழல் நடந்ததாக அமலாக்கத்துறை குற்றம் சாட்டி வருகிறது.
- வருகிற டிசம்பர் மாதம் மதுரையில் புதிய தமிழக கட்சியின் மாநில மாநாடு நடைபெற உள்ளது.
திருச்சி:
புதிய தமிழகம் கட்சி நிறுவனத் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி திருச்சியில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
புதிய தமிழகம் கட்சியின் சார்பில் அனைத்து மாவட்டங்களில் ஆலோசனை கூட்டம் நடைபெற்று வருகிறது. இதுவரை 14 மாவட்டங்களில் கூட்டம் நடைபெற்று உள்ளது. இன்று காலையில் திருச்சியிலும், மாலையில் கரூரிலும் ஆலோசனைக் கூட்டம் நடைபெற உள்ளது.
தமிழகத்தில் 2001-ல் அப்பொழுது முதலமைச்சராக இருந்த கருணாநிதி உள் ஒதுக்கீட்டில் அருந்ததினருக்கு 3 சதவீதம் உள் ஒதுக்கீடு அறிவித்தார். இதன் மூலம் அருந்ததியினர் சமுதாயத்தினர் மட்டும் பலன் அடைந்தனர். மாறாக தேவேந்திரகுல வேளாளர் மற்றும் ஆதிதிராவிடர் பயனடைய முடியவில்லை.
இந்த பட்டியல் இனத்தில் 71 பிரிவுகளுக்கும் சரிசமமாக 3 சதவீத இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று நாங்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகிறோம். இதுபோன்ற பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி திருச்சியில் வருகிற மே 17-ந் தேதி பேரணி, ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது.
வருகிற சட்டமன்ற தேர்தலில் தி.மு.க. ஆட்சியை மாற்றி புதிய ஆட்சியை கொண்டு வர வேண்டும் .இந்த சட்டமன்றத் தேர்தலில் ஒற்றைக் கட்சி ஆட்சியை அகற்றிவிட்டு ஒத்த கருத்துடைய அனைத்து கட்சிகளும் ஒன்றிணைந்து கூட்டணி ஆட்சியை கொண்டுவர வேண்டும். ஒற்றைக் கட்சி ஆட்சி என்று சொல்பவர்கள் 2026-ல் புறக்கணிக்கப்படுவார்கள்.
மத்திய அரசு எந்த ஒரு திட்டத்தையும் கொண்டு வருவதற்கு முன்பு அந்தந்த மாநிலங்களில் பொதுமக்களிடம் கருத்து கேட்டு ஒப்புதல் வாங்கி சட்டத்தை கொண்டு வர வேண்டும். தற்பொழுது மத்திய அரசின் மும்மொழி புதிய கல்விகொள்கையை தி.மு.க. அரசு இந்தியை மத்திய அரசு திணிக்கிறது என்று தொடர்ந்து கூறி வருகிறார்கள்.
இதற்கு மத்திய அரசு சரியான விளக்கத்தை சொல்லவில்லை. தி.மு.க.வில் உள்ள அமைச்சர்கள் நிர்வாகிகள் அனைவரும் தங்களுடைய குழந்தையை மும்மொழி அமல்படுத்தப்பட்ட பள்ளியில் படிக்க வைத்து விட்டு மாநகராட்சியில் படிக்கும் ஏழை மக்களை மும்மொழி கொள்கைகல்வி கற்க கூடாது என்று சொல்வது எந்த விதத்தில் நியாயம். இதுதான் சமூக நீதியா பெரியார் அண்ணா வழியா ? திராவிட மாடலா?
ஒரு மொழி கொள்கையை பின்பற்றி ஜப்பான் போன்ற நாடுகள் தொடர்ந்து முன்னேறி வருகிறது. மொழி வளர்ச்சிக்கு முக்கியமல்ல, மாறாக அறிவு தான் முக்கியம். ஆகவே மும்மொழிக் கொள்கை வேண்டாம் என்றால் தி.மு.க. அரசு தமிழகத்தில் ஒரு மொழி கொள்கையை அமல்படுத்த தயாரா ?
டாஸ்மாக்கில் ஆயிரம் கோடி ஊழல் நடந்ததாக அமலாக்கத்துறை குற்றம் சாட்டி வருகிறது. ஆனால் ஒரு லட்சம் கோடிக்கு ஊழல் நடந்துள்ளது தொடர்பாக கடந்த சில வருடங்களுக்கு முன்பு புதிய தமிழக கட்சி சார்பில் கவர்னரை சந்தித்து கோரிக்கை மனு கொடுத்து வழக்கு தொடர அனுமதி கேட்டோம். அப்பொழுது இந்த விஷயத்தை எந்த அரசியல் கட்சிகளும் கண்டு கொள்ளவில்லை.
