என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

சிறுவன் கடத்தல் வழக்கு: ஜெகன்மூர்த்தி எம்.எல்.ஏ. கோர்ட்டில் ஆஜராக உத்தரவு- ஐகோர்ட் அதிரடி
- ஜெகன்மூர்த்தியின் முன்ஜாமின் மனு விசாரணையை இன்று மதியம் 2.30 மணிக்கு தள்ளி வைத்தார்.
- ஆள் கடத்தலுக்கு உதவியதாக கூறப்படும் போலீஸ் கூடுதல் டி.ஜி.பி.ஜெயராமனும் ஆஜராகவேண்டும் என்றும் உத்தரவிட்டார்.
சென்னை:
திருவள்ளூரை அடுத்த திருவாலங்காடு அருகே உள்ள களாம்பாக்கம் கிராமத்தை சேர்ந்த தனுஷ் என்பவர் சமூக வலைத்தளம் மூலம் தேனியை சேர்ந்த விஜயஸ்ரீயை திருமணம் செய்து கொண்டார். இதில் ஏற்பட்ட தகராறில் கடந்த 7-ந்தேதி வீட்டில் இருந்து தனுசின் 16 வயது தம்பியை மர்ம கும்பல் காரில் கடத்தியது. பின்னர் மீண்டும் வீட்டில் விட்டு சென்றனர். இந்த கடத்தலில் கே.வி.குப்பம் தொகுதி எம்.எல்.ஏ.வான புரட்சி பாரதம் கட்சி தலைவர் பூவை ஜெகன் மூர்த்திக்கு தொடர்பு இருப்பதாக கூறப்படுகிறது.
இதையடுத்து அவரது வீட்டிற்கு போலீசார் விசாரணைக்கு சென்றபோது அவர் அங்கு இல்லை. இதற்கிடையே ஜெகன்மூர்த்தி முன்ஜாமின் கேட்டு சென்னை ஐகோர்ட்டில் மனுதாக்கல் செய்து இருந்தார். இந்த மனு இன்று காலை நீதிபதி வேல்முருகன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது ஜெகன்மூர்த்தியின் முன்ஜாமின் மனு விசாரணையை இன்று மதியம் 2.30 மணிக்கு தள்ளி வைத்தார்.
மேலும் ஜெகன்மூர்த்தி இன்று பிற்பகல் 2.30 மணிக்கு கோர்ட்டில் ஆஜராக வேண்டும் எனவும், ஆள் கடத்தலுக்கு உதவியதாக கூறப்படும் போலீஸ் கூடுதல் டி.ஜி.பி.ஜெயராமனும் ஆஜராகவேண்டும் என்றும் உத்தரவிட்டார். கூடுதல் டி.ஜி.பி.ஜெயராமன் ஆஜராகவில்லை என்றால் அவரை கைது செய்து ஆஜர்படுத்த வேண்டும் என்றும் காவல்துறைக்கு அதிரடியாக உத்தரவு பிறப்பித்து உள்ளார்.






