என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    • திம்பம் மலைப்பாதையில் யானைகள் எண்ணிக்கை அதிகமாக காணப்படுகிறது.
    • இருசக்கர வாகனத்தில் செல்பவர்கள் எக்காரணம் கொண்டும் வனப்பகுதியில் வாகனத்தை நிறுத்த வேண்டாம் என எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

    சத்தியமங்கலம்:

    ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் 10 வனச்சரகங்கள் உள்ளன. இதில் திம்பம், ஆசனூர், பாசூர் போன்ற வனப் பகுதிகளில் யானைகள் அதிக அளவில் வசித்து வருகின்றன.

    குறிப்பாக சத்தி-மைசூர் தேசிய நெடுஞ்சாலையில் வரும் வாகனங்களை வழி மறித்து நிற்பதும், கிராமத்துக்குள் புகுந்து விலை நிலங்களை சேதப்படுத்துவதும் தொடர்கதை ஆகி வருகிறது. தமிழகம்-கர்நாடகத்தை இணைக்கும் மிக முக்கிய போக்குவரத்து பகுதியாக திம்பம் மலைப்பகுதி உள்ளது.

    திம்பம் மலைப்பகுதியை 27 கொண்டை ஊசி வளைவுகளை கடந்து செல்ல வேண்டும். இந்த பகுதியில் யானை சிறுத்தைகள் அதிக அளவில் வசித்து வருகின்றன. அவ்வபோது சாலை அருகே வந்து வாகன ஓட்டிகளை அச்சுறுத்தி வருகின்றன.

    இந்நிலையில் நேற்று திம்பம் மலைப்பாதை 2-வது கொண்டை ஊசி வளைவில் ஒற்றை யானை ஒன்று வனப்பகுதியை விட்டு வெளியேறி வந்து நின்றது. நீண்ட நேரமாக அங்கு நின்ற ஒற்றை யானை அந்த வழியாக வந்த வாகனங்களை வழி மறித்து நின்றதால் வாகன ஓட்டிகள் அச்சம் அடைந்தனர்.

    இதனால் வாகன ஓட்டிகள் மேற்கொண்டு அந்தப் பகுதியை கடந்து செல்ல முடியாததால் வாகனத்தை நிறுத்தினர். சிறிது நேரம் திம்பம் மலைப்பாதை வளைவில் நின்ற ஒற்றை யானை பின்னர் மீண்டும் வனப்பகுதிக்குள் சென்றது. இந்த காட்சிகளை வாகன ஓட்டிகள் தங்களது செல்போனில் பதிவு செய்து கொண்டனர். இதன் பிறகே அந்த பகுதியில் போக்கு வரத்து சீரானது.

    இது குறித்து வனத்துறையினர் கூறும்போது,

    திம்பம் மலைப்பாதையில் யானைகள் எண்ணிக்கை அதிகமாக காணப்படுகிறது. யானைகள் உணவு தண்ணீரை தேடி சாலைக்கு வந்து வாகனங்களை வழிமறிப்பது தொடர் கதையாகி வருகிறது. எனவே இந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் கவனத்துடன் செல்ல வேண்டும்.

    குறிப்பாக இருசக்கர வாகனத்தில் செல்பவர்கள் எக்காரணம் கொண்டும் வனப்பகுதியில் வாகனத்தை நிறுத்த வேண்டாம் என எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

    • மெயின் அருவி, ஐந்தருவி, பழைய குற்றால அருவிகளில் கூட்டம் அதிகமாக காணப்படுகிறது.
    • வெண்ணமடை படகு குழாமில் படகு சவாரி போக்குவரத்தை தொடங்குவதற்கான பணிகளும் நடைபெற்று வருகிறது.

    தென்காசி:

    தென்காசி மாவட்டத்தில் கடந்த 4 நாட்களுக்கு முன்பு வரை பெய்த தொடர் மழையின் எதிரொலியாக குற்றாலத்தில் உள்ள அனைத்து அருவிகளிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு ஒரு வார காலமாக சுற்றுலா பயணிகளுக்கு அனைத்து அருவிகளிலும் குளிக்க தடையானது விதிக்கப்பட்டது.

    இந்நிலையில் கடந்த 4 நாட்களாக மழைப்பொழிவு குறைந்து வெயில் முகம் காட்டி வருவதால் அருவிகளில் தண்ணீர் சீராக விழுந்து வருகிறது. இன்று பக்ரீத் விடுமுறை என்பதால் காலை முதலே சுற்றுலா பயணிகள் அனைத்து அருவிகளிலும் உற்சாகமாக குளித்து வருகின்றனர். மெயின் அருவி, ஐந்தருவி, பழைய குற்றால அருவிகளில் கூட்டம் அதிகமாக காணப்படுகிறது.

