என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    • முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு கருப்புக் கொடி காட்டிய விவசாயிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
    • விவசாயிகள் மீது எந்த வழக்கும் தொடரக் கூடாது என, திமுக அரசை வலியுறுத்துகிறேன்.

    தஞ்சாவூர் அரசு விழாவில் பங்கேற்று நலத்திட்ட உதவிகளை பயனாளிகளுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார். இதன்பின் பேசிய அவர்," லைஞர் கருணாநிதியின் வழியின் நானும் டெல்டாக்காரன் என்ற உணர்வில் தஞ்சை வந்துள்ளேன்" என்றார்.

    இதுதொடர்பாக பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-

    தஞ்சாவூர் மாவட்டத்தில், தனியார் சர்க்கரை ஆலையில், கரும்பு கொள்முதலுக்கான நிலுவைத் தொகையை வழங்கக் கோரி, கடந்த ஒன்றரை ஆண்டுகளாக விவசாயிகள் போராட்டம் நடத்தி வந்த நிலையில், திமுக அரசு எந்தவித நடவடிக்கையும் எடுக்காமல் பாராமுகமாக இருப்பதைக் கண்டித்து, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு கருப்புக் கொடி காட்டிய விவசாயிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

    நெல், கரும்புக்கு குறைந்தபட்ச ஆதார விலை உயர்வு என, பொய்யான தேர்தல் வாக்குறுதிகளைக் கொடுத்து விவசாயிகளை ஏமாற்றியது, தங்கள் நிலங்களைக் காக்கப் போராடிய திருவண்ணாமலை மாவட்ட விவசாயிகள் மீது குண்டர் சட்டம் போட்டது என, கடந்த நான்கு ஆண்டுகளில் விவசாயிகளுக்கு செய்த துரோகங்கள் போதாதா? நிலுவைத் தொகையை வழங்கக் கோரி ஒன்றரை ஆண்டுகளாகப் போராடி வரும் விவசாயிகள் மீதா உங்கள் அடக்குமுறையைக் காட்டுவது? நான்கு வருடங்களில் நீங்கள் போட்ட வேடங்களில், தேர்தல் நேரத்தில் போட்ட டெல்டாக்காரன் வேஷம் பல்லிளிக்கிறது முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்களே.

    உடனடியாக, கைது செய்யப்பட்ட விவசாயிகள் அனைவரையும் விடுதலை செய்ய வேண்டும், அவர்களுக்கு கிடைக்க வேண்டிய நிலுவைத் தொகை கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்தப் பிரச்சினை தொடர்பாக, விவசாயிகள் மீது எந்த வழக்கும் தொடரக் கூடாது என, திமுக அரசை வலியுறுத்துகிறேன்.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    • திமுக ஆட்சிக்கு வந்த பிறகுதான் துப்பாக்கி கலாச்சாரம் வந்தது போல பழனிசாமி பேசுவதைப் பார்த்து மக்கள் சிரிப்பார்கள்.
    • திமுக அரசு அமைந்த பிறகுதான் குற்றங்கள் தடுக்கப்பட்டு, குறைந்து கொண்டு வருகின்றன.

    சென்னை :

    அமைச்சர் சிவசங்கர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

    பாமக இளைஞரணி மாவட்டச் செயலாளர் சக்கரவர்த்தி துப்பாக்கியில் சுட்டுக்கொலை செய்யப்பட்டிருப்பது தொடர்பாக அறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கிறார் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி. தமிழ்நாட்டின் பாதுகாப்பைச் சீர்குலைத்துச் சீரழிவு ஆட்சி நடத்திய பழனிசாமி, திமுக அரசைக் குறை சொல்வதற்கு அருகதை கிடையாது!

    சக்கரவர்த்தி வழக்கில் சம்பவம் நடந்த 3-ஆவது நாளே முக்கியக் குற்றவாளிகள் இருவரை போலீஸ் கைது செய்துள்ளது. சக்கரவர்த்தி 11.06.2025-ம் தேதி இரவு பைக்கில் வீட்டிற்குச் சென்றவர் சாலையில் உயிரிழந்து கிடந்தார். சடலத்தை உடற்கூறு ஆய்வுக்கு அனுப்பிவிட்டு, சந்தேகம் மரணமாக முதலில் வழக்குப்பதிவு செய்து விசாரணையைத் தொடங்கியது போலீஸ். உடற்கூறு ஆய்வில், சக்கரவர்த்தி நாட்டுத் துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்பட்டது தெரியவந்ததும், கொலை வழக்காக மாற்றப்பட்டு உடனே இருவரை போலீஸ் கைதும் செய்தது.

