என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Aliyar dam"

    • ஆழியாறு ஆற்றங்கரையோரத்தில் வசிக்கும் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கையும் விடப்பட்டுள்ளது.
    • தற்போது 2-வது முறையாக நிரம்பி உபரி நீர் வெளியேற்றப்பட்டுள்ளது.

    பொள்ளாச்சி:

    கோவை மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலையில் அமைந்துள்ள பரம்பிக்குளம் ஆழியாறு பாசன திட்டத்தில் உள்ள தொகுப்பு அணைகளில் ஆழியாறு அணையும் ஒன்று.

    இந்த அணையில் இருந்து புதிய ஆயக்கட்டு, பழைய ஆயக்கட்டு மற்றும் கேரள மாநிலத்தில் சித்தூர் தாலுகா பகுதிகளுக்கு பாசனத்திற்கு நீர் வழங்கப்படுகிறது.

    ஆழியார் ஆறு பொள்ளாச்சி, ஆனைமலை, கிணத்துக்கடவு, கோவை பகுதிகளில் முக்கிய குடிநீர் ஆதாரமாகவும் உள்ளது. இந்த நிலையில் அணையின் நீர்பிடிப்பு பகுதிகளில் கடந்த சில நாட்களாக தென்மேற்கு பருவமழை தொடர்ந்து பெய்து வருகிறது.

    ஆழியார் அணையின் நீர்பிடிப்பு பகுதிகளான மேல் ஆழியாறு, நவமலை, காடம்பாறை மற்றும் சர்க்கார்பதி பகுதிகளில் பெய்து வரும் கனமழையால் நவமலை ஆறு, கவியருவி மற்றும் வனப்பகுதியில் உள்ள சிற்றாறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

    இதனால் ஆழியார் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து வந்தது. அணையின் நீர்மட்டம் கடந்த சில நாட்களாக வேகமாக உயர்ந்து வந்தது. நேற்று காலை அணைக்கு வினாடிக்கு 1600 கனஅடி நீர் வரத்து இருந்ததால் அணையின் நீர்மட்டம் 119 அடியாக உயர்ந்தது.

    தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்ததால் பாதுகாப்பு கருதி அணையின் 5 மதகுகளும் திறக்கப்பட்டு வினாடிக்கு 1000 கனஅடி உபரிநீர் வெளியேற்றப்பட்டது.

    இதையடுத்து ஆழியாறு ஆற்றங்கரையோரத்தில் வசிக்கும் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கையும் விடப்பட்டுள்ளது. மேலும் மக்கள், கால்நடைகளை ஆற்றின் கரையோரத்தில் மேய்ச்சலுக்கு விடுவது, ஆற்றில் இறங்கி குளிப்பது மற்றும் துணி துவைப்பது ஆகியவற்றில் ஈடுபடக்கூடாது என எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

    நீர்வளத்துறை அதிகாரிகள் அணையின் நீர்வரத்தை தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர். ஏற்கனவே கடந்த மாதம் ஆழியார் அணை நிரம்பி 11 மதகுகள் வழியாக உபரிநீர் வெளியேற்றப்பட்ட நிலையில் தற்போது 2-வது முறையாக நிரம்பி உபரி நீர் வெளியேற்றப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 

    • ஆழியாறு அணையில் இருந்து 11 மதகுகள் வழியாக 4,151 கன அடி உபரிநீர் வெளியேற்றப்படுகிறது.
    • ஆற்றுப்பகுதிக்கு செல்ல வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

    மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் கடந்த மே மாத இறுதியில் தொடங்கிய தென்மேற்கு பருவமழை விடாது கொட்டி தீர்த்து வருகிறது. மேலும் பி.ஏ.பி. அணைகளின் நீர்ப்பிடிப்பு பகுதிகளிலும் பலத்த மழை பெய்கிறது. தொடர்ந்து பெய்து வரும் கன மழையின் காரணமாக சோலையாறு அணை முழுகொள்ளளவை எட்டியதை தொடர்ந்து உபரிநீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. மேலும் பரம்பிக்குளம், ஆழியாறு அணைகளும் முழு கொள்ளளவை எட்டின.

    ஆழியாறு அணைக்கு நேற்று காலை 8 மணி நிலவரப்படி நீர்வரத்து வினாடிக்கு 1,763 கன அடியாக இருந்தது. பாதுகாப்பு கருதி வினாடிக்கு 1,763 கன அடி நீர் 11 மதகுகள் வழியாக ஆழியாற்றில் திறந்து விடப்பட்டது. மதியம் 1 மணி நிலவரப்படி அணைக்கு வினாடிக்கு 2,677 கன அடியாக நீர்வரத்து அதிகரித்தது. இதையடுத்து வினாடிக்கு 2,518 கன அடி உபரிநீர் வெளியேற்றப்பட்டது. இதன் காரணமாக ஆழியாற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது.

