என் மலர்
உள்ளூர் செய்திகள்
- பா.ஜ.க. சொல்ல வேண்டிய பதிலை எல்லாம் எடப்பாடி பழனிசாமி கூறி கொண்டிருக்கிறார்.
- பா.ஜ.க.வுடன் கூட்டணி சேரும் முன்னர் ஒரு மாதிரி பேசினார்.
சென்னை:
தி.மு.க. அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:-
* தமிழகத்தில் சிறப்பாக நடக்கும் தி.மு.க. ஆட்சியை பொறுத்துக்கொள்ள முடியாமல் கேவலமாக எடப்பாடி பழனிசாமி அறிக்கை விடுகிறார்.
* தொகுதி மறுவரையறை விவகாரத்தில் எடப்பாடி பழனிசாமியின் அறிக்கை கேலிக்கூத்தானது.
* பா.ஜ.க.வின் ஊதுகுழலாக எடப்பாடி பழனிசாமி செயல்பட்டு கொண்டிருக்கிறார்.
* பா.ஜ.க. சொல்ல வேண்டிய பதிலை எல்லாம் எடப்பாடி பழனிசாமி கூறி கொண்டிருக்கிறார்.
* பா.ஜ.க.வுடன் கூட்டணி சேரும் முன்னர் ஒரு மாதிரி பேசினார். பா.ஜ.க.வுடன் கூட்டணி வைத்த பின்னர் வேறு மாதிரி பேசுகிறார் என்றார்.
இதனிடையே, அமித்ஷாவின் தமிழக வருகை குறித்த கேள்விக்கு, மோடி 8 முறை வந்தும் ஒன்றும் செய்யமுடியவில்லை, ஷா என்ன செய்ய முடியும்? என்று கூறினார்.
- முகுந்தன் விவகாரம் முடிந்து போன விஷயம்.
- கூட்டணி குறித்து பேசுவதற்கான நேரம் வரவில்லை.
சென்னை:
அன்புமணி உடனான பிரச்சனை குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு, தீர்வு என்பது ஒன்று இல்லாமல் எதுவும் இல்லை என ராமதாஸ் தெரிவித்தார்.
மேலும், சென்னை வந்த பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-
* முகுந்தன் விவகாரம் முடிந்து போன விஷயம். இனி நடக்கப்போவதை குறித்து பேசுங்கள்.
* கூட்டணி குறித்து பேசுவதற்கான நேரம் வரவில்லை.
* அன்புமணிக்கு மீண்டும் தலைவர் பதவியா என்பதை பின்னர் சொல்கிறேன் என்றார்.
இதனிடையே, எல்லாம் நல்லபடியே நடக்கும் என நிர்வாகிகளுக்கு கூறுவதாக ராமதாஸ் தெரிவித்தார்.
- தென்னிந்திய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது.
- நகரின் ஒரு சில பகுதிகளில் மாலை அல்லது இரவு நேரங்களில் லேசான மழை பெய்யும்.
சென்னை:
சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
தென்னிந்திய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக தமிழகத்தில் வருகிற 10-ந்தேதி முதல் 13-ந்தேதி வரை கனமழைக்கு வாய்ப்புள்ளது.
அதன்படி, 10-ந்தேதி விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர் மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் ஓரிரு பகுதிகளில் கனமழை பெய்யும்.
11-ந்தேதி ராணிப்பேட்டை, காஞ்சிபுரம், வேலூர், திருவண்ணாமலை, திருப்பத்தூர், தருமபுரி, கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது.
12-ந்தேதி காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவண்ணாமலை, ராணிப்பேட்டை, வேலூர், நீலகிரி மாவட்டங்களில் கனமழை பெய்யும்.
13-ந்தேதி நீலகிரி, கோவை மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நாளை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் மாலை அல்லது இரவு நேரங்களில் லேசான மழை பெய்யும். அதே நேரம் மதிய வேளையில் வெயிலின் தாக்கம் 100 டிகிரி பாரன்ஹீட்டை தாண்டி பதிவாகக்கூடும்.