    மேலும் வெண்ணமடை படகு குழாமில் படகு சவாரி போக்குவரத்தை தொடங்குவதற்கான பணிகளும் நடைபெற்று வருகிறது. படகுகளுக்கு வண்ணம் தீட்டும் பணி, பழுது பார்க்கும் பணிகள் நடைபெற்று வரும் நிலையில் படகு குழாமில் தண்ணீர் சற்று அதிகரித்ததும் படகு சவாரி தொடங்கி வைக்கப்படும் என சுற்றுலாத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    மேலும் இந்த ஆண்டு ஜூலை முதல் வாரத்தில் குற்றாலம் சாரல் திருவிழா நடத்தப்பட இருப்பதாகவும் 5 நாட்கள் கடந்த ஆண்டு நடத்தப்பட்ட விழாவானது இந்த ஆண்டு 7 நாட்களாக அதிகரிக்கப்படும் எனவும் மாவட்ட நிர்வாகம் சார்பில் முடிவு எடுத்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. 

    • தி.மு.க. மாவட்ட செயலாளர்கள், பாராளுமன்ற - சட்டமன்ற உறுப்பினர்கள், தொகுதி பார்வையாளர்கள் கூட்டத்தில் பங்கேற்றனர்.
    • ஓரணியில் தமிழ்நாடு என்ற பெயரில் புதிய உறுப்பினர் சேர்க்கையை தி.மு.க. தொடங்கி உள்ளது.

    தி.மு.க. தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் ஆலோசனை கூட்டம் தொடங்கியது.

    சென்னை தேனாம்பேட்டை அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் காணொலி வாயிலாக கூட்டம் நடைபெற்றது.

    இந்த ஆலோசனை கூட்டம் காணொலி வாயிலாக நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில் தி.மு.க. மாவட்ட செயலாளர்கள், பாராளுமன்ற - சட்டமன்ற உறுப்பினர்கள், தொகுதி பார்வையாளர்கள் கூட்டத்தில் பங்கேற்றனர்.

    ஓரணியில் தமிழ்நாடு என்ற பெயரில் புதிய உறுப்பினர் சேர்க்கையை தி.மு.க. தொடங்கி உள்ளது. ஒரு வாக்குச்சாவடியில் குறைந்தபட்சம் 30 சதவீத வாக்காளர்களை தி.மு.க. உறுப்பினர்களாக இணைப்பதற்கு வியூகம் வகுத்துள்ளது.

    2026 சட்டசபை தேர்தல் பணிகள் தொடர்பாக தி.மு.க. நிர்வாகிகளுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுத்தல்களை வழங்குகிறார்.

    • மர்ம நபர்கள் சேட்டு வீட்டின் கதவு மீது பெட்ரோல் குண்டை வீசி உள்ளனர்.
    • போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    பரமத்தி வேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் தாலுகா ஜேடர்பாளையம் அருகே ஆனங்கூர் காட்டுவலவு பகுதியைச் சேர்ந்தவர் சேட்டு (42). விவசாயியான இவர் வெல்டிங் பட்டறையும் நடத்தி வருகிறார். இவரது மனைவி நிர்மலா (37). இவர்களுக்கு பிரீத்தி (19), சன்சிகா (13) என்ற 2 மகள்கள் உள்ளனர். சேட்டுவின் மூத்த மகள் பிரீத்தி கோவையில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் படித்து வருகிறார். 2-வது மகள் சன்சிகா பெற்றோருடன் இருந்து பள்ளிக்கு சென்று வருகிறார்.

    நேற்று இரவு சேட்டு அவரது மனைவி நிர்மலா, மகள் சன்சிகா ஆகிய 3 பேரும் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தனர். இந்த நிலையில் இன்று அதிகாலை 2 மணியளவில் மர்ம நபர்கள் சேட்டு வீட்டின் கதவு மீது பெட்ரோல் குண்டை வீசி உள்ளனர். அப்போது பெட்ரோல் குண்டு வெடித்ததில் அதி பயங்கர சத்தம் கேட்டது. அப்போது தீப்பிடித்து உள் பக்க கதவு எரிந்தது. அதேபோல் வீட்டுக்குள்ளும் தீ பரவியது. இதில் வீட்டில் இருந்த பல்வேறு பொருட்கள் தீப்பிடித்து எரிந்தது. இந்த சத்தம் கேட்டு சேட்டு வெளிேய ஓடி வந்து பார்த்தார். அப்போது வீட்டு முன்பு தீப்பிடித்து எரிந்து கொண்டிருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். பின்னர் அவசர அவசரமாக வீட்டில் இருந்த தண்ணீரை எடுத்து ஊற்றி தீயை அணைத்தார்.

    பின்னர் வீட்டின் முன் பக்கம் உள்ள இரும்புகேட்டை திறக்க முயன்ற போது அது வெளிப்புறமாக பூட்டப்பட்டு இருப்பது தெரியவந்தது. இதையடுத்து சேட்டு போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்தார். அதன் அடிப்படையில் ஜேடர்பாளையம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பார்வையிட்டனர். மேலும் பரமத்தி வேலூர் துணை போலீஸ் சூப்பிரண்டு சங்கீதா, இன்ஸ்பெக்டர் இந்திராணி மற்றும் போலீசார் விைரந்து வந்து பார்வையிட்டு விசாரணை நடத்தினர்.

