என் மலர்
உள்ளூர் செய்திகள்
- பாலம் வழியாக பெரும்பாலும் நடந்தும், மோட்டார் சைக்கிளிலும் பொதுமக்கள் சென்று வருவது வழக்கம்.
- குறுக்கே உள்ள நடைபாலத்தை கடந்து செல்ல வேண்டும் என கூகுள் மேப் காட்டியது.
குளித்தலை:
குளித்தலை பஸ் நிலையம் அருகே தென்கரை வாய்க்கால் செல்கிறது. இந்த வாய்க்காலின் மேல் பக்கவாட்டு சுவர் இல்லாத பாலம் ஒன்று உள்ளது.
குளித்தலை நகரப்பகுதியில் இருந்து இந்த பாலம் வழியாக கரூர்-திருச்சி புறவழி தேசிய நெடுஞ்சாலைக்கு செல்பவர்கள் இந்த பாலத்தை பயன்படுத்தி சென்று வருகின்றனர்.
இந்த பாலம் வழியாக பெரும்பாலும் நடந்தும், மோட்டார் சைக்கிளிலும் பொதுமக்கள் சென்று வருவது வழக்கம். இந்நிலையில் தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தைச் சேர்ந்தவர் முகமது (வயது 50). இவர் காரில் கோவை சென்றுவிட்டு மீண்டும் கும்பகோணத்துக்கு நேற்று காரில் திரும்பினார்.
கரூரில் இருந்து திருச்சி செல்லும் வழியில் குளித்தலை அருகே தொழுகை நடத்துவதற்காக கூகுள் மேப் மூலம் பள்ளிவாசலை முகமது தேடியுள்ளார்.
குறுக்கே உள்ள நடைபாலத்தை கடந்து செல்ல வேண்டும் என கூகுள் மேப் காட்டியது. இதையடுத்து, குறுகிய பாலத்தின் வழியே முகமது காரை இயக்கினார்.
இதில் காரின் முன்சக்கரம் பாலத்தின் விளிம்பில் கீழே இறங்கி, அந்தரத்தில் தொங்கியது. வாய்க்காலில் அதிகளவில் தண்ணீர் செல்லும் நிலையில், அங்கிருந்தவர்கள் முகமதுவை காரில் இருந்து பத்திரமாக மீட்டனர்.
வாய்க்கால் தண்ணீரில் கார் கவிழ்ந்து விழாமல் பாலத்தில் தொங்கியபடி நின்றதால் காரில் வந்தவர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். இதையடுத்து கிரேன் மூலம் பாலத்தில் விபத்துக்குள்ளான கார் பத்திரமாக மீட்கப்பட்டது.
- கவின் கடந்த 27-ந்தேதி சுர்ஜித் என்பவரால் வெட்டிக்கொலை செய்யப்பட்டார்.
- கவின் திருவுடலுக்கு மலர் வணக்கம் செலுத்தி, அவரை இழந்து ஆற்ற முடியா துயரத்தில் வாடும் பெற்றோருக்கு சீமான் ஆறுதல் தெரிவித்தார்.
தூத்துக்குடி மாவட்டம் ஏரல் அருகே உள்ள ஆறுமுகமங்கலத்தை சேர்ந்தவர் சந்திரசேகரின் மகனான கவின் செல்வகணேஷ் (27). ஐ.டி. ஊழியரான கவின் கடந்த 27-ந்தேதி பாளை கே.டி.சி. நகர் பகுதியில் வைத்து அதே பகுதியை சேர்ந்த போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் தம்பதியான சரவணன்-கிருஷ்ணகுமாரியின் மகன் சுர்ஜித் (24) என்பவரால் வெட்டிக்கொலை செய்யப்பட்டார்.
இந்த ஆணவக்கொலை சம்பவம் தொடர்பாக பாளையங்கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து சுர்ஜித், அவரது தந்தை சரவணன் ஆகியோரை கைது செய்தனர். இந்த வழக்கு சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்றப்பட்டுள்ளது.
