என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    • மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையின் மாதிரி வீடியோ இன்று வெளியிடப்பட்டுள்ளது.
    • 2026 தேர்தலுக்கு இந்த ஒரு வீடியோ போதும் என நினைத்துவிட்டார்களா? இதற்கே 10 ஆண்டுகள் ஆகியிருக்கின்றன.

    மதுரை மாவட்டம் தோப்பூரில் 222 ஏக்கரில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க 2018-ம் ஆண்டு மத்திய அரசு ஒப்புதல் வழங்கியது. இதனைத் தொடர்ந்து 2019-ம் ஆண்டு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார். ஆனால் தற்போதுவரை மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை கட்டி முடிக்கப்படவில்லை.

    இந்த நிலையில் மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையின் மாதிரி வீடியோ இன்று வெளியிடப்பட்டுள்ளது. அந்த வீடியோவில் மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையின் முதல் கட்டப் பணிகள் ஜனவரி 2026 இல் நிறைவடையும் என்றும் 2027ம் ஆண்டுக்குள் 2 ஆம் கட்ட பணிகள் முடிவடையும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இந்நிலையில் மாதிரி வீடியோ வெளியானது குறித்து தமிழக முதலமைச்சர் முக ஸ்டாலின் எக்ஸ் தளத்தில் கருத்து தெரிவித்துள்ளார். அதில், மதுரைக்கு வந்த ஒன்றிய உள்துறை அமைச்சர் எய்ம்ஸ் என்ன ஆனது எனச் சென்று பார்த்தாரா? எனக் கேட்டிருந்தேன். அதற்குப் பதிலாக, இந்தக் கற்பனைக் காட்சிகளை உருவாக்கி அளித்துள்ளார்கள்.

    2026 தேர்தலுக்கு இந்த ஒரு வீடியோ போதும் என நினைத்துவிட்டார்களா? இதற்கே 10 ஆண்டுகள் ஆகியிருக்கின்றன என கூறினார்.

    • கேவி அலைன்ஸ்மால் துணை மின்நிலையத்தில் நாளை பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளன.
    • மின்வினியோகம்பெறும் பகுதிகளில் அன்றைய தினம் காலை 9 மணி முதல் மாலை 4 வரை மின்தடை இருக்கும்.

    கோவை:

    கீரணத்தம், கேவி சகாரா மற்றும் கேவி அலைன்ஸ்மால் துணை மின்நிலையத்தில் நாளை (18-ந்தேதி) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளன.

    எனவே அந்த வழித்தடங்களில் இருந்து மின்வினியோகம்பெறும் பகுதிகளில் அன்றைய தினம் காலை 9 மணி முதல் மாலை 4 வரை மின்தடை அமலில் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.

    கீரணத்தம் துணைமின்நிலையத்தில் மின்தடை செய்யப்படும் பகுதிகளின் விவரம் வருமாறு:-

    கீரணத்தம், வரதையங்கார்பாளையம், இடிகரை, அத்திப்பாளையம், சரவணம்பட்டியின் ஒரு பகுதி, விஸ்வாசபுரம், ரெவின்யூ நகர், கரட்டுமேடு, விளாங்குறிச்சியின் ஒரு பகுதி, சிவானந்தபுரம், சக்தி ரோடு, சங்கரா வீதி, ரவி தியேட்டர், விநாயகபுரம், எல்.ஜி.பி. நகர், உதயா நகர், ஹவுசிங் காலனி, அன்னை வேளாங்கன்னி நகர், சாவித்திரி நகர், கணபதி மாநகர், குறிஞ்சி நகர், சேரன் மாநகர் ரோடு, விளாங்குறிச்சி ரோடு. மேற்கண்ட தகவலை கு.வடமதுரை மின்வாரிய செயற்பொறியாளர் சண்முகசுந்தரம் தெரிவித்து உள்ளார்.