    இந்நிலையில், ஆழியாறு அணையில் இருந்து 11 மதகுகள் வழியாக 4,151 கன அடி உபரிநீர் வெளியேற்றப்படுகிறது.

    ஆழியாறு அணையில் இருந்து 4,151 கனஅடி நீர் வெளியேற்றப்படும் நிலையில் ஆற்றுப்பகுதிக்கு செல்ல வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

    அம்பராம்பாளையம், ஆனைமலை, ஆத்து பொள்ளாச்சி, காளியப்பா கவுண்டன்புதூர் பகுதி மக்களுக்கு மாவட்ட நிர்வாகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

    • அணையின் நீர்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து பெய்து வரக்கூடிய மழையால் அணைக்கு நீர்வரத்து அதிகரித்தபடியே இருந்து வருகிறது.
    • ஆழியார் அணையின் மூலமாக பாசன வசதி பெற்று வரும் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    பொள்ளாச்சி:

    கோவை மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக பரவலாக மழை பெய்து வருகிறது.

    குறிப்பாக மேற்கு தொடர்ச்சி மலையடிவார பகுதிகளான வால்பாறை, பொள்ளாச்சி சுற்றுவட்டார பகுதிகளில் கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. மழையுடன் சூறாவளி காற்றும் வீசுகிறது.

    இந்த மழை காரணமாக வால்பாறை மற்றும் பொள்ளாச்சி பகுதிகளில் உள்ள ஒடைகள், நீர்நிலைகள் அனைத்தும் வேகமாக நிரம்பி வருகின்றன.

    பொள்ளாச்சி அடுத்து ஆழியாரில் ஆழியார் அணை உள்ளது. இந்த அணையின் உயரம் 120 அடியாகும். அணையின் நீர்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து பெய்து வரக்கூடிய மழையால் அணைக்கு நீர்வரத்து அதிகரித்தபடியே இருந்து வருகிறது.

    இன்று காலை நிலவரப்படி ஆழியார் அணையின் நீர்மட்டம் 110.70 அடியாக உயர்ந்துள்ளது. அணைக்கு வினாடிக்கு 1,861 கன அடி நீர்வரத்து உள்ளது. அணையில் இருந்து வினாடிக்கு 161 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.

    தொடர்ந்து மழை பெய்து வருவதன் காரணமாக ஆழியாறு அணை விரைவில் தனது முழு கொள்ளளவையும் எட்டிவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    அணையின் நீர்மட்டம் வேகமாக நிரம்பி வருவதால் ஆழியார் அணையின் மூலமாக பாசன வசதி பெற்று வரும் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    ஆழியார் அணைக்கு தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து, அணையின் நீர்மட்டமும் உயர்ந்து வருவதால், ஆழியாறு அணையின் நீர் கொள்ளளவைப் பொறுத்து, கரையோர மக்களுக்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து அறிவிப்பு வெளியாகலாம் என தெரிகிறது.

    • 4 இடங்களில் எச்சரிக்கை பலகை வைக்கப்பட்டு உள்ளது.
    • தடுப்பணைக்கு சுற்றுலா பயணிகள் செல்வதை தடுக்க கம்பி வேலி அமைக்கப்பட உள்ளது.

    பொள்ளாச்சி:

    பொள்ளாச்சி அருகே உள்ள ஆழியாறு அணைக்கு எதிரே பள்ளிவிளங்கால் தடுப்பணை உள்ளது. அணையில் இருந்து தடுப்பணை வழியாக பாசனத்திற்கும், குடிநீர் தேவைக்கும் தண்ணீர் திறக்கப்படுகிறது.

    ஆழியாறு வரும் சுற்றுலாபயணிகள் தடுப்பணையில் இறங்கி குளிக்கிறார்கள். இதனால் உயிரிழப்புகள் ஏற்படுகின்றன. இதன் காரணமாக ஆறு மற்றும் தடுப்பணையில் குளிக்க தடை விதிக்கப்பட்டு உள்ளது.

    இந்தநிலையில் கடந்த 3 நாட்களுக்கு முன்பு தடையை மீறி குளித்த சென்னையைச் சேர்ந்த கல்லூரி மாணவர்கள் 3 பேர் நீரில் மூழ்கி பரிதாபமாக இறந்தனர். இதையடுத்து தடுப்பணையில் சுற்றுலாபயணிகள் குளிப்பதை தடுக்க ஊழியர்கள் நியமிக்கப்பட்டு கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். மேலும் எச்சரிக்கை பலகையும் வைக்கப்பட்டு உள்ளது.

