என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

மதுரையில் அமித்ஷா வருகையை முன்னிட்டு பலத்த போலீஸ் பாதுகாப்பு
- தமிழகத்தில் பா.ஜ.க. வருகிற சட்டமன்ற தேர்தலில் முக்கிய பங்காற்ற வேண்டும் என்ற அடிப்படையில் காய்களை நகர்த்தி வருகிறது.
- ஒத்தக்கடையில் நடைபெறும் பா.ஜ.க. நிர்வாகிகள் கூட்டத்தில் அமித்ஷா கலந்து கொண்டு பேசுகிறார்.
மதுரை:
தமிழகத்தில் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலில் அதிக இடங்களை பெற்று மீண்டும் ஆட்சி அமைக்க வேண்டும் என்ற துடிப்போடு தி.மு.க.வும், எடப்பாடி தலைமையில் ஆட்சி அமைக்க வேண்டும் என்று அ.தி.மு.க.வும் தற்போது இருந்தே தேர்தல் கூட்டணி, பூத் கமிட்டி செயல்பாடுகள், பிரசாரம் உள்ளிட்டவற்றில் மும்முரம் காட்டி வருகின்றனர்.
மேலும் இதர கட்சிகளான பா.ஜ.க., காங்கிரஸ், தே.மு.தி.க. உள்ளிட்ட கட்சிகளும் தேர்தல் பணிகளை முன்னெடுத்துள்ளது.
இந்த நிலையில் தமிழகத்தில் பா.ஜ.க. வருகிற சட்டமன்ற தேர்தலில் முக்கிய பங்காற்ற வேண்டும் என்ற அடிப்படையில் காய்களை நகர்த்தி வருகிறது. கடந்த பாராளுமன்ற தேர்தலில் கணிசமான ஓட்டுகளை பெற்ற பா.ஜ.க. இந்த முறை அ.தி.மு.க.வுடனான தனது கூட்டணியை உறுதி செய்துள்ளது. இந்த கூட்டணியில் அதிக தொகுதிகளை கேட்டு பெற்று போட்டியிட வேண்டும் என பா.ஜ.க. தலைவர்கள் முடிவு செய்து உள்ளனர்.
இந்த நிலையில் தேர்தல் பணிகள் குறித்து நிர்வா கிகளிடம் ஆலோசிக்க பா.ஜ.க.வின் மூத்த தலைவர்களில் ஒருவரும், மத்திய உள்துறை அமைச்சருமான அமித்ஷா 2 நாள் பயணமாக இன்று மதுரை வருகிறார். டெல்லியில் இருந்து சிறப்பு விமானம் மூலம் இன்று இரவு அமித்ஷா மதுரை வருகிறார். அங்கு மாவட்ட கலெக்டர், கட்சியினர் வரவேற்கின்றனர்.
தொடர்ந்து அவர் சிந்தாமணி பகுதியில் உள்ள தனியார் ஓட்டலில் தங்குகிறார். நாளை (8-ந் தேதி) காலை 11 மணியளவில் மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு அமித்ஷா செல்கிறார்.
அங்கு கோவில் நிர்வாகம் சார்பில் பூரண கும்ப மரியாதை அளிக்கப்ப டுகிறது. தொடர்ந்து கோவிலில் சாமி தரிசனம் செய்கிறார். பின்னர் 3 மணியளவில் ஒத்தக்கடையில் நடைபெறும் பா.ஜ.க. நிர்வாகிகள் கூட்டத்தில் அமித்ஷா கலந்து கொண்டு பேசுகிறார்.
இதில் மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் மற்றும் தேசிய பொதுக்குழு உறுப்பினர்கள், மாநில, மாவட்ட நிர்வாகிகள், முன்னாள் எம்.எல்.ஏ.க்கள், மண்டல நிர்வாகிகள் என 15 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பங்கேற்கின்றனர்.
இந்த கூட்டத்தில் தமிழகத்தில் பா.ஜ.க. கூட்டணி, தொகுதிகளின் கள நிலவரம், வெற்றி வாய்ப்பு, சட்டமன்ற தேர்தலில் பா.ஜ.க.வின் சாதக பாதகங்கள் குறித்து நிர்வாகிகளிடம் அமித்ஷா கலந்துரையாடுகிறார்.
அமித்ஷா வருகையை முன்னிட்டு மேற்கொள்ள வேண்டிய பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து போலீஸ் உயர் அதிகாரிகள் ஆலோசனை நடத்தினார். அதன்படி விமான நிலையம், அமித்ஷா தங்கும் தனியார் ஓட்டல் மற்றும் மீனாட்சி அம்மன் கோவில் போன்ற இடங்களில் பாது காப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளது. கோவில், பா.ஜ.க. நிர்வாகிகள் கூட்டத்துக்கு செல்லும் வழித்தடங்கள் முழுவதும் கண்கா ணிக்கப்பட்டு வருகிறது. மீனாட்சி அம்மன் கோவிலில் வழக்கத்தை விட போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டு உள்ளது.
குறிப்பாக விமான நிலையத்தில் 5 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இதனால் விமான நிலையம் செல்லும் சாலை மற்றும் மாவட்ட எல்லையில் போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். வெடிகுண்டு தடுப்பு பிரிவு போலீசார் விமான நிலையம் மற்றும் மீனாட்சி அம்மன் கோவிலில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
மாநகர் முழுவதும் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர்.
விமான நிலையம் செல்லும் சாலையில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.