    • முதுகலை பட்டதாரியான கயல் விழிக்கு கடந்த 2022-ம் ஆண்டு பெங்களூருவில் பணிபுரியும் ஒரு வாலிபருடன் திருமணமாகியது.
    • பேஸ்புக்கில் தனது கணவரை சேர்த்து வைக்க நல்ல மாந்திரீகம் செய்ய தெரிந்தவர்கள் யாரேனும் இருக்கிறீர்களா என்று கேள்வி எழுப்பி பதிவிட்டுள்ளார்.

    நெல்லை:

    நெல்லை மாவட்டம் பணகுடி அருகே பழவூரை அடுத்த மாடன்பிள்ளை தர்மம் கிராமத்தை சேர்ந்தவர் சிவலிங்கதுரை. இவரது மகள் கயல்விழி (வயது 28). இவருக்கு திருமணமாகி, கணவரை பிரிந்து பெற்றோருடன் வாழ்ந்து வந்தார்.

    கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 5-ந்தேதி கோவி லுக்கு சென்று வருவதாக கூறிவிட்டு சென்ற கயல்விழி மாயமானார். இதுகுறித்த புகாரின்பேரில், பழவூர் போலீசார் வழக்குப்பதிவு கடந்த 8 மாதங்களாக தேடிய நிலையில் அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு காமிராக்களின் பதிவுகளை ஆய்வு செய்தபோது கன்னியாகுமரி மாவட்டம் கொட்டாரம் பகுதியை சேர்ந்த சாமியாரான சிவசாமி என்பவர் கயல்விழியை காரில் அழைத்துச்சென்றது தெரியவந்தது.

    இதையடுத்து அவரை பிடித்து விசாரணை நடத்தியபோது அவர் கயல்விழியின் 7 பவுன் நகைக்காக கூட்டாளிகளுடன் சேர்ந்து அவரை கழுத்தை நெரித்து கொலை செய்து உடலை சேரன் மகாதேவியில் 80 அடி அகல கால்வாயில் வீசிய அதிர்ச்சி தகவல் வெளியானது. இதையடுத்து கால்வாயில் இருந்து கயல்விழியின் எலும்புக் கூடுகள் மீட்கப்பட்டன.

    கைதானவர்களிடம் நடத்திய விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள் வெளியானது. முதுகலை பட்டதாரியான கயல் விழிக்கு கடந்த 2022-ம் ஆண்டு பெங்களூருவில் பணிபுரியும் ஒரு வாலிபருடன் திருமணமாகியது. பின்னர் 2024-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் அவர் கணவரை பிரிந்துவிட்டார். மீண்டும் தன்னை கணவருடன் சேர்த்து வைக்க வேண்டும் என்று கயல்விழி பல கோவில்களுக்கு சென்று வேண்டி வந்தார்.

    இந்நிலையில் அவர் தனது பேஸ்புக்கில் தனது கணவரை சேர்த்து வைக்க நல்ல மாந்திரீகம் செய்ய தெரிந்தவர்கள் யாரேனும் இருக்கிறீர்களா என்று கேள்வி எழுப்பி பதிவிட்டுள்ளார். இதனை தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த மாயாண்டி ராஜா பார்த்துள்ளார். அதனை தொடர்ந்து முதலில் கயல்விழியை காதல் கண்ணோட்டத்தில் மாயாண்டி ராஜா நெருங்கி உள்ளார். ஆனால் கயல்விழி அதற்கு உடன்படவில்லை. இதனால் அவரிடம் மாந்திரீகம் செய்யும் தனது மாமா சிவசாமியிடம் அழைத்துச்சென்று பணத்தை பறிக்க அவர் திட்டமிட்டுள்ளார்.

    அதன்படி கயல்விழியை மீண்டும் கணவருடன் சேர்த்து வாழ வைப்பதாக கூறி நம்பவைத்து பல்வேறு தவணைகளாக கயல்விழியிடம் மொத்தம் ரூ.5 லட்சம் வரையிலும் சிவசாமி, மாயாண்டிராஜா ஆகியோர் பறித்துள்ளனர்.

