என் மலர்
உள்ளூர் செய்திகள்
- சுற்றுலா பயணிகளுக்கு அனைத்து அருவிகளிலும் குளிக்க அனுமதி வழங்கப்பட்டது.
- கடைகளில் வியாபாரம் விறுவிறுப்பாக நடைபெற்று வருவதால் வியாபாரிகளும் மகிழ்ச்சியடைந்தனர்.
தென்காசி:
தென்காசி மாவட்டம் மேற்கு தொடர்ச்சிமலையை ஒட்டி அமைந்துள்ள குற்றால அருவிகளில் ஜூன், ஜூலை, ஆகஸ்ட் மாதங்களில் சீசன் முழுமையாக இருக்கும்.
இந்த ஆண்டு மே மாத இறுதியிலேயே சீசன் தொடங்கியதால் குற்றால அருவிகளுக்கு தண்ணீர் வரத்து அதிகரித்தது.
தற்போது கேரளாவில் தொடர்ந்து மழை பெய்த நிலையில் தென்காசி மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியை ஒட்டி உள்ள குற்றாலம் சுற்று வட்டார பகுதிகளிலும் சாரல் மழை விட்டு விட்டு பெய்து வருகிறது.
குற்றாலத்தில் உள்ள மெயின் அருவி, ஐந்தருவி, பழைய குற்றாலம், சிற்றருவி, புலி அருவி உள்ளிட்ட அனைத்து அருவிகளிலும் தண்ணீர் ஆர்ப்பரித்து விழுந்து வருகிறது.
தொடர் தடைக்கு பின்பு நேற்று காலை முதல் சுற்றுலா பயணிகளுக்கு அனைத்து அருவிகளிலும் குளிக்க அனுமதி வழங்கப்பட்டது.
இன்று விடுமுறை தினம் என்பதால் காலை முதலே மெயின் அருவி, ஐந்தருவி, பழைய குற்றால அருவிகளில் வெளியூர் சுற்றுலா பயணிகள் கூட்டம் அலைமோதி வருகிறது.
இதனால் குற்றாலத்தில் உள்ள பஜார் பகுதியில் அமைந்திருக்கும் கடைகளில் வியாபாரம் விறுவிறுப்பாக நடைபெற்று வருவதால் வியாபாரிகளும் மகிழ்ச்சியடைந்தனர்.
மேலும் பல்வேறு இடங்களில் வாகன போக்குவரத்து நெருக்கடியும் ஏற்பட்டுள்ளதால் அதனை போலீசார் சரி செய்யும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
குற்றால அருவிகளில் நீர்வரத்து அதிகரிப்பு எதிரொலியாக மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டி அமைந்துள்ள நீர் நிலைகளும் வேகமாக நிரம்பி உள்ளன. மேலும் சிற்றாற்று தண்ணீர் மூலம் பல்வேறு குளங்களும் நிரம்பி மறுகால் பாய்ந்து வருவதால் அதனை நம்பி விவசாய பணியிலும் விவசாயிகள் ஈடுபட தொடங்கி உள்ளனர்.
- மாணவிக்கு பாலியல் தொல்லை அளிக்கப்பட்ட சம்பவத்தில் பீகார் வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
- மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த நபர் மீது உரிய நடவடிக்கை எடுக்கக்கோரி மாணவர் அமைப்பினர் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
சென்னை ஐஐடி வளாகத்தில் மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இது குறித்து காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. புகாரின் பேரில் பீகார் வாலிபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்த நிலையில் இவ்வழக்கை தேசிய மகளிர் ஆணையம் தாமாக முன்வந்து விசாரணை செய்கிறது.
ஊடகங்களில் வந்த செய்தியின் அடிப்படையில் தாமாக முன் வந்து விசாரிக்கும் தேசிய மகளிர் ஆணையம் சென்னை ஐஐடி மாணவி பாலியல் தொல்லை தொடர்பான வழக்கை நியாயமான முறையில் விசாரிக்க வேண்டும் என்று டிஜிபிக்கு கடிதம் எழுதி உள்ளது.
சென்னை ஐஐடி வளாகத்தில் மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த நபர் மீது உரிய நடவடிக்கை எடுக்கக்கோரி மாணவர் அமைப்பினர் இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில், குற்றவாளியான ஞானசேகரன் கைது செய்யப்பட்டு அவருக்கு தண்டனை வழங்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
- தேசிய ஜனநாயக கூட்டணி வலுப்பெறுவதை பார்த்து தி.மு.க. கூட்டணியினர் அச்சப்படுகிறார்கள்.
- எங்களின் ஒரே இலக்கு தி.மு.க. ஆட்சியை வீழ்த்தி தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சியை கொண்டு வருவதுதான்.
திருச்சி:
திருச்சியில் நிருபர்களுக்கு அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் பேட்டி அளித்தார். அப்போது அவர் தெரிவித்ததாவது:-
தமிழ்நாட்டில் தி.மு.க. ஆட்சியை முடிவுக்கு கொண்டு வர வேண்டும் என அமித்ஷா பல முயற்சி எடுத்து வருகிறார். அதற்காக தேசிய ஜனநாயக கூட்டணியை பலப்படுத்தி வருகிறார்.
தேர்தல் நேரத்தில் விஜய் கூட்டணியில் இணைவது குறித்து தெரியும் என அமித்ஷா கூறியுள்ளார் காத்திருந்து பார்ப்போம்.
தமிழ்நாட்டில் கூட்டணி ஆட்சி சாத்தியம்தான். கொள்கை வேறாக இருந்தாலும் தி.மு.க.வை ஆட்சியில் இருந்து அப்புறப்படுத்த வேண்டும் என்கிற நோக்கத்திற்காக தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைந்துள்ளோம்.
தேசிய ஜனநாயக கூட்டணி வலுப்பெறுவதை பார்த்து தி.மு.க. கூட்டணியினர் அச்சப்படுகிறார்கள்.
தமிழகத்தின் இன்றைய நிலையை பார்த்தால் 2036 ல் அல்ல 2026- லேயே தி.மு.க. ஆட்சிக்கு வராது.
பா.ம.க. நிறுவனர் ராமதாசை காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை சந்தித்தது குறித்து அவர்கள் இருவரிடம் தான் கேட்க வேண்டும்.
தமிழ்நாட்டில் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு அ.தி.மு.க. தான் தலைமை. முதல்வர் வேட்பாளர் குறித்து அமித்ஷா தெளிவாக தான் பதில் அளித்துள்ளார்.
