என் மலர்
உள்ளூர் செய்திகள்
- 2026 தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி அமையும்.
- கமலுக்கோ அவரது கட்சிக்கோ பா.ஜ.க. ஆதரவு கிடையாது. ஆனால் தமிழுக்கு எப்போதும் ஆதரவு உண்டு.
புதுக்கோட்டையில் பா.ஜ.க. மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.
அப்போது அவர் கூறியதாவது:-
அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வழக்கு விவகாரத்தில் நீதிமன்ற தீர்ப்புக்குள் நாங்கள் செல்ல விரும்பவில்லை. யார் அந்த சார்? என்று ஒவ்வொருவர் மனதிலும் இருக்கிறது. ஆனால் காவல்துறை சரியாக விசாரிக்கவில்லை.
குற்றப்பத்திரிகை தெளிவில்லாமல் இருக்கிறது. தெளிவுபடுத்த வேண்டியது தமிழ்நாடு முதலமைச்சரின் பொறுப்பு.
தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு பிரச்சனை மோசமாக உள்ளது. நவீன வகையான போதை மருந்து நடமாட்டம் தமிழகத்தில் தான் இருக்கிறது.
தி.மு.க. தோல்வி பயத்தில் இருக்கிறது. அதனால் தான் எங்கள் கூட்டணியை விமர்சனம் செய்கின்றனர். அவர்கள் உறுதியாக இருந்தால் எங்கள் கூட்டணியை பற்றி பேச வேண்டிய அவசியம் என்ன இருக்கிறது.
தற்போது வரை தேசிய ஜனநாயக கூட்டணியில் டி.டி.வி. தினகரன், ஓ.பி.எஸ். உள்ளிட்டவர்கள் இருக்கின்றனர். வரக்கூடிய தேர்தலை அனைவரும் சேர்ந்து சந்திக்க எடப்பாடி பழனிசாமி உள்ளிட்டவர்களிடம் பேசி ஒருமித்த முடிவு எடுக்கப்படும். அவர் நல்ல முடிவை எடுப்பார் என்ற நம்பிக்கை உள்ளது.
தமிழை உயர்த்தி பேசினால் நாங்கள் வரவேற்போம் . ஆனால் ஒரு மொழியை சிறுமைப்படுத்தி, ஒரு மொழியை உயர்த்திப் பேசினால் தேவையில்லாத விவகாரங்கள் வரும் அதை தான் கமல்ஹாசன் செய்துள்ளார்
தமிழ் 5000 வருடத்திற்கு முன்பானது என்பதை யாரும் மறுப்பதற்கு கிடையாது. ஆனால் அதற்காக மற்றொரு மொழி சிறுமை என்று கூற முடியாது. அனைத்து மொழியுமே உயர்ந்தது. கமலுக்கோ அவரது கட்சிக்கோ பா.ஜ.க. ஆதரவு கிடையாது. ஆனால் தமிழுக்கு எப்போதும் ஆதரவு உண்டு.
மத்திய மந்திரி அமித்ஷா வருகின்ற 8-ந் தேதி மதுரைக்கு வருகை தர உள்ளார். ஒவ்வொரு நிர்வாகிகளையும் சந்தித்து பேச உள்ளார். அண்ணா மலை குடும்பத்தினருடன் சிங்கப்பூர் சென்று திரும்பி உள்ளார். தொடர்ந்து இனி வரக்கூடிய நிகழ்ச்சிகளில் அவர் பங்கேற்பார்.
அனைத்து எதிர்கட்சிகளும் தி.மு.க.வை வீழ்த்துவதற்கு ஒன்றிணைய வேண்டும். தி.மு.க. கூட்டணிக்கு தே.மு.தி.க. மற்றும் பா.ம.க. ஆகிய கட்சிகளை செல்வப் பெருந்தகை அழைத்து உள்ளார். இது குறித்து அந்தந்த கட்சிகள்தான் முடிவு எடுக்க வேண்டும்.
இதுவரை தமிழ்நாட்டில் கூட்டணி ஆட்சி என்பது இல்லை. வரக்கூடிய காலங்களில் அது சாத்தியமா என்று பார்க்கலாம். ஆனால் 2026 தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி அமையும்.
இவ்வாறு அவர் கூறினார்.
அண்ணாமலை மாநில தலைவராக இருந்தபோது தமிழ்நாடு அரசியல் களம் அதிரடியாக இருந்தது. தற்போது அமைதியாக உள்ளது என்ற கேள்விக்கு பதில் அளித்த அவர் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான அணுகுமுறை உண்டு அவர் அதிரடியான அணுகுமுறை கையாண்டார். நான் அமைதியான அரசியல் செய்ய விரும்புகிறேன். அதிரடி அரசியல் வேண்டாம் என்றார்.