    சேலத்தில் உள்ள தடய அறிவியல் நிபுணர் வடிவேல் தலைமையிலான குழுவினரும், கைரேகை நிபுணர்களும் சம்பவ இடத்திற்கு வந்து வீட்டில் ஆய்வு நடத்தினர். இதுதொடர்பாக ஜேடர்பாளையம் போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது முன்விரோதம் காரணமாக மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டு வீசினார்களா? அல்லது வேறு ஏதாவது காரணத்திற்காக வீட்டில் பெட்ரோல் குண்டு வீசினார்களா? என்பது குறித்து பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மேலும் அந்தப் பகுதியில் உள்ள சி.சி.டி.வி. கேமராவில் பதிவான பதிவுகளை வைத்து நள்ளிரவில் இந்த வழியாக வந்த நபர்கள் குறித்தும் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர். வீட்டுக்குள் சேட்டு அவரது மனைவி நிர்மலா, மகள் சன்சிகா 3 பேரும் அயர்ந்து தூங்கிக் கொண்டிருந்தபோது பெட்ரோல் குண்டு வீசி அவர்களை கொல்ல திட்டமிட்டு இருக்கலாம் என்று தெரியவந்துள்ளது. சேட்டு சத்தம் கேட்டு எழுந்து வந்து தீயை அணைத்ததால் அதிர்ஷ்டவசமாக 3 பேரும் உயிர் தப்பினர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • தமிழ்நாட்டில் அனைத்து மாவட்டங்களிலும் ஹெல்த் வாக் ஸ்கீமை அமுலுக்கு கொண்டு வாருங்கள் என்று உத்தரவிட்டார்.
    • நண்பர்களுடன் சேர்ந்து 8 கிலோ மீட்டர் தூரத்தை நடந்து பார்த்தோம்.

    சேலம்:

    மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் இன்று நாமக்கல்லில் பரமத்தி சாலையில் நடைபயிற்சி மேற்கொண்டார். அப்போது அங்குள்ள லாரியின் முன் பகுதி விற்பனை செய்யும் கடையில் தீப்பிடித்து எரிந்து கொண்டிருந்தது. இதனை பார்த்ததும் தீயணைப்பு வீரர்களுக்கு உதவி செய்ததுடன் அவர்கள் தீயை விரைந்து அணைக்க உதவினார். தொடர்ந்து அமைச்சர் மா.சுப்பிரமணியன் நிருபர்களிடம் கூறியதாவது:-

    2023-ம் ஆண்டு தொடக்கத்தில் முதலமைச்சர் வழிகாட்டுதல் படி ஜப்பான் நாட்டில் உள்ள ஜப்பான் பன்னாட்டு கூட்டுறவு முகமையிடம் நிதி ஆதாரம் சம்பந்தமாக கேட்டுக்கொள்ள டோக்கியோவுக்கு நானும், துறை அதிகாரிகளும் சென்றோம். டோக்கியோவில் 8 கி.மீ . தூரத்திற்கான நடைபாதை ஹேல்த் வாக் என்ற பெயரில் வடிவமைக்கப்பட்டு சாலையில் இரு மருங்கிலும் மரங்கள் நடப்பட்டு இருக்கைகள் நடப்பட்டு நடப்பதினால் ஏற்படும் நன்மைகளை குறிப்பிட்டு விளம்பர பலகைகள் வைத்து சாலைகள் அமைக்கப்பட்டிருந்தது.

    அவர்களிடம் 8 கிலோ மீட்டர் என்று நிர்ணயத்திருக்கீறிர்கள் இதற்கான பிரத்யோக காரணம் உண்டா? என்று கேட்ட போது அவர்கள் சொன்னது 8 கி.மீ. நடந்தால் ஒவ்வொரு நாளும் 10 ஆயிரம் அடியை எடுத்து வைப்போம். அந்த வகையில் தினந்தோறும் ஒவ்வொரு மனிதனும் தினந்தோறும் 10 ஆயிரம் அடி நடந்தால் உடலுக்கு நல்லது, எந்த விதமான நோய் பாதிப்பும் இருக்காது என்ற வகையிலான செய்தியை சொன்னார்கள், நாங்கள் சென்னைக்கு திரும்பியதும் முதலமைச்சரிடம் அந்த கருத்தை வலியுறுத்தினோம்.

    முதலமைச்சரும் டோக்கியோவில் இருப்பது போலவே தமிழ்நாட்டில் அனைத்து மாவட்டங்களிலும் ஹெல்த் வாக் ஸ்கீமை அமுலுக்கு கொண்டு வாருங்கள் என்று உத்தரவிட்டார். அந்த வகையில் தமிழ்நாடு முழுவதும் இருக்கும் வருவாய் மாவட்டங்கள் 38 மாவட்டத்திலும் இந்த ஹெல்த் வாக் ஸ்கீம் 8 கி.மீட்டர் தூரம் அடையாளம் காணப்பட்டு இரு மருங்கிலும் விளம்பர பலகைகள் வைக்கப்பட்டு இருக்கைள் போடப்பட்டு ஒரு சில மாவட்டங்களில் மரங்களும் அடர்த்தியாக நடப்பட்டு இந்த திட்டம் நவம்பர் 4-ந்தேதி 2023 அன்று துணை முதலமைச்சர் உதயநிதியால் தொடங்கி வைக்கப்பட்டது.

