என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

மாமனார், மாமியாரை மதிக்க கற்றுக்கொள்ள வேண்டும்- மணமக்களுக்கு அறிவுரை வழங்கிய சவுமியா அன்புமணி
- திருவதிகை வீரட்டானேஸ்வரர் கோவிலில் சவுமியா அன்புமணி சாமி தரிசனம் செய்தார்.
- ஒரே குடும்பமாக வாழ வேண்டும்.
பா.ம.க.வில் ராமதாசுக்கும் அன்புமணிக்கும் இடையே நிலவி வரும் மோதல் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அன்புமணி மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டு முன்வைத்து வரும் ராமதாஸ், சவுமியாவையும் விமர்சித்து இருந்தார். இது அரசியல் மட்டுமின்றி ராமதாஸ் குடும்பத்திலும் சர்ச்சையை ஏற்படுத்தியது. சமீபத்தில் நடைபெற்ற ராமதாசின் 60-வது மணிவிழாவில் அன்புமணியின் குடும்பத்தினர் பங்கேற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில், கடலூர் மாவட்டம் பண்ருட்டி அடுத்த காடாம்புலியூரில் பா.ம.க. பிரமுகர் இல்ல திருமண நிகழ்ச்சியில் சவுமியா அன்புமணி கலந்து மணமக்களை வாழ்த்தினார். இதையடுத்து பேசிய சவுமியா அன்புமணி, திருமணமாகும் மணப்பெண்கள் மாமனார் மற்றும் மாமியாரை மதிக்க கற்றுக்கொள்ள வேண்டும். ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்து வாழ வேண்டும். ஒரே குடும்பமாக வாழ வேண்டும் என மணமக்களுக்கு அறிவுரை வழங்கினார்.
இதையடுத்து, பண்ருட்டி திருவதிகை வீரட்டானேஸ்வரர் கோவிலில் பா.ம.க. தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாசின் மனைவி சவுமியா அன்புமணி சாமி தரிசனம் செய்தார். அவரை பா.ம.க. நிர்வாகிகள் வரவேற்றனர். கோவிலின் 2-ம்நிலை ராஜகோபுரம் அருகில் அவருக்கு அர்ச்சகர்கள் கும்ப மரியாதை அளித்தனர். பின்னர் மூலவர் வீரட்டானேஸ்வரர் சுவாமியை பயபக்தியுடன் தரிசனம் செய்தார். திருவிளக்கு ஏற்றி, சிறப்பு அர்ச்சனை செய்து சாமி கும்பிட்டார்.






