என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

ஆணவப்படுகொலைக்கு உரிய நீதியைப் பெற்றுத்தர நாம் தமிழர் கட்சி துணை நிற்கும்- சீமான் உறுதி
- கவின் கடந்த 27-ந்தேதி சுர்ஜித் என்பவரால் வெட்டிக்கொலை செய்யப்பட்டார்.
- கவின் திருவுடலுக்கு மலர் வணக்கம் செலுத்தி, அவரை இழந்து ஆற்ற முடியா துயரத்தில் வாடும் பெற்றோருக்கு சீமான் ஆறுதல் தெரிவித்தார்.
தூத்துக்குடி மாவட்டம் ஏரல் அருகே உள்ள ஆறுமுகமங்கலத்தை சேர்ந்தவர் சந்திரசேகரின் மகனான கவின் செல்வகணேஷ் (27). ஐ.டி. ஊழியரான கவின் கடந்த 27-ந்தேதி பாளை கே.டி.சி. நகர் பகுதியில் வைத்து அதே பகுதியை சேர்ந்த போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் தம்பதியான சரவணன்-கிருஷ்ணகுமாரியின் மகன் சுர்ஜித் (24) என்பவரால் வெட்டிக்கொலை செய்யப்பட்டார்.
இந்த ஆணவக்கொலை சம்பவம் தொடர்பாக பாளையங்கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து சுர்ஜித், அவரது தந்தை சரவணன் ஆகியோரை கைது செய்தனர். இந்த வழக்கு சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்றப்பட்டுள்ளது.
இந்நிலையில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் ஆணவப் படுகொலை செய்யப்பட்ட கவின் குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,
பட்டப்பகலில் வெட்டி ஆணவப் படுகொலை செய்யப்பட்ட தூத்துக்குடி மாவட்டம், ஆறுமுகமங்கலம் கிராமத்தைச் சேர்ந்த மென்பொறியாளர் தம்பி கவின் அவர்களின் இறுதி வணக்க நிகழ்வில் பங்கேற்று, தம்பியின் திருவுடலுக்கு மலர் வணக்கம் செலுத்தி, தம்பியை இழந்து ஆற்ற முடியா துயரத்தில் வாடும் பெற்றோருக்கு ஆறுதல் தெரிவித்து, உரிய நீதியைப் பெற்றுத்தர நாம் தமிழர் கட்சி துணை நிற்கும் என்று உறுதி அளித்தேன்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.