    ஒருகட்டத்தில் அவர்கள் ஏமாற்றுவதை அறிந்த கயல்விழி தனது பணத்தை திருப்பி தருமாறு கேட்டு தொந்தரவு செய்தார். இதனால் சம்பவத்தன்று பணம் தருவதாக கூறி கயல்விழியை சுசீந்திரத்துக்கு வரவழைத்து சிவசாமியும், அவருடைய சகோதரி மகனான மாயாண்டி ராஜா, வீரவ நல்லூரை சேர்ந்த கண்ணன், சிவனேஸ்வரி ஆகிய 4 பேரும் சேர்ந்து கழுத்தை நெரித்து கொலை செய்துள்ளனர்.

    பின்னர் அவர் அணிந்திருந்த 7 பவுன் நகைகளை எடுத்து கொண்டு கயல்விழி உடலை காரில் எடுத்துச் சென்று சேரன்மாதேவியை அடுத்த கங்கணாகுளம் அருகே மணிமுத்தாறு 80 அடி கால்வாயில் உடலை வீசிவிட்டு இயல்பான வாழ்க்கையை வாழ்ந்தது தெரியவந்தது.

    இதையடுத்து கைதான 4 பேரையும் போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். தொடர்ந்து சிவனேஸ்வரியை கொக்கிரகுளம் மகளிர் சிறையிலும், மற்ற 3 பேரையும் பாளை மத்திய சிறையிலும் அடைத்தனர். 

    • தூங்கிக் கொண்டிருந்த வாலிபரை தட்டி எழுப்பி அவரிடம் விசாரித்தனர்.
    • கோவில் நிர்வாகி அளித்த புகாரின் பேரில் சின்னையன் கைது செய்யப்பட்டார்.

    கோவை:

    கோவை அருகே உள்ள கோவைப்புதூரில் பாலவிநாயகர் மற்றும் அய்யப்பன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் அந்த பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் வழிபட்டு வந்தனர்.

    நேற்றுமுன்தினம் இரவு பூஜை முடிந்த பின்னர் பூசாரி கோவிலை பூட்டி விட்டுச்சென்றார். மறுநாள் காலையில் அவர் பூஜை செய்வதற்காக கோவிலுக்கு வந்தார். அப்போது கோவில் கதவு திறந்து கிடந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் கோவிலுக்குள் சென்று பார்த்தார். அங்கு உண்டியல் உடைக்கப்பட்டு பணம் திருடப்பட்டு இருந்தது.

    அதேசமயம் உண்டியல் அருகே ஒரு வாலிபர் போதையில் படுத்து தூங்கிக் கொண்டிருந்தார். உடனே பூசாரி, கோவில் நிர்வாகிகளுக்கு தகவல் தெரிவித்தார். இதனால் அங்கு ஏராளமானோர் திரண்டனர். தூங்கிக் கொண்டிருந்த வாலிபரை தட்டி எழுப்பி அவரிடம் விசாரித்தனர்.

    கோவிலில் உண்டியலை உடைத்து பணம் திருட வந்ததாகவும், பணத்தை திருடிவிட்டு போதையில் அங்கேயே தூங்கி விட்டதாகவும் அவர் தெரிவித்தார். இதையடுத்து அந்த நபரை பொதுமக்கள் குனியமுத்தூர் போலீஸ்நிலையத்தில் ஒப்படைத்தனர். போலீஸ் விசாரணையில் அவரது பெயர் சின்னையன் (வயது 42), புதுவை மாநிலம் காரைக்கால் நெடுங்காடு என்ற இடத்தைச் சேர்ந்தவர் என்பது தெரியவந்தது.

    அவர் மீது புதுவை மாநிலத்தில் திருட்டு வழக்குகள் உள்ளன. இதனால் அங்கிருந்து வெளியேறி கோவைப்புதூருக்கு வந்து வாடகை வீட்டில் தங்கி கட்டிட வேலைக்கு சென்று வந்துள்ளார்.