    ஒருவரின் மரணத்திற்குத் தெளிவான காரணம் தெரியாவிட்டால் இபிகோ சட்டத்தின் (IPC) பிரிவு 174-ன் கீழ் முதலில் காவல்துறை வழக்குப்பதிவு செய்யும். பிறகு மரணத்தில் சந்தேகம் எழுந்தால் குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் (CrPC) பிரிவு 176-ன் கீழ் வழக்கை மாற்றுவார்கள். கொலை என்பது உறுதியானால், கொலை வழக்காக மாற்றலாம். இந்த அடிப்படையில்தான் சக்கரவர்த்தி வழக்கு முதலில் மர்ம மரணம் எனப்பதிவு செய்யப்பட்டது. போலீஸ் ஸ்டேஷன் பக்கம் ஒதுங்காத, செய்தித்தாள் படிக்கிற பாமரனுக்குகூட தெரிந்த இந்த உண்மை, உள்துறையை கையில் வைத்திருந்த முன்னாள் முதல்வர் பழனிசாமிக்கு தெரியவில்லை என்றால் அவர் முதலமைச்சர் நாற்காலியில் அமரவே தகுதியில்லாதவர். காவல் துறைக்குப் பொறுப்பு அமைச்சராக 4 ஆண்டுகள் இருந்த பழனிசாமிக்கு இந்த அடிப்படை அறிவு கொஞ்சம்கூட இல்லை.

    பாஜக பிரமுகர் சீனிவாசன் கொலை வழக்கில் கைதான நபர்களுக்கு ஆதரவாகச் செயல்பட்ட காரணத்தினாலேயே பாமக பிரமுகர் சக்கரவர்த்தி கொலை நடந்துள்ளது. பாஜகவுடன் கூட்டணி சேர்ந்து, பாமகவைக் கூட்டணியில் சேர்க்கும் முயற்சியில் இறங்கியிருக்கும் பழனிசாமி, பாமகவுக்கு தூது விடுவது போல அறிக்கை விட்டிருக்கிறார். பாமக நிர்வாகியைக் கொலை செய்தவர் பாஜக நிர்வாகியின் மகன் என்று பழனிசாமி ஏன் சொல்லவில்லை?

    அரசியல் செய்ய எதுவும் கிடைக்காமல், ஏதேனும் குற்றச் சம்பவங்கள் நடக்காதா? அதை வைத்து ஏதேனும் மலின அரசியல் செய்ய முடியாதா? எனக் குற்றங்களைத் தேடி அலைந்து கொண்டிருக்கிறார் பழனிசாமி.

    திராவிட மாடல் ஆட்சியில் தமிழ்நாட்டின் சட்டம் ஒழுங்கு சிறப்பாக இருப்பதை ஒன்றிய அரசின் புள்ளி விவரங்களே சொல்லும். தேசியக் குற்ற ஆவணக் காப்பகம் (NCRB) வெளியிட்ட தரவுகளின் படி 2020 ஆண்டு பழனிசாமியின் ஆட்சியில் IPC ல் பதியப்பட்ட குற்றங்களின் எண்ணிக்கை 8,91,700, திமுக அரசின் தீவிரமான நடவடிக்கையால் 2022 ஆண்டு IPC ல் பதியப்பட்ட குற்றங்களின் எண்ணிக்கை1,93,913 குறைந்தது. கடுமையான நடவடிக்கைகளை எடுத்துக் குற்றங்களைக் குறைத்தது திராவிட மாடல் அரசுதான். இந்த இலட்சணத்தில் கேடுகெட்ட ஆட்சி நடத்திய பழனிசாமி அதிமுக ஆட்சியில் அமைதியும் வளமும் வளர்ச்சியும் பெற்றதாகக் கூசாமல் அடித்து விட்டுக் கொண்டிருக்கிறார்.

    துப்பாக்கி கலாச்சாரம் பற்றியெல்லாம் பழனிசாமி பேசலாமா? அதிமுக ஆட்சியில் துப்பாக்கி மலிவு விலைக்கு விற்கப்பட்டதும், அதை வாங்கி கொலைச் சம்பவங்களில் ஈடுபட்டதையும் மக்கள் மறக்க மாட்டார்கள். திமுக ஆட்சிக்கு வந்த பிறகுதான் துப்பாக்கி கலாச்சாரம் வந்தது போல பழனிசாமி பேசுவதைப் பார்த்து மக்கள் சிரிப்பார்கள்.

    * 2018-ல் கள்ளத் துப்பாக்கி கடத்தல் வழக்கில் சென்னையைச் சேர்ந்த பரமேஸ்வரன் எனும் காவலரே கைதானார்,

    * 2020-ல் 8 துப்பாக்கிகள், 60 தோட்டாக்களுடன் கும்பகோணம் அருகே மருத்துவர் ராம்குமார் பிடிபட்டார்.

    * 2018 ஏப்ரலில் அடையாறு இந்திரா நகர் வங்கியில் துப்பாக்கி முனையில் 7 லட்சம் கொள்ளை.

    * 2018-ல் கன்னியாகுமரியில் 10 ஆயிரம் ரூபாய்க்கு நாட்டுத் துப்பாக்கி விற்பனை.

    * 2020 மே மாதம் திருப்பூரில் நிலம் தொடர்பான பிரச்சினையில் துப்பாக்கியைக் காட்டி மிரட்டி பணம் கேட்ட நபர்,

    * 2020 ஜூலையில் ஈரோட்டிலிருந்து 9 எம்.எம். ரகக் கள்ளத்துப்பாக்கி, 5 தோட்டாக்களுடன் திருநெல்வேலிக்கு வந்த குமுளி ராஜ்குமார்.

