என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

தேர்தல் நேரத்தில் இருப்பை காட்டிக்கொள்வதற்காக ஏதாவது சொல்வார்கள்- அமைச்சர் கே.என்.நேரு
- தமிழ்நாடு மிக மிக பாதுகாப்பான மாநிலம்.
- தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டக்காரர்களை எப்படி சுட்டார்கள் என்று அனைவருக்கும் தெரியும்.
நெல்லை:
நெல்லையில் அமைச்சர் கே.என்.நேரு இன்று செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவரிடம், பெண்களுக்கு பாதுகாப்பான மாநிலம் தமிழகம் இல்லை என்பதை கண்டித்து பா.ஜ.க. தலைவர் நயினார் நாகேந்திரன் உண்ணாவிரதம் இருக்கிறாரே என கேள்வி எழுப்பினர்.
அதற்கு அமைச்சர் கே.என் நேரு பதில் அளிக்கையில், நயினார் நாகேந்திரன் புதிதாக தலைவராகி உள்ளார். தேர்தல் வருகிறது. அதற்காக புதிது புதிதாக கண்டுபிடித்து விரதம் இருக்கிறார்.
தமிழ்நாடு மிக மிக பாதுகாப்பான மாநிலம். முதலமைச்சர் உடனடியாக நடவடிக்கை எடுக்கிறார். ஏ.டி.ஜி.பி. குறித்து புகார் வந்தபோது கூட முதலமைச்சர் உடனடியாக நடவடிக்கை எடுத்தார். நயினார் நாகேந்திரன் ஏதாவது செய்து கொண்டிருப்பார் என்றார்.
தமிழ்நாட்டில் துப்பாக்கி கலாசாரம் தலை விரித்தாடுகிறது என்று எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கூறியிருப்பது பற்றி கேள்வி எழுப்பினர்.
அதற்கு அமைச்சர் கே.என். நேரு பதிலளிக்கையில், தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டக்காரர்களை எப்படி சுட்டார்கள் என்று அனைவருக்கும் தெரியும்.
ஒரு சில இடங்களில் ஒரு சிலர் செய்யும் செயல்களை தமிழ்நாடு முழுவதும் நடப்பதாக எடுத்துக்கொள்ள முடியாது. தமிழக முதலமைச்சர் சட்டம் ஒழுங்கு மற்றும் சாதி கலவரம் இல்லாத வகையில் உடனடியாக நடவடிக்கை எடுத்து வருகிறார்.
அனைவரையும் அழைத்துப் பேசி சிறப்பாக ஆட்சியை கொண்டு போய் கொண்டு இருக்கிறார். தேர்தல் வரும்போது தங்களது இருப்பை காண்பித்துக் கொள்வதற்காக எதிர்க்கட்சி தலைவரும், மற்ற எதிர்க்கட்சியினரும் ஏதாவது இதுபோல் சொல்லிக் கொண்டுதான் இருப்பார்கள்.
பா.ஜ.க. தேர்தலுக்கு அவர்கள் வேலையை செய்கிறார்கள். தி.மு.க. எங்கள் வேலையை செய்கிறோம். நாங்கள் பிடித்த இடங்களை விடுவோமா? விடமாட்டோம். கூடுதலான இடங்களை வெல்வதற்கு நாங்களும் முயற்சி எடுப்போம். வருகிற சட்டமன்ற தேர்தலில் பா.ஜ.க. எடுக்கும் முயற்சிகளை விட கூடுதலான முயற்சிகளை தி.மு.க. எடுக்கும்.
இவ்வாறு அவர் கூறினார்.