    நேற்றுமுன்தினம் இரவு கோவில் அருகே வந்ததும் பழைய நினைவுகள் வந்து உண்டியலை உடைத்து பணம் திருட முடிவு செய்துள்ளார். உடனே இரும்பு கம்பியை கொண்டு கோவில் கதவை உடைத்துள்ளார். உள்ளே சென்றபின் உண்டியலை உடைத்து அதில் இருந்த ரூ.8,250 பணத்தை திருடியிருக்கிறார். அப்போது மழை பெய்துள்ளது. இதனால் மழை நின்றதும் வெளியே செல்லலாம் என நினைத்து உண்டியல் அருகே படுத்துள்ளார். ஆனால் அங்கு அயர்ந்து தூங்கி விட்டதாக சின்னையன் தெரிவித்தார்.

    கோவில் நிர்வாகி அளித்த புகாரின் பேரில் சின்னையன் கைது செய்யப்பட்டார். அவர் திருடிய உண்டியல் பணத்தை போலீசார் பறிமுதல் செய்தனர். பின்னர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்ட சின்னையன் ஜெயிலில் அடைக்கப்பட்டார். திருடவந்த இடத்தில் கொள்ளையன் தூங்கியதால் பிடிபட்ட சம்பவம் கோவையில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • தொல்லியல் அதிகாரி அமர்நாத் இராமகிருஷ்ணன் இப்பொழுது மீண்டும் இடமாற்றம்.
    • ஒன்றிய அரசின் வஞ்சக செயல்களுக்கு தமிழக மக்கள் உரிய முறையில் பதில் அளிப்பார்கள்.

    மதுரை பாராளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் எம்.பி. வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் கூறியிருப்பதாவது:-

    தமிழின் தொன்மையையும், கீழடி உண்மையையும் வெளிக்கொண்டு வருவதில் உறுதியாக செயல்பட்ட தொல்லியல் அதிகாரி அமர்நாத் இராமகிருஷ்ணன் இப்பொழுது மீண்டும் இடமாற்றம்.

    கண்டறியப்பட்ட உண்மைக்காக இடைவிடாமல் வேட்டையாடப்படுகிறார் அமர்நாத் இராமகிருஷ்ணன்.

    ஒன்றிய அரசின் வஞ்சக செயல்களுக்கு தமிழக மக்கள் உரிய முறையில் பதில் அளிப்பார்கள்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • ஆய்வு பணிகள் குறித்து இறுதி அறிக்கையை தயாரிக்க அமர்நாத் ராமகிருஷ்ணாவுக்கு அனுமதி மறுக்கப்பட்டது.
    • அமர்நாத் ராமகிருஷ்ணன் தாக்கல் செய்த கீழடி அறிக்கையில் மத்திய அரசு திருத்தம் கோரியிருந்தது.

    கடந்த 2014-2016 வரை சிவகங்கை மாவட்டம் கீழடியில் முதல் மற்றும் இரண்டாம் கட்ட ஆய்வு மத்திய தொல்லியல் துறை கண்காணிப்பாளராக அமர்நாத் ராமகிருஷ்ணா பணியாற்றியிருந்தார்.

    கீழடி அகழாய்வு பணிகள் உலகம் அறிய முக்கிய காரணமாக இருந்த தமிழ்நாட்டைச் சார்ந்த தொல்லியல் அறிஞர் அமர்நாத் ராமகிருஷ்ணா அவரது தலைமையிலான குழு கீழடியில் ஆய்வு செய்தபோது ஆயிரக்கணக்கான பழங்கால பொருட்கள் கண்டெடுக்கப்பட்டன.

    ஆய்வு பணிகள் குறித்து இறுதி அறிக்கையை தயாரிக்க அமர்நாத் ராமகிருஷ்ணாவுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. அதனை தொடர்ந்து அவர் அசாம் மாநிலத்திற்கு பணியிடமாற்றம் செய்யப்பட்டார். இதனைத் தொடர்ந்து இறுதி அறிக்கை தயாரிக்கும் பணியை பெங்களூருவில் உள்ள வேறு தொல்பொருள் அதிகாரிகளிடம் மத்திய தொல்லியல் துறை வழங்கியது.