    * 2020 செப்டம்பரில் சென்னை பெரம்பூரில் வீடு புகுந்து துப்பாக்கியைக் காட்டி பெண்ணை மிரட்டிய நபர்,

    * 2020 நவம்பரில் திருக்கோவிலூர் அருகே மளிகை கடைகாரர் நாட்டுத் துப்பாக்கியால் சுட்டுக் கொலை.

    இப்படிப் பழனிசாமி ஆட்சியில் நடந்த துப்பாக்கி சம்பவங்களைப் பட்டியலிட்டுக் கொண்டே போகலாம். "துப்பாக்கி கலாச்சாரத்தை ஒடுக்க இந்த அரசு என்ன நடவடிக்கை எடுத்தது?" என்று கேள்வி கேட்க எடப்பாடி பழனிசாமிக்கு என்ன யோக்கியதை இருக்கிறது?

    2020 ஆகஸ்ட் மாதம் வழக்கு ஒன்றை விசாரித்த சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி கிருபாகரன், "பீகார், ஜார்கண்ட், சத்தீஸ்கரில் இருந்து நாட்டு துப்பாக்கிகள் தமிழகத்தில் ரவுடிகள், குண்டர்கள், அரசியல்வாதிகளுக்கு சப்ளை செய்யப்படுகிறது. அரசு உரிய நடவடிக்கைகள் எடுத்து துப்பாக்கி கலாச்சாரத்தை தடுக்க வேண்டும்" என்று கூறியது பழனிசாமிக்கு தெரியாதா? இதுதான் அவருடைய ஆட்சியில் நிலவிய அமைதி, வளம், வளர்ச்சியா?

    சக்கரவர்த்தி கொலை வழக்கில், "கள்ளத்துப்பாக்கி எப்படி கிடைத்தது என்பதை விசாரிக்க வேண்டும்" என்று சொல்லும் எடப்பாடி பழனிசாமி, அதிமுக ஐடி விங் பிரமுகர் பிரபாத்துக்கு டபுள் பேரல் துப்பாக்கியை யார் வாங்கி கொடுத்தது? என பழனிசாமி விளக்குவாரா?

    திமுக அரசு அமைந்த பிறகுதான் குற்றங்கள் தடுக்கப்பட்டு, குறைந்து கொண்டு வருகின்றன. சட்டம் ஒழுங்கைப் சிறப்பாகப் பாதுகாத்து வருவதால்தான் தமிழ்நாட்டின் பொருளாதார வளர்ச்சி 9.69 விழுக்காடாக உயர்ந்து நாட்டிலேயே முதலிடத்தில் இருக்கிறது.

    • பா.ம.க.வில் சில சூழ்ச்சியாளர்கள் இருக்கிறார்கள், சில நாட்களில் அவர்கள் யார் என்பது தெரியவரும்.
    • சூழ்ச்சியாளர்கள் யார் என்பது ராமதாஸிற்கும் தெரியும்.

    காஞ்சிபுரம்:

    காஞ்சிபுரத்தில் பா.ம.க. நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் அதன் தலைவர் அன்புமணி ராமதாஸ் பேசியதாவது:-

    * நாம் நடத்திய வன்னியர் சங்க மாநாட்டை வியந்து பார்த்தார்கள்.

    * பா.ம.க.வை பலவீனப்படுத்த தி.மு.க. முயல்கிறது.

    * பா.ம.க. வை பலவீனப்படுத்தும் முயற்சி ஒருபோதும் எடுபடாது.

    * பா.ம.க.வில் உள்ளவர்களும் சிலர் குழப்பத்தை ஏற்படுத்த முயற்சிக்கிறார்கள்.

    * பா.ம.க.விற்கு துரோகம் செய்தால் அது என் வாழ்நாளில் கடைசி நாளாக இருக்கும்.

    * பா.ம.க.வில் சில சூழ்ச்சியாளர்கள் இருக்கிறார்கள், சில நாட்களில் அவர்கள் யார் என்பது தெரியவரும்.

    * சூழ்ச்சியாளர்கள் யார் என்பது ராமதாஸிற்கும் தெரியும்.

    * நான் எந்த தவறும் செய்யவில்லை. இருப்பினும் எனது அப்பாவிடம் மன்னிப்பு கேட்டுள்ளேன்.

    * என் பின்னால் கோடான கோடி தொண்டர்கள் உள்ளனர்.

    * அமைதியாக இருப்பது எனது பலம். கட்சியை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்லும் துணிச்சல், திட்டம் என்னிடம் உள்ளது.

    * தி.மு.க. தான் பா.ம.க.வின் எதிரி, நமக்குள் பிரச்சனை வேண்டாம்.

    * அண்ணன் தம்பியாக இருக்கும் நமக்குள் குழப்பம் வேண்டாம்.

    * 4 ஆண்டுகளாக இடஒதுக்கீடு தருவதாக தி.மு.க. ஏமாற்றி கொண்டிருக்கிறது.

    * வன்னியர்களுக்கு மட்டும் பா.ம.க. இடஒதுக்கீடு கேட்கவில்லை.