- திருச்சி அரசு மருத்துவமனையிலும் அதற்காக சிறப்பு வார்டுகள் தயார் நிலையில் உள்ளது.
- தமிழக அரசை வேறு குறை கூற முடியாது என்பதால் இந்த குறையை அண்ணாமலை கூறுகிறார்.
திருச்சி:
அமைச்சர் கே.என்.நேரு திருச்சியில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
கொரோனா பரவி வருகின்ற காரணத்தால் அதனை எதிர்கொள்ள தமிழக அரசு அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறது.
அனைத்து துறை செயலாளர்களையும் அழைத்து முன்னெச்சரிக்கை ஏற்பாடுகளை மேற்கொள்ள முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார். திருச்சி அரசு மருத்துவமனையிலும் அதற்காக சிறப்பு வார்டுகள் தயார் நிலையில் உள்ளது.
மேட்டூர் அணையில் இருந்து ஜூன் 12-ந்தேதி தண்ணீர் திறக்கப்படவுள்ள நிலையில் கடைமடை வரை தண்ணீர் செல்வதற்கு ஏற்ற வகையில் தூர்வாரச் சொல்லி அதற்கான பணி நடைபெற்று வருகிறது.
மொழி விவகாரத்தில் யாரும் கமல் மன்னிப்பு கேட்பதை விரும்பவில்லை. அவர் சொன்னதில் என்ன தவறு உள்ளது. தமிழ் மொழியில் இருந்து தான் தெலுங்கு, மலையாளம் எல்லாம் வந்தது. அவர் சொன்னதில் எதுவும் தப்பில்லை.
மாணவி பாலியல் வழக்கில் அண்ணாமலையின் குற்றச்சாட்டுக்கு அமைச்சர்கள் மா.சுப்பிரமணியம், சேகர் பாபு அதற்குரிய பதிலை அளித்துள்ளனர் .
தமிழக அரசை வேறு குறை கூற முடியாது என்பதால் இந்த குறையை அண்ணாமலை கூறுகிறார்.
பஞ்சப்பூர் பேருந்து நிலையத்தை பொறுத்தவரை வருகின்ற 17-ந்தேதி பராமரிப்பு டெண்டர் தொடர்பான கூட்டம் நடைபெற உள்ளது. அது முடிந்தவுடன் பேருந்து நிலையத்தை செயல்பாட்டிற்கு கொண்டு வருவதற்கான வேலைகள் தொடங்கப்படும்.
இவ்வாறு அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்தார்.
- நியூஸ் பேப்பர் போன்ற அச்சிட்ட காகிதங்களில் உணவுப் பொருளில் நேரடியாகப்படும் வகையில் பரிமாறவோ / பொட்டலமிடவோ கூடாது.
- உணவை கையாள்பவர்கள் கையுறை மற்றும் தலைமுடி கவசம் போன்றவற்றை தவறாமல் அணிய வேண்டும்.
சென்னை:
உணவு பாதுகாப்புத் துறை சார்பில் வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளது. அதன் விவரம் வருமாறு:-
* அனைத்து உணவு வணிகர்களும் http://foscos.gov.in என்ற இணையத்தில் விண்ணப்பித்து உணவு பாதுகாப்பு உரிமம் அல்லது பதிவு சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.
* அனைத்து உணவு வணிக நிறுவனங்களில் பணியாற்றும் தொழிலாளர்களுக்கு டைபாய்டு மற்றும் மஞ்சள் காமாலை உள்ளிட்ட நோய்களுக்கு எதிராக தடுப்பூசி செலுத்தி மருத்துவ தகுதி சான்றிதழ் பெற வேண்டும்.
* உணவு வணிக நிறுவனங்களில் பயன்படுத்தப்படும் தண்ணீரை பகுப்பாய்வு செய்து வைத்திருக்க வேண்டும்.
* உணவுப் பொருட்களில் ஈக்கள், பூச்சிகள் மெய்க்காத வண்ணம் கண்ணாடி பெட்டியில் மூடி வைத்து காட்சிப்படுத்த வேண்டும்.
* உணவு எண்ணெயை ஒரு முறை சமைக்க பயன்படுத்த வேண்டும். மீதமான பயன்படுத்திய உணவு எண்ணெயை FSSAI அங்கீகரித்த கொள்முதலாளருக்கு மட்டும் விற்க வேண்டும்.