இந்நிலையில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் ஆணவப் படுகொலை செய்யப்பட்ட கவின் குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,
பட்டப்பகலில் வெட்டி ஆணவப் படுகொலை செய்யப்பட்ட தூத்துக்குடி மாவட்டம், ஆறுமுகமங்கலம் கிராமத்தைச் சேர்ந்த மென்பொறியாளர் தம்பி கவின் அவர்களின் இறுதி வணக்க நிகழ்வில் பங்கேற்று, தம்பியின் திருவுடலுக்கு மலர் வணக்கம் செலுத்தி, தம்பியை இழந்து ஆற்ற முடியா துயரத்தில் வாடும் பெற்றோருக்கு ஆறுதல் தெரிவித்து, உரிய நீதியைப் பெற்றுத்தர நாம் தமிழர் கட்சி துணை நிற்கும் என்று உறுதி அளித்தேன்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- சுர்ஜித்தின் சகோதரி சுபாஷினி வெளியிட்ட வீடியோக்கள் பரபரப்பை ஏற்படுத்தியது.
- சுபாஷினியிடம் விசாரிப்பதற்காக சி.பி.சி.ஐ.டி. போலீசார் அவருக்கு சம்மன் அனுப்ப முடிவு செய்துள்ளனர்.
நெல்லை:
தூத்துக்குடி மாவட்டம் ஏரல் அருகே உள்ள ஆறுமுகமங்கலத்தை சேர்ந்தவர் சந்திரசேகர். இவரது மகன் கவின் செல்வகணேஷ் (வயது 27). ஐ.டி. ஊழியர்.
கவின் கடந்த 27-ந்தேதி பாளை கே.டி.சி. நகர் பகுதியில் வைத்து அதே பகுதியை சேர்ந்த போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் தம்பதியான சரவணன்-கிருஷ்ணகுமாரியின் மகன் சுர்ஜித் (24) என்பவரால் வெட்டிக்கொலை செய்யப்பட்டார்.
இந்த ஆணவக்கொலை சம்பவம் தொடர்பாக பாளையங்கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து சுர்ஜித், அவரது தந்தை சரவணன் ஆகியோரை கைது செய்தனர்.
இந்த வழக்கு சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்றப்பட்டுள்ள நிலையில் நேற்று முன்தினம் முதல் கொலை நடந்த இடத்தில் இருந்து அவர்களும் விசாரணையை தொடங்கினர்.
இதனிடையே சுர்ஜித்தின் சகோதரி சுபாஷினி வெளியிட்ட வீடியோக்கள் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் 5 நாட்கள் போராட்டத்திற்கு பின் நேற்று கவின் உடல் அவர்களது உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டு அடக்கம் செய்யப்பட்டது.
இந்நிலையில் சுபாஷினியிடம் விசாரிப்பதற்காக சி.பி.சி.ஐ.டி. போலீசார் அவருக்கு சம்மன் அனுப்ப முடிவு செய்துள்ளனர். இன்று அதற்கான நடவடிக்கையை மேற்கொண்டு வருகின்றனர்.
அவரிடம் விசாரித்தால் தான் இந்த கொலைக்கான முக்கிய விபரங்கள் தெரியவரும் என்ற காரணத்தினால் அவரை விசாரிக்க முடிவு செய்துள்ளனர்.
அதன்படி நாளை மறுநாள் (திங்கட்கிழமை) சுபாஷினி விரும்பும் இடத்திற்கு சி.பி.சி.ஐ.டி. போலீசார் சென்று விசாரணை நடத்துவதற்கு முடிவு செய்துள்ளனர்.
இதனிடையே கைதான சுர்ஜித்தை காவலில் எடுத்து விசாரிக்க தேவையான நடவடிக்கைகளையும் சி.பி.சி.ஐ.டி. போலீசார் மேற்கொண்டு வருகின்றனர். அதற்காக கோர்ட்டில் மனுத்தாக்கல் செய்ய தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
- கோரிக்கைகள் ஏற்றுக்கொள்ளப்பட்டதையடுத்து இரவு மாரி முத்துவின் உடலை பெற்றுக்கொண்டனர்.
- சம்பவம் தொடர்பாக, வனத்துறையினர் மற்றும் அதிகாரிகள் துறை ரீதியான விசாரணை நடத்தினர்.