- ஆண்டுக்கு சுமார் ரூ.200 கோடி அளவுக்கு மக்கள் வரிப்பணத்தை தமிழக அரசு வீணடிப்பது கண்டிக்கத்தக்கது.
- தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் கட்டுப்பாட்டில் 308 கிடங்குகள் மட்டுமே உள்ளன.
பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
தமிழ்நாட்டில் நெல் கொள்முதல் நிலையங்கள், கிடங்குகள் ஆகியவற்றில் வைக்கப்பட்டிருந்த ரூ.840 கோடி மதிப்புள்ள நெல் மூட்டைகள் கடந்த ஐந்தாண்டுகளில் சேதமடைந்திருப்பதாக தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின் கீழ் பெறப்பட்ட தகவல்களில் தமிழக அரசு ஒப்புக்கொண்டிருக்கிறது. நெல் மூட்டைகளை சேமித்து வைப்பதற்கான அடிப்படைக் கட்டமைப்புகளைக் கூட ஏற்படுத்தாமல் ஆண்டுக்கு சுமார் ரூ.200 கோடி அளவுக்கு மக்கள் வரிப்பணத்தை தமிழக அரசு வீணடிப்பது கண்டிக்கத்தக்கது.
தி நியு இந்தியன் எக்ஸ்பிரஸ் ஆங்கில நாளிதழ் தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின் மூலம் தமிழக அரசின் பல்வேறு துறைகளில் இருந்து பெறப்பட்ட தகவல்கள் மூலம் 2019-20ஆம் ஆண்டில் தொடங்கி 2023-24ஆம் ஆண்டு வரையிலான 5 ஆண்டுகளில் ஒவ்வொரு ஆண்டும் தலா 1.25 லட்சம் டன் வரை நெல்/அரிசி மூட்டைகள் பயன்படுத்த முடியாத அளவுக்கு சேதமடைந்திருக்கின்றன என்று தெரியவந்துள்ளது. ஐந்தாண்டுகளில் இவ்வாறு சேதமடைந்த நெல்/அரிசியின் மதிப்பு மட்டும் ரூ. 840 கோடி. சேதத்தின் மதிப்பை தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் முழுமையாக தெரிவிக்க வில்லை. முழுமையான பாதிப்பு தெரிய வந்தால் சேதத்தின் மதிப்பு இன்னும் அதிகமாக இருக்கலாம்.
நெல் கொள்முதல் நிலையங்களில் கொள்முதல் செய்யப்பட்ட நெல் மூட்டைகளை அடுத்த சில நாள்களுக்கு சேமித்து வைக்க இட வசதி இல்லாதது, நெல் சேமிப்புக் கிடங்குகளில் கூரைகள் ஒழுகுவது, சுவர்களில் விரிசல் ஏற்பட்டிருப்பது, எலித் தொல்லைகள் கட்டுப்படுத்தப்படாதது போன்றவை தான் நெல் மூட்டைகள் சேதமடைவதற்கு காரணம் என்று வல்லுனர்கள் கூறியுள்ளனர். ஐந்தாண்டுகளில் ஏற்பட்ட சேதத்தின் மதிப்பு மட்டும் தான் இப்போது வெளியாகியுள்ளது. உண்மையில் பல பத்தாண்டுகளாக நெல் மூட்டைகள் சேதமடைவதும் , நூற்றுக்கணக்கான கோடி ரூபாய் மக்கள் வரிப்பணம் வீணாவதும் தொடர்ந்து கொண்டு தான் இருக்கிறது.
போதிய கட்டமைப்பு வசதிகள் இல்லாததால் அரசுக்கு ஏற்படும் இழப்புகள் ஒருபுறம் இருக்க, நெல் கொள்முதல் நிலையங்களில் போதிய இடவசதி இல்லாததால் உழவர்கள் கொண்டு வந்த நெல் மூட்டைகள் மழையில் நனைந்து வீணாவதும் ஆண்டு தோறும் நடைபெற்றுக்கொண்டு தான் இருக்கிறது. கிடங்குகள் உள்ளிட்ட கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்தத் தவறிய தமிழக ஆட்சியாளர்கள் தான் இந்த இழப்புகளுக்கு பொறுப்பேற்க வேண்டும்.
தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் கட்டுப்பாட்டில் 308 கிடங்குகள் மட்டுமே உள்ளன. அவை போதுமானவை அல்ல என்பதாலும், கொள்முதல் செய்யப்படும் வேளாண் விளைபொருட்களை பாதுகாப்பாக இருப்பு வைக்க வேண்டும் என்பதாலும், கிடங்குகளின் எண்ணிக்கையை 600ஆக உயர்த்த வேண்டும்; நெல்கொள்முதல் நிலையங்களில் நெல் மூட்டைகள் வீணாவதைத் தடுக்க ஒவ்வொரு கொள்முதல் நிலையத்திலும் 1000 டன் நெல் மூட்டைகளை சேமித்து வைக்கும் அளவுக்கு கட்டமைப்பை மேம்படுத்த வேண்டும் என்று பாட்டாளி மக்கள் கட்சி தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. ஆனால், இத்தகைய ஆக்கப்பூர்வமான யோசனைகளை தமிழக அரசு கண்டுகொள்வதில்லை.
தமிழகத்தில் ஆண்டுக்கு சராசரியாக 30 லட்சம் டன் நெல் கொள்முதல் செய்யப்படுவதாகவும், கிடங்குகளில் ஆண்டுக்கு சராசரியாக ரூ.200 கோடி இழப்பு ஏற்படுவதாகவும் வைத்துக் கொண்டால், இழப்பான தொகையைக் கொண்டு ஒரு குவிண்டால் நெல்லுக்கு ரூ.66 கூடுதல் ஊக்கத்தொகையாக வழங்க முடியும். ஆனால், உழவர்களுக்கு கூடுதல் விலை வழங்க மறுக்கும் தமிழக அரசு, அந்த தொகையை வீணடிக்கிறது. இதற்கு முடிவு கட்டும் வகையில் கொள்முதல் நிலையங்களிலும், கிடங்குகளிலும் பாதுகாப்பாக நெல் மூட்டைகளை சேமித்து வைப்பதற்கு வசதியாக கூடுதல் கட்டமைப்புகளை உருவாக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- முகுந்தன் பொறுப்புகளை விரும்பவில்லை.
- பா.ஜ.க.வுடன் கூட்டணி குறித்து நான் நினைத்துக்கூட பார்க்கவில்லை.
திண்டிவனம் தைலாபுரம் தோட்டத்தில் இருந்து டாக்டர் ராமதாஸ் இன்று காலையில் சென்னை புறப்பட்டு வந்தார்.
சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் பனையூரில் டிரிப்டு உட் கார்டன் பகுதியில் டாக்டர் ராம தாசின் மகள் ஸ்ரீகாந்தி வீடு உள்ளது. காலையில் மகள் வீட்டுக்கு சென்ற ராமதாஸ் அங்கேயே முகாமிட்டு உள்ளார்.
இந்த தெருவுக்கு பக்கத்திலேயே ஷியாமளா கார்டன் பகுதியில் தான் டாக்டர் அன்புமணியின் வீடு மற்றும் அலுவலகம் உள்ளது.
ஏற்கனவே தைலாபுரத்தில் டாக்டர் ராமதாஸ்-அன்புமணி சந்திப்பின்போது மகள் ஸ்ரீகாந்தியும் உடன் இருந்து சமரசம் செய்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. எனவே இப்போதும் இருவரையும் சந்திக்க வைத்து சமாதான முயற்சியில் ஈடுபடுவார் என்று கூறப்படுகிறது.
மேலும் சென்னையில் இருந்து தைலாபுரம் போய் வர நேரம் அதிகம் ஆகிறது. எனவே சென்னையிலேயே முக்கிய பிரமுகர்களை சந்தித்து அரசியல் நிலவரம் தொடர்பாக பேச ராமதாஸ் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
ஏற்கனவே அ.தி.மு.க. தரப்பில் எம்.பி. ஒருவர் டாக்டர் ராமதாசை தைலாபுரத்தில் சந்தித்து பேசி உள்ளார்.
