என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

நெல்லை மனோன்மணியம் பல்கலைக்கழகத்தின் தேர்வு வினாத்தாள் கசிந்த விவகாரம்: சி.பி.சி.ஐ.டி.க்கு மாறுகிறது
- வினாத்தாள் கசிந்த விவகாரம் தொடர்பாக கன்னியாகுமரியிலும் ஒரு வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
- வினாத்தாள் கசிந்தது எப்படி என்பது குறித்து தொடர்ந்து போலீசார் பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வந்தனர்.
நெல்லை:
நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக் கழகத்தின் கீழ் நெல்லை, தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி ஆகிய 4 மாவட்டங்களில் 106 கல்லூரிகள் செயல்பட்டு வருகிறது.
கடந்த மாதம் பல்கலைக்கழகத்தின் கீழ் உள்ள கல்லூரிகளில் செமஸ்டர் தேர்வுகள் நடந்தது. கடந்த 27-ந்தேதி பி.காம் பட்டப்படிப்புக்கான தொழில் சட்டம் எனும் இண்டஸ்டிரியல் லா என்ற பாடத்தின் தேர்வு நடைபெற இருந்த நிலையில் வினாத்தாள் கசிந்ததால் தேர்வு ரத்து செய்யப்பட்டது. அதனைத்தொடர்ந்து புதிய வினாத்தாள் தயாரிக்கப்பட்டு கடந்த 30-ந்தேதி தேர்வு நடைபெற்றது.
இதனிடையே பல்கலைக்கழக தேர்வு வினாத்தாள் கசிந்தது தொடர்பாக விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக பதிவாளர் சாக்ரடீஸ், பேட்டை போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் அடிப்படையில் பேட்டை போலீசார் 6 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
அதேநேரம் வினாத்தாள் கசிந்த விவகாரம் தொடர்பாக கன்னியாகுமரியிலும் ஒரு வழக்குப்பதிவு செய்யப்பட்டது. வினாத்தாள் கசிந்தது எப்படி என்பது குறித்து தொடர்ந்து போலீசார் பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வந்தனர். ஆனால் இந்த வழக்கில் மேற்கொண்டு எவ்வித முன்னேற்றமும் இல்லை.
இதனால் இந்த வழக்கை சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்றுவதற்கு மாநகர போலீஸ் கமிஷனர் சந்தோஷ் ஹதிமணியிடம் பேட்டை போலீசார் தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக எழுத்துப் பூர்வமாகவும் அவரிடம் கடிதம் வழங்கப்பட்டுள்ளது. இதனால் இந்த வழக்கு விரைவில் சி.பி.சி.ஐ.டி. வசம் ஒப்படைக்கப்பட உள்ளதாக போலீஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இதுகுறித்து கமிஷனர் சந்தோஷ் ஹதிமணி கூறுகையில், தேர்வு வினாத்தாள் கசிந்த விவகாரத்தில் பேட்டை போலீசார் நடத்திய விசாரணையில் முன்னேற்றம் ஏற்படவில்லை. அதேநேரம் இந்த விவகாரத்தில் 4 மாவட்டங்கள் சம்பந்தப்படுவதால் விசாரிப்பதில் சிக்கல் உள்ளது. இதனால் இந்த வழக்கை சி.பி.சி.ஐ.டி. வசம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்றார்.