    கொட்டும் மழையில் சென்னையில் தொடங்கி வைக்கப்பட்ட இந்த நிகழ்ச்சியில் 38 மாவட்டங்களில் இருந்தும் நடப்பவர்கள் மற்றும் அதிகாரிகள் பங்கேற்றனர். அந்த வகையில் அன்றிலிருந்து இந்த ஹெல்த் வாக் என்பது தமிழ்நாட்டில் மிகச்சிறப்பாக நடைபெற்று கொண்டு இருக்கிறது.

    நாமக்கல் மாவட்டத்தில் பல்வேறு மருத்துவ கட்டிடங்களை திறந்து வைக்கவும், புதிய கட்டிடங்களுக்கு அடிக்கல் நாட்டவும் வந்திருந்த நான் இன்று காலை நடப்போர் நல சங்கம் வைத்து 700-க்கும் மேற்பட்டவர்கள் நடைபயிற்சியில் பங்கேற்றுள்ளனர். தமிழ்நாட்டிலேயே 700-க்கும் மேற்பட்டோர் நடப்போர் நல சங்கத்தில் உறுப்பினர்களாக இருந்து தினந்தோறும் நடைபயிற்சி மேற்கொள்வது என்பது நாமக்கல் தான் முதலிடமாக இருக்கும் என்று கருதுகிறேன். அந்த வகையில் அந்த நண்பர்களுடன் சேர்ந்து 8 கிலோ மீட்டர் தூரத்தை நடந்து பார்த்தோம்.

    மிக சிறப்பான வகையில் 46 இடங்களில் நிரந்தரமாக நடந்தால் என்ன நன்மை கிடைக்கும் என்பது குறித்தான விளம்பர பலகைகள் வைக்கப்பட்டுள்ளன. இந்த பள்ளியில் தொடங்கி டிரினிட்டி கல்லூரி வரை 4 கிலோ மீட்டர், மீண்டும் அங்கிருந்து இங்கு வந்தால் 4 கி.மீட்டர், இரு பக்கமும் இருக்கைகள் அமைக்கப்பட்டுள்ளன.

    மாவட்ட சுகாதார அலுவலகத்தில் 3 அடி உயரத்திற்கான சாலை தடுப்புகள் இருப்பதை பார்த்தோம், அதனை உட்காரும் இருக்கைகளாக மாற்றுமாறு கூறி உள்ளோம். சில இடங்களில் மரங்கள் நட வேண்டியது இடங்கள் இருக்கிறது. சி.எஸ்.ஆர். நிதி பங்களிப்போடு சாலையில் மரங்கள் நட வேண்டும் என்று சொல்லியிருக்கிறோம்.

    ராஜேஷ்குமார் எம்.பி.யிடமும் இதனை வலியுறுத்தி நிறைய சாலைகளை பசுமை பகுதியாக மாற்ற ஆயிரக்கணக்கான மரங்களை குறிப்பாக நாட்டு மரங்களான புங்கை மரம், பூவரசு மரம், அத்தி மரம், நாவல் மரம், வேப்ப மரங்களை நடவேண்டும் என்று அவரிடம் வலியுறுத்துவோம். அந்த வகையில் இந்த ஹெல்த் வாக் சாலை மிக சிறப்பாக உள்ளது. இங்கு இருப்பவர்களும் மிக சிறப்பாக விழிப்புணர்வு பெற்றுள்ளனர். தமிழ்நாடு முதலமைச்சரால் 38 மாவட்டங்களிலும் நடப்போம் நலம் பெறுவோம் 2.0 விரைவில் தொடங்கி வைக்கப்பட உள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இந்நிகழ்ச்சியில் கலெக்டர் உமா, ராமலிங்கம் எம்.எல்.ஏ., நாமக்கல் போலீஸ் சூப்பிரண்டு ராஜேஸ்கண்ணன், ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் வடிவேல், நாமக்கல் அரசு மருத்துவக்கல்லூரி முதல்வர் சாந்தா அருள்மொழி, மருத்துவ பணிகள் இணை இயக்குநர் ராஜ்மோகன், மாவட்ட நல அலுவலர் பூங்கொடி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.



    தொடர்ந்து அமைச்சர் மா.சுப்பிரமணியன் பரமத்தி வேலூர் அரசு ஆஸ்பத்திரியில் ஆய்வு செய்தார். அப்போது அங்கு பொதுமக்களிடம் சிகிச்சைகள் கேட்டறிந்தார். மேலும் டாக்டர், செவிலியர்களிடம் பொதுமக்கள் வருகை மற்றும் சிகிச்சைகள் குறித்து கேட்டறிந்தார்.



    • கடந்த சில நாட்களாக பெய்த மழையால் அணையின் நீர்மட்டம் சீராக உயர்ந்து 58.83 அடியாக உள்ளது.
    • முல்லை பெரியாறு அணையின் நீர்மட்டம் 129.70 அடியாக உள்ளது.

    கூடலூர்:

    தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே உள்ள 71 அடி உயரம் கொண்ட வைகை அணை மூலம் 5 மாவட்ட விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகிறது. மேலும் முக்கிய குடிநீர் ஆதாரமாகவும் உள்ளது. போடி கொட்டக்குடியாறு, வருசநாடு மூலவைகையாறு, முல்லை பெரியாறு ஆகிய ஆறுகள் மூலம் வைகை அணைக்கு நீர் வரத்து உள்ளது.