    அசாமில் பணியாற்றி வந்த தொல்லியல் ஆய்வாளர் அமர்நாத் ராமகிருஷ்ணா சென்னைக்கு மாற்றம் செய்து மத்திய அரசின் தொல்லியல் துறை உத்தரவிட்டது.

    இந்தநிலையில், மீண்டும் கீழடி அகழாய்வு பணியை மேற்கொண்ட அமர்நாத் ராமகிருஷ்ணா நொய்டாவுக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

    அமர்நாத் ராமகிருஷ்ணன் தாக்கல் செய்த கீழடி அறிக்கையில் மத்திய அரசு திருத்தம் கோரியிருந்தது. கீழடி தொடர்பாக 982 பக்க அகழாய்வு அறிக்கையினை அமர்நாத் ராமகிருஷ்ணன் சமர்பித்த நிலையில், அதனை வெளியிட மத்திய அரசு மறுத்து வருகிறது. தேசிய தொல்லியல் மற்றும் நினைவு சின்னங்கள் அமைப்பின் இயக்குநராக தற்போது உள்ளார்.

    • தே.மு.தி.க. தொலைக்காட்சியை மீண்டும் தொடங்க வேண்டும்.
    • நமக்கு யார் சரியான ஒத்துழைப்பு தருகிறார்களோ அந்த கட்சியிடம் கூட்டணி வைக்க வேண்டும்.

    தே.மு.தி.க. தலைமை அலுவலகத்தில் பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார்.

    தொகுதி வாரியாக நடைபெற்று வரும் ஆலோசனை கூட்டத்தில் பொதுச்செயலாளரிடம் நிர்வாகிகள் பல்வேறு கருத்துக்களை முன்வைத்தனர். அவர்கள் முன்வைத்த கோரிக்கைகள்:

    * கடந்த தேர்தலின்போது அ.தி.மு.க. நம்மை மதிக்கவில்லை.

    * கடந்த தேர்தலின்போது அ.தி.மு.க.வினர் சரியாக ஒத்துழைப்பு கொடுக்கவில்லை.

    * தே.மு.தி.க. தொலைக்காட்சியை மீண்டும் தொடங்க வேண்டும்.

    * நிர்வாகிகளுக்கு செலவுக்கு பணம் போதுமானதாக இல்லை. தலைமைக்கழகத்தில் இருந்து பணம் கொடுத்தால் பேருதவியாக இருக்கும்.

    * 6 மாதத்திற்கு ஒருமுறை பல்வேறு சுற்றுப்பயணம் மேற்கொள்ள வேண்டும். கட்சியை பலப்படுத்த வேண்டும்.

    * நமக்கு சாதகமான தொகுதிகளை கண்டறிந்து, அந்த தொகுதிகளை பலப்படுத்தி, கூட்டணியின்போது தொகுதிகளை கேட்டு பெற வேண்டும்.

    * குறிப்பாக இந்த முறை நாம் எந்த கூட்டணிக்கு சென்றாலும் 40 தொகுதிகளை கேட்டு பெற வேண்டும்.

    * நமக்கு யார் சரியான ஒத்துழைப்பு தருகிறார்களோ அந்த கட்சியிடம் கூட்டணி வைக்க வேண்டும் என்று வலியுறுத்தினர்.

    • தமிழ்நாடு மிக மிக பாதுகாப்பான மாநிலம்.
    • தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டக்காரர்களை எப்படி சுட்டார்கள் என்று அனைவருக்கும் தெரியும்.

    நெல்லை:

    நெல்லையில் அமைச்சர் கே.என்.நேரு இன்று செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவரிடம், பெண்களுக்கு பாதுகாப்பான மாநிலம் தமிழகம் இல்லை என்பதை கண்டித்து பா.ஜ.க. தலைவர் நயினார் நாகேந்திரன் உண்ணாவிரதம் இருக்கிறாரே என கேள்வி எழுப்பினர்.

