search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Parambikulam dam"

    • கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு கிருஷ்ணகிரி அணை மதகு உடைந்தது. 4 ஆண்டுகளுக்கு முன்பு முக்கொம்பு கதவணை பாதிக்கப்பட்டது. தற்போது பரம்பிக்குளம் அணையின் மதகு சேதம் அடைந்து உள்ளது.
    • ஒரு இடத்தில் மதகுகள் உடையும் போதே அனைத்தையும் சீரமைக்க வேண்டும்.

    பொள்ளாச்சி:

    பொள்ளாச்சி அருகே பரம்பிக்குளம் அணையின் மதகு உடைந்து தண்ணீர் வீணாக வெளியேறிக் கொண்டிருக்கிறது. இதுகுறித்து ஓய்வு பெற்ற பி.ஏ.பி. கண்காணிப்பு பொறியாளர் இளங்கோவன் கூறியதாவது:-

    பரம்பிக்குளம் அணையின் மதகிற்கு மேல் உள்ள கான்கிரீட் பிளாக் சேதமடைந்ததால், இரும்பு மதகு சேதம் அடைந்து தண்ணீர் வெளியேறிக் கொண்டிருக்கிறது. இதனால் கேரளாவில் வெள்ளம் ஏற்பட்டு உள்ளதாக கேரள ஊடகங்கள் கூறி வருகின்றன. கடந்த ஓராண்டாக வெள்ள மேலாண்மை பணிகளை கண்காணிக்க சுழற்சி முறையில் என்ஜினீயர்கள் பணிபுரிந்ததால், மதகு உடைப்பு உடனடியாக தெரிந்தது. கண்காணிப்பில் இருந்தபோது தெரிந்ததால் தகவல் உடனே தெரிவிக்கப்பட்டது. கேரளாவிற்கும் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

    அதே நேரத்தில் நடப்பாண்டில் நமக்கு பயன்பட இருந்த 6 டி.எம்.சி. தண்ணீர் வீணாக வெளியேறுவது என்பது வருத்தப்படக்கூடிய ஒன்று. கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு கிருஷ்ணகிரி அணை மதகு உடைந்தது. 4 ஆண்டுகளுக்கு முன்பு முக்கொம்பு கதவணை பாதிக்கப்பட்டது. தற்போது பரம்பிக்குளம் அணையின் மதகு சேதம் அடைந்து உள்ளது. இயற்கையின் பாதிப்புகள் என கூறினாலும், வேறு சில துறை ரீதியான காரணங்களும் இருக்கிறது என நான் கருதுகிறேன்.‌

    அணைகளின் மதகுகளை இயக்கவும், பராமரிக்கவும் பாசன உதவியாளர்கள் இருப்பார்கள். பல்வேறு காரணங்களால் பணியாளர்கள் எண்ணிக்கை குறைந்துவிட்டது. புதிதாக ஆட்களை எடுத்தாலும் முறையான பயிற்சி இல்லை. கோவை மண்டலத்தில் 20-க்கும் மேற்பட்ட அணைகள் உள்ளன. இந்த அணைகளின் மதகுகள் மற்றும் மணற்போக்கி கதவுகளில் ஏற்படும் சிறிய, சிறிய பழுதுகள், ரப்பர்சீலிங் கிரீஸ், சில பெரிய பழுதுகளையும் பார்க்க அரசுத்துறையின் பணிமனை ஆழியாறில் இருந்தது.

    அங்கு பயிற்சி பெற்ற பணியாளர்கள் இருந்தனர். அவர்கள் அவ்வப்போது பழுதுகளை மேற்கொள்வார்கள். ஆழியார் பணிமனையை சீரமைக்க வேண்டும் என ரூ.90 லட்சத்தில் மதிப்பீடு தயார் செய்து அனுப்பினோம்.‌ அது தேவை இல்லை என உயர் மட்டத்தில் முடிவு எடுத்தனர். எந்த பழுதானாலும் ஒப்பந்ததாரரை எதிர்பார்த்து இருக்க வேண்டிய நிலை உள்ளது. பெரிய ஒப்பந்தம் இல்லாமல் அவர்கள் பணி செய்ய மாட்டார்கள்.

    அவசரம் என அழைத்தால் உடனடியாக வந்து சரிசெய்வதற்கான வாய்ப்புகள் குறைவு. அதற்குள் பழுது அதிகமாகிவிடும். எனவே, 10 முதல் 13 ஆண்டுகளுக்கு முன்பு ஆழியாரில் இருந்த பணிமனையை மீண்டும் செயல்படுத்த வேண்டும். ஐ.டி.ஐ. படித்த இளைஞர்களை பணிமனையில் எடுத்து, 6 மாத பயிற்சி கொடுத்து தயார் செய்ய வேண்டும்.