    இதுகுறித்து நீர்வளத்துறை அதிகாரிகள் கூறியதாவது:-

    ஆழியாறு வரும் சுற்றுலா பயணிகள் தடுப்பணை, அணைக்குள் இறங்கி குளிக்கின்றனர். ஏற்கனவே அணை, தடுப்பணையில் குளிக்க தடை விதிக்கப்பட்டு உள்ளது. இருப்பினும் தடையை மீறி செல்வதால் உயிரிழப்புகள் ஏற்படுகின்றன.

    3 மாணவர்கள் பலியானதை தொடர்ந்து தடுப்பணை, அணை பகுதிகளில் ஊழியர்கள் நியமிக்கப்பட்டு கண்காணிப்பு பணி நடந்து வருகிறது. மேலும் ஆழியாறு அறிவுத்திருக்கோவிலுக்கு எதிரே உள்ள பகுதி, பாலம், பள்ளி விளங்கால் தடுப்பணைக்கு செல்லும் பகுதி, தடுப்பணை என 4 இடங்களில் எச்சரிக்கை பலகை வைக்கப்பட்டு உள்ளது. இங்கு வரும் சுற்றுலா பயணிகளுக்கு ஆபத்து குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. மேலும் தடுப்பணைக்கு சுற்றுலா பயணிகள் செல்வதை தடுக்க கம்பி வேலி அமைக்கப்பட உள்ளது. இதற்கான நிதி அரசிடம் பெறப்பட்டு விரைவில் பணிகள் தொடங்கும்.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.

    • அணை கட்டுவதற்கு முன் இந்த வழித்தடத்தில் மழை காலத்தில் நீர்வரத்து அதிகமாக இருக்கும்.
    • நீர்மட்டம் குறையும் போது, ஆங்கிலேயர் காலத்து பாலம், சாலை வெளியே தெரியும்.

    பொள்ளாச்சி:

    பொள்ளாச்சி அருகே உள்ள ஆழியாறு அணை 120 அடி கொள்ளளவு கொண்டது. இந்த அணையில் இருந்து பாசனத்திற்கும், குடிநீர் தேவைக்கும் தண்ணீர் திறக்கப்படுகிறது. பழைய ஆயக்கட்டு பாசனத்தில் 6,400 ஏக்கரும், புதிய ஆயக்கட்டு பாசனத்தில் 42 ஆயிரம் ஏக்கர் நிலங்களும் பாசன வசதி பெறுகின்றன.

    கடந்த ஆண்டு பெய்த பருவமழையின் காரணமாக அணை அதன் முழு கொள்ளளவை எட்டியது. ஆனால் அதன்பிறகு எதிர்பார்த்தப்படி மழை பெய்யாததால் அணையின் நீர்மட்டம் நாளுக்கு நாள் குறைந்து வருகிறது. மழை பெய்யாததாலும், கோடை காலம் முன் கூட்டியே தொடங்கியதால் அணையின் நீர்மட்டம் குறைந்து வருகிறது. நேற்று காலை 8 மணி நிலவரப்படி அணையின் நீர்மட்டம் 65 அடியாக குறைந்துள்ளது. அணையின் நீர்மட்டம் குறைந்து வருவதால், விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

    அணையின் நீர்மட்டம் குறைந்ததால், ஆங்கிலேயர் காலத்தில் கட்டப்பட்ட பாலம் மற்றும் வால்பாறை செல்வதற்கு போடப்பட்ட தார் சாலை வெளியே தெரிகிறது. தற்போது நீர்மட்டம் சரிவால், ஆங்கிலேயர் காலத்து பாலம் மற்றும் தார் சாலை வெளியே தெரிகின்றன. 100 ஆண்டுகள் கடந்தும் பாலமும், தார் சாலையும் இன்னும் அப்படியே காட்சி அளிக்கின்றன. இவற்றை சுற்றுலா பயணிகள் வால்பாறை சாலையில் நின்று கண்டு ரசித்து செல்கின்றனர்.