    அதற்கு அமைச்சர் கே.என் நேரு பதில் அளிக்கையில், நயினார் நாகேந்திரன் புதிதாக தலைவராகி உள்ளார். தேர்தல் வருகிறது. அதற்காக புதிது புதிதாக கண்டுபிடித்து விரதம் இருக்கிறார்.

    தமிழ்நாடு மிக மிக பாதுகாப்பான மாநிலம். முதலமைச்சர் உடனடியாக நடவடிக்கை எடுக்கிறார். ஏ.டி.ஜி.பி. குறித்து புகார் வந்தபோது கூட முதலமைச்சர் உடனடியாக நடவடிக்கை எடுத்தார். நயினார் நாகேந்திரன் ஏதாவது செய்து கொண்டிருப்பார் என்றார்.

    தமிழ்நாட்டில் துப்பாக்கி கலாசாரம் தலை விரித்தாடுகிறது என்று எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கூறியிருப்பது பற்றி கேள்வி எழுப்பினர்.

    அதற்கு அமைச்சர் கே.என். நேரு பதிலளிக்கையில், தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டக்காரர்களை எப்படி சுட்டார்கள் என்று அனைவருக்கும் தெரியும்.

    ஒரு சில இடங்களில் ஒரு சிலர் செய்யும் செயல்களை தமிழ்நாடு முழுவதும் நடப்பதாக எடுத்துக்கொள்ள முடியாது. தமிழக முதலமைச்சர் சட்டம் ஒழுங்கு மற்றும் சாதி கலவரம் இல்லாத வகையில் உடனடியாக நடவடிக்கை எடுத்து வருகிறார்.

    அனைவரையும் அழைத்துப் பேசி சிறப்பாக ஆட்சியை கொண்டு போய் கொண்டு இருக்கிறார். தேர்தல் வரும்போது தங்களது இருப்பை காண்பித்துக் கொள்வதற்காக எதிர்க்கட்சி தலைவரும், மற்ற எதிர்க்கட்சியினரும் ஏதாவது இதுபோல் சொல்லிக் கொண்டுதான் இருப்பார்கள்.

    பா.ஜ.க. தேர்தலுக்கு அவர்கள் வேலையை செய்கிறார்கள். தி.மு.க. எங்கள் வேலையை செய்கிறோம். நாங்கள் பிடித்த இடங்களை விடுவோமா? விடமாட்டோம். கூடுதலான இடங்களை வெல்வதற்கு நாங்களும் முயற்சி எடுப்போம். வருகிற சட்டமன்ற தேர்தலில் பா.ஜ.க. எடுக்கும் முயற்சிகளை விட கூடுதலான முயற்சிகளை தி.மு.க. எடுக்கும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நாளை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.
    • நகரின் ஒருசில பகுதிகளில் லேசான முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.

    சென்னை:

    சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

    நேற்று வடமேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் நிலவிய வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, இன்று காலை 05.30 மணி அளவில், தென்மேற்கு வங்கதேசம் மற்றும் அதனை ஒட்டிய மேற்கு வங்காள பகுதிகளில் ஒரு காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகி, காலை 08.30 மணி அளவில் அதே பகுதிகளில் நிலவுகிறது. இது மேற்கு - வடமேற்கு திசையில் நகர்ந்து அடுத்த 24 மணி நேரத்தில் மேலும் வலுவடையக்கூடும்.

    நேற்று தெற்கு குஜராத் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் நிலவிய வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, இன்று காலை 05.30 மணி அளவில், குஜராத் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் ஒரு காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகி, காலை 08.30 மணி அளவில் அதே பகுதிகளில் நிலவுகிறது. இது அடுத்த 24 மணி நேரத்தில் வடக்கு திசையை நோக்கி நகரக்கூடும்.