* விற்பனையாகாமல் மீதமான உணவை நுகர்வோருக்கு வழங்காமல் அப்புறப்படுத்திடல் வேண்டும்.
* நியூஸ் பேப்பர் போன்ற அச்சிட்ட காகிதங்களில் உணவுப் பொருளில் நேரடியாகப்படும் வகையில் பரிமாறவோ / பொட்டலமிடவோ கூடாது.
* அனுமதிக்கப்படாத நெகிழியில் (பிளாஸ்டிக்) உணவுப்பொருட்களை சூடாகவோ அல்லது இயல்பு நிலையிலோ பொட்டலமிடக்கூடாது.
* உணவகங்களில் உணவு பரிமாற வாழை இலை அல்லது அனுமதிக்கப்பட்ட பார்ச்மெண்ட் பேப்பர் அலுமினியம் பாயில் மட்டுமே பயன்படுத்த வேண்டும்.
* எவ்வகை உணவு எண்ணெய்களையும் லேபிள் விபரங்களின்றியும், பொட்டலமிடாமல் சில்லறை அடிப்படையிலும் நுகர்வோருக்கு விற்பனை செய்தல் கூடாது.
* உணவை கையாள்பவர்கள் கையுறை மற்றும் தலைமுடி கவசம் போன்றவற்றை தவறாமல் அணிய வேண்டும்.
* பொட்டலமிடப்பட்ட உணவுப் பொருட்கள் கொள்முதல் விற்பனை செய்யும்போது எப்.எஸ்.எஸ்.ஏ.ஐ. உரிமை எண்ணுடன் கூடிய முழுமையான லேபிள் விவரங்கள் இருப்பதை உறுதி செய்ய வேண்டும்.
* உணவு சமைக்க மற்றும் நொறுக்குத் தீனிகள் தயாரிக்க அயோடின் கலந்த உப்பு மட்டுமே பயன்படுத்த வேண்டும். உணவகங்கள் / பேக்கரி / இனிப்பகங்கள் உள்ளிட்ட உணவு நிறுவனங்களில் அயோடின் கலக்காத உப்பு இருக்கக்கூடாது.
* சிக்கன்-65, பஜ்ஜி, கோபி-65 போன்ற உணவு வகைகளில் செயற்கை நிறமிகள் சேர்க்கக்கூடாது.
என்பது உள்பட 14 வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டு உள்ளன.
உணவு கடைகளில், வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றாமல் உணவு விற்பனை செய்தாலோ? அல்லது தயாரித்தாலோ? உணவு கடையின் உரிமையாளர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டு உணவு பாதுகாப்புத்துறை சட்டத்தின்படி கடையின் உரிமம் ரத்து செய்யப்படும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- தமிழகம் மற்றும் புதுவையில் ஓரிரு பகுதிகளில் அசௌகரியம் ஏற்படலாம்.
- சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நாளை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.
சென்னை:
சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக இன்று தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
நாளை முதல் 9-ந்தேதி வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
10-ந்தேதி தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
இன்று முதல் 6-ந்தேதி வரை தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலை ஒருசில இடங்களில் 2° செல்சியஸ் வரை படிப்படியாக உயரக்கூடும். தமிழகம் மற்றும் புதுவையில் ஓரிரு பகுதிகளில் அசௌகரியம் ஏற்படலாம்.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நாளை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 38-39° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 28-29° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.
நாளை தென்மேற்கு மற்றும் அதனை ஒட்டிய மத்தியமேற்கு வங்கக்கடல் பகுதிகளுக்கு அப்பால் உள்ள வடதமிழகம் மற்றும் தெற்கு ஆந்திர கடலோரப்பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும் என்பதால் இப்பகுதிகளுக்கு மீனவர்கள் செல்லவேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறார்கள்.
- காரின் உதிரி பாகங்கள் சேமித்து வைத்திருந்த இடத்தில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது.
- சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.
வாணியம்பாடி:
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி வன்னியடிகளார் நகர் பகுதியில் குப்பன் என்பவருக்கு சொந்தமான பழைய இரும்பு பொருட்கள் குடோன் உள்ளது.
இங்கு காரின் உதிரி பாகங்கள் சேமித்து வைத்திருந்த இடத்தில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. அங்கிருந்த பொருட்களில் தீ பரவியது. இதனை தொடர்ந்து அந்த பகுதியில் கடும் புகைமூட்டம் எழுந்தது.
இதுகுறித்து தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.
- நிதி நிறுவனங்கள் நடத்தி மோசடியில் ஈடுபடுவது ஒவ்வொரு வருடமும் அதிகரித்து வருகிறது.