தமிழகத்தில் தற்பொழுது கனிம வள கொள்ளை மற்றும் அனைத்து துறைகளிலும் ஊழல் மலிந்து காணப்படுகிறது. வருகிற டிசம்பர் மாதம் மதுரையில் புதிய தமிழக கட்சியின் மாநில மாநாடு நடைபெற உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
- ஏ.ஆர். ரகுமானுக்கு நீர்ச்சத்து குறைந்திருந்தது தெரியவந்தது. இதையடுத்து அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.
- நோன்பு காலம் என்பதால் ஏ.ஆர்.ரகுமானும் நோன்பு கடைபிடித்து வருகிறார்.
இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் இன்று காலையில் சென்னையில் உள்ள தனது வீட்டில் இருந்தார். அப்போது அவருக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டது.
உடனடியாக அவரை ஆயிரம் விளக்கு கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். உடனடியாக அவரை டாக்டர்கள் பரிசோதித்தார்கள்.
அப்போது அவருக்கு நீர்ச்சத்து குறைந்திருந்தது தெரியவந்தது. இதையடுத்து அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. சிகிச்சைக்கு பிறகு ஏ.ஆர்.ரகுமான் வீடு திரும்பினார். அவர் நலமுடன் இருப்பதாக மருத்துவமனை அறிக்கை வெளியிட்டுள்ளது.
ஏ.ஆர்.ரகுமான் தமிழ் மட்டுமல்லாமல் இந்தி, தெலுங்கு உள்பட பல்வேறு இந்திய மொழிகளிலும், உலக அளவிலும் இசை அமைத்து வருவதால் ஐதரா பாத், மும்பை, லண்டன் என்று சுற்றிக் கொண்டி ருப்பார்.
அந்த வகையில் லண்டனில் இருந்து நேற்று இரவுதான் மும்பை வழியாக சென்னை திரும்பினார். இன்று காலையில் தூங்கி எழுந்து அமர்ந்திருந்த போதுதான் திடீரென்று உடல்நலக்குறைவு ஏற்பட்டது.
தற்போது நோன்பு காலம் என்பதால் ஏ.ஆர்.ரகுமானும் நோன்பு கடைபிடித்து வருகிறார்.
ஏ.ஆர்.ரகுமானுடன் அவரது மகன் அமீன், மகள் இஸ்ரத், சகோதரி ரஹானா ஆகியோரும் ஆஸ்பத்திரிக்கு வந்திருந்தார்கள்.
ஏ.ஆர்.ரகுமான் உடல் நிலை குறித்து அவரது மகன் அமீன் வெளியிட்டுள்ள பதிவில் கூறி இருப்பதாவது:-
எங்களது ரசிகர்கள், குடும்பத்தினர், நலம் விரும்பிகள் அனைவருக்கும் எனது நன்றியினை தெரிவித்துக் கொள்கிறேன். உங்களுடைய அன்பு பிரார்த்தனை ஆதரவு எல்லாவற்றிற்கும் ரொம்ப நன்றி. என் அப்பா நலமுடன் இருக்கிறார் என்பதை உங்களுடன் மகிழ்ச்சியாக பகிர்ந்து கொள்கிறேன்.
இவ்வாறு அவர் கூறி உள்ளார்.
- தமிழகத்தில் தற்போது தேர்தலுக்கு முந்தைய பட்ஜட் வெளியாகியுள்ளது.
- மறுசீரமைப்பில் தமிழகத்தின் தொகுதிகள் குறைந்தால் தமிழக அரசுடன் இணைந்து போராட தயார்.
பழனி:
தே.மு.தி.க. பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் இன்று பழனியில் நடைபெற்ற கட்சி நிர்வாகி இல்ல நிகழ்ச்சியில் பங்கேற்றார். அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
தமிழகத்தில் தற்போது தேர்தலுக்கு முந்தைய பட்ஜட் வெளியாகியுள்ளது. இதில் மிகவும் முக்கியமானது 5000 விவசாயிகளை தேர்ந்தெடுத்து ஜப்பான், சீனா உள்ளிட்ட வளர்ந்த நாடுகளுக்கு அழைத்துச் சென்று பயிற்சியளிக்கப்படும் என அறிவிக்கப்பட்டது. வரவேற்கத்தக்கது. இதே போல் ரேசன் பொருட்கள் வீடு தேடி வரும் என்பது உள்பட பல அறிவிப்புகளை தே.மு.தி.க. தேர்தல் அறிக்கையில் கடந்த 2006ம் ஆண்டே விஜயகாந்த் வெளியிட்டார்.