    அணைகள் பாதுகாப்பிற்கு உலக வங்கி திட்டம் கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு வந்தபோது, அணைகளில் உள்ள பணியாளர்களை அதிகப்படுத்த வேண்டும். முறையான பயிற்சியும், தமிழில் வழிகாட்டும் கையேடுகளையும் தர வேண்டும் என வலியுறுத்தினேன். அதுகுறித்து எந்த முடிவும் எடுக்கவில்லை. மலைகளில் உள்ள அணைகளை பராமரிக்க போதிய உதவி பொறியாளர்கள், அவர்களுக்கான பாசன உதவியாளர்களை நியமிக்க வேண்டும்.

    ஷிப்ட் முறையில் பாசன பணியாளர்கள் பணிபுரிய வழிவகை செய்ய வேண்டும். அவர்களுக்கு பயிற்சி அவசியம். இதுபோன்ற அடிப்படையிலான பல முக்கிய அம்சங்களை செய்யாததால், தற்போது மிகப்பெரிய பாதிப்பு ஏற்பட்டு உள்ளது.

    இதை வைத்து கேரளா அணைகளை எங்களுக்கு தாருங்கள் என சாதகமாக பேசக்கூடும். 2 ஆண்டுகளுக்கு ஒருமுறை ஒரு மண்டலத்திற்கு நீர் வரும். இந்த மண்டலத்து விவசாயிகளுக்கு உரிய நீர் கிடைக்காது. ஒரு இடத்தில் மதகுகள் உடையும் போதே அனைத்தையும் சீரமைக்க வேண்டும். உடைந்ததற்கு பல காரணங்கள் இருந்தாலும், அவை அனைத்தும் சரியான மேலாண்மையினால் மாற்ற முடியும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டத்தில் இருந்தாலும் பரம்பிக்குளம் அணையை தமிழக அரசு தான் பராமரித்து வருகிறது.
    • 72 அடி உயரமுள்ள அணையில் 27 அடி வரை தண்ணீர் வடிந்தால் தான் பணிகளை தொடங்க முடியும்.

    பொள்ளாச்சி:

    பரம்பிக்குளம்-ஆழியாறு என்னும் பி.ஏ.பி. திட்டத்தில் அதிக கொள்ளளவு கொண்டது பரம்பிக்குளம் அணை. இந்த அணை கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டத்தில் இருந்தாலும் அணையை தமிழக அரசு தான் பராமரித்து வருகிறது.

    இந்த அணை 17 டி.எம்.சி.க்கு அதிகமாக கொள்ளளவு கொண்டது. நேற்று அதிகாலை செல்ப் வெயிட் கழன்று விழுந்ததில் அணையின் 2-வது மதகு உடைந்து சேதமானது. அதில் இருந்து மளமளவென தண்ணீர் வெளியேறியது.

    அணையின் பாதுகாப்பு கருதி மற்ற 2 மதகுகளும் உடனடியாக திறக்கப்பட்டன. 3 மதகுகள் வழியாக 20 ஆயிரம் கன அடி தண்ணீர் வெளியேறி வீணானது.

    தகவல் அறிந்த நீர்ப்பாசன துறை அமைச்சர் துரைமுருகன், அமைச்சர் செந்தில் பாலாஜி, நீர் பாசன துறை செயலாளர் சந்திப் சக்சேனா, எம்.எல்.ஏ.க்கள் பொள்ளாச்சி ஜெயராமன், கேரள நெம்மாரை எம்.எல்.ஏ. பாபு ஆகியோர் சம்பவ இடத்தை நேரில் பார்வையிட்டனர்.

    இதுபற்றி துரைமுருகன் கூறுகையில் அணையில் மதகு உடைந்து தண்ணீர் வீணாவது வேதனை அளிப்பதாக தெரிவித்தார். மேலும் முதல்-அமைச்சரிடம் இது பற்றி தகவல் தெரிவித்து போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் கூறினார்.

    கோவை மண்டல தலைமை பொறியாளர் முத்துசாமி தலைமையில் பரம்பிக்குளம் அணையில் முகாமிட்டு அதிகாரிகள் அணையை கண்காணித்து வருகின்றனர். இந்த விபத்தில் மதகுக்கு இணையான எடையுள்ள செல்ப் வெயிட், மதகுகளை இயக்கும் சங்கிலிகள், கியர் பாக்ஸ்கள், மதகுகள், கியர் வீல்கள் போன்றவை சேதம் அடைந்துள்ளன. இதுதவிர வேறு என்னென்ன பொருட்கள் சேதம் அடைந்துள்ளது என்பது குறித்தும் அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர்.