தி.மு.க. தரப்பிலும் மூத்த எம்.பி. ஒருவர் டாக்டர் ராமதாசை தொடர்பு கொண்டு பேசியதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் சென்னை வந்துள்ள பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-
அன்புமணியுடனான கருத்து மோதலால் பா.ம.க. விற்கு எந்த பின்னடைவும் இல்லை. முகுந்தன் பொறுப்புகளை விரும்பவில்லை. தொழில் செய்வதில் தான் ஆர்வமாக உள்ளார். சென்னையில் அன்புமணியை சந்திக்க போவதில்லை.
அமித்ஷா வருவது பற்றி எனக்கு தெரியாது. பா.ஜ.க. வுடன் கூட்டணி குறித்து நான் நினைத்துக்கூட பார்க்கவில்லை.
இவ்வாறு அவர் கூறினார்.
- பொதுச்செயலாளர் பிரேமலதா தலைமையில் கூட்டம் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
- கூட்டணி தொடர்பான முக்கிய முடிவுகள் குறித்து விவாதிக்கப்படலாம் என தகவல் வெளியாகி உள்ளது.
சென்னை:
தே.மு.தி.க. மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் வரும் 11-ந்தேதி முதல் 14-ந்தேதி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. கூட்டம் பொதுச்செயலாளர் பிரேமலதா தலைமையில் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், இக்கூட்டத்தில் தேர்தல் பணி, கூட்டணி தொடர்பான முக்கிய முடிவுகள் குறித்து விவாதிக்கப்படலாம் என தகவல் வெளியாகி உள்ளது.
அ.தி.மு.க. கூட்டணியில் அங்கம் வகிக்கும் தே.மு.தி.க.வுக்கு மாநிலங்களவை சீட் ஒதுக்கப்படாதது சலசலப்பை ஏற்படுத்திய நிலையில், மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.
- தமிழ்நாட்டில் ராமனை விட முருகனே தம்மை காப்பாற்றுவார் என நம்புகிறது.
- தமிழ்நாட்டு மக்களின் எந்த உரிமைகளுக்கும் மாநாடோ பொதுக்கூட்டமோ நடத்தாத பாஜக, ஓட்டுக்காக மதவெறி அரசியலை முன்னெடுக்கிறது.
சென்னை :
விடுதலை சிறுத்தைகள் கட்சி துணைப்பொதுச்செயலாளர் வன்னி அரசு எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,
வட இந்தியாவில் ராமரை வைத்து அரசியல் செய்த பாஜக, ஒடிசாவில் ராமருக்கு பதிலாக ஜெய் ஜெகநாத் என முழங்கி பிழைப்புவாதம் செய்தது.
கேரளாவில் நாராயண குருவிடம் மண்டியிட்ட பாஜக தமிழ்நாட்டில் முருகனிடம் சரணாகதி அடைந்துள்ளது.
தமிழ்நாட்டில் ராமனை விட முருகனே தம்மை காப்பாற்றுவார் என நம்புகிறது.
அதனால் தான் முருக பக்தர்கள் மாநாட்டை பாஜக ஒருங்கிணைக்கிறது. தமிழ்நாட்டு மக்களின் எந்த உரிமைகளுக்கும் மாநாடோ பொதுக்கூட்டமோ நடத்தாத பாஜக, ஓட்டுக்காக மதவெறி அரசியலை முன்னெடுக்கிறது.
தமிழ்நாட்டு மக்கள் முருகனை வணங்குவார்கள். ஆனால், பாஜகவின் மதவாதத்துக்கு தலைவணங்க மாட்டார்கள். முருகனே பாஜகவில் சேர்ந்தாலும் பாஜகவை காப்பாற்ற முடியாது.