    ஆழியாறு அணை கட்டுவதற்கு முன் மலை பகுதியான வால்பாறை செல்வதற்கு 1897-ம் ஆண்டு சாலை அமைக்க ஆங்கிலேயர்கள் முடிவு செய்தது. இதையடுத்து கரடு முரடான மலைப்பாதையில் சாலை அமைக்க லோம் என்பவரை அப்போதைய ஆங்கிலேய அரசு நியமித்தது. அதனைத்தொடர்ந்து 1903-ம் ஆண்டு சாலை பணிகள் முடிந்ததும், சென்னை மகாண கவர்னர் லார்ட் ஆம்பிள் சாலை திறந்து வைத்தார். ஆழியாறில் இருந்து பாரளை வழியாக சிறுகுன்றாவுக்கு சாலை அமைக்கப்பட்டது.

    அணை கட்டுவதற்கு முன் இந்த வழித்தடத்தில் மழை காலத்தில் நீர்வரத்து அதிகமாக இருக்கும். இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டதால், பாலங்கள் அமைக்கப்பட்டது. பாலத்தின் கீழ் பகுதியில் தண்ணீர் செல்ல வழிவகை செய்யப்பட்டது. இந்த பாதையை வால்பாறைக்கு செல்ல மக்கள் பயன்படுத்தி வந்தனர். நாடு சுதந்திரம் பெற்ற பின், காமராஜர் ஆட்சி காலத்தில் பொள்ளாச்சி பகுதி பாசனம் பெறும் வகையில் அணை கட்ட திட்டமிட்டனர். அதன்படி கடந்த 1962-ம் ஆண்டு அணை கட்டப்பட்டது. அணை பகுதியில் ஒரு சில கிராமங்களும், வால்பாறை செல்லும் ரோடு இருந்தது.

    இதையடுத்து வால்பாறை செல்ல மாற்று வழிப்பாதை அமைக்கப்பட்டது. மேலும் அங்கு குடியிருந்த மக்களுக்கும் மாற்று இடம் வழங்கப்பட்டதாக கூறப்படுகிறது. அணை நிரம்பினால், ஆங்கிலேயர் காலத்தில் கட்டப்பட்ட பாலம் தண்ணீர் மூழ்கி விடும். நீர்மட்டம் குறையும் போது, ஆங்கிலேயர் காலத்து பாலம், சாலை வெளியே தெரியும்.

    நீர்வரத்து அதிகரிப்பு காரணமாக பரம்பிக்குளம் மற்றும் ஆழியாறு அணைகளில் இருந்து உபரிநீர் வெளியேற்றப்படுகிறது.
    பொள்ளாச்சி:

    பரம்பிக்குளம் ஆழியாறு பாசன திட்டத்தில் முக்கிய அணையாக பரம்பிகுளம் அணை விளங்குகிறது. 72 அடி உயரமுள்ள பரம்பிக்குளம் அணையில் 17 டி.எம்.சி. தண்ணீரை சேமித்து வைக்க முடியும்.

    கடந்த ஒரு மாதத்துக்கு மேலாக நீர்பிடிப்பு பகுதிகளில் தென்மேற்கு பருவமழை கொட்டி வருவதால் பிஏபி திட்ட அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக பரம்பிக்குளம் அணையின் நீர்மட்டம் 71½ அடியாக உயர்ந்தது.

    தற்போது அணையில் 17 ஆயிரத்து 670 மில்லியன் கன அடி நீர் இருப்பு உள்ளது. தொடர்ந்து மழையின் காரணமாக அணைக்கு வினாடிக்கு 4 ஆயிரத்து 10 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.

    அணையின் நீர்மட்டம் உயர்ந்து தொடர்ந்து நீர்வரத்து இருப்பதால் நேற்று இரவு உபரிநீர் மதகுகள் வழியாக வினாடிக்கு 1200 கனஅடி தண்ணீர் திறந்து விடப்பட்டது.

    இன்று காலை உபரிநீர் திறப்பு வினாடிக்கு 3,500 கன அடி தண்ணீர் அதிகரிக்கப்பட்டது. இந்த தண்ணீர் அடர்ந்த வனப்பகுதிகளை கடந்து கேரளாவில் உள்ள பெருங்கல்குத்து என்ற அணைக்கு செல்கிறது. அந்த அணை நிரம்பிய பின்பு உபரிநீர் திருச்சூர் சென்று அரபிக்கடலில் கலக்கும்.

    இதேபோல் ஆழியாறு அணை 117 அடியை எட்டியது. இதனால் 2-வது முறையாக நேற்று மாலை மதகுகள், பைபாஸ், மின் உற்பத்தி நிலையம், கால்வாய்கள் வழியாக மொத்தம் 2140 கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது. தொடர்ந்து மழை பெய்து வருவதால், உபரிநீர் வெளியேற்றுவது மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளதாகவும், ஆழியாற்றங் கரையோர மக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் எனவும் பொதுப்பணித் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
    ×