    இதனால் தமிழகத்தில் இன்று ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஓரிரு இடங்களில் பலத்த தரைக்காற்று மணிக்கு 30 முதல் 40 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.

    நீலகிரி மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், கோயம்புத்தூர் மாவட்ட மலைப்பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.

    நாளை தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நீலகிரி மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.

    19-ந்தேதி முதல் 23-ந்தேதி வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

    சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நாளை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் லேசான முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 36° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 26-27° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.

    மீனவர்களுக்கான எச்சரிக்கை:-

    தென்தமிழக கடலோரப்பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய குமரிக்கடல் பகுதிகளில் இன்று சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்திலும், வடதமிழக கடலோரப் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 60 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.

    நாளை தென்தமிழக கடலோரப்பகுதிகள் மற்றும் மன்னார் வளைகுடா பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்திலும், தென்மேற்கு மற்றும் மத்தியமேற்கு வங்கக்கடல் பகுதிகளுக்கு அப்பால் உள்ள வடதமிழக கடலோரப்பகுதிகள் மற்றும் குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 60 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறார்கள். 

    • இனியும் போதைப்பொருள் ஒழிக்கவோ, சட்டம் ஒழுங்கைக் காக்கவோ நடவடிக்கை எடுப்பார் என்ற நம்பிக்கை மக்களுக்கு துளியும் இல்லை.
    • காவல்துறையை தன் நேரடி கட்டுப்பாட்டில் வைத்திருப்பதாக சொல்லும் பொம்மை முதலமைச்சர் தமிழக மக்களுக்கு பதில் சொல்லியாக வேண்டும்.

    சென்னை :

    அ.தி.மு.க. பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,

    கடலூர் மாவட்டம், பண்ருட்டியில் 5 வாலிபர்கள் கஞ்சா போதையில் மூதாட்டியை பாலியல் வன்கொடுமை செய்ததாக வரும் செய்தி அதிர்ச்சியளிக்கிறது.

    ஸ்டாலின் ஆட்சியில், தமிழ்நாடு எங்கே போகிறது? என்று தெரியாத நிலையிலேயே உள்ளது.

    இதுபோன்ற சம்பவங்கள் தமிழகம் முழுவதும் நடைபெற்றாலும், கும்பகர்ண தூக்கத்தில் இருக்கும் பொம்மை முதல்வர்

    மு.க.ஸ்டாலின், இனியும் போதைப்பொருள் ஒழிக்கவோ, சட்டம் ஒழுங்கைக் காக்கவோ நடவடிக்கை எடுப்பார் என்ற நம்பிக்கை மக்களுக்கு துளியும் இல்லை.

    6 வயது சிறுமி முதல் 80 வயது மூதாட்டி வரை, "அவர்களே அவர்களை காப்பாற்றிக்கொள்ள வேண்டிய" அவலச் சூழலை தமிழகத்தில் ஏற்படுத்திய இந்த விடியா திமுக ஸ்டாலின் மாடல் அரசுக்கு எனது கடும் கண்டனம்.

    இதுபோன்ற சம்பவங்களுக்கு அடிப்படை ஆதாரமாக உள்ள போதைப்பொருள் கலாச்சாரத்தை ஒழிக்க உறுதியான நடவடிக்கை எடுக்காத, காவல்துறையை தன் நேரடி கட்டுப்பாட்டில் வைத்திருப்பதாக சொல்லும் பொம்மை முதலமைச்சர் தமிழக மக்களுக்கு பதில் சொல்லியாக வேண்டும்.

    இப்படிப்பட்ட கேவலமான ஆட்சியைக் கண்டு கொதிப்படைந்துள்ள மக்கள், இதற்கான தண்டனையை நிச்சயம் 2026-ல் இந்த திமுக அரசுக்கு வழங்கத் தான் போகிறார்கள் என்று கூறியுள்ளார். 