    * வரும் தேர்தலில் தி.மு.க.விற்கு வன்னியர்கள் யாரும் வாக்களிக்கமாட்டார்கள்.

    * துப்பாக்கி கலாச்சாரம் என்பது தமிழ்நாட்டில் எங்கிருந்தது வந்தது? என கேள்வி எழுப்பினார். 

    • நான் செய்தித் தாள்களைப் படிப்பது இல்லையாம். சொல்பவர் யார் தெரியுமா?
    • உங்களுக்கு இருக்கும் "பெட்டி" மோகத்தை என் பக்கம் திருப்ப வேண்டாம்.

    சென்னை:

    அ.தி.மு.க. பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,

    திமுக ஆட்சியின் தவறுகளைச் சுட்டிக்காட்டும் எனது அறிக்கைகள் ஸ்டாலினை மிகவும் உறுத்துகிறது போல.

    "அரைவேக்காட்டுத் தனமாக" இருக்கிறதாம் அவருக்கு.

    அரைவேக்காட்டுத் தனம் என்பது எது தெரியுமா ஸ்டாலின் அவர்களே?

    ஆட்சிப் பொறுப்பேற்ற நான்கு ஆண்டுகளில் கொடுத்த வாக்குறுதி எதையுமே நிறைவேற்றாமல், மக்கள் கடும் கோபத்தில் இருப்பது தெரிந்ததும், நான் அதை செய்யப் போகிறேன், இதை செய்யப் போகிறேன் என்று வாய்க்கு வந்த ரீல்களை அளந்து விடுகிறீர்களே- அது தான் அரைவேக்காட்டுத்தனம்!

    தஞ்சைக்கு வந்த உங்களுக்கு எதிராக கருப்புக் கொடி காட்டிய விவசாயிகளை குண்டுக்கட்டாக உங்கள் காவல்துறை கைது செய்துள்ளதே- இது என்ன மாடல்? பாசிச மாடல் தானே?

    மீத்தேன்- ஹைட்ரோகார்பன் திட்டம் தந்த திருவாளர், டெல்டாவில் கால் வைக்கவே கூச்சப்பட்டிருக்க வேண்டும். நல்ல வேளை, இவர் பச்சைத் துண்டு போட்டு விவசாயிகளை அசிங்கப்படுத்தவில்லை!

    நான் செய்தித் தாள்களைப் படிப்பது இல்லையாம். சொல்பவர் யார் தெரியுமா? முரசொலி தவிர எந்தப் பேப்பரையும் படிக்காத, படிக்க விரும்பாத பொம்மை முதலமைச்சர்!

    "நாட்டில் மும்மாரி பொழிகிறது- எல்லோரும் என்னைப் பாராட்டுகிறார்கள்" என்று மாய உலகில் வாழும் உங்களை மீட்க வழியே இல்லை!

    நாள்தோறும் நடக்கும் சட்டம் ஒழுங்கு சீர்கேடுகளும், பெண்களுக்கு எதிரான குற்றங்களும் செய்தித் தாள்களில் வருவது இல்லையா என்ன? இன்னும் சொல்லப் போனால், ஊடகம் மற்றும் பத்திரிகைச் செய்திகளின் அடிப்படையில் தானே என்னுடைய கருத்துகளை நான் தெரிவிக்கிறேன்?

    எல்லா திட்டங்களிலும் கமிஷன் கணக்கு போட்டு பெட்டிகளில் அள்ளிக் கொண்டிருக்கும் உங்களுக்கு இருக்கும் "பெட்டி" மோகத்தை என் பக்கம் திருப்ப வேண்டாம்.

    உட்கட்சி, கூட்டணிப் பூசல் சத்தம் எல்லாம் அறிவாலயத்தில் இருந்து கேட்பதாகத் தானே செய்திகள் வருகின்றன? நீங்கள் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை என்று உங்கள் கூட்டணிக் கட்சியினர் பேசி வருவது உங்களுக்குத் தெரியாதா?

    ஆக, "ஒன்றும் தெரியாத பொம்மை முதல்வர்" என்ற என்னுடைய கூற்றை மீண்டும் மெய்ப்பித்துவிட்டார் மு.க. ஸ்டாலின் ! என கூறியுள்ளார். 




    • மினி பஸ் திட்டத்தால் ஆட்டோ டிரைவர்களுக்கு பாதிப்பு ஏற்பட்டால் அதற்கு மாற்று திட்டம் கொண்டு வருவதற்கான நடவடிக்கை எடுக்கப்படும்.
    • அ.தி.மு.க. ஆட்சி காலத்தில் தான் தூத்துக்குடியில் துப்பாக்கி சூடு சம்பவம் நிகழ்ந்தது.

    வேலூர்:

    வேலூர் புதிய பஸ் நிலையத்தில் புதிய விரிவான மினி பஸ் திட்ட தொடக்க விழா இன்று நடந்தது.