முருகன் மீது பாஜகவுக்கு உண்மையலேயே பக்தி இருந்தால், முருகன் சாதி மறுப்பு திருமணம் செய்தது போல,
சாதி மறுப்பு திருமணங்களை ஆதரித்து தீர்மானம் இயற்ற தயாரா?
சாதி மறுப்பு திருமணங்கள் செய்வோரை ஆணவப்படுகொலை செய்யும் பயங்கரவாதத்தை கண்டிக்கத்தயாரா? என கேள்வி எழுப்பியுள்ளார்.
- இளையராஜாவை நேரில் சந்திக்கும் வாய்ப்பு கிடைத்ததைப் பெரும் பாக்கியமாகக் கருதுகிறேன்.
- நம் வாழ்வின் ஒவ்வொரு கணத்தையும், இசைஞானி அவர்களின் இசையின் துணை கொண்டே கடக்கிறோம்.
சென்னை:
முன்னாள் பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,
கோவையில், நமது இசைஞானி, பத்மவிபூஷண் இளையராஜாவை நேரில் சந்திக்கும் வாய்ப்பு கிடைத்ததைப் பெரும் பாக்கியமாகக் கருதுகிறேன்.
நம் வாழ்வின் ஒவ்வொரு கணத்தையும், இசைஞானி அவர்களின் இசையின் துணை கொண்டே கடக்கிறோம். நமது வருங்கால தலைமுறைகளுக்கும், அவரது இசையே அருமருந்தாக இருக்கப்போகிறது என்பதை விட, மகிழ்ச்சி தருவது வேறென்ன இருந்து விடப் போகிறது என கூறியுள்ளார்.
- உப்பு உற்பத்தியில் ஆண், பெண் தொழிலாளர்கள் ஆயிரக்கணக்கானோர் ஈடுபட்டு வருகின்றனர்.
- தற்போது ஒரு டன் உப்பு ரூ.2000 முதல் ரூ.2500 வரை விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
வேதாரண்யம்:
தமிழ்நாட்டில் தூத்துக்குடிக்கு அடுத்தபடியாக உப்பு உற்பத்தியில் நாகை மாவட்டம் வேதாரண்யம் 2-ம் இடம் வகிக்கிறது.
இங்கு அகஸ்தியன்பள்ளி, கோடியக்காடு, கடிநெல்வயல் உள்ளிட்ட பகுதிகளில் 9 ஆயிரம் ஏக்கரில் உப்பு உற்பத்தி நடைபெற்று வருகிறது.
இந்த தொழிலில் நேரடியாகவும், மறைமுகமாகவும் 10 ஆயிரம் தொழிலாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
இங்கு ஆண்டு ஒன்றுக்கு 6 லட்சம் மெட்ரிக் டன் உப்பு உற்பத்தி நடைபெறுகிறது.
இங்கு உற்பத்தி செய்யப்படும் உப்பு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கும், ஆந்திரா, கேரளா, கர்நாடகா உள்ளிட்ட வெளிமாநிலங்களுக்கும் லாரிகள் மூலம் நாள்தோறும் அனுப்பி வைக்கப்படுகிறது.
தற்போது வேதாரண்யம் சுற்றுவட்டார பகுதிகளில் வெயில் தாக்கம் அதிகரித்து காணப்படுகிறது. இதனால் இங்கு உப்பு உற்பத்தி பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
உப்பு உற்பத்தியில் ஆண், பெண் தொழிலாளர்கள் ஆயிரக்கணக்கானோர் ஈடுபட்டு வருகின்றனர். கடந்த மாதம் பருவம் தவறி பெய்த மழையால் உப்பு உற்பத்தி பாதிக்கப்பட்டது. இதனால் போதுமான உப்பு இருப்பு வைக்க முடியவில்லை.
தற்போது உற்பத்தி செய்யப்படும் உப்பை தினமும் விற்பனைக்காக லாரிகள் மூலம் அனுப்பும் பணியும் நடைபெற்று வருகிறது.