திருப்பூர்:
திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே உள்ள மேல்குருமலை பழங்குடி கிராமத்தை சேர்ந்தவர் மாரிமுத்து(வயது 58). இவர் புலிப்பல் வைத்திருந்ததாக கூறி, கடந்த 29-ந்தேதி உடுமலை வனத்துறையினர் விசாரணைக்கு அழைத்துச் சென்றனர்.
இந்நிலையில் வனத்துறை அலுவலகத்தில் உள்ள குளியலறையில் மாரிமுத்து தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார் என வனத்துறையினர் தெரிவித்தனர். தகவல் அறிந்த மாரிமுத்துவின் குடும்பத்தினர், உறவினர்கள் மற்றும் கிராமத்தினர் அங்கு திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
வனத்துறையினர் விசாரணை என்ற பெயரில் அடித்து துன்புறுத்தியதால் மாரிமுத்து உயிரிழந்தார் என்று குற்றம் சாட்டினர். போலீசார், வருவாய் துறையினர் சமரச பேச்சுவார்த்தை நடத்தி பிரேத பரிசோதனைக்காக மாரிமுத்து உடலை திருப்பூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
நேற்று காலை உடுமலை மாஜிஸ்திரேட்டு நித்யகலா முன்னிலையில் மருத்துவர் குழுவினர் பிரேத பரிசோதனை நடத்தினர். பிரேத பரிசோதனை முழுமையாக வீடியோ பதிவு செய்யப்பட்டது. உடுமலை ஆர்.டி.ஓ., குமார், டி.எஸ்.பி., நமசிவாயம் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
மருத்துவமனை வளாகத்தில் மாரிமுத்துவின் உறவினர்கள் திரண்டிருந்தனர். அவரது குடும்பத்தினர் அடையாளம் உறுதிப்படுத்திய பின் உடல் பிரேத பரிசோதனை நடந்தது.
பிரேத பரிசோதனை முடிந்த நிலையில் அங்கு திரண்டிருந்த மாரிமுத்துவின் உறவினர்கள், மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சியினர் பிரேத பரிசோதனை கூடம் முன் அமர்ந்து உடலை வாங்க மறுத்து தர்ணாவில் ஈடுபட்டனர்.
அவர்களுடன் போலீசார் மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். மாரிமுத்துவின் உறவினர்கள், பிரேத பரிசோதனை வீடியோ பதிவுகளை வழங்க வேண்டும். இந்த வழக்கை வன்கொடுமை சட்டத்தில் சேர்க்க வேண்டும். சி.பி.சி.ஐ.டி. விசாரணை நடத்த வேண்டும் என தர்ணாவில் ஈடுபட்டவர்கள் கோரிக்கை விடுத்தனர்.
கோரிக்கைகள் ஏற்றுக்கொள்ளப்பட்டதையடுத்து இரவு மாரி முத்துவின் உடலை பெற்றுக்கொண்டனர்.
இதனிடையே இந்த சம்பவம் தொடர்பாக, வனத்துறையினர் மற்றும் அதிகாரிகள் துறை ரீதியான விசாரணை நடத்தினர். இதையடுத்து ஆனைமலை புலிகள் காப்பகம், உடுமலை வனச்சரக வனவர் நிமல் குமார், வனக்காவலர் செந்தில்குமார் ஆகியோரை சஸ்பெண்டு செய்து திருப்பூர் மாவட்ட வன அலுவலர் ராஜேஷ்குமார் உத்தரவிட்டுள்ளார்.
- ஜப்பான் நாட்டின் தேசிய மலரான செர்ரி மரங்கள், நீலகிரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் அதிகளவு காணப்படுகிறது.
- மரங்களில் செர்ரி மலர்கள் ஆகஸ்ட் மாதம் முதல் டிசம்பர் மாதம் வரை பூத்து குலுங்கும்.