    சிறப்பு அழைப்பாளராக அமைச்சர் துரைமுருகன் கலந்து கொண்டு 18 வழித்தடங்களில் மினி பஸ்களை இயக்குவதற்கான ஆணை வழங்கி, கொடி அசைத்து தொடங்கி வைத்தார். இதன்பின் அவர் கூறியதாவது:-

    நந்தன் கால்வாய் திட்டத்திற்கு ரூ.100 கோடி ஒதுக்கீடு செய்துள்ளோம். எந்த காலத்திலும் பெண்களுக்கு எதிரான பிரச்சனைகள் இருந்து வருகிறது. அதுவும் வளர்ந்து வரும் சமுதாயத்தில் குற்றங்கள் நிகழும்.

    ஆனால் அந்த குற்றத்தின் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை தான் முக்கியம். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசு கடும் நடவடிக்கை எடுத்து வருகிறது.

    மினி பஸ் திட்டத்தால் ஆட்டோ டிரைவர்களுக்கு பாதிப்பு ஏற்பட்டால் அதற்கு மாற்று திட்டம் கொண்டு வருவதற்கான நடவடிக்கை எடுக்கப்படும். தி.மு.க ஆட்சி காலத்தில் துப்பாக்கி கலாச்சாரம் தலை தூக்கி உள்ளதாக குற்றம் சாட்டுகின்றனர்.

    ஆனால் அ.தி.மு.க. ஆட்சி காலத்தில் தான் தூத்துக்குடியில் துப்பாக்கி சூடு சம்பவம் நிகழ்ந்தது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    அப்போது தி.மு.க. கூட்டணியில் பா.ம.க. இணைகிறதா? என கேள்வி எழுப்பினர். அதற்கு தேர்தலுக்கு இன்னும் நாட்கள் உள்ளன என துரைமுருகன் கூறினார்.

    • பாராளுமன்ற தேர்தலில் சுயேட்சையாக களத்தில் நின்று அ.தி.மு.க.வை எதிர்த்து போட்டியிட்டு உள்ளார்.
    • அ.தி.மு‌.க.வில் இரட்டை இலை சின்னத்தில் நின்று வெற்றி பெற்ற எம்.எல்.ஏ.க்கள் பலர் இருக்கிறார்கள்.

    நெல்லை:

    நெல்லை மாவட்டம் ராதாபுரம் தொகுதி பாசன விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று கோதையாறு பாசன திட்டத்தின் கீழ் ராதாபுரம் கால்வாயில் இன்று காலை தண்ணீர் திறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.

    சபாநாயகர் அப்பாவு தலைமை தாங்கி தண்ணீரை திறந்து வைத்தார். இந்த தண்ணீரானது அடுத்த 138 நாட்களுக்கு அதாவது வருகிற அக்டோபர் மாதம் 31-ந்தேதி வரை பாசனத்திற்காக திறந்து விட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து சபாநாயகர் அப்பாவு நிருபர்களிடம் கூறியதாவது:-

    முதலமைச்சர் உத்தரவின் பேரில் ராதாபுரம் தாலுகாவில் உள்ள 10 கிராமங்களில் கிட்டத்தட்ட 17 ஆயிரம் ஏக்கர் பாசன வசதி பெறும் வகையில் தற்போது இந்த தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. பேச்சிப்பாறை அணையில் இருந்து தோவாளை கால்வாய் வழியாக நிலப்பாறை என்ற இடத்தில் இருந்து இன்று முதல் வினாடிக்கு 150 கன அடி தண்ணீர் வீதம் திறந்து விட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    இதில் ஆயிரத்து 13 ஏக்கர் நிலம் 52 குளங்கள் மூலமாக பாசன வசதி பெறும். மீதமுள்ள நிலங்கள் நேரடி பாசன நிலங்களாக இருந்தாலும் கடந்த காலங்களில் ஒரு சொட்டு தண்ணீர் கூட நேரடியாக சென்றதில்லை. இந்த முறை இந்த குளங்களை நிரப்ப வேண்டும் என்பதற்காக முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    இரட்டை இலை சின்னத்தில் முன்னாள் முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்று எம்.எல்.ஏ.வாக செயல்பட்டுக் கொண்டிருக்கிறார். ஆனால் பாராளுமன்ற தேர்தலில் சுயேட்சையாக களத்தில் நின்று அ.தி.மு.க.வை எதிர்த்து போட்டியிட்டு உள்ளார். அ.தி.மு.க.வில் இரட்டை இலை சின்னத்தில் நின்று வெற்றி பெற்ற எம்.எல்.ஏ.க்கள் பலர் இருக்கிறார்கள்.

    அவர்களுக்கு கொறடாவும் இருக்கிறார். கொறடா முறைப்படி இது போன்ற புகார்களை எனக்கு எழுதி தர வேண்டும். இதுவரை அ.தி.மு.க.வினர் ஏனோ தெரியவில்லை புகார் மனு எதுவும் என்னிடம் தரவில்லை.