அதனை தற்போது தமிழக அரசு செயல்படுத்த முயற்சி எடுத்ததற்கு நன்றி. டாஸ்மாக்கில் ரூ.1000 கோடி ஊழல் நடந்துள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இது போல் பொத்தாம்பொதுவாக கூறாமல் அமலாக்கத்துறை விசாரணை மேற்கொண்டு தக்க நடவடிக்கை எடுத்து பொதுமக்களுக்கு விளக்கம் அளிக்க வேண்டும்.
மறுசீரமைப்பில் தமிழகத்தின் தொகுதிகள் குறைந்தால் தமிழக அரசுடன் இணைந்து போராட தயார்.
இவ்வாறு அவர் கூறினார்.
- தமிழ்நாடு அரசின் வருவாய் இழப்பு 1000 கோடி என்ற செய்தி வந்துகொண்டு இருக்கின்றது.
- ஈகோ பிடித்த தலைவர்கள் ஈகோவை விட்டுகொடுத்து கட்சி நலனுக்காக செயல்பட வேண்டும்.
வாணியம்பாடி:
திருப்பத்தூர் மாவட்டம், திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த மேட்டுப்பாளையம் பகுதியில் நடந்த திருமண நிகழ்ச்சியில் ஓ. பன்னீர்செல்வம் கலந்து கொண்டார்.
அப்போது அவர் அளித்த பேட்டியில் கூறியதாவது:-
டாஸ்மாக்கில் இருந்து வரி கட்டிய மதுபானங்கள், பெறுவது தான் அரசின் நடவடிக்கையாக இருந்தது, வரிகட்டாத டாஸ்மாக் மதுபானங்கள் இன்றைக்கு சில்லறை விற்பனை கடைகளில் வருவது மூலமாக கிட்டத்தட்ட 1000 கோடி ரூபாய் என்ற அளவிற்கு முறைகேடு நடைப்பெறுவதாக செய்திகள் வருகிறது.
அரசுக்கு வரவேண்டிய நியாயமான வரிகள், மறுக்கப்பட்டு,வேறு இடங்களுக்கு அந்த வரிகள் செல்வதனால், தமிழ்நாடு அரசின் வருவாய் இழப்பு 1000 கோடி என்ற செய்தி வந்துகொண்டு இருக்கின்றது. அதனை தடுக்கும் பொறுப்பு தி.மு.க அரசுக்கு இருக்கின்றது.
அ.தி.மு.க.எம்.ஜி.ஆரால் உருவாக்கப்பட்டு, வருங்காலத்தில் சிறப்பாக செயல்பட சட்டவிதிகளை வரையறுத்தார்கள், அதை தான் ஜெயலலிதாவும் கடைபிடித்தார்கள். அப்படிப்பட்ட வரலாற்று சிறப்பு மிக்க அ.தி.மு.க. இன்றைக்கு பல்வேறு பிரிவுகளாக பிரிந்து கிடக்கின்றது.
பிரிந்த அ.தி.மு.க. ஒன்றிணைந்து, எந்த நோக்கத்திற்காக எம்.ஜி.ஆர் உருவாக்கினார்களோ, அதற்காக பாடுபட வேண்டும். ஜெயலலிதாவின் ஆட்சி 2026-ல் வர வேண்டும் என்றால், அ.தி.மு.க.வில் பிரிந்த சக்திகளை ஒன்றிணைக்க வேண்டும்.
அதுதான் அ.தி.மு.க. தொண்டர்களின் கருத்து. அவரவர் மனதில் உள்ள ஈகோவை உதறிதள்ளிவிட்டு, தலைவர் காட்டிய வழியில் செல்ல வேண்டும். ஈகோ பிடித்த தலைவர்கள் ஈகோவை விட்டுகொடுத்து கட்சி நலனுக்காக செயல்பட வேண்டும்.
அனைவரும் ஒன்றிணைந்து 2026-ல் அ.தி.மு.க ஆட்சி மலரசெய்ய வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
- இன்று முதல் 20-ந்தேதி வரை தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலையில் பெரிய மாற்றத்திற்கான வாய்ப்பு குறைவு.
- சென்னையில் நாளை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.
சென்னை:
சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
தமிழக பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதனால் இன்று தென்தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், வடதமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
நாளை முதல் 22-ந்தேதி வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
அடுத்த ஐந்து தினங்களுக்கான அதிகபட்ச வெப்பநிலை பற்றிய முன்னறிவிப்பு:
அதிகபட்ச வெப்பநிலை மாறுதலின் போக்கு:
இன்று முதல் 20-ந்தேதி வரை தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலையில் பெரிய மாற்றத்திற்கான வாய்ப்பு குறைவு.
இயல்பு நிலையிலிருந்து அதிகபட்ச வெப்ப அளவின் வேறுபாடு:
இன்று முதல் 20-ந்தேதி வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை இயல்பை விட 2-3° அதிகமாக இருக்கக்கூடும்.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 34-35° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 25-26° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.
நாளை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 34-35° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 25-26° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.