தற்போது ஒரு டன் உப்பு ரூ.2000 முதல் ரூ.2500 வரை விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
தற்போது வெயிலின் தாக்கத்தால் தீவிரமாக உப்பு உற்பத்தி நடந்தாலும் பருவம் தவறி பெய்த மழையால் உப்பு உற்பத்தி பாதிக்கப்பட்டதால் இந்த ஆண்டுக்கான உப்பு உற்பத்தி இலக்கை எட்டுவது கடினம் என உப்பு உற்பத்தியாளர்கள் தெரிவித்தனர்.
- மானம்பாடி சுங்கச்சாவடி 12-ந்தேதி செயல்பாட்டுக்கு வரும்நிலையில் கட்டண விவரத்தையும் தேசிய நெடுஞ்சாலை ஆணையம் அறிவித்துள்ளது.
- பொக்லைன் உள்ளிட்ட கனரக வாகனங்களுக்கு ரூ.560 ஆக கட்டண நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் புதிதாக அமைக்கப்பட்ட சுங்கச்சாவடி 12-ந்தேதி செயல்பாட்டுக்கு வருவதாக தேசிய நெடுஞ்சாலை ஆணையம் அறிவித்துள்ளது.
தஞ்சை-விக்கிரவாண்டி தேசிய நெடுஞ்சாலையில் சேத்தியாத்தோப்பு-சோழபுரம் இடையே மானம்பாடியில் புதிய சுங்கச்சாவடி அமைக்கப்பட்டுள்ளது. இந்த மானம்பாடி சுங்கச்சாவடி 12-ந்தேதி செயல்பாட்டுக்கு வரும்நிலையில் கட்டண விவரத்தையும் தேசிய நெடுஞ்சாலை ஆணையம் அறிவித்துள்ளது.
கார், வேன் உள்ளிட்டவற்றுக்கு ஒருமுறை செல்ல ரூ.105, இருமுறை அதே வழியில் பயணிக்க ரூ.160, வணிக வாகனங்களுக்கு ரூ.55 நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
இலகுரக வணிக வாகனம், சிறிய ரக சரக்கு வாகனம், மினி பஸ் ஒருமுறை செல்ல ரூ.170, இருமுறை பயணிக்க ரூ.255 கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
தனியார் பேருந்து, டிரக் - ரூ.360, பொக்லைன் உள்ளிட்ட கனரக வாகனங்களுக்கு ரூ.560 ஆக கட்டண நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
- அமராவதி அணையின் ஆற்று மதகு வழியாக தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது.
- அமராவதி அணையின் மொத்த கொள்ளளவான 90 அடியில் தற்போது 82 அடி உள்ளது.
உடுமலை:
திருப்பூர் மாவட்டம் உடுமலை அமராவதி அணை பாசன வசதிக்குட்பட்ட 8 பழைய ராஜ வாய்க்கால்களான ராமகுளம், கல்லாபுரம், குமரலிங்கம், சர்க்கார் கண்ணாடிபுத்தூர், சோழமாதேவி, கணியூர், கடத்தூர், காரத்தொழுவு ஆகிய பாசன நிலங்களுக்கு தண்ணீர் திறந்து விட வேண்டுமென விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து இன்று முதல் தண்ணீர் திறக்க தமிழக அரசு உத்தரவிட்டது.
இதைத்தொடர்ந்து இன்று காலை அமராவதி அணையில் இருந்து தண்ணீரை அமைச்சர்கள் மு.பெ.சாமிநாதன், கயல்விழி செல்வராஜ் ஆகியோர் திறந்து வைத்தனர். இந்நிகழ்ச்சியில் திருப்பூர் மாநகராட்சி 4-ம் மண்டல தலைவர் இல.பத்மநாபன், ஈஸ்வரசாமி எம்.பி., மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
அமராவதி அணையின் ஆற்று மதகு வழியாக தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. அதன்படி இன்று முதல் அக்டோபர் 10-ந்தேதி வரை 135 நாட்களில் 80 நாட்கள் தண்ணீர் திறப்பு, 58 நாட்கள் தண்ணீர் அடைப்பு என்று அடிப்படையில் விநாடிக்கு 300 கன அடி வீதம் 2073.60 மில்லியன் கன அடிக்கு மிகாமல் தண்ணீர் திறந்து விடப்படுகிறது.