கோத்தகிரி:
சுற்றுலாவாசிகளின் சொர்க்க பூமியான நீலகிரி மாவட்டத்தில் பல்வேறு நாடுகளில் காணப்படும் மரங்கள், அரிய வகை மலர்செடிகள் மற்றும் மூலிகை செடிகள் ஆகியவை அதிகளவில் காணப்படுகிறது. ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில் வெளிநாடுகளில் இருந்து பல்வேறு தாவர நாற்றுகளை நீலகிரிக்கு கொண்டு வந்து பயிரிட்டனர்.
ஐரோப்பிய நாடுகளான ஆஸ்திரேலியா, ஜப்பானில் நிலவும் காலநிலை இங்கும் நிலவுவதால், அந்த நாடுகளில் காணப்படும் மரங்கள், தாவரங்கள் மற்றும் மலர்கள் ஆகியவை அதிகளவில் நடவு செய்யப்பட்டன.
அதிலும் குறிப்பாக ஜப்பான் நாட்டின் தேசிய மலரான செர்ரி மரங்கள், நீலகிரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் அதிகளவு காணப்படுகிறது. அவை தற்போது கொத்து-கொத்தாக பூத்து குலுங்க தொடங்கி உள்ளது.
2-வது சுவிட்சர்லாந்து என்று அழைக்கப்படும் கோத்தகிரி பகுதியில் அதிகமான குளிர் நிலவுவதால், இங்கு செர்ரி வகை பூ மரங்கள் நீரோடைகள் உள்ளிட்ட பகுதிகளில் அதிகமாக காணப்படுகிறது.
நீலகிரி மாவட்டத்தில் அக்டோபர் மாதம் தொடங்கி பனிக்காலம் வரை சாலையோரங்களில் அழகாக இலைகள் இன்றி நிற்கும் மரங்களில் செர்ரி மலர்கள் ஆகஸ்ட் மாதம் முதல் டிசம்பர் மாதம் வரை பூத்து குலுங்கும்.
கோத்தகிரி பகுதியில் செர்ரி வகை பூ மரங்கள் அதிகமாக இருப்பதால், இங்கு வரும் சுற்றுலா பயணிகள் இந்த மரங்களின் முன்பாக குடும்பத்தினருடன் நின்று செல்போனில் பரவசத்துடன் புகைப்படம் எடுத்து செல்கின்றனர்.
- என்னை பொறுத்தவரை அரசின் திட்டங்களை ஒவ்வொரு தனிநபரையும் சென்றடைய வேண்டும்.
- கிராமப்புறங்களில் உள்ள ஏழைகளுக்கும் சிறந்த மருத்துவம் கிடைக்க வேண்டும்.
சென்னை:
'நலம் காக்கும் ஸ்டாலின்' மருத்துவ முகாம் என்ற புதிய திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இதையடுத்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:-
* உடல் நலமாக இருந்தால் தான் மகிழ்ச்சியோடு வாழ முடியும்.
* இன்று தொடங்கப்பட்ட நலம் காக்கும் ஸ்டாலின் திட்டத்தில் மாற்றுத்திறனாளி, மனநல பாதிப்பு, இதய நோயாளிகளுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.
* எந்த ஒரு திட்டம் கொண்டு வந்தாலும் அதில் ஒருவர் கூட விடுபடக்கூடாது என்பது தான் எங்களது நோக்கம்.
* என்னை பொறுத்தவரை அரசின் திட்டங்களை ஒவ்வொரு தனிநபரையும் சென்றடைய வேண்டும்.
* கிராமப்புறங்களில் உள்ள ஏழைகளுக்கும் சிறந்த மருத்துவம் கிடைக்க வேண்டும்.
* நகர்ப்புறங்களில் கிடைக்கும் மருத்துவ சேவை கிராமப்புற மக்களுக்கும் கிடைக்க வேண்டும் என்ற நோக்கில் புதிய திட்டம்
* மருத்துவமனைக்கு செல்ல முடியாதவர்களுக்கும் மருத்துவ சேவை அளிக்கவே நலன் காக்கும் ஸ்டாலின்
*முகாமிற்கு வருவோரை உங்கள் குடும்பத்தில் ஒருவராக பாவித்து சிகிச்சை வழங்க வேண்டும் என்றும் மருத்துவர்களுக்கு அறிவுரை வழங்கினார்.