- போலீசார் தாக்கல் செய்த அறிக்கையில் கூறப்பட்டுள்ள புள்ளி விவரங்களை பார்க்கும்போது 39 சதவீத சொத்துக்கள் மட்டுமே பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
மதுரை:
கோவையைச் சேர்ந்த ரவிச்சந்திரன், மதுரை ஐகோர்ட்டில் கடந்த 2023 ஆண்டு தக்கல் செய்த மனுவில் கூறி இருந்ததாவது:-
மதுரையை தலைமையிடமாக கொண்டு அப்சல் தனியார் நிதி நிறுவனம் செயல்பட்டது. இந்த நிறுவனத்தினரின் ஆசை வார்த்தையை நம்பி, நான் உள்பட ஏராளமானவர்கள் பல கோடி ரூபாயை முதலீடு செய்திருந்தோம். எங்கள் பணத்தை அந்த நிறுவனம் மோசடி செய்தது. இதுகுறித்து புகார் அளித்ததால் 2017-ல் மதுரை பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
இந்நிலையில் முதலீடு செய்து ஏமாந்த முதலீட்டாளர்கள் தொகையை திரும்ப பெற்றுத்தர ஓய்வு பெற்ற நீதிபதி சுதந்திரம் தலைமையில் பொருளாதார குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர், அப்சல் நிறுவன மேலாளர் ஆகியோர் அடங்கிய குழுவை உயர் நீதிமன்றம் நியமித்தது.
அந்த குழு, நிதி நிறுவனத்தின் சொத்துகளை மீட்க பல்வேறு நடவடிக்கைகளில் ஈடுபட்டும் எந்த முன்னேற்றமும் இல்லை. நிறுவனத்தினர் இதற்கு ஒத்துழைக்கவும் இல்லை. இதற்கிடையே அப்சல் நிறுவன நிர்வாகி செந்தில்வேல் இறந்துவிட்டார். நிதி நிறுவன மோசடியில் ஈடுபட்டவர்களை கைது செய்யவோ, வழக்கில் குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்யவோ போலீசார் கடந்த 5 ஆண்டுகளாக எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
இந்த மோசடியில் ஈடுபட்டவர்கள் தப்பிக்க போலீசார் உடந்தையாக உள்ளனர். குற்றவாளிகள் சுதந்திரமாக நடமாடுவதற்கு உதவியாகவும் போலீசார் உள்ளனர். எனவே அப்சல் நிதி நிறுவன மோசடி வழக்கை வேறு விசாரணை அமைப்புக்கு மாற்ற வேண்டும்.
இவ்வாறு அந்த மனுவில் கூறியிருந்தார்.
இந்த மனுவை நீதிபதி புகழேந்தி விசாரித்தார். இதற்கிடையே போலீசார் தாக்கல் செய்த அறிக்கையில் கூறியிருந்ததாவது:-
தமிழகத்தில் இதுவரை நிதி நிறுவன மோசடி பிரிவின் கீழ் 1,249 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு உள்ளது. இதில் 6,90,166 நபர்கள் முதலீடு செய்துள்ளனர். இதற்காக இதுவரை 366 அரசாணைகள் பிறப்பிக்கப்பட்டுள்ளது. சுமார் 827 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துக்கள் வழக்கில் இணைக்கப்பட்டு உள்ளது.
பொருளாதார குற்றப்பிரிவு நீதிமன்றத்தில் சுமார் ரூ.50 கோடியே 71 லட்சம் வைப்புத் தொகையாக வைக்கப்பட்டுள்ளது. மாவட்ட வருவாய் அலுவலர் மூலம் 373 கோடி ரூபாய் வைப்புத்தொகை வைக்கப்பட்டுள்ளது. இதில் 264 கோடி ரூபாய் பாதிக்கப்பட்ட மக்களுக்கு திரும்ப கொடுக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டு இருந்தது.
முடிவில் நீதிபதி பிறப்பித்த உத்தரவு வருமாறு:-
இந்த வழக்கில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்க ஏற்கனவே ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் குழு அமைத்து விசாரணையை முடிக்க ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. ஆனால் குற்றவாளிகள் போதிய ஒத்துழைப்பு தரவில்லை. 7 ஆண்டுகளாக குளிர்சாதன பெட்டியில் வைக்கப்பட்டது போல இந்த வழக்கு உள்ளது. இனியும் பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் கூறும் காரணங்களை ஏற்க முடியாது.