தி.மு.க.வை வீழ்த்த ஜெயலலிதா தொண்டர்கள் அனைவரும் ஒரே குடையின் கீழ் வரவேண்டும் என அமித்ஷா முயற்சி செய்தார். 2021லும் அவர் முயற்சி செய்தார். 2026-ல் அது பலன் அளித்துள்ளது. தேசிய ஜனநாயக கூட்டணிக்கு இடையூறு வரும் வகையில் ஏதாவது கருத்து சொன்னால் அது நாகரீகமாக இருக்காது.
உரிய தொகுதிகளை தேர்தல் நேரத்தில் பெற்று நாங்கள் தேர்தலில் போட்டியிடுவோம்.
தேசிய ஜனநாயக கூட்டணியில் எந்தெந்த கட்சிகள் இருப்பது என்பது குறித்து நயினார் நாகேந்திரன் கூறினால் தான் சரியாக இருக்கும். எடப்பாடி பழனிசாமி அது குறித்து ஏன் கூறவில்லை என அவரிடம் தான் கேட்க வேண்டும்.
பா.ம.க., தே.மு.தி.க. தேசிய ஜனநாயக கூட்டணியில் இணையுமா என்பது குறித்தான ஜோசியம் எனக்கு தெரியாது. எங்களின் ஒரே இலக்கு தி.மு.க. ஆட்சியை வீழ்த்தி தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சியை கொண்டு வருவதுதான்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
- அணையின் நீர்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து பெய்து வரக்கூடிய மழையால் அணைக்கு நீர்வரத்து அதிகரித்தபடியே இருந்து வருகிறது.
- ஆழியார் அணையின் மூலமாக பாசன வசதி பெற்று வரும் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
பொள்ளாச்சி:
கோவை மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக பரவலாக மழை பெய்து வருகிறது.
குறிப்பாக மேற்கு தொடர்ச்சி மலையடிவார பகுதிகளான வால்பாறை, பொள்ளாச்சி சுற்றுவட்டார பகுதிகளில் கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. மழையுடன் சூறாவளி காற்றும் வீசுகிறது.
இந்த மழை காரணமாக வால்பாறை மற்றும் பொள்ளாச்சி பகுதிகளில் உள்ள ஒடைகள், நீர்நிலைகள் அனைத்தும் வேகமாக நிரம்பி வருகின்றன.
பொள்ளாச்சி அடுத்து ஆழியாரில் ஆழியார் அணை உள்ளது. இந்த அணையின் உயரம் 120 அடியாகும். அணையின் நீர்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து பெய்து வரக்கூடிய மழையால் அணைக்கு நீர்வரத்து அதிகரித்தபடியே இருந்து வருகிறது.
இன்று காலை நிலவரப்படி ஆழியார் அணையின் நீர்மட்டம் 110.70 அடியாக உயர்ந்துள்ளது. அணைக்கு வினாடிக்கு 1,861 கன அடி நீர்வரத்து உள்ளது. அணையில் இருந்து வினாடிக்கு 161 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.
தொடர்ந்து மழை பெய்து வருவதன் காரணமாக ஆழியாறு அணை விரைவில் தனது முழு கொள்ளளவையும் எட்டிவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அணையின் நீர்மட்டம் வேகமாக நிரம்பி வருவதால் ஆழியார் அணையின் மூலமாக பாசன வசதி பெற்று வரும் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
ஆழியார் அணைக்கு தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து, அணையின் நீர்மட்டமும் உயர்ந்து வருவதால், ஆழியாறு அணையின் நீர் கொள்ளளவைப் பொறுத்து, கரையோர மக்களுக்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து அறிவிப்பு வெளியாகலாம் என தெரிகிறது.
- திருவதிகை வீரட்டானேஸ்வரர் கோவிலில் சவுமியா அன்புமணி சாமி தரிசனம் செய்தார்.
- ஒரே குடும்பமாக வாழ வேண்டும்.
பா.ம.க.வில் ராமதாசுக்கும் அன்புமணிக்கும் இடையே நிலவி வரும் மோதல் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அன்புமணி மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டு முன்வைத்து வரும் ராமதாஸ், சவுமியாவையும் விமர்சித்து இருந்தார். இது அரசியல் மட்டுமின்றி ராமதாஸ் குடும்பத்திலும் சர்ச்சையை ஏற்படுத்தியது. சமீபத்தில் நடைபெற்ற ராமதாசின் 60-வது மணிவிழாவில் அன்புமணியின் குடும்பத்தினர் பங்கேற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில், கடலூர் மாவட்டம் பண்ருட்டி அடுத்த காடாம்புலியூரில் பா.ம.க. பிரமுகர் இல்ல திருமண நிகழ்ச்சியில் சவுமியா அன்புமணி கலந்து மணமக்களை வாழ்த்தினார். இதையடுத்து பேசிய சவுமியா அன்புமணி, திருமணமாகும் மணப்பெண்கள் மாமனார் மற்றும் மாமியாரை மதிக்க கற்றுக்கொள்ள வேண்டும். ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்து வாழ வேண்டும். ஒரே குடும்பமாக வாழ வேண்டும் என மணமக்களுக்கு அறிவுரை வழங்கினார்.
இதையடுத்து, பண்ருட்டி திருவதிகை வீரட்டானேஸ்வரர் கோவிலில் பா.ம.க. தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாசின் மனைவி சவுமியா அன்புமணி சாமி தரிசனம் செய்தார். அவரை பா.ம.க. நிர்வாகிகள் வரவேற்றனர். கோவிலின் 2-ம்நிலை ராஜகோபுரம் அருகில் அவருக்கு அர்ச்சகர்கள் கும்ப மரியாதை அளித்தனர். பின்னர் மூலவர் வீரட்டானேஸ்வரர் சுவாமியை பயபக்தியுடன் தரிசனம் செய்தார். திருவிளக்கு ஏற்றி, சிறப்பு அர்ச்சனை செய்து சாமி கும்பிட்டார்.
- ராமரின் வாழ்க்கை குணாதிசயங்களை குழந்தைகளிடம் சொல்லிக் கொடுக்க வேண்டும்.
- நீங்கள் போடும் ஓட்டு நமக்கானது அல்ல. குழந்தைகளுக்கானது.
நாகர்கோவில்:
குமரி மாவட்டம் தக்கலை அருகே உள்ள வைகுண்டபுரத்தில் பழமையான ஸ்ரீராமர் கோவில் உள்ளது. இந்தக் கோவில் கும்பாபிஷேக விழாவையொட்டி சமய மாநாடு நடைபெற்றது. இதில் தமிழக பா.ஜ.க. தலைவர் நயினார் நாகேந்திரன், முன்னாள் தலைவர் அண்ணாமலை ஆகியோர் கலந்து கொண்டனர்.