- படவேட்டம்மன் கோவில் மற்றும் பஸ் நிலைய பகுதிகளில் அன்புமணி ராமதாஸ் நடைபயணமாக சென்று பொதுமக்கள் மத்தியில் பேசுகிறார்.
- நாளை மாலை வேலூர் வருகிறார் அண்ணாசாலையில் அவர் நடைபயணம் செல்கிறார்.
வேலூர்:
தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் என்ற பெயரில் டாக்டர் அன்புமணி ராமதாஸ் கடந்த 25-ந்தேதி முதல் நடைபயணம் மேற்கொண்டு வருகிறார்.
இன்று மாலை அவர் ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜா வருகிறார். அங்குள்ள படவேட்டம்மன் கோவில் மற்றும் பஸ் நிலைய பகுதிகளில் அன்புமணி ராமதாஸ் நடைபயணமாக சென்று பொதுமக்கள் மத்தியில் பேசுகிறார்.
இதனைத் தொடர்ந்து நாளை காலை 10 மணிக்கு ராணிப்பேட்டை சிப்காட் பகுதியில் உள்ள தனியார் நிறுவன கழிவுகள் கொட்டப்பட்டு வைத்திருக்கும் பகுதியில் நேரடியாக சென்று பார்வையிட்டு ஆய்வு செய்கிறார்.
நாளை மாலை 4 மணிக்கு ஆற்காடு நகரப் பகுதியில் அன்புமணி ராமதாஸ் நடைபயணம் சென்று பொதுமக்கள் மத்தியில் பேசுகிறார். தொடர்ந்து நாளை மாலை வேலூர் வருகிறார் அண்ணாசாலையில் அவர் நடைபயணம் செல்கிறார்.
இதனைத் தொடர்ந்து வருகிற 4-ந்தேதி திருப்பத்தூர் மாவட்டத்தில் அன்புமணி ராமதாஸ் நடைபயணம் செய்து தனது முதல் கட்ட நடைபயணத்தை நிறைவு செய்கிறார். அன்புமணி ராமதாஸ் தனது 2-வது கட்ட சுற்றுப்பயணத்தை 7-ந்தேதி மீண்டும் திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசியில் இருந்து தொடங்குகிறார்.
டாக்டர் அன்புமணி ராமதாஸ் வருகையையொட்டி ராணிப்பேட்டை மாவட்ட பா.ம.க. சார்பில் பிரம்மாண்ட வரவேற்பு அளிக்க ஏற்பாடு செய்துள்ளனர்.
- தி.மு.க. ஆட்சிக்கு வந்த போது கொரோனா உச்சக்கட்டத்தில் இருந்தது.
- கொரோனா காலத்தில் அனைத்து அமைச்சர்களும், சுகாதாரத்துறை அமைச்சர்களாக மாறி பணியாற்றினர்.
சென்னை:
'நலம் காக்கும் ஸ்டாலின்' மருத்துவ முகாம் என்ற புதிய திட்டத்தை சென்னை சாந்தோம் செயின்ட் பீட்ஸ் ஆங்கிலோ இந்தியன் மேல்நிலைப் பள்ளியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இதன்பின் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்,
மருத்துவமனையில் இருந்தபோதும் அரசு பணிகள் தொடர்பாக ஆலோசனை நடத்தினேன். உங்களுடன் ஸ்டாலின் முகாம் எப்படி நடக்கிறது என்பது குறித்த ஆட்சியர்கள், அதிகாரிகளுடன் பேசிக்கொண்டே இருந்தேன்.
நாட்டு மக்களின் நலனே எனது நலன். மருத்துவமனையில் இருந்தாலும் மக்கள் பணி ஆற்றுவதே என் விருப்பம்.
தி.மு.க. ஆட்சிக்கு வந்த போது கொரோனா உச்சக்கட்டத்தில் இருந்தது. கொரோனா காலத்தில் அனைத்து அமைச்சர்களும், சுகாதாரத்துறை அமைச்சர்களாக மாறி பணியாற்றினர்.