    ஆனாலும் இந்திய அரசியலமைப்புச் சட்டம் 10-வது அட்டவணை படியும், உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பின் அடிப்படையிலும் ஒரு சின்னத்தில் வெற்றி பெற்று அந்த சின்னத்திற்கு எதிராக ஓட்டு போட்டாலோ அல்லது இவர்கள் சொல்வது போல் அந்த கட்சிக்கு எதிராக அவரது செயல்பாடு இருந்தாலும் நிச்சயமாக அதற்கு மேல் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சொல்லப்பட்டுள்ளது. இந்த விவகாரம் எனது ஆய்வில் இருக்கிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • இருவரும் சேர்ந்து பேசி முன்னெடுத்து செல்வது கட்சிக்கு பலமாக இருக்கும்.
    • நாங்களும் பேசி சுமூக தீர்வு ஏற்படும் என சொல்லி இருக்கிறோம்.

    திண்டிவனம்:

    திண்டிவனம் அடுத்த தைலாபுரம் தோட்டத்தில் பாட்டாளி மக்கள் கட்சியின் மாவட்ட தலைவர்கள், மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெற்றது. இதில் நாமக்கல், ஈரோடு, கரூர், திருப்பூர், கோவை உள்ளிட்ட மாவட்டங்களை சேர்ந்த மாவட்ட தலைவர்கள் மற்றும் மாவட்ட செயலாளர்கள் கலந்து கொண்டனர்.

    கூட்டத்தில் பங்கேற்க வந்த பாட்டாளி மக்கள் கட்சியின் கவுரவ தலைவர் ஜி.கே. மணி நிருபர்களிடம் கூறியதாவது:-

    எங்கள் ஆசை எல்லாம் ராமதாஸ்-அன்புமணி இருவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என்பதுதான். நேற்று அன்புமணி ராமதாஸ் சொல்லி இருக்கிறார். அதை நாங்கள் மறுக்கவில்லை, இருவரும் சேர்ந்து பேசி முன்னெடுத்துச் சென்றால் நன்றாக இருக்கும். அதைத்தான் நாங்கள் எதிர்பார்க்கிறோம். அந்த சூழல் உருவாகும் என நினைக்கிறோம். இருவரும் சேர்ந்து பேசி முன்னெடுத்து செல்வது கட்சிக்கு பலமாக இருக்கும். அதை தான் நாங்கள் எதிர்பார்க்கிறோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    அவரிடம் நேற்று பொதுவெளியில் அன்புமணி மன்னிப்பு கேட்டது குறித்து கேட்டபோது, இதற்கு மேல் நான் எதுவும் பேசக்கூடாது. இருவரும் பேசி அடுத்த கட்டத்துக்கு சென்றால் பலமாக இருக்கும். எங்கள் மன உளைச்சலுக்கு ஒரு தீர்வாக இருக்கும். நாங்களும் பேசி சுமூக தீர்வு ஏற்படும் என சொல்லி இருக்கிறோம். ஆனால் சுமூகத் தீர்வு எட்டவில்லை. எல்லோரும் பேசுவதை விட இருவரும் சேர்ந்து பேசி நல்ல முடிவு எடுப்பது தான் நல்லது. அவர்கள் அரசியல் விவரம் புரியாதவர்கள் அல்ல. இருவரும் சேர்ந்து பேசி முடிவெடுப்பது தான் நல்லது என்றார்.

    • ஜெகன்மூர்த்தியின் முன்ஜாமின் மனு விசாரணையை இன்று மதியம் 2.30 மணிக்கு தள்ளி வைத்தார்.
    • ஆள் கடத்தலுக்கு உதவியதாக கூறப்படும் போலீஸ் கூடுதல் டி.ஜி.பி.ஜெயராமனும் ஆஜராகவேண்டும் என்றும் உத்தரவிட்டார்.

    சென்னை:

    திருவள்ளூரை அடுத்த திருவாலங்காடு அருகே உள்ள களாம்பாக்கம் கிராமத்தை சேர்ந்த தனுஷ் என்பவர் சமூக வலைத்தளம் மூலம் தேனியை சேர்ந்த விஜயஸ்ரீயை திருமணம் செய்து கொண்டார். இதில் ஏற்பட்ட தகராறில் கடந்த 7-ந்தேதி வீட்டில் இருந்து தனுசின் 16 வயது தம்பியை மர்ம கும்பல் காரில் கடத்தியது. பின்னர் மீண்டும் வீட்டில் விட்டு சென்றனர். இந்த கடத்தலில் கே.வி.குப்பம் தொகுதி எம்.எல்.ஏ.வான புரட்சி பாரதம் கட்சி தலைவர் பூவை ஜெகன் மூர்த்திக்கு தொடர்பு இருப்பதாக கூறப்படுகிறது.

    இதையடுத்து அவரது வீட்டிற்கு போலீசார் விசாரணைக்கு சென்றபோது அவர் அங்கு இல்லை. இதற்கிடையே ஜெகன்மூர்த்தி முன்ஜாமின் கேட்டு சென்னை ஐகோர்ட்டில் மனுதாக்கல் செய்து இருந்தார். இந்த மனு இன்று காலை நீதிபதி வேல்முருகன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது ஜெகன்மூர்த்தியின் முன்ஜாமின் மனு விசாரணையை இன்று மதியம் 2.30 மணிக்கு தள்ளி வைத்தார்.