இதன்மூலம் திருப்பூர் மாவட்டத்தில் உள்ள 7520 ஏக்கர் பாசன நிலங்கள் பயன்பெறும் என பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். அமராவதி அணையின் மொத்த கொள்ளளவான 90 அடியில் தற்போது 82 அடி உள்ளது. நீர்வரத்து 374 கனஅடி உள்ளது. அமராவதி அணையில் இருந்து தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளதால் உடுமலை பகுதி விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
- திம்பம் மலைப்பாதையில் யானைகள் எண்ணிக்கை அதிகமாக காணப்படுகிறது.
- இருசக்கர வாகனத்தில் செல்பவர்கள் எக்காரணம் கொண்டும் வனப்பகுதியில் வாகனத்தை நிறுத்த வேண்டாம் என எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
சத்தியமங்கலம்:
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் 10 வனச்சரகங்கள் உள்ளன. இதில் திம்பம், ஆசனூர், பாசூர் போன்ற வனப் பகுதிகளில் யானைகள் அதிக அளவில் வசித்து வருகின்றன.
குறிப்பாக சத்தி-மைசூர் தேசிய நெடுஞ்சாலையில் வரும் வாகனங்களை வழி மறித்து நிற்பதும், கிராமத்துக்குள் புகுந்து விலை நிலங்களை சேதப்படுத்துவதும் தொடர்கதை ஆகி வருகிறது. தமிழகம்-கர்நாடகத்தை இணைக்கும் மிக முக்கிய போக்குவரத்து பகுதியாக திம்பம் மலைப்பகுதி உள்ளது.
திம்பம் மலைப்பகுதியை 27 கொண்டை ஊசி வளைவுகளை கடந்து செல்ல வேண்டும். இந்த பகுதியில் யானை சிறுத்தைகள் அதிக அளவில் வசித்து வருகின்றன. அவ்வபோது சாலை அருகே வந்து வாகன ஓட்டிகளை அச்சுறுத்தி வருகின்றன.
இந்நிலையில் நேற்று திம்பம் மலைப்பாதை 2-வது கொண்டை ஊசி வளைவில் ஒற்றை யானை ஒன்று வனப்பகுதியை விட்டு வெளியேறி வந்து நின்றது. நீண்ட நேரமாக அங்கு நின்ற ஒற்றை யானை அந்த வழியாக வந்த வாகனங்களை வழி மறித்து நின்றதால் வாகன ஓட்டிகள் அச்சம் அடைந்தனர்.
இதனால் வாகன ஓட்டிகள் மேற்கொண்டு அந்தப் பகுதியை கடந்து செல்ல முடியாததால் வாகனத்தை நிறுத்தினர். சிறிது நேரம் திம்பம் மலைப்பாதை வளைவில் நின்ற ஒற்றை யானை பின்னர் மீண்டும் வனப்பகுதிக்குள் சென்றது. இந்த காட்சிகளை வாகன ஓட்டிகள் தங்களது செல்போனில் பதிவு செய்து கொண்டனர். இதன் பிறகே அந்த பகுதியில் போக்கு வரத்து சீரானது.
இது குறித்து வனத்துறையினர் கூறும்போது,
திம்பம் மலைப்பாதையில் யானைகள் எண்ணிக்கை அதிகமாக காணப்படுகிறது. யானைகள் உணவு தண்ணீரை தேடி சாலைக்கு வந்து வாகனங்களை வழிமறிப்பது தொடர் கதையாகி வருகிறது. எனவே இந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் கவனத்துடன் செல்ல வேண்டும்.
குறிப்பாக இருசக்கர வாகனத்தில் செல்பவர்கள் எக்காரணம் கொண்டும் வனப்பகுதியில் வாகனத்தை நிறுத்த வேண்டாம் என எச்சரிக்கை விடுத்துள்ளனர்.