கல்விக்காகவும், மருத்துவத்திற்காகவும் பல்வேறு திட்டங்களை தி.மு.க. அரசு கொண்டு வந்துள்ளது. மக்களை தேடி மருத்துவம் திட்டத்தை ஐ.நா. சபையை விருது கொடுத்து பாராட்டி உள்ளது.
என்னை பொறுத்தவரை அரசின் திட்டங்கள் ஒவ்வொரு தனிநபரையும் சென்றடைய வேண்டும். மக்களை சந்தித்தால் தான் எனக்கு உற்சாகம் என்றார்.
- தன்னுடன் பல போராட்டங்களில் பங்கேற்ற மல்லை சத்யா தனக்கு துரோகம் செய்து விட்டதாக வைகோ குற்றம்சாட்டினார்.
- வைகோவை கண்டித்து மல்லை சத்யா இன்று உண்ணாவிரத போராட்டத்தை தொடங்குகிறார்.
ம.தி.மு.க. துணை பொதுச்செயலாளராக இருந்து வரக்கூடிய மல்லை சத்யாவுக்கும், ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ மற்றும் முதன்மை செயலாளர் துரை வைகோவுக்கும் இடையே கருத்து மோதல் அதிகரித்தது.
சமீபத்தில் ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ, விடுதலை புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரனுக்கு மாத்தையா துரோகம் செய்ததை போன்று, தன்னுடன் பல போராட்டங்களில் பங்கேற்ற மல்லை சத்யா தனக்கு துரோகம் செய்து விட்டதாக குற்றம்சாட்டினார்.
இதற்கு பதில் அளித்திருந்த மல்லை சத்யா, தன்னை துரோகி என்று அழைத்ததற்கு பதில், தனக்கு விஷம் கொடுத்திருந்தால், அதை குடித்துவிட்டு இறந்து போயிருப்பேன் என கூறியிருந்தார்.
இதையடுத்து, மக்கள் மன்றத்தில் நீதி கேட்டு ஆகஸ்ட் 2-ம் தேதி சென்னையில் உண்ணாவிரதப் போராட்டம் நடத்த உள்ளதாக மல்லை சத்யா அறிவித்து இருந்தார்.

அதன்படி வைகோவை கண்டித்து மல்லை சத்யா இன்று உண்ணாவிரத போராட்டத்தை தொடங்குகிறார்.
தனது போராட்டத்தை தொடங்கும் முன்னர் அண்ணா, கலைஞர் நினைவிடங்களில் மல்லை சத்யா மரியாதை செலுத்தினார்.
- அணைக்கு வினாடிக்கு 16 ஆயிரத்து 500 கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருந்தது.
- தற்போது அணையில் 93.47 டி.எம்.சி. தண்ணீர் இருப்பு உள்ளது.
சேலம்:
மேட்டூர் அணையின் நீர்மட்டம் இன்று காலை 8 மணி நிலவரப்படி 120 அடியாக இருந்தது. அணைக்கு வினாடிக்கு 16 ஆயிரத்து 500 கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருந்தது.
அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்துக்கு வினாடிக்கு 16 ஆயிரம் கனஅடி தண்ணீரும், கிழக்கு, மேற்கு கால்வாய் பாசனத்துக்கு வினாடிக்கு 500 கனஅடி தண்ணீரும் வெளியேற்றப்பட்டு வருகிறது.
தற்போது அணையில் 93.47 டி.எம்.சி. தண்ணீர் இருப்பு உள்ளது.
- தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல்லுக்கு நேற்று 20 ஆயிரம் கன அடியாக வந்தது.
- மெயின் அருவி, சினிபால்ஸ், ஐந்தருவி உள்ளிட்ட அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது.
ஒகேனக்கல்:
தென்மேற்கு பருவமழை கேரளா, கர்நாடகா மாநில காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கனமழை பெய்தது.
இதனால் கிருஷ்ணராஜசாகர் (கே.ஆர்.எஸ்.) அணையும், கபினி அணையும் நிரம்பின. பாதுகாப்பு கருதி இந்த இரு அணைகளில் இருந்து தமிழக காவிரி ஆற்றில் அதிகளவு தண்ணீர் திறந்து விடப்பட்டு இருந்தது. இதன் காரணமாக தருமபுரி மாவட்டம், ஒகேனக்கல் காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
இந்த நிலையில் தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல்லுக்கு நேற்று 20 ஆயிரம் கன அடியாக வந்தது.