அந்த மாநாட்டில் அண்ணாமலை பேசியதாவது:
உலகத்தில் கடவுள் வந்து ராஜாவாக இருந்து ஆட்சி செய்து ஆட்சி இருக்க வேண்டும் எனக் காட்டியவர் கடவுள் ராமர். இதனால் ராமராஜ்ஜியம் என சொல்கிறோம். ராமர் மனிதனாக இருந்து ஒரு ராஜ்ஜியத்தை ஆண்டுள்ளார்.
மக்களாட்சியில் இருக்கும்போது மன்னர் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு ராமர் ஒரு இலக்கணம். அநியாயம் நடந்தபோது எப்படி நடந்து கொண்டார். சட்ட திட்டத்தை எப்படி காப்பாற்றினார். அவருடைய தந்தை கொடுக்கிறேன் என சொன்ன பதவியை கொடுக்காதபோது எப்படி நடந்து கொண்டார்? என்பதை பார்க்க வேண்டும்.
பகலில் போனால் மக்கள் தடுப்பார்கள் என்பதற்காக இரவில் காட்டுக்கு சென்றார். ராமர் வாழ்க்கையில் ஒரு ஒரு விஷயமும் ஒரு குணத்தை சொல்லி கொடுக்கிறது. தம்பியிடம், பெற்றோரிடம், மன்னராக எப்படி நடந்து கொண்டார். எதிரியாக இருந்தாலும் எப்படி சண்டை போட்டார்? யுத்தத்தை எப்படி நடத்தினார்? என்பதையும் பார்க்க வேண்டும்.
ராமரின் வாழ்க்கை குணாதிசயங்களை குழந்தைகளிடம் சொல்லிக் கொடுக்க வேண்டும். ஸ்ரீராமரை போல் இருக்க வேண்டும் என்பதற்காக குழந்தைகளுக்கு அவரது பெயரை வைக்கிறோம். கடவுளின் குணாதிசயங்கள் வர வேண்டும் என்பதற்காக.. இதனை செய்கிறோம்.
தமிழகத்தில் இருக்கும் ஆட்சி ஊறுகாய் அளவுக்கு கூட ராமராஜ்ஜியமாக இல்லை. குடும்பத்தில் எப்படி ராமர் இருந்தார் என்பதற்கும், இன்று ஆட்சியாளர்கள் குடும்பம் இன்று அவர்களே ஆட்சியாக இருக்கிறார்கள் என்பதற்கும் ஒப்பிட்டு பார்க்க வேண்டும். எங்கேயோ ஒரு இடத்தில் யாருக்கோ ஒரு பிரச்சனை வந்தால் மன்னர் துடிப்பார்.
ஆனால், தற்போது மக்களுக்கு ஒரு பிரச்சனை வந்தால் ஆட்சியாளர்கள் துடிக்கிறார்களா? என்றால் கிடையாது. ஆட்சியாளர்கள், மக்களிடம் எப்படி பேச வேண்டும். என்ன பேசினால் கேட்பார்கள் என்பதில் 100 மார்க் வாங்கிவிட்டார்கள்.தேர்தலின் போதும், ஓட்டு வாங்கும்போது, தேர்தல் முடிந்து ஓராண்டுக்கு பிறகும் எப்படி பேச வேண்டும் என அரசியல்வாதிகளுக்கு தெரியும்.
அரசியல்வாதி 5 ஆண்டுகளில் பேசுவதை பார்க்க வேண்டும். ஓட்டு வாங்கிய பிறகு ஏளனமாக இருப்பார்கள். 3-வது வருடத்தில் இருந்து பக்கத்தில் வந்து விடுவார்கள். 5-வது ஆண்டில் ஊர்விழா, தெரு விழாவுக்கு வந்து விடுவார்கள். எப்படி நயமாக பேசி ஓட்டை வாங்க வேண்டும் என்பதில் தமிழகத்தில் சில அரசியல்வாதிகள் பி.எச்.டி. பட்டம் பெறும் அளவுக்கு தெளிவாகி விட்டார்கள்.
அவர்களால், அவர்களுக்கும், மக்களுக்கும், சமூகத்திற்கும் ஒரு பைசா பிரயோஜனம் கிடையாது. அனைவரும் சிந்தித்து ஓட்டு போட வேண்டும். எந்த கட்சி எப்படிப்பட்ட தலைவன் என்ன மாற்றத்தை கொடுக்க போகிறார் என சிந்திக்க வேண்டும்.
நீங்கள் போடும் ஓட்டு நமக்கானது அல்ல. குழந்தைகளுக்கானது. உங்களுக்கான ஓட்டை உங்கள் பெற்றோர்கள் ஓட்டு போட்டு விட்டனர். நீங்கள் எப்படி, ஒரு மாநிலத்தில் வாழ வேண்டும் என்பதை உங்களின் தந்தையும், தாயும் ஓட்டுப்போட்டு விட்டனர். இன்றைக்கு நீங்கள் ஓட்டுப்போடுவது உங்கள் குழந்தைகளுக்கானது. எப்படிப்பட்ட மாநிலத்தில் வாழ வேண்டும் என்பதற்காக ஓட்டுப்போட உள்ளீர்கள்.
எந்த மாற்றமும் 5 ஆண்டுகளில் நடக்காது. சனாதன தர்மத்தை பேணி காக்க வேண்டும் என நினைத்தால், ஒவ்வொருவரும் சிந்திக்க வேண்டும்.
சனாதன தர்மத்தை பேணிக்காக்க வேண்டும் என்று நினைத்தால், வாக்களிக்கக்கூடியவர்களாகிய சனாதன தர்மத்தை கடைபிடிக்கும் நீங்கள், யார் சனாதன தர்மத்தை முன்னெடுத்து செல்வார்கள் என்று வாக்களிக்கும் முன் ஒரு முறை நீங்கள் யோசித்து பார்க்க வேண்டும்.
தமிழக முதலமைச்சர் சமீபத்தில் பேசும்போது, கடவுளின் பெயரை தவறாக பயன்படுத்தி ஒரு அரசியல் கட்சி அரசியல் செய்கிறது என்று கூறினார். விநாயகர் சிலையை உடைத்தது யார்? ராமர்பாலத்துக்கு சேதம் ஏற்படுத்தக்கூடாது என்று கூறியபோது ராமர் என்ன என்ஜினீயரா என்று கேட்டது யார்?
கந்தசஷ்டி கவசத்தை இழிவுபடுத்தி பேசியபோது கைகட்டி பார்த்துக் கொண்டிருந்தது யார்? சனாதன தர்மத்தை ஒழிக்க வேண்டும் என்று நடத்தப்பட்ட மாநாட்டு மேடையில் நம்முடைய கட்சியை சேர்ந்தவர்கள் ஏறினார்களா?