    • சித்திரை முழு நிலவு மாநாட்டை பார்த்து தி.மு.க. பயந்து விட்டது.
    • தண்டபாணி முதலியார் திருமண மண்டபத்தில் வேலூர் மாவட்ட பா.ம.க. பொதுக்குழு கூட்டம் நடந்தது.

    வேலூர்:

    பா.ம.க.வில் டாக்டர் ராமதாஸ், அன்புமணி இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து அன்புமணி தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து மாவட்ட நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தி வருகிறார்.

    திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களை தொடர்ந்து நேற்று மாலை ராணிப்பேட்டை மாவட்ட பா.ம.க. பொதுக்குழுவில் அன்புமணி கலந்து கொண்டார்.

    சித்திரை முழு நிலவு மாநாட்டை பார்த்து தி.மு.க. பயந்து விட்டது. வன்னியர்களுக்கு தி.மு.க. நம்பிக்கை துரோகம் இழத்தது.

    நம் கட்சிக்குள் சூழ்ச்சியாளர்கள் உள்ளனர் அவர்கள் டாக்டர் ராமதாசிடம் தேவையில்லாததை சொல்லி சூழ்ச்சி செய்கிறார்கள் இந்த சூழ்ச்சியின் பின்னணியில் தி.மு.க. உள்ளது. அவர்களுடைய கனவு ஒருபோதும் பலிக்காது என்றார்.

    இதனை தொடர்ந்து இன்று காலை அன்புமணி வேலூர் வந்தார். தண்டபாணி முதலியார் திருமண மண்டபத்தில் வேலூர் மாவட்ட பா.ம.க. பொதுக்குழு கூட்டம் நடந்தது.

    இதில் வேலூர், அணைக்கட்டு, குடியாத்தம், கே.வி.குப்பம், காட்பாடி சட்டமன்ற தொகுதி மற்றும் மாவட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் அன்புமணி கலந்து கொண்டு நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார். 

    • பண்ருட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருவதுடன், தப்பி ஓடிய வாலிபர்களை தேடி வந்தனர்.
    • சுந்தரவேல் தாக்கியதில் காயமடைந்த 2 காவலர்கள் பண்ருட்டி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    பண்ருட்டி அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்த 80 வயது மூதாட்டி ஒருவர் நேற்று மதியம் 3 மணி அளவில் இயற்கை உபாதை கழிப்பதற்காக அதே பகுதியில் உள்ள சவுக்கு தோப்புக்கு சென்றார். அப்போது அங்கு வந்த 35 வயது மதிக்கத்தக்க 4 பேர் கொண்ட கும்பல் திடீரென அந்த மூதாட்டியை தாக்கினர். பின்னர் அவர்கள் மூதாட்டியை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்ததாக கூறப்படுகிறது. இதில் மூதாட்டியின் உடல்நிலை பாதிக்கப்பட்டது. தொடர்ந்து மூதாட்டி அணிந்திருந்த ¾ பவுன் நகையை பறித்துக் கொண்டு அங்கிருந்து அந்த கும்பல் தப்பி சென்றது.

    இதற்கிடையே அந்த வழியாக சென்ற பொதுமக்கள், மூதாட்டி காயமடைந்து கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். தொடர்ந்து அவர்கள், மூதாட்டியை மீட்டு சிகிச்சைக்காக சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.

    இதுகுறித்த புகாரின் பேரில் பண்ருட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருவதுடன், தப்பி ஓடிய வாலிபர்களை தேடி வந்தனர்.

    இந்தநிலையில் வழக்கில் தொடர்புடைய சுந்தரவேல் என்பவரை போலீசார் சுட்டுப்பிடித்தனர். காடாம்புலியூரில் பதுங்கியிருந்த சுந்தரவேல் தப்ப முயன்றபோது போலீசார் துப்பாக்கிச்சூடு நடத்தி அவரை பிடித்தனர்.

    சுந்தரவேல் தாக்கியதில் காயமடைந்த 2 காவலர்கள் பண்ருட்டி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    பாலியல் வன்கொடுமை வழக்கில் தொடர்புடைய மற்றவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

    ×