    கடந்த சில நாட்களாக பெய்த மழையால் அணையின் நீர்மட்டம் சீராக உயர்ந்து 58.83 அடியாக உள்ளது. 764 கனஅடி நீர் வருகிற நிலையில் மதுரை மாநகர குடிநீருக்காக மட்டும் 69 கனஅடி நீர் திறக்கப்படுகிறது. அணையில் 3387 மி.கனஅடி நீர் இருப்பு உள்ளது.

    அணையில் இருந்து முதல்போக பாசனத்திற்கு தண்ணீர் திறக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர். அதனை தொடர்ந்து வருகிற 15ம் தேதி தண்ணீர் திறக்க நீர்வளத்துறை அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.

    கடந்த சில மாதங்களாக வைகை அணையில் இருந்து குடிநீருக்கு மட்டும் தண்ணீர் திறக்கப்பட்டது. தென்மேற்கு பருவமழையால் பெரியாறு அணையில் இருந்து கூடுதல் தண்ணீர் திறக்கப்பட்டது. இதனால் வைகை அணையின் நீர்மட்டம் உயர்ந்தது. பெரியாறு, வைகை அணைகளின் மொத்த நீர் இருப்பு 6 டி.எம்.சி. ஆகும். வைகை அணையில் இருந்து முதல்போக பாசனத்திற்கு 15ம் தேதி தண்ணீர் திறக்கப்பட உள்ளது.

    இதுகுறித்து அரசு சார்பில் விரைவில் அறிவிக்கப்படும் என நீர்வளத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

    முல்லை பெரியாறு அணையின் நீர்மட்டம் 129.70 அடியாக உள்ளது. 703 கனஅடி நீர் வருகிறது. தமிழக பகுதிக்கு 1200 கனஅடி நீர் திறக்கப்படுகிறது. அணையில் 4633 மி.கனஅடி நீர் இருப்பு உள்ளது.

    மஞ்சளாறு அணையின் நீர்மட்டம் 40.70 அடியாக உள்ளது. 15 கனஅடி நீர் வருகிறது. திறப்பு இல்லை.

    சோத்துப்பாறை அணையின் நீர்மட்டம் 90.69 அடியாக உள்ளது. வரத்து இல்லாத நிலையில் 3 கனஅடி நீர் திறக்கப்படுகிறது.

    சண்முகாநதி அணையின் நீர்மட்டம் 45.90 அடியாக உள்ளது. 3 கனஅடி நீர் வருகிறது. திறப்பு இல்லை.

    • எனக்கும் குருமூர்த்திக்கும் நல்ல நட்பு உள்ளது.
    • குருமூர்த்தி, சைதை துரைசாமியுடன் பேசி உள்ளேன்.

    திண்டிவனம்:

    பா.ம.க.வில் தந்தை-மகனுக்கு இடையே ஏற்பட்டுள்ள மோதலை சமாதானம் செய்ய கடந்த சில தினங்களாக பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. இந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்பட்டதா? என்பது தொடர்பான தகவல்கள் இதுவரை வெளியாகவில்லை.

    இந்த நிலையில், தைலாபுரம் தோட்டத்தில் இருந்து 3 நாள் பயணமாக சென்னைக்கு காரில் புறப்பட்ட பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    * வரும் செவ்வாய்க்கிழமை பத்திரிகையாளர்களை சந்திக்கிறேன்.

    * எனக்கும் குருமூர்த்திக்கும் நல்ல நட்பு உள்ளது. அவர் மீது மரியாதை வைத்துள்ளேன். குருமூர்த்தி, சைதை துரைசாமியுடன் பேசி உள்ளேன்.

    * இருவரிடமும் என்ன பேசினேன் என்பதை பின்னர் தெரிவிக்கிறேன் என்றார். 

    • தமிழகத்தில் பா.ஜ.க. வருகிற சட்டமன்ற தேர்தலில் முக்கிய பங்காற்ற வேண்டும் என்ற அடிப்படையில் காய்களை நகர்த்தி வருகிறது.
    • ஒத்தக்கடையில் நடைபெறும் பா.ஜ.க. நிர்வாகிகள் கூட்டத்தில் அமித்ஷா கலந்து கொண்டு பேசுகிறார்.

    மதுரை:

    தமிழகத்தில் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலில் அதிக இடங்களை பெற்று மீண்டும் ஆட்சி அமைக்க வேண்டும் என்ற துடிப்போடு தி.மு.க.வும், எடப்பாடி தலைமையில் ஆட்சி அமைக்க வேண்டும் என்று அ.தி.மு.க.வும் தற்போது இருந்தே தேர்தல் கூட்டணி, பூத் கமிட்டி செயல்பாடுகள், பிரசாரம் உள்ளிட்டவற்றில் மும்முரம் காட்டி வருகின்றனர்.

    மேலும் இதர கட்சிகளான பா.ஜ.க., காங்கிரஸ், தே.மு.தி.க. உள்ளிட்ட கட்சிகளும் தேர்தல் பணிகளை முன்னெடுத்துள்ளது.