முதலமைச்சரின் மகன் ஏறினாரா? டெங்கு கொசுவை ஒழிப்பது போன்று சனாதன தர்த்தை ஒழிப்போம் என்று கூறியது நாமா அல்லது முதலமைச்சரும் மற்றும் அவரது கட்சியை சேர்ந்த அவரது மகனா?
குழந்தைகளுக்கு சனாதன தர்மத்தை முழுமையாக சொல்லிக் கொடுக்க வேண்டும். கம்பராமாயணத்தை நமது குழந்தைகளுக்கு சொல்லிக் கொடுக்க வேண்டும். சஷ்டி தினத்தில் கந்த சஷ்டி கவசத்தை பாட வைக்க வேண்டும். நமது குழந்தைகளுக்கு மகா பாரதத்தை சொல்லிக் கொடுக்க வேண்டும்.
நமது குழந்தைகளுக்கு இன்று 8-ம் வகுப்பில் நீட் பயிற்சி, 6-ம் வகுப்பில் சிவில் சர்வீஸ் பயிற்சி கொடுக்கிறோம். இந்த வயதில் அந்த குழந்தைகளுக்கு அவற்றை பற்றியெல்லாம் தெரியுமா? இவற்றையெல்லாம் சொல்லிக்கொடுத்தபிறகு அந்த குழந்தை, எவ்வளவு படித்தாலும் தந்தை, தாயை சரியாக பராமரிப்பது கிடையாது.
வியர்வை, ரத்தத்தை கொடுத்து சனாதனத்தை காப்பாற்றியவர்கள் குமரி மாவட்டத்தில் உள்ளனர். மதமாற்றத்தை பற்றிய விவரத்தை முழுமையாக அறிந்தவர்கள் இங்கு உள்ளனர். எந்த மதமும் நமக்கு போட்டி கிடையாது. அவரவர் மதம் அவரவர்களுக்கு பெரியது.
இவ்வாறு அவர் பேசினார்.
- விழாவுக்கு வரும் பக்தர்களுக்காக பல்வேறு அடிப்படை வசதிகள் செய்யப்பட்டு வருகிறது.
- கும்பாபிஷேகத்தை முன்னிட்டு வருகிற 1-ந்தேதி யாகசாலை பூஜைகள் தொடங்குகிறது.
திருச்செந்தூர்:
திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோவிலில் மகா கும்பாபிஷேக விழா வருகிற 7-ந்தேதி (திங்கட் கிழமை) நடைபெறுகிறது.
15 ஆண்டுகளுக்கு பின்னர் வெகு விமரிசையாக நடைபெறும் இந்த கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு கோவிலில் நடைபெற்ற பல்வேறு கட்ட திருப்பணிகள் நிறைவு கட்டத்தை எட்டி உள்ளது.
கும்பாபிஷேக விழாவுக்கு தமிழ்நாடு மட்டுமின்றி பல்வேறு மாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் இருந்தும் 10 லட்சத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் வரு வார்கள் என எதிர்பார்க் கப்படுகிறது.
இதையொட்டி விழாவுக்கு வரும் பக்தர்களுக்காக பல்வேறு அடிப்படை வசதிகள் செய்யப்பட்டு வருகிறது.
கும்பாபிஷேக விழா வருகிற 1-ந்தேதி யாகசாலை பூஜைகளுடன் தொடங்குகிறது. இதையொட்டி பிரமாண்ட யாகசாலை மண்டபங்களும் அமைக்கப்பட்டு உள்ளது.
கும்பாபிஷேகத்தையொட்டி திருச்செந்தூர் கோவிலில் நடைபெற்று வரும் இறுதிகட்ட பணிகளை அமைச்சர்கள் பி.கே.சேகர்பாபு, அனிதா ராதாகிருஷ்ணன், தி.மு.க. துணை பொதுச்செயலாளர் கனிமொழி எம்.பி. ஆகியோர் இன்று ஆய்வு செய்தனர்.
கோவில் வளாகம் கும்பாபிஷேகம் நடைபெறும் இடம், யாகசாலை மண்டப பகுதி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் நடைபெற்று வரும் கும்பாபிஷேக இறுதி கட்ட பணிகளை ஆய்வு செய்தனர். தொடர்ந்து பக்தர்களுக்கு செய்யப்பட்டுள்ள அடிப்படை வசதிகள் குறித்தும் கேட்டறிந்தனர்.
ஆய்வின்போது கலெக்டர் இளம்பகவத், மாவட்ட போலீஸ் சூப்பி ரண்டு ஆல்பர்ட்ஜான், கோவில் தக்கார் அருள் முருகன், இந்துசமய அறநிலையத்துறை அதிகா ரிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
தொடர்ந்து தக்கார் அலுவலகத்தில் கும்பாபிஷேகம் குறித்து ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
பின்னர் அமைச்சர் பி.கே.சேகர் பாபு நிருபர்களிடம் கூறியதாவது:-
கும்பாபிஷேக யாகசாலை மற்றும் அதன் பாதுகாப்பு பணி, கோவில் சார்பில் கட்டப்பட்ட 52 அறைகளின் பணிகள் குறித்து ஆய்வு செய்யப்பட்டது.
கும்பாபிஷேகத்தின்போது கோவில் வளாகம் மற்றும் கோவில் விமான தளத்தில் எவ்வளவு பக்தர்களை அனுமதிக்க முடியும் என்பது குறித்து அதிகாரிகளுடன் ஆலோசனை செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து இறுதி கட்ட ஆய்வு நடத்தி வருகிற 2-ந் தேதி தெரியவரும். பக்தர்களுக்கு தேவையான தற்காலிக வாகன நிறுத்தும் இடங்கள், கோவில், உபயதாரர் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள அன்னதானம் வழங்கும் இடங்களில் ஆய்வு செய்யப்பட்டது. கழிப்பிடம், குடிநீர் போன்ற அடிப்படை வசதிகளும், பாதுகாப்பு, மருத்துவ வசதிகளும் ஏற்கனவே ஏற்பாடு செய்யப்பட்டவை குறித்து அனைத்து துறை அதிகாரிகளுடன் கலந்து ஆலோசிக்கப்பட்டது. 90 சதவீதத்திற்கும் மேலான கும்பாபிஷேக பணிகள் நிறைவடைந்து உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
பேட்டியின்போது அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன், தக்கார் அருள் முருகன், மாவட்ட கலெக்டர் இளம் பகவத், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஆல்பர்ட் ஜான், அறநிலையத்துறை ஆணையர் ஸ்ரீதர், கோவில் இணை ஆணையர் ஞானசேகரன், திண்டுக்கல் மண்டல இணை ஆணையர் கார்த்திக் உள்பட அறநிலையத்துறை அதிகாரிகள் பலர் உடனிருந்தனர்.