    மேலும் ஜெகன்மூர்த்தி இன்று பிற்பகல் 2.30 மணிக்கு கோர்ட்டில் ஆஜராக வேண்டும் எனவும், ஆள் கடத்தலுக்கு உதவியதாக கூறப்படும் போலீஸ் கூடுதல் டி.ஜி.பி.ஜெயராமனும் ஆஜராகவேண்டும் என்றும் உத்தரவிட்டார். கூடுதல் டி.ஜி.பி.ஜெயராமன் ஆஜராகவில்லை என்றால் அவரை கைது செய்து ஆஜர்படுத்த வேண்டும் என்றும் காவல்துறைக்கு அதிரடியாக உத்தரவு பிறப்பித்து உள்ளார்.

    • மக்களின் வரவேற்பை பொறுக்க முடியாமல் எடப்பாடி பழனிசாமி புலம்பி கொண்டிருக்கிறார்.
    • எடப்பாடி பழனிசாமியின் நினைப்பு முழுவதும் பெட்டியிலேயே தான் இருக்கிறது.

    தஞ்சாவூர்:

    தஞ்சாவூரில் நடைபெற்ற அரசு விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்று பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

    * உட்கட்சி, கூட்டணி பிரச்சனையை மறைக்கவே அரசியல் அறிக்கைகளை எடப்பாடி பழனிசாமி வெளியிடுகிறார்.

    * மக்களின் வரவேற்பை பொறுக்க முடியாமல் எடப்பாடி பழனிசாமி புலம்பி கொண்டிருக்கிறார்.

    * எடப்பாடி பழனிசாமி வெளியிடும் அறிக்கைகள் அரைவேக்காட்டு தனமாக உள்ளன.

    * எடப்பாடி பழனிசாமியின் நினைப்பு முழுவதும் பெட்டியிலேயே தான் இருக்கிறது.

    * மக்கள் அளித்த மனுக்கள் மீது முறையாக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

    * தமிழக அரசு வெளிப்படை தன்மையுடன் செயல்பட்டு வருகிறது.

    * மக்களின் குறைகளை போக்குவதற்காக உங்களுடன் ஸ்டாலின் முகாம் நடைபெறும். 10,000 உங்களுடன் ஸ்டாலின் முகாம்கள் நடத்தப்படும் என்றார்.

    • 56 ஆயிரம் விவசாயிகளுக்கு குறுவை சிறப்பு தொகுப்பு வழங்கப்படுகிறது.
    • டெல்டா அல்லாத மாவட்டங்களில் சாகுபடிக்காக சிறப்பு திட்டம் செயல்படுத்தப்படும்.

    தஞ்சாவூர் அரசு விழாவில் பங்கேற்று நலத்திட்ட உதவிகளை பயனாளிகளுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார். இதன்பின் அவர் பேசியதாவது:-

    * சோழநாட்டு காற்றை சுவாசித்தாலே கம்பீரம் கிடைக்கிறது.

    * தஞ்சாவூரையும் கலைஞர் கருணாநிதியையும் பிரித்து பார்க்க முடியாது.

    * ஒருங்கிணைந்த தஞ்சை மண்ணின் மைந்தர் கலைஞர் கருணாநிதி.

    * கலைஞர் கருணாநிதியின் வழியின் நானும் டெல்டாக்காரன் என்ற உணர்வில் தஞ்சை வந்துள்ளேன்.

    * டெல்டா மாவட்டங்களில் நெல் சாகுபடி சிறப்பு திட்டத்திற்கு ரூ.82 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

    * டெல்டா அல்லாத மாவட்டங்களில் நெல் சாகுபடிக்காக ரூ.132 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

    * 56 ஆயிரம் விவசாயிகளுக்கு குறுவை சிறப்பு தொகுப்பு வழங்கப்படுகிறது.

    * டெல்டா அல்லாத மாவட்டங்களில் சாகுபடிக்காக சிறப்பு திட்டம் செயல்படுத்தப்படும்.

    * தி.மு.க ஆட்சியில் தஞ்சை மாவட்டத்திற்கு பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளன.

    * பட்டுக்கோட்டையில் கட்டப்பட்டு வரும் பேருந்து நிலையம் விரைவில் பயன்பாட்டுக்கு வரும்.

    * மேட்டூர் மற்றும் கல்லணைகள் குறித்த நேரத்தில் திறக்கப்பட்டுள்ளன.

    * தஞ்சாவூரில் ரூ.70 கோடி மதிப்பில் மினி டைடல் பார்க் திறக்கப்பட்டுள்ளளது.

    * கார், குறுவை, சொர்ணவாரி சிறப்பு தொகுப்பு திட்டத்தில் 8 லட்சம் விவசாயிகள் பயனடைவர்.

    * தஞ்சை மண்ணில் இருக்கும் ஒவ்வொரு குடும்பத்திற்கும் அரசின் திட்டங்கள் சென்று சேர்ந்துள்ளன.

    * தஞ்சை சரஸ்வதி மஹால் நூலகத்திற்கு கூடுதல் மானியம் ஒதுக்கப்படும்.

    * வெண்ணாறு, வெட்டாறு பிரியும் இடத்தில் ரூ.42 கோடியில் பாலம் அமைக்கப்படும்.