போலீசார் தாக்கல் செய்த அறிக்கையில் கூறப்பட்டுள்ள புள்ளி விவரங்களை பார்க்கும்போது 39 சதவீத சொத்துக்கள் மட்டுமே பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மேலும் நிதி நிறுவனங்கள் நடத்தி மோசடியில் ஈடுபடுவது ஒவ்வொரு வருடமும் அதிகரித்து வருகிறது. இதில் பாதிக்கப்படுபவர்கள் ஏழை மற்றும் படிப்பறிவு இல்லாத பொதுமக்கள் தான்.
எனவே அரசு இந்த விவகாரங்களை எளிதாக்க ஓய்வு பெற்ற ஐகோர்ட்டு நீதிபதி மற்றும் மூத்த ஐ.ஏ.எஸ். அதிகாரி தலைமையில் குழு அமைத்தால் மோசடியில் ஈடுபட்ட நிதி நிறுவனங்களிடமிருந்து சொத்துக்களை மீட்டு பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்கும் நடவடிக்கை விரிவுபடுத்தப்படும்.
பொருளாதார மோசடியில் சிக்கியவர்கள் எவ்வளவு பெரிய உயர்ந்த பொறுப்பில் இருந்தாலும் அவர்கள் பொருளாதார குற்றப்பிரிவு விசாரணையை நம்பி தான் உள்ளனர். எனவே இந்த வழக்கை ஆறு மாதத்தில் விசாரணை செய்து முடிக்க வேண்டும்.
இவ்வாறு நீதிபதி உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தார்.
- சிவகங்கை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஆசிஷ்ராவத் சம்பவ இடத்தை பார்வையிட்டு விசாரணை நடத்தினார்.
- கைதான 13 பேரும் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.
சிவகங்கை:
சிவகங்கை மாவட்டம் மதகுபட்டி அருகே உள்ள கட்டாணிபட்டியை சேர்ந்தவர்கள் செல்வம் மகன்கள் மணிகண்டன் (வயது 30), சிவசங்கரன் என்ற விக்னேஷ் (25). இதில் மணிகண்டன் கோவையில் ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார்.
விக்னேஷ் கல்லம்பட்டியில் வசித்து வந்தார். நேற்று முன்தினம் நள்ளிரவில் சிவகங்கை அருகே அழகமா நகரியில் உள்ள தனியாருக்கு சொந்தமான ஒரு தோப்பில், அப்பகுதியை சேர்ந்த சிலர் தொலைந்து போன மாடு ஒன்றை தேடி சென்றுள்ளனர்.
அப்போது அப்பகுதியில் ஆடு, கோழி சத்தம் கேட்டுள்ளது. சத்தம் வந்த திசை நோக்கி சென்றபோது, தோப்பிற்குள் மணிகண்டன், விக்னேஷ் இருவரும் இருந்துள்ளனர். இதையடுத்து மாட்டை தேடி சென்றவர்கள் மற்றும் சத்தம் கேட்டு வந்த அப்பகுதி கிராம மக்கள் இருவரையும் மடக்கிப் பிடித்தனர். அவர்கள் ஆடு, கோழி திருட வந்ததாக கூறி பயங்கரமாக தாக்கினர்.
தப்பித்து ஓட முயற்சி செய்தபோது, மேலும் பலமாக தாக்கியதில் இருவரும் சுருண்டு கீழே விழுந்தனர். இதையடுத்து 108 ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டு இருவரும் சிவகங்கை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். ஆனால் சிகிச்சை பலனின்றி இருவரும் சிறிது நேரத்தில் இறந்தனர். ஆடு, கோழி திருட வந்ததாக தவறாக எண்ணி தாக்கப்பட்டனரா? அல்லது முன்பகை காரணமா? என்பது குறித்து மதகுபட்டி போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதற்கிடையே சிவகங்கை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஆசிஷ்ராவத் சம்பவ இடத்தை பார்வையிட்டு விசாரணை நடத்தினார். மேலும், இரட்டைக் கொலை சம்பவம் தொடர்பாக அழகமாநகரி கிராமத்தை சேர்ந்த திருப்பதி (45), சேமராஜ் (31), பிரபு (30), தீபக் (19), விக்னேஸ்வரன் (31), தினேஷ் (31) உள்ளிட்ட 6 பேரை முதற்கட்டமாக போலீசார் நேற்று கைது செய்தனர்.
தொடர்ந்து விசாரணையில் வினோத் (34), பிரவீத் (24), அருண் பாண்டி (29), யுவராஜ் (22), அரவிந்த் (25), மணிகண்டன் (31), சீமான் (43) ஆகியோரை இன்று போலீசார் கைது செய்தனர். இதன் மூலம் அண்ணன், தம்பி கொலை வழக்கில் மொத்தம் 13 பேர் கைதாகி உள்ளனர். அவர்கள் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.