- மக்களை நாள்தோறும் பல்வேறு வகைகளில் துன்புறுத்தி வரும் விடியா திமுக-வின் ஸ்டாலின் மாடல் அரசுக்கு கண்டனம்.
- பாலக்கரையில் இருந்து பீமநகரை இணைக்கும் பகுதியில் உள்ள பழுதடைந்துள்ள சாலைகளை உடனடியாக சீரமைக்கவும்.
சென்னை:
அ.தி.மு.க. பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில்,
நிர்வாகத் திறனற்ற பொம்மை முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையிலான, கடந்த நான்கு ஆண்டுகால விடியா திமுக ஆட்சியில், மக்களின் அத்தியாவசிய மற்றும் அடிப்படைத் தேவைகள் நிறைவேற்றித் தரப்படவில்லை. இதன் காரணமாக மக்கள் சொல்லொண்ணா வேதனையை நாள்தோறும் சந்தித்து வருகின்றனர்.
அந்த வகையில், திருச்சி மாநகராட்சியில் நிலவி வரும் பல்வேறு சீர்கேடுகளால் மக்கள் கடும் அவதியுற்று வருவதாக, தொடர்ந்து புகார்கள் வந்த வண்ணம் உள்ளன.
அதன் விபரம் வருமாறு :-
* திருச்சி To மதுரை தேசிய நெடுஞ்சாலையில் உள்ள பஞ்சப்பூரில், 40 ஏக்கர் பரப்பளவில் சுமார் 246 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 3600-க்கும் மேற்பட்ட பேருந்துகளைக் கையாளும் வகையில் கட்டப்பட்டுள்ள ஒருங்கிணைந்த பேருந்து நிலையம், விடியா திமுக அரசின் முதலமைச்சரால் கடந்த மாதம் திறந்து வைக்கப்பட்டது. திருச்சியில் 2 மணி நேரத்திற்கும் மேலாக பெய்த சிறிய மழைக்கே, புதிய பேருந்து நிலையக் கட்டடம் தாக்குப்பிடிக்க முடியாமல் மேற்கூரைகளின் வழியே மழைநீர், பயணிகள் நிற்கும் நடை மேடையில் விழுவதை பொதுமக்கள் கிண்டலடித்து வரும் அவலம் ஏற்பட்டுள்ளது.
பஞ்சப்பூரில் பேருந்து முனையம் திறக்கப்பட்டு ஒரு மாதம் கடந்துவிட்ட நிலையில், இதுவரை பேருந்துகள் இயக்கப்படவில்லை. நிர்வாகத் திறனற்ற விடியா திமுக அரசு இம்முனையத்திற்குத் தேவையான அடிப்படை வசதிகளைக்கூட செய்யாமல் அவசர கதியில் திறந்துள்ளதாக மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
மத்திய பேருந்து நிலையத்தில் இருந்து பஞ்சப்பூர் பேருந்து நிலையத்திற்கு செல்லும் வழியில் உள்ள ஜங்ஷன் ரெயில்வே மேம்பாலம் இடிக்கப்பட்ட நிலையில், கட்டுமானப் பணிகள் ஆமை வேகத்தில் நடைபெற்று வருகின்றன. இதன் காரணமாக, திருச்சியில் இருந்து வெளியூர் செல்லும் பேருந்துகளாக இருக்கட்டும், வெளியூர்களில் இருந்து திருச்சி மாநகருக்குள் வந்து செல்லும் பேருந்துகளாக இருக்கட்டும், அரிஸ்டோ ரவுண்டானா மேம்பாலம் மற்றும் தலைமைத் தபால் நிலையம் அருகே உள்ள மேம்பாலம் ஆகியவற்றை மட்டுமே சார்ந்து செல்வதால், மாநகரப் பகுதிகளில் கடும் போக்குவரத்து நெரிசல் நிலவுகிறது.
* திருச்சி மாநகரில் இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக கட்டப்பட்டு வரும் மாரிஸ் ரெயில்வே மேம்பால கட்டுமானப் பணிகள் இன்னும் நிறைவடையாத காரணத்தால் பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாவதோடு, போக்குவரத்து நெரிசலால் திருச்சியே சில நேரங்களில் ஸ்தம்பித்துவிடுகிறது. இதன் காரணமாக திருச்சி மாநகர மக்கள் மிகுந்த அவதியுறுகின்றனர்.
* பாலக்கரையில் இருந்து பீமநகரை இணைக்கும் பகுதியில் உள்ள சாலைகளில் ஆங்காங்கே விரிசல் ஏற்பட்டும், தார் உருகியும் பள்ளங்கள் ஏற்பட்டு, பார்ப்பதற்கு வேகத்தடைபோல் காட்சி அளிக்கிறது. இதனால் வாகனங்கள் பழுதடைந்துவிடுவதாக மக்கள் புகார் தெரிவிக்கின்றனர்.
* திருச்சி மத்திய பேருந்து நிலையத்தில் இருந்து சத்திரம் பேருந்து நிலையம் செல்லக்கூடிய பிரதான சாலையான பாலக்கரை சாலையில், பாதாள சாக்கடை திட்டப் பணிகளுக்காக பள்ளங்கள் தோண்டப்பட்டுள்ளதால் மக்கள் பல்வேறு வகைகளில் சிரமப்படுகின்றனர். இந்தச் சாலையை சீரமைத்துத் தரக்கோரி பொதுமக்கள் மற்றும் வியாபாரிகள் சாலை மறியல் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
மக்களின் அத்தியாவசிய, அடிப்படைத் தேவைகளை நிறைவேற்றாமல், மக்களை நாள்தோறும் பல்வேறு வகைகளில் துன்புறுத்தி வரும் விடியா திமுக-வின் ஸ்டாலின் மாடல் அரசுக்கு எனது கடும் கண்டனத்தைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
இந்நிலையில், மக்கள் நலனில் சிறிதும் அக்கறை இல்லாத விடியா திமுக ஸ்டாலின் மாடல் அரசைக் கண்டித்தும்; திருச்சி To மதுரை தேசிய நெடுஞ்சாலை, பஞ்சப்பூரில் உள்ள ஒருங்கிணைந்த பேருந்து நிலையத்தை உடனடியாக மக்கள் பயன்பாட்டிற்குக்கொண்டுவரவும்; திருச்சி மாநகரில் கட்டப்பட்டு வரும் மாரிஸ் ரெயில்வே மேம்பால காட்டுமானப் பணிகளை விரைந்துமுடிக்கவும்; பாலக்கரையில் இருந்து பீமநகரை இணைக்கும் பகுதியில் உள்ள பழுதடைந்துள்ள சாலைகளை உடனடியாக சீரமைக்கவும்; பாலக்கரை சாலையில் நடைபெற்று வரும் பாதாள சாக்கடை திட்டப் பணிகளை விரைந்து முடிக்கவும், விடியா திமுக ஸ்டாலின் மாடல் அரசு மற்றும் மாநகராட்சி நிர்வாகத்தை வலியுறுத்தி, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக திருச்சி மாநகர் மாவட்டத்தின் சார்பில் 3.7.2025 வியாழக்கிழமை காலை 10.30 மணியளவில், மரக்கடை எம்.ஜி.ஆர். திடலில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும்.