    * கல்லணை கால்வாய் சாலை ரூ.40 கோடி செலவில் அகலப்படுத்தப்படும்.

    இவ்வாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசினார். 

    • வேல் மற்றும் முருகன் சிலைகள் வைக்கப்பட்டுள்ளன.
    • பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் அங்கு அமைக்கப்பட்டிருந்த பிரகாரம் வழியாக வலம் வந்து சுவாமி தரிசனம் செய்தனர்.

    மதுரை:

    மதுரையில் வருகிற 22-ந்தேதி பா.ஜ.க., இந்து முன்னணி மற்றும் ஆர்.எஸ்.எஸ். அமைப்பு சார்பில் முருக பக்தர்கள் மாநாடு பாண்டி கோவில் வண்டியூர் சுற்றுச்சாலையில் அமைந்துள்ள அம்மா திடலில் நடைபெறுகிறது. அன்று பிற்பகல் 3 மணிக்கு மாநாடு தொடங்கி இரவு 9 மணி வரை நடைபெறும் இந்த மாநாட்டில் 5 லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்துகொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    மாநாட்டையொட்டி அங்குள்ள திடலில் அறுபடை முருகனின் மாதிரி கண்காட்சி பிரமாண்டமாக அமைக்கப்பட்டுள்ளது. அந்த கோவில்களின் கோபுரங்களுடன் முகப்பு தோற்றமும், உள்ளே சென்றால் பிரகாரமும், தனி அறை மூலவர் சன்னதியாகவும் தத்ரூபமாக வடிவமைத்து அங்கு வழிபாடு செய்யப்பட்ட வேல் மற்றும் முருகன் சிலைகள் வைக்கப்பட்டுள்ளன.

    இன்று முதல் பொதுமக்கள் வந்து பார்வையிடும் வகையில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. முன்னதாக இந்த கண்காட்சியை புதுக்சேரி மாநில உள்துறை அமைச்சர் நமச்சிவாயம், இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.

    இதையடுத்து அறுபடை வீடுகள் கண்காட்சியில் வைக்கப்பட்டிருந்த முருகன் சிலைகளுக்கு வேதமந்திரங்கள் முழங்க பூஜைகள் செய்து தீபாராதனை காண்பித்து வழிபாடுகள் நடைபெற்றன. அப்போது கண்காட்சியை காண திரண்டு வந்த பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் அங்கு அமைக்கப்பட்டிருந்த பிரகாரம் வழியாக வலம் வந்து சுவாமி தரிசனம் செய்தனர்.

    பின்னர் அவர்கள் அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது. இந்த கண்காட்சியானது மாநாடு நடைபெறும் 22-ந்தேதி வரை இருக்கும் என்றும், இதனை காண வரும் பக்தர்களுக்கு தேவையான குடிநீர், கழிப்பறை உள்ளிட்ட வசதிகள் முறையாக செய்து தரப்பட்டுள்ளதாகவும் முருக பக்தர்கள் மாநாட்டு குழுவினர் தெரிவித்தனர். 

    • மெயின் அருவி, ஐந்தருவி, சினிபால்ஸ், ஐவர் பாணி உள்ளிட்ட அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டியது.
    • காவிரி ஆற்றில் உற்சாகமாக பரிசல் சவாரி மேற்கொண்டு காவிரி ஆற்றின் அழகை ரசித்தனர்.

    தருமபுரி:

    தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்ததை தொடர்ந்து கேரளா மற்றும் கர்நாடக மாநில காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது.

    இதனால் தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல்லுக்கு அவ்வப்போது நீர்வரத்து அதிகரித்தும், குறைந்தும் காணப்படுகிறது.

    நேற்று ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து 6,500 கனஅடியாக வந்தது. இந்த நிலையில் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதியில் கனமழை பெய்துள்ளது.

    இதன் காரணமாக இன்று காலை 8 மணி நிலவரப்படி நீர்வரத்து 7,500 கன அடியாக தண்ணீர் அதிகரித்து வந்தது.

    மெயின் அருவி, ஐந்தருவி, சினிபால்ஸ், ஐவர் பாணி உள்ளிட்ட அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டியது.

    சுற்றுலா பயணிகள் பாதுகாப்பு உடை அணிந்து பாறைகளுக்கு இடையே காவிரி ஆற்றில் உற்சாகமாக பரிசல் சவாரி மேற்கொண்டு காவிரி ஆற்றின் அழகை ரசித்தனர்.

    மேலும் தொங்கு பாலத்தில் நின்று காவிரி ஆற்றில் விழும் தண்ணீரை ஆர்வமுடன் ரசித்து மகிழ்ந்தனர்.

    பின்னர் அவர்கள் மெயின் அருவியில் குளித்தும், பெண்கள் காவிரி ஆற்றில் குளித்தும் மகிழ்ந்தனர்.

    காவிரி ஆற்றில் நீர்வரத்தை தமிழக-கர்நாடக எல்லையான பிலிகுண்டுலுவில் மத்திய நீர்வளத்துறை அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.

    ×