    இந்த நிலையில் தமிழகத்தில் பா.ஜ.க. வருகிற சட்டமன்ற தேர்தலில் முக்கிய பங்காற்ற வேண்டும் என்ற அடிப்படையில் காய்களை நகர்த்தி வருகிறது. கடந்த பாராளுமன்ற தேர்தலில் கணிசமான ஓட்டுகளை பெற்ற பா.ஜ.க. இந்த முறை அ.தி.மு.க.வுடனான தனது கூட்டணியை உறுதி செய்துள்ளது. இந்த கூட்டணியில் அதிக தொகுதிகளை கேட்டு பெற்று போட்டியிட வேண்டும் என பா.ஜ.க. தலைவர்கள் முடிவு செய்து உள்ளனர்.

    இந்த நிலையில் தேர்தல் பணிகள் குறித்து நிர்வா கிகளிடம் ஆலோசிக்க பா.ஜ.க.வின் மூத்த தலைவர்களில் ஒருவரும், மத்திய உள்துறை அமைச்சருமான அமித்ஷா 2 நாள் பயணமாக இன்று மதுரை வருகிறார். டெல்லியில் இருந்து சிறப்பு விமானம் மூலம் இன்று இரவு அமித்ஷா மதுரை வருகிறார். அங்கு மாவட்ட கலெக்டர், கட்சியினர் வரவேற்கின்றனர்.

    தொடர்ந்து அவர் சிந்தாமணி பகுதியில் உள்ள தனியார் ஓட்டலில் தங்குகிறார். நாளை (8-ந் தேதி) காலை 11 மணியளவில் மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு அமித்ஷா செல்கிறார்.

    அங்கு கோவில் நிர்வாகம் சார்பில் பூரண கும்ப மரியாதை அளிக்கப்ப டுகிறது. தொடர்ந்து கோவிலில் சாமி தரிசனம் செய்கிறார். பின்னர் 3 மணியளவில் ஒத்தக்கடையில் நடைபெறும் பா.ஜ.க. நிர்வாகிகள் கூட்டத்தில் அமித்ஷா கலந்து கொண்டு பேசுகிறார்.

    இதில் மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் மற்றும் தேசிய பொதுக்குழு உறுப்பினர்கள், மாநில, மாவட்ட நிர்வாகிகள், முன்னாள் எம்.எல்.ஏ.க்கள், மண்டல நிர்வாகிகள் என 15 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பங்கேற்கின்றனர்.

    இந்த கூட்டத்தில் தமிழகத்தில் பா.ஜ.க. கூட்டணி, தொகுதிகளின் கள நிலவரம், வெற்றி வாய்ப்பு, சட்டமன்ற தேர்தலில் பா.ஜ.க.வின் சாதக பாதகங்கள் குறித்து நிர்வாகிகளிடம் அமித்ஷா கலந்துரையாடுகிறார்.

    அமித்ஷா வருகையை முன்னிட்டு மேற்கொள்ள வேண்டிய பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து போலீஸ் உயர் அதிகாரிகள் ஆலோசனை நடத்தினார். அதன்படி விமான நிலையம், அமித்ஷா தங்கும் தனியார் ஓட்டல் மற்றும் மீனாட்சி அம்மன் கோவில் போன்ற இடங்களில் பாது காப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளது. கோவில், பா.ஜ.க. நிர்வாகிகள் கூட்டத்துக்கு செல்லும் வழித்தடங்கள் முழுவதும் கண்கா ணிக்கப்பட்டு வருகிறது. மீனாட்சி அம்மன் கோவிலில் வழக்கத்தை விட போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டு உள்ளது.

    குறிப்பாக விமான நிலையத்தில் 5 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இதனால் விமான நிலையம் செல்லும் சாலை மற்றும் மாவட்ட எல்லையில் போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். வெடிகுண்டு தடுப்பு பிரிவு போலீசார் விமான நிலையம் மற்றும் மீனாட்சி அம்மன் கோவிலில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    மாநகர் முழுவதும் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர்.

    விமான நிலையம் செல்லும் சாலையில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.

    • பக்ரீத் பண்டிகையையொட்டி இன்று காலையிலேயே இஸ்லாமியர்கள் சிறப்பு தொழுகையில் ஈடுபட்டனர்.
    • தொழுகை முடிந்ததும் ஒருவருக்கு ஒருவர் கட்டித் தழுவி வாழ்த்துகளை பரிமாறி உற்சாகம் அடைந்தனர்.

    சென்னை:

    நாடு முழுவதும் இன்று இஸ்லாமியர்கள் பக்ரீத் பண்டிகையை உற்சாகமாக கொண்டாடினார்கள். பக்ரீத் பண்டிகை தியாகத்துக்கான பெருநாளாக கொண்டாடப்படுகிறது. பக்ரீத் பண்டிகையையொட்டி இன்று காலையிலேயே இஸ்லாமியர்கள் சிறப்பு தொழுகையில் ஈடுபட்டனர். தொழுகை முடிந்ததும் ஒருவருக்கு ஒருவர் கட்டித் தழுவி வாழ்த்துகளை பரிமாறி உற்சாகம் அடைந்தனர்.

    இந்த நிலையில், தமிழக வெற்றிக்கழகத் தலைவர் விஜய், பக்ரீத் திருநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,

    உன்னத தியாகத்தைப் போற்றும் வகையில், பக்ரீத் பண்டிகையைக் கொண்டாடும் இஸ்லாமிய உறவுகள் அனைவருக்கும் எனது மனமார்ந்த நல்வாழ்த்துகள்.