இந்தக் கண்டன ஆர்ப்பாட்டம், கழக அமைப்புச் செயலாளரும், புதுக்கோட்டை வடக்கு மாவட்டக் கழகச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான விஜயபாஸ்கர் தலைமையிலும்; திருச்சி மாநகர் மாவட்டக் கழகச் செயலாளரும், மாநகராட்சி முன்னாள் துணை மேயருமான சீனிவாசன் முன்னிலையிலும் நடைபெறும்.
இந்தக் கண்டன ஆர்ப்பாட்டத்தில், திருச்சி மாநகர் மாவட்டத்தைச் சேர்ந்த தலைமைக் கழகச் செயலாளர்கள், கழக சார்பு அணிகளின் துணை நிர்வாகிகள், முன்னாள் அமைச்சர்கள், முன்னாள் பாராளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், மாவட்டத்தில் பல்வேறு நிலைகளில் பணியாற்றி வரும் நிர்வாகிகள், மாநகராட்சி மாமன்ற முன்னாள் வார்டு உறுப்பினர்கள் மற்றும் கூட்டுறவு சங்கங்களின் முன்னாள் பிரதிநிதிகளும், கழக உடன்பிறப்புகளும் பெருந்திரளாகக் கலந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன்.
நிர்வாகத் திறனற்ற விடியா திமுக அரசையும், திருச்சி மாநகராட்சி நிர்வாகத்தையும் கண்டித்து நடைபெற உள்ள இந்தக் கண்டன ஆர்ப்பாட்டத்தில், வியாபாரிகள், பல்வேறு தரப்பட்ட தொழிலாளர்கள் உள்ளிட்ட பொதுமக்கள் அனைவரும் பெருந்திரளான அளவில் கலந்துகொள்ளுமாறு அன்போடு கேட்டுக்கொள்கிறேன்.
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
- ஒரு மாத காலத்திற்கு செவ்வாய், வெள்ளி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் ஏற்பாடு செய்யப்படுகிறது.
- ஆடி மாத அமாவாசை தினத்தையொட்டி 3 நாட்கள் ராமேஸ்வரம் சுற்றுலாவிற்கும் முன்பதிவு தொடங்கப்பட்டு உள்ளது.
சென்னை:
தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகம் சார்பில் ஆன்மீக சுற்றுலா பயணிகள் பயன்பெறும் வகையில் சென்னை, மதுரை, திருச்சி, தஞ்சாவூர் ஆகிய நகரங்களில் உள்ள பிரசித்தி பெற்ற அம்மன் கோவில்களை தரிசனம் செய்யும் வகையில் ஒரு நாள் சுற்றுலா திட்டம் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.
காலை 8.30 மணி முதல் இரவு 8.30 மணி வரை அம்மன் கோவில்களுக்கு அழைத்து சென்று தரிசனம் செய்ய திட்டமிட்டு உள்ளது.
இந்த சுற்றுலா ஜூலை 18-ந்தேதி முதல் ஆகஸ்டு 15-ந்தேதி வரை ஒரு மாத காலத்திற்கு செவ்வாய், வெள்ளி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் ஏற்பாடு செய்யப்படுகிறது.
இது தொடர்பாக சுற்றுலாத்துறை அமைச்சர் ராஜேந்திரன் வெளியிட்டு உள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-
சென்னையில் காளிகாம்பாள் கோவில், ராயபுரம்-அங்காள பரமேஸ்வரி, திருவொற்றியூர் - வடிவுடையம்மன், பெரிய பாளையம்- பவானி அம்மன், புட்லூர்- அங்காள பரமேஸ்வரி, திருமுல்லைவாயில்- திருவுடையம்மன் கோவில், பச்சையம்மன் கோவில், வில்லிவாக்கம்- பாலியம்மன் கோவில்களில் தரிசனம் செய்ய சிறப்பான ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.
இந்த சுற்றுலாவில் அனைவருக்கும் மதிய உணவு வழங்கப்படும். இதற்கான கட்டணம் ரூ.1000. மற்றொரு சுற்றுலா திட்டமான மைலாப்பூர் -கற்பகாம்பாள் கோவில், முண்டகண்ணி அம்மன் கோவில், கோலவிழியம்மன் கோவில், தேனாம்பேட்டை -ஆலயம்மன் கோவில், தி.நகர்- முப்பாத்தம்மன் கோவில், சைதாப்பேட்டை -பிடாரி இளங்காளி அம்மன் கோவில், பெசன்ட் நகர் - அஷ்டலட்சுமி கோவில், மாங்காடு - காமாட்சி அம்மன் கோவில்.
திருவேற்காடு - தேவி கருமாரியம்மன் கோவில், கீழ்ப்பாக்கம்- பாதாள பொன்னியம்மன் கோவில் ஆகிய கோவில்களை கண்டு தரிசனம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. இதற்கான கட்டணம் ரூ.800.
இதே போல மதுரையில் உள்ள அம்மன் கோவில்கள் ஒருநாள் சுற்றுலாவிற்கு ரூ.1,400, திருச்சியில் கோவில்களை தரிசிக்க ரூ.1100 கட்டணம் நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. தஞ்சாவூர் பகுதியில் உள்ள அம்மன் கோவில் சுற்றுலாவிற்கு ரூ.1,400 கட்டணமாகும். இந்த சுற்றுலாக்களில் பயணிக்கும் அனைவருக்கும் மதிய உணவு, அனைத்து கோவில்களின் பிரசாதம் மற்றும் சிறப்பு விரைவு தரிசனம் காண ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.
இது தவிர தமிழகத்தின் முக்கிய நகரங்களில் அமைந்துள்ள அம்மன் கோவில்களை ஆன்மீக சுற்றுலா பயணிகள் தரிசிக்கும் வகையில் 5 நாட்கள் 108 அம்மன் கோவில்கள் சுற்றுலா ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. ஆடி மாத அமாவாசை தினத்தையொட்டி 3 நாட்கள் ராமேஸ்வரம் சுற்றுலாவிற்கும் முன்பதிவு தொடங்கப்பட்டு உள்ளது.