இதுதொடர்பாக மேலும் சிலரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். சகோதரர்கள் மீது கடந்த 2015-ம் ஆண்டு மதுரை மாவட்டம், மேலவளவு போலீஸ் நிலையத்தில் திருட்டு வழக்கு பதிவாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.
- புதூர் பாண்டியாபுரம் சுங்கச்சாவடியில் லாரிகளை நிறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
- பல வாகனங்கள் அருகில் உள்ள வேலாயுதபுரம் கிராமம் வழியாக மாற்று வழியில் சென்றது.
தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த பாலகிருஷ்ணன் என்பவர் மதுரை ஐகோர்ட்டில் ஒரு மனு தாக்கல் செய்தார்.
அதில், மதுரை-தூத்துக்குடி தேசிய நெடுஞ்சாலை கடந்த 2011-ம் ஆண்டில் இருந்து பயன்பாட்டில் உள்ளது. இந்த நெடுஞ்சாலையின் இருபுறமும் மரங்கள் நடுவது, நெடுஞ்சாலையின் சென்டர் மீடியனில் செடிகள் நட்டு பராமரிப்பது உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்யப்படவில்லை. இதனால் 2023-ம் ஆண்டு தனியார் நிறுவனத்திற்கு வழங்கப்பட்ட ஒப்பந்தம் ரத்து செய்யப்பட்டது. தற்போது தேசிய நெடுஞ்சாலைத்துறை நிர்வாகம் இந்த சாலையை பராமரிக்கும் பணியை மேற்கொண்டு வருகிறது.
ஆனாலும் இந்த நெடுஞ்சாலையில் மாதந்தோறும் ரூ.11 கோடியை சுங்க கட்டணமாக வசூலிக்கின்றனர். ஆனால் பராமரிப்பு பணிக்காக வெறும் ரூ.30 லட்சம் மட்டுமே செலவு செய்கின்றனர். இதனால் தரமான சாலை மற்றும் கட்டமைப்பு வசதிகள் இல்லாததால் வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமங்களை சந்திக்கின்றனர்.
எனவே மதுரை-தூத்துக்குடி தேசிய நெடுஞ்சாலையின் இருபுறங்களும் மரங்கள் நட்டு பராமரித்து, வாகன ஓட்டிகளுக்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்யும் வரை சுங்கக்கட்டணம் வசூலிக்க தடை விதிக்க வேண்டும் என கூறியிருந்தார்.
இதனை விசாரித்த நீதிபதிகள் மதுரை-தூத்துக்குடி தேசிய நெடுஞ்சாலையில் உள்ள எலியார்பத்தி மற்றும் புதூர் பாண்டியாபுரம் ஆகிய 2 சுங்கச்சாவடிகளிலும் அந்த வழியாக செல்லும் வாகனங்களிடம் சுங்கக் கட்டணம் வசூலிக்க இடைக்கால தடை விதிக்கப்படுகிறது. இந்த தேசிய நெடுஞ்சாலையில் மேற்கொள்ளப்பட்டு உள்ள பணிகள் குறித்து உரிய அதிகாரிகள் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டனர்.
இந்நிலையில் மதுரை ஐகோர்ட்டு உத்தரவுபடி சுங்கக்கட்டணம் வசூலிக்கக்கூடாது என வலியுறுத்தி லாரி உரிமையாளர்கள் இன்று ஒட்டப்பிடாரம் அருகே உள்ள புதூர் பாண்டியாபுரம் சுங்கச்சாவடியில் லாரிகளை நிறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த சுங்கச்சாவடியில் 6 வாசல்கள் மூலம் வாகனங்கள் நிறுத்தப்பட்டு கட்டணம் வசூலிக்கப்பட்டு பின்னர் அனுமதி வழங்கப்பட்டு வருகிறது. இன்று அதிகாலை முதல் 6 வாசல்களிலும் லாரிகளை நிறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டது. தொடர்ந்து வாகனங்கள் வந்ததால் அணிவகுத்து நின்றன. இதைத்தொடர்ந்து பல வாகனங்கள் அருகில் உள்ள வேலாயுதபுரம் கிராமம் வழியாக மாற்று வழியில் சென்றது. தொடர்ந்து அவர்கள் கோரிக்கையை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
- மதுரை வரும் அமித்ஷா பா.ஜ.க. நிர்வாகிகளை சந்தித்து ஆலோசனை நடத்த உள்ளார்.