தற்போது கர்நாடகா காவிரி நீர்ப்பிடிப்பு பகுதியில் பெய்த மழை குறைந்தது. இதனால் அங்குள்ள அணைகளுக்கு நீர்வரத்து சரிந்தது. அணைகளின் திறக்கப்பட்ட நீரின் அளவு குறைக்கப்பட்டது.
இதன் காரணமாக இன்றுகாலை 8 மணி நிலவரப்படி நீர்வரத்து 18 ஆயிரம் கனஅடியாக குறைந்து வந்தது. 9 மணி அளவில் நீர்வரத்து 16 ஆயிரம் கனஅடியாக குறைந்தது.
இதனால் மெயின் அருவி, சினிபால்ஸ், ஐந்தருவி உள்ளிட்ட அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது.
நீர்வரத்து குறைந்ததால் மெயின் அருவியில் குளிக்க இன்று மதியம் மாவட்ட நிர்வாகம் அனுமதி அளித்துள்ளது.
சுற்றுலா பயணிகள் பரிசல் பயணம் செய்து காவிரி ஆற்றின் அழகை ரசித்து மகிழ்ந்தனர். பின்னர் அவர்கள் ஆனந்தமாக மெயின் அருவியில் குளித்து மகிழ்ந்தனர்.
அவர்கள் மீன் சாப்பாடு வாங்கி கொண்டு பூங்காவில் அமர்ந்து சாப்பிட்டு மகிழ்ந்தனர்.
காவிரி ஆற்றில் நீர்வரத்தை தமிழக-கர்நாடக எல்லையான பிலிகுண்டுலுவில் மத்திய நீர்வளத்துறை அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.
- தங்கம் விலை இன்று அதிரடியாக உயர்ந்துள்ளது.
- வெள்ளி விலையில் இன்று மாற்றம் இல்லை.
சென்னை:
ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விலை என்ற போக்கில் தங்கம் விலை இருக்கிறது. விலை மாற்றம் இல்லாத நாட்களே இல்லை என்ற வகையில் ஏறுவதும், இறங்குவதுமாக தங்கம் இருந்து வருகிறது. அந்த வகையில் கடந்த திங்கட்கிழமை விலை மாற்றமின்றியும், செவ்வாய்கிழமை சவரனுக்கு ரூ.80 குறைந்தும், புதன்கிழமை சவரனுக்கு ரூ.480 உயர்ந்தும், வியாழக்கிழமை சவரனுக்கு ரூ.320 குறைந்தும், நேற்று சவரனுக்கு ரூ.160 குறைந்து சவரன் ரூ.73,200-க்கும் விற்பனையானது.
இந்த நிலையில் தங்கம் விலை இன்று அதிரடியாக உயர்ந்துள்ளது. கிராமுக்கு 140 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் தங்கம் ரூ.9,290-க்கும், சவரனுக்கு 1,120 ரூபாய் உயர்ந்து ஒரு சவரன் ரூ.74,320-க்கும் விற்பனையாகிறது.
வெள்ளி விலையில் இன்று மாற்றம் இல்லை. ஒரு கிராம் வெள்ளி 123 ரூபாய்க்கும் கிலோவுக்கு இரண்டாயிரம் குறைந்து பார் வெள்ளி 1 லட்சத்து 23 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
கடைசி ஐந்து நாள் தங்கம் விலை நிலவரம்:-
01-08-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.73,200
31-07-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.73,360
30-07-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.73,680
29-07-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.73,200
28-07-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.73,280
கடைசி ஐந்து நாள் வெள்ளி விலை நிலவரம்:-
01-08-2025- ஒரு கிராம் ரூ.123
31-07-2025- ஒரு கிராம் ரூ.125
30-07-2025- ஒரு கிராம் ரூ.127
29-07-2025- ஒரு கிராம் ரூ.126
28-07-2025- ஒரு கிராம் ரூ.126