ஆன்மீக சுற்றுலாக்களுக்கு https://ttdconline.com/ என்ற இணையதளத்தில் பதிவு செய்யவும். மேலும் விவரங்களுக்கு 18004253111, 044-25333333, 044-25333444 என்ற தொலைபேசியில் தொடர்பு கொண்டு தெரிந்து கொள்ளலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- யாகசாலையில் 64 ஓதுவார்கள் மூலம் திருப்புகழ், பன்னிரு திருமுறைகள் உள்ளிட்ட செந்தமிழ் வேதங்கள் ஒலிக்கும்.
- கும்பாபிஷேகம் முடிந்த பிறகு 1 லட்சம் பக்தர்களுக்கு பிரசாதம் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
திருச்செந்தூர்:
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் 15 ஆண்டுகளுக்கு பிறகு மகா கும்பாபிஷேக விழா வருகிற 7-ந்தேதி நடக்கிறது. இதை முன்னிட்டு நேற்று முன்தினம் தக்கார் அருள் முருகன் மற்றும் கோவில் இணை ஆணையர் ஞான சேகரனிடம் சிவாச்சாரியார்கள் குடமுழுக்கு தாம்பூலம் பெறுதல் நடந்தது.
நேற்று காலையில் விநாயகர் வழிபாடு வேள்வி, மாலையில் எண் திசைத் தேவர்கள் வழிபாடு திசா சாந்தி வேள்வி நடந்தது. இன்று காலையில் நவக்கிரக வேள்வி, மாலையில் கும்பாபிஷேக விழா சிறப்பாக நடைபெற வேண்டி தேவதை வழிபாடு நடக்கிறது.
வருகிற 1-ந்தேதி முதல் கால யாகசாலை பூஜையுடன் விழா தொடங்குகிறது. 12 கால யாக பூஜைகள் நடக்கிறது. இதற்காக 2 இடங்களில் பிரம்மாண்டமான வகையில் யாகசாலைகள் அமைக்கப்பட்டு வருகின்றன. நந்தி, மயில் அலங்காரத்துடன் யாககுண்டம் அமைந்துள்ள பகுதிகள் தங்கநிறத்தில் வடிவமைக்கப்பட்டுள்ளது. கோவில் கிரி பிராகாரத்திலுள்ள மரங்கள் உள்ளிட்ட இடங்களில் அலங்கார விளக்குகள் தொடங்க விடப்பட்டுள்ளன.
7-ந் தேதி அதிகாலை 4 மணிக்கு 12-ம் கால யாக வழிபாடு நடைபெற்று காலை 6.15 மணிக்கு மேல் 6.50மணிக்குள் விமான கலசங்களுக்கு புனித நீர் ஊற்றப்பட்டு பின்னர் 20 இடங்களில் டிரோன்கள் மூலம் புனித நீர் தெளிக்கப்பட உள்ளது.
கும்பாபிஷேகத்திற்கு முந்தைய நாள் (6-ந்தேதி) மதியத்தில் இருந்து மறுநாள் 7-ந் தேதி மதியம் வரை பக்தர்கள் சுவாமி மூலவரை தரிசனம் செய்ய அனுமதி இல்லை. மதியத்திற்கு பிறகுதான் மூலவரை தரிசிக்க அனுமதிக்கப்படுவார்கள் என கோவில் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. வழக்கம் போல் சுவாமி சண்முகரை தரிசனம் செய்யலாம்.
யாகசாலையில் 64 ஓதுவார்கள் மூலம் திருப்புகழ், பன்னிரு திருமுறைகள் உள்ளிட்ட செந்தமிழ் வேதங்கள் ஒலிக்கும்.
கும்பாபிஷேக விழாவில் கலந்து கொள்ள வருகைதரும் பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளான சாலை வசதிகள் பொதுப்பணித்துறை சார்பில் செய்யப்பட்டுள்ளது.
ஒரே நேரத்தில் 1,500 பஸ்கள் நிறுத்தும் வகையில் 3 தற்காலிக பஸ் நிறுத்தம் அமைக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே 400 பஸ்கள் திருச்செந்தூர் வந்து செல்கின்றன. அதனுடன் சேர்த்து மொத்தம் 855 சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளது. மேலும் தனியார் வாகனங்கள் நிறுத்த 18 வாகனங்கள் நிறுத்தும் இடங்கள் அமைக்கப்பட்டுள்ளது. அதில் கழிப்பிடம், குடிநீர் வசதி செய்யப்பட்டுள்ளது. 30 இடங்களில் குடிநீர் வசதி செய்யப்பட்டுள்ளது
மேலும் கூடுதலாக பல்வேறு இடங்களில் பக்தர்கள் வசதிக்காக 824 தற்காலிக கழிப்பிட வசதிகள் அமைக்கப்பட உள்ளது. சுகாதார பணியாளர்கள், பாதுகாப்பு பணியாளர்கள், தீயணைப்பு வீரர்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர்.
சுமார் 6 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர். 100 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு கண்காணிக்கப்பட உள்ளது.
ஜூலை 1-ந் தேதியில் இருந்து 7-ந் தேதி வரை தொடர்ந்து 100-க்கும் மேற்பட்ட ஆன்மீக சொற்பொழிவாளர்கள் மூலம் கலாச்சாரம் மற்றும் ஆன்மீக நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளது.
60 அகன்ற எல்.இ.டி.திரை மூலம் வாகன நிறுத்தும் இடங்கள், பஸ் நிறுத்தும் இடங்களில் நேரடி ஒளிபரப்பு செய்யப்பட உள்ளது.
ஜூலை 1-ந் தேதி முதல் 7-ந் தேதி வரை கோவில் நிர்வாகம் சார்பில் 20 இடங்களில் அறுசுவை உணவுடன் அன்னதானம் வழங்கப்படுகிறது.
கும்பாபிஷேகம் முடிந்த பிறகு 1 லட்சம் பக்தர்களுக்கு பிரசாதம் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஏற்பாடுகளை கோவில் தக்கார் அருள் முருகன், இணை ஆணையர் ஞான சேகரன் மற்றும் கோவில் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.
- பெற்றோருக்கு முறையாக தகவல் தெரிவிக்காமல் வீட்டுக்கு மாணவனை அனுப்பி வைத்துள்ளனர்.
- பலத்த காயமடைந்த மாணவனுக்கு கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
சென்னை:
சென்னை சேத்துப்பட்டில் உள்ள மாநகராட்சி உயர்நிலைப்பள்ளியில் எம்.எஸ்.நகரில் வசித்து வரும் பாலாஜி என்பவரின் மகன் 8-ம் வகுப்பு படித்து வருகிறான்.