- மதுரை ஒத்தக்கடையில் அமித்ஷா பங்கேற்கும் பொதுக்கூட்டமும் நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா ஜூன் 8-ந்தேதி மதுரை வர உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. சட்டசபை தேர்தல் தொடர்பாக மாநில நிர்வாகிகள் உடன் ஆலோசனை நடத்த அமித் ஷா திட்டமிட்டுள்ளார்.
ஜூன் 2-வது வாரத்தில் மதுரைக்கு வரும் அமித்ஷா பா.ஜ.க. நிர்வாகிகளை சந்தித்து ஆலோசனை நடத்த உள்ளார்.
ஏற்கனவே தி.மு.க. பொதுக்குழு மதுரையில் நடைபெற்ற நிலையில் மத்திய உள்துறை அமித்ஷா மதுரை வர உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
வரும் 8-ந்தேதி மதுரை ஒத்தக்கடையில் அமித்ஷா பங்கேற்கும் பொதுக்கூட்டமும் நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
- இழப்பை உழவர்களால் தாங்கிக் கொள்ள முடியாது.
- மத்திய, மாநில அரசுகள் இனியும் வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருக்கக்கூடாது.
சென்னை:
பா.ம.க. தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
கடந்த ஆண்டில் ஒரு டன் மாம்பழம் சராசரியாக ரூ.22 ஆயிரம் முதல் ரூ.28 ஆயிரம் வரை கொள்முதல் செய்யப்பட்டது. ஆனால், இம்முறை ஒரு டன் மாம்பழத்தின் சராசரி விலை ரூ.4,000 ஆக வீழ்ச்சி அடைந்து விட்டது. பல இடங்களில் இந்த விலைக்கு கொள்முதல் செய்வதற்கு வணிகர்களோ, மாம்பழக்கூழ் ஆலைகளோ முன்வரவில்லை. ஒரு டன் மாம்பழத்தை ரூ. 4 ஆயிரத்துக்கு விற்பனை செய்தால் உழவர்களுக்கு எந்த லாபமும் கிடைக்காது; மாறாக ஏக்கருக்கு ஒரு லட்சம் ரூபாய்க்கும் கூடுதலாக இழப்பு ஏற்படும். இந்த இழப்பை உழவர்களால் தாங்கிக் கொள்ள முடியாது.
தமிழ்நாட்டைப் பொறுத்தவரை நடப்பாண்டில் எந்த பயிரும் விளைச்சலுக்கு குறைவில்லை. ஆனால், அரசின் தவறான கொள்கைகளும், வழிகாட்டுதல்களும் தான் உழவர்களை பெரும் இழப்புக்கு ஆளாக்குகின்றன. தர்பூசணி பழங்களில் சிவப்பு சாயம் செலுத்தப்படுகிறது என்று தமிழக அரசின் உணவுப் பாதுகாப்புத்துறை அதிகாரி ஒருவர் பரப்பிய அரைகுறையான விழிப்புணர்வு செய்தியால் தர்பூசணி பழங்களின் விற்பனை சரிந்து உழவர்கள் கடனாளி ஆனார்கள். இப்போது விலை வீழ்ச்சியைத் தடுக்காததால் மாம்பழ உழவர்கள் பெரும் இழப்பை எதிர்கொண்டு வருகின்றனர். இவற்றையெல்லாம் மத்திய, மாநில அரசுகள் இனியும் வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருக்கக்கூடாது.
தமிழக அரசு உடனடியாக மாம்பழ உழவர்கள், வணிகர்கள் மற்றும் மாம்பழக்கூழ் ஆலைகளின் உரிமையாளர்களை அழைத்துப் பேசி மாம்பழங்களுக்கு கட்டுபடியாகும் விலையை நிர்ணயம் செய்ய வேண்டும். மாம்பழங்கள் மற்றும் மாம்பழக்கூழை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதில் உள்ள தடைகளை அகற்ற மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். மாம்பழ விலை வீழ்ச்சியால் பாதிக்கப்பட்ட உழவர்கள் மற்றும் குத்தகைதாரர்களுக்கு ஏக்கருக்கு ரூ.1 லட்சம் நிவாரணம் வழங்க தமிழக அரசு முன்வர வேண்டும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
- வினாத்தாள் கசிந்த விவகாரம் தொடர்பாக கன்னியாகுமரியிலும் ஒரு வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
- வினாத்தாள் கசிந்தது எப்படி என்பது குறித்து தொடர்ந்து போலீசார் பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வந்தனர்.