    இன்றைய காலை நிலவரப்படி வினாடிக்கு 12 ஆயிரம் கன அடி தண்ணீர் வெளியேறிக் கொண்டிருக்கிறது. 72 அடி உயரமுள்ள அணையில் 27 அடி வரை தண்ணீர் வடிந்தால் தான் பணிகளை தொடங்க முடியும். அதாவது அணையின் மட்டம் 45 அடி உயரம் வரை தண்ணீர் வடிய வேண்டும். தண்ணீரின் அளவு குறைய குறைய தண்ணீரின் வேகம் குறைவதால் மதகுகள் மட்டத்திற்கு அதாவது அணை 45 அடியை அடைய இன்னும் 10 நாட்கள் வரை ஆகலாம் என்று கருதப்படுகிறது.

    அதற்குப் பிறகுதான் பணிகளை தொடங்க முடியும். கோவை மண்டல தலைமை பொறியாளர் உள்பட அதிகாரிகள் அறிக்கை தயாரித்து அரசுக்கு அனுப்ப உள்ளனர். சீரமைப்பு பணிகள் செய்து முடிக்க தண்ணீர் வடிந்த பிறகு ஒரு மாதத்திற்கு மேல் ஆகும் வாய்ப்பு உள்ளது.

    அணை 27 அடிக்கு நீர்மட்டம் குறையும் போது 5.8 டி.எம்.சி. தண்ணீர் வீணாகிவிடும். அதனால் இந்த ஆண்டு பாசனத்திற்கு சற்று பாதிப்பு இருக்கும் வாய்ப்பு உள்ளதாகவே கருதப்படுகிறது.

    இருந்த போதும் அதிகாரிகள் மற்ற அணைகள் நிரம்பி உள்ளதால் அதில் உள்ள தண்ணீரை திருமூர்த்தி அணை பாசனத்திற்கு வழங்கி தண்ணீர் பற்றாக்குறை ஏற்படாமல் இருக்க திட்டமிட்டு அதற்கான பணிகளை செய்ய உள்ளதாக தெரிவித்துள்ளனர்.

    நீர்வரத்து அதிகரிப்பு காரணமாக பரம்பிக்குளம் மற்றும் ஆழியாறு அணைகளில் இருந்து உபரிநீர் வெளியேற்றப்படுகிறது.
    பொள்ளாச்சி:

    பரம்பிக்குளம் ஆழியாறு பாசன திட்டத்தில் முக்கிய அணையாக பரம்பிகுளம் அணை விளங்குகிறது. 72 அடி உயரமுள்ள பரம்பிக்குளம் அணையில் 17 டி.எம்.சி. தண்ணீரை சேமித்து வைக்க முடியும்.

    கடந்த ஒரு மாதத்துக்கு மேலாக நீர்பிடிப்பு பகுதிகளில் தென்மேற்கு பருவமழை கொட்டி வருவதால் பிஏபி திட்ட அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக பரம்பிக்குளம் அணையின் நீர்மட்டம் 71½ அடியாக உயர்ந்தது.

    தற்போது அணையில் 17 ஆயிரத்து 670 மில்லியன் கன அடி நீர் இருப்பு உள்ளது. தொடர்ந்து மழையின் காரணமாக அணைக்கு வினாடிக்கு 4 ஆயிரத்து 10 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.

    அணையின் நீர்மட்டம் உயர்ந்து தொடர்ந்து நீர்வரத்து இருப்பதால் நேற்று இரவு உபரிநீர் மதகுகள் வழியாக வினாடிக்கு 1200 கனஅடி தண்ணீர் திறந்து விடப்பட்டது.

    இன்று காலை உபரிநீர் திறப்பு வினாடிக்கு 3,500 கன அடி தண்ணீர் அதிகரிக்கப்பட்டது. இந்த தண்ணீர் அடர்ந்த வனப்பகுதிகளை கடந்து கேரளாவில் உள்ள பெருங்கல்குத்து என்ற அணைக்கு செல்கிறது. அந்த அணை நிரம்பிய பின்பு உபரிநீர் திருச்சூர் சென்று அரபிக்கடலில் கலக்கும்.

    இதேபோல் ஆழியாறு அணை 117 அடியை எட்டியது. இதனால் 2-வது முறையாக நேற்று மாலை மதகுகள், பைபாஸ், மின் உற்பத்தி நிலையம், கால்வாய்கள் வழியாக மொத்தம் 2140 கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது. தொடர்ந்து மழை பெய்து வருவதால், உபரிநீர் வெளியேற்றுவது மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளதாகவும், ஆழியாற்றங் கரையோர மக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் எனவும் பொதுப்பணித் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
    ×