இந்த பள்ளியில் கடந்த 25-ந் தேதி வேதியியல் ஆய்வகத்தை சுத்தம் செய்யும் பணியில் பள்ளி ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர். அப்போது இந்த பணியில் பள்ளி மாணவ- மாணவிகளும் ஈடுபடுத்தப்பட்டு இருக்கிறார்கள்.
அப்போது பாலாஜியின் மகனான 8-ம் வகுப்பு மாணவனும் ஆய்வகத்தை சுத்தம் செய்யும் பணியில் ஈடுபடுத்தப்பட்டு இருக்கிறான்.
அப்போது பள்ளி ஆசிரியர்கள் சிலர் ஆய்வகத்தில் இருந்த ரசாயன பாட்டில்களை சாக்கு மூட்டையில் கட்டி தனியாக கழிவறையில் வைத்திருந்தனர்.
இந்த மூட்டையை தூக்கிச் சென்று வெளியில் வைக்குமாறு 8-ம் வகுப்பு மாணவனிடம் பள்ளி ஆசிரியர்கள் கூறியுள்ளனர்.
இதைத்தொடர்ந்து மாணவன் அந்த மூட்டையை தூக்கி தனது தோளில் தொங்கவிட்டபடி வெளியில் சென்றுள்ளான். தன்னால் மூட்டையை தூக்க முடியாது என்று மாணவன் தெரிவித்த போதும் ஆசிரியர்கள் சிலர் வலுக்கட்டாயமாக மூட்டையை தூக்குமாறு கூறியிருக்கிறார்கள்.
அப்போது மூட்டையில் இருந்த ரசாயன பாட்டில்கள் உடைந்துள்ளன.
இதில் மூட்டையில் இருந்த ஆசிட் பாட்டிலும் உடைந்து மாணவனின் உடலில் பின்பகுதியில் கொட்டி உள்ளது. இதனால் பல இடங்களில் பலத்த காயம் ஏற்பட்டு மாணவன் அலறி துடித்துள்ளான்.
பின்னர் பள்ளி வளாகத்தில் வைத்தே மாணவனின் உடலில் ஏற்பட்ட காயத்தை பள்ளி ஊழியர்கள் கழுவி உள்ளனர்.
காயம் ஏற்பட்ட இடத்தில் தேங்காய் எண்ணெயை போட்டு விட்டுள்ளனர். இது பற்றி பெற்றோருக்கு முறையாக தகவல் தெரிவிக்காமல் வீட்டுக்கு மாணவனை அனுப்பி வைத்துள்ளனர்.
இது பற்றி மாணவனின் தாய் சந்தியா சேத்துப்பட்டு போலீசில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரில் பள்ளி நிர்வாகத்தின் மீதும் தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்கள் மீதும் வழக்கு பதிவு செய்து உரிய விசாரணை நடத்த வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளனர்.
இதற்கிடையே பலத்த காயமடைந்த மாணவனுக்கு கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்த விவகாரம் பற்றி மாணவனின் பெற்றோர் கூறும்போது, எங்கள் மகனுக்கு ஏற்பட்ட இந்த நிலைமை வேறு எந்த மாணவனுக்கும் ஏற்பட்டு விடக்கூடாது. இதனை கருத்தில் கொண்டு பள்ளி ஆசிரியர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டனர்.
இதை தொடர்ந்து சேத்துப்பட்டு போலீசார் யாருடைய தவறுதலின் பேரில் மாணவனின் உடலில் ஆசிட் கொட்டி காயம் ஏற்பட்டது என்பது பற்றி விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- சந்துரு ஒரே நேரத்தில் 15 மாத்திரைகளும், நந்த பெருமாள் 7 மாத்திரைகளும், நரேஷ் 3 மாத்திரைகளும் சாப்பிட்டுள்ளனர்.
- நரேஷ், வெற்றி மதன் ஆகியோர் நாங்குநேரி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
களக்காடு:
நெல்லை மாவட்டம் களக்காடு அருகே உள்ள கீழ வடகரை இந்திரா காலனியை சேர்ந்தவர் பாலன். இவரது மகன் சந்துரு(வயது 12).
அதே பகுதியை சேர்ந்தவர்கள் மாரியப்பன் மகன் நந்த பெருமாள் (12), கீழ பத்தையை சேர்ந்த மாரியப்பன் மகன் நரேஷ் (12), ஜீவா மகன் வெற்றி மதன் (12). இவர்கள் 4 பேரும் கீழ பத்தையில் உள்ள ஒரு பள்ளியில் 7-ம் வகுப்பு படித்து வருகின்றனர்.
இந்நிலையில் நேற்று பள்ளிக்கு மருத்துவக்குழுவினர் சென்று மாணவ-மாணவிகளை பரிசோதனை செய்தனர். அப்போது சத்து குறைபாடு உள்ள மாணவர்களுக்கு சத்து மாத்திரைகள் வழங்கப்பட்டன. இதுபோல சந்துரு, நந்த பெருமாள், நரேஷ், வெற்றி மதன் ஆகியோருக்கும் மருத்துவ குழுவினர் சத்து மாத்திரைகள் வழங்கினர்.
இந்நிலையில் மாலை இடைவேளையின்போது 4 பேரும் விளையாட்டுக்காக யார் சத்து மாத்திரையை அதிகளவில் சாப்பிடுவது என்று போட்டி வைத்ததாக கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து சந்துரு ஒரே நேரத்தில் 15 மாத்திரைகளும், நந்த பெருமாள் 7 மாத்திரைகளும், நரேஷ் 3 மாத்திரைகளும், வெற்றி மதன் 4 மாத்திரைகளும் சாப்பிட்டுள்ளனர்.
பின்னர் 4 பேரும் தங்களது வீடுகளுக்கு சென்று விட்ட நிலையில், வீட்டிற்கு சென்றதும் 4 பேருக்கும் உடல்நிலை பாதிக்கப்பட்டது. கடும் வயிற்று வலியும் ஏற்பட்டது.
இதனால் பதறிய பெற்றோர்கள் 4 பேரையும் நாங்குநேரி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கிருந்து சந்துரு, நந்த பெருமாள் ஆகியோர் மேல் சிகிச்சைக்காக நெல்லை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். நரேஷ், வெற்றி மதன் ஆகியோர் நாங்குநேரி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதுகுறித்து களக்காடு போலீசாரும் விசாரணை நடத்தி வருகின்றனர். விளையாட்டாக அதிக அளவில் சத்து மாத்திரை சாப்பிட்ட மாணவர்களுக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்ட சம்பவம் களக்காட்டில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.