    உயரிய தியாகத்தைப் போற்றும் இந்நன்னாளில் அனைவரிடத்தும் சகோதரத்துவம், சமத்துவம், சமய நல்லிணக்கம், பூரண மகிழ்ச்சி நீடித்து நிலைக்க உறுதி ஏற்போம் என்று தெரிவித்துள்ளார். 



    • தங்கம் விலை ஒரு நாள் உயருவதும், மறுநாள் குறைவதுமான நிலையிலேயே நீடிக்கிறது.
    • நேற்று விலை மாற்றமின்றி ஒரு சவரன் ரூ.73,040-க்கும் விற்பனையானது.

    சென்னை:

    தங்கம் விலை ஒரு நாள் உயருவதும், மறுநாள் குறைவதுமான நிலையிலேயே நீடிக்கிறது. பெரும்பாலும் தங்கம் விலை உயர்ந்து காணப்படுகிறது. வார தொடக்க நாளான திங்கட்கிழமை சவரனுக்கு ரூ.1,120-ம், செவ்வாய்கிழமை ரூ.160-ம், புதன்கிழமை ரூ.80-ம், நேற்றுமுன் சவரனுக்கு ரூ.320 உயர்ந்தும், நேற்று விலை மாற்றமின்றி ஒரு சவரன் ரூ.73,040-க்கும் விற்பனையானது.

    இந்த நிலையில், வார இறுதிநாளான இன்று தங்கம் அதிரடியாக குறைந்துள்ளது. கிராமுக்கு 150 ரூபாய் குறைந்து ஒரு கிராம் தங்கம் ரூ.8,980-க்கும் சவரனுக்கு 1200 ரூபாய் குறைந்து ஒரு சவரன் ரூ.71,840-க்கும் விற்பனையாகிறது.

    வெள்ளி விலையும் குறைந்துள்ளது. கிராமுக்கு ஒரு ரூபாய் குறைந்து ஒரு கிராம் வெள்ளி 117 ரூபாய்க்கும் கிலோவுக்கு ஆயிரம் ரூபாய் குறைந்து பார் வெள்ளி ஒரு லட்சத்து 17 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. 

    கடைசி ஐந்து நாள் தங்கம் விலை நிலவரம்:-

    06-06-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.73,040

    05-06-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.73,040

    04-06-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.72,720

    03-06-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.72,640

    02-06-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.72,480

    கடைசி ஐந்து நாள் வெள்ளி விலை நிலவரம்:-

    06-06-2025- ஒரு கிராம் ரூ.118

    05-06-2025- ஒரு கிராம் ரூ.114

    04-06-2025- ஒரு கிராம் ரூ.114

    03-06-2025- ஒரு கிராம் ரூ.113

    02-06-2025- ஒரு கிராம் ரூ.111

    • நேற்று வேட்மனுவுடன் சொத்து விவரங்களையும் கமல்ஹாசன் தாக்கல் செய்துள்ளார்.
    • மகேந்திரா பொலிரோ, பென்ஸ், பிஎம்டபிள்யூ, லக்சஸ் ஆகிய கார்கள் இருப்பதாகவும் கமல் தெரிவித்துள்ளார்.

    தமிழகத்தில் காலியாகும் பாராளுமன்ற மாநிலங்களவை 6 உறுப்பினர் பதவிகளுக்கு தேர்தல் நடைபெறுகிறது. இதற்காக தி.மு.க. மற்றும் அ.தி.மு.க. சார்பில் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டனர். இதனை தொடர்ந்து தி.மு.க. கூட்டணி சார்பில் மாநிலங்களவை தேர்தலில் போட்டியிடும் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் நேற்று வேட்புமனுவை தாக்கல் செய்தார்.

    இந்த நிலையில், நடிகரும், மக்கள் நீதி மய்யம் தலைவருமான கமல்ஹாசனுக்கு ரூ.50 கோடி கடன் இருப்பதாக சொத்து விவரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    நேற்று வேட்மனுவுடன் சொத்து விவரங்களையும் கமல்ஹாசன் தாக்கல் செய்துள்ளார். அதில், ரூ.49.67 கோடி இருப்பதாகவும், அசையும் சொத்துகளின் மதிப்பு ரூ.59.60 கோடி, அசையா சொத்துகளின் மதிப்பு ரூ.245.86 கோடி என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    மேலும், மகேந்திரா பொலிரோ, பென்ஸ், பிஎம்டபிள்யூ, லக்சஸ் ஆகிய கார்கள் இருப்பதாகவும் கமல் தெரிவித்துள்ளார். 

    • நேற்று மாலைநேர தகவலின்படி, 2 லட்சத்து 98 ஆயிரத்து 425 பேர் விண்ணப்பங்களை பதிவு செய்துள்ளனர்.
    • இந்த ஆண்டு என்ஜினீயரிங் படிப்புகளில் சேருவதற்காக ஆர்வம் காட்டும் மாணவ-மாணவிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

    சென்னை:

    என்ஜினீயரிங் படிப்புகளில் சேருவதற்கான ஆன்லைன் விண்ணப்பப்பதிவு கடந்த மாதம் (மே) 7-ந்தேதி தொடங்கியது. விண்ணப்பப்பதிவு தொடங்கியதில் இருந்து மாணவ-மாணவிகள் ஆர்வமுடன் விண்ணப்பித்தனர்.