நெல்லை:
நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக் கழகத்தின் கீழ் நெல்லை, தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி ஆகிய 4 மாவட்டங்களில் 106 கல்லூரிகள் செயல்பட்டு வருகிறது.
கடந்த மாதம் பல்கலைக்கழகத்தின் கீழ் உள்ள கல்லூரிகளில் செமஸ்டர் தேர்வுகள் நடந்தது. கடந்த 27-ந்தேதி பி.காம் பட்டப்படிப்புக்கான தொழில் சட்டம் எனும் இண்டஸ்டிரியல் லா என்ற பாடத்தின் தேர்வு நடைபெற இருந்த நிலையில் வினாத்தாள் கசிந்ததால் தேர்வு ரத்து செய்யப்பட்டது. அதனைத்தொடர்ந்து புதிய வினாத்தாள் தயாரிக்கப்பட்டு கடந்த 30-ந்தேதி தேர்வு நடைபெற்றது.
இதனிடையே பல்கலைக்கழக தேர்வு வினாத்தாள் கசிந்தது தொடர்பாக விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக பதிவாளர் சாக்ரடீஸ், பேட்டை போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் அடிப்படையில் பேட்டை போலீசார் 6 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
அதேநேரம் வினாத்தாள் கசிந்த விவகாரம் தொடர்பாக கன்னியாகுமரியிலும் ஒரு வழக்குப்பதிவு செய்யப்பட்டது. வினாத்தாள் கசிந்தது எப்படி என்பது குறித்து தொடர்ந்து போலீசார் பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வந்தனர். ஆனால் இந்த வழக்கில் மேற்கொண்டு எவ்வித முன்னேற்றமும் இல்லை.
இதனால் இந்த வழக்கை சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்றுவதற்கு மாநகர போலீஸ் கமிஷனர் சந்தோஷ் ஹதிமணியிடம் பேட்டை போலீசார் தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக எழுத்துப் பூர்வமாகவும் அவரிடம் கடிதம் வழங்கப்பட்டுள்ளது. இதனால் இந்த வழக்கு விரைவில் சி.பி.சி.ஐ.டி. வசம் ஒப்படைக்கப்பட உள்ளதாக போலீஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இதுகுறித்து கமிஷனர் சந்தோஷ் ஹதிமணி கூறுகையில், தேர்வு வினாத்தாள் கசிந்த விவகாரத்தில் பேட்டை போலீசார் நடத்திய விசாரணையில் முன்னேற்றம் ஏற்படவில்லை. அதேநேரம் இந்த விவகாரத்தில் 4 மாவட்டங்கள் சம்பந்தப்படுவதால் விசாரிப்பதில் சிக்கல் உள்ளது. இதனால் இந்த வழக்கை சி.பி.சி.ஐ.டி. வசம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்றார்.
- மக்களின் உணர்வுகளைக் கைத்தட்டல்களாகவும் - உங்களால் அதிகம் பகிரப்படும் காணொளியாகவும் மாற்றிய தங்கை கனிமொழியை வாழ்த்தினேன்!
- இந்தியாவுக்கான குரலாக தமிழ்நாட்டின் அன்புமொழியை பேசியுள்ளார் தங்கை கனிமொழி.
சென்னை:
பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியா நடத்திய 'ஆபரேஷன் சிந்தூர்' குறித்து உலக நாடுகளுக்கு விளக்க கனிமொழி தலைமையிலான எம்.பி.க்கள் குழு வெளிநாட்டில் பயணம் மேற்கொண்டு உரையாற்றி வருகின்றனர்.
இந்த நிலையில், தங்கை கனிமொழியைக் கண்டு பெருமை கொள்கிறேன்! என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எக்ஸ் தள பக்கத்தில் தெரிவித்துள்ளார். மேலும் அவர் கூறியுள்ளதாவது:-
ஸ்பெயின் மண்ணில், "இந்தியாவின் தேசிய மொழி வேற்றுமையில் ஒற்றுமை" என உரக்கச்சொல்லி, மக்களின் உணர்வுகளைக் கைத்தட்டல்களாகவும் - உங்களால் அதிகம் பகிரப்படும் காணொளியாகவும் மாற்றிய தங்கை கனிமொழியை வாழ்த்தினேன்!
இந்திய நாட்டுக்கான குரலாகத் தமிழ்நாட்டின் அன்புமொழியை - ஒற்றுமைமொழியைப் பேசிய தங்கை கனிமொழியைக் கண்டு பெருமை கொள்கிறேன்! என தெரிவித்துள்ளார்.