    அதன்படி, விண்ணப்பப்பதிவு செய்வதற்கான அவகாசம் நேற்றுடன் நிறைவு பெற்றது. நேற்று மாலைநேர தகவலின்படி, 2 லட்சத்து 98 ஆயிரத்து 425 பேர் விண்ணப்பங்களை பதிவு செய்துள்ளனர்.

    இவ்வளவு விண்ணப்பங்கள் வந்திருந்தாலும், அதில் விண்ணப்பக் கட்டணங்களை செலுத்தி, சான்றிதழ்களை பதிவேற்றம் செய்பவர்கள்தான் அடுத்தகட்டமாக கலந்தாய்வுக்கு அழைக்கப்படுவார்கள்.

    அந்தவகையில் 1 லட்சத்து 33 ஆயிரத்து 805 மாணவர்களும், 1 லட்சத்து 10 ஆயிரத்து 363 மாணவிகளும் என மொத்தம் 2 லட்சத்து 44 ஆயிரத்து 168 மாணவ-மாணவிகள் விண்ணப்பக் கட்டணங்களை செலுத்தியிருக்கின்றனர். விண்ணப்பக் கட்டணங்களை செலுத்தி என்ஜினீயரிங் படிப்புகளில் சேருவதற்கான போட்டியில் 2.44 லட்சம் இருக்கின்றனர். அவர்களில் 2 லட்சத்து 24 ஆயிரத்து 102 பேர் சான்றிதழ்களை பதிவேற்றம் செய்திருக்கின்றனர். சான்றிதழ்களை 9-ந்தேதி வரை (நாளை மறுதினம்) பதிவேற்றம் செய்யலாம்.

    முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு இந்த ஆண்டு என்ஜினீயரிங் படிப்புகளில் சேருவதற்காக ஆர்வம் காட்டும் மாணவ-மாணவிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இதற்கு முந்தைய ஆண்டுகளில் அதாவது 2021-ம் ஆண்டில் இருந்து 2024-ம் ஆண்டு வரையில் முறையே 1,45,043, 1,69,083, 1,87,847, 2,09,653 பேர் விண்ணப்பக் கட்டணங்களை செலுத்தி படிப்புகளில் சேருவதற்காக காத்திருந்தனர்.

    இதற்கு முந்தைய ஆண்டுகளில் என்ஜினீயரிங் படிப்புகளில் உள்ள காலி இடங்களுக்கும் குறைவான எண்ணிக்கையிலேயே மாணவ-மாணவிகள் விண்ணப்பித்திருப்பார்கள். இந்த ஆண்டு அதுபோல் இல்லை. அதாவது, அரசு, நிர்வாக ஒதுக்கீட்டு இடங்கள் என மொத்தம் சுமார் 2 லட்சத்து 42 ஆயிரம் இடங்களுக்கு, 2 லட்சத்து 44 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்திருக்கின்றனர்.

    செயற்கை நுண்ணறிவு, தரவு அறிவியல் சார்ந்த படிப்புகளை முடிப்பவர்களுக்கு வேலைவாய்ப்புகள் கொட்டிக் கிடப்பதால், அந்த படிப்புகளில் சேர மாணவ-மாணவிகள் அதிக ஆர்வம் காட்டுகின்றனர். விண்ணப்பித்தவர்களின் சான்றிதழ் சரிபார்ப்பு 10-ந்தேதி முதல் 20-ந்தேதி வரை மேற்கொள்ளப்பட்டு, 27-ந்தேதி தரவரிசைப்பட்டியல் வெளியிடப்பட இருக்கிறது.

    கலந்தாய்வு குறித்த தற்காலிக அட்டவணை எப்போதும் முன்கூட்டியே வெளியிடப்படும். ஆனால் இந்த ஆண்டு அப்படி வெளியிடப்படவில்லை. தரவரிசைப் பட்டியலை வெளியிடும்போது, கலந்தாய்வு குறித்த தேதி அறிவிக்கப்படும் எனவும், ஜூலை முதல் மற்றும் 2-வது வாரத்தில் கலந்தாய்வு தொடங்குவதற்கான வாய்ப்பு உள்ளது எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

    இதுதவிர, பி.ஆர்க் படிப்புக்கான நாடா நுழைவுத்தேர்வு ஜூன் இறுதி வாரம் வரை நடைபெற இருப்பதால் பி.ஆர்க் படிப்புக்கான இணையதள விண்ணப்பப்பதிவு மற்றும் சான்றிதழ் பதிவேற்றம் செய்ய 30-ந்தேதி வரை அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.

    தமிழ்நாட்டில் தற்போது 463 என்ஜினீயரிங் கல்லூரிகள் செயல்படுகின்றன. இதன் தொடர்ச்சியாக நடப்பாண்டில் (2025-26) 7 புதிய கல்லூரிகள் தொடங்கப்படுவதற்கான வாய்ப்பு இருப்பதாக சொல்லப்படுகிறது.

    ×